தவறுகளை மறைப்பது…
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 9,206
“எனக்கு மனசு ரொம்ப பாரமாய் இருக்கிறது” என்ற சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“என்ன பிரச்சனை? என்ன ஆயிற்று” என்று அவனைத் தேற்றும் விதத்தில் கேட்டார் குரு.
“குருவே நான் ஒரு தப்பு செய்து விட்டேன். அது என் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது”
வந்தவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்த்தது. அவனுக்கு ஒரு கதையைச் சொல்லத் துவங்கினார்.
“ராணி, ராமுனு அக்கா, தம்பி இருந்தாங்க. சின்னப் பசங்க. ஒரு தடவை லீவுக்கு கிராமத்துல இருக்கிற பாட்டி வீட்டுக்குப் போனாங்க. அங்க பெரிய தோட்டம் இருந்துச்சு.ஆடு,மாடு கோழினு நகரத்துல பாக்க முடியாத விஷயம்லாம் இருந்துச்சு. ராமுக்கு ரொம்ப உற்சாகம். மாமரத்துல இருக்குற மாங்காயை கல்லடிச்சு விழ வைக்கிறதுதான் அவன் பொழுதுபோக்கா இருந்தது.
ஒரு தடவை அப்படி கல்லடிச்சபோது, அந்தக் கல் பாட்டி ஆசையா வளர்த்த ஒரு கோழி மேல பட்டு அது செத்துருச்சு.பாட்டி திட்டுவாங்களோனு ராமுவுக்கு பயம் வந்துடுச்சு. உடனே அந்தக் கோழியை தூக்கிட்டுப் போய் ஓரு மூலைல இருந்த குப்பைக்குள்ள போட்டு மூடிட்டு வந்துட்டான். ஆனா அவன் பிரச்சனை அங்க் முடில.அவன் அப்படி செய்யறதை அவனோட அக்கா ராணி பாத்துட்டா. தம்பியை மிரட்ட ஆரம்பிச்சுட்டா. ‘பாட்டிக்கிட்ட சொல்லிடுவேன், மாட்டிவிட்டுருவேன்’ என்று மிரட்டியே அவனை நன்றாக வேலை வாங்கினாள். ராமுவுக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு. அக்காகிட்டருந்து எப்படி தப்பிக்கறதுனு அவனுக்கு தெரியல. அதனால அவள் சொல்றதையெல்லாம் செய்தான்.
இந்த மிரட்டலை நாலஞ்சு நாளுக்கு மேல் தாங்க இயலவில்லை. பாட்டியிடம் போய் அழுது, உண்மையை சொல்லிவிட்டான். அப்போது பாட்டி, “இந்தத் தப்பை முதல்லேயே என்கிட்ட சொல்லியிருந்தினா இவ்வளவு மன வேதனை இருந்திருக்காதுல. தப்பை ஒத்துக்கிறதுனால நிறைய பிரச்சனைலருந்து தப்பிச்சுக்கலாம்” என்று சொன்னார்.
இந்தக் கதையை குரு சொல்லி முடித்தபோது வந்தவனுக்கு தான் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: தவறுகளை மறைப்பது தலைவலிகளை கொடுக்கும்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)