தென்றல் மீனா
(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்றல் மீனா, வசந்தா நிலையத்தின் பெரிய போர்ஷன் ஒன்றில் வசித்து வரும் இளம்பெண். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த, ஒடிசலான துருதுரு இளம்பெண் மீனா, செல்ப் மேட் ஆக தன்னை தானே உருவாக்கிக் கொண்டவள். மகளிர் விடுதிக்குச் செல்லாமல் பலதரப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில் வசிக்க வேண்டும் என்று இங்கு வந்தவள். சென்னைக்கு வந்த போது முதலில் சில மாதங்கள், தனியாரின் தென்றல் பண்பலை வானொலியில் மீனா அறிவிப்பாளராக பணி புரிந்து வந்தாள். அதனால், இங்கு உள்ள பெண்மணிகள் அவளை தென்றல் மீனா என்று அழைத்தார்கள். இங்கு குடி வந்த சில நாட்களிலேயே கலகலவென்று பேசிப் பழகி தனக்கென இங்கே பெண்கள் நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விட்டாள்.
சரி மீனா இப்பொழுது எங்கே வேலை செய்கிறாள் என்று கேட்கிறீர்களா? ஒரு கம்பெனியில் வேலை பார்த்து படிப்படியாக பதவி உயர்வு பெறும் கருத்தாக்கத்தில் அவளுக்கு விருப்பமில்லை. குறுகிய காலத்தில், கான்டாக்ட்ஸ் என்னும் சொத்தை உருவாக்கிக் கொண்ட அவள், ப்ரீலேன்சர் போல் தன்னுடைய அலுவல் தொடர்பில் உள்ளவர்களுக்காக ஈவென்ட் நடத்துவது, ப்ரெயின் ஸ்டார்ம் நிகழ்வுகளில் பங்கேற்று ஆலோசனை சொல்வது என்று தன்னுடைய திறமைகளின் பல பரிமாணங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறாள் மீனா. விளம்பர படங்கள், ஆவணப்படங்கள் எடுக்கும் நிறுவனங்களும் புத்தம் புதிய கோணம் உள்ள சிந்தனைக்காக, யோசனைகளுக்காக இவளுக்கு அழைப்பு விடுப்பார்கள். தொழில் நேரங்களில் இவளுடன் பழகும் ஆடவர் சிலர், இவள் வயதை அறிந்து கொள்ள நீங்கள் நெயன்ட்டிஸ் கிட் ஆ…… டூ தவுசன்ட் கிட் ஆ என வினா தொடுப்பார்கள். புன்னகையை மட்டுமே பதிலாக தருவாள் மீனா.
தெலுங்கு சினிமாவில் காட்டப்படும் கிராமத்துப் பண்ணையார் வீடு போலவே வீடு முழுக்க உறவினர்களையும் பணியாளர்களையும் கொண்டது தான் மீனாவின் வீடு. ஊரில் கூண்டுக் கிளியாக இருக்கப் பிடிக்காமல் சென்னை வந்த மீனா, தன்னந்தனியாக நின்று வாழ்ந்து காட்டி வருகிறாள். ஊரில் அவள் வீட்டில் உள்ள உறவினர்களும் மற்றவர்களும் அவளை வளர்த்த ஊர் தலைக்கட்டு ஆன அவளுடைய பெரியப்பாவிடம் ‘மீனா, தம்பி பொண்ணுங்கறதால தான் அவ போக்குக்கு விட்டு விட்டு வேடிக்கை பார்க்கறீங்களா ‘என்று கேட்டனர். ‘ஆமாம் எங்க பரம்பரை பொண்ணு பட்டினத்தில் சாதிக்கிறதை வேடிக்கை பார்க்கறேன் ‘ என்று சொன்னார் அவளுடைய பெரியப்பா.
வண்ணத்துப்பூச்சி போல் பறந்து கொண்டிருக்கும், தேனீ போல் வேலை வேலை என்று இருக்கும் மீனாவும் மும்முரமான பணிகளுக்கு நடுவே காதல் வலையில் விழுந்தாள். ஆனால், அவளுடைய காதலன் சதீஷ், சில மாதங்களில் இப்பொழுது எல்லாம் சொல்கிறார்களே பிரேக் அப் ஆகிக் கொள்ளலாம் அது போல் சொல்லிப் பிரிந்து விட்டான். காம்பவுண்டில் உள்ள ஓர் இளம்பெண் தோழி அவளிடம் இது பற்றிக் கேட்டாள். ‘பகுதி நேர காதல் தானே.. எனக்கு அந்த நேரமும் மிச்சம்.
எல்லை மீறாமல் இருந்ததால் என் பெண்மை கெடாமல் போனது எவரி திங் இஸ் பார் குட் ‘என்றாள் மீனா முகத்தில் எந்த வருத்தமும் இல்லாமல்.
அன்றொரு நாள். வெய்யில் அதிகமான முற்பகல் வேளையில், ஒரு கட்டுமான நிறுவனத்திற்கான புதிய புராஜக்ட் பற்றி விவாதிக்க அழைத்திருந்த ஒரு விளம்பர ஏஜென்சியின் அலுவலகம் நோக்கி மீனா, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள். நெடுஞ்சாலையில் ஆள் அரவமற்ற பகுதியில், ஓரத்தில் பைக் உடன் கட்டுடல் ஆடவன் விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்தாள். அந்த ஆடவன் சதீஷ். அவனைத் தூக்கப் பார்த்தாள். முடியவில்லை. தொலைவில் உள்ள கட்டுமானப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பதின் பருவ இளைஞன், இவளைப் பார்த்து ஓடி வந்தான். பல்க்கா இருக்காரு என்றபடியே அவனைத் தூக்கி ஓரத்தில் கிடத்தினான். அவனுடைய பைக்கை எடுத்து பத்திரமாக ஓர் இடத்தில் வைத்து விட்டு, ஓடிப் போய் ஆட்டோவை அழைத்து வந்தான். கஷ்டப்பட்டு ஆட்டோவில் சதீஷை கிடத்தி விட்டு, ஓட்டுநர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். மீனா ‘ மல்லிகை ஆஸ்பிடலுக்குப் போங்க நான் என் வண்டில பின்னாடி வரேன் ‘ என்றாள் மீனா. ஆட்டோ வேகமாகச் சென்றது.
மல்லிகை மருத்துவமனை. மருத்துவமனை ஊழியர்கள், ஸ்ட்ரெச்சர் எடுத்து வந்து சதீஷை அதில் வைத்து உள்ளே கொண்டு சென்றனர். மீனா, ஆட்டோக் காரரிடம் தொகையை கொடுத்தாள். தாங்க்ஸ் தம்பி என்று அந்த பதின் பருவ இளைஞனிடம் ஒரு தொகையை கொடுக்க அவன் வாங்க மறுத்து விட்டான். நகரப் பார்த்தான். அந்த தொகையை ஆட்டோக் காரரிடம் கொடுத்த மீனா ‘சார் இந்த தம்பிய அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல விட்டு விடுங்க ‘ என்றாள். அவர் வாங்கிக் கொண்டார். பையன் ஆட்டோவில் அமர்ந்தான். ஆட்டோ நகர்ந்தது. மருத்துவமனையின் உள்ளே சென்றாள் மீனா. அவளுடைய ஊரைச் சேர்ந்த, அவளுக்குத் தெரிந்த, கனமான உடல்வாகு கொண்ட, நடுத்தர வயது பெண்மணி செவிலி விஜயா இவளைப் பார்த்தார். சதீஷையும் பார்த்தார்.
‘இவரா… மீனா… எங்க அபார்ட்மென்ட்ல தான் இருக்காரு. இவரு தங்கச்சி நம்பர் என்கிட்ட இருக்கு. நான் சொல்லிடறேன்’ என்றார்.
‘தாங்க்ஸ் சிஸ்டர் ‘என்ற மீனா, இது அவரோட முதுகு பை, போன், வாட்ச் அவருக்கு நினைவு திரும்பியதும் கொடுத்துடுங்க ‘ என்று ஒப்படைத்து விட்டு நகரப் பார்த்தாள் மீனா. விஜயா, பொருட்களை ரிசப்ஷனில் உள்ள இளம்பெண்ணிடம் கொடுக்கச் செனற நேரத்தில், சதீஷுக்கு, மயக்கம் தெளிந்த நிலையில் மீனாவைப் பார்த்தான். மீனா என்று ஈனஸ்வரத்தில் அழைத்தான். ஸ்ட்ரெச்சர் அருகே இருந்த மருத்துவமனை ஊழியர்கள் ‘மேம் ஒங்கள் கூப்பிடறாரு என்று மீனாவை அழைத்தார்கள். மீனா, காதில் வாங்காமல் விடுவிடுவென மருத்துவமனையின் வாசலை நோக்கி விரைந்தாள்.
குறிப்பு : இந்தப் புனைகதைகளில் விவரிக்கப்படும் சூழல், உலா வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
– இவர்களைச் சந்தியுங்கள் (சிறுகதைகள்), எஸ்.மதுரகவி வெளியீடு, விழுப்புரம்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |