தேசம் விடியவில்லை
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரடங்குச் சட்டம் போல எங்கும் அமைதி. சன நடமாட்டமில்லை, ஆள் அரவமில்லை. பொழுதுகூட இன்னும் முற்றாக விடியவில்லை, அரை குறையாக…… புலர்ந்தது பாதி… புலராதது பாதியாக….. இருட்டு தொக்கி நிற்கிறது.
அவன் அவசரமாகச் செல்கின்றான். நடையில் வேகம்.
திரும்பிப் பார்க்கிறான். ஒரு வாகனம் கூட வரவில்லை,எரிச்சலுடன் கால்கள் வேகமாகின்றன.
வெளிக்குளத்திலிருந்து புறப்பட்டவன், சில நிமிடங்களில் ஒரு மைல் நடந்து இறம்பைக்குளத்திற்கு வந்துவிட்டான்.
இன்னும் தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது.
மாசி மாதத்து பனிகூட மெல்லியதாகக் கொட்டுவது தெரு விளக் கொளியில் புகைப்படலமாகத் தெரிகிறது. பனிக்குளிர் ஊசி குத்துவது போலக் குத்துகிறது.
பனிக் குளிருக்கு நடுங்கிய நாய்கள் சூட்டுக்காக தெருவில் சுருண்டு கிடக்கின்றன.
அவனுடைய சப்பாத்தோசை கேட்டதும், வேண்டா வெறுப்பாக மெதுவாகத் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு ஒரு நாய் மீண்டும் சுருண்டு கொள்கிறது.
இறம்பைக்குளம் சந்திக்கு வந்துவிட்டான்.
ஆள் அரவம் கேட்ட சென்றிக்கு நின்ற ஆமிக்காரன் புலியென்று நினைத்து பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்துவிட்டு, ஆமை போல தலையை இழுத்துக் கொள்கின்றான்.
சமாதானச் சூழல்.
இல்லையேல்… அவனைக் கூப்பிட்டு விசாரித்து…. பேக்கைப் பார்த்து… ஐடின்டிக்காட்டைப் பார்த்து…. அவன் போன மாதிரித்தான் இருக்கும்.
தூணில் தொங்கிய லைற் வெளிச்சத்தில் கைமணிக்கூட்டைப் பார்க்கிறான்.
மணி…. ஆறுக்குப் பத்து.
இன்னும் பத்து நிமிடங்களில் பஸ் புறப்பட்டுவிடும்! எப்படியாவது பஸ்ஸைப் பிடித்துவிட வேண்டும்!
வேகமாக நடந்தான். நடந்தான் என்பதனை விட ஓடினான் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு வேகம்!
பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டான்!
தூரத்தில் வரும் பொழுதே பஸ்ஸைக் கண்கள் துழாவுகின்றன. பஸ் இன்னும் போகவில்லை. மட்டக்களப்புப் பெயர்ப் பலகையுடன் கிடக்கிறது.
பஸ்ஸைக் கண்டவுடன்தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
பஸ்ஸினுள் ஏறினான். இன்று வியாழக்கிழமையாதலாலோ என்னவோ சனம் மிகக் குறைவு. பல ஆசங்கள் வெறுமையாகவே கிடந்தன. பஸ் புறப்படத் தயாரானது…..
“சேர்…” பின்னால் இருந்து ஒரு குரல்.
பழக்கப்பட்ட குரல்!
திரும்பினான். கண்டக்டர் பிலிப்.
போகுமிடத்தைச் சொல்லாமலே மட்டக்களப்பிற்கான ரிக்கட்டைக் கொடுக்கிறான். பழக்கதோசம்….!
என்றைக்குப் பிறந்த மட்டக்களப்பு மண்ணைத் தொலைத்துவிட்டு வவுனியா மண்ணில் ஒட்டிக் கொண்டானோ…. அன்று தொடங்கிய பயணம் இன்று வரை….
அடிக்கடி பயணித்ததால் அந்த “ரைட்டானிக்’ பஸ்சும் கண்டக்டர் பிலிப்பும் உறவாகிப் போனார்கள்…. இறுக்கமாகிப் போனார்கள்…. குழப்ப காலத்திலே பாவப்பட்ட மக்களையும்…. துன்பங்களையும் சுமந்த பஸ். அதே கண்டக்டர் பிலிப்.
பஸ் பயணத்தை ஆரம்பித்தது.
பயணித்து இரண்டு… மூன்று அடிகள் தூரம் நகர்ந்திருக்கும்… திடீரென பஸ் நின்று கொண்டது.
என்னவோ….. ஏதோ….. என்று எல்லோரும் வெளியே எட்டிப் பார்த்தார்கள்.
அங்கே…. விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் நடன ஆசிரியை வேணி ரீச்சர் பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்தாள்.
மனத்திலும் முகத்திலும் பஸ்ஸைத் தவறவிடப் பார்த்தோமே என்ற ஏக்கம்! பரபரப்பு!!
அவனுக்கு எதிரே இருந்த சீற்றில் அமர்ந்தாள். அவனைப் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு 93 இலிருந்து ஒன்றாய்ப் பயணித்த உறவாய் மலர்ந்தது.
“என்ன ரீச்சர் இண்டைக்குப் போறீங்கள்….?”
”சனிக்கிழமை ஒரு டான்ஸ் புறோகிறம் இருக்குது. இண்டைக்கும் நாளைக்கும் றிகேசல் பார்க்க வேணும். அது தான் போறன் சேர்…..நீங்கள்!” இண்டைக்கு கச்சேரியில் ஒரு மீட்டிங் இருக்குது. கட்டாயம் அட்டன் பண்ண வேணும் அதுதான்…”
சம்பாசணைகள் தொடர்ந்தன.
பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
ஈரற்பெரியகுளம் சென்றிப் பொயின்ரை நெருங்கியதும் அவனது கை அவனையும் அறியாமல் பிற்பக்கட்டில் இருந்த பேர்ஸை ஒரு தடவை தட்டிப் பார்த்தது. அடையாள அட்டைக்காக ஏங்கியன விரல்கள்.
குழப்ப காலத்தில் என்றால் சென்றிப் பொயின்றுக்கு பத்துப் பதினைந்து யார்களுக்கு முன்னால் பஸ்ஸை நிப்பாட்ட வேணும். பஸ்ஸில் வந்த சனங்கள் எல்லாம் மூட்டை முடிச்சுகளோட சென்றிப் பொயின்றுக்குள்ளால் கால் மைல் தூரம் நடக்க வேணும்.
பாஸ் நடைமுறை வேறு. பாஸ் இல்லாத ஆக்கள் அங்கால போகவும் இயலாது.நிரந்தரப் பாஸ்… ஆறு மாதப் பாஸ்…. மூன்று மாதப் பாஸ்…. வன் டே பாஸ் இன்னும் என்னென்னவோ பாஸெல்லாம்.
இவை எல்லாவற்றையும் அந்தந்த கவுண்டரில பதிந்து.. மூட்டை முடிச்சுக்களைச் செக் பண்ணி… விசாரணைகள் முடிந்து… ஒருவாறாக மீண்டும் பஸ் புறப்பட ஒரு மணி நேரமாவது செல்லும்.
ஆனா…. இன்றைக்கு பிரபா ரணில் செய்த உடன்படிக்கை ஒப்பந்தத்தால்… ஒரு கரைச்சலும் இல்லாமல் பஸ் போய்க் கொண்டிருந்தது.
பஸ் வேகமாக வேகமாக ஓட, இன்னும் வேகமாக ஓடாதா என்றிருந்தது அருணனுக்கு. அவனுடைய எண்ணமெல்லாம் எவ்வளவு விரைவாக கந்தோருக்குப் போக முடியுமோ போய்விட வேண்டும் என்றிருந்தது.
பதினொரு மணிக்காவது போனால் ஒரு மாதிரி லீவு போடாமல் சமாளிச்சுப் போடலாம்!
வேகமாக வந்த பஸ் வாகனேரி வளைவைத் தாண்டியது. வயல்வெளிகளையும் தாண்டி தொலை தூரத்திலே காகித ஆலைக் கட்டிடங்கள் தெரிந்தன.
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். சரியாகப் 10 மணி.
அப்பாடியோவ்…..!
வாழைச்சேனை வந்துவிட்டது.
குழப்ப காலத்தில் என்றால்.. வவுனியாவிலிருந்து ஏழு மணிக்குப் பிறகு பஸ் வெளிக்கிட்டு… வழி நெடுக ஒவ்வொரு சென்றிப் பொயின்டிலையும் பேக்குகளைத் தூக்கிக் கொண்டு ஏறி…. இறங்கி… ஐடின்டிக்காட் காட்டி அலுத்து… குண்டும் குழியும் நிறைந்த “பை’ றோட்டால குலுக்கி அடித்து சுற்றிச் சுற்றி ஓடி.. அதை விட றோட்டில நடக்கிற தீடீர்ச் செக்கிங்கிற்கு முகம் கொடுத்து… றோட்டில ஏதும் குண்டு வெடிப்பென்றால் அது வேற… பிக்கட்டிங் நாளென்றால் பஸ்ஸை றோட்டோரத்தில் நிற்பாட்டிப் போட்டு பயந்து பயந்து வாகனத் தொடர் போகுமட்டும் காய்ந்து கிடந்து…. சீ…. என்று போகும்!
எல்லா அவலத்தையும் தாங்கி ஆகக் குறைந்தது 5 மணிக்குத்தான் மட்டக்களப்புக்குப் போகலாம். ஒரு நாள் பயணம்!
பஸ் ஓட்டமாவடிப் பாலத்தினுள் நுழைந்தது.
இனி மட்டக்களப்பிற்குப் போன மாதிரித்தான்! மனம் மகிழ்ச்சியில் குதித்தது.
ஒரு கணந்தான்!
பஸ் பாலத்தைக் கடந்து வெளியே வந்ததும் அவர்கள் கண்ட காட்சியினால் நிலைகுலைந்து போனார்கள்.
தொலைவில் நிகழும் அவலம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து கொண்டிருப்பதனைக் கட்டியம் கூறியது.
ஓட்டமாவடி.
அடிக்கடி முஸ்லிம் தமிழ் கலவரம் நிகழும் களம்.
றைவர் ரவிக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து விட்டது. ஆனால் என்ன செய்வது என்று தான் புரியவில்லை.
பாலத்தினுள் வர முன்னர் என்றால் திரும்பி ஓடியிருக்கலாம். இனி பஸ்ஸைத் திருப்பிக் கொண்டு ஓடவும் முடியாது. இதயம் அல்லாடியது.
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் கண்களில்…!
இனியும் தாமதிக்க முடியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை.
நிமிர்ந்து பார்த்தான். கடைத்தெரு ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நிழலே இல்லை! எல்லோருடைய உயிரையும் சுமந்து கொண்டான். பஸ்ஸை வேகமாகச் செலுத்தினான்.
கடைத் தெருவிற்கு வந்துவிட்டான்! மனிதவாடை மருந்துக்குமில்லை!! நடு றோட்டில் அபாயச் சமிக்கையாக பெரியதொரு தென்னங்குற்றி. பஸ்ஸினால் போக முடியவில்லை.
அதற்கிடையில் பளீர்…. பளீர்…. கல்லெறி வீச்சுக்கள். பஸ்ஸின் கண் ணாடிகள் கல்லெறிக்கு இரையாகிப் போயின.
சனங்கள் அல்லோல கல்லோலம்!
சிலர் பஸ்ஸை நோக்கி ஆயுதங்களுடன் ஓடி வந்து கொண்டிருந் தார்கள். சிலருடைய கைகளில் பெற்றோல் கலனும் பொல்லும்..
சனங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் உயிர்கள் இழையில் ஊசலாடிக் கொண்டிருந்தன.
இனியும் பஸ்ஸினுள் இருந்தால் உயிர் மட்டுமல்ல, ஒரு பிடிச்சாம்பர் கூட மிஞ்சாது என்பதனை உணர்ந்தான் அருணன்.
பஸ்ஸினில் இருந்து இறங்கி ஓட நினைத்தான்.
முன் சீற்றில் இருந்த வேணி ரீச்சர் அவனை வேதனையுடன பார்த்தாள். அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“கெதியா இறங்குங்க ரீச்சர்”
அவசரத் தொனியில் கத்தியபடி அவளையும் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு பின் கதவால் வெளியே பாய்ந்தான்.
எங்கேயாவது ஓட வேண்டும். எங்கே ஓடுவது? திசை தெரியாமல் திண்டாடினான். நெஞ்சு பதறித் துடித்தது.
அவர்கள் தப்பி ஓடுவதைக் கண்ட சிலர் அவர்களை துரத்திக் கொண்டு ஓடிவருவது தெளிவாகத் தெரிகிறது.
அவர்களின் கைகளில் பட்டால் கசாப்புக் கடைகளில் தொங்கும் ஆடு, மாடுகளின் நிலைதான் அவர்களின் நிலையும்.
அவளையும் இழுத்துக் கொண்டு குறுக்குத் தெருவால் ஓடினான்.
வல்லூறுக்குப் பயந்த கோழிக் குஞ்சைப் போல நடுங்கினாள். அவனுக்கும் அதே நிலைதான்!
அவர்களும் அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
”டுமீர்….”
வெடியோசை! அந்த ஊரே நடுங்கியது – அதிர்ந்தது.
திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அவர்களை துரத்தி வந்தவர்களைக் காணவில்லை.
ஆனால்…. அடாவடித்தனமான அரசியல் நடுத்தெருவில் பகிரங்கமாக அரங்கேறிக் கொண்டிருந்தது.
அவர்களைச் சுமந்து வந்த பஸ் குண்டு வீச்சுக்கு இரையாக, தீ நாக்குகள் வளர்ந்து கொண்டே சென்றன. பஸ் எரியும் கரும்புகைப்படலம் வானத்தில் தொங்குகிறது.
அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டார்கள்…..! பாவம்… கண்டக்டரும் றைவரும் என்ன ஆனார்களோ!
பஸ்ஸினுள் இருந்தவர்களின் பதறும் குரல்களும்… அழுகையின் அலறல்களும்.. மாடு வெட்டுகின்ற மடுவத்திலே கேட்கின்ற மரண ஓலமாகக் கேட்கின்றன.
உயிர் வலிக்க ஓடுகிறார்கள்.
டயருடன் சேர்ந்து உயிர்களும் உருகி எரியும் பிணவாடை துரத்துகிறது. இனி… தெருவால் ஓடிப் போனல் அவர்களுக்கும் அதே நிலைமைதான்! சேறும் சகதியும் நிறைந்த தெருவோரக் கானுக்குள் பாய்ந்து யாருக்கும் தெரியாமல் குனிந்தபடி ஓடுகின்றார்கள். ஒரு சின்ன ‘வோக்கு”- கொஞ்சம் பாதுகாப்பான மறைவான இடம். அங்க இங்க ஓடுறத விட…. அதற்குள் மறைந்து கொள்ளுறது கொஞ்சம் பாதுகாப்பு. ஓட்டுக்குள் சுருண்டு கொள்ளும் நத்தை போல இருவரும் அதற்குள் சுருண்டு கொள்கிறார்கள்.
கண்ணீரும் பெருமூச்சுக்களும் அந்த இடத்தை நிறைக்கின்றன. சுவாசத்தின் ஓசைகள்கூட வெளியே கேட்டு விடுமோ என்ற பயம்.
ஒவ்வொரு கணங்களும் ஒவ்வொரு யுகங்களாகக் கழிந்து கொண்டிருந் தன. பொழுதை இருள் கௌவாதா என்று ஏங்கின. கடவுளை இறைஞ்சின.
பொழுது விடை பெற்றது. இருள் ஒட்டிக் கொண்டது.
இரவோடு இரவாக ஓட்டமாவடி எல்லையை விட்டு வெளியேறிவிட நினைத்தான். ஆனால் அவன் போகவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் இன்னும் அந்த இடத்தை விட்டு அகன்றிருக்க மாட்டார்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது.
அதே வேளையில் இன்னும் அந்த வோக்குக்குள் கிடப்பது ஆபத்தானது என்பதனை உணர்ந்தான். அந்த வேளையில்தான் அவனுடன் வேலை செய்யும் நண்பன் ஹனீபாவின் வீடு அருகில் இருப்பது நினைவுக்கு வருகிறது.
அவனுடைய வீட்டிற்குப் போனால், அவன் எப்படியும் அவர்களைக் காப்பாற்றுவான். மனதில் நம்பிக்கையின் கீறல்கள்!
வெளியே எட்டிப் பார்த்தான். தெருவே மயானமாகக் கிடைக்கிறது. ஆள் அரவம் எதுவுமில்லை.
இருளோடு இருளாக ஹனீபாவின் வீட்டை நோக்கி நடைப்பிணங்களாக வெற்றுடல்களாக நடந்தார்கள்.
ஹனீபாவின் வீட்டு முன் கதவு பூட்டிக் கிடக்கிறது. உள்ளே ஒரு சின்ன வெளிச்சம் மட்டும் தெரிகிறது.
கதவுக்கு நோகாமல் முன் கதவில் மெல்லத் தட்டினான். கதவு திறந்து கொண்டது.
ஹனீபா அந்த நேரத்தில் அவர்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் அந்தக் கோலத்தில்! பயத்தால் வெளிறிய முகங்கள்… கலைந்த கேசம்.. சேறு ஒட்டிய உடல்கள்….
அவர்களுடைய கோலங்கள் அவர்களுக்கு நடந்த அவலத்தைச் சொல்லாமலே சொல்லுகிறது.
இன முரண்பாடுகள், இன நல்லுறவுப் பாலம், இன நல்லுறவு இலக்கிய விழா…இப்படியான இன’ உறவு நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடாத்திய நண்பனுக்கா இந்த நிலைமை!
அவனுக்கே இந்த நிலைமையென்றால்… ஒன்றுமே தெரியாத அப்பாவிச் சனங்களின் நிலை…?
இனவுறவு என்றும் இன ஒற்றுமை என்றும் நெஞ்சு வெடிக்கக் கத்துவதனால் கிடைத்த பயன்? வெறும் வாய் வெடிப்புத்தானா…..!
அவனால் ஜீரணிக்க முடியவில்லை. துடித்துப் போனான். அருணன் நடந்ததைச் சொல்ல எண்ணினான். முடியவில்லை… கண்ணீருக்கிடையே வார்த்தைகள் கரைந்து போயின.
இருவரையும் உள்ளே அழைத்துக் கொண்டு, கதவை அடித்துச் சாத்தினான். அவன் தன்னுடைய சமூகத்திலே கொண்டிருந்த கோபம், அந்தக் கதவை அடித்துச் சாத்திய வேகத்திலே வெளியேறியது.
மண்டபத்திலே கிடந்த கதிரையிலே தொப்பென விழுந்தார்கள் இருவரும். அவர்களுடைய நடுக்கமும் பயமும் இன்னும் தணியவில்லை. நெஞ்சங்கள் படபடத்துக் கொண்டேயிருந்தன.
ஹனீபாவுக்கு அவர்களை ஆற்றுகைப்படுத்த வேண்டும் போல இருந்தது. அவர்களுக்கும் அது தேவையாக இருந்தது.
அவனும் எதிரேயிருந்த கதிரையில் அமர்ந்தான்.
அருணனுக்கு நடந்த சம்பவங்களை யாரிடமாவது சொல்லி வாய்விட்டு அழ வேண்டும் போல இருந்தது. இல்லையேல்… நெஞ்சுக்குள்ளே அழுத்திக் கொண்டு கனத்துக் கிடக்கும் வேதனையினால் நெஞ்சம் வெடி குண்டாக வெடித்துச் சிதறி விடும்.
நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போனான் அருணன்.
ஹனீபாவின் கண்களில் ஆச்சரியக் குறிகள்!
இவர்கள் எல்லாம் ஒரு மனிதர்களா….! மிருகத்திலும் கேவல மானவர்கள்…!! பஸ்ஸை எரிக்கிறதாலும் சனங்களைக் கொல்லுறதாலும் என்னத்தைக் காணப் போகிறார்கள். இப்படியாக ஆள் மாறி ஆள் பஸ்ஸையும் சனங்களையும் எரித்துக் கொண்டு வந்தால், நாளைக்கு மிஞ்சப் போறது எரிந்து எரிந்து கருதிப் போன ஒரு தேசந்தான். சீ….! வெட்கமாக இருக்குது…
ஹனீபாவின் இதயம் வேதனையில் துடித்தது.
இருவருக்கும் தேனீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் ஹனீபாவின் மனைவி பரீதா. இரத்தக் கறைகளினால் எழுதப்படும் வரலாறுகள் அவளின் செவிப்பறையை எட்டியிருக்கவேணும். அவளுடைய கண்களின் கதவுகளினூட கவும் கண்ணீர்.
ஒரே தாகம்… பசி…
தேனீரின் இரண்டு மிடரை விழுங்கினார்கள்.
தெருவிலே இனம் புரியாத சத்தம்.
அந்தத் திடீர்ச் சத்தம் அவர்களையும் அறியாமல் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்தியது. கையில் இருந்த தேனீர்க் கோப்பைகள் கிடுகிடு வென நடுங்கின.
”கிறீச்” என்று கேற் திறக்கும் ஓசை.
இருவருக்கும் உயிரே போனது போல இருந்தது.
“என்ட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் உங்களை யாருமே ஒன்றும் செய்ய முடியாது. அறைக்குள்ள போங்க….?” மெதுவாகச் சொன்னான் ஹனீபா.
அரவம் எழும்பா வண்ணம் அறையினுள் போனார்கள். ஹனீபா கதவிலுள்ள திறப்பு இடுக்கினூடாகப் பார்த்தான். கொலைக் கருவிகளுடன் சிலர் நிற்பது மங்கலாகத் தெரிகிறது. கதவைத் தட்டினார்கள். கதவு உடைந்து விடுகின்ற வேகம். ஹனீபா கதவைத் திறந்தான்.
அவனுடைய பார்வை அவர்களை நோக்கி “என்ன?” என்று கேட்பது போல இருந்தது.
“இங்க யாராவது வந்தார்களா?” கடுஞ் சொற்களை அவனை நோக்கி வீசினார்கள்.
அவன் “இல்லை” என்றான்.
“சரி” போனார்கள்.
ஆனாலும்…
இரவு முழுவதும் ஒருவித இனம் புரியாத சத்தம். தெருநாய்களின் ஓலம்..! தெருநாய்களுடன் சேர்ந்து ஊர் நாய்களின் அரவம்…!
மோப்பம் பிடிக்கும் நாய்கள் போல சிலர் அடிக்கடி வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
அரவம் கேட்கும் ஒவ்வொரு தடவையும் அருணன் திறப்பின் இடுக்கினூடாகக் வெளியே பார்ப்பான். தெருவில் குருதி தோய்ந்த கருவிகள் தோளில் தொங்க சிலர் இரவு முழுவதும் அலைந்து கொண்டிருந்தார்கள்.
பல தடவைகள் கதவைத் தட்டினார்கள். கதவு தட்டப்படும் ஒவ்வொரு பொழுதும் வேரோடு உயிரைக் கிள்ளி எறிவது போல நெஞ்சு வலிக்கும். வேணியின் கண்கள் அழுதழுது கண்ணீரிலே ஊறிப்போய்க் கிடந்தன.
இரவு முழுவதும் அச்சமூட்டுவதாகவே கரைந்தது.
இரவு விடை பெற்றது.
இரவு விடைபெற்ற கையோடு தகவல் அறிந்து வர வெளியே போனான் ஹனீபா.
நேரம் பதினொரு மணியை நெருங்கிய போதும் அவன் இன்னும் வீடு திரும்பவில்லை.
ஊர்க்குருவி போல ஊரெல்லாம் சுற்றினான்.
வன்செயல்கள் முற்றுப் பெறவில்லை. குழம்பிய ஊர் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. நிலைமை இன்னும் மோசமாகலாம் எனச் செய்திகள் கசிந்தன.
அந்தச் செய்திகளைச் சுமந்து கொண்டு பதினொரு மணியளவில் வீட்டிற்கு வந்தான்.
அவனுக்கு ஒரே சிந்தனைக் குழப்பமாக இருந்தது. இனியும் அவர்களை வீட்டில் வைத்திருந்தால் அவனே அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டு போய்க் கொடுப்பது போலாகிவிடும்.
அவர்களின் உயிரைத் தக்க வைப்பதற்கு ஒரேயொரு வழி மட்டுந்தான் இருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை பன்னிரெண்டு மணிக்கு எல்லோரும் பள்ளிக்குத் தொழுகைக்குப் போய்விடுவார்கள். அந்த நேரம் எந்தவித அசம்பாவிதமும் நடக்காது. வன்செயல் சூன்ய நேரமாக இருக்கும். அந்தச் சமயம்… ”பாங்கு” சொல்லும் நேரம் பார்த்து எல்லையைக் கடந்து விட்டால்…
அருணனுக்கு நிலைமையைக் கூறினான் ஹனீபா. அவனுக்கும் சரி எனவே பட்டது.
பள்ளித் தொழுகைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அருணன் ஹனீபாவின் வெள்ளைச் சாரத்தையும் வெள்ளைச் சேட்டையும் உடுத்துக் கொண்டான். தொழுகையின் போது அணியும் வெள்ளைத் தொப்பியையும் அணிந்தான். முழு முஸ்லிம் போலவே இருந்தான்.
அவனுடைய அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு தன்னுடைய அடையாள அட்டையைக் கொடுத்தான் ஹனீபா. அந்த அடையாள அட்டையைப் பார்த்தான் அருணன், இருவரும் இரணைப் பிள்ளைகள் போலவே இருந்தார்கள். சின்ன வயசில் எடுத்த அடையாள அட்டை உருவம் சிதைந்து அவனுடைய உருவம் போலவே தோன்றியது. இனி அவனை முஸ்லிம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
பரீதா கொடுத்த “ஹவாயாவை” உடுத்திக் கொண்டு “சோலி”னால் தலையை மூடி முகத்தை மறைத்தாள் வேணி. அவளுடைய அழகிய முகமும் சிவந்த வெள்ளையும் மெல்லிய தோற்றமும் மாற்றங்காண முடியாத முஸ்லிம் பெண்ணாகவே காட்டின. பரீதா கொடுத்த அடையாள அட்டையையும் வாங்கினாள். அந்த நிழல்படம்கூட அவளைப் போலவே இருந்தது.
ஒட்டுமொத்தமாக இருவரும் அசல் முஸ்லீம்கள் போலவே இருந்தார்கள். இனிப் போகும் வழியில் அவர்களை யாரும் தமிழர்களாக அடையாளம் காணமுடியாது. அடையாளம் கண்டால் கூட அந்த அடையாள அட்டைகளைக் காட்டித் தப்பி விடலாம். நம்பிக்கைகள் வலுவடைந்தன. “பாங்கு” சொல்லுவதற்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. ஹனீபா கேற்றைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
ஆள் அரவம் எதுவுமில்லை!
“சரி வாங்க…”
அருணன் ஹனீபாவின் பைசிக்கிளை உருட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
வேணி பைசிக்கிளில் ஏறினாள்.
பைசிக்கிள் புறப்படுமுன் இருவரும் திரும்பி இருவரையும் பார்த்தனர். கண்ணீர்த் திவலைகளின் திரைகளினூடாக இருவரும் மங்கலாகத் தெரிந்தனர். பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர்.
ஒருவாறு பிரதான வீதிக்கு வந்து விட்டனர்.
தெருவைக் கடைக் கண்ணால் பார்த்தார்கள்.
அங்கே-
அவர்களைச் சுமந்து வந்த பஸ் கருகிப் போய்க் கிடக்கிறது.
அந்த பஸ்ஸைப் போல இன்னும் பல… சிதைந்து போன வெற்றுடல்கள் தெருக்கரையில் அநாதரவாகக் கிடந்து எட்டிப் பார்க்கின்றன. பிண நாற்றம் இன்னும் அடங்கவில்லை. தெருவெல்லாம் இரத்தச் சகதியாகி சிவந்த கானல் நீராய்… அங்கொன்றும் இங்கொன்றுமாக அடையாளம் தெரியாத எலும்புத் துண்டுகள்….
காட்சிப் பயத்தில் மனம் உதைக்க, கொஞ்சம் வேகமாக பைசிக்கிளை ஓட்டினான்.
தங்களை யாரும் அடையாளம் கண்டு விடுவார்களே என்று பயந்தார்கள். ஆனால், தொழுகைக்குச் செல்லும் பரபரப்பில் அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு பள்ளிவாசலில் இருந்து பாங்கோசை கேட்டது. அந்த நேரம் ஓட்டமாவடி எல்லையைத் தாண்டி கறுவாக்கேணி எல்லைக்குள் நுழைந்தார்கள்.
இனிப் பயமில்லை. தமிழூருக்கு வந்துவிட்டார்கள். போன உயிர் மீண்டும் திரும்பி வந்தது போல.. நீண்ட நிம்மதிப் பெருமூச்சு அடி மனதில் இருந்து வந்து காற்றில் கலந்தது. தலைகளில் இருந்த தொப்பியையும் ‘சோல்’லையும் கழற்றி கையில் எடுத்தனர்.
அச்சமும் பதட்டமும் நடுக்கமுமின்றி சுதந்திர மண்ணில் பைசிக்கிளை ஓட்டினான்.
கறுவாக்கேணிச் சந்தியிலே ஆலமரத்தின் கீழே ஒரு கும்பல் நிற்பது தெரிகிறது.
அவன் எந்தச் சலனமுமின்றி பைசிக்கிளை ஓட்டினான். அவர்களைப் பற்றி அக்கறை கொள்ளவுமில்லை.
பைசிக்கிள் அவர்களைத் தாண்டியது. அவர்களை நோக்கிச் சிலர் ஓடி வந்தார்கள்.
தமிழனுக்குத் தமிழன் ஏன் பயப்பட வேண்டும்?
அவன் பயப்படவில்லை.
ஒரு காலைப் பெடலிலும் மறுகாலை நிலத்திலும் ஊன்றினான். பைசிக்கிள் நின்றது.
ஒருத்தன் ஓடி வந்து பைசிக்கிள் கென்டிலைப் பிடித்தான். “டேய் காக்கா, எங்கடா போறாய்….!”
“செய்யுறதையும் செய்து போட்டு தமிழூருக்குக்குள்ளான போறயா…!” “காக்கா எங்கட ஊருக்குள்ளால போறத்திற்கு உனக்கு எவ்வளவு துணிவு இருக்க வேணும்…!’
அவனை நோக்கி வார்த்தைகளை அள்ளி வீசினார்கள்.
“நாங்கள் முஸ்லிம் இல்ல… தமிழர்கள்.” என்றான் அருணன். அவர்கள் நம்புவதாக இல்லை.
பலமுறை சொன்னான். ஒரு முறையும் நம்புவதாக இல்லை. அவர்கள் வேடிக்கைப் பொருளானார்கள். அவர்களை எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள்.
“நீ தமிழனென்றா…. எடுடா உன்ட ஐடின்டிக்காட்ட…!” காடைத்தனமாக அடையாளங்களைத் தோண்டினார்கள். ‘ஹனீபா…”
“பரீதா…?”
முதுகுச் சட்டைக்குப் பின்னால் இருந்து இழுத்தான் ஒருவன் வாளை. குருதி காயாத வாள் பளபளத்தது.
இருவரும் நடுங்கினார்கள்.
உயிர்கள் உதிர… பைசிக்கிள் கீழே சரிந்து விழுந்தது.
– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.
– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.
ஓ.கே.குணநாதன்
மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த ஓ.கே. குணநாதன் 1960ல் பிறந்தவர். மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் M.A., M.phil கல்வித் தகைமையுள்ளவர். சிறுகதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், நகைச்சுவை ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். இதுவரை இவரது 20 நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுள் வீரஆனந்தன் (சிறுவர் நாவல்) சுதந்திரம் (சிறுவர் நாவல் ) ஆகியவை வடக்கு – கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றவை. மாயக்கிழவி (சிறுவர் நாவல்) யாழ் இலக்கியவட்ட விருது பெற்றது. நரியின் தந்திரம் (சிறுவர் கதைகள்) வடக்கு – கிழக்கு மாகாண சாகித்திய விருதும், யாழ் இலக்கிய விருதும் பெற்றது. ஒரு துளி (நாவல்) இந்தியாவின் தேவியின் கண்மணி சஞ்சிகைப் பரிசு பெற்றது. தர்மத்தின் வெற்றி (சிறுவர் நாவல்) தேசிய இளைஞர் சேவைகள்மன்ற சிறுவர் இலக்கிய விருது பெற்றது. குட்டி அணில் (சிறுவர் கதை) ஆரம்பக்கல்வி வாசிப்புக் கல்வி நூலானது. வெள்ளைக் குதிரை (சிறுவர் நாவல்), மாவீரன் புள்ளிமான் (சிறுவர் நாவல்) ஆகியவை இலங்கை அரச தேசிய சாகித்திய விருதும், வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருதும் பெற்றவை. முகவரி :- 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு.