திரு(ட்டு) விளையாடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 43 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை மணி நாலரை. ‘கண் – கண கண…கணா’.

பள்ளிக்கூடத்து வாசலில் ஒரே கும்பல்.  சந்தை இரைச்சல்போல ஆரவாரம். கும்பலின் நடுவில் சோமு, தன் கூட்டாளி ராமுவுடன் குதூகலமாய்ப் பேசிக்கொண்டு வருகிறான். சோமுவுக்கு வயது எட்டு. ராமுவுக்கு ஒன்று கூடவிருக்கலாம். கோபத்துடன் ஆட்டப்படும் குழந்தையின் தொட்டிலைப்போல சோமுவின் கையிலுள்ள புஸ்தகப்பை அங்குமிங்கும் போய் காற்றில் மோதி வீசுகிறது. ராமுவின் குடையும் அதே கஷ்டத்தை அனுபவிக்கிறது. அவர்கள் தங்கள் வகுப்பில் ஆரம்பிக்கப்பட்ட சம்பாஷணையைத் தொடர்ந்தார்கள். 

விதை போட்ட படலம் 

“அது தாண்டா சரியான வழி” என்றான் ராமு. சோமு விழித்தான். “சீச்சீ. எங்கப்பா பார்த்துவிட்டா அடிப்பாருடா” என்றான். 

“போடா, போ. தெரிஞ்சாத்தானே அடிப் பாரு! எடுக்கிறது ஒருத்தருக்குமே தெரியக் கூடாது. உங்கப்பா தினம் எண்ணி எண்ணியா பாக்கராரு? இல்லைன்னா பந்து எப்படிடா வாங்க முடியும்? நீதானே பந்து வாங்கணும்னு சொல்றே.” 

“எங்கப்பா. வீட்டிலே வச்ச ரூவாயெக் கணக்கே பாக்கிறதில்லைத்தான்.ரூவா கொறஞ் சிருந்தாலும் அம்மா எடுத்துச் செலவழிச்சிருப் பான்னு தான் நெனச்சுருப்பாரு. இருந்தாலும் ருவாயெ எடுத்துகிட்டு இருக்கையிலே மாமா கீமா திடீர்னு வந்துட்டா என்ன செய்கிறது அதுக்குத்தான் பயப்படறேன்” 

“பகல்லே தாண்டா யாரும் வருவாங்க. நடு ராத்திரிலே எந்திரிச்சு, அலமாரியெ மெதுவாத் திற. ஒரு ரெண்டு ரூவா மட்டும் எடுத்துக்கோ. மணிபாக்ஸை இருந்தபடியே வச்சிட்டு வந்து படுத்துக்கோ. அவ்வளவுதான். என்ன? நான் சொல்றது நல்ல யோசனைதானே? அப்படியே செஞ்சுபோடு. காலம்பரக் கடையிலே போய் பந்தும் காத்தடிக்கிற பம்பும் வாங்கிட்டு வந்துட லாம். எங்க வீட்டிலே அந்தமாதிரி பணம் இருந்தா நான் இப்படியா பயப்படுவேன்?” 

சோமு யோசனை பண்ணினான். அவனு டைய குழந்தை முகத்தின் சோபை மாறிற்று. பிறகு ” அப்படின்னா ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும் முழுச்சுகிட்டே இருக்கணும் போலிருக்கே! எனக்குத்தான் எட்டு மணிக்கே தூக்கம் வந்துடுமே, என்ன செய்கிறது?” என்றான். 

“அடேயப்பாடி! இன்னக்கி ஒரு நாளும் கொஞ்சம் தூங்காமே இருக்க முடியாதாடா? பந்து வாங்கணுமா வேண்டாமா?” என்று கடைசிப் பாணத்தைப் போட்டான் ராமு. பாணமும் பாய்ந்து விட்டது. 

“சரி, சரி, எப்படியாவது எடுத்துக்கிட்டு வந்திடறேன். நாளைக்கிக் கட்டாயமா மாந் தோப்புலே பந்து விளையாடணும். தெரியுமா!” என்றான் சோமு. ராமுவுக்கு சந்தோஷம். 

இதற்குள் இருவரும் வீட்டையடைந்து விட்டார்கள். சோமு தன் நண்பனைப் பிரிந்து வீட்டுக்குப் போனான். 

வேரூன்றின படலம் 

சோமு அன்று சாயங்காலம் பூராவும் வெளி யிலேயே போகவில்லை. மறுநாள், தான் விளை யாடப்போகும் பந்தாட்டத்தைப்பற்றி யோசித் துக்கொண்டிருந்தான். தன்னுடைய மகன் ஒரு மாதிரியாயிருப்பதைக்கண்ட சோமுவின் தாயார் “ஏண்டா சோமு, ஏன் இப்படியிருக்கிறாய்? வாத்தியார் அடித்தாரா? ஒருவர் கூடவும் பேசா மல் ‘உம்’ மென் றிருக்கிறாயே?! தினமும் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தவுடன் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருப்பாயே!” என்று கேட்டாள். 

“சார் என்னை ஏம்மா அடிக்கப்போறாரு? நான் என்ன, துஷ்டப் புள்ளையாம்மா?” என் றான் சோமு. அவனுக்கு என்னவோ போலிருந்தது. 

“சரி. சமையலறையில் காப்பிவைத்திருக் கிறேன். ஆறிப்போறதுக்கு முன்னாலே போய்க் குடி” என்று சொல்லி விட்டுத் தாயார் வெளியே போனாள். 

மந்திராலோசனைப் படலம் 

சோமு சமையலறைக்குள் சென்றான். டம்ளரிலிருந்த காப்பியில் பாதியைக் குடித்தான். மீதியை அப்படியே வைத்து விட்டுத் திண்ணை யில் வந்து உட்கார்ந்தான். அவனுடைய இளமுகம் சுருங்கிற்று. அவனுடைய சின்ன நெஞ்சிலே என்னென்னவோ யோசனை யெல் லாம் ஓடிற்று. அப்போது அவனுடைய இரண்டு வயது தம்பி அவன் மடிமீது ஏற முயற்சி செய்தான். சோமு அவனை ஒரு அடி கொடுத்துக் கீழே இறக்கிவிட்டான். அடி லேசானதுதான். ஆனால் அது வெறுப்புடன் கூடியது. இதற்கு முன் சோமு இதைவிடப் பலமாக ஸ்வாதீனமாக அடித்ததுண்டு. அதெற்கெல்லாம் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை இந்த அடி பொறுக்க முடியாமல் வீறிட்டழுதுகொண்டு உள்ளே போய் விட்டது. அது தன் தாயை கண்டதும் ஓயாமல் கத்த ஆரம்பித்தது. அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தாயார் சோமுவிடம் கொண்டு போய் விட்டாள். ஆனால் அது அவனிடம் போகப் பயந்தது. 

வீட்டில் விளக்கேற்றியாய் விட்டது. இன்ன மும் சோமு திண்ணையை விட்டு எழுந்திருக்க வில்லை.”அடே சோமு, விளக்கேற்றியது தெரிய வில்லையா? பாடம் கீடம் படிக்க வேண்டாமா? ஏன் இப்படி அசமந்தமா, பிடித்து வைத்த பிள்ளையாரைப்போல உட்கார்ந்தே இருக்கிறாய்? போய்ப் படிடா” என்று அவன் தாய் சற்றுக் கடுமையான குரலில் சொன்னாள். 

சோமு வேண்டா வெறுப்புடன் புஸ்தகத்தை எடுத்தான். ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்பிக்கொண்டு தீபத்தின் முன் அமர்ந்தான். எழுத்துக்கள் அவனுக்குப் புதிதாகத் தோன்றின புஸ்தகமோ சர்ப்பம்போல அவனுக்குக் காட்சி யளித்தது. அவன் வாய் மாத்திரம் “ராமா இஸ் ஏ பாய்,எ பாய் வாஸ் ராமா” என்ற வாக்கியங் களைத் திருப்பித் திருப்பிப் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தது. அவன் கையில் பிடித்திருந்தது பூகோள சாஸ்திரம். அதற்கும் அவன் சொல்லிய வார்த்தைகளுக்கும் சம்பந்தமே கிடையாது. எப்படி ரூபாயை எடுக்கலாமென்று ‘பிளான்’ போட்டுக் கொண்டிருந்த அவன் மனது புஸ்த கத்தில் எப்படிப் பதியும்? 

நிகழ்ச்சிப்படலம் 

சோமுவின் தாயார் தன் மகனுக்கு உடம்பு சரியாயில்லை என்று நினைத்தவளாய் “சோமு, தூக்கம் வந்தால் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் போய்ப் படுத்துக்கொள்” என்றாள். 

சோமு புஸ்தகங்களைக் கட்டி வைத்தான். “ அம்மா, எனக்கு இன்னிக்குப் பசியேயில்லை. சாதம் வேண்டாம். போய் படுத்துக்கொள்ளுகிறேன்.” என்று சொல்லி விட்டு மாடிக்குப் போய்விட்டான். ரூபாயிருந்த அலமாரியினடி யிலேயே படுக்கையை விரித்துப்படுத்துக்கொண்டான். அவனுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. மாந்தோப்பு, பந்து,ரூபாய் ஆகியவைகள் அவன் மனக்கண்முன் கலந்து கலந்து வந்து தோன்றின. நேரமாக ஆக அவனுக்குப் பயம் அதிகரித்தது. வீட்டிலிருந்த கடிகாரத்தில் ‘கணார் கணார்’ என்று மணி பன்னிரண்டடித்தது. அந்த மணிச் சத்தம் சோமுவுக்குப் பயங்கரத்தை யுண்டு பண்ணிற்று. மேலும் மாடியினுள் எங்கும் ஒரே இருட்டு. இதற்கெல்லாம் பயந்தால் பந்து வாங்க முடியுமா? அவன் மனது தைரியமடைந்தது. வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்களென் யதைக் குறட்டைகளின் பல ஸ்வரக் குரல்களும், எலிகளின் திருவிளையாடல் சத்தங்களும் அறிவித்தன. வீட்டில் அலமாரியைப் பூட்டுவதே கிடையாது. சும்மா தான் சாத்தப்பட்டிருக்கும். சோமுவின் அதிர்ஷ்டவசமாக அந்த அலமாரி, திறக்கும் போதும்,மூடும்போதும் ‘கீச்’ சென்று சத்தம் செய்வதில்லை. 

மெதுவாகப் படுக்கையை விட்டெழுந்தான் சோமு. பதட்டத்துடன் அலமாரியைத் திறந்தது அவன் கை. மணிபர்ஸை எடுத்தான். அது கனமாகவிருந்தது. கீழே போட்டுவிட்டான். திரும்பவும் அதை எடுக்க முயன்றான். பழைய படியும் அவன் கையினின்றும் நழுவி விழுந்தது. கீழே உட்கார்ந்துகொண்டான். நடுங்கிக் கொண்டிருந்த அவனது சிறிய கைகள் அந்தப் பழைய மணிபர்ஸின் பொத்தானைத் திறக்கச் சக்தியற்றவை யாகிவிட்டன. 

கடைசியில் எப்படியோ பர்ஸைத் திறந்துவிட்டான். பாம்புப் புற்றுக்குள் கைவிடுவது போல அதனுள் தன் வலதுகையை நுழைத்தான். அவனுடைய நெஞ்சு ‘பட பட வென்று அடித்துக்கொண்டது. கையைப் பர்ஸி னின்றும் எடுத்துவிட முயன்றான். முடியவில்லை. அந்தச் சமயத்தில் யாரோ மாடிப்படிகளில் ஏறுவதுபோல் தோன்றிற்று.உடனே திக் பிரமையடைந்தவன்போல உருவாகச் சமைந்து நின்றுவிட்டான். பின்பு கொஞ்சம் தெளிந்து கையை விட்டான். கடைசியில் பர்ஸிலிருந்து மூன்று ரூபாயும் கொஞ்சம் சில்லரையும் எடுத்துக்கொண்டான். பணம் அவன் மடியில் பத்திரமாக முடிந்து வைக்கப்பட்டது. பர்ஸை முன்னிருந்தபடியே வைத்துவிட்டான். ஓசையில் லாமல் அலமாரியும் மறுபடி மூடப்பட்டது. 

சோமு ரூபாயுடன் படுக்கையில் போய்ப் படுத்தான். இப்போதும் தூக்கம் வரவில்லை. தான் எடுத்தது தெரிந்துவிடுமோவென்று பயம். நெஞ்சு அடித்துக்கொண்டது. அநேக தடவை அலமாரியை நோக்கிச் சென்றான். ரூபாயைப் பழையபடி பர்ஸில் போட்டுவிடலாமா என்று தோன்றிற்று. ஆனாலும் அதற்கும் தைரியமில்லை. நல்ல காலமாக பணம் எடுக்கும்போதுதான் யாரும் பார்க்கவில்லை. திரும்பக் கொண்டு வைக் கும்போது யாராவது பார்த்துவிட்டால்!வேதனை பொறுக்காமல் எழுந்து உட்கார்ந்துகொண்டான். பணத்தை ஒருதடவை தொட்டுப்பார்த்தான். திரும்பிவந்து படுத்துக்கொண்டான். 

அவனை ரொம்ப அலட்ட விரும்பாதது போல் இரவும் கழிந்தது. 

மறுநாட்காலை சோமு வழக்கத்திற்குமாறாக எல்லோருக்கும் முன்னதாக எழுந்துவிட்டான். அப்போது அவனைப் பார்த்த அவன் தாயார் “என்ன! முகமெல்லாம் ஏன் இப்படிக் கனத் திருக்கிறது? நீ இன்று பள்ளிக்கூடம் போக வேண்டாம். வீட்டிலேயே இரு” என்றாள். 

ஆனால் சோமு அவசரமாக “எனக்கு ஒண்ணுமில்லையம்மா. ராத்திரி கொசுக்கடி. தூக்கமேவரலே. அதுதான் இப்படி இருக்கேன். சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போகணும்” என்றான். 

அந்தச் சமயத்தில் அவன் தந்தை வீட்டிற் குள் வந்தார். அவர் சோமுவை ஓர் முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “வெளியிலே அலைந்தாயா? இங்கே வா. மேல் காய்கிறதாவென்று பார்க்கட்டும்” என்று அவனைத்தன் பக்கத்தில் அழைத்தார். 

வாத்தியாரின் அருகே செல்லும், பாடம் தெரியாத மாணாக்கனைப்போல சோமு தன் தந் தையின் பக்கம் போனான். அவன் உடம்பு சுட வில்லை.ஆனால் முகத்தைப் பார்த்தார். “உனக்கு என்னப்பா உடம்புக்கு”? என்று அன்போடு கேட்டார். “ஒண்ணுமில்லையப்பா ” என்றான் சோமு. அவன் குரல் தடுமாறிற்று. 

வீழ்ச்சிப் படலம் 

அவன் மனதில் என்னென்னமோ தோன் றியது. மடியிலிருந்த ரூபாய் திடீரென்று நழுவு வதுபோலத்தோன்றிற்று.உடனே ஒரு கையால் மடியைப் பிடி த்துக்கொண்டான். தனக்கு உடம் புக்குவந்து விட்டதென்று இத்தனை கவலைப்படு கிறார்களே, அம்மாவும், அப்பாவும். எவ்வளவு நல்லவர்கள்! – அந்த ரூபாயை எடுக்கலாமா?- இப்படி யெல்லாம் அவனுடைய குழந்தை மனது போராடியது. 

இதற்குள் யாரோ “சாமீ” என்று கூப்பிடும் குரல் கேட்டு அவனுடைய தந்தை வெளியே போனார். சோமு ஒன்றும் தோன்றாதவனாக நின்றான். 

“இப்போது சில்லரையில்லை நோட்டாக இருக்கிறது.நாளைக்கு வா” என்று தகப்பனார் பால்காரனிடம் சொல்லும் குரல் கேட்டது. உடனே உள்ளதைச் சொல்லிவிடலாமா என்று நினைத்தான் சோமு. 

பால்காரன் போய் விட்டான். அவனுடைய தாயாரின் குரல் கேட்டது. 

“என்ன, எனக்கு ஒரு ரூவா வேணுமே. எண்ணைக்காரனுக்குக் கொடுக்கணும். ஒரு ரூபா கூட இல்லையா?” 

“இல்லையே, இப்பத்தான் பாத்தேன்.நூறு ரூபா நோட்டுத்தான் இருக்கு. வேறே சில்லரையே இல்லை”. 

சோமுவின் மார்பு அடித்துக்கொண்டது. அவனுக்கு மயக்கம் வருகிறாப்போல் இருந்தது. தான் எடுத்த ரூபாயின் மேல் வெறுப்பு ஏற்பட் டது. அதை அப்படியே எடுத்து வெளியில் வீசி விடலாமா என்று தோன்றிற்று. மேலும் தாயாரின் குரல் கேட்டது. கவனித்தான். 

“என்னது? நேற்று சாயந்திரம் செட்டி யாருக்குப் பணம் கொடுத்தேன். பர்ஸில் மூணு ரூபா சில்லரை இருந்ததே!” 

அதற்கு மேல் ஒன்றுமே சோமுவின் காதில் விழவில்லை. ஏதோ பித்துப்பிடித்தவன் போல அலமாரியை நோக்கி ஓடினான். பர்ஸை எடுத் தான் ஆனால் அதற்குள் யாரோ வரும் சத்தம் கேட்டது. தான் எடுத்த அந்த ‘பொல்லாத ரூபாய்களை பர்ஸுக்கு அடியிலேயே வைத்து விட்டுத் திரும்பினான். 

மீட்சிப் படலம் 

அவன் அலமாரியை மூடுவதற்கும் அவன் தாயார் உள்ளே நுழைவதற்கும் சரியாயிருந்தது. 

“என்னடா, பண்ணுகிறே? போய்ப்படுத் துக்கச் சென்னேனே” என்று சொல்லிக் கொண்டே தாயார் அலமாரியை நெருங்கினாள். சோமு வெளியே ஓடினான். 

போகும்போதே அம்மா அப்பாவிடம் சொல் லுவது அவனுடைய காதில் விழுந்தது; ‘பணம் இல்லையென்னிங்களே. இதோ அலமாரியிலேயே கீழே கிடந்துது. நீங்கள் சரியாப்பார்க்கலை. 

சோமுவின் மனம் நிம்மதி யடைந்தது. அவனுடைய நெஞ்சில் அழுத்திக் கொண்டிருந்த ஒரு பாரம் நீங்கிவிட்டது. 

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *