துப்புத் துலங்க
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மிஸ்டர் இக்பால்! நீங்க இந்த அவார்டை எதிர்பார்த்தீங்களா!”
“நிச்சயமா இல்லே! கடமையைச் செஞ்சேன். பலன் தானா வந்திருக்கிறது.”
“பரிசு கொடுத்துப் பாராட்டுகிற அளவுக்கு அப்படி என்ன சாதிச்சிருக்கிறீங்க?”
“மறுபடியும் அதையேதான் சொல்வேன்”
“சரி நீங்க செய்த கடமையைத்தான் சொல்லுங் களேன்! எங்க வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டும்.”
“சென்ற ஆண்டு அக்டோபர்லே எந்தத் தடயமும் கிடைக்காம, ஒரு திருட்டுச் சம்பவம் நடந்து, உங்க தமிழ்முரசு பேப்பர்லேகூடப் போட்டிருந்தீங்களே! அந்த வழக்குதான் எனக்கு முன்னாடி ஒரு போலீஸ் அதிகாரிகிட்டே அந்தப் பொறுப்பைக் கொடுத் திருக்காங்க. அவரும் பல கோணங்களிலிருந்து துப்புத் துலக்க முயற்சி எடுத்தார் வெற்றி பெற முடியவில்லை.
திருட்டுக் கொடுத்த அந்தத் தொழிலதிபர் தம் மனைவி, மகள், பணிப்பெண் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். எனக்கு முன்பு இருந்த காவல் துறை அதிகாரிக்கு, எந்தத் தடயமும் கிடைக்காததால், தொழிலதிபரின் மனைவியைக் கண்காணித்தார். மனைவி அப்போதைக்கப்போது, கணவருக்குத் தெரியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருந்த தன் தம்பிக்குப் பண உதவிசெய்து வந்திருக்கிறார். அதன் மூலம் இந்தப் பெரும் பணமும் நகைகளும் திருட்டுப் போயிருக்குமோ என்று துருவிப் பார்த்தார். துப்புக் கிடைக்கவில்லை.
ஒரே மகள். கல்லூரி மாணவி, பெற்றோருக்குத் தெரியாமல், காதலனுடன் நெருக்கமாகப் பழகி வந்தாள். வெளியில் சேர்ந்து சுற்றுவது, சினிமா, பப், ஹோட்டல் காராவோகே, ரெஸ்டாரெண்டுக்குப் போவது, இப்படி ஆடம்பரமாகச் செலவு செய்வாள். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கே பல முறை காதலனை அழைத்து வந்திருக்கிறாள்.
பணிப்பெண் வீட்டில் இருந்தால், தன் அறைக்குள் காதலனை அழைத்துச் சென்று விடுவாள். பணிப்பெண்ணிடம் அன்பளிப்புக் கொடுத்து, பெற்றோருக்குத் தெரியாமலிருக்கச் சரிக்கட்டிக் கொள்வாள். இதனையும் கண்காணித்துப் பார்த்தார். அந்தக் காதலனும் நல்ல பையனாகவே இருந்திருக்கிறான். அந்த வழியில் துப்பறிதலும் தோல்வியில் முடிந்தது.
தாய்லாந்தைச் சேர்ந்த பணிப்பெண். அவளுக்குக் கொஞ்சம் நெருக்குதல் கொடுத்து உண்மையைக் கண்டறிய முயன்றார். யார் யார் அவளைப் பார்க்க வருவார்கள்; விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் எங்கெங்குச் செல்கிறாள். என்றெல்லாம் பின் தொடர்ந்து பார்த்தார். துப்பறியும் தனியார் நிறுவனத்திடமும் சொல்லிக் கண் காணித்தார். ஏன் தாய்லாந்து நாட்டில் அவளுடைய கிராமத்திற்குச் சென்று, பெற்றோர்களைக் கண்காணித்தார். ஏதாவது புதிதாகச் சொத்து வாங்கப்பட்டிருக்கிறதா? பணப்புழக்கம் எப்படி யிருக்கிறது என்றெல்லாம் கண்டறிய முயற்சி செய்தார். அங்கேயும் தோல்வியடைந்து திரும்பினார்.
பிறகுதான் அந்த அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, என்னை நியமித்தார்கள். எந்த ஆதார ஆதியும் கிடைக்காத வழக்கு. எங்கள் போலீஸ் துறைக்கு அது ஒரு சவாலாகவே தோன்றியது.
அந்தத் தொழிலதிபர் கொஞ்சம் செல்வாக்கு உடையவர். அதனால் எங்கள் டிபார்ட்மெண்டுக்கு அந்த வழக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாகிவிட்டது.
இந்த நிலைமையிலேதான் என்னை நியமிச்சாங்க. நான் பைல்களை நல்லா படிச்ச பின்பு நல்லா யோசிக்க ஆரம்பித்தேன். தொழிலதிபர் உட்பட மற்றவர் களிடமும் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டேன். ஜன்னல், கதவு, வீட்டின் அமைப்பு என்று பல முனைகளிலிருந்தும் நோட்டம் விட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்களைக் கண்காணித்தேன். சந்தேகப்படும் படியாக எதுவும் கிடைக்கவில்லை.
வீட்டு வேலைகளைச் செய்யயாரேனும்வருவார்களா? உதாரணமாகப் பிளம்பர், எலக்டிரீஷியன், கேஸ் சப்ளையர், பெயிண்டர், டி.வி. லாக்கர், பிரிட்ஜ், ரிப்பேர் என்றெல்லம் கேள்விகள் கேட்டேன். அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், வீட்டுக்குள் வருவோர் லிஸ்ட்டைத் தயார் செய்து அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்தேன். சந்தேகப்படும்படியான தகவல்கள் கிடைக்கவில்லை.
தொழிலதிபரின் டைரியைக் கேட்டேன். டைரி எழுதும் பழக்கம் இல்லை என்று சொல்லி விட்டார். அவர் அறையில், மேஜை மீதிருந்த ஒரு நோட் புக்கை எடுத்துப் புரட்டினேன். அதில் பல தகவல்கள் இருந்தன. யாருக்காவது பணம் கொடுத்திருந்தால், சாமான்கள் வாங்கியிருந்தால், அவர்கள் முகவரி, தேதி வெளியூர்ப் பயணத் தேதி, நாடுகள், செக் கொடுத்திருந்தால் கொடுத்த தேதி போன்றவற்றை எழுதியிருந்தார். அதை அப்படியே ஒரு காப்பி எடுத்துக்கொண்டு, திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
அதை வைத்துக்கொண்டு யோசித்தேன். வெளிநாட்டுக்காரர்கள் யாராவது வீட்டிற்கு வந்து போனார்களா? வீட்டில் தங்கினார்களா? அந்த அடிப்படையில் என் சந்தேகப் பார்வையைச் செலுத்தினேன். எந்தப் பிடிமானமும் கிடைக்கவில்லை. யார் யாருக்குப் பண உதவி செய்தார். யார் யாரிடம் பணம் வாங்கியிருக்கிறார் என்கிற லிஸ்ட் எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். அதன்படி ஒவ்வொருவராகக் கண்காணித்தேன்.
ஒரு சீனரிடம் ஐம்பதினாயிரம் வெள்ளி காசோலை மூலம் வாங்கியிருந்தார். அவரிடம் சென்று விசாரித்தேன். முடைபடும்போது கைமாத்தா கேட்பார்; ஓரிரு மாதங்கள் திருப்பிக் கொடுத்து விடுவார். இந்த முறை தாமதமாகுவதால், வட்டிபோட்டுத் தருவதாகச் சொன்னாரென்றும் தகவல் கிடைத்ததே தவிர வேறெதுவும் கிடைக்க வில்லை.
வீட்டிற்குப் பேப்பர் போடும் பையனுக்கு முந்நூறு வெள்ளி கொடுத்திருக்கிறார்.
அவனைக் கண்காணித்த பின் விசாரித்தேன்.
“எத்தனை முறை அவரிடம் பணம் வாங்கியிருக்கிறாய்?”
“இரண்டு முறைசார்! ஒரு முறை நூறு, இரண்டாவது தடவை முந்நூறு. நான் சம்பளம் வாங்கினவுடன் கொடுத்திட்டேன் சார்.”
“நீ பணம் கேட்டவுடன் என்ன சொல்வார்?”
“ஒண்ணுமே சொல்லமாட்டார் நேரா உள்ளே போவார். உடனே கொண்டு வந்து கொடுப்பார். சிலபேரு இன்னைக்கு வா, நாளைக்கு வான்னு இழுத்தடிப்பாங்க. ஆனா இவரு கேட்டவுடனே கொடுப்பார். நான் அவருமேல ஒரு மரியாதையே வச்சிருக்கிறேன். இது சத்தியம். வேண்டுமானால் இதோ இருக்கிறாரே சாவி போடுகிறவர் அவரைக் கேளுங்க. அவருகிட்டேகூட முதலாளியோட பெருமைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். கேளுங்க உண்டா இல்லையான்னு?”
அவனும் “ஆமாம் சார்!” என்று ஆமோதித்து விட்டுத் தலையைக் குனிந்துகொண்டான்.
“ஒரு முறை பாஸ் சாவி செஞ்சி கேட்டாரு. இவரும் செஞ்சி கொடுத்தார்.”
நான் கூடச் சொன்னேன்.
நியாயமா கேளு. கேட்டதைக் கொடுத்துவிடுவார் என்றேன்.”
“என் பார்வை அந்த ‘பேப்பர்’ மீது விழுந்தது. விடியலில் பேப்பர் போடும்போது அவன் நடவடிக்கைகளை அவனுக்குத் தெரியாமலே கவனித்தேன். மாதம் முடிந்தவுடன், வீடு வீடாகச் சென்று பேப்பருக்குரிய பணத்தை ரசீது கொடுத்து வசூலித்ததையும் கவனித்தேன். வசூலிக்கும் போது, வீட்டிற்குள் செல்கிறானா? அவன் பகலில் பேப்பர் விற்கும் இடத்திற்குச் சற்று, தூரத்தில் நின்று கவனித்தேன். சந்தேகப் படும்படியாக அவன் செயலோ, பார்வையோ இல்லை. ஆனால், அன்று அங்கிருந்த சாவி போடுபவனைக் காணோம்.
‘பேப்ப’ரிடம் சென்று கேட்டேன்.
“அன்றைக்கு இந்த இடத்திலே வந்து நீங்க கேட்டீங்களே. அதுக்கப்புறம் அவரு இடத்தை மாத்தி, இந்த பீஸ் சென்டரிலிருந்து, தேக்கா மார்க்கெட் வாசலுக்குப் போயிட்டாரு சார்.” என்றான்.
தற்செயலா, தேக்கா மார்க்கெட் சென்று ‘சாவி’யைப் பார்த்துக் கேட்டேன்.
“ஏம்பா இங்கே வந்துட்டே? அங்கேயை விட இங்க வருமானம் தேவலாமா?”
“ஆமாம் சார்…” என்று என்னை அண்ணாந்து பார்க்காமலே பதில் சொன்னான். நானும் கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். அந்த வீட்டிற்குச் சாவி போட்டானே? ஏதேனும் தொடர்பிருக்குமா? சந்தேகத்தை உருவாக்கிக்கொண்டே எதிரே இருந்த செவன்லெவனில் ஒரு டிரிங்க்ஸ் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே கவனித்தேன். நான் போய்விட்டேன் என்று நினைத்துச் சாவி பாக்ஸை எடுத்து அவன் சைக்கிளில் வைத்து, நகர்த்திக்கொண்டு, சிராங்கூன் ரோட்டுக்கு வந்து, சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தான்.
பீஸ் செண்டரிலிருந்து இங்கு வந்தான். இப்போ என்னைக் கண்டதும் புறப்படுகின்றனா? தற்செயலாகப் புறப்படுகின்றானா? எதற்கும் பார்ப்போமே என்று, என் மோட்டார் பைக்கிலே அவனைப் பின் தொடர்ந்தேன்.
வீராச்சாமி ரோட்டிலே உள்ள குடியிருப்புப் பகுதிக்குக் கீழே சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மேலே வீட்டுக்குச் சென்றான். அவன் வீட்டுக்குள் சென்ற பின்பு, நானும் அந்த மாடிக்குச் சென்று, வீட்டு எண்ணைக் குறித்துக் கொண்டு வந்துவிட்டேன்.
மறுநாள் தேக்காவிலும் அவன் கடைபோட வில்லை. சுற்றுப்புறங்களில் தேடினேன். சிராங்கூன் பிளாசாவுக்கு எதிரில் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். என்னைக் காட்டிக்கொள்ளாமல், நேராக, வீராச்சாமி ரோட்டிலுள்ள அக்கம் பக்கப் போலீஸ் நிலையத்திற்கு (நைபர்ஹுட்) சென்று ஆலோசனை நடத்தி, ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என்று சில கருவிகளை எடுத்துக் கொண்டு, துணைக்கு அங்குள்ள போலீஸ்காரர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு, அந்தச் சாவிக்காரர் வீட்டுக்குள் சென்றேன்.
கதவைத் தட்டினேன்.
‘சாவி’யின் மனைவி திறந்தாள். போலீஸ் உடையைப் பார்த்தவுடன் அவள் பதறிப் போனாள். “ஏன்? என்ன வேணும்? உட்காருங்க!” என்று சொல்லித் தட்டுத் தடுமாறி உட்கார வைத்தாள்.
“எங்கேம்மா… உங்க வீட்டுக்காரர்?”
‘அவரு வேலைக்குப் போயிருக்கிறார்”
‘அப்படியா! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா?”
அவள் தண்ணீர் எடுக்கச் சமையலறைக்குச் சென்றாள். நானும் கூடவே போனேன். தண்ணீரை வாங்கிக் குடித்துக்கொண்டே, கொஞ்ச நேரம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே காலத்தை நீட்டினேன். அந்த இடைப்பட்ட நேரத்தில், உடன் வந்த போலீஸ் கொண்டு வந்த நுண்ணிய கேமிராவையும், ஒயர்லெஸ் ஒலிப்பதிவுக் கருவியையும் வைக்க வேண்டிய இடத்தில் பொருத்திவிட்டார்.
நாங்கள் பின்னர் வெளியேறும்போது, அவளிடம்,
“நாளைக் காலை எட்டுமணிக்குத் திரும்ப வருவோம். உங்க வீட்டுக்காரரை வீட்டிலேயே இருக்கச் சொல்லும்மா… ஒரு திருட்டுக்கேஸ் விஷயமாக விசாரிக்கணும். நாங்க வந்துட்டுப் போனோம்னு அவருகிட்டே சொல்ல வேணாம்.”
எனச் சொல்லிவிட்டுப் பின்புறமாக இருந்த போலிஸ் நிலையத்திற்குப் போய்விட்டோம்.
நான் பைக்கை எடுத்துக்கொண்டு சிராங்கூன் பிளாசா மரத்தடியில் இருந்த ‘சாவி’யிடம் சென்றேன்.
“என்ன சாவி! சவுரியமா? ம்… பீஸ் செண்டர், அப்புறம் தேக்கா மார்க்கெட், இப்ப இங்கே… நாளைக்கு எங்கே போகப்போகிறே? பேசாம ஒரு காரு வாங்கிட்டா டேம்பனீஸ், உட்லண்ட்ஸ், ஜுரோங்ன்னு ஈசியா இடம்பிட்டு இடம் மாறிக்கலாமல்ல…” என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், பதிலேதும் சொல்லாமல், குனிந்துகொண்டே சாவி ஒன்றை ராவிக் கொண்டேயிருந்தான்.
“சாவி! என்ன… நான் கேட்டுக் கொண்டே யிருக்கிறேன். பதிலில்லை..”
“காரு வாங்கிறதெல்லாம் கனவுலதான் முடியுங்க.”
“ஏன் முடியாது. நீதான் பணம் நிறைய வச்சிருக்கிறாயாமே!”
என்று சொல்லிவிட்டு நான் நடையைக் கட்டினேன். தூரத்தில் சென்று ஒளிந்துகொண்டு கண்காணித்தேன். அக்கம் பக்கம் பார்த்துவிட்டுச் சாவி, பெட்டி, ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சைக்கிளில் வைத்தான். நான் உடனே பைக்கிலே புறப்பட்டு, அதே போலீஸ் நிலையத்திற்குச் சென்றுவிட்டேன்.
சாவி தன் வீட்டுக்கு வருவதற்கு முன்பு, சாதாரண உடையில் மூன்று போலீஸைத் தேவையான டங்களில் நிறுத்தி, அவர்களுக்கு வேண்டிய குறிப்புகளையும், செய்ய வேண்டிய வேலைகளையும் விளக்கிச் சொல்லிவிட்டேன். நான் போலீஸ் போஸ்ட்டிலேயே உட்கார்ந்து ரிமோட் கண்ட்ரோலை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதிர்பார்த்தபடி ‘சாவி’ சைக்கிளில் வந்து இறங்கியவுடன் என் உதவியாளர் மூலம் தகவல் வந்தது. தயாராய் இருந்த கேமிராவையும், சவுண்ட் சிஸ்ட்டத்தையும் ஆன் செய்துவிட்டு, ஒலிப்பதிவுக்குக் காத்திருந்தேன்.
“வாங்க… வாங்க… சீக்கிரம் கதவைச் சாத்தி தாப்பா போடுங்க…. சேதி தெரியுமா? போலீஸ் வீட்டுக்கு வந்தது. வந்ததைச் சொல்லக்கூடாதுன்னுட்டாங்க. தெரிஞ்சிட்டுது போலிருக்கு. இப்ப என்ன செய்யறது?”
“கொஞ்ச நாளாவே என்னை ஒரு போலீஸ் தொரத்திக்கிட்டே வந்தான். கண்டு புடிச்சிட்டான் போலிருக்கு. வ… நா… அதெல்லாத்தையும் எடுத்துக் கிட்டு ஜோகூர் போயிடலாம். அந்தப் பெட்டியிலே எடுத்து வச்சுகிட்டுப் புறப்படு சீக்கிரம்..”
பெட்டியை எடுத்துக்கொடு வீட்டை விட்டு வெளியே வந்தவர்களைத் தயாராய் இருந்த எங்க போலீஸ் குழு கைது செய்து கொண்டு போயிட்டோம்.
அதன் பிறகு அந்தச் சாவியிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதைக் கேட்டு உங்க பத்திரிகையிலே தொடர்கதையா போடுங்க. ஆன் பண்றேன் கேளுங்க.
“என் பெயர் வடுகநாதன். நான் சிங்கப்பூர் பிரஜை. நான் பீஸ் சென்டர் பிளேட்பாரத்துலே சாவி போடறது, சாவி ரிப்பேர் செய்யறது, யாராவது கதவு பூட்டு சாவி காணாம போய்ட்டுன்னா, வேறு சாவி போட்டுத் திறந்து கொடுப்பேன். ஒரு நாள், அந்த ஐயா வந்தார். சாவிக் கொத்து ஒன்றைக் கொடுத்து, இதிலேயிருக்கிற எல்லாச் சாவிகளுக்கும், இன்னொரு செட் புதுசா செஞ்சி கேட்டாரு. நான் செய்யறதுக் குள்ளே, அவரு மனைவிகிட்டேயிருந்து போன் வந்து பேசினாரு.
“நான் பீஸ் செண்டர் மே பேங்குக்குப் பணம் கட்ட வந்தேன். நம்ம வீடு கிட்டேயிருக்கிறதால” அப்படியே சாப்பிட்டுட்டு ஆபீஸுக்குப் போயிடுறேன்.”
“சாவியைப் பத்திரமா வச்சிக்கிறதில்லையா.”
“இப்படி கேர்லெஸ்ஸா இருந்தா, யாரு கையிலே யாவது சாவி கிடைச்சா என்னாவறது?”
“நீ வச்சிருக்கிற அவ்வளவு நகையும், என் பணமும் அபேஸ்தான். சாவி செய்யறதுக்குக் கொடுத்துள்ளேன். வாங்கிக்கிட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து,
“சீக்கிரம்யா… சீக்கிரம்… நான் பேங்குக்குப் போயிட்டு வர்றேன்.” என்று சொல்லிவிட்டு, அவர் பேங்குக்குள் போனபின்புதான் அந்தப் பேப்பர் பையன் சாவியிடம் சொன்னான்.
“வசதியானவரு. எனக்குக்கூட இருநூறு வெள்ளி கேட்டேன். கேட்டவுடனே உள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தார். நல்ல வசதி படைச்சவரு. நீ கேட்கிற பணத்தைக் கொடுப்பாரு. சீக்கிரம், நல்லபடியா செஞ்சி கொடுப்பா.” என்று அவன் சொன்னவுடன், என் மனம் மாறி, செய்யும்போதே இரண்டு செட் செய்து, ஒரு செட்டை மட்டும் வெளியே வந்த அவருகிட்டே கொடுத்தேன். அவரு வாங்கிக்கிட்டு, அவரு வீட்டை நோக்கி நடந்தார். நானும் அவருக்குத் தெரியாம அவரைப் பின் தொடர்ந்து அவரு வீட்டைத் தெரிஞ்சுகிட்டேன். அடிக்கடி அந்த வீட்டுப் பக்கம் போய் நோட்டம் விட்டேன்.
இன்னொரு நாள் அந்தப் பேப்பர் பையன் சொன்னான். அவரு குடும்பத்தோட மலேசியா போயிட்டாரு. நான்கு நாள்கள் வரமாட்டார். அவர் இருந்தா அவருகிட்டே வாங்கிக்குவேன். அவசரமா நூறு வெள்ளி தேவைப்படுது. உன்னிடம் இருந்தா கொடேன்.” என்றான். நான் “நாளைக்குக் கொண்டுவரேன்” என்று சொல்லிவிட்டு, அன்று இரவே கள்ளச் சாவியைப் பயன்படுத்தி வீட்டுக்குள் சென்றுவிட்டேன்.
எந்தெந்த ரூமிலே என்னென்ன இருக்கிறது என்று ஒரு பார்வை விட்டேன். அந்த நேரத்தில் வீட்டின் முன்புறக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தேன் அந்த வீட்டுக்கார ஐயாவே வந்தார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. எங்கே ஒளிந்து கொள்வது என்று திக்குமுக்காடி, பெட்ரூம் கட்டிலுக்குக் கீழே ஆண்டவனை வேண்டிக்கொண்டு படுத்துக்கொண்டேன். என் உடலெல்லாம் வேர்த்தது.
அவர் உள்ளே வந்தார். கையில் ஏதோ உறை போட்டிருந்தார். நேராக பெட்ரூமுக்கே வந்துவிட்டார். லாக்கரைத் திறந்தார். அதில் உள்ள நகைகளையும், பணத்தையும் எடுத்து அவர் தோளில் தொங்கிய பையில் திணித்தார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தேவைக்கு எடுத்துப் போகிறாரோ என்று நினைத்தேன். ஆனால், லாக்கரைத் திறந்தது, திறந்தபடி விட்டுவிட்டு, ஓரிரு சிறு உதிரி நகைகளைக் கீழே போட்டார். எங்கே எடுப்பதற்குக் குனிந்தால் என்னைப் பார்த்து விடுவாரோ என்று பயந்தே போய்விட்டேன். ஐம்பது வெள்ளி நோட்டுகளில் சிலவற்றையும் வேண்டு மென்றே சிதறவிட்ட பின்புதான் என் நடுக்கம் சற்றுக் குறைந்தது. ஒரு இரும்புக் கம்பியால், லாக்கரின் சாவித்துவாரத்தைச் சேதப்படுத்திவிட்டு அவர் வேகமாக வெளியேறிக் கதவைப் பூட்டிச் சென்று விட்டார்.
கதவு பூட்டும் சத்தம் கேட்டப்பின்புதான் நான் எழுந்து வந்தேன். என் கால்கள் தரையில் நின்றதே தவிர உதறல் நிற்கவில்லை. சிதறிக் கிடந்தவற்றைப் பொறுக்கிக் கொண்டு, அங்கிருந்த டிரான்சிஸ்டர், வெளி அலமாரியில் இருந்த வெள்ளியிலான நினைவுச் சின்னங்களை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து, தலையை மட்டும் வெளியே நீட்டி, யாரும் பார்க்காத நேரத்தில் கதவைப் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டேன். இதுதான் நடந்தது. நான் எடுத்த பொருள்களைத் தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.”
ஓடிய டேப்பை நிறுத்திவிட்டு நிருபர்களைப் பார்த்தார் டி.ஆர்.பி.
“அவருடைய சொந்த நகைகளையும், பணத்தையும் அவரே எடுத்துக்கொண்டு அவரே ஏன் திருட்டுப் போய்விட்டது என்று புகார் கொடுக்க வேண்டும்?”
“ஏன் தெரியுமா? சீனாவிலிருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்து நல்ல இலாபம் அடைந்து கொண்டிருந்தார். அந்தத் தொழிலில் சார்ஸ் நோய்க் காலத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரிக்கட்டுவதற்குக் கணக்குப் பிரகாரம் வீட்டிலுள்ள பொருளுக்கும், பணத்திற்கும் இன்சூரன்ஸ் செய்துவிட்டு மலேசியா போயிருந்தபோது திருட்டு நடைபெற்றதாகப் புகார் செய்திருந்தார். இன்சூரன்ஸ் கம்பெனியும் வந்து பார்த்து நஷ்ட ஈடு கொடுக்கலாம் என்றிருந்த சமயத்தில், இந்தச் சாவியின் சாட்சியத்திற்குப் பின், மீண்டும் துப்புத் துலக்க ஆரம்பித்தேன்.
அவர் மலேசியப் பயணம் போனவர் குடும்பத்தை, அங்கேயே விட்டுவிட்டு அவர்களுக்குத் தெரியாமல், சிங்கப்பூர் வந்து போனதற்கான பாஸ்போர்ட் ஆதாரத்தையும் வைத்து, அவரைக் கைது செய்து, கொஞ்சம் நெருக்குதல் கொடுத்தபோது, இன்சூரன்ஸ் கம்பெனியையும், அரசாங்கத்தையும், ஏமாற்ற முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டி அது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்போது அவர் ஐந்தாண்டு சிறைவாசத்தை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். இந்தச் ‘சாவி’க்கு ஒரு மாதத் தண்டனையுடன் சரி.
“மிஸ்டர் இக்பால் மிக்க நன்றி!
உங்க திறமைக்கும், அறிவுக் கூர்மைக்கும் இன்னும் பல பரிசுகள் பெறுவதோடு பதவி உயர்வும் பெற்று நாட்டிற்குத் தொண்டாற்ற வாழ்த்துகிறோம்..” என்று சொல்லிவிட்டு நிருபர்கள் விடைபெற்றனர்.
– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.