தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 1,196 
 
 

சந்திரா கருப்புக்கோட்டை மாட்டிக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தாள்..  வாசற்கதவை யாரோ படபட எனத்தட்டினார்கள்.. கதவருகில் சுவரில் உள்ள காலிங் பெல்லின் சுவிட்சை அழுத்தாமல் இப்படி  கதவைத்தட்டுகிறவர்கள் பெரும்பாலும் காய் விற்பவர்கள் அல்லது பூக்காரியாகத்தான் இருக்கும், என நினைத்தபடி ஓரடி எடுத்து வைத்தாள்.

மாடி அறையிலிருந்து எட்டிப்பார்த்த மனோகர், ”சந்திரா கோர்ட்டில் தான் நீ வாதாடுகிறாய், வீட்டில் அதிர்ந்து பேசத் தெரியாத அன்புக்கடல். அதனாலேயே உன்னைத் தேடி யாராவது வந்துட்டே இருக்காங்க.. நான் ஊசி போடற டாக்டர்னு என்கிட்ட ஒர்த்தர் வீடு வந்து பேசறதில்லை..” என்று குறும்பாய் சொல்லிவிட்டு மறுபடி அறைக்குள் புகுந்துகொண்டான்.  

கல்யாணமான இந்த இரண்டு வருடங்களில் மனோகரிடம் சந்திராவிற்கு பிடித்ததே அவனுடைய குறும்புப் பேச்சுதான். 

கீழே நின்றபடியே தலை தூக்கிப் பார்த்தவள், நைட் ஷிஃப்ட் பணி முடித்து வந்த களைப்பு அவன் முகத்தில் தெரியவும், ”நீங்க தூங்குங்க மனோ..நான் வந்தவங்களை  மெதுவா பேசி அனுப்பிடறேன்..” என்று சிரித்தபடி  வாசல் கதவைத் திறந்தாள்.

திறந்த கதவிற்கு வெளியே  நின்றிருந்த பெண் புயலாய் உள்ளே நுழைந்தாள். அவளின் கலைந்த தலையும் சிவந்த கண்களும் இழுத்துக்கட்டிய  அந்த நூல் புடவையும்  ஏதோ அவசரச் செய்தி சொல்ல வந்தது போல் தெரிந்தது. முப்பத்தி ஐந்து வயதிருக்கலாம். காது மூளியாக இருக்க கழுத்தில்  மஞ்சள் கயிறுதவிர  நகை ஏதுமில்லை. கைகளில் மட்டும் கண்ணாடி வளையல்கள்.  

சந்திராவைப் பார்த்தவள் தடாலென அவள் காலில் விழுந்து தோளில் தொங்கிய பையை அவள் காலடியில் போட்டாள்..

சந்திரா என்ன ஏது என திகைக்கும்போது, ”வக்கீலம்மா…நீங்கதான் என் தம்பியைக் காப்பாத்தணும்..என் காது தோடு கால்பவுனு, ஒருபவுன் செயின் ஒருபவுன்,  இதுல இருக்குது…பணம் ஒரு ரெண்டாயிரம் இப்போ இருக்குது. இதை வச்சிட்டு என் தம்பியக் காப்பாத்துங்கம்மா.” என்று அழுகையினூடே வீறிட்டாள்.

சந்திரா மெல்ல அவளைத்தூக்கி நிறுத்தினாள். கனிவான குரலில், ”முதலில்  ஆசுவாசமாய் உட்காரும்மா” என்றவள் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“உன் பேர் என்னம்மா?” என்றாள்.

“அம்மா என் பேரு கிடக்கட்டும்மா..என் தம்பி பேரு பொன்னுமணி. குணத்லயும் பொன்னு தாம்மா… அவன். இருபத்தி ஓரு வயசுப்பிள்ளைம்மா..  படிக்க வசதி இல்லாத குடும்பம். கொரானால பெத்தவங்களை இழந்து  இந்த ஊருக்கு வந்து என் வீட்லதான் இருக்கிறான்.. காய் வியாபாரம் செய்றான்…தெருத்தெருவா வெய்யிலு  மழைன்னு பார்க்காம தொண்டை கிளிய கூவி சம்பாரிச்சி எனக்கும் கொடுக்கறான்மா..என் குடிகாரப் புருஷனையும் என்னையும்  அவந்தான் காப்பாத்தறான்மா… அவன் மேல இப்படி ஒரு பழி விழுந்திருக்கும்மா..காப்பாத்திங்கம்மா…”

அவளிடம் முழு விவரம் கேடக நேரமில்லாத நிலையில்  சந்திரா  அக்கறையான் குரலில், ”இதபாரும்மா…இப்ப அர்ஜண்டா நான் கோர்ட்டுக்குப் போய் ஆகணும். தப்பா நினச்சிக்காதே, சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவேன். நீயும் வந்திடு. விவரம் கேட்டு கண்டிப்பா உனக்கு உதவறேன்” என்றாள்.

அவள் “கண்டிப்பா வரேன்மா..என்னை மாதிரி ஏழைங்களை காப்பாத்த உங்கள மாதிரி நல்ல மனசு காரங்க இருக்காங்க அதுதான் மா பெரிய தைரியம்” என்று சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு வெளியே போனாள்.

மாலை சொன்னபடி ஆறுமணிக்கு வந்துவிட்டாள்.

சந்திரா அவளிடம் விவரம் பேசியதில், அவள்பெயர் பானு என்றும் அவள் இருக்கும் சேரிப்பகுதியில் வசிக்கும் ரஞ்சிதா என்கிற ஒரு பதினேழு வயது இளம் பெண் தன் தம்பியின் மீது வீண் பழி சுமத்துகிறாள் என்பதும் புரிந்து போனது .

அது சாதாரணப் பழி அல்ல. தனது கற்பை அவன் சூறையாடி விட்டதாக சொல்வது அக்காவான இவளுக்குப்பொறுக்கவில்லை. வயிற்றில் இப்போது ஆறு மாத சிசு இருப்பதாக வேறு பயமுறுத்துகிறகிறாளாம்.

பானு சொன்னதை வைத்து மட்டுமல்ல அவள் தம்பியை நேரில் பார்த்ததும் சந்திராவிற்கு கண்டிப்பாக அவன் அப்படிப்பட்டவனாக இருக்க மாட்டான் என்று நம்பிக்கை பிறந்தது. அது அவனுடன் பேசும்போது அந்த நேர்மையான தெளிவான உண்மையான பேச்சில் அதிகமானது. ஆகவே கோர்ட்டில் அவள் அந்த கர்ப்பிணிப் பெண்ணை எதிர் கேள்வி கேட்கும் போது கேஸ் சில நாட்கள் கடந்தன.

வேறு வழியின்றி கடைசியில் அவள் தான் யாரோ ஒரு கயவனால் கற்பழிக்கப்பட்டதை ஒத்துக் கொண்டாள். இப்படி வீண் பழி சுமத்திய அவளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்று பானு சொன்னபோது அவள் தம்பி “நான் ஒரே ஒரு கேள்வி அந்தப் பெண்ணிடம் கேட்க வேண்டும்” என்று அவளை நெருங்கினான்.

பிறகு சந்திராவிடம் திரும்பி வந்து “வக்கீல் அம்மா! அந்தப் பெண்ணையே நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்றான் 

பானு திடுக்கிட்டாள் .

“பொன்னு..உனக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறதா இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த அம்மா உனக்காக பல நாள் வாதாடி அந்தப் பெண் பொய் சொல்கிறாங்கிறதை நிரூபித்திருக்கிறாங்க. கோர்ட்டுல தீர்ப்பும் ஆகி இப்ப பார்த்து அவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறாய் உனக்கு புத்தி கெட்டுப்போயிடிச்ச?” என்று கேட்டாள்.

தீர்மானமான குரலில் பொன்னுமணி சொன்னான் “தெளிவாகத்தான் இருக்கிறேன். அந்தப் பெண் என்னிடம் சொன்னது ‘என் குழந்தைக்கு அப்பாவாக  எனக்கு பாதுகாப்பாக நீதான் இருப்பாய் என்று நான் நம்பினேன் அதனால் தான் உன்மீது பழியை சுமத்தினேன். நீ உத்தமன்’ என்றாள். அந்த நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன்”

சந்திரா மிகவும் ஆச்சரியத்துடன் அவனையே பார்த்தாள். நீதிமன்ற தீர்ப்பு எத்தனையோ இருந்தாலும் அவரவர் மனத்திற்கு என்று ஒரு தீர்ப்பு  இருக்கிறதல்லவா அதற்கு மேல் வேறு என்ன இருக்கப் போகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *