துரோகம் யாருக்கு?




ஆனந்தி – (28-38)
அம்மா ராதா – (50-60)
கிரி (33-43)
கார்த்திகா – 16
காட்சி 1 (ராதா, ஆனந்தி)

ராதா (மகிழ்ச்சியாக) : ஆனந்தி! பத்து வருஷமா நீ இந்தக் குடும்பத்துக்கு ராத்திரி, பகலா உழைச்சியே! அதுக்கு கடவுள் கைமேல பலனைக் குடுத்துட்டார். ஆன: என்னம்மா? இன்னிக்கு ரொம்பத்தான் சந்தோஷமா இருக்கீங்க! ஏதாவது லாட்டரியில் ப்ரைஸ் விழுந்திருக்கா?
ராதா : இன்னும் மேல. லட்சாதிபதி ஒருத்தர் வலிய வந்து, ஒன்னைப் பெண் கேட்டுட்டு போயிருக்காரு, ஆனந்தி! எத்தனை பேருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும்! ஆன (அதிசயப்பட்டு): யாருடா அது, எனக்குத் தெரியாம ஒரு ரோமியோ!
ராதா: பேரு கிரி. ஒன்னைவிட அஞ்சு வயசுதான் பெரியவரு. நீ தினமும் வேலைக்குப் போறப்போ, பஸ் ஸ்டாப்பில நிக்கிறதைப் பாத்திருக்காரா…
ஆன (கேலியாக): சரிதான்! நான் ரோமியோன்னு சொன்னது சரிதான். தமிழ் படங்கள்ல வர்றமாதிரி, பஸ் ஸ்டாப் காதலா?
ராதா: சேச்சே! நீ என்னடி, அசிங்கமாப் பேசிக்கிட்டு! அவரோட கடை வாசல்ல நிக்கறப்போ, நீ கண்ணில பட்டிருக்கே. அவ்வளவுதான்.
ஆன: அட! எந்தக் கடைம்மா?
ராதா: அதான், ஒரு பெரிய துணிக்கடை இருக்கில்ல?
ஆன: அருணா டெக்ஸ்டைல்ஸ்னு போட்டிருக்குமே?
ராதா: அதேதான். நீ சொல்றமாதிரி இருந்திருந்தா, மொதல்ல ஒங்கிட்ட வந்து பேசி இருப்பாரில்ல? யாரையோ விட்டு, நம்ப வீடு எங்க இருக்குன்னு பாக்கச் சொல்லிட்டு..
ஆன: அடேயப்பா! எங்கிட்ட அவ்வளவு மோகமா அவருக்கு! இத்தனைக்கும் நான் பெரிய அழகியுமில்ல. இளமை ஊஞ்சலாடவும் இல்ல. இருபத்தெட்டு வயசிலேயே உச்சந்தலையில நாலு முடி வேற நரைச்சிருக்கு. எங்கேயோ உதைக்குதே!
ராதா(மெள்ள): அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி, முதல் தாரம் மூணு வருசத்துக்கு முந்தி, ரெண்டாவது பிரசவத்தில இறந்துட்டாங்களாம்.
ஆன: இதை மொதல்ல சொல்ல மாட்டீங்களே! மொதல் பிள்ளை?
ராதா: பேரு கார்த்திகா. ஆறு வயசிலேயே எவ்வளவு சூடிகைங்கறே! பாட்டி வீட்டுக்குப் போகலாம்னு சொல்லியிருப்பாருபோல! ‘பாட்டி, பாட்டி’ன்னு உசிரை விட்டுட்டா, போ. அருமையான பிள்ளை. போறப்போ, என்னை விடவே மாட்டேன்னு அழுதிச்சு. இந்த ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் அவங்க கொண்டு வந்ததுதான்.
ஆன: ஒங்களை நல்லாத்தான் கைக்குள்ள போட்டுக்கிட்டிருக்காரு அந்த ஆளு. ராதா: ஆளு, தேளுன்னு சொல்லாதேடி. நாளைக்கே ஒன் புருஷனா ஆகப்போறவரு. ஆன: என்னைக் கேக்காம, முடிவே பண்ணிட்டீங்களா ரெண்டு பேரும்?
ராதா(கெஞ்சலாக) : இதைவிட நல்ல வரனை நான் ஒனக்கு தேடித்தர முடியுமா, ஆனந்தி? யோசிச்சுப்பாரு! இது ஆம்பளை இல்லாத குடும்பம். நீயும்தான் எத்தனை காலம் வேலை செஞ்சு, ஒனக்குக் கீழே இருக்கிற மூணையும் கரை சேர்ப்பே?
ஆன: நான் கல்யாணம் ஆகிப் போயிட்டா?
ராதா: இதையும் நான் கிரிகிட்ட சொன்னேனே!
ஆன: அடேயப்பா! பேரு சொல்லிக் கூப்பிடற அளவுக்கு நெருக்கமாயிட்டீங்களா! ராதா: அவருதான் அப்படிக் கூப்பிடச் சொன்னாரு. ‘அத்தே! என்னை ஒங்க மூத்த மகனா நினைச்சுக்குங்க. இவங்களைப் படிக்கவெச்சு, முன்னுக்குக் கொண்டு வரறது என்னோட பொறுப்பு’ன்னு எவ்வளவு பணிவா சொன்னாரு, தெரியுமா? சின்ன வயசிலேயே அப்பா, அம்மா போயிட்டாங்களாம். இவரை வளக்கிறதுக்காக சித்தப்பா கல்யாணமே பண்ணிக்கல. அன்புக்கு ஏங்கறாருடி. எதுக்கும் ஒங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றதா சொல்லியிருக்கேன்.
ஆன: நான் சொல்ல என்னம்மா இருக்கு? என்னோட பொறுப்பை அவர் ஏத்துக்கப் போறாரு. பதிலுக்கு நான் கல்யாணம் ஆன அன்னிக்கே அம்மாவா ஆகணும்.
ராதா : வேணான்னா இப்பவே சொல்லிடு, ஆனந்தி. ஏதோ வேகத்தில் தலையாட்டிட்டு, அப்பறம் என் மேல வருத்தப்படக்கூடாது.
ஆன: ஒங்க மேல என்னம்மா வருத்தம்? இப்படி நாலு பிள்ளைங்களை ஓங்க தலையில கட்டிட்டு, போய் சேர்ந்துட்டாரே, அப்பா, அதோட, என்னை குடும்பத்துக்கு மூத்த பொண்ணா பொறக்க வெச்சு, இப்படி வண்டிமாடுமாதிரி ஓயாம ஒழைக்கணும்னு என் தலையில எழுதியிருக்காரே, அந்த ஆண்டவன்! அவங்களைத்தான் கோபிச்சுக்கணும்.
ராதா: சாமி குத்தம் வர்றமாதிரி வாய்க்கு வந்தபடி ஒளறாதே, ஆனந்தி. வேணுமின்னா அப்பா கார் முன்னால ஸ்கூட்டரை ஓட்டிட்டுப்போனாரு? அவரோட ஆயுசு அவ்வளவுதான்.
ஆன (அலுப்புடன்): சரி. சரி.
ராதா: முடிவா என்னதாண்டி சொல்றே?
ஆன: நான் சொல்ல இனிமே என்னம்மா இருக்கு! இப்ப தம்பி, தங்கச்சிங்களுக்கு அம்மாமாதிரிதானே இருக்கேன்! அதோட, இன்னும் ஒண்ணுன்னு நெனைச்சுக்கிட்டுப்போறேன்!
(கல்யாணம் நடக்கிறது. அதன்பின், சிருங்கார இசை — கமாஸ் ராகம்)
காட்சி 2 (ஆனந்தி,கிரி)
கிரி: வா. வெக்கப்படாம, உள்ளே வா, ஆனந்தி.
ஆன: வந்து.. பால், பழம் எல்லாம் எங்கே வெச்சிருக்காங்க?
கிரி(சிரித்து): நிறைய சினிமா பாப்பியோ?
ஆன: ம்?
கிரி: நான்தான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒரு வாட்டி எல்லாம் பாத்தாச்சு. ஆனா, அதால எல்லாம் அருணாவோட உசிரு போறதைத் தடுக்கவா முடிஞ்சிச்சு?
ஆன (தனக்குள்) : இவருக்கு இது முதல் இரவு இல்லியே! என்னோட உணர்ச்சியை எப்படி புரிஞ்சுக்க முடியும்!
கிரி: கார்த்திகா இவ்வளவு நேரம் தூங்காம, இங்கதான் இருந்தா. அம்மாவோடதான் படுத்துக்குவேன்னு ஒரே ரகளை, போ! (சிரிப்பு)
ஆன(தனக்குள்): எல்லாத்துக்கும் ஒரு சிரிப்பு! நல்லாத்தான் சமாளிக்கிறார்.
கிரி: ரெண்டு வருஷமா – அருணா போனதிலேருந்து – ‘அம்மா எங்கப்பா?’ன்னு கார்த்திகா கேக்கறப்போ எல்லாம், ‘வந்திடுவாங்க’ன்னு சொல்லி சமாளிச்சிருக்கேன். ஒன்னை மொதமொத பாத்தப்போ, எனக்கே திகைப்பா இருந்திச்சு – அருணாவே வந்துட்டமாதிரி. அவ ஒன்னைவிட கொஞ்சம் ஒசரம். அவ்வளவுதான். என்ன ஆனந்தி,நான்பாட்டில பேசிக்கிட்டே இருக்கேன், நீ பேசாமடந்தை ஆகிட்டே?
ஆன(முணுமுணுப்பாக): ஒரே தலைவலி.
கிரி: புகையில மணிக்கணக்கா ஒக்காந்திருந்தோமில்ல, அதான்! பதிவுத் திருமணம் மட்டும் போதும்னு அத்தைகிட்ட சொன்னேன். அவங்கதான் ‘வீட்டில மொத கல்யாணம்’னு முணுமுணுத்தாங்க. அருணாவுக்கும் இப்படித்தான் வந்திச்சு, எங்க கல்யாணம் ஆன அன்னிக்கு ராத்திரி. ஏழு வருஷமாச்சு. ஆனா, அதை நான் இன்னும் மறக்கல. சில சமாசாரங்களை மறக்கவே முடியாது, இல்ல? நான் ஒருத்தன்! சந்தோஷத்தில லொடலொடன்னு பேசிக்கிட்டு! இந்தா தலைவலி மாத்திரை! ரெண்டு போட்டுக்கிட்டு, நல்லாத் தூங்கு.
ஆன: ஸாரி.
கிரி: ஏய், என்ன இது! கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டு போயிடப்போகுது! நாளைக்குக் காலையில பேசிக்கலாம். மொதல்ல நீ தூங்கி, ரெஸ்ட் எடுத்துக்க. குட் நைட்.
காட்சி 3 (ஆனந்தி, ராதா)
ராதா (ரகசியக்குரலில்): ஆனந்தி! மாப்பிள்ளை கோபதாபம் இல்லாம இருக்காரா?
ஆன(சலிப்புடன்): அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. சிரிச்சு, சிரிச்சே மழுப்பிடறாரு. அவரே சொன்னமாதிரி, லொடலொடன்னு பேசறாரு.
ராதா (கவலையாக): நீ மரியாதையாத்தானே நடந்துக்கிட்டே?
ஆன (உரக்க): நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னே எனக்குப் புரியல. எனக்கு தலைவலின்னு சொன்னதும், ரெண்டு மாத்திரையைக் குடுத்திட்டு, ‘குட் நைட்’ சொல்லிட்டு, அவர் வராந்தாவுக்குப் போயிட்டார். போதுமா?
ராதா: அடிப்பாவி!
ஆன: என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? அவர் வாயைக் கிறந்தா அருணா ஜம்தான். இல்ல, மகளைப்பத்தின பெருமை. எனக்குத் தாங்கலம்மா. எப்படித்தான் ஆயுசு பூராவும் இவர்கூட இருக்கப் போறேனோ!
ராதா: இப்ப நொந்துக்கிட்டு என்ன ஆனந்தி புண்ணியம்? ஒன்னைக் கேட்டுக்கிட்டுதானே இந்த ஏற்பாட்டை பண்ணினேன்!
ஆன: ஒங்களைக் குத்தம் சொல்லல. வந்து.. அம்மா…
ராதா: என்னடி?
ஆன: முதலிரவுன்னு பேருதான். சாந்தி அறையில் பூத்தோரணம் கட்டி அலங்காரம் பண்ணல, தட்டில பால், பழம் எதுவும் கிடையாது. ஏம்மா?
ராதா: பழைய ஞாபகங்க வந்துடக் கூடாதுன்னு மாப்பிள்ளைதான் செய்திருக்கணும். ஒங்கப்பா இருந்திருந்தா, நானே இதையெல்லாம் கவனிச்சிருப்பேன்.
ஆன: விடுங்கம்மா. இனிமே நான் தினமும் பஸ்ஸிலே முண்டியடிச்சுக்கிட்டு ஏறி, வேலைக்குப் போக வேண்டாம். வீட்டு வேலைக்கும், சமையலுக்கும் ஆள் இருக்கு. புத்தகங்க படிச்சுக்கிட்டு, ராணிமாதிரி இருக்கப்போறேன்.
ராதா: இதை சொல்றப்போ, ஒன் முகத்தில துளிக்கூட சந்தோசமே இல்லியே, ஆனந்தி. நான் அவசரப்பட்டுட்டு, இந்தக் கல்யாணத்தை முடிச்சுட்டேனோன்னு சங்கடமா இருக்குடி.
காட்சி 4 (ராதா, கிரி)
ராதா: அடடே, வாங்க மாப்பிள்ளை.
கிரி: அத்தே! என்னை கிரின்னு கூப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்!
ராதா: சொன்னீங்கதான். ஆனாலும், சட்டுனு வாய் வரமாட்டேங்குது. ஆமா, ஆனந்தி வரல?
கிரி: அவ தலைச்சுத்தல், வாந்தின்னு சோர்ந்துபோய் ஒக்காந்திருக்கா.
ராதா(மகிழ்ச்சியுடன்): அட! எத்தனை மாசம்? எங்கிட்ட சொல்லவே இல்லியே!
கிரி: நான்தான் நேரில போய் சொல்லிக்கலாம்னு சொல்லிட்டேன். அத்தே! இன்னும் ஏழு மாசத்தில தம்பிப்பாப்பா பிறக்கப்போகுதுன்னு கார்த்திகாவுக்கு எவ்வளவு குஷி, தெரியுமா? விளையாட ஆளில்லாம, தனியா ஒக்காந்திருப்பா.
ராதா: வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் இங்கேயா, இல்ல ஒங்க வீட்டில வெச்சு செய்யப்போறீங்களா?
கிரி: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஊரைக் கூட்டி, தடபுடலா விழாமாதிரி கொண்டாடினோம், கார்த்திகாவை அருணா சுமந்துக்கிட்டு இருந்தப்போ. என்ன ஆச்சு? நாலு பேர் கண்ணு பட்டுத்தான் என்னோட அருணா அல்பாயுசில போயிட்டா.
ராதா: அப்படீங்கறீங்க?
கிரி: அப்ப நான் வரேன் அத்தை. இந்த நல்ல சமாசாரத்தை ஒங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் அவசரமா வந்தேன்.
ராதா(மெள்ள): இந்த மனுசன் அருணாவா, ஆனந்தியாங்கிற வித்தியாசம் பிடிபடாம் தடுமாறிக்கிட்டு இருக்காரு. பாவம், ஆனந்தி! செத்துப்போனவங்ககூட அவ எப்படி போட்டி போட முடியும்?
காட்சி 5 (ஆனந்தி, ராதா, கிரி)
(சோக இசை)
ஆன(விம்மலுடன்): எனக்கு மட்டும் ஏம்மா இப்படி எல்லாம் கெட்டதா நடக்குது?
ராதா: மனசைத் தேத்திக்க, ஆனந்தி. ஒன்னோட வயத்துக்கரு கருப்பையில வளராம, வெளியே குழாயில் உருவாகிடுச்சு. அதை வெளியே எடுத்தாத்தான் ஒன்னோட உசிரு நிலைக்கும்னு டாக்டர் சொன்னப்புறம், நாம்ப என்ன செய்ய முடியும்?
கிரி: நல்லா சொல்லுங்கத்தே. எனக்கு மட்டும் வருத்தம் இல்லியா, என்ன? மூணு மாசமாச்சு. இன்னும் இப்படியே அழுதுக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? தலை சீவி, பூ வெச்சுக்கிறதில்ல. நல்ல புடவை, நகை எதுவும் போட்டுக்கிறதில்ல. யாராவது வீட்டுக்கு வந்தா, வேலைக்கு வெச்சிருக்கிற ஆளுன்னு நெனைச்சுக்கறாங்க. எனக்கு அசிங்கமா இருக்கு. கார்த்திகாகூட, பாவம், ரொம்ப ஏமாந்துபோயிட்டா. ‘தம்பி இனிமே வரவே மாட்டானாப்பா?’ன்னு தினமும் கேக்கறா.
ஆன(ஆத்திரமாக): ஒங்களுக்கென்ன, நான் நிறைய நகை போட்டுக்கிட்டு, பணக்காரியா வலம் வரணும் அவ்வளவுதானே?
ராதா(கண்டித்து, அடிக்குரலில்): ஆனந்தி!
ஆன: கார்த்திகாவோட அம்மா போட்டிருந்ததா ஒரு வைர மூக்குத்தியை எங்கிட்ட குடுத்தீங்களே! அதை நான் போட்டுக்கணும். அவ்வளவுதானே? இன்னிக்கே பத்தர்கிட்ட போய் மூக்கில துளை போட்டுக்கிட்டு வர்றேன். திருப்தியா?
கிரி: இப்ப நான் என்ன சொல்லிட்டேன்! எதுக்கத்தை இப்படிக் கோவிச்சுக்கிட்டு போறா இவ?
ராதா: மொத பிள்ளை அரைகுறையா போன துக்கம் அவளுக்கு, இனிமே பிள்ளையே பிறக்காதுன்னு வேற ஆயிடுச்சா! சொல்லத் தெரியாம, அதை ஒங்கமேல காட்டறா. நீங்க மனசில வெச்சுக்காதீங்க. நான் போய் அவளை சமாதானப்படுத்தறேன். (இசை) ஆனந்தி! நீ நடந்துக்கிட்டது நல்லாவே இல்ல. கிரி எவ்வளவு அன்பா பேசறாரு!
ஆன: எல்லாரும் என்னையே சொல்லுங்க. அம்மா! ஒங்களுக்கு ஏன் புரியல? அவர் என்னை ஆனந்தியா பாக்கல. நான் அருணாவா மாறணும். அதான் அவருக்கு வேணும். கார்த்திகாவோட அம்மா போட்டிருந்த நகை, புடவை எல்லாத்தையும் இப்ப நான் போட்டுக்கணுமாம். ஹூம்! என் பேரைத்தான் இன்னும் மாத்தல. அது ஒண்ணுதான் பாக்கி.
ராதா: ஆனந்தி! நீ மனசைப் போட்டு இப்படிக் குழப்பிக்கிறதால யாருக்கு லாபம், சொல்லு! இனிமே கார்த்திகாதான் ஒன் மகள்னு நினைச்சிட்டுப் போயேன். தங்கமான பிள்ளை அது!
ஆன: ஒங்களுக்கு ஏம்மா புரிய மாட்டேங்குது! இவரோட முதல் தாரத்தோட புடவை, நகைங்களை தொடக்கூட பிடிக்கலங்கறேன். அவ பெத்த பிள்ளையை மட்டும்..! அவளைப் பாக்கறப்போ எல்லாம், எம்புருஷன் வேற ஒருத்தியோட சேர்ந்து வாழ்ந்திருக்காருன்னு உறுத்திக்கிட்டே இருக்கும்மா. அவரும் வார்த்தைக்கு வார்த்தை, ‘அருணா அப்படி, அருணா இப்படி’ன்னு பேசறாரு! இந்த ஆம்பளைங்களுக்கு ஏம்மா நம்ப மனசு, உணர்ச்சிங்க புரியறதில்ல?
ராதா: இப்படி நினைச்சுக்கயேன், ஆனந்தி. நாளைக்கே நீ செத்து வெச்சா..
ஆன(பதறி): அம்மா!
ராதா: அட, ஒரு பேச்சுக்குத்தானே சொல்றேன்! அப்போ, ஒன்னை அடியோட மறந்துட்டு, அடுத்த வருசமே ஒரு புதுப்பொண்டாட்டிகூட இவர் சல்லாபம் நடத்திக்கிட்டிருக்காருன்னு வை. எப்படி இருக்கும்?
ஆன: ம்… அப்படியா சொல்றீங்க?
ராதா: முழுசா அஞ்சு வருசமில்ல அந்த அருணாவோட சேர்ந்து இருந்திருக்காரு! அவ பேரை வெச்சு ஆரம்பிச்ச வியாபாரம்தான் இன்னிக்கு ஓகோன்னு நடக்குது. பாவம், அந்தப்பாவிக்கு குடுத்து வைக்கல. குறை மாசத்தில ரெண்டாவது பிள்ளை பிறந்து, எதிர்பாராத சாவு. அந்த அதிர்ச்சிதான் அவரை அப்படி பேசவைக்குது.
ஆன: நான் என்னதாம்மா செய்யணும்? ஒண்ணும் புரியல.
ராதா: கிரி ரொம்ப நல்ல மனுசன், ஆனந்தி. அவர் போக்கில விடு. ஆத்திரமா பேசாதே. இன்னும் நாலு வருசம் ஆனா, தானே பழசெல்லாம் மறந்திடும். அவருக்கு இப்ப இருக்கிற குத்த உணர்வும் போயிடும்.
ஆன(லேசாகச் சிரித்து): குத்த உணர்வா? என்னம்மா, நீங்ககூட மனோதத்துவம் பேச ஆரம்பிச்சுட்டீங்க?
ராதா: ஏண்டி? ஒரு ஆம்பளையோட மனசு புரியாமலா நான் நாலு பெத்திருக்கேன்? கேளேன். ஒங்கப்பா ஒரு பூனையை அருமையா வளத்தாரு.
ஆன (உற்சாகமாக): எனக்கு ஞாபகம் இருக்கே. குட்டி! அதானே அந்தப் பூனையோட பேரு? வெள்ளையா, புசுபுசுன்னு இருக்கும்.
ராதா: அதேதான். எப்பவும் அதைக் கொஞ்சிக்கிட்டு, துண்டு கணக்கா தூக்கி தோளில் போட்டுக்குவாரு. ஒருநாள், குட்டி தெருவில ஓடி, காரில அடிபட்டு செத்துப்போச்சு. அப்பா மூணுநாள் சாப்பாடு, தண்ணி இல்லாம, கண்கலங்கி ஒக்காந்திருந்தாரு.
ஆன: நீங்க கேலி பண்ணல?
ராதா: ஒரு வாயில்லா ஜீவன்மேல இவ்வளவு பாசமான்னு அதிசயமாத்தான் இருந்திச்சு எனக்கு. அதுக்கப்புறம், எந்த பூனையையும், நாயையும் அவர் தொட்டுக்கூட நான் பாத்ததில்ல. வாலை ஆட்டிக்கிட்டு வர்ற நாயைப் பாத்தாக்கூட விறைப்பா நிப்பாரு – என்னமோ, செத்த பூனைக்கு துரோகம் செய்யறதா நினைச்சுக்கிட்டதுபோல.
ஆன (மெள்ள): பூனைமேலேயே இவ்வளவு பாசம்! மனைவி போனா, எப்படி இருக்கும்!
ராதா: நீ புரிஞ்சுக்கிட்டா சரி. என்னமோ, நகைக்கடைக்கு போகணும்னு சொன்னியே!
ஆன: இதோ புறப்படறேம்மா. அவருக்கு மகிழ்ச்சியா இருக்கும். பாவம், பிள்ளை போன துக்கம் அவருக்கு மட்டும் இருக்காதா?
(பத்து வருடங்கள் கழிகின்றன)
காட்சி 6 (கார்த்திகா,ராதா)
கார்: பாட்டி!
ராதா: அட, கார்த்திகா குட்டி! வாடா செல்லம்!
கார்: பாட்டி! நான் ஒண்ணும் குட்டி இல்ல. பதினாறு வயசாகுது எனக்கு. தெரியுமில்ல?
ராதா: எனக்கு நீ எப்பவும் குட்டிதான். ஒனக்கு முப்பது வயசானாலும், நான் பாட்டியா, ஒன்னைவிட வயசானவங்களாத்தானே இருப்பேன்?
கார்(சிரித்து): நல்ல பாட்டி! நான் ஒங்களைவிட ஒசரமா இருக்கேன். மரியாதையா பேசுவீங்கன்னு பாத்தா….
ராதா: போடி அரட்டை! ஏன் கார்த்திகா? பள்ளிக்கூடத்திலேருந்து நேரே வர்றியா? இன்னும் யூனிஃபார்மை மாத்தல!
கார்: வீட்டுக்குப் போனா, என்னை யாரு கவனிக்கறாங்க! அம்மா பாட்டில, டிவி, ரேடியோ ரெண்டையும் அலற விட்டுட்டு, மடியில ஒரு பழைய பத்திரிகையை வெச்சுக்கிட்டு, எதிரே செவத்தை வெறிச்சுப்பாத்துட்டு ஒக்காந்திருப்பாங்க.
ராதா (சிரித்து): அப்பா?
கார்: அப்பாவுக்கு கடைதான் மொத மனைவி! நான் ஒருத்தி வீட்டுக்கு வர்றதோ, வெளியோ போறதோ ரெண்டு பேருக்கும் தெரியாது.
ராதா: அவங்க கெடக்காங்க. நீ வாடா, கண்ணு. பசியோட வந்திருக்கே. மொதல்ல சாப்பிடு. அப்புறமா பேசலாம்.
(சற்று பொறுத்து)
கார்: அது எப்படி பாட்டி, எனக்குப் பிடிச்சதா சமைச்சிருக்கீங்க?
ராதா: ஆங், என்ன பெரிய சமையல்! ஒரு கறி, குழம்பு. இவ்வளவுதானே! எப்பவுமே பிடிச்சவங்க ஆக்கிப்போட்டது நல்ல ருசியாத்தான் இருக்கும்.
கார்: ஓ! அதான் எனக்கு வீட்டில சாப்பிடப் பிடிக்கறதில்லியா?
ராதா: ஏம்மா அப்படிச் சொல்றே? வீட்டில அம்மாதானே சமைக்கிறாங்க? முந்தி சமையலுக்கு வெச்சிருந்த அம்மாவைத்தான் அனுப்பிட்டாங்களே!
கார் (ஏக்கமாக): பாட்டி! நீங்க மட்டும்தான் ‘கண்ணு’, ‘கண்ணு’ன்னு எங்கிட்ட அன்பா பேசறீங்க.
ராதா: அம்மாவும், அப்பாவும் ஒன்னை ரொம்ப ஏசறாங்களாடா?
கார்: ஏசினாக்கூட பரவாயில்ல, பாட்டி. அவங்க ரெண்டு பேருக்கும் நான் ஒருத்தி வீட்டில இருக்கிறதே நினைவிருக்கிறதில்ல.
ராதா: நம்ப முடியலியே! அப்பாவுக்கு செல்ல மகளாச்சே, நீ!
கார்: அதெல்லாம் சின்ன பிள்ளையா இருந்தப்போ. இப்ப ஊரிலேயே இருக்கிறதில்ல. பறந்துக்கிட்டிருக்கிறார்.
ராதா: வியாபாரம் நல்லா வளர்ந்துடுச்சில்ல, அதான் ஒரே ஒரு துணிக்கடையா ஆரம்பிச்சது இன்னிக்கு ரெடிமேட் ஆடைங்க, மளிகை, கோயில் சாமானுங்க, பொண்ணுங்களுக்கான வளையல், நெக்லஸ், பாத்திரபண்டம் விக்கிறது — இப்படி நல்லா விரிவடைஞ்சு போச்சு. பத்தாத குறைக்கு, வெளிநாட்டுக்கு வேற ஏற்றுமதி.
கார்: பணம் இருந்தா மட்டும் போதுமா, பாட்டி?
ராதா: பணம் இல்லாதவங்ககிட்ட கேட்டுப்பாரு, இந்தக் கேள்வியை. ஒங்க ரெண்டு மாமாவுக்கும், அத்தை புருஷனுக்கும் கடை வெச்சுக் குடுத்திருக்காரு அப்பா. யாருக்கு வரும் இந்த தங்கமான குணம்?
கார்: மருமகனை விட்டுக் குடுக்க மாட்டீங்களே! சரி, பாட்டி. ‘உத்தியோகம் புருஷ லட்சணம், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ அப்படின்னு சொல்லி வெச்சிருக்கிற பழமொழிகளை எல்லாம் அப்பாதான் விடாம கடைப்பிடிச்சுட்டு வர்றார். அம்மாவுக்கு என்ன வந்திச்சு? அவங்களுக்கு ஏன் என்கூட பேசவே பிடிக்கல?
ராதா (சட்டென,யோசியாமல்): அவ வயத்தில தரிச்சதாயிருந்தா அன்பா இருப்பா.
கார்(அதிர்ந்து): பாட்டி! என்ன சொல்றீங்க? நான் அம்மாவோட சொந்த மக இல்லியா? அதான் அவங்க எங்கிட்ட ஏனோதானோன்னு இருக்காங்களா?
ராதா : ஐயோ, நான் ஏதோ ஒளறிட்டேன். அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.
கார்: பாட்டி. எனக்கு இன்னிக்கு உண்மை தெரிஞ்சாகணும். மறைக்காதீங்க. ப்ளீஸ், பாட்டி. நான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிறந்த பொண்ணு இல்லியா?
ராதா(பெருமூச்சுடன்): அவரு ஒங்கப்பாதான். நீ அருணாவுக்கும், கிரிக்கும் பிறந்தவ. ஒன்னைப் பெத்தவ செத்துப் போனதும், ஒன்னை வளக்கிறதுக்காக ஆனந்தியை ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டாரு ஒங்கப்பா.
கார்: ம்.. (யோசித்து) இப்ப லேசா ஞாபகம் வருது பாட்டிஅம்மா கொஞ்சநாள் காணாம போயிருந்தாங்க.எப்ப கேட்டாலும், ‘வருவாங்க, வருவாங்க’ன்னு அப்பா சொல்வார். ராதா: நாலு வயசுப்பொண்ணுக்கிட்ட பின்ன என்ன கார்த்திகா சொல்ல முடியும்? அந்த அருணா மாதிரியே இருந்ததாலதான் ஆனந்தியைக் கட்டிக்கிட்டாரு ஒங்கப்பா.
கார்: போனவங்க, போனவங்கதான். இல்லே, பாட்டி? அவங்களை எப்படி திரும்பக் கொண்டுவர முடியும்?
ராதா: ஆனா, அந்த வயசில ஒனக்கு ஆறுதலா இருந்திச்சேம்மா.
கார்(அழுகைக்குரலில்); எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க. நீங்க என் பாட்டியே இல்ல.
ராதா (வருத்தமாக): அப்படியெல்லாம் சொல்லாதேடி, கண்ணு. நீ சின்னப்பிள்ளையா இருக்கிறப்போ, ஓடி வந்து, என் மடியில ஒக்காந்துக்கிட்டியா!. அப்பவே தீர்மானிச்சுட்டேன், என்னோட மொத பேத்தி இதுதான்னு. ஒங்க மாமா, சித்தி எல்லாம் ஒங்கிட்ட எவ்வளவு பாசமா இருக்காங்க!
கார்: நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா.. பாட்டி!
ராதா : நான்தான் ஆனந்தியை வற்புறுத்தி இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சேன். நான் செஞ்சது தப்போன்னு இப்ப கெடந்து எம்மனசு அடிச்சுக்குது. நீ இப்ப படற கஷ்டத்துக்கு, அம்மா இல்லாமலேயே ஆளாகி இருக்கலாம்.
கார்: பரவாயில்ல, பாட்டி, எனக்கு ஒரு நல்ல பாட்டி கிடைச்சிருக்கீங்களே! அப்பாவுக்கும், அம்மாவுக்கும்தான் நான் வேண்டாம்.
ராதா(சமாதானமாக): கார்த்திகா, இதப்பாரு.
கார்: நான் கிளம்பறேன், பாட்டி.
ராதா: கொஞ்சம் இருந்திட்டுப் போம்மா. மண்டை வெடிச்சுடும்போல வெயில் எப்படிக் காயுது!
காட்சி 7 (கிரி, ஆனந்தி, கார்த்திகா)
கிரி: ஆனந்தி!
ஆன: வாங்க. பிரயாணம் சௌகரியமா இருந்திச்சா? நாளைக்குத்தானே வர்றதா சொல்லிட்டுப் போனீங்க?
கிரி: வேலை முடிஞ்சப்புறம் எதுக்கு வெளியூரில தங்கணும்? அதான் பறந்து வந்துட்டேன். கார்த்திகா எங்கே? கூப்பிடு அவளை அவளுக்குப் பிடிச்ச சாமானுங்க நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்.
ஆன(முணுமுணுப்பாக): கல்யாணமாகி, பத்து வருஷமாச்சு. இன்னும் எனக்கு இரண்டாவது எடம்தான். (உரக்க) எனக்கு? எனக்கு நீங்க ஒண்ணும் வாங்கிட்டு வரல?
கிரி: நீ என்ன ஆனந்தி, குழந்தைமாதிரி! ஒனக்கு இல்லாமலா! நீ இருக்கிற தெம்பாலதானே நான் இப்படி வீட்டிலேயே தங்காம, ஓடியாடி சம்பாதிக்கிறேன்! கார்த்திகா எங்கே? வர வர, யாரும் என்னைக் கவனிக்கிறதே கிடையாது இந்த வீட்டில. (உரக்க) கார்த்திகா! (கோபமாக) எங்கே தொலைஞ்சா அவ? கூப்பிட்டா, மரியாதையா எதிர்க்குரல் குடுக்கிறது கிடையாது? நல்லாத்தான் வளத்து வெச்சிருக்கே மகளை!
ஆன(மெள்ள): அவ வீட்டில இல்ல.
கிரி(சமாதானமாக): இதை மொதல்லேயே சொல்லக்கூடாது? பாட்டி வீட்டுக்கு போயிருக்காளா?
ஆன: முந்தாநாள் ஸ்கூல் விட்டதும், நேரா அங்கதான் போனாளாம்.
கிரி: அது என்ன, ‘போனாளாம்’னு இழுக்கிறே? ஒங்கிட்ட சொல்லிட்டுப் போகல? (மௌனம்)
கிரி: வரட்டும். என்ன நினைச்சுக்கிட்டிருக்கா மனசில? காலம் ஒரேயடியா கெட்டுக்கிடக்கு. இவ பாட்டுக்கு, தன் இஷ்டத்துக்கு..
ஆன(மெல்லிய குரலில்): கார்த்திகா ராத்திரி வீட்டுக்கே வரல. நான் பயந்துபோய், அம்மாக்கு ஃபோன் அடிச்சேன். சாப்பிட்டுட்டு, மூணு மணிக்கே திரும்பப் போயிட்டதா சொன்னாங்க.
கிரி: சாவகாசமா சொல்றியே! இது என்னிக்கு?
ஆன: முந்தாநாள் வியாழக்கிழமை.
கிரி: நேத்து ஸ்கூலுக்காவது போயிருந்தாளா? இல்ல, அதுவும் கிடையாதா?
ஆன: நான்.. விசாரிக்கலீங்க.
கிரி: மகமேல அவ்வளவு அக்கறை! ம்? இதுவே நீ பெத்ததா இருந்தா, இவ்வளவு அலட்சியமா இருந்திருப்பியா? ஒன் குடும்பத்தை என்னோடதா பாவிச்சு, நான் ஒன் தம்பி, தங்கைங்களை எல்லாம் முன்னுக்கு கொண்டு வந்துட்டேன். ஒங்கம்மாவை எங்கம்மாவாக்கான் நினைக்கிறேன். ஆனா நீ (கோபமாக) பேசாதே ஒண்ணும் பேசாதே.
ஆன: கார்த்திகாவுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சாம்.
கிரி: என்னது?
ஆன: வாய் தவறி, அம்மாதான் நான் அவளைப் பெத்த அம்மா இல்லன்னு சொல்லிட்டாங்களாம்.
கிரி: அதனால் என்ன! என்னிக்கோ ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே!
ஆன: நல்லவிதமா, நீங்களோ, இல்ல நானோ சொல்லி இருக்கலாம். இப்ப அவளுக்கு ரொம்ப அதிர்ச்சியா ஆகிடுச்சு. அழுதுகிட்டே போனாளாம். ஏங்க? போலீசுக்குச் சொல்லலாமா? வயசுப்பொண்ணு, ரெண்டு ராத்திரி வெளியே எங்கேயோ..
கிரி: ஏன்? ஏன்? பேப்பர்ல மொதல் பக்கத்தில அவ படத்தைப்போட்டு, கொட்டை எழுத்தில செய்தி வரணுமா, இவ வீட்டை விட்டு ஓடிப் போயிட்ட லட்சணம்! ?
ஆன (விம்மல்)
கிரி: அவ ஃப்ரெண்ட்ஸ் யார் வீட்டுக்காவது போயிருக்காளோ, என்னமோ! அவசரப்பட்டு, முட்டாள்தனமா எதுவும் செய்யற பொண்ணில்ல நம்ப கார்த்திகா. பாப்போம். அவ பத்திரமா வந்துடுவா, பாரேன். ஏய்! எதுக்கு அழறே?
ஆன: எனக்கு ஏங்க ஒங்கமாதிரி நல்ல மனசு இல்லே? ‘நம்ப கார்த்திகா’ன்னு எவ்வளவு அழகா சொல்றீங்க! எனக்கென்னமோ..
கிரி: ஒன் அருமை ஒனக்கே தெரியல, ஆனந்தி கார்த்திகா மேல ஒனக்கு உள்ளூர பாசம் இருக்கு.
ஆன: நீங்க சொல்றீங்க. ஆனா, நான் அவகிட்ட முகங்குடுத்துக்கூட பேசினதில்ல.
கிரி: அது ஒன் சுபாவம், ஆனந்தி. பாசம் இல்லாமலா நீ அவளுக்கு வேணுங்கிற சாமானையெல்லாம் அவ கேக்காமலேயே வாங்கிக் குடுக்கறே? ஒவ்வொரு வருஷமும், ஸ்கூல்ல நாடகம், டான்ஸ்னு, ஏதாவது நிகழ்ச்சியில அவ கலந்துக்கிறப்போ, அதுக்கேத்த மாதிரி ட்ரெஸ் வாங்க நீ எவ்வளவு அலையறேன்னு எனக்குத்தான் தெரியும்.
ஆன: அது.. அது..
கிரி: என்ன? என்ன அது..அது..?
ஆன: நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ ஸ்கூல்ல எதிலேயும் கலந்துக்க முடியல. ஒங்களுக்குத்தான் தெரியுமே, அதுக்கேத்த உடைங்களை வாங்க எங்களுக்கு வசதி இல்ல.
கிரி: ஆனா, ஒனக்கு அப்பா, அம்மா ரெண்டுபேரும் இருந்தாங்க. அதை மறந்துட்டுப் பேசறியே! எனக்கு அதுகூட கிடையாது.
ஆன: கேளுங்களேன். அப்போல்லாம் ரொம்ப ஏக்கமா இருக்கும் எனக்கு. அந்த ஏக்கமும், பொறாமையும் கார்த்திகாவுக்கு வரக்கூடாதுன்னுதான்..
கிரி: பாத்தியா? இந்தமாதிரி உணர்வு ஒரு தாய்க்குத்தான் இருக்கும். தான் பட்ட கஷ்டம் பிள்ளைங்களும் படக்கூடாதுன்னு..
ஆன: ம்? பின்னே நான் ஏங்க இப்படி இருக்கேன்?
கிரி: அந்த குறைப்பிள்ளை போனது ஒனக்கு பெரிய அதிர்ச்சி, ஆனந்தி. அப்ப நான் ஒங்கூட பேசி, அந்த துக்கத்தை பங்கு போட்டிருக்கணும். நானோ, நடந்ததை மறக்க, வியாபாரத்திலேயே கவனம் எல்லாத்தையும் செலுத்த ஆரம்பிச்சேன்.
ஆன: இப்ப எதுக்குங்க அந்தப் பேச்சு? போன பிள்ளை திரும்பவா வரப் போகுது?
கிரி: என்னது? திரும்பச் சொல்லு.
ஆன: போன பிள்ளை..
கிரி: அதான். போனவங்க திரும்ப வரமாட்டாங்க. அது நம்ப ரெண்டு பேருக்குமே இத்தனை காலமும் புரியல.
ஆன: என்ன சொல்றீங்க?
கிரி: ஒனக்கு அருமை மகளா கார்த்திகா இருக்கா. எனக்கு நீ இருக்கே. இது ஏன் நமக்கு புரியல? நான் அருணா ஜபம் பண்றதிலேயும், நீ செவத்தில மாட்டி வெச்சிருக்கிற பால கிருஷ்ணர் படத்தை பாத்து பெருமூச்சு விடறதிலேயும் அர்த்தமே இல்ல, ஆனந்தி.
ஆன: நான்..
கிரி: எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டியா? போனவங்களையே நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு, இருக்கிறவங்களை கவனிக்காம விட்டுட்டோம் நாம்ப ரெண்டுபேருமே. தப்பு என்மேலதான்.
ஆன: நீங்க ஏதேதோ பேசறீங்க. கார்த்திகாவுக்கு என்ன ஆச்சோன்னு என் மனசு படபடங்குது.
(வாசலில் அமைப்பு மணியோசை)
கார் (கொஞ்சலாக): அம்மா! அட, அப்பா! எப்போப்பா நீங்க வந்தீங்க?
ஆன(கடுமையாக) கார்த்திகா! எங்கே போயிருந்தே ரெண்டு நாளா, எங்கிட்ட சொல்லாம? வர வர ஒனக்கு திமிர் அதிகமாயிடுச்சு. எல்லாம் அப்பா குடுக்கற செல்லம்.
(கிரியும், கார்த்திகாவும் சேர்ந்து சிரிக்கிறார்கள்)
ஆன: நான் என்ன ஜோக் சொல்லிட்டேன், இப்படி ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க?
(மேலும் சிரிப்பு)
கார்: அம்மா! நான் எங்கேயும் தொலைஞ்சு போகல, அப்பாகூட ஹோட்டல்லதான் இருந்தேம்மா.
கிரி: ஆனந்தி! அத்தை பதட்டமா என்னை கூப்பிட்டுச் சொன்னாங்க, ‘இந்தமாதிரி.. உண்மை எரிஞ்சதும், கார்த்திகா ரொம்ப கலங்கிப் போயிட்டான்னு. நான் பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தேன் ஒனக்கு உள்ளூர அவளைப் பிடிக்கும் ஆனா, ஒன் வயத்தில தரிச்ச பிள்ளைக்கு துரோகம் செய்யறமாதிரி ஏதோ உணர்வு ஒனக்குன்னு அத்தைதான் சொன்னாங்க கூடவே இருந்திருக்கேன். நான் கவனிக்கவே இல்ல, பாரு. ஒன் மனசை ஒனக்குப் புரிய வைக்கிறதுக்காகத்தான்..
ஆன: நாடகமா ஆடினீங்க, அப்பாவும், மகளும்? இருக்கிற ஒரு பிள்ளையும் எனக்கு இல்லாம போயிடுமோன்னு கொஞ்ச நேரத்தில நான் எவ்வளவு துடிச்சுப்போயிட்டேன், தெரியுமா? இருங்க. ஒங்களை கவனிச்சுக்கறேன்.
(முடிவு)