திட்டமிட்டு ஒரு ‘கொ-‘
(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ஹலோ…. மிஸ்ட்டர் ‘க_’ இங்க வாங்க… என்னோட கோப்பிக்கடைக்கு வந்து கோப்பி, தே ஏதாச்சும் குடித்துவிட்டுப் போகலாமே? உங்ககிட்டச் சொல்ல ஒரு முக்கியமான விசயம் இருக்கு…நான் சொல்லப்போற விசயத்த மனசோட வெச்சுக்குங்க. வெளிய மூச்சு விட்டீங்க.. அப்புறம் அடியேன் கம்பி எண்ண வேண்டியிருக்கும். சற்று பொறுங்க. அறையைப் பூட்டி சாவியை ரிசப்சன்ல கொடுத்து விட்டு வந்து விடுகிறேன்.’

ரிசப்சனில் இருந்த சீனப்பெண் சாவியை வாங்கிக் கொண்டு புன்னகையைத் தருகிறாள். பதிலுக்குச் சிரித்து ஹோட்டலை விட்டு வெளியே வந்து தெருவோடு நடக்கிறோம். அந்தச் சிரிப்பு தொடர்ந்து நீள்கிறது. எதையோ சாதித்து விட்டது போலச் சந்தோசம் மனசெல்லாம் நிறைகிறது. யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும். அதற்காகத்தான் மிஸ்ட்டர் கானாவைத் துணைக்கழைத்துக் கொண்டு கூட்டமில்லாமல் இருக்கிற கோப்பிக்கடையைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். வழியெல்லாம் மக்கள் வெள்ளம் வழிந்தோடுகிறது. இந்த மக்களுக்குத்தான் வேலையே இருக்காதோ என்று தோன்றுகிறது. கோலாலம்பூரின் ஜனசந்தடி மிக்க நடுமையம். கூட்டமிருக்காதா பின்னே? அதோ மாரியம்மன் கோவில் சுவர் பட்டை பட்டையான சிவப்புக் கோடுகளுடன் தெரிகிறது. வெளியே கோவிலை ஒட்டி வரிசையாகக் கடைகள் சூடம், சாம்பிராணி, மாரியம்மன் படம், சிலைகள், விதவிதமான கலைப் பொருட்கள் என அடுக்கி வைத்திருக்கிறார்கள். விளம்பரத்துணிகள் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். அந்தப் புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரம் கண்ணில் ஒட்டிக்கொள்ள மற்ற காட்சிகள் மறைந்து போகின்றன. இதே புத்தகக் கண்காட்சிதான் சரியாக ஒருவருடத்துக்கு முன்னே ரேணுவுடன் வந்த போதுதான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதுதான் எனக்கு எல்லாமாய் இருந்து வழிகாட்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு கச்சிதமாக இந்தக் ‘கொ’ இல்லை ‘தகொ_’ நடந்திருக்காது. சற்று பொறும். எல்லாம் விவரமாய் சொல்லுகிறேன். முதலில் அதோ கோப்பிக்கடை ஒன்று ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே போய் விடலாம்.
எனக்குத் தெரிந்த மலாய் மொழியில் ‘துவா ‘தே-சி’ ஆர்டர் செய்கிறேன். அந்த மலாய்க்காரன் ‘துவா? ரெண்டு?’ என்று சுற்று முற்றும் பார்த்து மீண்டும் உறுதி செய்து கொள்கிறான். இன்னொன்று மிஸ்ட்டர் ‘க’ விற்கு என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவன் குழப்பத்தைத் தீர்க்க விருப்பமில்லாமல் காசு கொடுத்து விட்டு ஒதுக்குப்புறமாய்ப் போய் உட்கார்ந்து கொள்கிறேன். முகமெல்லாம் வேர்த்துப் போயிருக்கிறது. அங்கே சுவரில் இருந்த காற்றாடி தலையை அங்கும் இங்குமாகத் திருப்பித் திருப்பிக் காற்றை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு பெரிய ரகசியம் சொல்லப் போவதற்கு முன்னால் செருமிக் கொள்வதைப் போலத் தொண்டையைச் சரி செய்து கொள்கிறேன். சிகரெட்டை உதட்டில் பொருத்தி பற்ற வைத்துக் கொள்கிறேன். நான் சொல்லப் போவதைக் கேட்க ‘க’ வின் காதுகள் பெரிதாகின்றன. வளையம் வளையமாகப் புகை பரவுகிறது. இன்னேரம் என்னவாகி யிருக்கும்? என்று ஒரு வளையம். போலீஸ் வந்திருக்குமா? என்று இன்னொரு வளையம். அவற்றுக்குப் பதிலாகப் பல வளையங்கள்…
‘பீஷான் புளோக் 320ஐச் சுற்றிலும் இன்னேரம் செய்தி பரவியிருக்கும். போலீஸ் வந்திருக்கும். ரேணு கைகளைப் பரப்பிக் கொண்டு மூக்கிலும் பொட்டிலும் இரத்தம் வடிந்து உறைந்து கிடக்கப் படுத்துக் கிடப்பாள். மக்கள் கூட்டமாய்ச் சுற்றி நின்று வேடிக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் பார்க்கப் பயந்து அங்கு நிற்காமல் நகர்ந்து போயிருப்பார்கள். யாரும் உள்ளே வந்து விடாமல் ரேணு கிடக்கும் இடத்தைச்சுற்றி ரிப்பனைக் கட்டியிருப்பார்கள் போலீஸ். ரேணுவைப் பல கோணங்களில் புகைப்படமெடுத்திருப்பார்கள். டாக்டர் நாடியைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கியிருப்பார். பணிப்பெண்ணை விசாரித்திருப்பார்கள். என்னைக் கேட்டிருப்பார்கள் எங்கே? என்று. அவள் சொல்லியிருப் பாள் ‘அண்ணன் நேற்று வெளிநாடு போய்விட்டார்’ என்று. என்னைப் பற்றி இன்னும்… கேட்டிருப்பார்கள் ஆனால் நான்?
நான் இங்கே கோப்பிக்கடையில் ஹாயாகப் புகைத்துக் கொண்டே ‘க_ ‘விடம் என் வீர பராக்கிரமத்தை விளக்கிக் கொண்டிருக்கிறேன். ஆம் மிஸ்ட்டர் ‘க’ நான் ஏன் அப்படிச் செய்தேன்? காரணத்தைக் கேட்டால் நீங்களே நான் செய்தது சரிதான் என்பீர்கள். ரேணுவைப் பற்றி உங்களுக்குச் சொல்லத்தான் வேண்டும். அவள் எனக்குத் ‘து’ செய்து விட்டாள். அப்படி என்ன ‘க_’ என்கிறீர்களா? சொல்கிறேன். எங்களுக்குத் திருமணமாகிச் சரியாக ஐந்தாண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. ஊரிலிருந்து அவளைக் கல்யாணம் செய்து அழைத்து வந்து சிங்கப்பூரில் பீஷானில் தனி வீடெடுத்து எங்களின் தாம்பத்தியம் சீரும் சிறப்புமாக ஆரம்பமாகியது. எனக்கு ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் சேல்ஸ் ரெப் வேலை. பறந்து பறந்து விற்பனையை உயர்த்த வேண்டும். நான் பறந்து பறந்து பணிசெய்யப் போக என் புது மனைவி என்னை விட்டுப் பறந்து போய்க் கொண்டிருக்கிறாளோ என்கிற சந்தேகம் எனக்குள் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. காரணம் மோகன்.
மோகன் எங்களுக்குக் கோவிலில் அறிமுகமானான். ‘என்னங்க….. மோகன் எங்க ஊருக்குப் பக்கத்து ஊருங்க. இங்க எஸ் பாஸ்ல வேலை பார்க்கிறாங்களாம். எலக்ட் ரிகல் வேலையெல்லாம் தெரியுமாம்’ என்று ரேணு ஒருநாள் அறிமுகம் செய்து வைத்தாள். ‘ஏதாவது வேலை யிருந்தாக் குடுங்கக்கா. ஆப் நாள்ல வந்து செய்து கொடுக்கிறேன்’ என்று அவன் கேட்டதாக இன்னொரு நாள் சொன்னாள். இரண்டொருமுறை வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போயிருக்கிறான். நான் இருக்கும் போதுதான். ஒருமுறை மிக்சி ரிப்பேர் ஆகிவிட்டதாம். மோகனுக்குப் போன் செய்து மோகன்தான் சரி செய்து கொடுத்தானாம். நான் பேங்காக்கிலிருந்து வந்தவுடன் ரேணு சொன்னாள். இன்னொருமுறை கிரைண்டர் ஓட மறுத்து விட்டது. மோகனின் புண்ணியத்தால்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்று ரேணு சொன்னாள். அவனுக்கு ஏதாவது காசு கொடுத்து விடு என்று சொல்லியிருக்கிறேன். ‘இல்லை அதெல்லாம் வாங்க மாட்டார்’ என்று சொன்னாள். இப்படி இவ்வளவு பெரிய விலை கொடுப்பாளா பாவி!
அன்று கே.எல் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கழுத்துப் பட்டையைச் சரி செய்து கொண்டிருந்தவள் என்னைப் பக்கத்தில் இழுத்து பத்திரமாய்ப் போய் வாருங்கள் என் அன்புக் கணவரே என்று ஆசை முத்தம் தந்தாள். ‘எல்லாம் பொய்யோ?’ என்று குருவி கத்தியது எனக்குள். இன்று கையும் களவுமாய் பிடிபடப் போகிறாள் என்று எப்படியோ தோன்றியது எனக்குள். இரவு படுக்கை அறையில் ஏன் அப்படி ஒரு புழுக்கம்? ஏசியை ஆப் செய்து விட்டாயா என்றேன். இல்லை ஹையில் வைத்தால் கூட அவ்வளவுதான் வருகிறது என்றாள். ஏன் மோகனிடம் சொல்லேன் என்றேன். அதைக் கேட்டதும் அவள் முகம் பிரகாசமாய் மாறியதைக் கவனித்தேன். உடனே மோகனை அழைத்துப் பேச ஆரம்பித்து விட்டாள். பேசிவிட்டுப் போனை வைத்தவள் இன்று இந்தப்பக்கம் வர வேண்டிய வேலையிருக்கிறதாம், முடிந்தால் வந்து பாக்கிறேன் அக்கா என்கிறார் என்றாள். என் மூளை அவள் சொன்னதைக் கவனமாய்ப் பதிவு செய்து கொண்டது.
சிட்டி கேப் வேகமாய் ஏர்ப்போர்ட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது அதைவிட வேகமாய் என் மூளை வேலை செய்தது. என் தலையை அழைத்து ‘எனக்கு உடம்பு நெருப்பாய்க் கொதிக்கிறது’ என்றும் அதனால் இன்று கே.எல் போகமுடியாது என்று ஒரு ‘பொ_’ சொல்லிவிட்டு ‘ஏஏ’வை அழைத்து கே.எல் பயணத்தைத் தள்ளிப்போடும்படி சொன்னேன். அவள் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் போதே ட்ரைவரிடம் வண்டியை வீட்டுக்குத் திருப்பச் சொன்னேன். ‘ஏன் சார்?’ என்று அவன் கேட்கவில்லை! அவன் ஒருவேளை இங்கிதம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அல்லது என்னைப்போல பலபேருக்கு அவன் வண்டியைத் திருப்பியிருக்க வேண்டும்.
வண்டியை இரண்டு பிளோக் முன்னாடியே நிறுத்தி இறங்கிக் கொண்டேன். வீட்டை வேவுபார்க்கத் தோதான இடத்தில் நின்று கொண்டேன். பணிப்பெண் ரேணு வெளியே செல்கிறாள். இவளை அனுப்பிவிட்டால் மோகனுடன் கூத்தடிக்க வசதியாக இருக்கும் என்று என் ஆருயிர் மனைவி நினைத்திருப்பாள். மோகன் இனிமேல்தான் வரக்கூடும். யாரும் யாரும் பார்க்காமல் வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டால் கையும் களவுமாகப் பிடித்து விடலாம். வீட்டுச்சாவி என்னிடம் ஒன்று இருக்கிறது. ஒரே படபடப்பாக இருக்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இடம் சரியில்லை. அந்த பிளோக்கிலுள்ளவர்கள் பார்த்துக் கொண்டே செல்கிறார் கள். அதோ அது யார்? மோகனேதான், வீட்டுக்குள் ளிருந்து வருகிறான். தெருவில் இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறான். நான் மறைந்து கொள்கிறேன். சண்டாளன் நான் எப்போ வெளியாவேன் என்று காத்திருந்து வந்துவிட்டுப் போகிறான். அவனை விடுங்கள், இவளுக்கு ஏன் போகிறது புத்தி இப்படி? துரோகி! சண்டாளி!! நாசமாய்ப்போக…’ என்று திட்டிக்கொண்டே நடந்து எம்மார்ட்டி எடுத்து ஆர்ச்சர்டில் இறங்கி ஓட்டலில் ரூம் போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்போது எடுத்த முடிவுதான் இப்போது நிறைவேறியிருக்கிறது. கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தனின் புத்தகத்திலிருந்தபடி என் உச்சாடனம் ஒலிக்க, என் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து மாடிப்படிகளில் ஏறி 12 ஆம் மாடிக்குப்போய் குதி ரேணு குதி! ஆனந்தமாய்க் குதி! என் ரேணு குதித்து இப்போது பரலோகத்தில் இருப்பாள். நான் அருகில் இல்லாமலேயே அவளை இயக்கி இறக்கச் செய்திருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்ததற்கு எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. சபாஸ்டா செல்லம். என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன். மிஸ்ட்டர் கானா நீங்கள் விடைபெற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தொலைபேசி அழைப்பு வரும் நேரம்…நான்
சொல்லிக்கொண்டிருக்கையிலேயே என் செல் சிணுங்குகிறது. மறுமுனையில் போலீஸ்.
‘………’
‘ஆமாம் நாந்தான் பேசுகிறேன். சொல்லுங்கள்.’
‘………’
‘என் ரேணுவுக்கு என்னாச்சு?’
‘………’
‘அய்யோ’
‘………’
‘சரி, உடனே புறப்பட்டு வருகிறேன்’
‘………’
‘விமானம் மூலமாக…’
சிங்கப்பூர் விமான நிலையம். விமான நிலையச் சிப்பந்தி என்னைக் கைகாட்டி ஏதோ சொல்லிவிட்டுப் போகிறார். என்னை அழைத்துபோக யாரோ வந்திருக் கிறார்களாம். என்னைத் தனியே உட்கார வைக்கிறார்கள். முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன். என் வலதுபுறமும் இடதுபுறமும் இருவர் வந்து கை கொடுக்கிறார்கள். அவர்கள் தங்களைப் போலீஸ் என்று அட்டையைக் காட்டி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். ஏன் இதெல்லாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே ‘உங்கள் மனைவியைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக உங்களைக் கைது செய்கிறோம்’ என்று கூறிக் கொண்டே என் கையில் காப்பை மாட்டுகிறார்கள்.
நான் ஒன்றும் புரியாமல் முழிக்கிறேன். சற்று தூரத்தில் பார்க்கிறேன், என் ரேணு முழுசாக ஒன்றும் ஆகாமல், அவள் அருகே வேலைக்காரி ரேணு சக்கர நாற்காலியில் தலையில், கால்களில் கட்டுடன்.
என் மனைவியை என்னையே நினைத்துக் கொண்டிருக்கச் சொல்லி அவளுடம்பிற்குள் புகுந்து படுக்கையிலிருந்து குதித்துப் பலமுறை ஒத்திகை பார்த்தேன். இது என்ன புது விளையாட்டு என்று கேட்டாள். ஒன்றுமில்லை சித்தனின் வித்தையைக் கற்றுக்கொள்கிறேன் என்று சொன்னதை நம்பிவிட்டாள் என்று நினைத்தேன். அவள் விழித்துக்கொண்டு விட்டாள். நான் தூங்கி விட்டேன். என் மனைவி அவள் பெயரிலேயே ‘மெய்ட்’ தேடியபோதே நான் சுதாரித்திருக்க வேண்டும். அல்லது அவளை என்னோடு பழகவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த போதே எனக்குத் தோன்றியிருக்க வேண்டும்! எல்லாவற்றுக்கும் காரணம் மனிதனுக்கு இருக்கும் ‘ச_’ தானே?
– சிரேங்கூன் டைம்ஸ்
– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.
![]() |
புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை. இந்நூலாசிரியர் திரு.இராம.வைரவன் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி. சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகக் கணினி துறையில் பணியாற்றி வருகிறார். இது இவரின் முதல் சிறுகதைத் தொகுதி. எழுத்துலகம் சிறுகதை, கவிதை என விரிகிறது. படைப்புகள் இணைய இதழ்களிலும், சிங்கை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது க கவிதைகளும் பல பரிசுகளை வென்றுள்ள…மேலும் படிக்க... |