திரை





(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஞ்சுக் குவியலைப் பழிக்கின்ற மயிர்க்கற்றையோடு கூடிய தலை. முதுமையின் கீறல்கள் தாறுமாறாய் விரவிக் கிடக்கும் ஒளி குறைந்த முகம். குழி விழுந்த கண்கள். கூனிக் குறுகிய மேனி. பார்ப்பவர் மனதில் பரிதாப உணர்ச்சியை ஊற்றெடுக்க வைக்கும் உருவமாக அமைந்துவிட்ட அந்தக் கிழவி! எலும்புருவம் பெற்று, இளமை துறந்த நிலையில் காட்சியளிக்கும் காரைக்காலம்மையாரின் மறு பதிப்பா ?
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும் அந்தப் புகைவண்டி சுன்னாகம் நிலையத்தைத் தாண்டிச் செல்லுதற்கான முன்னறிவிப்பை ஒலித்துவிட்டுப் பயங்கரமாக இரைந்து கொண்டு நகர்கிறது. பெட்டியொன்றின் வாசலில் நின்றபடியே வைத்த கண் வாங்காமல் அந்தக் கிழவியைப் பார்த்த நிலையிலேயே நான் நின்றுகொண்டிருக்கிறேன்!
அந்தக் கிழவி உதிர்த்துவிட்ட வார்த்தைகள் ‘என்ரை ராசா, அவன் என்னைக் கவனிக்காமல் போனாலும் பரவாயில்லை; ஒரு குறையுமில்லாமை நல்ல சுகத்தோடை இருந்தாச் சரி!’ என்னிதயத்தில் ஆழமாகப் பாய்ந்துவிட்ட கருக்கரிவாளைப் போலக்குத்திட்டு நிற்கின்றன. முதுமையின் தலைவாசலில் தடியூன்றி நிற்கும் அந்தக் கிழவி இந்த வார்த்தைகளைச் சிந்தியபோது அவள் கண்களிலிருந்து சிந்திய நீரைக் காணாமற் போக நான் கபோதியல்லவே!
வண்டி வேகமாக ஓடுகின்றது. ஓங்கி மதாளித்து வளர்ந்து நிற்கும் வாழைத் தோட்டங்களையும், செம்மண்செறிந்த பாதையையும் கடந்து! சுன்னாகம் நிலையமும் அதன் விஸ்தாராதிகளும் மங்கி மறைந்து என் பார்வைக்குப் படாமற் போனபின்னரே நான் உள்ளேசென்று அமர்கிறேன். ஆனால் அந்தக் கிழவி என் மனத்திரையில் வருகிறாள்!
‘ஒரு போசுக் காட்டுத் தம்பி… எவ்வளவோ பாடுபட்டுப் படிப்பிச்சு, ஆளாக்கிவிட்ட எனக்கு இவன் எழுதமாட்டேனென்கிறானே. இந்தமுறை எப்படியாவது தம்பி நீ அவனுக்குப் புத்திமதி சொல்லியாவது கீறிப்போட்டிடச் சொல்லு!’
எல்லா ஆசைகளும் அற்றுவிட்ட நிலையில் புத்திர பாசம் மட்டும் அலைக்கழிக்க அழுதழுது அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது இரும்பே உருகுமென்றால் என்னிதயம் மட்டும் உருகாமலிருக்க இரும்பினுங்கடியதா?
‘தாய்மையைப் படைத்த தலைவனே, தாய்மையின் விளைநிலைத்தில் முளைவிடத் தீமையின் பாறைப்படையை எதற்காகவோ பயிரிட்டாய்? என்னிதயம் இறைவனிடம் இப்படிக் கதறியது. இறைவன் – அவன் எங்கே பதில் சொல்லப் போகிறான்! அவன் தன் பாரத்தைத் தீர்க்கத்தானே தாய்மையைப் படைத்துத் தத்தளிக்க விட்டிருக்கிறான்!
பெற்று, வளர்த்துப், பாலூட்டிச், சீராட்டிப், படிப்பித்து ஆளாக்கி வைத்ததற்கெல்லாம் அந்த அன்னை எதிர்பார்ப்பது ஒரேயொரு ‘போசுக்காட்டு’? ஐந்தே ஐந்து சதம் பெறுமதியான – சடப் பொருளான ‘அது’ அவளுக்குக் கிடைக்கும்போது சஞ்சீவியாக அதுவும் அவளும் உயிரடைவார்களாம்! ஆனால் அவன் எழுதுவானா?
மனத்திரையின் மாறுதல்கள், விசித்திரமானவை, அவன்….!
கொழும்புப் பட்டினத்தின் குதூகலமான நாகரிக வாழ்க்கை அவனோடு ஒன்றிவிட்ட ஒன்றாகிவிட்டது. யாழ்ப்பாணத்து மண்ணிலே வேர்வை சிந்தி, இரத்தம் பிழிந்து உழைப்பால் உருவழிந்து உருவாக்கியவர்களின் வாலிபப் பிள்ளைகள் பட்டினத்திலே காற்சட்டை போட்டு உத்தியோகம் பார்த்துக் கும்மாளமடிக்கிறார்கள்! உழைப்பு அங்கே – உயிர்வாதை தரும். இங்கே போதுமென்ற அளவுக்குப் போதை தரும். இந்தப் போதை வசப்பட்டவர்கள் மீள்வது அரிது. போதைகளும் பல ரகமானவை. இராசையாவுக்கும் பல போதைகள்!
இராசையா உத்தியோகத்துக்கு வந்த புதிதில் ‘பட்டிக்காட்டான்’ தான். நல்ல பையன்தான். ஆனால் நாளடைவில் நகரத்திற்கே உரித்தான ‘நாகரிகம்’ அவனைச் சரணடைந்துவிட்டது. அவன் அதனைச் சரணாகக் கொண்டுவிட்டான்.
போதை ரகங்கள் கவர்ச்சியானவை மட்டுமல்ல; கழுத்தறுக்கக் கூடியவையுங்கூட. இராசையா இவற்றிலே கைதேர்ந்த கலைஞனாகி விட்டான். கலைஞனுக்கே உரித்தான புதிய உத்திகளை அனுசரித்து இன்பங்காணுவதிலே அவனுக்கு நிகர் அவனே தான். அதிகம் வளர்த்துவானேன் ? இராசையாவும் நானும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். ஆனால் அவனைப்போல வாழ எனக்குத் தெரியவில்லை. என்னால் முடியாது! கலைஞனுக்குப் பெரும்பான்மையாகச் சுயப்பிரக்ஞையே இருப்பதில்லையல்லவா ? இராசையா எப்படி அதற்கு விதிவிலக்காக இருக்க முடியும் ? வீட்டை, வாசலை, பெற்ற தாயை மறக்காமலிருக்கச் சுயப்பிரக்ஞை இருக்கவேண்டுமே! இராசையா எப்படி அந்தச் செம்மண்ணில் புரண்டெழும் கிழவிக்குக் கடிதமெழுத முடியும் ?
மிஸ் பிரீத்தா அழகிதான். ஆட்சேபனையில்லை. ரோஜா மேனியாள். பேசாமல் பேசும் விழியாள்; கொவ்வை உதரத்தாள்; குத்திட்டு நிற்குமிளங்கொங்கையாள்; அவள் சிரித்தால் அவன் சிரிப்பான்; அவள் அழுதால் அவன் அழுவான்’ என்ற நிலைக்கு ஆடவனை ஆகர்ஷிக்கும் அழகிதான்! அவள் இப்போது இராசையாவின் காதல் தேவதை! பூசனைக்குரிய ‘புனிதமான’ பெண்!
அவளுக்கு என்ன வேண்டும் ? எப்பொழுது வேண்டும்? ஏன் வேண்டுமென்பதெல்லாம் அவனுக்குத் தானாகவே தெரியும்! ஆனால் பெற்றுவிட்ட அந்தப் பேய்க்கிழவிக்கு ஒரு ‘போசுக்காட்டு’ போட அவனுக்குத் தெரியாது! அவனைக் குறைசொல்லியென்ன; எல்லாம் அந்தச் சர்வ வல்லமை பொருந்திய காதலின் மகத்துவம்!
காதலென்றால் இப்படித்தானிருக்க வேண்டும்; நம்மைப் போன்றவர்களுக்குக் காதலிக்கத் தெரியாதே! ஏதோ இந்தக் காதல் ‘மகத்துவம்’ தெரியாத காலத்துப் பெரியவர்கள் என்னைக்கூடத்தான் சொல்லுகிறார்கள் இவன் காதலித்துக் கல்யாணம் பண்ணியவனென்று!
அதெல்லாம் பழைய கதை. யாழ்ப்பாணப் பட்டினத்துக்குத் தெற்குப் பக்கமாகவுள்ள சப்த தீவுகளில் ஒன்றிலே பிறந்து வளர்ந்து, பட்டினத்துக்கு வடக்கே சென்று செம்மண் களஞ்சியமான ஏழாலைக்குப் போய்ச் சேர்ந்ததை ‘காதல் காவியம்’ என்று கூறி ஏமாற்ற எனக்கே பிடிப்பதில்லை. அது போகட்டும்! இராசையாவின் காதலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? காதலுக்காக எதைத் தியாகஞ் செய்தாலும் பிறந்த இடத்தையும், பெற்றுவளர்த்த பெற்றோரையும் தியாகம்பண்ணி நடுத்தெருவில் விட யாழ்ப்பாணத்தானுக்கு லேசில் வராது என்ற களங்கத்தைப் போக்கிக் காதலை விளங்கவைத்தவன் இராசையா! தாய்க் கிழவிக்கு என்ன கேடா? அவளை ஏன் இராசையா சட்டைபண்ணப் போகிறான்? குறுக்கீடில்லாத காதல் வாழ்க்கைதானே சொர்க்க இன்பந்தரும் என்று சொல்லுகிறார்கள். இராசையா சொர்க்கத்தில் இடம்பெற்றுவிட்டான்.
என்னைப்போன்ற குடும்பஸ்தர்களுக்கு உத்தியோகம் கொழும்பிலிருந்தாலும், கொழும்பில் ஒரு கால், யாழ்ப்பாணத்தில் ஒருகால் நிரந்தரம். இதனால் அங்குமிங்குமாக அலசடிப்படுவது வழக்கமாகிவிட்டது. பற்றுதல்கள் கூடவே மனிதன் பேராசைக்காரனாகிவிடுகிறான். நான் ஒரு பேராசைக்காரன்! அந்தக் கிழவி சுன்னாக நிலையத்தில் அழுத நிலையில் நின்ற காட்சியைப் பார்த்துவிட்டு வந்தபிறகு எந்தநேரமும் அந்தக் கிழவியின் நினைப்புத்தான். அவளுக்கு நான் ஏன் மகனாக இருக்கக்கூடாது என்றுகூட ஆசைப்படத் தொடங்கிவிட்டேன். என் ஆசை வெறும் ஆசைதான்!
இம்முறை யாழ்ப்பாணம் போய்வந்த பிறகும் எத்தனையோ முறை இராசையாவைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அந்த இரக்கத்திற்குரிய வயோதிப ஆத்மாவைப் பற்றிப் பேசக்கூடிய நிலையில் ஒருபோதும் அவன் காட்சியளிக்கவில்லை. அலுவலக நேரத்தில் அவனைச் சந்திப்பதை அவன் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அதிலும் என்னைப்பற்றிய நல்லெண்ணமே அவனுக்கில்லாதபோது…., மற்றைய நேரங்களில் அவன் போதையுடன் அல்லது கோதையுடனிருக்கின்றானே! போதையும், கோதையும், உறவுமீறிய நிலையிலுள்ள ஒருவனிடம் பேசுவதில் பயனேது… ?
வாயிருந்தும் ஊமையானேன் நான்! காலம் ஏன் உறங்கப்போகிறது? நாட்கள் உதிர்ந்துவிட்ட சருகுகளாக மாத மலர்கள் ஒன்று, இரண்டு, மூன்றெனப் புஷ்பித்துக் கொண்டிருந்தன.
ஒருநாள்….! அலுவலகத்தில் நாங்கள். அந்த அமைதிகொண்டிருந்த நேரத்தில் வந்த தந்திச் செய்தி ஒன்று அலுவலகத்தையே ‘கலகலத்து’ விடச் செய்தது!
‘மிஸ்டர் இராசையா, மிகவும் வருத்தப்படுகிறேன். ஒருவாரம் லீவு தருகிறேன். ஊர்போய் வாருங்கள்! தந்தியை இராசையாவிடம் கொடுத்துவிட்டுத் துக்கம் தோய்ந்த குரலில் கூறிச்சென்றார் மானேஜர். தொடர்ந்து இராசையாவும் அலுவலகத்தைவிட்டு வெளியேறினான்!
தந்தியில் வந்த செய்தி என்ன ? ஒருவாறாக எங்கள் ஊகத்திற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்து ‘இராசையாவின் தாய் செத்துவிட்டாளாம்’ என்று மானேஜர் கூறியதாக அலுவலகப் பையன் தெரிவித்தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; ‘கடவுளே’ என்றுவிட்டு இருந்துவிட்டேன்.
முற்றும் துறந்தவர்க்குத்தான் பற்றற்ற நிலை ஏற்படும் என்றில்லை. கல்நெஞ்சர், கயவர், போக்கிரிகளுக்கும் இந்நிலையில் ஏதேனும் சித்திக்குமோ? என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை! அலுவலகம் முடிந்தபின்னர் சில நண்பர்களைக் கண்டுவிட்டு விடுதி நோக்கி வந்துகொண்டிருந்தபோது. சினிமாத் தியேட்டருக்கு முன்பாக –
வளர்ந்து நிற்கும் ‘கியூ’ வரிசையில் இராசையாவும், மிஸ் பிரீத்தாவும் கைகோர்த்தபடி படம்பார்க்க ‘டிக்கட்’ பெற முண்டியடித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட பின்னர் – எனக்கு இந்த உலகமே மறந்து விட்டது!
அங்கே – ‘பேதித்து அவனை வளர்த்தெடுத்த பெய்வளை’ பிணமாகக் கிடக்கிறாள். இழவோசை உலகதிர ஒலிக்கின்றது. நைந்துருகும் துயர ஒலியலைகள் எழுகின்றன!
இங்கே – அந்த ஒலியலைகளை மறந்துவிட்ட நிலையில் உள்ளம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இவன் இன்பம் அனுபவிக்கத் துடித்து நிற்கின்றான்.
அந்நிலை – என்றேனும் இவனுக்குச் சித்திக்குமா ? இவன் என்ன அதீத மனிதனா? தெய்வத நிலைபெற்றவனா? இல்லையே!
என்றோ ஒரு நாள் அந்நிலை இவனுக்கும் சித்திக்கும். அன்றுதான் இவன் மனத்திரையும் அகலும். விலகும்! திரை அகன்ற அப்பால்!
– வீரகேசரி, 10-5-1964.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |