திருப்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2025
பார்வையிட்டோர்: 139 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவளால் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியவில்லை. 

அவள் செய்தது சரியானதுதானா? அவளுடைய செய் கையை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளப் போகிறதா? உலகம் ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ அவள் உள்ளம் அதை ஏற்றுக் கொள்கிறதா? இப்படி நடந்துகொள்ள அவளுக்கு எப்படித் துணிவு வந்தது? 

தலைமுறை தலைமுறையாக உடலுழைப்பைத் தர பழகிப் போன ஒரு சமுதாயத்தில் பிறந்தமையால் அவளுக்கு இத் துணிவு ஏற்பட்டிருக்குமோ? இருக்கலாம். 

உழைத்துப் பிழைப்பதையே வாழ்க்கை நியதியாக ஏற்றுக்கொண்ட தோட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவளவள். ஆணோ பெண்ணோ வாழ்க்கை நியதி ஒன்றுதான், ஒழிவில் லாது உழைக்க முடிந்த ஆண் பிள்ளையின் வருவாய் நின்று விடுகிற சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட எந்தக் குடும்பமும் நிலை குலைந்து போய் விடுவதில்லை. அந்தக் குடும்பத்தி லுள்ள பெண் அதை ஈடுசெய்து விடுவாள். 

அவனுடையது வருந்தி செய்கிற உழைப்பு; உடலில் வலுவேண்டும். அதைச் செய்ய பெண்ணின் உழைப்பு நளின மானது; நுட்பம் நிறைந்தது. 

மலைச்சரிவுகளில் பரந்து விரிந்து கிடக்கிற தேயிலைத் தளிரனைத்தும் இயற்கை தந்த செல்வம். பெண்களின் கரம் படுவதால் துளிர்த்து துளிர்த்து நிறைகிற அதன் வனப்பே அவர்கள் வாழ்வில் வளமூட்டுகிறது. அந்தச் செடிகளுக்கு வள மூட்டுவதற்கென்றே அந்த வனிதைகள் உயிர் வாழ்கிறார் கள்; உடல் வளைத்து உழைக்கிறார்கள். 

அவள் உழைப்பையே வாழ்வாகக் கொண்டவள். இரண்டு தங்கைகளோடு பிறந்தவள். அந்த மூவரின் வரு மானத்தில் தலையெடுத்ததுதான் அவர்களின் குடும்பம். அந்த ஓன்றுக்காகவே அவளை மருமகளாக்கிக்கொண்டனர். அவளது கணவனின் பெற்றோர். 

புகைத்தும் குடித்தும் பொழுதைக் கரைத்துக் கொண் டிருக்கும் தன் மகனின் வாழ்க்கை சீர்படவும் அவன் தலை யெடுக்கவும் அவளின் துணை பயன்படும் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததில் தவறில்லை. அது சுயநலமான எதிர்பார்ப்புமல்ல. எந்த பெற்றோரும் இயல்பாக எதிர்பார்க்கக் கூடியதுதான். 

ஆனால், அதுநிறைவேறிட வேண்டுமென்ற அவசிய மிருக்கிறதா? நிறைவேறினாலும், எதிர்பார்த்த முழு அளவில் என்ற கட்டாயமுண்டா? எதிர்பார்த்ததற்கு மாறாக எதுவும் நடந்துவிடாமலிருக்க யாரால் உறுதி தர முடியும்? 

அவளது கணவன் முன்னிலும் அதிகமாக குடித்தான். தனிக்குடித்தனம். முன்னிலும் கூடிய வருவாய், அவன் குடி கூடுவதற்கு யாரைக் கேட்க வேண்டும்? 

திருமணமான ஆரம்ப நாட்களில், காதல் பருவத்தின் துடிப்பான நினைவுகளோடு கணவனுடன் வாழத் தொடங் கிய காலத்தில், தான் அத்தனை காலமும் நினைவுத்திரை யில் வரைந்து வந்திருந்த வாழ்க்கைச் சித்திரத்தை ஆடவ னொருத்தனோடு வாழ்ந்து சரிபார்க்க ஆரம்பித்தபோது அவள் அதைப்பற்றி அதிகம் கவலைப் படவில்லை; கால ஓட்டத்தில் அதைச்சரிப்படுத்திவிடலாமென்று நினைத்தாள். அவள் நினைப்பும் பொய்யாகிவிட்டது. 

அவள் கணவனை யாராலும் திருத்த முடியவில்லை. 

கடும் உழைப்பாளி அவன். அதனால் அவனை கடிந்து பேச யாருக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. உழைத்து திரண்ட அவன் அங்கம் குடித்துக் கெட்டுக் கொண்டிருந்தது. கணவனின் அந்த நிலையை எந்தப் பெண்தான் அனுமதிப்பாள்? 

அவர்களிருவராயிருந்தபோது அவளால் ஓரளவுக்கேனும் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், குழந்தையொன்று பிறந்து அவர்களோடு வளரத் தொடங்கியபோது அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

தாங்களிருவராக இருந்து கொஞ்சி குலாவிய நாட்களில், மாதா மாதம் குடித்தே அழிந்த நூறு ரூபாயை பற்றிய மதிப்பை இன்று அவள் அதிகம் உணர்ந்தாள். 

அந்த உணர்வு அவளுக்கு எப்படி வந்தது? குழந்தை பிறந்ததினாலா? தன் குழந்தையின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கிற அளவுக்கு, தோட்டத்துப் பெண்ணின் மனம் பக்குவமடைந்து விட்டதா? 

கங்குல் மறைகிற காலை நேரத்தில், கதிரொளி தோன்றுகிறதை அவள் கவனித்திருக்கிறாள். 

ஆனால், மறைவையும் தோற்றத்தையும் மனதில் வாங்கி, எதனால் எது விளைகிறதென்றெண்ணிப் பார்க்க அவள் இது காறும் முனைந்ததில்லை. 

அவள் அப்படிச் செய்யவில்லை யென்பதற்காக இரவு விடியாமலும்—பொழுது மறையாமலுமா இருந்து விடுகின்றன? 

மனித சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சி எந்தெந்த உருவி லெல்லாமோ உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கொண்டு வருகிறது. காலம் செல்லலாம், வேகம் குறையலாம். ஆனால், அதன் பரவுதல் ஏற்பட்டேதீரும். 

வெள்ளைக்காரனும் பறங்கியனும் வகித்த துரை வேலைக்குச் சிங்களவர்களும் தமிழரும் வந்து விட்டிருக் கிறதை அவள் நேரில் பார்த்திருக்கிறாள். எத்தகைய மாறுதல்? இப்படி ஒரு நிலை வரும் என்று யார் நினைத் திருப்பார்கள்? 

நகர்ப்புறக் கல்லூரிகளில் படித்துவிட்டு மேசோடும் சப்பாத்தும் அணிந்து வேலைபார்க்க ஆரம்பித்திருக்கும் சுப்பர் வைசர்களை அவள் நாளாந்தம் பார்த்திருக்கிறாள்? அவர்களில் பலரும் தோட்டச் சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தாமே! 

தொழிற்சாலையிலும் ஆபீஸிலும் உத்தியோகம் வகிப்ப வர்களில் வாழ்க்கையின் அடிமட்டத்தில் நசுக்குண்டு கிடந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லாமலா போய் விட்டார்கள்? 

அவளுக்கு ஏன் இந்த நினைப்பெல்லாம்? தன் மகளை யும் அப்படி ஒரு நிலைக்கு உயர்த்திவிட வேண்டும் என்று கனவு காணுகிறாளா? ஒரு தாய் காணக்கூடிய கனவுதானது. ஆனால், அது நிறைவேறி விடுகிற சாத்தியமிருக்கிறதா? அவளது கணவன் குடிப்பழக்கத்தை நிறுத்தாத வரைக்கும்? 

அவன் எங்கே நிறுத்தப் போகிறான்? 

அவன் நிறுத்தவில்லை என்பதற்காக அவள் தன் ஆசையை மறந்து விடப்போகிறாளா? 

அவள்தான் ஏன் தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்? அவள் மகன் படித்து உத்தியோகமா செய்யப் போகிறான்? 

“போடி பயித்தியமே புதுசா என்னென்னமோ சொல் றியே, உன் மகன் படிச்சி உத்தியோகமா செய்யப் போகி றான்? அதுக்கெல்லாம் பொறந்து வரணுமுடி” என்று அவன் அடித்துச் சொல்லிவிட்டான். 

“கத்தியும், மண்வெட்டியும், முள்ளும் கடப்பாரையும் அவர்களை நம்பியே தயாரிக்கப்படுகின்றனவாம். அவர் களின் கைகளிலிருக்கும் போதுதான் அவை மதிக்கப்படுகின்றனவாம்” தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் அந்தப் பழக்கத்தை மாற்ற நினைப்பது பைத்தியக்காரத்தனமல்லவா? 

“உன் புத்தி உன்னை விட்டு எங்கே போகும்? என் புள்ளை படிச்சாகணும்” அவள் பிடிவாதம் செய்தாள். 

அவர்கள் குடும்ப வாழ்வில் புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. பொழுதோட வருமிரவு புகைச்சலையும் அழைத்து வரும். 

அப்படி ஒரு நிலைக்கா அவள் ஆசைப்பட்டாள்? அவள் நினைத்தது நடக்குமென்றால் அந்த நிலையையும் ஏற்று வாழ் அவள் தயாராக இருந்தாள். ஆனால் அவள் விரும்பி யது நடைபெறுமென்று தோன்றவில்லை. அதனால் அவ ளுக்கும் அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. 

அவளது ஆசையை ஆரம்பத்தில் பரிகசித்தவர்கள் அவ ளது தற்போதைய செயலைக் கண்டதும் பழிக்கவே ஆரம் பித்து விட்டனர். “ஓடுகாலி குடும்ப பொண்ணா அவ” சமூகம் முழுக்க அவளைப் பழிக்க ஆரம்பித்தது. 

அவள் தாய் அவளை ஏசினாள். அவளது தந்தை அவ ளைக் கண்டித்தார். அவளது ஆசை நியாயமானதுதான், அதற்காக அப்படியா நடந்து கொள்வது? அவளது நடத்தை தமிழ்ப் பெண் ஒருத்திக்கு பெருமை தரக் கூடியதுதானா? 

யாருடைய ஏச்சையும் அவள் லட்சியம் செய்யவில்லை. யாருடைய பேச்சும் இனி அவளைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. 

அவள் தீர்க்கமாக முடிவு செய்துவிட்டாள். அவள் மகன் படித்தே ஆகவேண்டும் அதற்காக வாழ்க்கையில் எந்த துன் பத்தையும் ஏற்கத் தயாராகிவிட்டாள். 

இனி எந்தத் துன்பம் ஏற்பட்டு என்ன செய்ய? தன் மகனின் கல்விக்கு குறுக்கே நிற்கிற கணவனையே வேண்டா மென்று ஒதுக்கி வைத்துவிட்ட அவளுக்கு இனி எந்த சுமையைத்தானேற்று கொள்ள முடியாது? 

நடைபெற முடியாத ஆசைகளுக்காக அவள் தன் வாழ்க்கையையே அழித்துக் கொண்டாள் என்று சொல்வதில் இந்த உலகம் திருப்திப்படத் தொடங்கியது. 

அவளுக்கும் திருப்திதான். புதிய வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டதில். 

– 1967

– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *