தந்தை சொற் பிழைத்ததற்கான தண்டனை




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆங்கில நூலாசிரியரிடையே பேனாமுனைத் திறமட்டுமன்றி நாத்திறமும், அறிவோடு அன்பும் அமைதியும் நிறைந்த உளப்பாடும் பெற்ற அருளாளர், பேராசிரியரென நன்மதிப்புப் பட்டம் பெற்ற ஜான்ஸன் என்ற பெரியார். அவருடைய பெரு வாழ்விலுள்ள சிறு பிழை ஒன்றை மிகுந்த சுவையுடன் அவர் எடுத்துக் கூறியிருக்கிறார்.
பெரியார் என்றும் பேரறிஞர் என்றும் மதிக்கப் பட்ட அவர், ஒருகால் உச்சி வேளையில் லிச்ஃபீல்டு என்ற நகர்ச் சந்தையில் மக்கள் நடமாட்ட மிகுதி யாலும் பொருட்சிதைவாலும் அருவருக்கத்தக்க முறையில் சேறாகக் கிடந்த பகுதி ஒன்றில் யாவருங் காண மேலாடையும் தலையணியும் அகற்றி அரை நாழிகை நேரம் நின்றாராம். அது எதற்கென அறி யாது முதிய பெண்டிரும் சிறுவர் சிறுமியரும் அவரை எள்ளி நகையாடினராம். ஆனால் அவர் அங்ஙனம் வாளா நின்று ஒருவரிடமும் ஒன்றும் கூறவில்லையாம்; பின்னர், தம் இல்லத்திற்குத் திருப்பிச் சென்றாராம்.
இதனைக் கவனித்திருந்த அறிஞர் ஒருவர் நெடுநாள் கழித்து அவரைக் கண்டபோது அது பற்றி உசாவினார். அப்போது அவர் கூறிய தாவது :
“இளமைக் காலத்தில், ஒரு நாள் என் தந்தை சந்தைக்குப் போகும்போது என்னையும் உட னழைத்துச் செல்ல விரும்பினார். அப்போது நான் கல்லூரி மாணவனா யிருந்தேன். ஆரவார உடை யில் விருப்பமும், பகட்டு வாழ்வும் என்னிடம் குடி கொண்டிருந்தன. ஆகவே, அன்று விடுமுறை நாளாயிருந்தும் நாட்டுப்புற உடையில் சென்ற என் தந்தையுடன் என் நண்பர்களும் பிறரும் காணச் சந்தைக்குக் கூடை சுமந்து செல்ல வெட்கி நான் உடன்செல்ல மறுத்துவிட்டேன்.
”அதே சந்தைப் பக்கமாகப் பெரியவனான பின் நான் போனபோது இச்செய்தி எனது நினை வுக்கு வந்தது. என் பிழையை நான் உணர்ந்து கொண்டேன். நேரில் மன்னிப்புப் பெறத் தந்தை அப்போது உயிருடனில்லை. ஆகவே அவர் உயிர் நிலையை எண்ணி நானே என்னைத் தண்டிப்பதன் வாயிலாக மனச்சான்றின் வழி அவர் மன்னிப்பைப் பெற எண்ணினேன். முன் தந்தை பணிமீறக் காரணமாயிருந்தது ‘பிறர் ஏளனஞ் செய்வார் களே’ என்ற அச்சமே யாதலால் அவ்வேள னத்தை இப்போது விரும்பி மேற்கொள்வதனால் தந்தை உயிர் நிறைவடையும் என்று எண்ணி அங் ஙனம் சந்தையிற் சென்று நின்று என் குற்றத்திற் குக் கழுவாய் தேடினேன்” என்றார்.
அறிஞர்க்கும் பிறர்க்கும், இச்செய்தி கேட்டு உள்ளூர நகை ஒரு புறமும், பரிவு ஒருபுறம் தோன்றின ஆனால் அவற்றின் மிகுதியாக அப்பெரியா ரின் எளிமையினிடையே தோன்றிய பெருந்த கைமைகண்டு மகிழ்வும் இறும்பூதும் வேறு தோன் றின.
“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதனை விளக்க இதனினும் சிறந்த நிகழ்ச்சி காணக் கூடுமா?
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.