திண்ணை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 8,275
ரங்கனை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்தார் டிராப்ட்ஸ்மேன் வாசு.
”என்ன ஸார் ஒரு மாதிரி பாக்குறீங்க? கேள்வி கேட்டான் ரங்கன். ”என்னப்பா, இந்த காலத்துல, வீடு கட்டுறதுக்கு, இப்படி ஒரு வரைப்படம் வரைஞ்சு கொடுக்க சொல்றீயே, இதெல்லாம் பழைய காலத்து ஆட்கள் கட்டுறது. நீ இந்த காலத்து ஆளு, பரபரப்பான நகர்புறத்துல, வீட்டை இப்படி கட்டுறதுக்கு பிளான் போடச் சொல்றே” என்றார் வாசு.
”நான் சொல்ற மாதிரி வரைஞ்சு கொடுங்கோ, இல்லேன்னா வேற ஆளைப் பாத்துக்கறேன் என்றான்” ரங்கன்.
”இருப்பா இரு, அவசரப்படாதே. ”நானே வரைஞ்சு கொடுக்கிறேன் ”என்றார் வாசு.
ரங்கன் கேட்டபடியே வீட்டு வரைப்படம் வரைந்து தந்தார். அதை ஆவணங்களோடு சேர்த்து நகராட்சிக்கு, வீடு கட்ட அனுமதிக்காக அனுப்பினான். ஒரு மாதம் கழித்து நகராட்சி ஆணையர் ரங்கனை அலைபேசியில் அழைத்தார்.
நேரில் போய் ஆணையரை சந்தித்தான். ”என்னப்பா, வீட்டு வரைபடம் இப்படி இருக்கே, இந்த காலத்துல, இப்படியெல்லாம் செய்ய மாட்டேங்க, நீ வித்தியாசமான ஆளா இருக்கியே? என்ன வாஸ்து எதாச்சிலும் உண்டோ? என்று கேட்டார்.
”வாஸ்து எதுவுமில்லை ஸார், எனக்கு தோணுச்சி. அதை செய்யறேன், அவ்வளுவதான் என்று முடித்தான். அப்புரவல் வர ஆறுமாசமாயிற்று. இதற்கிடையே பேங்க மேனேஐர் ரங்கனைக் கூப்பிட்டு, சீக்கிரம் லோன் அப்ளிகேஷன் கொடுப்பா என்று அக்கறையாய் கேட்டார்.
நகராட்சிக்கு நடையாய் நடந்ததில் ஒரு வழியாக அப்ரூவல் கிடைத்தது.
லோன் அப்ளிகேஷன் மேனேஐரிடம் கொடுக்க…. அவரோ, டிராப்ட்ஸ்மேன் வாசு பார்த்தமாதிரியே ஏறஇறங்க பார்த்து விட்டு, இன்னாப்பா ரங்கா. வரைபடம் சரியாய் தானே இருக்கு என்றார்.
”வரைப்படத்தை நானே அப்படித்தான் வரையச் சொன்னேன்.அதில் தவறில்லை” என்றான் ரங்கன்.
வீட்டில், மனைவி கிண்டலடித்தாள். அந்த இடத்தில ஒரு கடையைக் கட்டிவிட்டால்கூட வருமானம் வரும். அந்த இடத்தை இப்படி பண்ணீட்டிங்க என்று கேட்க, பிள்ளைகளும், அப்பாவுக்கு மரைகழன்று போயிடுத்து” என அம்மாவுக்கு ஒத்துஊதினார்கள்.
இந்த வீடுகூட எனக்கு வேண்டாம், வீட்டின் முன்னால் உள்ள அந்த இடம்தான் என் பேரை காலத்துக்கும் சொல்லும். அதற்காகத்தான் இப்படி செய்கிறேன் என்று பிடிவாதமாய் இருந்தான்.
இன்ஐினியா் வரைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். அவர் கருத்தாக எதையும் சொல்லாமல், உதட்டேராம் புன்னகைத்துக் கொண்டார். மேஸ்திரிதான், சித்தாளிடம் ”இந்தக்காலத்துல இப்படி ஒரு ஆளா? கேட்டு நையாண்டி செய்தான்.
ஆறுமாதத்தில் வீடுகட்டி முடித்துவிட்டான். அந்த தெருவில் ரங்கனின் வீடு வித்தியாசமாய் காட்சியளித்தது. சுற்றி உள்ளவர்கள் வீட்டைவிட வீட்டின் முன்புறம் உள்ள இடத்தையே அதிசயமாய் பார்த்தனா்.
புதுமனை புகுவிழாவிற்கு, நண்பர்கள், உறவினா்கள் வந்தனர். அனைவரும், ரங்கனை ஒரு காட்சிபொருளாகவே பார்த்து நகைத்து, ”பொழைக்க தெரியாக புள்ளையா இருக்கீயே” என ஆளுக்கு ஆள் குறைப்பட்டுக் கொண்டனர். வீடுகட்ட ஆரம்பிக்கும்போதே, வீட்டுக்கருகில் தெருவோரம், ஒரு வேப்பமரத்தை நட்டான். அதுவும் வளர்ந்து, நிழல் கொடுக்க இன்னும் சிலவருடங்களில் நான் தயாராகி விடுவேன் என ஆடி..ஆடி அறிவித்தது.
மூன்று மாதங்கள் கடந்தது. ஒரு நாள் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரியவர் அமர்ந்தார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான். பிறகு ரங்கனை விசாரித்தார். அவன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தனக்கு இலக்கிய துறையில் ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்தான்.
அப்படியா? என்று பெரியவர் கேட்டு,….. நான் தினமும் இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து செல்வதற்கு அனுமதி கேட்டார். , இதற்கு அனுமதியே தேவை இல்லை என்றான் ரங்கன். மறுநாள் பெரியவா் வந்தார். அவர் வந்த சிறிது நேரத்தில் மற்றொரு நடுத்தர வயதானவர் வந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனா். அவா்களின் பேச்சில்…. அரசியல், இலக்கியம், கலை எல்லாம் இருந்தது. சில நேரம் பெரியவரின் குரல் ஆணித்தரமாகவும், நடுத்தர வயதுக்காரரின் குரல் தாழ்ந்தும் இருந்தது. இது மாறி… மாறி ஒலித்தது. சிறிது நேரத்தில் அவா்கள் சென்று விட்டனா்.
அடுத்த நாள், பெரியவரைத் தொடர்ந்து, மூன்று போ்கள் வந்தார்கள். அடுத்தடுத்து அங்கே இருபதுபேர்களுக்கு மேலே வரஆரம்பித்து….. அவர்களும் அதே போல விவாதித்தனர். விடுமுறை நாட்களில் , ரங்கனும் அவா்களுடன் கலந்து கொண்டான். விவாதங்கள் தொடர்ந்தன…… ரங்கனின் கருத்துக்களை பெரியவர் விமர்சித்தார். குறைகளை சுட்டிக்காட்டினார். இது போல ஒருவருக்கொருவர் அந்த இடத்தில் அமர்ந்து தங்களது இலக்கிய, அரசியல்,, கலைத்துறைகளைப் பற்றி விவாதித்து…. விவாதித்து….. அந்த இடத்தையே பட்டிமன்ற மேடையாக்கி விட்டார்கள். சிறிது காலத்தில் அந்த வீட்டின் முன்னால் உள்ள வேப்பமரம் தன் நிழலைப் பரப்பி அனைவரும் வருக… வருக என வரவேற்றது.
எல்லோரையும் வரவேற்ற அந்த வேப்பமரமும், திண்ணையும், பெரியவரையும், மற்றவர்களையும் வழக்கம்போல அமரவைத்து விவாதிக்க வைத்தது. ஆனால், . ரங்கனை மட்டும் அங்கு அமரவிடாமல்,வெளியே துரத்தி ஊர்தோறும் சென்று பட்டிமன்றங்களுக்கு நடுவராகவே ஆக்கிவிட்டது. .திண்ணைப் பேச்சு வீண்பேச்சு என்பதை உடைத்தெறிந்தான் ரங்கன்.
– கரிசல்மண் எழுத்தாளர் ஐயா கி.ராஐநாராயணன் அவர்களின் திண்ணை என்ற கட்டுரையின்
தாக்கம்தான் இப்படைப்பு.
, தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வைக்கிறேன். ஊக்கமளித்து வருவதற்கு மிக்க நன்றி. இக்கதையை பதிவிட்டமைக்கும் நன்றி