தனிமை




அன்று சனி கிழமை. மாலதியும் வேறு சிலரும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள், அன்று அன்னையர் தினம் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு சிலரை மட்டும் வெளியில் அழைத்துப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களின் உதவிக்காக அந்த இல்லத்தில் பணிப்புரியும் இரண்டு ஊழியர்களையும் நியமித்து இருந்தார்கள்.
சற்றுநேரத்தில் வண்டி வந்தது, உதவியாளர்களின் உதவியுடன் அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நகர்ந்த வண்டி ஒரு கோயில் முன்னாடி நின்றது, மறுப்படியும் அவர்களுடன் வந்த ஊழியர்கள் உதவியுடன் கீழே இறங்கி கொண்டார்கள். சக்கரநாற்காலியை தாங்களே உருட்டிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார்கள் அனைவரும், அவர்களுக்கு என்று அன்று விஷேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் சாமி கும்பிடும் போது மாலதியின் கண்கள் மட்டும் எதையோ தேடியது, முகத்தில் சுருக்கம், நரைவிழுந்த தலை, கண்களில் மட்டும் ஏதோ ஒரு காந்த சக்தி. அனைவருக்கும் திருநீறு கொடுத்து கோயிலின் பின் பக்கம் அழைத்துச்சென்றார்கள். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது, நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிச்சாப்பாடு அதை ரசித்து உண்ண முடியவில்லை மாலதிக்கு, தொண்டைக்குள் அடைத்தது தண்ணீரை குடித்து விட்டு கைகளை கழுவிக்கொண்டாள்.
அன்னையர் தினத்திற்காக அந்த கோயில் திருமண மண்டபத்தில் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள். மண்டபத்தில் கூட்டம் கூடி இருந்தது, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தப் படியே காத்திருந்தார்கள். மாலதிக்கு தன்னுடைய இரண்டு மகள்களையும் நினைவுக்கு வந்தது, வந்த கண்ணீரை அடக்கி கொண்டாள்,ஒரு காலத்தில் தன் மகள்களை அழைத்துக் கொண்டு மேடை நிழ்ச்சிகளுக்காக எல்லா இடங்களுக்கும் சென்ற நாட்கள் எத்தனையோ.
கை தட்டல் சுயநினைவுக்கு வந்தாள், ஒரு சிறுமி இறைவணக்கம் பாடினாள், மேடையில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள்.மாலதி கண்ணில் கண்ணீர் துளிகள், கண்ணை மூடியவள் மூத்த மகள் எழில்லரசி, இளையவள் கலையரசி இருவரினதும் நினைவலைகள். இருவரும் படிப்பில் படும் சுட்டி அதே போல் பாட்டு, பரதநாட்டியம் இப்படி எல்லாவற்றிலும் சிறந்தே விளங்கினார்கள் இருவரும்.எழிலரசி கொஞ்சம் கூச்ச சுபாவம் மேடை ஏற தயங்குவாள், இதை நன்கு அறிந்த மாலதி அவளை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பாள். அவள் மேடை ஏறும் மட்டும் மாலதிக்கு பதட்டமாகவே இருக்கும், அவளின் நிகழ்ச்சி முடியும் மட்டும் அரங்கில் குட்டி போட்ட பூனைப் போல் அங்கும் இங்கும் திரிவாள் கணவர் சேகரிடம் திட்டும் வாங்குவாள்.
மேடை ஏறியப் பிறகு எழிலரசி நன்றாகவே செய்வாள். பலரினது பாராட்டும் கிடைக்கும், கலையரசி முற்றிலும் மாறுப்பட்டவள் மேடையேற அவ்வளவு பிடிக்கும்,எந்த தயக்கமும் இல்லாமல் எல்லா நிகழ்ச்சியிலும் பங்கேற்ப்பாள். அவளின் பெயருக்கு ஏற்ற மாதிரி கலை ஆர்வம் அதிகம். ஆனந்த கண்ணிருடன் பிள்ளைகளின் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்வார்கள் மாலதியும் சேகரும். படிப்பின் சுமை அதிகம் என்று எழிலரசி அனைத்தையும் பாதியில் விட்டுவிட்டு,முழு கவனத்தையும் படிப்பில் செழுத்தி மேற் படிப்புக்கு வெளியூர் சென்று விட்டாள்.கலையரசி படித்துக்கொண்டே எதையும் விடாமல் தொடர்ந்தாள்.
எழிலரசி படிப்பை முடித்து வேலையும் அங்கே தேடிக்கொண்டாள். அங்கு காதலித்த பையனை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் முடித்து வாழ்க்கையை ஆரம்பித்து விட்டாள். கலையரசி படிப்பை முடித்து வேலைக்கு போக ஆரம்பித்தாள், மிகுதி நேரங்களில் பாட்டு,வீணை வகுப்புகள் நடத்தினாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அவளின் வாழ்க்கையும் நல்ல விதமாக ஆரம்பித்தது, மாலதியின் போதா காலம் சேகர் மாரடைப்பில் இறந்து போய்விட்டார். எழிலரசிக்கு வரமுடியாத சூழ்நிலை, அவள் இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே, சேகரின் காரியங்கள் முடிந்த கையோடு கலையரசி வீட்டில் மாலதி தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மாலதிக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லை, காரணம் கலையரசி கூட்டு குடும்பமாக இருந்தாள். ஒரு நாள் எதிர்பாரா விதமாக கீழே விழுந்த மாலதி எழுந்து நடமாட முடியாமல் சக்கரநாற்காலியில் முடங்கினாள்.ஒரு நாள் கலையரசி அக்காவிற்கு போன் பன்னி, நீ அம்மாவை கொஞ்ச நாட்களுக்கு கூட்டிக் கொண்டு போய் வைத்துக்கொள் என்றதுக்கு, அவள் ஏதோ கூற இருவருக்கும் போனில் வாக்குவாதம். எனக்கு மட்டுமா அம்மா! உனக்கும் அம்மா தானே எவ்வளவு நாள் நான் மட்டும் வைத்து பார்ப்பது, உன்னையும் படிக்கவைத்தார்கள் தானே, நீ எதையும் கண்டுக்காம பேசாமல் அங்கு இருக்க என்று கலையரசி கத்த இதை கேட்டு விட்ட மாலதிக்கு தூக்கிவாரிப் போட்டது.
அன்று முடிவு எடுத்தாள். இனி பிள்ளைகளை நம்ப கூடாது என்று, அவளின் தோழியிடம் தொடர்ப்பு கொண்டு இரண்டு நாட்களுக்கு மட்டும் தங்க அனுமதி கேட்டாள். அவளும் உடனே அவளை அழைத்துக் கொண்டுப்போக வந்து விட்டாள். தன்னிடம் இருந்த நகைகளையும் மாற்று உடை இரண்டை எடுத்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு விட்டாள். மூன்று வயது பேரக் குழந்தை எங்கே பாட்டி போற என்று ஒரே அழுகை, அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விட்டு பாட்டி உனக்கு சாக்லைட் வாங்க போறேன் என்று அவனை சமாதானம் படுத்தியவள், கலையரசியை பார்த்தாள் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
மாலதி தோழியின் துணையோடு நகைகளை விற்று முதியோர் இல்லத்தில் பணத்தை கட்டி சேர்ந்து விட்டாள். பல ஆண்டுகல் ஆகிவிட்டது, யாரும் அவளை தேடி வரவில்லை இது நாள் மட்டும். நிகழ்ச்சி முடிவடைந்து கை தட்டல் காதுக்குள் ஒலித்தது, மறுப்படியும் வண்டிக்காக காத்து இருந்தார்கள். அவர்களின் வண்டி வந்தது அனைவரும் ஏறிக்கொண்டார்கள். வண்டி நகர்ந்தது மாலதியின் கண்களில் மட்டும் ஏமாற்றம் ‘பெத்த மனம் பித்து’ அதற்கு மாலதி விதிவிலக்கல்லவே.