தாய்மண்ணே வணக்கம்!
முதல் நாள் பள்ளிக்குப் போகும் மூன்று வயது பையனைப் போல முகத்தைத் தொங்கப் போட்டடி தன்னருகில் நின்றுகொண்டிருந்த பரத்தைப் பார்த்தான் சதீஷ்.
அலுவலக விஷயமாய் மூன்றுமாதம் அமெரிக்கா போக வேண்டி வந்துவிட்ட தவிப்பினை பரத்தின் கண்கள் காட்டிக் கொடுத்தன. சதீஷிற்கு அவனைப் பார்த்ததும் சிரிப்பாய் வந்துவிட்டது
’அவனவன் அமெரிக்கா போக வாய்ப்பு கிடைக்காதான்னு பறக்கிறான். இவன் என்னடான்னா, வந்திருக்கிற சின்ன சான்சைக்கூட உதறிட்டு ஓடிப்போக ரெடியா இருக்கான்!’
நண்பனை சமாதானம் செய்யும் நோக்கத்தில் அவனருகில் போய் நின்றுகொண்டான்.
சென்னையின் பன்னாட்டுவிமான நிலையம் அது. பரபரப்பாய் அந்த நடு நிசியிலும் மக்கள்இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சுருண்டு ஒடுங்கி கைகட்டி நின்று கொண்டிருந்தவனிடம் சதீஷ் பேச ஆரம்பித்தான்.
“லுக் பரத்! இந்தியாவை விட்டு மூணுமாசம் ஆபீஸ் வேலையாய் அமெரிக்கா போகப்போகிறஉனக்கு இப்போவேண்டுமானால் தாய் மண்ணை விட்டுப் போற ஏக்கம் இருக்கலாம், ஆனா அங்க போன மூணே நாளில் நீ கண்டிப்பா மாறிப்போயிடுவேடா! அப்புறம் ஏண்டா ஊருக்குத் திரும்பணும்னு தோணிப் போயிடு்ம், பிகாஸ் அமெரிக்கா அப்படி ஒரு சொர்க்கபூமி! எம் எஸ் படிக்க மூணுவருஷம் அங்கே இருந்த எனக்கு திரும்பி சென்னைக்கு வர மனசே இல்லை. வந்த இந்த ஆறுமாசத்தில் இந்தியாவின் அசுத்தமும் அரசியலும் மக்களின் போக்கும் சாலை நெரிசலும் அடிக்கடி வீட்டுக்குவரும் குடும்ப உறவினர் வருகையும் என்னை ஆயாசப்படுத்திடிச்சி.. நல்லவேளை திரும்ப எனக்கு யுஎஸ்லயே ஜாப் கிடச்சி இதோ இன்னிக்கு நானும் கிளம்பிட்டேன். ஐ லவ் அமெரிக்கா!” என்றான் பெருமையாக.
பரத்தின் முகம் இன்னமும் விளக்கெண்ணை குடித்த மாதிரியே இருந்தது.
சென்னையில் பன்னாட்டு சாஃப்ட்வேர் கம்பெனியில் பரத் ஒரு கம்ப்யூட்டர்இஞ்சினீயர்.
ஆபீஸ் விஷயமாக அவனை வாஷிங்டன் டிசிக்கு மூன்று மாதத்திற்கு அனுப்புகிறார்கள். எதேச்சையாய் தன்னோடு கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த சதீஷை ஏர்போர்ட்டில் பார்த்தவன், பழைய கதையைப்பேசிவிட்டு ”எனக்கு இஷ்டமே இல்லைடா …ஆனா ஆபீசில் வலுக்கட்டாயமாய் போக வைக்கிறாங்க” என்றான்.
இப்போதும் சதீஷ் புகழ்ந்ததில் அவன் சமாதானம் ஆகவில்லை. ஆனாலும் வாஷிங்டன் வருகிறவரைக்கும் சதீஷ் ஓயவில்லை.
“அமெரிக்கால எந்தநாட்டுக்காரனும் சுதந்திரமா இருக்கலாம்.
அமெரிக்க அரசியல்அமைப்பு மிக சிறப்பானது. இந்தியாவில் இருப்பது போல் கட்சி தாவல், நிலையற்ற அரசுகள், கொள்கையற்ற கட்சிகள் அங்கே இல்லை.
அமெரிக்காவில் லஞ்ச ஊழல் இல்லை. பொதுமக்கள் போலீசுக்கு, அரசு அலுவலங்களில் பைசா லஞ்சம் தரவேண்டியதில்லை.
அமெரிக்கா மிக சுத்தமான நாடு. கழிப்பிடங்கள், பொது இடங்கள் தூய்மையாக இருக்கும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஜனாதிபதி, மாநில கவர்னர் என யார் தவறு இழைத்தாலும் ஜெயிலுக்கு போவார்கள்.
அமெரிக்காவில் தொழில் துவங்குவது எளிது. வரிகள் குறைவு, அதனால் தொழில்துறை நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியா போல விலைவாசி உயர்வு இல்லை, பட்டினி சாவுகள்இல்லை.
பசங்களையே ஸ்கூல் வரைக்கும் தான் பெத்தவங்க பாத்துக்கறாங்க. அப்புறம் பசங்க பொண்ணுங்க வெளியே வந்துடறாங்க…தனியா சுயமாய் நின்னு வாழப் பழகிக்கிறாங்க. பெத்தவங்க அவங்களோட சுதந்திரத்தில் தலையிடறதே இல்ல. சாம்பிளுக்கு இதை மட்டும் சொன்னேன் நெறய இருக்குடா அமெரிக்கால! தட்ஸ் ஒய் ஐ லவ் அமெரிக்கா!”
ஏர்போர்ட்டில் பரத்திற்கு அலுவலகக்கார் அவனை ஹோட்டல் அறைக்கு அழைத்துப் போக தயாராய் வந்திருந்தது. ஆபீஸ் சிப்பந்தி (அமெரிக்கன்) கார் டிரைவருடன் வெளியே பரத்தின் பெயர் எழுதிய அட்டையுடன் காத்திருந்தார். பரத் அவரை நெருங்கியதும் கை குலுக்கிவிட்டு சிறு அறிமுகம் செய்துவிட்டு உடன் வந்தவர் புது செல்போனை அவன் கையில் கொடுத்தார். வாழ்த்தி நகர்ந்தார்.
பார்த்துக் கொண்டே கூடவந்த சதீஷ் ”எப்படி வரவேற்பு பாத்தியாடா? நம்ம ஊர்ல நாய் மாதி்ரி காத்துட்டிருக்கணும். இதான் ஆரம்பம் இன்னும் போகப் போகப் பாரு, அமெரிக்கா மகிமை அமோகமா இருக்கும். ஜூன் ஜூலை ஆகஸ்ட் என்று மூணு மாசத்துக்கு நீ வாஷிங்டனுக்கு வந்திருக்கிறதும் நல்ல சீசன்லதான்…சரி நாளைக்கு நீ டிசிலநான் ஒர்க் செய்யும் அபீஸ் இருக்கிற ஹெச் ஸ்ட்ரீட்க்குத் தான் வரப்போறே அங்கே பாக்கலாம். நீ வேலை விஷயமா போகப் போற வர்ல்ட்பாங்க் என் ஆபீஸ் பக்கம் தான் கூப்பிடு தூரத்துல வெள்ளைமாளிகை இருக்கும்! மூணு மாசத்துல எல்லா வீக் எண்டும் ஊரை சுத்திடு.. அமெரிக்க மக்கள் அப்படித்தான் வாரமெல்லாம் உழைப்பாங்க .. கடைசி இரண்டு நாட்களில் ஊர் சுத்துவாங்க. எஞ்சாய் பண்ணுவாங்க லைஃபை! ..அதுல ஆண் பெண் பேதமெல்லாம் இங்க கிடையாது எல்லோரும் ஓரினம்தான்…எதுக்கு நானே சொல்லணும் நீதான் மூணு மாசமும் கூட இருந்து பாக்கப் போறியே? ஒகேடா சீ யூ….கால் மீ எனி டைம்..பை” என்று நயாகரா நீர்வீழ்ச்சியாய் பொழிந்துவிட்டு விடைபெற்றான்.
இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. பரத் ஒன்றும் அமெரிக்கா தனக்கு மிகவும் பிடித்த மாதிரி சொல்லக் காணோம்.
சதீஷ் விடாப்பிடியாய், ”ஒரு அரசியல் தலைவர் போஸ்டராவது பாத்தியாடா?நம்ம சென்னைல எல்லா சுவர்லயும் அம்மா இல்லென்னா ஐயா! இங்கல்லாம் ஆஸ்பித்திரில முதல்ல பணம் கட்டு அப்புறம் தான் வைத்தியம் என்றெல்லாம் கிடையாது. உயிரைக் காப்பாத்தறதுதான் முக்கியம்னு டாக்டர்கள் செயல்படுவாங்க…கல்யாணம் ரொம்ப சிம்பிள்..இந்த வைரம், தங்கம் சீர் செனத்தியெல்லாம் நம்ம ஊர்லதான் இன்னமும் இருக்கு. இங்க சர்ச்சுல எளிமையா முடிச்சிடறாங்க. உறவு ஜனமெல்லாம் விலகியே டீசன்ட்டா இருக்கும்” என்ற சதீஷ் தனது கோபத்தை அன்று ஊரிலிருந்துபோன் செய்த அம்மாவிடமும் காட்டிவிட்டான். ”என்னம்மா தங்கச்சி உஷா கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா செய்யணும்? இப்படியெல்லாம் ஊரைக்கூட்டி ரெண்டு நாள் கல்யாண செலவு செய்ய வழக்கமெல்லாம் எப்போ நின்னு தொலைக்கும்? உறவு ஜனமெல்லாம் இதை சாக்கா வச்சி ஒரு வாரம் முன்னாடி நம்ம வீட்டில் டோரா அடிப்பாங்க!அமெரிக்கால பொண்ணு கல்யாணமெல்லாம் ரொம்ப சிம்பிள். அமெரிக்காவைப் பாத்து இந்தியா கத்துக்கணும்மா” என்று உரக்க முழங்கினான்.
”அப்படி சொல்லாதடா சதீஷ் பழையப மரபு நம்முடையது அதையெல்லாம்
மாத்திக்க முடியாது, நம் வளர்ப்பும் அப்படித்தான். திசை தெரிந்து, தருணம்
புரிந்து பறக்க விடப்படும் பட்டம் மாதிரி, வாய்ப்புகளுக்குகேற்ற திசையில்
வாழ்க்கையைக் கொண்டு செல்லும் திறமை நமக்குத் தேவை. ஆனால் எத்தனை உயரத்தில் பட்டம் பறந்தாலும் பூமியில் நிற்பவர் கையில் கட்டுப்படுவது மாதிரி, எங்க போனாலும் நம்ம வேர் பிறந்த மண்ல இருக்கணும்“ பரத் இப்படி தன் மனதில் இருந்ததை ஒரு நாள் சதீஷிடம் சொல்லியே விட்டான்.
”போடா பரத்.. உனக்குதெரியாது நான் அமெரிக்கா கிளம்பறேன்னதும் வழியனுப்ப திருச்சிக்கு என் வீட்டுக்கு லால்கு்டி, மண்ணச்சநல்லூர் திருவானைக்காவல் அப்படீன்னு எல்லா இடத்திலிருந்தும் ஒண்ணுவிட்ட மாமா அத்தை பெரியப்பா சித்தப்பான்னு பெரியபட்டாளமே வந்தது… எதுக்கு வந்தாங்க எல்லாரும்னு நினக்கிறே எல்லாம் நாளைக்கு ஆளுக்கு ஒரு ஐ பேட், டிஜிடல் காமிரா ஐபோன் லேப்டாப் அது இதுன்னு என்கிட்ட கேட்டு் வாங்கிக்கத்தான்….நம்மூர்ல உறவுகள் எல்லாம் சுயநலம்…” சதீஷ் வழக்கம் போலவ பேசவும் பரத் ஒன்றும் பதில் சொல்லவில்லை .
அன்று பரத்திற்கு அமெரிக்க விஜயத்தின் கடைசி நாள்.
”நான் வரேண்டா ஏர்போர்ட்டுக்கு..அஞ்சு மணிக்குத் தானே உன் ஃப்ளைட்? மதியம் லஞ்ச் முடிச்சதும் புறப்பட்டுடறேன்.. நீ ஊருக்குப் புறப்படுவதால் இன்னிக்குஆபீஸ் போக வேண்டி இருக்காது, பாக்கிங் எல்லாம் முடிச்சிடு. உன்னை வழிஅனுப்ப உன் ஆபீஸ்ல காரும் அனுப்பி கவனமா கொண்டு ஏர்போர்ட்வரை அனுப்பிடுவாங்க
இது அமெரிக்கா ஆச்சே குளறுபடியே நடக்காது. எனிவே உன்னை ஏர்போர்ட்ல பாக்கறேனே?” என்று பரத்திடம் காலை அலுவலகம் புறப்படு முன்பு போனில் பேசினான்.
அன்றைக்கு சதீஷிற்கு கான்ஃப்ரன்ஸ்கால் மேனஜருடன் மீ்ட்டிங் என்று ஒன்றரை மணிவரை சரியாக இருந்தது. பிறகு தன் காபினுக்கு வந்தவன் வாலெட்டையும் ஐபோனையும் மேஜைமீது வைத்துவிட்டு ஆயாசமாய் இருகைகளையும் தூக்கி சோம்பல் முறித்தபோது காலடியில் ஏதோ நகர்வதுபோல குறுகுறு என்றது.
‘பசியாக இருக்கும் அதான் பூமியே கிறுகிறுக்கிற மாதிரி இருக்கு! எலிவேட்டரில் கீழே போய் பனேரா ப்ரெட் கஃபெயில் சூப்பும் சாண்ட்விச்சும் சாப்பிட வேண்டும்’ என நினைத்தபடி நிமிர்ந்தவன், ”ஹா ஊ” என்ற ஓலம் கேட்கவும் அதிர்ந்தான்.
கண்ணாடி ஜன்னல் வழியே சட்டென எதிரே தெரிந்த இருபத்தி நாலு
அடுக்கு மாடிக்கட்டிடத்தைப் பார்த்தவன் அது தூளியாட்டம் ஆடவும்
‘ஐயோ’ என்று வீறி்ட்டான்.
“பாம் வச்சிட்டாங்களா ஒயிட் ஹவுசுக்கு? என்னடா இப்படி பில்டிங் ஷேக் ஆகுது?”என்று உடன் பணிபுரியும் டெவலப்பர் சரவணன் திகிலோடுகேட்க..
“இட்ஸ் எர்த் க்வேக்.. கமான்..லெட்ஸ் கெட் அவுட் ஆஃப் ஹியர்”என்று சக ஊழியன் டேவிட் அலற காலடியில் நிலப்பரப்பு ஆடுவதை உணர்ந்த சதீஷ் அப்படியே தலை தெறிக்க மாடிப்படியில் ஓடினான். மூச்சிறைக்க கீழே இறங்கினான். எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான் அதற்குள் ஹெச் ஸ்ட்ரீட் முழுவதும். உள்ள அலுவலக ஜனங்கள்
தெருவில் வந்து குழுமிவிட்டனர். பாதுகாப்புப்படையும் காவல்படையும் வாகனங்களில் விரைந்து விட்டது. மக்கள் அங்கும் இங்குமாய் சிதறி நடந்தார்கள்.
அவசரத்திலும் உயிர் தப்ப வேண்டிய அவசியத்திலும் போனையும் பர்சையும் மேலே தன் காபினிலேயே வைத்துவிட்டு வந்ததை அப்போதுதான் சதீஷ் உணர்ந்தான்.
அதற்குள் பலர் தங்கள் கையிலிருந்த செல்போனில் யாருடனும் பேச இயலாமல் தொடர்பே அறுந்துவிட்டதாயும் கூறி நின்றனர்.
சிலர் மட்டும் பேச முயன்று கொண்டிருந்தனர்.
சாலை எங்கும் பதட்டமுடன் மக்கள் வெள்ளம் சூழ அரைமணிக்கு மேல் சதீஷும் அந்த
ஆகஸ்ட் மாத வெய்யிலில் முகம் வியர்க்க செய்வதறியாது நின்றான்.
அப்போது ஜனத்திரளிலிருந்து அவனை நோக்கி அலுவலகத்தின் டைரக்டர் ராபர்ட் ஓடி வந்தார். அவருக்கு வயது ஐம்பது இருக்கும் அமெரிக்கக் குடிமகன். சதீஷுக்கு ஆபிசில் அவரிடம் அதிகம் பேசி பழக்கமில்லை சற்றே பெரிய பதவி வகிப்பவர் என்பதால் மரியாதை நிமித்தம் ஒதுங்கியே இருப்பான்.
அவர் இவனிடம் விரைந்து வந்தவர் ஆங்கிலத்தில், ”சதீஷ் ஆர் யூ ஒகே?“என்று கேட்டார்.
”யா ஐயாம் ஒகே ராப்” என்றான் முக வியர்வையை விரல் நுனியால் சுண்டியபடி.
ராபர்ட் தொடர்ந்தார்.
“தாங்க் காட்! தூரத்திலிருந்து நான் உன்னைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்…இன்ஃபாக்ட் கையசைத்தேன் கூட்டத்தில் நீ என்னை கவனிக்க வாய்ப்பில்லை..என்ன ஒரு திகில் சில நிமிஷங்களுக்கு! நினைத்தாலே பகீரென்கி்றது. பெண்டகினில் அல்லது வெள்ளைமாளிகையில் தீவிரவாதிகள் குண்டு வைத்து விட்டார்கள் என்றே நான் முதலில் பயந்தேன்.. நல்லவேளை நில நடுக்கம்தான். அதுவும் மைல்டாகத்தான். முதன் முதலில் இப்படி இந்தப்பகுதியை தாக்கி உள்ளதால் எல்லோரும் மிரண்டுபோயிட்டோம்.
ஆனால்கடந்த பத்து நிமிஷமாக எனக்கு தொடர்ந்து வந்த டெலிபோன் அழைப்புகளில் உலகில் எத்தனை பேர் நம்மை விட பயந்துட்டாங்க, கவலைப்பட்டாங்கன்னும் தெரியுது. ஆமாம் சதீஷ் என் போன் நம்பரை எப்படியோ இண்டர்நெட்ல நம் ஆபீஸ் நெட்ஒர்க் வழியே தெரிந்து கொண்டுவிட்டார்கள் அதிர்ஷ்டவசமாய் என் செல்போனும் தொடர்பு விட்டுப் போகாமல் உயிரோடு இருந்தது.
இந்தி்யாவிலிருந்து உன் தங்கையாம் உஷா என்று பெயர் சொன்ன பெண்ணும் தொடர்ந்து உன் அப்பா மற்றும்… வெயிட் ப்ளீஸ்…பெயரெல்லாம் பேப்பர்ல நோட் பண்ணிவச்சிருக்கேன் இரு..” என்று சொல்லியபடி பாண்ட்பாக்கெட்டிலிருந்து அந்த பேப்பரை எடுத்துப் பிரித்தார். பிறகு,”யெஸ்! லால்குடி பெர்ப்ப்பா அண்ட் துருவானைக்காவேல் சித்பா, மண்சநாலூர் அத்தே மாமா எல்லாரும் என்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சாங்க உன் போன்ல உன்கூடபேச முயற்சி செய்தாங்களாம். நீ போனை எடுக்கவில்லை என்றதும் பயந்துட்டாங்க.. திரும்ப திரும்ப என்கிட்ட உன்னை உன் நலனை உன் குடும்ப உறவுகள்முழுவதும் விசாரிக்க, நானும் ‘எதிரில் தூரத்தில் சதீஷ் தெரிகிறார், உயிரோடு நலமாய் இருக்கிறார்’என்று அடிச்சி சொன்னதும் தான் நிம்மதியாய் போனை வச்சாங்க.. இதை உன் கிட்ட சொல்லத்தான் நான் ஜனத்திரளில் புகுந்து வெளியேறி இங்க வந்தேன்..சதீஷ்! இந்தியாவிற்கு ஓரிருமுறை நான் போயிருக்கிறேன்..இந்தியக் குடும்பம் உறவுகளின் நெருக்கம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கல்யாணம் என்றால் ஊர் கூடிவிடுமாமே!இந்தியாவில் தான் இப்படி உறவுகள் உருகி விஜாரிப்பதும் கூட்டுக் குடும்பத்தின் சந்தோஷங்களும் இருக்கின்றன..எப்படியோ என் செல் நம்பரைப்பிடிச்சி என்கிட்ட உன்னை உன் உறவு முழுவதும் விசாரிக்கி்றது என்றால் அவர்களுக்கு உன் மேல் உள்ள அக்கறையும் அன்பும் எத்தனை மகத்தானது! Iam proud you are an Indian!”
ராபர்ட் ஆங்கிலத்தில் பேசிமுடித்துவிட்டு நிமிர்ந்தபோது சதீஷுக்கு வாயைத் திறக்கவே முடியவில்லை.
”தா தாங்க்யூ ராப்” என்றுமட்டும் நாதழு்தழுத்தான். நில நடுக்கம் ஓய்ந்து விட்டது, இப்போது அவன் மனம்தான் இனம் தெரியாமல் நடுங்க ஆரம்பித்தது.
சுதாரித்ததும் மறுபடி அலுவலகம் போய் பதினேழாவது மாடியில் தனது காபினுள் நுழைந்து போனை எடுக்கப் போன போது அது ரீங்காரமிட்டது.
கையில் எடுத்தான். ’பரத்’ என்றதுபோன் திரை.
“ஹ் ஹலோ?” என்றான் சதீஷ் குரலில் சுரத்தே இல்லாமல்.
“நாந்தாண்டா பரத் பேசறேன் ஐயாம் ஒகே,. ஆர் யூ ஒகே? நில நடுக்கம் இங்கே ஹோட்டலிலயும் ஃபீல் பண்ணினேன் கொஞ்சம் பயமானது ஆனா நிலமையை உணர்ந்ததும் சரியாகிட்டது..அப்புறமாய் டிவில பார்க்கிறேன்.. டிசி பக்கம் அதுவும் உன் ஆபீஸின் வாசலில்,பென்சில்வேனியா- அவென்யூ பகுதியில் எல்லாம் அப்படி ஒரு கூட்டமாய் எல்லாரும் தெருல நிக்கி்றாங்க…அத்தனை ட்ராஃபிக்கையும் ரொம் பக்குவமா ஒழுங்குபடுத்தி ஜனங்களை உடனே வீட்டுக்குப் போகச்சொல்லி ஆபீஸ் காலேஜ் பள்ளிக்கூடமெல்லாம் லீவ்கொடுத்து அங்கங்கே மக்களுக்கு துணை நின்று இதமாய்ப் பேசி வழி நடத்தி…… ஆஹா! அமெரிக்காலதாண்டா இப்படி நடக்கும்!..நீ சொன்னபோதெல்லாம் எனக்கு உறைக்கவே இல்ல ஊர் திரும்பற நாளில்தான் அமெரிக்காவின்அருமைபுரியுது! உண்மைல இந்தியா போகவே இப்போ எனக்கு விருப்பம் இல்லை”