கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 3,501 
 
 

“இது என்னையா இது? தர்மம் ஆறணா என்று ஒரு கணக்கு எழுதி வைத்திருக்கிறீரே? எத்தனை நாளாய்ப் புண்ணியம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறீர்?” என்று கேட்டேன் நான்.

“அடேடே! அது உங்கள் கண்ணில் படக்கூடாது என்றல்லவா வைத்திருந்தேன்? தேடிப்பிடித்துப் பார்த்துவிட்டீரே!” என்றார் புஸ்தக வியாபாரி விசுவநாதன்.

“விஷயத்தைச் சொல்லலையா என்றால்…?”

“அப்புறம் தனியாய் இருக்கும்போது சொல்லுகிறேன். இதோ யாரோ பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வருகிறார்கள். அவர்கள் காரியத்தை முடித்துக் கொண்டு போகட்டும்” என்றார் வியாபாரி.

வந்தவர்கள் சிலர் எலிமெண்டரி ஸ்கூல் உபாத்தியாயர்கள். அவர்களும் புஸ்தக வியாபாரியும் புஸ்தக விஷயமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் கையில் அகப்பட்ட ஒரு புஸ்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு என் கவனத்தைப் புஸ்தகத்திலும் அவர்களுடைய பேச்சிலும் பாதிப் பாதியாகச் செலுத்தினேன். வியாபாரிக்கும் உபாத்தியாயர்களுக்கும் இடையே நடந்த பேச்சு ரூபாய் அணா பைசாவைப் பற்றியதுதான். விசுவநாதன் அந்த உபாத்தியாயர்களின் மூலமாக விற்ற புஸ்தகங்களுக்கு அவர்களுக்கு ஏதோ கமிஷன் தரவேணும்போல் இருந்தது. அதைப்பற்றிப் பைசா பைசாவாகப் பேரம் நடந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாகக் காரியத்தை முடித்துக் கொண்டு அவர்கள் போனபிறகு நான் புத்தக வியாபாரியை, “இவர்களுக்கு வேறே கமிஷனர்” என்று கேட்டேன்.

“அதை ஏன் கேட்கிறீர்கள்? எதை எடுத்தாலும் எல்லாரும் நம்மைப் பிடுங்கித் தின்கிறதிலேதான் இருக்கிறான்கள்.”

“அது கிடக்கட்டும். உங்கள் தர்மச் செலவுக் கணக்கைச் சொல்லுங்கள். தனியாகச் சொல்லவேண்டிய விஷயம் அப்படி என்ன அது?” என்று மறுபடியும் கேட்டேன் நான்.

சிறிது தயங்கினார் நண்பர். நான் அதற்குள், “நீராவது தர்மம் செய்வதாவது ஐயா! நம்பமுடியவில்லையே! பிச்சைக்காரர்களைக் கண்டால் கார்ப்பொரேஷனுக்கு மனு எழுதிப்போட வேணும் என்று சொல்லுகிறவர் அல்லவா நீர்?” என்றேன்.

நண்பர் கொஞ்சம் தயங்கித் தயங்கியே சொன்னார்: “இன்று வந்த பார்ஸலைப் பிரித்துச் சில புஸ்தகங்களை எடுத்துக் கொண்டு நான் பேட்டைத் தெரு எலிமெண்டரி ஸ்கூலுக்குப் போனேன். அங்கேயும் உபாத்தியாயர்களின் மூலமாகத்தான் விற்பனை. புஸ்தகங்களை உபாத்தியாயரிடம் கொடுத்து விட்டு நான் வெளியேறும் முன் பள்ளிக்கூடத்துப் பையன்களும் பெண்களுமாக ஸார் ஸார் என்று மொய்த்துக் கொண்டனர். அந்தக் களேபரத்தில் என் புஸ்தகங்கள் எல்லாம் வீணாகாமல் இருக்க வேண்டுமே என்று எனக்குப் பயமாயிருந்தது. அது உபாத்தியாயர் சமத்து; புஸ்தகங்களை அவரிடம் கொடுத்தாகிவிட்டது; அவர் பாடு என்று எண்ணிக் கொண்டு நான் வெளியேறும்போது வெளியே வராந்தாவில் தனியாகத் தூணில் சாய்ந்துகொண்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்த ஒரு சிறிய பெண்ணைப் பார்த்தேன். அது அப்படி அழுதுகொண்டிருந்தது பரிதாபகரமாய் இருந்தது மட்டுமல்ல; நான் புஸ்தகம் விற்கக் கொண்டுபோய்க் கொடுக்கப் போனபோது அது அப்படி அழுது கொண்டிருந்தது அபசகுனம்போல எனக்குப் பட்டது. நான் சாதாரணமாக, ‘ஏனம்மா அழறே?’ என்று அதை விசாரித்தேன். அது விசித்துக் கொண்டே…. ம் அப்பாரு வூட்லே இல்லே! பொஸ்தகம் வாங்க ஆயா காசு தராது. பொஸ்தகம் எல்லாம் வித்துப் போய்விடும் அப்பாரு வரத்துக்குள்ளே…ம்…ம்!’ என்று சொல்லிற்று ‘விக்காது அம்மா; நான் வச்சிருந்து தாரேன்’ என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதன் அழுகை நிற்பதாக இல்லை . இது ஏது சனியன், இதில் மாட்டிக் கொண்டேமென்றுதான் இருந்தது எனக்கு. அது புஸ்தகத்தை வாங்கிப் படிக்குமோ படிக்காதோ? இப்பொழுதே புதுப் புஸ்தகத்தை வாங்கிவிட இவ்வளவு ஆர்வம். இந்தப் பச்சைக் குழந்தைகளின் ஆர்வத்தைக் கொண்டுதானே நான் காசு பண்ண வேண்டியிருந்ததென்று எனக்கே வெட்கமாயிருந்தது. உபாத்தியாயரிடம் போய் அவளுக்கு வேண்டிய புஸ்தகங்களை வாங்கிக் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. அவர் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்து விடுவார். அதற்கு வேறு பதில் சொல்லி அழவேண்டி வந்துவிடும். அவளுக்கு எத்தனை அணா வேணுமென்று விசாரித்து அவள் கையில் ஆறணாவைக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன்…. இதுதான் தர்மம்; ஆறணாக் கணக்கின் விபரம்.”

இதை அவர் தமக்கு இயற்கையான குரலில் சொல்லவில்லை. அப்படிச் செய்துவிட்டு வந்தது பற்றி அவருக்கே வெட்கமாயிருந்தது போலும். நான், “நீரும் இப்படித் தர்மம் பண்ண ஆரம்பித்து விட்டால் ஊரில் மழை பெய்தால் தாங்காதுங்காணும்!” என்றேன்.

அச்சமயம் ஒரு சிறுமி உள்ளே வந்தாள். அவள் விசுவநாதனை அணுகி அவன் கையில் ஆறணாவைக் கொடுத்துவிட்டு, “அப்பாரு வந்த வொடனே வாங்கிட்டு வந்துட்டேன். பாக்கிப் பொஸ்தகம் நாளைக்கு வாங்கிக்கலாம்னுது அப்பா” என்றாள்.

ஆறணா தர்மம் பெரிதல்ல. அந்தப் பெண்ணின் குதூகலம் உண்மையிலேயே பெரிசுதான் என்று எனக்குத் தோன்றியதால் நான் என் நண்பரை அப்போது மேலும் கேலி செய்ய ஆரம்பிக்கவில்லை.

– 1944

1 thought on “தர்மம்

  1. வறுமையில் செம்மை என்கிற பழமொழிக்கு அருமையான உருவம் கொடுத்த கதை.
    “அப்பாரு வந்த வொடனே வாங்கிட்டு வந்துட்டேன். பாக்கிப் பொஸ்தகம் நாளைக்கு வாங்கிக்கலாம்னுது அப்பா” என்ற அந்தச் சிறுமியின் மூலமாக,
    பிறர் காசுக்கு ஆசைப்படக்கூடாது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை போன்ற விழுமியங்களை சொன்ன விதம் அருமை.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *