தெய்வப் பணி
கதையாசிரியர்: அப்பச்சி மகாலிங்கம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 866
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் யாரென்று சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனால் கூச்சப்படுவதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா? நான் இரத்தம் கொடுப்பவன் தானம் செய்பவன் அல்ல. விலைக்கு விற்பவன். தேவையானவர்களுக்கு நான் இரத்தம் கொடுப்பேன்.
என்னுடைய உழைப்பு போதாது. ஆகவேதான் குடும்பநிலையைச் சரிக்கட்ட இடைக்கிடை இரத்தம் விற்பேன். என் வருவாய் தாராளமாயிருந்தால் ஒரு வேளை இரத்தத்தை விற்காமல் தானம் செய்வேனோ யார் கண்டது?
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி வாசலில் நின்று எவராவது இரத்தம் தேவைப்பட்டு வருகிறார்களோவெனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் கொஞ்சம் பண நெருக்கடி. அதை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக இரத்தம் விற்க நான் முனைந்து நின்றேன். பத்து மணியிருக்கும் அப்பொழுதுதான் அந்தப் பெரியவர் வந்தார். அவரது நடை, அவரது பரபரப்பு அத்தனையும் எனக்குப் பழக்கமானவை. ஆமா, இரத்தம் அவசரம் தேவைப்படுவோருக்குரிய பரபரப்பு அது.
“இரத்தம் தேவைப்படுகிறதோ? என்ன விஷயம்?”
எந்த வித ஒளிவு மறைவுமில்லாமல் கேட்டுவிட்டேன். எனக்கு அவ்வளவு துாரம் அது நிச்சயம்.
“ஆமாம் தம்பி, மிச்சம் அவசியம் இரத்தம் கொடுக்க எனக்கு ஒருவரும் இல்லை. என் மகள் பிள்ளை பெற்று விட்டாள். ஆனால் இரத்தம் அதிகம் போய்விட்டது. உயிருக்கு ஆபத்தான விஷயம். உடனே இரத்தம் கொடுக்க வேண்டுமென டாக்குத்தர் சொல்லிவிட்டார். காசுக்கு இரத்தம் கொடுப்பவர்களை இங்கை பிடிக்கலாமாம். உனக்கு ஆரையும் தெரியுமோ தம்பி” மூச்சு வாங்கத் தட்டத் தடுமாறி அந்தக் கிழவர் சொல்லிவிட்டார். என் முகம் மலர்ந்தது. தேடி வந்த தரிசனம் கிடைத்து விட்ட பக்தன் போலாகிவிட்டேன்.
“பெரியவரே, காசுக்கு இரத்தம் கொடுக்கிறவரைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். நானும் காசுக்கு இரத்தம் கொடுப்பவன்தான். உங்களுக்கு எந்தப் பிரிவு இரத்தம் தேவை?”
கிழவர் தேவைப்படும் இரத்தத்தின் பிரிவை சொன்னார். என்னுடைய இரத்தப் பிரிவுதான் ஆனால் கிடைப்பது கஷ்டமானது.
“பெரியவரே, இரத்தம் நான் தருகிறேன். பிரிவுப் பொருத்தம் சரி. வாருங்கள் போவோம்.”
கிழவர் சுற்றத் தயங்கினார். எனக்குத் தெரியும் ஏனென்று,
“எவ்வளவு காசு கேட்கிறாய் தம்பி?”
எவ்வளவு காசு? என்னுடைய குடும்ப நெருக்கடியின் விலையைதான் சொல்ல வேண்டும். முப்பது ரூபா.
“முப்பது ரூபா தரவேண்டும் பெரியவரே.”
கிழவர் பின்னடைந்தார். “தம்பி, இப்பகையிலை பத்து ரூபாய்தான் கிடக்குது. நீ இப்ப இரத்தத்தை தா. நான் பின்னேரம் போய் மாறிக்கொண்டு உன்ரை வீடு தேடிக்கொண்டு வந்து தாறன்.வா, தம்பி” கிழவர் குரலில் அவசரம் தொனித்தது.
பிரச்சினை பிறந்துவிட்டது. கிழவருக்கு இரத்தம் தேவை. எனக்குப் பணம் தேவை. இரத்தத்தை பெற்ற பிறகு மிச்சக் காசை தராமல் விட்டுவிட்டால்? என் மனதிலே மெல்ல நெளிந்தது இந்தக் கேள்வி.
வாழ்க்கையென்பது கூட ஒரு வியாபாரம் தானே?
ஏமாந்தவன் தலை துாக்க முடியாதே.
“காசு கொஞ்சம் அவசரம் தேவை. காசை உடனடியாகத் தந்தால் நல்லது.
பெரியவர் மனதில் ஏமாற்றம் படர்ந்தது. சிறிது யோசித்தார். “சரி தம்பி ஒரு இடமும் போகாதே, இங்கேயே நில். நான் ஓடிப்போய் காசு பிரட்டிக் கொண்டு அரை மணித்தியாலத்தில் வந்துவிடுகிறேன்.”
சொல்லிக்கொண்டு பெரியவர் போய் விட்டார். நான் காத்துக் கொண்டு நின்றேன்.
அவர் சொல்லுகிறார் :-
முப்பது ரூபா கேட்டான். அதுவும் கையில் கொடுத்ததால் தான் இரத்தம் தருகிறதாகச் சொல்லிவிட்டான்.
மடியிலை ஒன்பது ரூபாயைத் தவிர வேறு எதுவும் கிடையாது. நான் அதிகம் யோசிக்க வேண்டியதாயிற்று.
மகள் என்னுடைய பெண் பிரசவித்துவிட்டு உயிருக்கும் இறப்புக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு கிடக்கிறாள். அவளது உயிரை பிடித்திழுக்க இரத்தம் கட்டாயம் ஏத்த வேண்டுமென்று டாக்குத்தர் சொல்லிவிட்டார். அதுவும் உடனடியாகத் தேவையாம்.
என் மருமகன் மகளின் பருஷன் அவளுடன் சிறு சச்சரவு பட்டு பிரிந்திருக்கிறான். ஆகவே என் மகளுக்கு நான் தான் ஒரே துணை. ஆனால் துணை நிற்க வேண்டியவன் பலமில்லாமல் நின்றேன். என்னுடைய உடம்பிலுள்ள முழு இரத்தத்தையும் கொடுக்க நான் தயார். ஆனால் ஆஸ்பத்திரியில் சொல்லி விட்டார்கள் எனக்கு வயதாகிவிட்டதாம். என் மகளை முப்பது ரூபாய்க்காக இயமன் வாயில் ஒப்படைப்பதா? திடீரென எனக்கு நினைவு வந்தது.
என் மகள் தன் தாலிக்கொடியை கழற்றி என்னிடம் தந்திருந்தாள். ஆஸ்பத்திரிக்கு வந்தவுடன் அதை எடுத்துக்கொண்டுபோய் அடைவு வைத்துக் கொண்டு வந்தாலென்ன? உயிரை மிஞ்சிய ஒரு பொருளா?
தாலியைக் கழற்றிவிட்டுக் கொடியுடன் அடைவு கடைக்கு ஓடினேன். என் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை என்னை ஊக்குவித்தது. அங்கே அடைவு கடைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. இரத்தம் கொடுத்து மீட்க வேண்டிய என் மகளை நினைத்தேன். முப்பது ரூபா கேட்ட இரத்தம் கொடுப்பவனையும் நினைத்தேன். அப்போது இன்னொரு எண்ணம் பிறந்தது. என்னைத்தான் அவன் நம்பவில்லை. மிச்சக் காசை நான் கொடுக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவன் பயந்திருக்கலாம். ஆனால் நான் அவனை நம்பினால் என்ன? தாலிக் கொடியை அவனிடம் கொடுத்துவிட்டு இரத்தத்தை பெற்றுக் கொண்டு மகளைக் காப்பாற்றுவோம். பின்னேரம் காசு எங்கேயாவது மாறிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு இரத்தத்தை பெற்றுக் கொண்டு மகளைக் காப்பாற்றுவோம். பின்னேரம் காசு எங்கேயாவது மாறிக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டுத் தாலிக்கொடியை எடுத்து வந்தாலென்ன? இப்போது தேவை இரத்தமே தவிர மற்றொன்றுமில்லையே. ஆஸ்பத்திரியை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் புறப்பட்டேன்.
மனதிலே உள்ள அவசரத்தினால்தான் வெளியுலகைக் கவனிக்க முடியாத நிலையில் இருந்தேன். அதனால்……..
அந்தப் பெண் மீது மோதின பிறகுதான் எனக்குச் சுய உணர்வு வந்தது. தட்டுத் தடுமாறி விழுந்து விடாமல் அவள் சமாளித்துக் கொள்ள முயற்சி செய்தாள். முடியவில்லை விழுந்துவிட்டாள். “பிள்ளை கோபிச்சுக் கொள்ளாதே அவசரத்திலை போகிறபடியால் நான் கவனிக்கவில்லை. பிழையாக நினைச்சுப் போடாதே’ என்று சொல்லிவிட்டு அவள் கையிலிருந்து விழுந்த பொருட்களை எடுத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
அவள் கோபிக்கவில்லை. என்நிலையை அவள் உணர்ந்து கொண்டாள் என்ற நம்பிக்கையில் என்னைப்பற்றிச் அவளுக்குச் சொல்ல வேண்டும் போல இருந்தது.
“என்ரை மகள் பிள்ளை பெற்றுவிட்டாள். ஆனால் இரத்தம் கொடுக்க வேண்டும். அதுக்கும் ஒருவனைத் தேடிப்பிடித்தேன். அவன் கேட்ட காசு மடியிலை இல்லை. அதுதான் அவள் போட்ட தாலிக் கொடியை அடைவு வைப்பமென்று வந்தனான். அடைவுக் கடைகள் பூட்டு. அதனால் திரும்பிப் போகிறேன், இந்தக் கொடியையே அவனிட்டக் கொடுத்து இரத்தம் வாங்குவம் என்று அங்கே பிள்ளை உயிருக்கு மன்றாடுது. வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
அந்தப் பெண்ணின் முகத்திலே அமைதியான ஒரு சிரிப்பு இருந்தது. “பெரியவரே” என்று கூப்பிட்டுவிட்டுக் கிட்ட வந்து அவள் சொன்னாள்.
அவன் சொல்கிறான் :-
வாழ்க்கையில் முதன் முறையாக என்னைச் சபித்துக் கொண்டேன். காசுமாறிக் கொண்டுவரப்போன கிழவனைக் காணவில்லை. காசு வரவில்லையென்று நான் துடிக்கவில்லை. நான் துடித்தது. என் உயிர் துடித்தது, இன்னொரு உயிருக்காக.
கிழவருக்காக நான் காத்துக்கொண்டு நிற்கையில் இரண்டுபேர் பேசிக்கொண்டு போனது என் காதில் விழுந்தது.
“நேற்று அந்த உயிர் தப்பியிருக்கும். யாரென்றாலும் உடனே இரத்தம் கொடுத்திருந்தால்… அந்தப் பிரிவு இரத்தம் இல்லையாம். அதனாலை அநியாயமாய்……”
அவ்வளவே போதும். என் நெஞ்சில் ஒரு உண்மை பயங்கரமாய்த் தோற்றமளித்தது. கிழவன் காசுகொண்டு வரத்தாமதித்தால், இரத்தம் ஏற்றாதபடியால் கிழவனுடைய மகள் இறந்துவிட்டால் அந்தப் பாவம் பழியும் என் தலைமேலா வந்து சேரும்?
நெஞ்சைப்பிடித்துக்கொண்டேன். என்னடைய செயலால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்போது, நான் பண ஆசையால் வீணாக அந்த உயிரை மாய்ப்பதற்குக் காரணமாகப் போகின்றேனா?
இது வரைக்கும் இப்படி நடந்ததில்லை. நான் கேட்ட தொகையை உடனுக்குடன் தந்தார்கள். நான் செய்தது வியாபாரம் என்றது. என்னை வாட்டவில்லை. இரத்தம் விற்பதும் வேறு பல உயிர்களை அந்தக் காசைக் கொண்டு காப்பாற்றலாம் என்று தானே. பணப்பிரச்சினை என்னுடையது. உயிர்ப்பிரச்சினை அவர்களது.
கிழவன் போய் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகிவிட்டது. நான் பொறுமை இழந்து துடித்துப்போய் விட்டேன். நானாகப் போய் இரத்தத்தைக் கொடுப்போமா என்று கூட எண்ணினேன். ஒரு உயிரைப்பிடித்து இந்த உலகத்தில் நிறுத்துவது என்றால் இலேசான காரியமா? இயமனுடன் போராடி வெற்றி காண்பது என்பது பெருமையான, புகழான காரியம் அல்லவா?
கிழவர் தோற்றப்பட்டார் பாய்ந்தோடிச் சென்றேன். “பெரியவரே வாரும் போவோம்” என்றேன் பதற்றத்துடன். கிழவர் சற்றுத் தயங்கினார்.
“ஓ, காசில்லை என்று யோசிக்கிறீரா? பரவாயில்லை காசைப்பற்றி பிறகு பேசுவோம். அப்போது தெரியாத்தனமாக நான் பிடிவாதமாய் நின்று விட்டேன். உயிர் போகிற காரியம். முதலில் பார்க்கவேண்டும். காசு பிறகு…..” கிழவர் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளுக்குப் போகப் புறப்பட்டேன்.
“தம்பி, நீ கேட்டதே போதும். ஆனால் இரத்தம் இனித் தேவையில்லை.
என் நெஞ்சில் ‘சுளீர்’ என்றது. கிழவரின் மகள் போய்விட்டாளா?
“பெரியவரே, நீர் என்ன சொல்லுகிறீர்”
“பயப்படாதே தம்பி. அப்படியொன்றுமில்லை. இரத்தம் கொடுத்து இப்போது அதை மகளுக்கு ஏற்றுகிறார்கள். அவள் பிழைச்சிடுவாளாம், டாக்குதர் சொன்னார்” என்றார் கிழவர்.
இரத்தம் கொடுத்தாயிற்றா? எனக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி. செய்ய நினைத்த நல்ல காரியத்தை செய்ய முடியாமற் போய்விட்டதே? வியாபாரத்திலேதான் தோல்வியென்றால், தானஞ் செய்ய நினைத்ததுமா தோல்வி. சிரிப்புத்தான் வந்தது. இரத்தம் கொடுத்தது எந்தப் புண்ணியவானோ? கிழவரைக் கேட்டேன்.
“புண்ணியவான் இல்லை தம்பி புண்ணியவதி. ஒரு புண்ணிய ஆத்தமா என்னுடைய நிலையைக் கண்டு அந்தத் தெய்வம் தானாக வந்து இரத்தம் கொடுத்து என்ரை குலத்தைத்தழைக்க வைச்சு விட்டது.”
ஒரு பெண்! என் ஆவல் கட்டு மீறியது. தானஞ் செய்த அந்தப் புண்ணியவதியைப் பார்க்கவேண்டும். இயமனிடம் சிக்கியிருந்த உயிரை மீட்டுக் கொடுத்த இந்த நவீன சாவித்திரியை நான் பார்க்க விரும்பினேன்.
கிழவர் என் எண்ணத்தை உணர்ந்தவர் போல ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார்.
“இதுதான் தம்பி அந்தப் பெண் இந்தப் புண்ணியவதிதான் என் மகளுக்கு உயிர் கொடுத்தது” என்று கிழவர் சொன்னதைக் கேட்டு திரும்பிப்பார்த்தேன். அங்கே……..
அவன் சொல்லுகிறான் :-
கிழவரின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
“நீ காசு உடனே வேண்டுமென்று சொல்லிவிட்டாய். அடைவு கடைக்குப் போய் அது பூட்டிக் கிடக்க ஒன்றுஞ் செய்ய முடியாமல் வாறபோது இந்தப் பெண்ணை இடிச்சு விழுத்திப்போட்டன். அப்பதான் என்ர கதையை கேட்டு இந்தப் பெண் தானாக வந்து இரத்தம் கொடுத்தது” என்று சொல்லிக் கொண்டிருந்தார் கிழவர்.
கிழவருக்குப் பக்கத்தில் நின்றவர் என் கணவர் ஒரு சீவன் உயிருக்கு மன்றாடும் போது பணத்தை முதலில் வை, பிறகு மற்றக்காரியம் என்றவர் என் கணவர். கடவுளே, நான் இரத்தம் கொடுத்துக் கிழவரின் மகளை மாத்திரம் காப்பாற்றவில்லை. என் கணவர் தலைமேல் விழவிருந்த தீராத பழியையும் பாவத்தையுமல்லவா போக்கியிருக்கிறேன். என் கணவர் என்னைக் கண்டவுடன் அதிர்ச்சியடைந்து போனார்.
“பிள்ளை, இந்தத் தம்பி முதலில் காசு வேணுமென்று கேட்டாலும், இப்ப காசு வேண்டாம், அதைப் பிறகு பார்ப்பம், இரத்தம் கொடுப்பம் முதலில் என்று சொன்னது. ஆனால் அதற்கு முன் நீதான் இரத்தம் கொடுத்துவிட்டாயே பாவம் பொடியனுக்கும் என்ன காசுக் கஷ்டமோ?”
என் கணவர் இடைக்கிடை இரத்தம் கொடுத்து பணம் வாங்குவது எனக்குத் தெரியும். குடும்பப்பாரம் இலேசாகுவதற்காக அவர் செய்யும் வேலையது. பாவம், அவரும் என்ன செய்வார்? காசுக்கஷ்டம். ஆனால் உயிர் போகிற வேளையிலே காசு வேண்டுமென்று நெருக்கியது மகாபாவம். அதை அவர் உணர்ந்தால் போதும். என்னை பார்க்கவே வெட்கமாயிருக்கிறது. கிழவரின் கையைப் பிடிக்கிறார். கண்களில் நீர் தழும்புகிறது. ஆமாம், அவர் உணர்ந்துவிட்டார். குடும்பம் இரண்டுநாள் பட்டினி கிடந்தாலென்ன, கடன் கொடுத்தவன் வந்து நெருக்கினால் என்ன, இரத்தம் கொடுக்க வசதியுள்ளவன் அதை தாராளமாய் மனமகிழ்ச்சியுடன் செய்யவேண்டும். ஏனென்றால் அது…
அவன் சொல்லுகிறான் :-
அது வெறும் இரத்ததானமல்ல, உயிர்த்தானம். உயிரைக் கொடுக்கும் பாக்கியம் உலகில் எல்லோருக்கும் கிடைக்குமா? அது ஒரு புனிதப் பணி, தெய்வப் பணி.
அப்பச்சி மகாலிங்கம்
ஈழத்தின் பத்திரிகைளில் நிறையவே எழுதிப் பெயர் பெற்றவர் அப்பச்சி மகாலிங்கம் ஆவார். ஈழநாடு பத்திரிகையில் சிறுகதைப்போட்டியில் சான்றிதழ் பெற்றவர். தெய்வப்பணி, ஆறுதற்பரிசு என்பன நல்ல குறிப்பிடத்தக்க படைப்புகளாம்.
– 10.06.1956, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.
