கதையாசிரியர்:
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 2,327 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பொழுது நான் ஒரு பாடசாலை மாணவன்.பட்டினத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் வீட்டிலிருந்து கொண்டு பாடசாலைக்குத் தினமும் போய் வந்தேன். 

கிறிஸ்மஸ் விடுமுறைக்காகப் பாடசாலைகளெல்லாம் மூடப்பட் டன. சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். புகைவண்டி புகை யைக் கக்கிக் கொண்டு நெளிந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. எல்லோரும் கண்களை மூடுவதும் விழிப்பதுமாக இருந்தார்கள். 

அச்சம்பவம் இன்று நடந்ததுபோல இன்னும் என் உள்ளத்தில் அப்படியே இருக்கிறது. கையில் தம்புராவுடன் கிழிந்த அழுக்குப் படிந்த உடையணிந்து கொண்டு பாட்டுப்பாட ஆரம்பித்தாள் அவள். அழுக்குப் படிந்த ஆடைக்குள்ளிருந்து யௌவனத்தின் பூரிப்புக் குமுறிக் கொண்டிருந்தது. சுமார் பதினெழு வயசிருக்கும். உற்று நோக்கிய என் கண்களுக்கு அவள் சரஸ்வதிதேவியாக மாறிவிட்டாள். ஒவ்வொரு சதத்திற்கு மேல் பரிசு அளிக்க ஒரு மகானாவது முற்படவில்லை. ஆம். ஒவ்வொ ருவரும் பரிசு என்றுதான் அளித்தார்கள். அந்த ஒரு சதப் பரிசை ஏழையின் துடித்த குடல் திருப்தியோடு அங்கீகரித்தது. 

எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் தன் கரங்களை நீட்டினாள். ஒரு சதத்தை கையில் தயாராக எடுத்து வைத்திருந்த அவர் ஒரு இராக மாலிகை பாடு தருகிறேன் என்றார். 

இராகமாலிகையா! அது எனக்குத் தெரியாதே என்றாள் அந்தப் பேதைப் பெண். 

இவ்வளவு நன்றாகப் பாடுகிறாயே இராகமாலிகை தெரியாதது சரி ஒரு விருத்தம் பாடு. 

அவள் வாயைத் திறந்தாள். சுருண்டு சுருண்டு இருந்த அவளுடைய கூந்தல் நெற்றி யில் புரண்டு விளைாயாடுவது போல் அவளுடைய தொண்டையிலிருந்து உருண்டு உருண்டு வரும் தேவகானம் நாக்கில் துள்ளி விளை யாடியது. ஆனால் தான் பாடுவது என்ன இராகம் என்பது அவளுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். எல்லோரிடமும் ஒருவித அமைதி குடிகொண்டது. 

அவள் அடுத்த பெட்டிக்குப் போய்விட்டாள். சற்று நேரம் கழித்து விதவிதமான இராகங் களில் பாட்டுக்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்தன. ஆனால் என்னுள்ளத்தில் எளியவர்கள் வயிறாற உண்ண வேண்டும் என்று அவள் பாடிய பாட்டுத்தான் திரும்பத் திரும்ப ஒலித்தது. 

கிறிஸ்மஸ் விடுமுறை கழிந்துபோக மறுபடியும் பட்டினம் வந்து சேர்ந்தேன். படிப் பிலோ, விளையாட்டுக்களிலோ என் மனம் செல்லவில்லை. அந்த ரெயில் சம்பவம் சதா என் உள் ளத்தை விட்டு நீங்காமலே இருந்தது. 

பஸ் ஸ்ராண்டில் பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். சிறிது தூரத்திற்கப்பால் ஒரே கூட்டமாக இருந்தது. கூட்டத்தை நாடி இன்னும் சனங்கள் ஓடிக்கொண்டு இருந்தார்கள். நானும் அவ்விடத்தை நோக்கி விரைந்து சென்றேன். இரண்டு பொலீஸ்காரர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நின்றார்கள். மெதுவாக உள்ளே எட்டி நோக்கினேன். குற்றுயிராக இரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த ஓர் நடுத்த வயதுள்ள பெண்ணைப் பார்க்கப் பெரிய பரிதாபகரமாயிருந்தது. விஷயத்தை ஆராய்ந்த போது ஓர் ராணுவ ‘லொறி அந்தப் பிச்சைக் காரியை அடித்துவிட்டது என்று தெரிய வந்தது. 

தயாராக வந்து நின்ற ஓர் அம்புலன்ஸில் அந்தப் பிச்சைக்காரியை ஏற்றினார்கள். அம்மா என்று அலறிக்கொண்டு கூட்டத்திற்குள்ளால் ஒரு பெண் ஓடி வந்தாள். அவளுடைய கரங்களைப் பற்றி இழுத்து அப்புறப்படுத்தினான் ஒரு பொலிஸ். அம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது. 

“ஐயோ. அம்மா! அம்மா!…” என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டே நிலத்தில் விழுந்தாள் அந்தப் பேதை. அவளுடைய கையிலிருந்த தம்பூரா தரையினொரு மூலை யிலிருந்து என்னைப் பரிதாபத்தோடு பார்த்தது. அன்று அவளுடைய இனிய சாரீரத்தோடு ரீங்காரம் செய்த தம்பூரா அல்லவா அது? 

என்னுள்ளம் துடிதுடித்தது. தரையில் அறிவின்றிக்கிடந்த பெண்ணைத் தூக்கி நிமிர்த்தி னேன். அவளுடைய கண்கள மூடியிருந்தன. கூட்டத்தில் இருந்த யாவரும் போய்விட்டார்கள். ஆனால் வேடிக்கை பார்க்கச் சில சிறுவர்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தூார்கள். அவர்க ளுள் ஒரு சிறுவன் நான் கொடுத்த காசைப் பெற்றுக்கொண்டு ஒரு பேணியில் கோப்பி கொண்டுவந்து கொடுத்தான். சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்த அந்தப் பெண் மறுபடியும் “அம்மா, அம்மா” என்று அலற ஆரம்பித்தாள். 

பிச்சைக்காரியாயிருந்தலென்ன, சீமாட்டியாயிருந்தாலென்ன? பெற்றவள் தாய்தானே. “அம்மாவை எங்கே கொண்டு போய்விட்டார்கள்?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள். 

“பயப்படாதே. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்!” 

“ஐயா உங்களுக்குப் பெரிய புண்ணியமாகவிருக்கும்: என்னையும் அந்த ஆஸ்பத்தி ரிக்குக் கொண்டுபோய் விடுகிறீர்களா? அம்மாவோடு நான் பக்கத்திலிருந்து…” 

“சரி, வா!” என்று அவளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஆனால்… 

அவள் ‘அம்மாவைப் பார்க்க முடியவில்லை! பார்க்க முடியாத உலகத்துக்கு அந்த ‘அம்மா’ போய்விட்டாள்! 

பாவம். இந்த ஏழைப் பெண்ணுக்குத் தேறுதல் கூறுவது பெரும்பாடாய் விட்டது! இது என்ன விந்தை! இந்தப் பிச்சைக்காரியோடு ஏன் என்னுடைய பொழுதை வீணாக்குகிறேன்? ஜீவகாருண்யமா? இவளுடைய கோகில கானமா? அல்லது அழகு ததும்பும் யௌவனமா?… சே… சே! 

“பெண்ணே, வீணே அழுது கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. இந்தா, இந்த ஐந்து ரூபாவை வைத்துக் கொள் நான் போகிறேன்” 

“ஐயோ, நான் எங்கே போவேன்? என்ன செய்வேன்? தன்னந் தனியாக இந்தத் தெருக்களில் அலையப் பயமாக இருக்கிறதே! அம்மா இருந்தால்…” 

அவள் மறுபடியும் விம்ம ஆரம்பித்தாள். 

அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “இதேதடா, வீண்தொல் லையை விலைக்கு வாங்கி விட்டோமே? என்று ஒரு நினைப்பு, ஆனால் அவளுக்கு உதவி செய்வதில் அவ ளோடு பேசி கொண்டிருப்பதில் ஒரு இன்பம். 

“அழாதே! தெருக்களில் இத்தனை நாளாய் அலைந்தவள்தானே. இப்போது என்ன பயம்?… அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டு வந்தவன். அவளுடைய முகபாவத்தைக் கண்டு நிறுத்திக்கொண்டேன். ஆம் அவள் பயப்படத்தான் வேண்டும்! அவள் வயது அழகு… அவள் பயப்படத்தான் வேண்டும். ஆனால் நான் இவளுக்கு என்ன உதவி செய்ய முடியும்? 

“இவளைக் கல்யாணம் செய்து கொண்டால்…” 

இந்த எண்ணத்தில் ஒரு சிறு இனிப்பு. ஆனால் என் உதடுகள் லேசாக, கேலியாக மலர்ந்து இந்த எண்ணத்தின் நிலைமையை – நிறைவேறாத நிலைமையை தெரிவித்தன. அதோடு அந்த எண்ணம் காற்றில் கரைந்து விட்டது. 

திடீரென்று ஒரு யோசனை! 

“எனது தமையனார் வீட்டில் நீ வேலை செய்வாயா?” 

அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை மூலம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். 


மாசங்கள் நான்கு மறைந்தன. பரீட்சைக்காகப் படித்துக்கொண்டு இருந்தேன். அன்று ஆசிரியர் கொடுத்த குறிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. எதிரே இருந்த கடிகாரத்தில் மணி ஒன்று அடித்தது. அறையினின் றும் வெளியே வந்தேன். சாப்பாட்டு மேசைக்கருகில் – அவள் நின்று கொண்டிருந்தாள். 

“நீ இன்னுந் தூங்கவில்லையா?” 

“நீங்களின்னும் சாப்பிடவில்லையே?’ 

“என்னுடைய சாப்பாடு இங்கேதான் மேசை மேல் இருக்கிறதே!… நீயுமின்னும் சாப்பிடவில்லையா?” 

பதில் சொல்லாமலே அவள் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டாள். அவளுடைய மார்பு ஒருமுறை விம்மித் தாழ்ந்தது. பாவம், என்மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறாள்! 

இன்பத்தில் இருப்பவர்கட்கு இன்பத்தையும், துன்பத்திலிருப்பவர்கட்குத் துன்பத்தையும் மூட்டும் சந்திரன். அன்று எனக்கு என்னத்தை ஊட்டினானோ? அவசர அவசரமாகச் சாப் பாட்டை முடித்துக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்ட என் உள்ளத்தில் ஜன்னலூடாக வந்த சந்திரன் இறுமாப்புடன் ஆட்சி செலுத்த ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் உள்ளத்திலும், உருவத்திலும் முற்றாக மாறிவிட்டேன். வெறிபிடித் நாயைப் போல் வெளிக்கிம்பி என் கால்கள் தானாகவே அவள் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவருகில் போய் நின்றன. ஆனால் என் உள்ளம்…” 

“மூடனே! நீதானா சத்தியவாதி? உன் லட்சியம்தான் என்ன? காம வெறி கொண்ட மனித மிருகங்களிடமிருந்து ‘என்னைக் காப்பாற்று’ என்று உன்னைச் சரண்புகுந்தாளே. அவளுக்கு நீ செய்யும் உதவி இதுதானா?” என்று இடித்து இடித்துக் கூறியது. 

என் இருதயம் அமைதியை நாடியது. தனிமையில்தானே அமைதி? வீட்டின் பின்புற முள்ள அடர்ந்த மாமரத்தின் கீழ் உட்கார்ந்தேன். ‘ஜிலு ஜிலு’ என்று குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. சந்திரன் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தான். ‘சந்திரனைப் பற்றிய செயல்களெல்லாம் கவிகளின் வெறும் கற்பனாசக்தி என்று எண்ணியிருந்த என்னுள்ளத்தில் அவன் திருவிளையாடல்கள் எல்லாம் எந்தமட்டில் உண்மை என்பது அன்றுதான் புலனாயிற்று. எனக்கும் என் உள்ளத்துக்குமிடையில் நீண்டநேரம் விவாதம் நடந்து கொண்டி ருந்தது. 

கிண்ணற்றுக் கட்டில் ஓர் உருவம் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டு அது யாரென்றறிய அவ்விடம் நோக்கிச் சென்றேன். 

“என்ன, நீயா?” 

கொலைக் குற்றவாளியைப் போல அவள் நடுநடுங்கினாள். 

“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்றேன் மறுபடியும். 

“தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வந்தேன்.”

“இந்த நடுச் சாமத்திலா? அதுவும் குடமில்லாமலா?” 

அவள் பதிலொன்றும் பேசாமல் நின்றாள். அவள் நெற்றியில் துளிர்த்த வியர்வை நிலவில் மினுங்கியது. 

“பெண்ணே, நீ…” இப்பொழுது பேசும் பொழுது என்குரலில் ஓசையில் கீறல் விழுந்தது. என்னுடைய நிலைமையை அவள் நன்றாக உணர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. 

இந்ந நிலமையைச் சமாளிக்க முடியவில்லை. 

“சரி; நான் போகிறேன்” என்று கூறிவிட்டுத் திரும்பி நடந்தேன். 

“சுவாமி” என்ற கத்தினாள் அவள். 

திடுக்கிட்டுக் திரும்பி நின்றேன். 

அவள் ஓடிவந்து என் கால்களைப் பிடித்துக்கொண்டு “ஸ்வாமி இன்னமும் என் மனதைத் தெரிந்து கொள்ளவில்லையா?” என்று கூறிக்கொண்டே, தனது கண்ணீரால் எனது பாதங்களைக் கழுவினாள். 

நான் அவள் தோள்களைப் பிடித்துத் தூக்கினேன். வாடிய மலர்க் கொடிபோல என்முன் துவண்டு துவண்டு நின்றாள். இருவர் முகங்களும் ஒன்றையொன்று நோக்கின. வாய்ப் பேச்சில் என்ன பயன்? எங்கள் உள்ளம் ஒன்று கலந்தது போல்… 

அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன். 

மறுநாள் விடிய விழிக்கும் போது ஒன்பது மணியிருக்கும். படுக்கையை விட்டு வெளியே செல்ல என் மனம் ஒப்பவில்லை. நான் எவ்விதம் அவளின் முகத்தில் விழிக்க முடியும்? படுக்கையிலிருந்தபடியே சிந்தனைக் கடலில் ஆழ்ந்தேன். 

“என்ன. உனக்கின்னுந் தூக்கமா? அவளைத் தேடிச் சென்ற அப்பா “இன்னும் வரவில் லையே” என்று அம்மா கலங்கிக்கொண்டு இருக்கிறாள். நீயின்னும் கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்கிறாயோ!” என்று என் அண்ணனின் மகள் கூறியதைக் கேட்டவுடன். இடி யேறு கேட்ட சர்ப்பம் போல் அப்படியே சமைந்துவிட்டேன். நான் செய்த துரோகம் என்பது எனக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. “அவள் எங்கே போயிருப்பாள்?” 

கால்கள் தள்ளாட வெளியில் வந்தேன். எங்கும் ஒரே சூன்யமாய் என் கண்களுக்குத் தெரிந்தது. “காமக்கண்களால் நோக்கும் மனித மிருகங்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி விட்டாயா?” என்று யாரோ ஏளனமாக கூறி நகைப்பது போல என் உள்ளத்தில் பட்டது. 

“இவள் ஏன் சொல்லாமல் ஓடவேண்டும்?” என்று என் அண்ணர் கேட்டார். 

“எனக்கு எப்படித் தெரியும்” என்று கூறினேன். வாயால் மட்டுந்தான் கூறினேன். ஆனால் என் உள்ளம்…?” சகிக்க முடியாத மன்னிக்க முடியாத ஒரு குற்றம் என் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர்களால் எப்படி அறிய முடியும்? 


காலச் சக்கரத்தின் வேகத்தில். என் உள்ளத்திலிருந்த அந்த ஏழைப் பெண் சிறிது சிறி தாக அழிந்து கொண்டிருந்தாள். ஆனால் ஆசிரிய கலாசாலையில் படிக்கும் போது எனக்கும் வசந்தாவுக்கும் இடையில் காதல் உற்பத்தியான பின் முற்றாக அப்பெண் அழிந்துவிட்டாள் என்றுதான் கூறு வேண்டும். சில சமயங்களில் சந்தர்ப்பத்தையொட்டி அவளுடைய நினைவு வந்தாலும் அது வெகுநேரம் நிலைத்திருப்பதில்லை. 

“இந்த விடுமுறைக்கு ஊருக்குப் போகமுன் கட்டாயம் எங்களுடைய வீட்டுக்கு வந்துவிட்டுத்தான் போகவேண்டும்” என்றாள் வசந்தா. 

“வசந்தா! என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை இல்லையா? அண்ணனும், மனை வியும் கூடவரும் போது நான் எப்படி உன்னிடம் வரமுடியும்? எனக்கு மட்டும் உன்னோடு ஒரு நாளை ஆனந்தமாய்க் கழிப்பது இஷ்டமில்லையா?” 

“எங்களுடைய வழியில் இந்த அண்ணனும் தம்பியும் எங்கிருந்துதான் முளைக்கிறார்களோ?” என்று கூறி அவள் அலுத்துக் கொண்டாள். பிறகு… 

அடுத்த மாசம் இருபத்தோராந் திகதி! இந்தச் சனியன் எத்தனை நாட்களைக் கவ்விக் கொண்டிருக்கிறது. “இந்த விடுமுறையே இல்லாவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றாள். 

“அப்படிக் கூறமுடியுமா வசந்தா? எத்தனை பேர் இந்த விடுமுறையை ஆனந்தமாய் கழிக்க ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நாளை பொழுது புலர்ந்தால் அவர் கள் உள்ளங்கள் புகையிரதத்திலும் பார்க்க வேகமாக ஓடிக்கொண்டிருக்குமே! இன்று எங்கள் விடுதி அமர்க்களப்படுவதை பார்த்தாயா?” அதோ, வண்டியும் வந்து விட்டது! 

“ஏன் நீ இன்றைக்கே புறப்படுகிறாயா?” 

“ஆம். நான் இன்றைக்கே போய்விட்டால் நீங்கள் நாளை வரும் போது வரவேற்க வசதி யாகயிருக்குமென்று நினைத்து அதிபரிடம் நான் இன்றைக்கே போகவேண்டுமென்று கேட் டுக்கொண்டேன். ஆனால் நாம் நினைத்தபடி எதுவும் நடக்கிறதா?” 

உண்மையில் வசந்தாவைப் பிரிவதென்றால் என்னவோ போலத்தான் இருந்தது. அவள் கண்கள் கலங்குவதைப் பார்க்கும் போது என் கண்களிலிருந்து குமுறிக் கொண்டு வரும் கண்ணீரை எப்படி என்னால் அடக்க முடியும். “வாரத்திற்கு இரண்டு கடிதங்களாவது போடு” என்ற என் துக்கத்தை அடக்கிக் கொண்டு கூறினேன். 

சரி என்று தலையசைத்தாள் அவள். பேசமுடியாமல் அவள் குரல் கம்மி விட்டது. பிரிவு பசாரம் கூறி அவள் கையைப் பற்றினேன். நாணத்தின் மெல்லிய ரேகை அவள் நெற்றியில் படர்ந்தது. ஸ்படிகம் போன்ற கன்னங்கள் நாணத்தால் சிவந்தன. அவளுடைய ரோஜா? இதழ் போன்ற உதடுகள் என்னிட மிருந்து எதையோ பெறத் துடித்தன. 

பின்பு கலகலவென்று சத்தத்தோடு ஓடிக் கொண்டிருந்த வண்டிக்குள்ளிருந்து கண்ணீர் நிறைந்த இரு கண்கள் என்னை நோக்கிக் கொண்டிருந்தன. 

பாடசாலை தொடங்க இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஊரிலிருந்து புறப்பட்டேன். வசந்தாவின் வீட்டை அடையும் போது மாலை சுமார் நாலு மணியிருக்கும். முன்அறிவித்தல் இல்லாமலே வந்துவிட்டீர்களே! என்று அன்பு ததும்பக் கூறிக்கொண்டு என்னை வரவேற் றாள் வசந்தா? 

நான் வருவதை முன்கூட்டியே உனக்குத் தெரிவித்தால் நீ என்ன செய்வாய். 

செய்வதென்ன நீங்கள் வந்தால் உள்ளேயே வரவிடக்கூடாது என்று கூறி கவாற் காரனை வாசலிலேயே நிற்கவிட்டிருப்பேன். 

நல்ல வேளையாக உனக்கு அந்தச் சிரமங் கொடுக்காமல் விட்டேனே அது போதும். 

எந்தச் சிரமம். 

காவற்காரனை நியமிக்கும் சிரமந்தான்! 

கலகலவென்று சிரித்துகொண்டு உள்ளே ஓடிய அவள், பிறகு நிமிஷத்திற்கு ஒரு தரம் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். நான் வெளியே போடப்பட்டிருந்த ஓர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். 

“என்னை மன்னிக்கவேண்டும். உங்களை வெகுநேரம் தனிமையில் இருக்க விட்டு விட்டேன். 

“பரவாயில்லை. இப்பொழுதாவது நீ உன் வேலைகள் முடித்து வந்தாயே!” 

“என் வேலைகள் இன்னும் முடியவில்லையே! எழுந்திருங்கள். உங்கள் உடைகளை மாற்ற வேண்டாமா?” என்று கூறிக்கொண்டு எனக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றாள். 

சுமார் அரைமணிநேரம் கழித்து வசந்தா வரும் காலடிச் சத்தத்தைக் கேட்டு நித்திரை போற் பாசாங்கு செய்தேன். கலீல் என்ற சப்தத்தைக் கேட்டுக் கண்ணை விழித்தபோது பரக்கபரக்க விழித்துக்கொண்டு கைகால்கள் வெடவெட என நடுங்க அவள் நின்று கொண்டி ருந்தாள். நிலத்தில் நூறு துண்டுகளாக வெடித்துப் போய்க் கிடந்த தேநீர் கோப்பை என் உள் ளத்திற்கு ஓர் உதாரணமாகக் கிடந்தது. துக்கமும் பயமும் அவள் முகத்தல் மாறி மாறிக் காட்சி யளித்தன. என்னையே சற்று நேரம் உற்று நோக்கிய வண்ணம் நின்ற அவள் அவசர அவச ரமாக உடைந்த துண்டுகளைப் பொறுக்க ஆரம்பித்தாள். சத்தத்தைக் கேட்டு உள்ளே நுழைந்த வசந்தா “கீழே போட்டு உடைத்து விட்டு அழுகிறாயா? கழுதை முகத்தைப் பார்!” என்று வசைமாரி பொழிய ஆரம்பித்தாள். அப்பொழுது சுமார் மூன்று வயசுக் குழந்தை யொன்று தட்டுத் தாடுமாறி உள்ளே நுழைந்தது. தன் குஞ்சுக் கரங்களால் அவளின் சேலை யைப் பிடித்துக்கொண்டு ஏம்மா அழுறா என்று கொஞ்சும் பாவனையில் கேட்டது.விக்கிவிக்கி பலத்து அழுது கொண்டு வாஞ்சையோடு குழந்தையைக் கட்டி மார்போடு அணைத்துக் கொண்டாள் அவள். 

என் வாழ்க்கையின் இன்பம் அஸ்தமித்துவிட்டது. கொலைகாரனைப் போல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். 

எழுந்திருங்கள் சாப்பாடெல்லாம் தயாராய் விட்டது என்று கூறிக்கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தாள் வசந்தா. 

நான் தலையை நிமிர்த்தினேன். வெளிறிப் போயிருந்த என் முகத்தில் இரு கண்கள் கண்ணீரில் மிதப்பதைக் கண்டவுடன் என்ன அது என்று ஏக்கம் நிறைந்த தொனியுன் கேட்டாள் வசந்தா. 

வசந்தா இந்தப் பாவியை மறந்து விடு. நான் கொலைக்காரன் மற்றவர்கள் 

துன்பத்தில் இன்பம் அனுபவிக்கும் நான் பெண்மையின் தெய்வீகத் தன்மை அறியாத மூர்க்கன் துரோகி. என்னை மன்னித்து விடு வசந்தா. 

எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே. அதற்குள் உங்களுக்கு என்ன நடந்துவிட்டது. 

வசந்தா நீ என்னை உண்மையாய் காதலிக்கிறாயா? இது என்ன கேள்வி. 

“நீ என்னைக் காதலிப்பது உண்மையானால் உண்மையான ஓர் இன்பத்தை நாடிச் செல்லும் உன்காதலின் உள்ளத்திற்கு ஒருவழி காட்டுவது உன் கடமையல்லவா?” 

“இது என்ன விளையாட்டு. ஐயோ! இந்த இருதயம் மென்மையானது. அதில் சுமக்க முடியாத பாரத்தைச் சுமத்தி என்னைக் கொல்ல வேண்டாம். என் நெஞ்சைத் தொட்டுப் பாருங்ள். இந்தப் பேதையின் உள்ளங் கொதிப்பது உங்களுக்கு விளங்கும். அரை மணித் தியாலத்திற்குள் உங்களுக்கு என்ன பிடித்து விட்டதென்று தெரியவில்லையே! உங்கள் காலில் விழுகிறேன் ; நடந்தது என்னவென்று கூறமாட்டீர்களா?” 

“வசந்தா. நான் உன்னிடம் கூறாமல் ஒழிப்பதற்கு என்ன இருக்கிறது? நான் மகா பாவி யென்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.என்னையே கதியென நம்பி வந்த – என் அன்பிற்கு அடிமைப்பட்ட பரிசுத்தமான மகாலட்சுமி போன்ற ஒரு ஏழைப் பெண்ணை என் காமக் கருவியாகப் பாவித்தேன். அவள் தியாக குணம் பெண்களுக்கே உரியது என்பதை நிரூபித்து விட்டாள். ஆனால்…. 

கூறி முடிப்பதற்குள் “ஐயோ! ஐயோ அம்மா! அம்மா!” என்று யாரோ அவலக் குரலில் அலறுவதைக் கேட்டு இருவரும் வெளியே ஓடினோம். 

‘என்ன நடந்தது” என்று படபடப்புடன் கேட்டாள் வசந்தா. 

“மேல் மாடியிலிருந்து தவறி…” 

என் முன் தெரியும் பொருட்களெல்லாம் சுழல்வதுபோல இருந்தது. “ஐயோ” என்றலறிக் கொண்டு இறக்குந்தறுவாயிலிருக்கும் அவளின் தலையைத் தூக்கி என் மடி மீது வைத்தேன். என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகப் பெருகியது. “என் கண்ணே. உன் பெருமையை உணராது உன் வாழ்க்கையைக் கெடுத்து அதற்கு முற்றுப்புள்ளியிட்ட இந்தப் பாவிக் குப் பாடங் கற்பித்து விட்டாயே! அழிய வேண்டியவன் நான் இருக்க. உன் பொன்னான உயிரை ஏன் மாய்த்துக் கொண்டாய். என் செல்வமே? உன் அருமைக் குழந்தையை யார் கையில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறாய்?” 

“சுவாமி. என் வாழ்வில் நான் என்றும் அடையாத இன்பத்தை இன்று தான் அடைகிறேன்.என் உயிர்க்குயிரான அன்புக் காதலரின் மடியில் உயிர்விட நான் எத்தனை ஜென்மங்களில் புண்ணியஞ் செய்தேனோ? என் உயிர் சாந்தி அடைவதற்கு உங்கள் வாயிலிருந்து வந்த ‘என் கண்ணே’ என்ற அந்த ஒரு சொல்லே போதுமே! என் பிரபு. குழந்தையைப் பற்றிய கவலை எனக்கு எதற்கு? உங்கள் குழந்தையைப் பாதுகாக்கும்படி நான் உங்களிடம் கேட்க வேண்டுமா? என்று அலறிக்கொண்டு அருகில் ஒன்றும் விளங்காமல் மிரள, மிரள விழித்துக் கொண்டு நின்ற குழந்தையின் கரங்களைப் பிடித்து என்னிடம் ஒப்படைத்தாள். 

“என் செல்வமே. இனி இதுதான் உனது அம்மா. இந்த ஏழை அம்மாவை மறந்துவிடு” என்று கூறி வசந்தாவின் கரங்களை அன்போடு வருடினாள். 

“எங்கேம்மா போறாய்?” என்று கேட்டுக்கொண்டு வரண்ட முகத்தோடு நின்ற குழந்தை யின் மெல்லிய கைகளைப் பிடித்துத் தனது மார்போடு அழுத்தினாள் அவள். பிறகு… 

அவளுடைய ஆத்மா, நிம்மதியான ஓர் உலகத்தை நாடிச் சென்று கொண்டிருந்தது. 

– மறுமலர்ச்சி தை, மாசி 1947.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *