தான தர்மங்களின் பலன்
தான தர்மங்கள் செய்வது நல்லதா கெட்டதா? இந்தக் கேள்வியை வாசிக்கும் ஆத்திக அன்பர்கள் புருவம் சுழித்து, “இது என்ன கேள்வி? தான தர்மங்கள் செய்வது நல்லதுதானே! நமக்குப் புண்ணியங்கள் கிடைக்குமே!” என்று சொல்வார்கள்.

ஓரளவுக்கு வசதி உள்ளவர்கள் முதற்கொண்டு பெரும் செல்வந்தர்கள் வரை, தங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் இந்த தான தர்மங்கள் செய்யப்படுவதன் நோக்கமே புண்ணியம் கிடைக்க வேண்டும், இறந்த பிறகு சொர்க்கத்திற்குச் செல்வதற்கு அந்தப் புண்ணியங்கள் உதவும் என்பதற்காகத்தான். இந்து மதத்தில் மட்டுமன்றி, பெரும்பாலும் அனைத்து மதங்களிலுமே மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்கிற சமய நம்பிக்கை உண்டு. அதன்படியே, பூமியில் வாழும் காலத்தில் அவரவர் செய்த புண்ணிய – பாவங்களின் அடிப்படையில், மரணத்துக்குப் பிறகு சொர்க்க – நரகம் நிச்சயிக்கப்படுகிறது என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. எனவே, இந்த பூமியில் வாழும்போது தான தர்மங்கள் உள்ளிட்ட நற்செயல்கள் செய்தால், மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்கான விசாவாக நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதற்காகவே ஆத்திகர்களில் பெரும்பாலானோர் அத்தகைய காரியங்களைச் செய்கின்றனர். இப்படி ஏராளமாக புண்ணியங்கள் செய்தவர்களை புண்ணிய ஆத்மாக்கள் என்று சொல்வார்கள்.
இது ஒரு புறமிருக்க, இந்து மதத்தில் முக்தி அடைவதில் நான்கு விதமான நிலைகள் கூறப்படுகின்றன. அவை, ஏறு வரிசைப்படி, 1. சாலோக்கியம் – இறை உலகில் வாழ்வது, 2. சாமீப்யம் – இறை அருகில் வாழ்வது, 3. சாரூப்யம் – இறை உருவை அடைவது, 4 சாயுஜ்யம் – இறையோடு ஐக்கியமாகிவிடுவது.
ஆத்திகர்களின் பக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதையும், அவர்கள் செய்த இறைப் பணிகள் மற்றும் புண்ணிய காரியங்களின் அளவின்படியும் இந்த நான்கு வித முக்தி நிலைகள் கிடைக்கப்பெறும்.
மரணத்திற்குப் பிறகு இப்படிப்பட்ட சில புண்ணிய ஆத்மாக்கள் வேற்று உலகம் சென்றனர். அங்கே அவர்களுக்கு சாலோக்கிய பதவிதான் கிடைத்தது. கடவுளின் அருகில் இருக்கும்படியான சாமீப்ய பதவி கிடைக்கவில்லை. ஆனால், புண்ணிய ஆத்மாக்கள் அல்லாத சாமானிய ஆத்மாக்கள் மற்றும் சில
நாத்திக ஆத்மாக்களைக் கூட, கடவுள் தன் அருகே வைத்துக்கொண்டு, அவர்களோடு அளவளாவி மகிழ்ந்துகொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் புண்ணிய ஆத்மாக்களுக்கு மகா அதிர்ச்சி.
அவர்கள் கடவுளிடம் கேட்டனர்: “இறைவா! நாங்கள் உன்னிடம் தீவிரமான பக்தி கொண்டிருந்தோம். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக எத்தனையோ இறைப் பணிகள், தான தர்மங்கள் செய்தோம். உங்களுக்கு கை நிறைய காணிக்கைகளும், உங்கள் ஆலயத்துக்கு லட்சக் கணக்கான ரூபால் நன்கொடைகளும் வழங்கினோம். ஆனால் எங்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்த சாதாரணமான – சாமானிய மனிதர்களையும், சில நாத்திகர்களையும் கூட உங்களுக்கு அருகாமையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே…! இது நியாயமா?”
கடவுள் சொன்னார்:
“உங்களுடைய பக்தி, வழிபாடு, காணிக்கை, இறைப் பணிகள், தான தர்மங்கள் யாவற்றிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இறந்ததற்குப் பிறகு நீங்கள் சொர்க்க பதவியை அடைய வேண்டும் என்பதற்காகவே அந்தக் காரியங்களை செய்தீர்கள். ஏழைகளுக்கும் துயரப்படுகிறவர்களுக்கும் நன்மையோ, உதவியோ செய்யவேண்டும் என்பதற்காக செய்யவில்லை.
“ஆனால், இங்கே இருக்கிற இந்த சாமானிய மனிதர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழைகள், அபலைகள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மன நலமற்றோர், வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டோர் போன்றவர்களுக்கு தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை, ஒத்தாசைகளை, சேவைகளைச் செய்தனர். அதற்குக் கைமாறாக அவர்கள் அந்த மனிதர்களிடமோ அல்லது என்னிடமோ, எதையும் எதிர்பார்க்கவில்லை.
“அதே போலத்தான் இந்த நாத்திகர்களும் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட அனேக விதமான நற்காரியங்களையும்; அரசியல் பிரச்சனைகள், ஜாதி – மதப் பிரச்சனைகள் மற்றும் பொது வாழ்வியல் தொடர்பான எண்ணற்ற சமூக சேவைகளையும் மக்களுக்கு செய்தனர்.
“பிரதிபலனை எதிர்பார்த்து ஒத்தாசை – உதவிகளும், தான தர்மங்களும் செய்வது சாதாரணமான காரியம். ஒரு வகையில் அது வியாபாரம்தான். எப்படி என்னிடம் நீங்கள் வேண்டுதல் செய்யும்போது ‘நீ எனக்கு இதைச் செய்; நான் உனக்கு அதைச் செய்கிறேன்’ என்று வியாபாரம் பேசுகிறீர்களோ, அதே போலத்தான் தான தர்மங்களையும் நீங்கள் வியாபாரமாகவே செய்கிறீர்கள். உங்களுடைய நம்பிக்கை, பக்தி, வழிபாடு, பிரார்த்தனை, வேண்டுதல் இவை யாவுமே உலகாயத வாழ்வின் தெய்வீக வியாபாரமாகவே இருக்கிறது.
மரணத்திற்குப் பிறகான பரலோக வாழ்விற்கு விசாவாகவே நீங்கள் புண்ணிய காரியங்களைச் செய்கிறீர்கள். எனவேதான் நீங்கள் செய்த நற்காரியத்திற்காக, உங்களுக்கு சொர்க்க பதவி அளிக்கப்பட்டாலும், எனது அருகே இருக்கும் சிறப்புத் தகுதி வழங்கப்படவில்லை.
“ஆனால் இந்த மனிதர்கள் என்னுடைய பக்தர்களாக இல்லாவிட்டாலும், நாத்திகர்களாகவே இருந்தாலும், நீங்கள் செய்த தானதர்மங்கள் அளவுக்கு அவர்கள் செய்யாவிட்டாலும், அவர்கள் செய்த நற்செயல்கள் மிகச் சிறிதோ – பெரிதோ எப்படி இருந்தாலும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தமது ஒத்தாசை, உதவி, சேவை ஆகியவற்றைச் செய்தனர். ஆகவேதான் எனக்கு அருகில் இருக்கும் சிறப்புத் தகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது!”