திருந்திய உள்ளங்கள்
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 383
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அக்ரம் மௌலவியின் புத்தம் புதிய வீடு அது. அள வான முன் ஹோல். அழகாகவும் புனிதமாகவும் காட்சி தந்தது. மேற்குப் புறச் சுவரிலே கஃபத்துல்லாவின் படம் பொறிக்கப்பட்ட ஒரு சீலை பொருத்தப்பட்டிருந்தது. கிழக் குப்பக்கச் சுவரில் பெரிய அளவிலான மாதக் கலண்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதன் முன்னே விரிந்து கிடந்த தாளின் மேற்பகுதியில் மதீனாவிலுள்ள மசூதி யொன்று காட்சியளித்தது. கீழே. தரையின் தென் மேற்குப் புறச் சுவர் மூலையிலே ஒரு கிண்ணத்திலிருந்து ஊது பத்திகள் எரிந்து எங்கும் நறு மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.
இவ்வாறான இதமான ஒரு சூழலைக் கொண்ட அந்த ஹோலின் மத்தியிலே இடப்பட்டிருந்த ஆசனங்களில் அக்ரம் மௌலவியும் நான்கு இளைஞர்களும் உட்கார்ந்திருந்தனர்.
“எங்கிருந்து வாறிங்க?” மௌலவி அக்ரமே பேச்சை ஆரம்பித்தார்.
ஒரு வெடத்தையுமில்ல… இஞ்சதான் வந்த.’ வந்திருந்தவர்களிலே வாயாடியான ஓர் இளைஞன் பதில் ளித்தான்.
“என்ன விஷேசம்?” இது மெளலவி அக்ரம்.
“நோன்புக்கு இன்னம் அஞ்சாறு நாளிருக்கி. இந்த முற நீங்கதான் நோன்புக்கு ஹதீஸ் சொல்லணும். போன முற ஹதீஸ் சொன்ன ஹரீஸ் மௌலவி இஞ்சரிந்த அவர்ர வீடு வளவ வித்துப்போட்டு அடுத்த ஊருக்குப் போய் அங்க வீடு வளவு வாங்கி தன்ட பெண்சாதி பிள்ளைகளோட குடியிருக்கார். அவருக்கு இஞ்ச வந்து ஹதீஸ் சொல்றத் துக்கு இனி வசதிகள் இல்ல. அதுமட்டு மில்ல. நீங்க மிகவும் திறமையான ஒரு மௌலவி எண்டு பலரும் சொல்றாங்க. இந்த முற உங்களக் கொண்டுதான் ஹதீஸ் சொல்லுலிக் கணும் எண்டும் எங்களுக்கு விருப்பமாரிக்கி. அதுதான் நாங்க உங்களுக்கிட்ட வந்த.’ அந்த இளைஞனே, அனை வரின் சார்பிலும் தமது கருத்தை வெளிப்படுத்தினான்.
“ஆ…அப்படியா… சரி… பாப்பமே.”
“போன வருசம் நோம்புக்க நம்மிட இந்தக் குறிச் சிக்க சுபைதீன்ட வளவுக்கதான் பொத்துவிலுக்குப் போயி ருக்கிற ஹரீஸ் மௌலவி ஹதீஸ் சொன்ன. அவருக்கு நல்லாக் காசு, சாமான்லாம் சேந்திச்சு. காசு மட்டும் ஆறாயிரம் ரூபா, ஆறு ஏழு மூடை அரிசி. ஏழெட்டுச்சாறி, சாறனும் எட்டொம்பது, லோங்ஸ் சீலையும் ஒரு ஆறுக் கிட்ட இருக்கும், சட்டச் சீலையும் ஒன்பது பத்துக்கிட்ட இருக்கும். அங்கு ஏற்பட்ட செலவச் சமாளிக்கிறத்துக்கு காசில இரண்டாயிரத்த மட்டும் எடுத்துக்கிட்டு, மீதிக் காசையும், மற்ற எல்லாச் சாமாங்களையும் அவருக்கிட் டயே கொடுத்திட்டம். போன வருசம் நம்மிட ஊரில் மத்தக் குறிச்சிகள்ளயெல்லாம் ஹதீஸ் சொன்ன மௌலவிமார் களுக்கு நம்மிட் குறிச்சியில ஹதீஸ் சொன்ன அந்த மௌலவிக்குக் கிடைச்சது போல கிடைச்சிருக்கா,
என்டாலும் அவங்களுக்கும் நல்ல நியாயமாக் கிடைச் சிருக்கும். உங்களப் பொறுத்தவரை கூடுதலாத்தான் சேரும். ஏனென்டா, உங்களப்பத்தி இங்க ஒரு நல்ல அபிப்பிரா யமும் நிலவுது. பாப்பம் கீப்பம் எண்டு சொல்லாம வாங்க. உங்களத்தான் நாங்க எதிர் பார்த்துக்கிட்டிருக்கம்.” வாயாடி இளைஞன், அக்ரமை ஊன்றி அவதானித்தான். ஏனைய மூன்று இளைஞர்களின் வதனங்களும் அப்பேச்சிற்கு ஆதரவு தெரிவித்தன.
“ஹதீஸ் சொல்றத்தப்பத்தி ஒண்டு மில்ல, பணம் பொருட்களுக்காக ஹதீஸை விக்கிறத்துக்கு எனக்கு விருப்ப மில்ல. எனக்குப் புத்தி தெரிந்த காலம் முதல் இன்று வரை கவனித்துக் கொண்டுதான் வாறன். நம்மிட ஊரில் மட்டு மில்ல, இந்தப் பகுதிகள்ள அதிகமான இடங்கள்ள நோன்பு காலங்கள்ள ஹதீஸ் சொல்வது வியாபாரம்போல மாறிக் கொண்டு வருகிது. பகிரங்கமாக அது தெரியாவிட்டாலும் உள்ளூர நிலைமை அதுதான்.
நம் முன்னோர் தங்கள் உடைமை, உயிர் அனைத் தையுமே இஸ்லாத்திற்காகத் தியாகம் செய்திருக்காங்க. அதன் காரணமாகத்தான் இஸ்லாம் இண்டைக்கு உலக ளாவிய ஒரு மதமாக வளர்ந்து காணப்படுகிறது. அந்தப் பரம்பரையிலே வந்த நாம் இப்படி நடந்து கொள்வது மிகவும் அவமானம். அது மட்டுமல்ல, நமது சமூகத்தில இவ்வாறானவர்கள் பெருகிக்கொண்டு போனால் அது இஸ்லாத்துக்கே பாதகமாகவும் அமைந்துவிடும். ஆகையி னால், நீங்க விரும்பினா நான் இந்த முற நோன்புக்க முன் மாதிரிக்காக ஒரு, ஹதீஸ் மஜ்லிஸையே நடத்திக்காட்றன்.” மெளலவி அக்ரமின் வதனம் சற்றுச் சிவந்து போயிற்று.
“சரி…அப்படியே செய்ங்க, ஆனா, நீங்க அத எப்படிச் செய்யப் போறீங்க என்கிறத எங்களுக்கிட்டயும் சொன்னா அதற்கேற்ற வகையில் நாங்களும் சில ஒழுங்கு களைச் செய்து கொள்ளலாம்.” அந்த இளைஞனே இப்போதும் முன்னே குதித்தான்.
”சரி … சொல்றன் … நானும் இன்னும் ரெண்டு மௌலவிமாரும் சேர்ந்து ஹதீஸ் சொல்றம். மாதம் முழுக்க தனி ஒருவர் சொல்றது மிகவும் சிரமமான ஒரு வேல. நல்லாத் தொண்டையும் கம்மி, கடைசியில் அவர் பேசவும் ஏலாமற் போகும். இப்படியான பலரை நாம்பார்த்திருக்கிறம். இத நாம நல்லா அறிஞ்சிருந்தும் இப்படிச் சிரமத்துக்குள்ள போய் மாட்டிக் கொள்வது, தேவல்லாத வேல. அதனாலதான் நான் இப்படி யோசிச்ச. என்னோட ஹதீஸ் சொல்ற அந்த ரெண்டு மெளலவிமாரையும் நானே ஒழுங்கு செய்துகொண்டு ஹதீஸ் சொல்வதற்கான ஏற்பாடு களையும் நானே செய்து கொள்றன். ஆனா, ஒரு முக்கிய மான விஷயம்….எங்களுக்கிட்ட ஹதீஸ் கேட்க வாற் சனங்களுக்கிட்ட எங்களுக்காக காசோ அல்லது பொருட் களோ கொண்டுவர வேண்டாமென்றும், அதில் எதையுமே நாங்க எடுக்கமாட்டோ மென்றும் கட்டாயப்படுத்திச் சொல்லுங்க. அதையும் பொருட்படுத்தாம யாராவது சந்தோஷம், காணிக்கை என்று ஏதாவது கொண்டு வந்தா அத பொது வேலைக்காக நம்மிட பள்ளிவாசலுக்குக் கொடுப்பம். இத நீங்க நினப்பில வச்சிக்கொண்டு ஒழுங்கு களச் செய்ங்க. முக்கியமாக ஹதீஸ் மஜ்லிஸ் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கும், அதனை ஒழுங்காக நடத்து வதற்கும் உங்களுக்கு ஏற்படுகின்ற செலவைச் சமாளிக்க, நம்மிட ஊரிலரிக்கிற கொடுக்கக்கூடிய வசதி படைச்ச சில ருக்கிட்டப்போய், விஷயங்களச் சொல்லி, தேவையான அள வுக்கு காச அறவிட்டுக் கொள்ளுங்க. தலப்பிற காண்ற அண்டு இரவைக்கு நேரத்தோட ஒலி பெருக்கி மூலம் சகல விபரங்களையும் ஊறிய ஒலி பெருக்குங்கள், சரிதானே…”
“ஓம்…சரிதான்,” வாயாடி இளைஞனோடு சேர்ந்து ஏனையோரும் தமது சம்மதத்தை முன்வைத்தனர்.
அடுத்த தினம்.
அக்ரம் மெளலவியின் அதே வீடு. முன் ஹோலில் மளலவிகளான சக்கூர், சனூஸ், காதர் ஆகியவர்களோடு அக்ரமும் அமர்ந்திருந்தார்.
“உங்கள ஹதீஸ் சொல்றத்துக்கு ஒழுங்கு பண்ணின பிள்ளைகள் மூலம் நாங்கள் எல்லா விஷயத்தையும் கேள் விப்பட்டம்.’ சக்கூர் மௌலவி அனைவர் சார்பிலும் அக்ரமைப் பார்த்தவாறு பேசினார்.
அப்படியா” குறுஞ்சிரிப்பு ஒன்றையும் உதிர்த்து விட்டுக் கொண்டார் மௌலவி அக்ரம்.
“பல வருடங்களாக நாங்களும் இந்த ஊரில் ஹதீஸ் சொல்லிக் கொண்டுதான் வாறம், நாங்களோ அல்லது மத்த மௌலவிமார்களோ ஹதீஸ் கேட்க வாறவங்களுக் திட்ட காசோ, மற்றும் பொருட்களோ கொண்டுவரச் சொல்லிச் சொன்னதே இல்ல. அவங்கதான் எங்க மேலுள்ள முஹப்பத்தில் காசு. சாமான்கள்ளாம் கொண்டு வரு வாங்க. அதத்தான் நாங்க வாங்குவம். இத எப்படி வியா பாரம் எண்டு சொல்ற?” சக்கூர் சதைப்பிடிப்பான தனது கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டார்.
“ஹதீஸ் கேட்க வாறவங்க காச, அல்லது பொருள்களக் கொண்டுவந்தவுடன் அத நாம் பேசாம வாங்கி அப்படியே வச்சிக்கிறம். அதனால் அவங்க நாம ஹதீஸ் சொல்றத்துக்குப் பிரதிபலனாக பணம், பொருள்கள விரும் பிறம் எண்டு எண்ணி, ஹதீஸ சும்மா கேக்கிறது சரியில்ல எண்டு ஏதாவது கொண்டுவந்து தாறாங்க. இத நாம் நல்லா யோசிச்சிப்பார்த்தா. அங்க வியாபார நிலம மறை முகமாச் செயல் பாரத்த எம்மால உணர்ந்து கொள்ளக் கூடியதாரிக்கி”
“….” சக்கூர் மெளலவி மெளனமானார். அவரோடு வந்திருந்த மற்றைய மௌலவிகளும் அதில் இணைந்து கொண்டனர்.
இப்போது அக்ரம் மெளலவி இவ்வாறு இயம்புகிறார்.
“ஹதீஸ் கேட்கவாற சனங்கள் எம்மை வாய்விட்டுக் கேட்டுக் கொண்டாலும் சரி, கேட்கா விட்டாலும் சரி ஹதீஸ் சொல்ற நாங்க அதன் பெயரால் பணமோ, பொருளோ எதுவுமே வாங்காம விடுவம். இது நாம் தொடங்கின ஒரு பழக்கமுமில்ல. நம்மிட ஊரில் நமக்கு முன்ன இருந்த வங்க செய்துவந்த பழக்கத்தத்தான் இன்று நாமும் செய்து கொண்டு வாறம். இன்று பார்த்தா இஞ்ச பல இடங் கள்ள நோன்பு காலங்கள்ள ஹதீஸ் சொல்றது ஒரு வியா பாரம் போலவே தோன்றத் தொடங்கியிருக்கு. ‘அந்தக் குறிச்சியில் ஹதீஸ் சொல்லப்போனா மிச்சம் குறையத்தான் காசு,சாமான் சேரும். ஆனா, இந்தக் குறிச்சியில் ஹதீஸ் சொல்லப் போனா நல்லாக் காசு, சாமான் கூடும். இஞ்ச கூப்பிடுவாங்கண்டா போகலாம். என்று ஹதீஸ் சொல்ல முனைகின்றவர் எண்ணுகின்ற அளவுக்கு நிலம் மோச மாகிக்கொண்டு வருகிறது. பிற்காலத்தில நம்மிட ஊரைப் பொறுத்த வரையில் மட்டுமல்ல நம்மிட இந்தப் பகுதியைப் பொறுத்த வரையிலயும் நோன்பு காலங்கள்ள ஹதீஸ் சொல்வது பகிரங்கமான ஒரு வியாபாரமாய் நன்கு முற்றிக் கொண்டு வந்துவிடவும் கூடும். ஆகையினால், இஸ்லாத்தின் நன்மைக்காக இப்போதே இந்த நடைமுறையைத் தடுத்து நிறுத்துவம்’ என்று விட்டு நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டுக் கொண்டார் மெளலவி அக்ரம்.
மேலும் அவரே தொடர்ந்தார்.
“மௌலவிமார்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி யாக நடக்கவேண்டியவர்கள். இந்த விடயத்திலும் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொதுவாக நான் சொல்றன், நாம் எல்லா விடயங்களையும் வருவாயைப் பார்த்துக் கொண்டு போகக்கூடாது. சில விடயங்கள்ள தியாகங்கள் கூட செய்ய முன்வர வேண்டும்.
தோழர்களே, நமது விடயத்தைப்பற்றி கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்க” என்றவர் வலைத் தொப்பி யைக் கழற்றி தலை மயிரை மேலே ஒதுக்கிவிட்டு மீண்டும் அதனை அணிந்து கொண்டார். முதுகை ஆசனத்திலே பொருத்தி வசதியாகவும் அமர்ந்து கொண்டார்.
“ம்…சரி.. பாப்பமே, நாங்க இஞ்ச வந்து மிச்சம் நேரமாகவும் போச்சி. நாங்க போயிட்டு வாறம். பொறவு சந்திப்பம்” என்றுவிட்டு மெளலவி சக்கூர் தனது இருக்கை யிலிருந்து எழுந்தார். கூடவந்த நண்பர்களும், காந்தத்தில் ஒட்டிய இரும்புத் துண்டுகள்போல் அவருடன் இணைந்து கொண்டனர்.
மூன்றாவது நாள்.
சக்கூர், சனூஸ், காதர் ஆகிய மூன்று மௌலவி களும், மீண்டும் மௌலவி அக்ரமின் வீட்டிற்கு பிரசன்ன மாயிருந்தனர்.
அங்கே, முன்ஹோலில் அக்ரமோடு அவர்களும் சாவதானமாக அமர்ந்து கொண்டதும், அவ்விருசாராருக்கு மிடையே பேச்சு வார்த்தைகள் முளைவிட்டு வளரத் தொடங்கின.
“என்ன யோசிச்சிங்களா… இப்ப என்ன சொல்றிங்க” என்றார் மெளலவி அக்ரம்.
“நீங்க விஷயங்கள நல்ல விளக்கமாச் சொன்னதால நாங்களும் சிந்தித்துப்பாத்தம், நீங்க சொன்னதெல்லாம் சரியாத்தான் தெரியிது. முன்பு நாங்க சும்மா மேலோட்ட மாப் பாத்ததால அது அவ்வளவு பெரிசாத் தெரியெல்ல. ஆழமா யோசிச்சுப் பார்க்கக்கதான் நாங்க பின்பற்றி வந்துள்ள முறையிலுள்ள பாரதூரம் விளங்கிது. நீங்க. எங்கள விட வயதில குறைஞ்சவராக விருந்தாலும் எங்களத் திருத்தி விட்டீங்க. அல்ஹம்துலில்லாஹ்! இனி நாங்களும் உங்களப் போலவே ஹதீஸ் சொல்லப் போறம். அது மட்டு மில்ல, அந்த விடயத்தில உங்கட நடைமுறை எல்லாத் தையும் பின்பற்றப்போறம். எங்களைத் திருத்திவிட்ட உங்களுக்கு எங்கட மனப்பூர்வமான நன்றிகள்.” அனைவரின் சார்பிலும் மௌலவி சக்கூர். இவ்வாறு கூறிவிட்டு நரைத்த தனது சிறிய தாடியை வருடிவிட்டுக் கொண்டார்.
“ஆ…ஆ… மிகவும் சந்தோஷம்” இது மௌலவி அக்ரம்.
எல்லோர் வதனங்களிலும் புளகாங்கிதம் கடலாய் பொங்கிக் கொண்டிருந்தது.
– தினகரன் 1990 ஏப்ரல் 07.
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.