தீர்வு





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்திரை மாத நண்பகல் வெயில் அனலாய் எரித்துக் கொண்டிருந்தாலும் வயல்வெளியில் வேலை மும்மூரமாக நடந்து கொண்டிருந்தது. சுற்றிச் சூழ காலபோக அறு வடை முடிந்து பொலிவிழந்து கிடந்த வயல்கள் எல்லாம் இந்த ஒரு வாரமாய் நீர் நிரம்பி சிறுபோக விளைச்ச லுக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.
தனது வயலில் கூலியாட்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்த செல்லக்கிளி ஒரு கணம் நிமிர்ந்து சுற்று முற்றும் பார்த்தான். கண்ணுக் கெட்டிய தூரமெங் கும் உழவும் நாற்று நடுகையும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது எங்கும் சேறும், சகதியும், தண்ணீரும், நாற்று நடுவோரின் நாட்டுப் பாடலுமாய்…
செல்லக்கிளி பெரும் கமக்காரன் அல்ல. சொக்க ராயன் குளம் இரண்டாம் யூனிற்றில் மூன்றேக்கர் வயற் காணியும், கரும்புத் தோட்ட மேட்டுப் புறத்தில் இரண் டேக்கர் காணியும்தான் அவனுக்குச் சொந்தம். அண் மையில்தான் ஆசை மச்சாள் அன்னத்தைக் கைப்பிடித் திருந்தான்.அப்போது கால போக விதைப்பு நேரமாக இருந்ததால் கையில் அதிக காசுப் புழக்கம் இருக்கவில்லை. அன்பு மனைவிக்கு ஆசையாக எதையும் வாங்கிப் போடவும் முடியவில்லை. வெறும் கழுத்தோடு வந்த அன்னத்துக்கு நகை நட்டுப் போட வேண்டும் என்பது அவனது அவா. ஆனால் அவன் ஆவலோடு எதிர்பார்த் திருந்த காலபோக அறுவடை காலை வாரிவிட்டபோது அவன் மிகவும் குன்றித்தான் போனான். பயிர் என்னவோ வழக்கத்திலும் பார்க்க நன்றாகச் செழிப்புற்று வளர்ந்து தான் வந்தது. தனது உழைப்பின் வெற்றிக் களிப்பில் பூரித்து நின்ற வேளையில்தான் காலம் தப்பிப் பெய்த மாசி மழை வில்லனாய் வந்தது. அணைக்கட்டு உடைப் பெடுத்து களனிகளை எல்லாம் மூடி வெள் ள ம் பாய்ந்தது. வெள்ளம் வடிவதற்கு வாய்ப்பில்லாமலே இரண்டு மூன்று வாரங்கள் அடை மழை பொழிந்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் எல்லாம் சரிந்து மண்ணோடு மண்ணாகி, வெள்ளத்துடன் அடித்துச் செல்லப் பட்டு விட்டன. மேலும் கால்நடைகளும் அடித்துச் செல்லப்பட்டன. எஞ்சியிருந்த ஆடு மாடுகளும் குளிரில் மடிந்தன. குடிசைச் சுவர்கள் எல்லாம் ஈரத்தில் பாறி விழவே. பலர் பாடசாலையில் தஞ்சம் புகுந்தனர். ஊரோடு ஒத்தபடி செல்லக்கிளியும் பலத்த பாதிப்புக். குள்ளானான். வெள்ளம் வடிந்தபின் வயலில் அறுவடை செய்ய வேண்டிய அவசியமே இருக்கவில்லை. மேட்டு நிலத்தில் குலை தள்ளிப் பூரித்திருந்த வாழை மரங்களில் பாதிக்கு மேல் முறிந்து விட்டன. செல்லக்கிளி நொடிந்து போனான். அவன் கட்டிய மனக் கோட்டைகள் எல்லாம் மழை வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டது. அல்லாமல் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்கே வக்கில் லாமல் போய்விட்டது. கூடவே விதைப்புக் காலத்தில் பெற்ற கடன் வட்டியாய்க் குட்டி போட்டுப் பெருகி யிருந்தது. இந்த லட்சணத்தில் தான் சிறு போக விதைப்பும் வந்தது.
கை வற்றிப்போன விவசாயிகளில் பலர் தமது சிறுபோகப் பங்கை பெரும் விவசாயியான மிருசுவில் கந்தசாமிக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்ட போதிலும் செல்லக்கிளி அப்படிச் செய்யவில்லை. சிறுபோகச் செலவுக்கு அவனிடமும் பணமும் இல்லைத்தான். ஆனாலும் சிறுபோகத்தைச் சொற்ப பணத்திற்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்குமேயன்றி மேலும் கடன் சுமை அதிகரிக்கவே வாய்ப்புண்டு என்ற தீர்க்கதரிசனத்தால், எப்பாடு பட்டாவது சிறுபோகத்தையும் செய்துவிடுவது என்று உறுதி கொண்டு கடன் பட்டு, இதோ சிறுபோக வேலை களையும் ஆரம்பித்து விட்டான். பங்குனிக் கடைசியிலி ருந்து கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அவனும் அன்னமும் எந்நேரமும் வயலில்தான்! அரைப் பதத்திற்குப் பெய்த மழை, அகட்டி உழவு உழ வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது. ஏர் மாடுகளுடனும், கலப்பை நுகங் களோடும் வயலில் இறங்கி பக்குவமாக உழுது பண் படுத்தி, சித்திரையில் திறக்கப்படும் குளத்து நீரின் முதற் பாய்ச்சலிலேயே நாற்று நட ஏதுவாக மேடையும் அமைத்துவிட்டான் செல்லக்கிளி.
குறித்தபடியே சித்திரை நடுக்கூற்றில் குளமும் திறக்கப்பட்டு விட்டதால் அவனது வயலில் இப்போது நாற்று நடுகை நடந்து கொண்டிருக்கிறது.
நெற்றியில் வடிந்த வியர்வையை முண்டாசு கட்டியிருந்த துவாயைக் கழற்றித் துடை த்துவிட்டு தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்தினான் செல்லக்கிளி.
கதிரவன் உச்சியைத் தாண்டி விட்டதால் வெயில் ஏறிக் கொண்டிருந்தது. வானில் சிறு முகிற் கூட்டம் கூட இல்லாததாலும், காற்றின் அசைவு அதிகமில்லாததாலும் வெப்பம் தாங்க முடியாமல் வியர்வை வடிந்து ஓடிக் கொண்டிருந்தது. கூலியாட்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். சோறு கொண்டு இன்னமும் அன்னம். வரவில்லையே என்று எண்ணியவனாக வடக்குப்புற பாலைமர நிழலில் சிறிது ஒதுங்கினான். அவனது முழங் கால் வரை சகதி அப்பிப்போயிருந்தது. மடியில் கிடந்து பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு யோசனை யில் ஆழ்ந்தபடி வரிவரியான நாற்று நடுகையை ரசித்துப் பார்த்த செல்லக்கிளி, குரல் கேட்டுத் திரும்பினான்.
‘என்ன, நாற்று நடுகையா? நேரத்தோடயே ஆரம் யிச்சிட்டே…’ வாய்க்கால் ஓர வரம்பில் நடந்து வந்து கொண்டிருந்தார் கந்தசாமி.
செல்லக்கிளி மெல்லச் சிரித்தான். ‘பிந்தினால் போன முறை மாதிரி கடைக் கூற்றில் தண்ணியில்லாமல் போயிடும்.
‘என்ன, எச் போரா. ஐ ஆர் எட்டா போட்டிருக்கே?’
‘நாபர் நெல்லுங்க.”
‘பொலியுமா? கையிலிருந்த சுருட்டை ஒருதரம் ஊதிச் சாம்பல் தட்டிய கந்தசாமி, நம்பிக்கையீனமாக அவனைப் பார்த்தார். ‘நோய்க்கு நின்று பிடிக்காதே!’
‘மருந்தடிக்கலாம்…… குறுகிய காலப் பயிர் என்ப தால்தான் விதைச்சேன். பெரிய இனமாயிருந்தால் கடைக் கூற்றுக்குத் தண்ணி கிடைக்குமோன்னுதான்!…… போன தடவை கூட நாலாந் தண்ணியோட குளம் வத்திப் பயிரெல்லாம் காஞ்சு போச்சு. காலபோகமும் மழையிலை அழிஞ்சிட்டுது செல்லக்கிளி விளககமளித்தான்.
‘என்னவோ……’ என்றபடி நடந்தார் கந்தசாமி.
கந்தசாமியிடம் பணமிருந்தது. வேலையாட்கள் இருந்தார்கள், கூடவே அணைவும் இருப்பதால் வருடா வருடம் அடாத்தாக விதைத்து கள்ளத் தண்ணீர் பாய்ச்சிப் பயிராக்கிவிடுவார். இம்முறையும் வழங்கப் பட்ட காணிக்கு மேலாக பல ஏக்கர்களில் பயிரிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இவரது அடாவாடித் தனத்தால் உண்மையான பங்காளிகளுக்கு முறைத் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் செல்லக்கிளிக்கும் இவர்மீது வெறுப்பு.
செல்லக்கிளி பீடித்துண்டை எறிந்துவிட்டு மறுபடி யும் வயலில் இறங்க நினைத்த போது தொலைவில் அன்னம் சோற்றுக் கடகத்துடன் வந்து கொண்டிருந்தாள்.
பாலைமர நிழலில் கடகத்தை இறக்கி வைத்துவிட்டு ‘நல்லாய் வேர்க்குது’ என்றபடி முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். ‘சாப்பிடுவமே…
செல்லக்கிளி கூலியாட்களையும் கூப்பிட்டான்.
‘இருங்க. காலெல்லாம் சேறாயிருக்கு, கழுவிட்டு வாறன்’ எழுந்து வாய்க்காலுக்குப் போனாள் அன்னம். அவளது இயல்பான எழிலிலும், அன்ன நடையிலும் ஒரு கணம் சொக்கிப் போனான் செல்லக்கிளி. ‘நான் குடுத்து வைச்சவன்…. ம்… இந்த அறுவடையோட யெண் டாலும் ஒரு சங்கிலி வாங்கிக் குடுக்க வேணும்… மீண்டும் கற்பனைகள் விரிந்தன. ஒரு வித எதிர்பார்ப்பில்தானே பலரின் வாழ்வு மகிழ்வோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
எல்லாரும் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வயலில் இறங்கினார்கள். மாலையாவதற்குள் நடுகை முடிந்து விட்டது.
அடியுரமிடப்பட்டிருந்ததால் பயிர்கள் பசுமையாக வளர ஆரம்பித்தன. இரண்டாம் உரமிட்டு, பூச்சிக்கு மருந்தும் அடித்த பின்னர், பச்சைக் கம்பளமாய் விரிந்தி ருந்த வயற்பரப்பின செழுமையின் பொலிவில் பூரித்தான் செல்லக்கிளி;
இம்முறையும் வழக்கம் போல் பலர் அடாத்தாகவும் விதைத்திருந்தனர். கந்தசாமியின் பங்குதான் அதில் அதிகம். செய்ய வேண்டியதைச் செய்து கள்ளத் தண்ணி பாய்ச்சி வந்தார் சுந்தசாமி. அதிகாரிகளும் கண்டும் காணாமலும் நடவடிக்கையெதுவும் எடுக்காமல் இருந் தனர், பின்மழை பெய்து குளத்தில் நீர் நிரம்பியிருந்ததால் முதலில் யாருக்குமே பாதிப்பேற்படவில்லை. நாலாந் தண்ணியோடு ‘கதிர் வெடிக்க ஆரம்பித்தபோதுதான் நீர்ப் பாய்ச்சுதலில் பிரச்சினைகள் தோன்றின.
அன்று முறைத் தண்ணீர் பாய்ச்ச வந்த செல்லக்கிளி புடைத்துச் செழித்து குடலை தள்ள ஆரம்பித்த பயிரின் பொலிவில் தன்னை மறந்து ஒரு கணம் பூரித்தான். கற்பனையில் அன்னத்தின் களுத்தில்சங்கிலி நெளிந்தது.
பக்கத்துக் காணியில் நீர் நிரம்பி வடிய ஆரம்பித்ததும் தனது மடையை வெட்டித் திறந்துவிட்டு வீட்டிற்குப் புறப் பட்டான்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வயலில் தண்ணீர் பாய்ந்திருக்கவில்லை. ய்க்காலில் வந்து கொண்டிருந்த தண்ணீரையும் காணவில்லை மேலே கந்தசாமியின் ஆட்கள் மறித்துக் கட்டிவிட்டார்கள். என்பதை ஊகிக்க அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
பெருவரம்பில் தாவி ஏறி வாய்க்கால் கரையோடு நடந்தான் செல்லக்கிளி. கந்தசாமியின் அடாத்த வயல்களில் தண்ணீர் அலையடித்துக் கிடந்தது. முறைக்காரனான அவனுக்கில்லாமல் தண்ணீரெல்லாம் அடாத்து வயலில் தேங்கி நின்றதைக் கண்டதும் அவனது உள்ளம் கொதித்தது.
இதற்கிடையில் ஓவசியர் இரண்டாம் வாய்க்காலை மறித்துக் கட்டி மூன்றாம் வாய்க்காலைத் திறந்து விட்டு விட்டார். செல்லக்கிளிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, ஓவசியரிடம் கெஞ்சினான். அவர் மசிய வில்லை. ‘உன்றை முறை முடிஞ்சுது… அடாத்துக் காரன்பாச்சினதுக்கு நான் பொறுப்பே’ அவரைக் கெஞ்சிப் பயனில்லை என்றறிந்ததும் கந்தசாமியிடம் நியாயம் கேட்கப் போனான். அதற்கு அவரோ குதர்க்கம் பேசியதோடு அடியாட்களைக் கொண்டு மிரட்டவும் ஆரம்பித்தார். வீண் வம்பு தும்புக்குப் போகாத செல்லக்கிளி பின் வாங்க நேரிட்டது. ரீ ஏ. யிடம் ஓடினான். ‘அடுத்த முறை முழிச்சிருந்து பாய்ச்சு’ என்று கூறினார்.
அடுத்த தவணைவர இன்னும் இரண்டு வாரம் தாமதமாகுமே…… அதற்குள் பயிர் கருக ஆரம்பித்து விடுமே… அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக செழித்து வந்த பயிர், இளமஞ்சளாகி கருக ஆரம்பித்தது. வானைப் பார்த்தான் மழையும் கை கொடுக்கவில்லை. வயல் எல்லாம் பாளம் பாளமாக வெடிக்க ஆரம்பித்தது. செல்லமாய் வளர்த்த குழந்தை நோயில் வாடும்போது ஏற்படுகின்ற தவிப்பு அவனுக்கு, ‘கடவுளே இந்த முறை யும் வேளாண்மை பிழைச்சுதெண்டால் கடன்காரருக்கு என்ன மறுமொழி சொல்லுகிறது?’
அடுத்த தண்ணீர் முறை வந்த போது பயிர் கருகத் தொடங்கி விட்டது. எனினும் இம்முறை நன்றாகப் பாய்ச்சினால் பயிரெல்லாம் தப்பிப் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் மனது அமைதி கொண்டது.
முறைத்தண்ணீரை வெட்டிவிட்டு விட்டுகண்விழித்துக் காத்திருந்தான் செல்லக்கிளி. ஒரு மாதிரி பயிரெல்லாம் தப்பியிடும்’ என்று எண்ணியபடியே கைகளில் படிந்த சகதியை ஓடி வரும் வாய்க்கால் நீரில் கழுவினான். தண்ணீரின் வேகம் குறைவது புரிந்தது. ‘கட்டை போட்டு மறிச்சுக் கட்டியிட்டாங்கள் போல” என்று ஆவேசமாக ஓடினான். அவன் எதிர் பார்த்தபடியே கந்தசாமியின் ஆட்களின் வேலைதான்.
வாய்க்காலைக் குறுக்காக மறித்துக் கட்டி தமது வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். ‘உதென்னடா வேலை?’ அவன் பணிவாகத்தான் கேட்டான்.
‘எங்களைக் கேட்க நீர் ஆர்?’ சூடாகக் கேட்டான் ஒருவன்.
‘முறைத் தண்ணிக்காரன்!’
‘ஓவசியரைக் கேளும்’ மண்வெட்டியால் ஓங்கி மிரட்டினான்.
செல்லக்கிளி ஓவசியரிடம் ஓடினான். ‘அவங்கள் சண்டியன்கள்… எனக்கும் வெளுத்துப் போடுவாங்கள்’ ஓவசியர் பயந்து பின்வாங்கினார். வெறும் பாவனை தானோ?
‘இனி என்ன செய்வது?’- மனது பலமாக அடித்துக் கொண்டது. சோர்வோடு வீட்டுக்குத் திரும்பியவன், மனைவியிடம் அனைத்தையும் கூறினான்.
‘நாங்கள் பணிஞ்சு போறதுதான் பிழை. கெஞ்சினால் மிஞ்சுறவங்களை மிஞ்சித்தான பார்ப்போமே!’
– மல்லிகை
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.