தலை கீழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 67 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புறப்படுவதற்கு முன்னால் மீண்டும் ஒரு தடவை மாணிக்க கங்கையில் மூழ்கியெழுந்தான் புஷ்பராஜன். 

பச்சைக்கம்பளம் விரித்தது போல் ; பசும்புற்களுக் கும்… காட்டுப் பூக்களுக்கும் மத்தியில் “ஸ்” என்ற பேரிரைச்சலுடன் பளிங்கு போல் பாய்ந்து செல்லும் மாணிக்க கங்கையில் எத்தனை தடவை மூழ்கி எழுந்தாலும் புஷ்பராஜனுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 

இது இன்று நேற்று ஏற்பட்ட பழக்கமும் அல்ல. மூன்று வயதிலிருந்தே எற்பட்ட பழக்கம் அவனது தந்தை சிவலிங்கநாடார் திருநெல்வேலியிலிருந்து முதன் முதலாக இலங்கைக்கு வந்த போது வெறுங்கையுடன் தான் வந்தார். 

ஆனால் அவரது உடலுழைப்பு – எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் குணம்-அதிர்ஷ்டம், எல்லாமாகச் சேர்ந்து புஷ்பராஜன் பிறக்கும் பொழுது தெமட்டக் கொடையிலுள்ள பிரபலமான ‘அம்பாள் கபே’க்கு அவரை உரிமையாளராக்கியிருந்தது. 

விபூதி அணிந்த நெற்றி… அதனிடையே பளிச்செனத் துலங்கும் சந்தன குங்குமம்… வாய்நிறைய வெற்றிலை பாக்குடன் இதழ்களில் நிறைந்திருக்கும் புன்சிரிப்பு அனை த் தும் ஹோட்டலைச் சுற்றியுள்ள தமிழர்களை மட்டுமல்ல; சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. அதனால் ‘அம்பாள்கபே’க்கு நல்ல வியாபாரம். சிவலிங்கத்தின் கையில் பணம் தாராளமாகப் புரண்டது. 

அதனாலெல்லாம் சிவலிங்கம் தெய்வ நம்பிக்கை யையோ பூர்வீகத்தையோ மறந்துவிடவில்லை. வருடா வருடம் கதிர்காமத்துக்குச் சென்று முருகனை வழிபடுவதை ஒரு தவமாகவே மேற்கொண்டிருந்தார். 

புஷ்பராஜனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த நியதி மாறியதில்லை. ஒவ்வொரு தமிழ் வருடப்பிறப் பன்றும் குடும்பத்துடன் வந்து முதலில் முருகனை வழிபட்டு விட்டுப் பின்னர் அதற்குப் பக்கத்திலே இருக்கும் கிரிவி காரைக்கும் சென்று வருவார். 

தந்தை காலத்திலிருந்து வழக்கத்திலுள்ள இப்பழக் கத்தை தந்தை மறைந்த பின்னரும் புஷ்பராஜன் ஒழுங் காகக் கடைப்பிடித்து வந்தான். 

ஆனால் அவனது சின்னப்பிராயத்தில் பார்த்தது போல் கதிர்காமம் இப்பொழுது இல்லை. கோயிலுக்குப் பக்கத்திலேயுள்ள கிரிவிகாரையின் கட்டிடங்கள் பெரிதாகி விட்டன. ஆங்காங்கே வழியெங்கும் புத்தபிக்குகள் சின்னச்சின்ன விகாரைகளாகக் கட்டிக் கொண்டு உட் கார்ந்து விட்டனர். கோயிலைச்சுற்றி கருவாடும், மீன் வறுவலுமாக மாமிச விற்பனை பெருகிவிட்டது. எப் பொழுதும் ஏதோ ஒரு திசையிலிருந்து சிங்களத்தில் ஒதப் படும் ‘பிரீத்’தின் ஒலி காதில் விழுந்துகொண்டே யிருந்தது. 

இதனால் அங்கேயுள்ள முருகன் கோயிலின் கீர்த்தி மங்கிக்கொண்டே வந்தது. போதிய பராமரிப்பு இல்லாமல் கிழிந்த திரைச்சீலைகளும் காரை விழுந்த மண் சுவர்களுமாய் இந்துத் தெய்வங்களின் பூஜை மண்டபங் கள் பாழடைந்து கிடப்பதைப் பார்க்கும்பொழுது அவனது நெஞ்சுக்குள் அவனையும் அறியாமலொரு வேதனை பிறக்கும். கோயிலுக்கு ஏதாவது பண்ண வேண்டும்போல் மனசு அடித்துக்கொள்ளும். ஆனால் என்ன செய்வது? 

தமிழர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கட்டிய இராமகிருஷ்ண மடமே இப்பொழுது தமிழர்கள் கையில் இல்லை. அரசுடமையாக்கப்பட்டு புத்தபிக்குகளின் தங்குமடமாக மாறிவிட்டது. இவை யெல்லாவற்றையும் உத்தேசித்து வருடந்தோறும் குடும் பத்தை கதிர்காமத்துக்கு அழைத்துச் செல்வதை நிறுத்தி விட்டாலும்கூட புஷ்பராஜனால் ஒருமுறையேனும் போகா மல் இருக்க முடிவதில்லை. 

எத்தனை சந்நிதிகளுக்குச் சென்று வழிபட்டாலும் கிடைக்காத மன அமைதியை குன்றிலுள்ள குமரனும் இவ் மாணிக்க கங்கையும் அவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தது. 

இவ்வருடம் தமிழ்ப் புது வருடத்திலன்று புஷ்பராஜ னுக்கு கதிர்காமம் வரமுடியவில்லை. பல்வேறு வகையான தடங்கல்கள். ஆனால் அதுவே அவனுக்கொரு மன உறுத் தலாக இருந்து கொண்டிருந்தது. நான்கைந்து மாதங்கள் ஒத்திப் போட்டுக் கொண்டே போன அப்பயணத்தை திடீரென ஒரு சனிக்கிழமையன்று மேற்கொள்ள வேண்டு மென முடிவெடுத்தான். 

“பானு, இரண்டு நாளைக்கு கடை நிர்வாகத்தை நீயே பார்த்தக்கொள். நான் கதிர்காமம் சென்று விட்டு இரண்டே நாளில் திரும்பி விடுகிறேன்” என்றான். 

பானுவுக்கு அதில் அவ்வளவு இஷ்டம் இல்லை. இருப் பினும் தன் கணவன் எடுக்கும் சில முடிவுகளை மாற்ற முடியாதென அனுபவத்தில் தெரிந்தவளாதலால், 

“என்னங்க, தனியாகவா போகப்போறீங்க? முன்னரைப்போல் தமிழர்கள் அந்தப் பக்கத்துக்குச் செல்ல முடியாதாமே. வேண்டுமானால் உங்கள் நண்பர் கள் யாரையாவது கூட்டிச் செல்லுங்களேன்” என்றாள். 

“சேச்சே, அதெல்லாம் வெறும் புரளி. நான் என்ன புதிதாகவா போகிறேன். மூன்று வயதிலிருந்தே பழக்கப் பட்ட இடம்” பானுவின் பேச்சைப் புஷ்பராஜன் காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை, பயணத்தை நிறுத்தவும் இல்லை. 

கங்கையில் மூழ்கியெழுந்ததும் கோயிலுக்கு வந்துழ்கியெழுந்தது விபூதியை நெற்றி நிறைய அணிந்து கொண்டு திரும்பிய புஷ்ராஜனை, வெகு நாளாக அங்கு அர்ச்சனைத்தட்டு வியாபாரம் செய்யும் வியாபாரியொருவர் அவசரமாகக் கூப்பிட்டார். 

“சார், உங்களுக்கு ஏதாவது தெரியுமா? கொழும் பெல்லாம் பெரிய கலவரம் மூண்டிருக்கிறதாய்ப் பேசிக் கொள்கிறார்களே. தமிழர்களையெல்லாம் கண்ட கண்ட இடத்தில் அடித்துக் கொல்கிறதாகக்கூட இன்று காலை யில் ஒருவன் கூறினான். நான் கடையை மூடிவிட்டு தெரிந்த சிங்கள வீட்டில் போய் இருக்கலாமென நினைக்கிறேன்; இந்தச் சமயத்தில் நீங்கள் தனியாகக் காரில் போவது நல்லதல்ல…’ 

“எங்கேயாவது ஒன்றிரண்டு நடந்திருந்தாலும் கூட வதந்திகளைப் பரப்பவென்றே காத்திருக்கும் கோஷ்டிகள் அதற்கு தலை, வால் எல்லாம் வைத்துப் பெரிதுபடுத் தியிருப்பாங்க… ஜே. ஆரின் ஆட்சியிலே தமிழனுக்குப் பாதகமாய் எதுவும் நடக்காதென்பதில் எனக்கு நல்ல நம்பிக்கையிருக்கிறது. அப்படி எதனையாவது எதிர்க் கட்சிச்காரங்க தூண்டிவிட்டிருந்தாலும்கூட அவர் அடக்கி விடுவார். அப்படித்தான் இல்லாவிட்டாலும் நான் போகாமல் இருக்க முடியுமா பெரியவரே… மனைவி குழந்தைகள்” 

புஷ்பராஜன் கடைக்காரருக்குப் பதில் கூறிய படியே ‘ஷேர்ட் பாக்கெட் டில் கைவிட்டு கார்ச்சாவியை கையிலெடுத்தான். 

அம்பாந்தோட்டையைக் கடந்ததும் காலி வீதியில் சில இடங்களில் புகை மண்டலங்கள் தெரிவதுபோல் புஷ்பராஜனின் கண்ணில்பட்டது. 

“சட்”டென்று காரின் வேகத்தைக் குறைத்த பொழுதும் எதனையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும ஐம்பது, அறுபது யார்ட் போய்விட்டால் வழக்கமாக அவன் ‘டீ’ குடித்து விட்டுச் செல்லும் சாயபுவின் ஹோட்டல் வந்துவிடும். விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காரின் வேகத்தை மீண்டும் அதிகரித்தான். 

தூரத்தே வரும்பொழுதே சாயபு கடைக்கெதிரே சிங்களக் குப்பலொன்றும் சில போலீஸ்காரரும்,ராணுவத் தினருமாகச் சேர்ந்து நின்று சிரித்தபடியே ‘டீ’ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 

அவர்கள் சேர்ந்து நின்று பேசும் உற்சாகம், கைகளில் வைத்திருக்கும் பயங்கரமான ஆயுதங்கள், கண்களில் தெரி யும் கொடூரம், சாயபு கடைக்கு இரண்டு கடைகள் தள்ளி சின்னாபின்னமாக்கப் பட்டுக் கிடக்கும் தமிழனின் கடை… 

புஷ்பராஜனின் நெஞ்சுக்குள் திகில் பரவியது. என்ன செய்வதென்று அறியாது. கைகள் பதறின. அவர்கள் கண்களில் படாமல் எப்படித் தப்பிச் செல்வது? 

வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது. 

சிங்களக் கும்பலுக்குப் பக்கத்தில் நின்ற வானின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் நிர்வாணமான உடல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பிணத்தின் கழுத்தில் ‘தமிழ்ப் பெண்’ எனச் சிங்களத்தில் எழுதிய அட்டையொன்றும் கட்டிவிடப்பட்டிருந்தது. 

புஷ்பராஜனின் இரத்த நரம்புகள் அனைத்திலும் சூடேறியது. இதயம் கொதித்தது. இந்தச் சோம்பேறிக் கூட்டத்துக்கு இவ்வளவு தலைக்கொழுப்பா…? 

‘டீ’ குடித்தவர்கள் ஒவ்வொருவராய் அவ்வானுக்குள் ஏறுவதற்காகத் திரும்பும் சமயம் புஷ்பராஜனின் காரின் இரைச்சல் அவர்கள் கவனத்தை ஈர்த்தது. 

சிங்களக் குண்டர்களில் ஒருவன் நடுவீதிக்கு ஓடிவந்து இரண்டு கைகளையும் ஆட்டிக் காரை நிறுத்தினான். 

நெற்றியிலுள்ள விபூதியை அவசரமாக அழித்து விட்டு நிமிர்ந்தான் புஷ்பராஜன். 

காருக்குள் அவன் குனிவதற்கு முன்பாகவே புஷ்ப ராஜனுக்குப் பக்கத்தில் இருந்த அர்ச்சனைத் தட்டை அவன் பார்த்து விட்டதற்கு அடையாளமாய்… 

“அடோ… தெமிலக்…” எனச் சிங்களத்தில் கூச்சலிட்டான். 

ராணுவ வீரர்கள் கும்பல்கள் அனைத்தும் அடுத்த ள்னாடி அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. 

இவர்களிடம் மாட்டிக் கொண்டால் ஆபத்து. நடப் பது நடக்கட்டும். அவர்கள் கையில் சிக்காமல் தப்பி விட்டால் போதும். 

புஷ்பராஜனின் காலும், கையும் அசுர வேகத்தில் இயங்கின. ஒரு வெட்டு வேட்டிக் காரை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் பறந்தான். ஐம்பது க ஜ தூரம் கூடப் போயிருக்க முடியாது. ‘டமார்’ என்றொரு சத்தம். 

கண் இமைக்கும் நேரத்தில் காரின் பின் பக்கத்தில் தீ மூண்டது. அவனது ‘கண்ட்ரோலு’க்கும் அடங்காமல் கார் தெருவோரத்து மரமொன்றில் மோதி  நின்றது. 

நெஞ்சிலே பலமான அடி. ஒரு சில நிமிடங்கள் எதுவுமே புரியவில்லை. ஒரு கணந்தான்; மறுவினாடி… 

துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர் தன்னை நோக்கி ஓடிவருவதைக் கண்டான். உயிர்ப்பயம் புஷ்பராஜனை உலுக்கியது. வலியையும் மறந்து கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியபடியே காரில் இருந்து கீழே குதித்தான் 

“தெமில ப்பல்லா துவாண்டத பளான்னே?” 

”தமிழ் நாயே! ஓடவா பார்க்கிறாய்?” – ரானுவ வீர னொருவன் தன் துப்பாக்கி முனையினால் அவனது அடி வயிற்றில் இடித்தான். 

“சார், பிளீஸ்… என்னை விட்டுவிடுங்கள். நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன் சார். எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்” புஷ்பராஜன் பேசியபடியே தன் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழட்டினான். மோதிரத்தை உருவியெடுத்தான். ‘பாக்கெட்’டிலிருந்த பணத்தை வெளியே எடுத்தான். 

எல்லாவற்றையும் அவர்கள் கையில் கொடுத்துவிட்டு, “சார், என்னை மட்டும் விட்டுவிடுங்கள். நான் பிள்ளை குட்டிக்காரன்.” 

அவனது உடமைகளை வாங்கித் தன் ‘பாக்கெட்’டில் போட்டுக் கொண்ட ராணுவவீரன் விஷமமாகச் சிரித்த படியே பக்கத்தில் நிற்பவனிடம் எதையோ கூறினான். 

”உங்களைத் தெய்வமாய் நினைச்சுக் கும்பிடறேன் சார்… என்னை விட்டுவிடுங்கள்’ கடைசி நேர வாய்ப் பையும் தவறவிடக் கூடாது என்பதுபோல் கெஞ்சினான் புஷ்பராஜன். 

வயிற்றிலிருந்த துப்பாக்கி முனை சற்று நெகிழ்ந்தது. ‘கந்தா… முருகா… கதிரமலையானே… காப்பாற்று…’ மனதுக்குள் பிரார்த்தித்தான். 

பின்னாலிருந்த ஒருவன் ‘சட்’டெனத் தாம்புக் கயிறொன்றை அவன் நெஞ்சுப் பக்கமாக வீசினான். 

”ஏன்…? ஏன்… ஏ…ன்?’ புஷ்பராஜன் பதறினான். 

அவன் உதறல்களையும் மீறி விறுவிறென அவன் கையையும், காலையும் உடலுடன் சேர்த்துப் பிணைத் தார்கள், சிங்களக் குண்டர்கள். 

“என்னை விட்டுவிடுங்கள்… விட்டுவிடுங்கள். தெய்வ சத்தியமாய் நான் ஜே… ஆருக்கு ‘வோட்’ போட்டவன், என்னை விட்டுவிடுங்கள்” புஷ்பராஜன் கண்களில் நீரோடக் கதறினான். 

‘பட்’டென்று குண்டுக் கட்டாக அவனைத் தூக்கியவர்கள் பற்றியெரியும் நெருப்புக்குள்ளே வீசினார்கள் உடலைத் தகித்த தீப்பிழம்புகளுக்கிடையே புழுப்போல் நெளிந்தான் புஷ்பராஜன். 

“முருகா…கந்தா…கணேசா… என்னைக் காப்பாற்றுங் கள்… காப்… பாற்றுங்கள்…காப்…” தன் நினைவுள்ள வரை கதறினான். 

புஷ்பராஜனின் அலறல் அடங்கும் வரை வேடிக்கைப் பார்த்த சிங்களக் கும்பல் மீண்டும் அவ்வானில் ஏறி ஊர்வலத்தை ஆரம்பித்தது. 

வானின் பின்புறம் தலைகீழாகத்தொங்கிய தமிழ்ப் பெண்ணின் உடல் ஊஞ்சலாடியது. 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *