தாயும் சேயும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2025
பார்வையிட்டோர்: 72 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அடிக்காதேம்மா… அடிக்காதேம்மா… இனிமேல் எடுத்துத் தின்ன மாட்டேன்.” அழுது துள்ளிய காந்தன் மங்களத்தின் பிடியிலிருந்து விட்டுபட்டுத்தெருப் பக்கம் ஓடினான்; மங்களமும் மகனைத் துரத்திக்கொண்டு அகப்பையுடன் ஓடிவந்தாள். அவன் படலையைத் தாண்டித் தெருவுக்குச் சென்றபின், மங்களம் ஆற்றாமை யால் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

பத்து வயதுச் சிறுவனான காந்தன் படுசுட்டி! வீட்டுக் கஷ்டமே தெரியாத வயது; தினமும் ஏதாவது தில்லு முல்லுச் செய்து, பிடிபட்டு அடி வாங்காவிட்டால் அவனுக்குப் பொழுதே போகாது.

மங்களத்தின் கணவன் கணேசன் ஈரல் கருகி இளம் உயதிலேயே செத்துப் போனபின் அவளது அன்றாட வாழ்க்கையே சிரமமாகிப் போய்விட்டது. கணவன் போகும்போது கடனை மட்டும் விட்டு விட்டுப் போய் விட்டதால் தலையெடுக்கவே முடியவில்லை. மாதம் பிறக்கத் தவறினாலும் கடன்காரர்கள் வரத் தவறவே மாட்டார்கள். காலையில் அப்பம் சுட்டு விற்றும், மாலை யில் வடை மோதகம் போன்ற பண்டங்களைச் செய்து விற்றும் ஏதோ காலத்தை ஓட்டினாள் மங்களம்.

காந்தன் படிப்பிலே படுசுட்டி! ஆனால் குழப்படிக்கும் குறைவில்லை. அம்மா விற்பனைக்காகச் செய்யும் பட்சணங்களைக் களவாடித் தின்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். இன்றைக்கும் அப்படித்தான்…அவன் பாடசாலையிலிருந்து திரும்பியபோது வடை மணம் குப்பென்று கமகமத்தது. அவன் சோறு சாப்பிடும்போதும் அந்த மணம்தான். நொறுக்குத் தீனி ஆசை மனதில் தோன்றிவிட்டதால் சோறு வயிற்றில் இறங்கவில்லை. அம்மாவிடம் மெல்லக் கேட்டுப் பார்த்தான். “அம்மா..எனக்கொரு வடை தா”. “அதெல்லாம் சந்தைக்குக். கொண்டுபோய் விற்பதற்கு… நீ சோத்தை சாப்பிடு…” என்று கூறி மங்களம் மறுத்துவிட்டாள். 

காந்தன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது மங்களம் வேலிக்கரையில் நின்று, அடுத்த வீட்டுப் பரிமளத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள், “இஞ்சார் தங்கைச்சி ஒரு கொத்து அரிசி கைமாத்தாய் தாறியே?… கூப்பன் எடுத்துப் போட்டுத் தாறன்” கைமாத்துக் கேட்பது அம்மாவின் தினசரிக் காரியங்களில் ஒன்று என்பது காந்தனுக்குத் தெரியும். 

“உன்னாணை இல்லை மங்களக்கா எனக்கும் இரவைக்குச் சமைக்க அரிசியில்லை…” பரிமளம் சாதுரியத்துடன் பதிலளித்தாள். மங்களத்திடம் கைமாத்துக் கொடுத்தால் விரைவில் திரும்பி வராது என்று அவளுக்குத் தெரியும். 

அவர்கள் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த காந்தன் இதுதான் சமயம் என்று மெல்ல அடுப்படிக்குள் நுழைந்தான். நான்கைந்து வடைகளை எடுத்துக் காற் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு வேகமாகத் திரும்பிய போது தண்ணீர்ச் செம்பும் மூக்குப் பேணியும் அவன் கால் பட்டு உருண்டது. 

மங்களத்திற்குப் பாம்புக் காது: வேலியருகே நின்றவளுக்கு இந்தச் சத்தம் கேட்கத் தவறவில்லை. “ஆ… அழிஞ்சு போவாரின்ர கோழியடி. நான் வாறன்…” என்று பரிமளத்திடம் விடைபெற்றுக் கொண்டு ஓடி வந்தாள் மங்களம். 

வடையைப் பைக்குள் வைத்துக் கொண்டு திருட்டு முழி முழித்தபடி மெல்ல நளுவ இருந்த மகனை எட்டிப் பிடித்து முதுகில் இரண்டு சாத்துச் சாத்தினாள் மங்களம். காந்தன் ஊரைக் கூப்பிடுகிற மாதிரி அழுது ஆர்ப்பரித்தான். 

“செய்யுறதையும் செய்திட்டு அழுறியே?… கள்ள நாயே!… நொட்டைத் தீனி தின்னாட்ட உன் வயிறு நிரம்பாதாக்கும்…” திட்டியபடி அகப்பையை எடுத்து அகப்பைக் காம்பால் அவனை அடித்தாள் மங்களம். அவன் கையால் தடுத்து திமிறிக் கொண்டு ஓடினான். அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிதான் இது. மங்களம் திட்டித் தீர்த்தாள்.தெருவில் சிறிது தூரம் ஓடிச் சென்ற காந்தன் அம்மா தொடர்ந்து துரத்தி வரவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு ஓடுவதை நிறுத்தினான். அவனுக்கு மூச்சு வாங்கியது. இதயம் படபட என் று அடித்துக் கொண்டிருந்தது. அகப்பைக் காம்பால் அடிபட்ட இடம் கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருந்தது. காயம்பட்ட இடத்தை மறுபடியும் தடவிப் பார்க்கையில் அவனது நெஞ்சு விம்மி வெடிக்கிறது. 

“நான் நல்லாய்ப் படிக்கிறன்… அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலையும் செய்யுறன்… மற்றப் பொடியள் பந்தடிக்கிறபோது நான் வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கேன். அப்படியிருந்தும் ஏன் அம்மா அடிச்சா?… மற்றப் பிள்ளையளைப் போல அது இது வேணுமெண்டு நான் படுத்றேனா?… இந்த வடை மோதங்களிலை தானே ஆசை… அதுக்காக இப்படி அடிக்கிறதே…அம்மாவும்கும்மாவும்…” என பலவாறாக யோசித்தான். அவனுக்கு அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

“இனிமேல் அம்மாவுக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கக்கூடாது… கடைக்குச் சீனி, உழுந்து வாங்கப் போறதுக்கும் நான்தான்…கூப்பன் அரிசி எடுத்து வாறதுக்கும் நான்தான்… ஆட்டுக் கொட்டில் கூட்டுறதும் நான் தான் எல்லாத்துக்கும் நான்தான் வேணும். வடை மட்டும் எனக்குத் தர மாட்டாளாம்… தராட்டிலும் பரவாயில்லை… ஆசையாய்ச் சாப்பிட எடுத்ததுக்கு இப்படி அடிக்கிறதே?… இனி மேற்பட்டு அம்மாவுக்கு ஒரு வேலையும் செய்து கொடுக்கமாட்டன். ஓ அப்பதான் புத்தி வரும்…” காந்தனின் குழந்தை மனது குரங்காய்த் தாவிக் குதிக்கிறது. சிறிது நேரம் தெருவில் நின்று யோசித்தான் காந்தன். “இப்ப வீட்டுக்குப் போனால் உதைதான் கிடைக்கும்…” என எண்ணிக் கொண்டிருக்கையிலே அவனது சினேகிதன் குகன் வந்தான். 

“டேய் காந்தன்… கள்ளன் போலிஸ் விளையாட்டு விளையாடுவோம் வாறியாடா?…” 

“ஓ…விளையாடலாமே -” 

“அப்ப சரி… நான்தான் போலீஸ் – நீதான் கள்ளன்…” என்று ஆரம்பித்தான். 

“நான் மாட்டன்… நான் கள்ளனா? – நான்தான் போலீஸ் நீதான் கள்ளன் … அப்படியெண்டால் தான் வருவேன் என்று கூறினான் காந்தன். அம்மா அவனைக் ‘கள்ள நாயே’ என்று திட்டிய தாக்கம் இன்னும் அவனது மனதிலிருந்து விடுபடவில்லை. “அப்ப விளையாட்டு வேண்டாம்…” என்று விருட்டென்று வீட்டை நோக்கி நடந்தான் குகன். 

காந்தன் வீட்டிற்குத் திரும்பிய போது அம்மா அங்கில்லை. மௌனமாக வந்தமர்ந்து வீட்டுக் கணக்கைப் போட ஆரம்பித்தான். பென்சில் தேய்ந்து ஒரு அங்குல அளவுக்குக் கட்டையாகி விட்டிருந்தது. 

‘அம்மா வந்தவுடன் காசு வாங்கிக் கொண்டு பென்சில் வாங்க வேணும்’ என ஒரு கணம் நினைத்தவன் மறு கணமே சீ… அம்மாகிட்ட இனி ஒண்டும் கேக்கிறதில்லை கேட்டால் வாங்கியா தரப்போறா?… பேச்சுத்தான் வாங்க வேண்டிருக்கும்… ஒரு வாரமாய்க் கணக்கு நோட்டு கேட் கிறேன்…வாங்கியா தந்தா?…நான் வாத்தியாரிட்டையும் அடி வாங்க வேண்டிக் கிடக்குது?… எனக்குப் படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்… புத்தகத்தை மூடி வைத்து விட்டு சாக்குக் கட்டிலில் வந்து படுத்தான் காந்தன். அடிபட்ட இடம் வலித்துக்கொண்டிருக்கிறது. 

சிறிது நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிய மங்களம் மகன் படுத்திருப்பதைக் கண்டாள். “டேய்…இந்த நேரத்திலை என்ன படுக்கை?… கொட்டப் பெட்டியுக்கை இரண்டுரூபா கிடக்கு… எடுத்துக் கொண்டு போய் செல்லாச்சியக்கையின் கடையிலை போய் வெங்காயம் வாங்கிக் கொண்டுவா…” என்றாள். 

“எனக்கு நாளைக்குப் பள்ளிக் கூடம் கொண்டு போக பென்சில் இல்லை… வாத்தியார் அடிப்பர்…” என்று காந்தன் கூறு முன்னரே அம்மா தொடங்கி விட்டாள். ”ஓ… இப்ப அது தான் அவருக்குத் தேவை… ஒரு மாதத்திலை பதினெட்டுத் தரம் பென்சில் வாங்கித் தர அப்பா வா இருக்கிறார்?… உன்னாட்டப் பிள்ளை மாடு மேய்ச்சுச் சம்பாதிக்குதுகள்…” 

“அப்ப நான் கடைக்குப் போக மாட்டன்…” காகப் பதிலளித்தான் காந்தன். 

“இன்னும் அடிவாங்கப் போறியா… முதுகு உழையு தெண்டால் சொல்லு…” 

காந்தன் அசையவில்லை. 

“கடவுளாணை இண்டைக்கு அடி வாங்கிச் சாகப் போறாய் பொடியா…” பூவரசம் தடியொன்றைப் விடுங்கி இலையை உருவினாள் மங்களம்.  காந்தனின் மனதில் பயம் பற்றிக் கொண்டது. எனினும் அம்மாவின் சொற்படி கடைக்குப் போக அவனுக்குத் துளிகூட விருப்பமில்லை. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்ல நினைத்தவனுக்கு திடீரென்று ஒரு ‘ஐடியா’ தோன்றியது. “நான் ஆட்டுக்குக் குழை ஒடிக்கிறேன்…” என்றான். 

அவனது யுக்தி பலித்தது. “அப்ப சரி…நான் கடைக்குப் போய்ட்டு வாறன்.. நீ குழையை வெட்டி ஆடுகளுக்குப் போடு…'” என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் மங்களம். வெற்றிப் பெருமிதத்தில் மிதந்த காந்தன், “அம்மாவுக்கு வேலை செய்து கொடுக்கமாட்டன்… நல்லாய்க் கஷ்டப்படட்டும்…” என்று மனதில் கறுவிக் கொண்டான். 

மங்களம் கடையில் இருந்து திரும்பியபோது காந்தன் தனது முதுகுத் தழும்பு அவளது கண்ணில்படும் வண்ணம் நடை பயின்றான். அவனது எதிர்பார்ப்பு வீண் போக வில்லை. தழும்பு மங்களத்தின் கண்ணில் பட்டது. அருகே வந்த மங்களம், “என் பிள்ளையை நல்லா அடிச்சுப் போட்டன்… ஐயோ மசுக்குட்டி கடிச்ச மாதிரி வீங்கிப் போச்சுது… வலிக்குதா என் ராசா…” என்று ஆதரவோடு அவனை அணைத்தபடி அழுதாள். அவனை அடித்தவள் இப்பொழுது எதற்காக அழுகிறாள். அம்மா அழுவதைப் பார்க்கையில் அவனுக்கும் அழுகை வருகிறது, 

“அம்மா…”,என்கிறான் காந்தன் அன்பொழுக. 

”அழாதே ராசா… உனக்குப் பென்சிலும் கொப்பியும் வாங்கித் தாறன்… இனிமேல் ஒரு நாளும் என் பிள்ளைக்கு அடிக்க மாட்டன்…என் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை யெல்லே…” 

– தீபம்

– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *