தமிழுக்கு அமுதென்று பேர்
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஏன் டல்லாயிருக்கே…”
அவன் குரல் ஒலித்ததும், அவனுக்கு இணைப்புக் கொடுத்தாள். சில விநாடிகளில் திரையில் அவன் முகம் விரிந்தது.
“ஹாய்”
“ஹாய், என்ன அதிசயம்… உனக்கு நேரம் கிடைச்சிருக்கு.”
“ஏய், என்ன அப்படி சொல்ற?”
“பிறகென்ன, என் முகத்தகூட நீ இதிலதான் பார்க்கிறே?”
“என்ன ஆச்சு உனக்கு?”
“என்ன… எனக்கு நீ ஒதுக்கிற இந்த சில விநாடிகளைகூட உன்னோட கணினியால பொறுக்க முடியலியா?”
“இரு அத ஒரு வழி பண்றேன். கணினியின் ஒரு இணைப்பை துண்டித்தான். அதன் குரல் ஓய்ந்தது. இப்ப பேசு.”
“நான் இந்தியா போகணும்.”
“எதுக்கு?”
“நம் மகன் தமிழனுக்குத் தமிழ் சொல்லித் தரணும்.”
“இந்தியாவில சொல்லித் தர்றாங்களா.”
“எங்க முன்னோர் வாழ்ந்த ஊர் இருக்கு. அங்க தமிழ் தெரிஞ் சவங்க இருக்காங்களாம். இப்பத்தான் கண்டுபிடிச்சேன்.”
“உண்மையாவா… அப்ப நீ சந்தோஷமாதானே இருக்கணும். ஏன் வருத்தமா இருக்கே?”
அவனின் முகத்தை சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள்.
அவள் கண்கள் பனித்தன.
“ஏன் அழறே?”
“அவங்களுக்கும் பேசத்தான் தெரியுமாம். எழுதத் தெரியாதாம். எவ்வளவு கொடுமை பார்த்தியா…”
“என்ன…”
“ஆமாம்…”
“என்ன சொல்ற நீ, பேசத் தெரியுதுங்கற, எப்படி எழுதத் தெரியாமப் போகும்?”
“ஆதிகாலம் மாதிரி மண்ணில எழுதி படிக்கிறாங்களா… இல்ல பேப்பர்ல எழுதி படிக்கிறாங்களா?”
“கீ போர்ட்ல அடிக்கிறதாதான் இருக்கட்டுமே, எழுத்து தெரியாமலா போயிடும்…”
“புரியாத மாதிரி பேசற, இப்ப யாரு மொழி படிக்கிறாங்க. படித்தே ஆகணும்ங்ற கட்டாயம் இருக்கிறாலதான இங்கிலீஷ படிக்கிறாங்க, அதுவும் இரண்டு வருஷத்துக்கு தானே, ஏ, பி, சிய கையில எழுதியா படிக்கிறாங்க. ஷேக்ஸ்பியர எத்தன பேருக்கு தெரியும் சொல்லு.”
“இது 2200ம் ஆண்டுங்கிறத நீ மறந்திட்டியா. அவங்களுக்கு தமிழ் எழுதத் தெரியாட்டி என்ன, கணினியில அடிக்கவாவது தெரியுமில்லையா…”
“இல்ல, அவங்களும் நம்ம மாதிரிதான். தமிழ இங்கிலீஷ் எழுத்துக்களாதான் எழுதறாங்க.”
“பிறகு எதுக்கு நீ அங்க போகணும்?”
“அங்க முந்நூறு பேருக்கு மேல வாழறாங்க, அவங்க எல்லாருமே தமிழ் பேசறவங்க. இந்த ஒரு இடத்திலதான் தமிழ் தெரிஞ்சவங்க இவ்வளவு கூட்டமா இருக்கிறாங்க. ஆனா அவங்களுக்குகூட தமிழ் எழுதத் தெரியலயேங்கிறத என்னால தாங்க முடியல…”
“பைத்தியக்காரி மாதிரி பேசாத. இன்னிக்கு மொழி தெரிய னும்ன்னு அவசியமா என்ன… அவசியம் இருந்தாதானே படிக்கிறதுக்கு. இங்கிலீஷே பலரும் எழுதறதில்ல.”
“என்ன, நீயும் இப்படிப் பேசற… ஹசி ஜப்பானிய பரம்பரையில வந்தவர். அவர் ஜப்பானிய எழுத்துகள எழுதலியா? அவர் தன் மொழிமேல எவ்வளவு பற்றோட இருக்கிறாரு, கிடைச்ச வேலை யெல்லாத் தையும் விட்டுட்டு, முழு நாளையும் ஜப்பானிய மொழி சொல்லித்தர்றதுக்குச் செலவிடுறாரு…”
“அவர் சொல்லிக் கொடுத்தாலும் நேரத்த செலவழிச்சு படிக்கிறதுக்கு அவர்கிட்ட எத்தனை பேர் வர்றாங்க சொல்லு?”
“கொஞ்சப் பேராவது படிக்கிறாங்களா இல்லையா…. அவங்க ஒவ்வொருத்தரும் நாளைக்கு இன்னும் பல பேருக்குச் சொல்லித் தருவாங்க. அவர மாதிரி தமிழ் சொல்லிக் கொடுக்கிறவங்க ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க. என்னோட தமிழன், உண்மையாவே தமிழனா இருக்கணும். அவன் தமிழ் தெரிஞ்சவனா இருக்கணும். அவன் இன்னும் பல பேருக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கணும்.”
“உனக்குப் பலதடவ சொல்லியிருக்கேன், ‘என்னுடையது’ன்னு இனி சொல்லாதே. நீ இப்படி பேசறது அரசாங்கத்துக்கு தெரிஞ்சா பிறகு அவன அவங்க எடுத்துட்டு போயிடுவாங்க. குடிமக்கள் எல்லாருமே அரசாங்கத்தோட சொத்து. அதுவும் தமிழன் மத்த பிள்ளைங்களபோல கண்ணாடி பெட்டியில வளராத அதிசய பிள்ளை. உன் வயித்திலேயே வளர்ந்திருக்கான். அவன நீ சுமந்து பெத்ததாலதான் இவ்வளவு சலுகை உனக்குக் கிடைச்சிருக்கு.”
அவள் தேம்பினாள்.
“ஸ்.. அழாதே, நீ அவனக் கூட்டிக்கொண்டு அந்த ஊருக்குப் போய்ட்டு வா. உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும். இப்ப பத்து மணி, 12 மணிக்கு பிளேன் இருக்கு. அதுல கிளம்பு. ஒரு மாசம் அங்க இருந்திட்டு வா.”
“ஏன் இப்படி உலகம் மாறிப்போச்சு, நான் ஒரு இருநூறு ஆண்டுக்கு முன்னாடி பிறந்திருக்கக்கூடாதா… யாரு கண்டது ஒருவேளை பிறந்திருக்கலாம்.”
அவன் கணினி கிணுகிணுத்தது.
“ரொம்ப முக்கியமான தகவல்ன்னு நினைக்கிறேன். உன்னோட பிறகு பேசறேன்.”
திரை கலைந்தது. அவனது முகம் மறைந்தது.
அவளுக்குச் சலிப்பாக இருந்தது. கணினியில் ஒரு பொத்தானை அழுத்தினாள். அவளது அபிமான தாத்தாவின் முகம் வந்தது.
இந்தியாவில் வாழ்ந்த அவர் இறந்து போய் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவளுக்கு மகிழ்ச்சி தரும் தோழன் அவர்தான். அவளுக்குத் தமிழ் உணர்வு ஊட்டியவர் அவர்தான். அவரது கதையைக் கேட்பதில் அவளுக்குத் தனி சுகம். அவர் சொன்ன இந்தக் கதையை அவள் இதுவரை நூறாயிரம் தடவைகள் கேட்டிருப்பாள். எத்தனைமுறை கேட்டாலும் அவளுக்குச் சலிப்பதில்லை.
திரையில் தாத்தா பேசத்தொடங்கினார். அவள் கண்களை மூடிக்கொண்டு மிகக் கவனமாகக் கேட்கத்தொடங்கினாள்.
அந்தநாள், மறக்கமுடியாத ஒரு நாளாகும் என்று நான் நினைக்கவில்லை. இப்படிப் பதிவு செய்து வைக்கும் நாளாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. என் மகளை வழக்கம் போல் பள்ளிக்குத் தயார்படுத்தினேன். அவளும் வழக்கம்போல் போகமாட்டேன் என்று அடம்பிடித்தாள்.
எப்போதும்போல் அன்றும் என் மனைவிமேல் கோபம் வந்தது. அவள் தன்பாட்டுக்குக் காலையில் வேலைக்கு கிளம்பிப் போய் விடுகிறாள். இந்தப் பெண்ணோடு நான் போராட வேண்டி இருக்கிறதே என்று கோபப்பட்டேன். அடம்பிடித்து அழும் அவளை அடிக்க வேண்டும் போலிருந்தது. அடித்தால் அவளது அழுகை அதிகமாகும். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளைச் சமாதானப்படுத்தினேன்.
“அப்பா என்னை ஏன் தமிழ் ஸ்கூல்லே சேர்த்தே, எனக்கு தமிழ் பிடிக்கலே, நான் இந்த ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அவள் வம்பு செய்தாள்.
இந்தத் தமிழ்ப் பள்ளிக்காகவே நான் ஊரை மாத்தி வந்து இந்தப் பகுதியில் ஒன்றுக்கு பத்தாக விலைகொடுத்து வீட்டை வாங்கிக் குடியேறியது இவளுக்குப் புரியுமா. இத்தனைக்கும் இந்தப் பள்ளியில் தமிழை ஒரு பாடமாகத்தான் சொல்லித் தருகிறார்கள். இங்கு இவளைச் சேர்ப்பதற்கு நான் பட்ட சிரமம் இவளுக்குத் தெரியுமா.
பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன்.
“சரிம்மா, உன்ன வேற ஸ்கூலுக்கு நாளைக்கே மாத்திட றேன். இன்னிக்கு மட்டும் இந்த ஸ்கூலுக்கு போகலாம்.”
“அப்பா, இப்படியேதான் நீ ஒவ்வொருநாளும் சொல்ற.’
“நாளைக்கு நிச்சயமா உன்னை மாத்திடறேன்.”
நான் அவளைச் சமாதானப்படுத்தச் சொன்னது, உண்மை யாகவே ஆகிவிடும் என்று நான் நினைத்திருக்கவில்லை.
அவளுக்குப் பிடித்த கதைகளைச் சொல்லிக்கொண்டே பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்.
அவளோடு போராடியதில் பள்ளிக்கு நேரமாகிவிட்டது. பள்ளி வாசலில் காரை நிறுத்தும்போது, மணி அடித்துவிட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் கூடியிருந்தனர். தலைமையாசிரியர் பேசத் தயாரானார்.
அந்தத் தலைமை ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் நெடிதுயர்ந்த நிமர்ந்த தோற்றத்தையும் நேரான பார்வையை யும்விட, அவரின் கம்பீரமான தமிழ்தான் என்னை அவர்பால் ஈர்த்திருந்தது. அவரின் உரையைக் கேட்கத்தயாரானேன்.
“உங்களனைவருக்கும் என் வணக்கம்” என்று தொடங் கினார். அவர் குரலில் வருத்தம் தெரிந்தது. சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்தார்.
“பள்ளி நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற சட்டம் நாளை, முதல் தேதியிலிருந்து, நடப்புக்கு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாளை முதல் பள்ளி நேரம் 4 மணி நேரமாக்கப்படுகிறது…’
மாணவர்கள் ஹோ என்று மகிழ்ச்சி ஒலி எழுப்பினார்கள். அவர் தொடர்ந்தார்.
“பள்ளி நேரத்தைக் குறைப்பதால், பாடங்களையும் நாம் குறைக்க வேண்டியுள்ளது. பாட நேரத்தை எப்படிச் சரி செய்வது என்று இரண்டு வாரமாகப் பேச்சு வார்த்தை நடத்தினோம்…”
சிறிது நேரம் மவுனமானார். அவர் ஏதோ விரும்பத்தகாததைச் சொல்லப் போகிறார் என்பது புரிந்தது. கூட்டத்தை ஒரு சோகமான அமைதி தழுவிக்கொண்டது.
“தமிழ் வகுப்புகளை நிறுத்தி விடலாமென்று குழு முடிவு செய்திருக்கிறது. தமிழ் கட்டாயப் பாடமில்லை என்பதால் இதில் பிரச்சினை ஏதும் வராது…’
அதற்கு பின் அவர் பேசியது எதுவும் என் காதில் விழவில்லை. என்ன சொல்கிறார், என்ன சொல்கிறார் என்று புத்தி திரும்பத் திரும்பக்கேட்டது. அவர் சொன்னது புத்திக்குப் புரிந்தாலும், அந்த உண்மையை மனதினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்ப விரும்பாதவனாய் உண்மையா… உண்மையா… என மீண்டும் மீண்டும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.
என் மகள் என் கையைப் பிடித்து இழுத்தாள். சட்டென்று உணர்வு வந்தது. மக்கள் திரளில் நான் நிற்பது புரிந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதால் சலசலவென்று சத்தம் கேட்டது.
“அப்பா, மீட்டிங் முடிஞ்சுது. நான் வகுப்புக்கு போகணும்.” என் பெண் துடிப்போடு சொன்னாள்.
“வேண்டாம், இனிமே இங்க நீ படிக்க வேண்டாம்.”
“இல்லப்பா, நான் ஸ்கூலுக்கு வர்றேன். இங்கதான் இனி தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டாங்களே…” பெரிய சிரமத்தில் இருந்து விடுபட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில்.
அவள் தன் பள்ளிப் பையைத் திறந்தாள். அதற்குள் இருந்த புத்தகங்களை எடுத்து என் கையில் தந்தாள்.
‘அப்பா, இனிமே என் பை பாரமா இருக்காது. இதெல்லாம் எனக்கு வேண்டாம்.” சொல்லிவிட்டு அவள் தன் வகுப்பை நோக்கி உற்சாகமாக ஓடினாள்.
அவள் என் கையில் தந்த புத்தகங்களைப் பார்த்தேன்.
எல்லாம் தமிழ்ப் புத்தகங்கள். எல்லாப் புத்தகங்களின் மேலும் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாரதிதாசனின் வரிகள் எழுதப்பட்டிருந்தன.
அந்தப் புத்தகங்கள் இன்றும் என் மேசைமேல் இருக்கின்றன. அந்த வரிகளை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை நாளைக்குக் கண்ணுக்கு தெரியும் அமுதமாக இது இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை…
தாத்தாவின் கதை முடிந்தது.
அவள் கண்களில் இருந்து நீர் வடிந்தது. சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
இந்தக் கதையைக் கேட்டபின் அவளுக்குள் வழக்கமாக எழும் எழுச்சி அன்றும் எழுந்தது.
கணினி வழி ஹசியை அழைத்தாள்.
கணினி ஹசியை தேடிப் பிடித்தது. அவர் மாணவர்களுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்சி திரையில் விரிந்தது.
“நான் இப்போது வேலையாக இருக்கிறேன்…” திரையைப் பார்க்காமலேயே ஹசி குரல் கொடுத்தார்.
“ஹசி உங்களுடன் அவசரமாக ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்.”
ஹசி எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
உயர்ந்த உருவம், நீண்ட குறுகிய முகம், கூரான மூக்கு- அவரின் ஜப்பானிய அடையாளங்கள் மறைந்து போயிருந்தன. ஆனாலும் அவர் ஜப்பானியர்தான்.
“ஹசி நீங்கள் சிறந்த எழுத்தோவியர்…”
“உங்களுக்கு என்ன உதவி வேண்டும்…”
“என் தமிழ் எழுத்துகளின் வடிவப் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. என்னால் அவற்றை ஓரளவு வாசிக்க முடியும். நீங்கள் அதைப் பழகிக்கொண்டு, எனக்கும் என் மகனுக்கும் அவற்றை எழுதச் சொல்லித் தரவேண்டும்.’
ஹசி சில நிமிடங்கள் யோசித்தார்.
“சரி, உங்கள் எழுத்துக்களை எனக்கு அனுப்பிவையுங்கள். நான் எழுதிப் பார்க்கிறேன். என்னால் உங்களுக்கு சொல்லித் தர முடியுமா என்பதை அதன் பின் சொல்கிறேன்.” அவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எழுந்து வந்து வெளியை நோக்கினாள். அறையின் குளிர், சன்னல் கண்ணாடியில் படர்ந்திருந்தது. நீர்ப் படிவத்தில் தன் பெயரின் முதல் எழுத்தைச் சுட்டு விரலால் எழுதிப் பார்க்கத் தொடங்கினாள்.
– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.
– 1997, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.