தந்திரம்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எரியமறுத்து அடம்பிடித்த ஈர விறகுகளைக் குனிந்து ஊதிவிட்டு நிமிர்ந்த செல்லம்மாவை கரிய நிறத்தில் படை படையாய் மிதந்து வந்த புகை மண்டலம் திணற வைக்கவே, மூச்சு முட்டுவது போல இருந்தது. “மாரி வந்திட்டால் இந்த ஆய்க்கினைதான். காய்ஞ்ச விறகாய் எடுத்து நனையாமல் ஒத்தாப்புக்குள்ளை குவிச்சு வைச்சிருக்கலாம். இவள் பிள்ளைக்கு இதுகளுக்கெங்கை நேரம்? பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்தால், ஒரு பிடி சாப்பிட்டுட்டு பழையபடி ‘ரியூசன்’ எண்டு வெளிக் கிட்டுடுவள்’ என அங்கலாய்த்துக் கொண்ட செல்லம்மா, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல மறுபடியும் அடுப்பை ஊத ஆரம்பித்தாள். நீண்ட நேர பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் அவள் தன் முயற்சியல் வெற்றி கண்டாள். அடுப்பு விளாசி எரிய ஆரம்பித்தது.
அரிசிப் பானையை நோட்டம் விட்டபோது ஒரு சுண்டு வரையில்தான் இருந்தது. சமாளிக்க வேண்டியது தான் என எண்ணிக் கொண்டாள். வீட்டில் அப்படி என்ன கனபேரா இருக்கிறார்கள்? அவள், மகள் ஆக இரண்டு சீவன்கள் தானே! மேலதிகமாக ஒரு நாய்! அவ்வளவுதான், கறிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது. முற்றத்து முருங்கை மரம் கை கொடுத் தது. முருங்கைக் காய் பிரட்டல் – கொஞ்சம் தண்ணீர்ப் பதமாய் வைக்கலாம்; முருங்கையிலையில் ஒரு சுண்டல இன்றைய பொழுது பிரச்சினையின்றிக் கடந்து விடும்.
செல்லம்மாவின் கணவன் கந்தையா சுமம்தான் செய்து வந்தான். அடிமை, குடிமை வேலைகளுக்கு முழுக்குப் போட்ட ஆரம்ப நாட்களில் மிகவும் கஷ்டப் படத்தான் செய்தார்கள், எனினும் குத்தகை நிலத்தில் அவர்கள் சிந்திய வியர்வை வீண் போகவில்லை, பத்து வருடங்களுக்குள்ளாகவே சுப்புடையாரிடமிருந்து கந்தை யாவும், அவரது சகோதரி மீனாட்சியின் கணவன் ஆறு முகமும் பங்காக தாம் செய்த வாங்கி விட்டனர். அதன் பின்னர் அயரா உழைப்பினால் வயலை விலைக்கு அவர்கள் வறுமையிலும் ஓரளவு செழுமையாகவே வாழ்ந்தனர்.
ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் கந்தையா நிமோனியாக் காய்ச்சலில் மண்டையைப் போட, செல்லம் மாவின் பாடு திண்டாட்டமாகிப் போய் விட்டது. படித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியத்தையும், மேகலா வையும் எப்படித்தான் ஆளாக்கப் போகிறேனோ என்று அவள் கலங்கினாள். எனினும் படிப்பில் சுப்பிரமணியம் காட்டிய திறமை அவளுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் தெரிந்தது. எனவே அவனைக் கஷ்டப்பட்டுப் படிப் பித்தாள். அவனும் நன்றாகப் படித்து உயர்தரப் பரீட் சையில் திறமையாகச் சித்தியடைந்தான். ஆனால் இந்தச் சாக்கடை அரசியல் சமுதாய அமைப்பின் தாக்கத்தினால் பல்கலைக் கழகக் கதவுகள் அவனுக்கு மூடப்பட்டன. அடுத்தமுறை கிடைக்கும் என செல்லம்மா உறுதியாக நம்பினாள். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்கோ ஓடிவிட்டான்.
அவள் ஒப்பாரி வைத்தாள். அவளது ஒப்பாரி ஓய் கனநாள் பிடித்தது.
மீண்டும் அவள் ஓடாய் உழைத்தாள். பெரும்போகத் தில் வயல் சிறிது கை கொடுக்கும். மற்றும்படி குத்தல் இடியல் என்று கூலி வேலையில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை ஓடும் மேகலாவைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தாள்.இருக்கின்ற வீட்டையும் வயல் காணியையும் கொடுத்து ஒருத்தனின் கையில் அவளை ஒப்படைத்து விட்டால் அவள் நிம்மதியாகக் கண்ணை மூடிவிடலாம். ஆனால் மேகலாவோ படிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். இவளால் மறுக்க முடியவில்லை. காரணம் அவள் கெட்டிக்காரியாக இருந்தது தான். நன்றாகப் படித்தால் நல்லதம்பி மாஸ்டரின் மூத்தவள் போல இவளும் ஒரு டொக்டராக வரக் கூடும்.
கனவுகள்… கற்பனைகள்… எதிர்பார்ப்புகள்…
காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
‘என்னணை அம்மா இன்னும் கறி வைக்கல்லையே? எனக்கு நேரம் போட்டுது…’ மேகலா பரபரத்தாள்.
‘கொஞ்சம் இரு பிள்ளை… முதல் பாலையும், புளி யையும் விட்டுட்டு ஒரு கொதி கொதிச்சவுடனை இறக்கியிடலாம்? நீ சோத்தை ஆறப்போடு…’
சாப்பிட்டு விட்டு மேகலா சங்கடப் படலையைத் திறந்து கொண்டு வெளியேறவும், சுப்புடையாரின் மூத்தவ ரான சுந்தரம்பிள்ளை உள்ளே வரவும் சரியாக இருந்தது. கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த செல்லம்மா வாசலுக்கு வந்து அவரை வரவேற்றாள். ‘ஐயா வாங்கோ… ஆளனிப்பியிருந்தால் நானே வந்திருப்பனே-‘ என்று பரபரத்தாள்.
‘அதுக்கில்லைச் செல்லம்மா’ என்று அவர் மறுபடியும் ஆரம்பித்த போது செல்லம்மா மீண்டும் குறுக்கிட்டாள். இந்த மாதம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கோ… விதைப்புச் செலவும் இருக்கு, வாறமாதம் எப்படியும் வட்டியை எண்டாலும் தந்திடுறன் ஐயா’
‘நீயேன் இப்ப பதகளிக்கிறாய்? நான் இப்ப அதுக்கு ரயில்லை. உன்னிலை எனக்கு நம்பிக்கை இல்லாமலே? இது வேற விசயம்’ என்று பீடிகை போட்ட சுந்தரம். பிள்ளையை நிம்மதிப் பெருமூச்சுடன் பார்த்தபடி நிக்கிறியள் ஐயா… இருங்கோவன்’ என்றபடி நாற்கா லியை எடுத்தும் போட்டாள்.
தனது பெரிய சரீரத்தைப் புட்டுவத்தில் அமர்த்தியபடி ஒரு முறை வீட்டை நோட்டம் விட்ட சுந்தரம்பிள்ளை ஏதோ நினைத்துக் கொண்டவராக. செல்லம்மாவிடம் இந்தப் பாச்சா பலிக்காது என்று சடுதியில் உணர்ந்து கொண்டு வந்த விசயத்தில் இறங்கினார்.
‘செல்லம்மா…நீ இன்னும் வயல் உழயில்லையே…? கந்தசஷ்டி மழைக்கு முந்தியெண்டாலும் விதைக்க வேண் டாமே? மற்றவங்கட காணியிலே பயிராப் போச்சு, நீ நீ பேசாமல் விட்டிட்டிருக்கிறாய், கந்தையன் அந்தக் காலத் திலை எங்களுக்கு விசுவாசமாக இருந்தவன் எண்டதால் சொல்லுறன். நீ கைம்பெண்டாடிச்சி எண்டவுடனை உன்ர ஆக்கள் உன்னைப் பேய்க்காட்டப் பாக்கினை என்று பீடிகை போட்ட சுந்தரம்பிள்ளையை நிமிர்ந்து கேள்விக் குறியுடன் நோக்கினாள் செல்லம்மா.
‘என்னடி ஆத்தை நீ கனநாள் வயல்பக்கம் போக யில்லைப் போலை. உன்ரை வயலை வடக்காலை பிடிச்சுப் போட்டாங்கள். வரம்பு கட்டலிலும் ஒரு ஒழுங்கு முறை யில்லை. உன்ரை வயலைத்தான் தின்னினம்…’ அவர் தொடர்ந்த போது ஒன்றும் புரியாமல் அவரை நோக்கினாள் செல்லம்மா.
‘என்னய்யா சொல்லுறியள்? கொஞ்சம் விளக்க மாய் சொல்லுங்கோவன்…’ என்று அவள் பரிதவிக்கவே சுந்தரம் பிள்ளை சமயம் பார்த்து வாழைப்பழத்தில் ஊசி ற்ற ஆரம்பித்தார். ‘செல்லம்மா, மாணிக்க வளை குளத் துக்குக் கிழக்காலை இருக்கிற அந்தந் துண்டு வயல் உன்னு டையது தானே! உன்ர கொண்ணர் ஆறுமுகம் அதைத் தன்ர பங்கோட சேர்த்து உழுது விதைச்சிருக்கிறார்-
‘அந்தத் துண்டு எங்களுக்கே ஐயா?’
‘எடி விசரி. உன்ர காணி பூமியின்ர திக்கெல்லை தெரியாமல் நிண்டு திண்டாடுறாய்… அவன் கந்தையன் உன்னைப் பெட்டிப் பாம்பாய் வீட்டுக்குள்ளை வைச்சிருந் ததாலே உனக்கொண்டும் சரிவரத் தெரியேல்லைப் போலை’
‘அப்ப அண்ணரட்டைக் கேக்கட்டே ஐயா?’
‘நான் மனம் பொறுக்காமல் அவனட்ட சொல்லிப் யார்த்தனான். அவன் என்னோடயே சண்டைக்கு வாறான் தலைதெறிக்கக் குடிச்சிட்டு நிண்டதாலை நானும் பேசாமல் வந்திட்டன்’
“எதுக்கும் நான் ஒருக்கால் கேட்டுப் பாக்கிறன் ஐயா … எனக்குப் பாதகமாய்ச் செய்ய மாட்டார்.’
‘விசரி… விசரி எல்லோரும் உன்னைப் போல நல்லவை யெண்டு நீ நம்புறாய். ஆனால் அவர்கள் உன்ரை தலை யிலை பச்சடி அரைக்கப் பாக்கினம். அதிலையும் உன்ர மச்சாள் சின்னம்மா இருக்கிறாளே… சரியான அசமடுக்கல் கள்ளி… தோலிருக்கச் சுளை திண்டிடுவாள்’ சுந்தரம்பிள்ளை சாதுரியமாக இயங்கினார்.
மச்சாளின் பெயரைக் கேட்டதும் செல்லம்மாவுக்கும் ரோசம் பிறந்தது ‘உவையின்ர புலுடா என்னிலை வாய்க் காது ஐயா… என்று தட்டிக் கொண்டு கிளம்பினாள். சுந்தரம்பிள்ளை அவளைத் தடுத்து நிறுத்தினார். ‘பொறு பொறு… இப்பவே ஓடாதை. இக்கணம் என்னிவை தான் பழிவரும். ஆறுதலாய்ப் போய்க் கேள். வீணாய் என்ர பெயரை உதுக்குள்ள இழுத்துப்போட வேண்டாம். நான் பொதுவான ஆள்’ அவர் விடை பெற்றார்.
அன்று மாலை செல்லம்மா நியாயம் கேட்டு ஆறு முகம் வீட்டுக்குப் போன போது ஒரு பிரளயமே ஏற்பட்டது. சின்னம்மாவும் வாய்க்காரி. லேசில் விடவில்லை.
‘எடி தேவடியாள். புரிசனைத் தின்னி, நீயும் உன்ரை குமரும் ஆடுற ஆட்டம் எங்களுக்குத் தெரியாதே. ஊரிலே யுள்ள ஆம்பிளையளையெல்லாம் தட்டிச்சுத்துறதுபோதா தெண்டு இப்ப கொண்ணரையும் தட்டிச் சுத்த வந்திட்டியேடி பரத்தை’
‘சின்னம்மா வாயைக் கொஞ்சம் அடக்கிப் பேசு…… உனக்கும் இரண்டு குமருகள். உன்ரை மூத்கள் ரியூசனுக் கெண்டு யாழ்ப்பாணம் போய் குதியென் குத்துறது தெரியாமல் என்ர பிள்ளையை வசை பாட வந்திட்டாய். இப்ப வீண் கதையை விட்டுட்டுச் சொல்லு, காணிக்கு என்ன சொல்லுறாய்?’
‘அது எங்கட பங்கு. உறுதியில் இருக்கு. வேணுமெண் டால் நீ வழக்குப் போடு’
இடையில் வந்த ஆறுமுகம் குறுக்கிட்டார். ஐநூறு ரூபா பெறாத காணித துண்டுக்கு கோடேறுறதே? வசயம் தெரிஞ்ச ஒரு ஆளைக் கொண்டு உறுதியை வாசிப்பிச்சுப் பார்த்திட்டு முடிவு எடுக்கலாம்’
சின்னம்மா கணவன் மீது சீறிப்பாய்ந்தாள். ‘நீங்கள் கொஞ்சம் பேசாமலிருங்கோ… உருப்படியாய் ஒரு காரியம் செய்யத் தெரியாது; செய்யவும் விடமாட்டியள்’ என்று அவரது வாயை அடக்கிவிட்டு செல்லம்மாவிடம் கூறி னாள். ‘நீ போய் வழக்கைப் போடு. கோட்டிலை பேசிப் பாப்பம்’ செல்லம்மாவிடம் வழக்குப் பேசக் காசு இருக்காது என்பது சின்னம்மாவின் கணிப்பு.
ஆனால் செல்லம்மா விடவில்லை. சுந்தரம்பிள்ளை யிடம் ஓடினாள் திட்டம் போட்டுச் செயலாற்றிக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளை அவளை உற்சாக மூட்டி னார். ‘நீ விடாதை… உனக்குத்தான் தீரும். வழக்குச் செலவுக்கு நான் கடன் தாறன். நல்ல அப்புக்காத்தாய்ப் பிப்படிம்…’
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதும் ஆறுமுகத்துக்குக் கட்டளை வந்தது. கட்டளையைத் தூக்கிக் கொண்டு அவரும் சுந்தரம் பிள்ளையிடம் தான் ஓடினார். எதிர்பார்த் துக்காத்திருந்த சுந்தரம் பிள்ளை ஆறுமுகத்துக்கும் தூப மிட்டார். ‘மானப் பிரச்சனை எண்டு வந்தாப் பிறகு. சும்மா விடப்படாது. அவள் நல்ல அப்புக்காத்தாப் பிடிச் சிருக்கிறாள். அதுக்கு மேலாலை கியூசி ஒரு ஆளைப் பிடிப்பம். அப்பத்தான் வெல்லலாம். பழைய அடி உறுதி எல்லாம் வேணும். அதோடை உலாந்தாவைக் கூட்டி வந்து அளந்து சரிபார்க்க வேணும். இப்போதைக்கு ஒரு ஆயிரம் ரூபா இருந்தால் போதும். பிறகு தவணைக்குத் தவணை காசு கட்டலாம்’ என்றார் சுந்தரம்பிள்ளை. ஆறுமுகம் சிறிது தயங்கவே, அவர் அழுங்குப் பிடியாகத் தொடர்ந்தார். ‘உன்ரை மனிசியையும், பிள்ளையையும் வசை பாடினவளைச் சும்மா விடப்படாது. அவள் வழக்கி காசு பணமில்லை. லையும் நிண்டு பிடிக்கமாட்டாள். வெற்றி உன் பக்கம்தான். காசுபணம் உனக்கு வேணு மெண்டால் நான் தாறன்’.
இறுதியில் வழக்கு கேட்டுக்கு வந்தது. தவணை, தவணை என்று இழுபட்டுக் கொண்டே போனது. இரண்டு பக்கத்துக்கும், எதிர்தரப்புக்குத் தெரியாமல் பண -தவியும், ஆலோசனை என்ற பெயரில் சதியும் செய்து வந்தார் சுந்தரம்பிள்ளை. இரு பகுதியினருக்கும் பணம் தண்ணீராய்க் கரைய இறுதியில் செல்லம்மாவும், சின்னம் மாவும் வழக்குப் பேசிக் களைத்துப் போனதுடன் பெரும் கடனாளியாகியும் விட்டார்கள். சுந்தரம்பிள்ளை எதிர் பார்த்த நாளும் வந்தது.
சுந்தரம்பிள்ளையிடம் வந்த செல்லம்மா சொன்னாள் என்னாலை கட்டுப்படியாகாது. ‘ஜயா வழக்குப் பேசி பேசாமல் அந்த ஐஞ்சு குழியையும் அவைக்கு எண்டே சமாதானமாய் விட்டுக் குடுக்கப் போறன்’
‘அதுவும் சரிதான் செல்லம்மா. நீங்கள் ஒண்டுக்கை ஓண்டு. ஏன் வீணாய் வழக்காடி நாசமறுப்பான். அது சரி உன்ர கடனும் வட்டியும் எக்கச்சக்கமாய் ஏறிப்போச்சு மோனைப் பற்றி ஏதும் தகவல் கிடைச்சதே’
‘அவன் அறுதலன் இனி எங்கை வரப்போறான். நூற்றுக்கணக்கிலை காணாமல் போன பொடியளுக்கை அவனும் ஒருத்தனோ ஆர் கண்டது? அதை விடுங்கோ ஐயா… இப்ப உங்கட கடனை என்னாலை அடைக்க வேறு வழியில்லை. என்ர முழு வயலையும், சீமா பனங் காணித் துண்டையும் அறுதியாய் எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியிருந்தால் தாங்கோ ஐயா’ செல்லம்மா கவலையுடன் கூறினாள்.
‘என்ன செல்லம்மா விசர்க்கதை பறையுறாய்? என்ர முதலுக்குத்தான் காணித் துண்டு பெறும். வட்டிக்கு என்ன செய்யப் போறாய் எண்டு நான் நினைக்கிறேன் நீ மிச்சம் இருக்கோ வெண்டு கேக்கிறாய்… வேடிக்கையா யிருக்கு…’
‘செல்லம்மா கண்கலங்க வெளியேறவும். சின்னம்மா இதே நோக்கத்திற்காக சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.
சுந்தரம்பிள்ளை தனது தந்திரத்தை எண்ணிக் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார்.
– மல்லிகை
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.