திருந்தாத ஜென்மங்கள்!





“டேய்!….குமாரு….இன்னைக்கு நீ எப்படியும் வருவேனு எனக்குத் தெரியும்……அதனல் தான் காத்திட்டிருந்தேன் சரி வா போகலாம்!”
“இனிமே நானும் தினசரி வந்திடுவேன்!…”
“முன்பெல்லாம் வாரத்திற்கு ரெண்டு நா மூன்று நா தானே வருவே?..”
“அந்த மூதேவி காத்தாலே ஒரு நாலு இட்லி போடுவதற்குள்ளே…ஒரே பஞ்சப் பாட்டாப் பாடும்!…இப்ப அதனாலே நான் வீட்டிலே சாப்பிடறது இல்லே!….பக்கத்திலேயே அஞ்சு இட்லி அஞ்சு ரூபாய்க்கு கிடைக்குது…சாப்பிட்டுப் போட்டு வேலைக்குப் போயிடுவேன்…சரியா சாப்பாட்டு நேரத்திற்கு அங்கேயே போயிடுவேன்…மத்துயானம் இரண்டு சாப்பாடு பதிமூணு ரூபா தான்!…ஒரு புடிச்சிடிச்சிட்டு வேலைக்குப் போயிடுவேன்…..இப்ப தினசரி சம்பளம் எழு நூறு ரூபா…மீதியெல்லாம் மிச்சம் தானே?..”
“வீட்டுக்கு எதுவுமே கொடுக்க மாட்டாயா?…”
“எப்பவாவது கொடுப்பேன்!…அது நாலு வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சு சமாளிச்சுக்கும்!… அதை விட்டுத் தள்ளு…முன்பெல்லாம் வாரத்திற்கு ரெண்டு மூணு நாள் தான் ‘ஆப்’ அடிக்க முடியும்….இனி தினசரி நாம தண்ணி அடிக்கலாம்…”
டாஸ்மாக் கடைக்குப் போகும் வழியில் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே பின்னால் வந்த ஒருவர் “நாய் வாலை தட்டி வச்சுக் கட்டினால் கூட நிமிர்த்த முடியாது!” என்று தலையில் அடித்துக் கொண்டே போனார்!
இப்படி திருந்தாத ஜென்மங்களுக்குத் தான் வசதிகள் நிறைய கிடைக்குது!
– பாக்யா 2015 இதழில்