தீவிரவாதத்துக்கு மதம் இல்லை…?

அரவிந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டான்:
“அரசியல் தீவிரவாதங்களுக்கு மதம் இல்லை. ஆனால், மதத் தீவிரவாதங்களுக்கு மதம் உண்டு. இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு சர்வ நிச்சயமாக மதம் உண்டு. பெஹல்காமில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கூட்டப் படுகொலை செய்யப்பட்ட 26 அப்பாவிகள், இந்துக்கள் என்பதால்தானே கொல்லப்பட்டார்கள்?“
அரவிந்த் மதச் சார்பற்றவன். எந்தக் கட்சியிலும், அரசியல் – சமூக அமைப்புகளிலும் அவனுக்குத் தொடர்பு கிடையாது; அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டான். வாட்ஸாப், முகநூல் போன்ற குழுக்களில் – நண்பர்களுக்கான குழுக்களில்கூட – சேர மாட்டான்.
சமூக ஊடக செயல்பாட்டாளன் அல்ல. ஆதார் அட்டைக்கு அடுத்தபடியாக இன்று ஏதாவது ஒரு சமூக ஊடகக் கணக்காவது அடிப்படைத் தேவையாக ஆகிவிட்டதால் முகநூல், இன்ஸ்டாக்ராம், எக்ஸ் தளம் ஆகியவற்றில் கணக்கு வைத்திருக்கிறான்.
செல்ஃபி போட்டோக்கள், குடும்பத்தார் போட்டோக்கள், சாயங்கால வானம் மாதிரி எந்தப் பதிவுகளும் வெளியிடுவது கிடையாது. எவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக் கூற மாட்டான்; அவனது பிறந்த நாளையும் மறைத்து வைத்திருப்பான். முக்கியமாக, உறவினர்கள் யாரையும் சமூக ஊடக நட்பில் சேர்த்துவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறான். சமூக ஊடகங்களை சமூகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அவனது தரப்பு. அதனால் சமூக விஷயங்களை மட்டுமே அதில் பதிவிடுவான். மற்றவர்களின் சமூகப் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிடவும் செய்வான்.
நடுநிலை, நேர்மை, துணிச்சல், சொம்பு தூக்காமை, பட்டவர்த்தனம் ஆகிய கெட்ட குணங்கள் அவனுக்கு இருந்தன. அதனால், அவனுக்கு அங்கே நண்பர்கள் குறைவு, மறைமுக விரோதிகள் அதிகம்.
இதனால் வழக்கமாக அவனுக்கு 5 – 7 விருப்பங்கள்தான் வரும். எப்போதாவது 10 கிடைத்தால் வெற்றி விழா. 20 – 25 கிடைத்தால் சாதனை.
பெரும்பாலும் யாரும் பின்னூட்டம் இட மாட்டார்கள். அருமை, சிறப்பு, வாழ்த்துக்கள் போன்றவற்றை அவன் பின்னூட்டமாகக் கருதுவதில்லை.
முற்பகல் 11:30 வாக்கில்தான் சமூக ஊடகங்களில் பயனர்கள் அரிதிற் பெரும்பான்மையினரும் குழுமியிருப்பர். அப்போது பதிவு இட்டால்தான் அதிகமான மக்கள் பார்க்கவும், உடனடியாக எதிர்வினையாற்றவும் செய்கின்றனர். அதனால் அந்த ராவுகாலம், எமகண்டம் பார்த்துத்தான் இன்றும் அவன் பதிவை வெளியிட்டிருந்தான். ஆயினும், மதிய உணவு நேரம் வரை ஒரு விருப்பக்குறியோ, பின்னூட்டமோ விழவில்லை.
சிறுபான்மைகளுக்கு ஆதரவு என்றால் விருப்பங்களும், இதயங்களும் குவியும். தோழர், சகோதரர் என்று பாசம் பொழிந்து பின்னூட்டங்கள் இடுவார்கள். சிறுபான்மைகள் செய்கிற அராஜகம், ஜாதி – மத வெறிச் செயல்கள், குற்றங்கள், கலவரங்கள், தீவிரவாதம் ஆகியவற்றைக் கண்டித்துப் பதிவு இட்டால் 97.68% பேர் கண்டுகொள்ள மாட்டார்கள். சில சமயம் ஒரே ஒரு லைக் வரும். சில சமயங்களில் அதுவும் இராது. இந்தப் பதிவும் அப்படித்தான் ஆகப்போகிறது என்று பட்டது. அலுவலகக் கணினி ஜன்னலைச் சாத்திவிட்டு தன் வேலையைத் தொடரலானான்.
இரவு வீடு திரும்பிய பின் அலைபேசியில் இன்ஸ்டாக்ராம் செயலியைத் திறந்து பார்த்தான். கணிசமான விருப்பக்குறிகளும், செவ்விதயங்களும் விழுந்திருந்தன. அதைக் காட்டிலும் பின்னூட்டங்கள் நிறைந்திருந்தது ஆச்சரியப்படுத்தியது. ஆவலோடு வாசிக்கலானான்.
ஃபைசல்தப்லீக்: சகோதரரே! இஸ்லாம் அமைதி மார்க்கம். இஸ்லாத்தின் பேரால் தீவிரவாதம் செய்பவர்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டவர்களாக, இஸ்லாத்துக்கு விரோதமானவர்களாக கருதபடுவார்கள்
ரஞ்சித்சிவம்: பாய்… அமைதி மார்க்கம் உருட்டை இன்னும் நீங்க விடலையா? கழிவி கழிவி ஊத்தறாங்களே சமூக ஊடக கமென்ட்டுல!
ப்ரியங்கா_திருச்சி: ஆமா அரவிந்த், எல்லாரும் மனுஷங்க தான். இதுல மதம் எதுக்கு?
தேசபக்தன்_143: ப்ரோ… நீங்கசொல்றது 200% உண்மை.ஆனா, முஸ்லீம்ல சிலநல்லவங்களும் இருக்காங்க
திராவிடசெழியன்: சங்கி மங்கி! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?
அதிகைநேசன்_64: கவற்சிகரமான வாசகங்கள், சிந்திக்கவிடாமல் ஆமாம் போட வைத்துவிடும். தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்பதும் அப்படித்தான். இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றி பேச்சு எழும்போதுதான் இந்த வாசகம் முன்வைக்கப்படுகிறது என்பதும் கவனிக்க & சிந்திக்கத் தக்கது.
ஜனநாயகவாதி: இஸ்லாமிய வெறுப்பை பரப்பறதே சங்கிக வேலையா போச்சு.
அண்ணன்அடிமை: பெஹல்காம் தாக்குதல் பிஜேபி அஜென்டா.
பொன்.மாணிக்கம்: யூ ட்யூப் கமென்ட்லயும் “தீவிரவாதத்துக்கு மதம் உண்டு”ன்னு சிலர் பதிவிட்டிருந்தாங்க.
தளபதிசுரேஷ்: நண்பா, உங்க இஸ்லாமிய வெறுப்பு பேச்சு கண்டிக்க தக்கது. நீங்க சமூக நல்லிணக்கத்துக்கு எதிரா இருக்கீங்க.
சிறுபான்மை_குரல்: நீதான்டா சங்கி நாயே மதவெறியன். முஸ்லீம் பத்தி தப்பா பேசாதே.
பின்னூட்டங்களை வாசித்துப் பார்த்த அரவிந்திற்கு லேசான ஆறுதல் இருந்தாலும் கனத்த அதிர்ச்சி, சங்கடம், கடுப்பு, விரக்தி ஆகியவை உண்டாகின. இந்தப் பதிவை நீக்கிவிடலாமா, அல்லது தனது சமூக ஊடகக் கணக்குகள் யாவற்றையும் முடக்கிவிடலாமா, அல்லது உணவில் உப்பு சேர்ப்பதை விட்டுவிடலாமா என யோசிக்கலானான்.
பின் குறிப்பு:
இக் கதையில் இடம்பெறும் சமூக ஊடகப் பின்னூட்டங்களில் உள்ள எழுத்துப் பிழை, சொற் பிழை, இலக்கணப் பிழை, சொற்கள் ஒட்டியுள்ள பிழை ஆகியவை பின்னூட்டர்கள் வழக்கமாகச் செய்யும் பிழைகளை உள்ளது உள்ளபடி காட்டுவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டது.
– நடுகல் இணைய இதழ், ஜூன் 2025.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |