தீவினை அச்சம்




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தீய செயல்களைச் செய்வதற்குப் பயப்படுதல்
ஆலமரத்தில் பெண் இனத்துடன் கூடிக் கலந்து மகிழ்ந்து இருக்கும் ஆண்பறவையைக் கொல்லும் பொருட்டு வேடன் குறிபார்த்துத் தன் வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றான். மேல் பார்த்துக்கொண்டே வந்ததால் கீழே புற்று உள் ளதை அறியாமல் புற்றின் மேல் காலை வைத்து அழுத்தினான். அழுத்தியதனால் புற்று மண் இடிந்து உள்ளே உள்ள நாகத்தின் மேல் விழுந்தது. மண் விழுந்ததும் நாகம் சீறி மேலெழும்பிப் புற்றில் கால்வைத்திருந்த வேடனைத் தீண்டியது. நாகம் தீண்டியதை அறிந்த வேடன், “நாம் அப்பறவை யைக் கொல்ல, வில்லைவளைத்து அம்பு எய்ய முயன்றோம்; அம்முயற்சியாகிய தீய செயலே, ‘தன் நிழல் தன்னை விடாது’ என்ற முதுமொழிப்படி நம்மை நாகமாக வந்து தீண்டியது” என்று தான் செய்த தீமைக்கு வருந்தி இறந்தான். இதை வள்ளுவரும் தீய காரியங்களைச் செய்தவர் கெடுதல் அவர் நிழல் அவர் பாதத்தை விட்டு விலகாமல் அவர் பாதத்திலே தங்கியிருப்பதைப் போலாகும் என்று கூறியுள்ளார்.
தீயவை செய்தார் கெடுதல்; நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.
தீயவை = கொடிய செயல்களை
செய்தார் = (பிற உயிர்களுக்குச்) செய்தவர்
கெடுதல் = (தாம்) அழிதல்
நிழல் = ஒருவன் நிழலானது
தன்னை = அவனை
வீயாது = விட்டு விலகாது
அடி = அவன் பாதத்திலேயே
உறைந்த அற்று = தங்கியது போல் ஆகும்.
கருத்து: பிறர்க்குத் தீமை செய்தவன் அழிவான்.
கேள்வி: தீவினை செய்தவர் எவ்வித துன்பத்தை அடைவர்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.