தண்ணீரும் எண்ணெயும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 1,522 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு அள்ளுப்பட்டு அந்நாட்களில் சனங்கள் போவார்கள். புங்குடுதீவின் குறிகாட்டுவான், இறுப்பிட்டித் துறைமுகங்கள் சனங்களால் நிரம்பி வழியும், அதுபோலத்தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ச் சனம் ஐரோப்பாவுக்கு அள்ளுப்பட்ட காலம். 

ரஷ்யாவின் ‘ஏரோபுளட்’ விமானமூலம் குறைந்த செலவில் மொஸ்கோ வழியாக பேர்லின் வந்து குவிந்து கொண்டிருந்த நேரம்… 

செல்வரத்தினமும் அவ்வாறே பேர்லின் வந்து சேர்ந்தவன்.. ‘காம்’பிலிருந்து பின்னர் அங்கு தங்கி, இங்கு தங்கி என அலைந்து ஒருவாறு பாரிஸ் வந்து சேர்ந்தான். பன்னிரண்டு பேர் தங்கியிருந்த ஓர் அறையில், ஒருவனாக முடங்கிக் கொண்டான். 

அவனவனின் காலைப்பிடிக்காத குறையாகக் கெஞ்சி மன்றாடி பொலிசுக்குப் போய் விசாவுக்குப் பதிந்து, தமிழில் ‘கேஸ்’ எழுத ஆயிரம் ‘பிராங்’கும் அதனைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்க ஆயிரத்து இருநூறு ‘பிராங்’கும் கொடுத்து அகதி அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்தான். அந்தக் காலம் அகதிகளை வரவேற்பது போலிருந்தது. விண்ணப்பித்த தமிழரில் அதிகமானோர்க்கு விசா கிடைத்தது. பத்து வருட விசாக் கார்ட் கைக்குக் கிடைத்ததும் செல்வரத்தினத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் ‘சுவிப்’பில் வந்த மாதிரி. மகிழ்ச்சி… 

கொஞ்சச் சம்பளத்தில் பதினான்கு மணித்தியாலம் வரை ‘றெஸ்ரோறன்றில்’ மாடா அடிச்சுக் குடுத்துக் கொண்டி ருந்தவன், ‘விசாக் கார்ட்’ கைக்கு வந்ததும் ஏற்கனவே சொல்லிவைத்திருந்த ஒரு சில றெஸ்ரோறன்ற் படிகளில் ஏறி இறங்கினான். விசா இருக்கிறதெனக் காட்டி வேலை கேட்டான். ஒரு பிரெஞ்சு றெஸ்ரோறன்ரில் வேலை கிடைத்ததில் அவனுக்குப் பெரும் திருப்தி… 

‘புளோஞ்சர்’ வேலைதான்… வந்து குவியும் சாப்பிட்ட எச்சில் கோப்பைகள், கிளாசுகள், கரண்டிகள் உட்பட யாவற்றையும் கழுவித் துடைத்து அடுக்க வேண்டும். காய் கறி, வெங்காயம் உட்பட சகலதும் வெட்டிக் கொடுக்க வேண்டும்.சமையலுக்குப் பொறுப்பானவர் சொல்லும் வேலைகளைச் செய்தாக வேண்டும். 

குசினியில் பொறுப்பானவர் ‘செவ்’. அவருக்கு அடுத்த பதவியில் மூவர். உதவியாளர் இருவர். அடுத்து ‘புளோஞ்சர்’ இருவர். இவ்வாறாக எட்டுப் பேர் இரவு பகல் மாறி மாறி அந்தக் குசினிப் பகுதியில் வேலை செய்வர். அது பாரிஸ் நகரின் பிரபலமான ஒரு சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பெரிய உணவகம் தான்… 

விசாக் கார்ட் கிடைத்து நிரந்தர வேலை உறுதியானதும் ‘பிரமுகர்’ ஒருவருக்கு ஆயிரம் பிராங் கொடுத்து அழைத்துக் கொண்டு ‘அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகத்திற்குச்’ சென்று இரண்டு வருடமாக கொழும்பில் தவித் கொண்டிருக்கும் தன் குடும்பத்தினை இங்கு அழைக்க விண்ணப்பம் கொடுத்தான். 

கொழும்பில் வத்தளைப் பகுதியில் ஒரு தமிழ்க் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் ஒரு அறையில் செல்வரத்தினத்தின் மனைவியும் நான்கு வயது மகளும் தங்கியிருந்தனர். மாதாமாதம் அவர்களுக்கு 1500 பிராங் உண்டியல் மூலம் அனுப்பிவிடுவான். அது அங்கு சுமார் 15,000 ரூ வரையில் கிடைக்கும். 

பாரிஸ் புறநகர் பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் கடைசி மாடியான ஆறாம் மாடியில் ஒரு சிறிய ‘ஸ்ரூடியோ’ வீடும் எடுத்து விட்டான். அதற்கு வாட 2800 பிராங். 

வீடு இருப்பதாகக் காட்டி, விமானக் கட்டணமும் செலுத்தி குடும்பம் வந்துசேர பதின்மூன்று மாதங்கள விட்டது. ஆயினும் அவனுக்கு அளவுகடந்த மகிழ்வு தான்…! 

இரவு பகலென வேலை செய்து மாதம் 1500 பிராங் சீட்டும் கட்டிவந்தார். 

மனைவி தங்கமலரை பிரெஞ்சு படிக்கவென வெளிநாட்டவருக்கென இலவசமாக நடாத்தப்படும் ஒரு பாடசாலையில் சேர்த்தார். சமூகசேவைப் பகுதியினரைத் தேடி விசாரித்துச் சில உதவிகள் பெறமுடிந்தது. அவர்களின் சிபார்சில் தான் பிரெஞ்சுப் பாடசாலையும் கிடைத்தது. 

ஆனால் மூன்று மாதம் அங்கு போய்வந்தும் தங்க மலருக்குப் பிரெஞ்சில் அரிச்சுவடி தானும் விளங்க வில்லை… பின்னர் தமிழர் நடத்தும் பிரெஞ்சுப் பாட வகுப்புக்கெனக் காசுகட்டி மூன்று மாதம் தங்கமலரை அனுப்பினார். 

இப்போது தங்கமலர் பிரெஞ்சு மொழியில் வணக்கம் கூறவும், இலக்கங்கள் சில எண்ணவும், பத்திரங்களில் பெயர், முகவரி நிரப்பவும் தெரிந்துகொண்டுவிட்டாள். கடைகளில்போய் பொருட்களை வாங்கி வரவும் பழகி விட்டாள். 

ஒரு சிறிய ஹோட்டலில் அறைகளைக் கழுவித் துடைத்துத் துப்புரவு செய்யும் வேலையும் பெற்று விட்டாள். அங்கு இரு தமிழ்ப் பெண்களுடன் சேர்ந்து தான் நான்கு மணித்தியால வேலை… இதற்குள் கர்ப்பம் தரித்து விட்ட தங்கமலருக்கு ஆண்குழந்தை பெறத்தான் விருப்பம்… 

கர்ப்பமான காலம் தொடக்கம் பிரசவம்வரை எவ்வித கட்டணமுமின்றி சகல பரிசோதனைகளும் இலவசமாகக் கிடைக்கும் வசதி.. 

நான்காம் மாதத்தில் ‘ஸ்கனர்’ செய்து பார்த்துவிட்டு ஆண் குழந்தையாயிருக்கலாம் என டாக்டர் சொன்னார். ‘பெண் குழந்தை’ என்றால் கருவைக் கலைத்து விடலாமென்று தான் செல்வரத்தினமும் தங்கமலரும் பேசிக்கொண்டனர். இருவரும் வேலைசெய்து காசு சேர்க்கவும் இடைஞ்சல் இருக்காதெனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஆண் குழந்தையென்று அறிந்ததும் மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்று வளர்க்க எண்ணினர். 

இருவருமாக வேலைசெய்து, சிக்கனமாக வாழ்வைக் கடத்தி, சீட்டுப் பிடித்து மூன்று அறைகள் கொண்ட ஓர் ‘அப்பார்ட்மென்ட்’ வீடும் வாங்கிவிட்டனர். 

மூத்த மகள் மாலினிக்கு பதினைந்து வயதிலேயே காதல் அரும்பி விட்டது. இரண்டு வருடக் காதல் கனிந்து அவர்கள் தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர். தற்போது அவள் ‘சுப்பர்மார்சே’ ஒன்றில் ‘கஷியராக’ வேலை செய்கின்றாள். 

அவர்களை செல்வரத்தினமும் மனைவியும் அங்கீகரிவில்லை. ‘வேதக்காரப் பெடியனாம்… அதுக்கும்மேல அவர்கள் எந்தப் ‘பகுதி’ ஆட்கள் எண்டும் தெரியாது…’ துக்கம் விசாரிச்ச பலரிடம் அவர்கள் இப்படிச் சொல்லி அழுது கொட்டினர். 

‘கைகழுவியிற்றம்’ என்று சொன்னவர்கள் ஒரு வருடத்திற்குப் பின் பேரன் பிறந்ததை அறிந்ததும் பட்டும் படாமலும் பழகிக்கொள்ள ஆரம்பித்தனர். பேரனை அடிக்கடி பார்க்க ஆசைகொண்டனர். 

மகன் நிரேஷ்.. பதின்நான்கு வயதாகிவிட்டது. ‘கொலிச்’சில் படிக்கிறான். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்க்கும் செல்லப்பிள்ளை. 

சோறு கறி அவனுக்குப் பிடிக்காது. ‘மக்டொனால்ஸ்’ சாப்பாடு, ‘பிசா’… இவைதான் அவனுக்கு விருப்பம். அவர்களின் வருமானத்தை அவன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருந்தான். 

அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பியர் குடிக்கிறான், சிகரெட் குடிக்கிறான் எனப் பலர் செல்வரத்தினத்திடம் சொல்லிவந்தனர்தான்…! பலமுறை இதனை அவர் மகன் நிரேஷிடம் கேட்டுப் பார்த்திருக்கிறார்… மௌனம் தான் பதிலாக.. கண்டித்துக் கத்திப் பேசியும் பார்த்தார்.. ஆனால்….. 

நினைத்த சாப்பாடு வேணும்… சோறு கறி வேண்டாம்… மத்தியானம் பாடசாலை கன்ரீன் சாப்பாடு… அதற்குக் காசு கட்ட வேண்டும்.. மற்ற வேளைகளில் வீட்டில் ‘சான்விச்’ செய்து கொடுக்கவேண்டும். ‘மக்டொனால்ஸ்’ சாப்பாடு, ‘பிசா’ தான் அடிக்கடி வேண்டும். அதனை வாங்கிவந்து கொடுக்க வேண்டும். சிலவேளைகளில் தானே போன் செய்து வீட்டிலிருந்தே ‘பிசா’ வருவித்துக்கொள்வான். 

சாப்பாட்டில்தான் இப்படி அழிக்கிறான் என்றால் சிநேகிதர்மாரோடு சேர்ந்து இந்தப் பதினாலு வயதிலேயே சிகரெட், பியர் என்று அழிவு… 

ஒரு நாள்… பகல் வேலை முடிந்து களைப்புடன் ‘மெற்ரோ’ வில் வந்திறங்கிய செல்வரத்தினம் வீட்டிற்கு நடந்து வருகிறார். அந்த அடுக்குமாடித் தொடர் வீடு மெற்ரோ நிலையத்திலிருந்து அதிக தூரமில்லை. 250 மீற்றர் தூரமிருக்கும். நேரம் பிற்பகல் நான்கு மணியாகி விட்டது. வீட்டிற்கு வந்து சிறிது இளைப்பாறி விட்டு மீண்டும் ஆறு மணியளவில் இரவு வேலைக்குப் புறப்பட வேண்டும். 

வீதிக்கருகில் ஒரு சிறிய பூங்கா. அங்கேயுள்ள சாய்மனை வாங்கிலில் நான்கு இளவட்டங்களிருந்து உரத்த சத்தமிட்டுக் கதைப்பது கேட்டது. செல்வரத்தினம் உற்றுக் கவனித்தார். ஒரு கருவல் பெடியன், ஒரு அடைக் கலப்புப் பெடியன், ஒரு பிரெஞ்சுப் பெடியன், அவர்களுடன் மகன் நிரேஷ்…எல்லோர் கையிலும் சிகரெட்…வாங்கிலில் பியர் போத்தல்களும் இருக்கின்றன. 

ஆத்திரம் பொங்கி வந்தது அவருக்கு……! 

“நிரேஷ் உன்ர பப்பா வாறார்…” அடைக்கலப்புப் பெடியன் சொன்னான். “அவருக்குப் பலமுறை சொல்லியிற்றன்… என்ர விஷயத்தில் தலையிட வேண்டா மெண்டு… இது எங்கட சுதந்திரம்… ஒண்டுக்கும் யோசிக் காதையுங்கோ…அவர் இந்தப் பக்கம் வர மாட்டார்…” 

‘வீட்டுக்கு வரட்டும்… இரண்டில ஒண்டு இண்டைக்குப் பாக்கிறான்..’ செல்வரத்தினம் நறுமிக்கொண்டு விறுவிறு வென வீட்டை நோக்கி… 

“எடியே ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையெண்டு செல்லம் குடுத்து வளத்து என்னத்தைக் காணுற….குசினி வெக்கையிலும்… பனிக்குளிரிலயும் நான் மாடா உழைச்சு முப்பதோட கூடிய முப்பத் தொண்டும் கொண்டுவந்து போட்டன்… அதுக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தன்…மூத்ததை பொன் குஞ்சு எண்டு பொத்திப் பொத்தி வளத்தன்… அது என்ர பரம்பரை மானம் மரியாதை எல்லாத்தையும் காத்தில பறக்கவைச்சுப் போச்சுது…ஏதோ ஒரு பேரப் பெடியினைக் கண்டிட்டு உசிரோட இருந்தன்… இந்தப் பொடி… இந்த வயதில ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத் தொடங்கீற்றுது…” 

தங்கமலர் மனுசனின்ர கொதியைக் கண்டதும் வாயே திறக்கவில்லை. கண்கலங்கியபடி தேத்தண்ணி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தா… தேத்தண்ணிப் பேணியை கையில் எடுக்கும் போது நிரேஷ் வீட்டிற்குள் வந்தான். 

தேத்தண்ணிப் பேணி குசினி மேசை மேலே போய் பெருத்த சத்தத்துடன் விழுந்தது. உருத்திர மூர்த்தியாக எழுந்து போய் நிரேஷின் சட்டையில் பிடித்து உலுப்பினார். 

“என்ன பழக்கமடா பழகிறாய்.. என்ன ‘செற்’ சேரு கிறாய்… வெட்கக்கேடு… இந்த வயதில உனக்கு சிகரெட், பியர் எல்லாம் வேணுமா… உன்ரை மேசை லாச்சியிக்கை சிகரெட் பெட்டி… பல்கனியிலயும் சிகரெட் கட்டை கிடக்குது…நீயென்ன… பெரிய ஆளாயிற்றையோ……’ என்றவாறு அவன் கன்னத்தில் இரண்டு அடி.. தலை மயிரைப் பிடித்து, தலையை கீழே அமத்தி முதுகில் இரண்டு அடி… 

“ஐயோ… என்ர முருகா… இதென்ன …. பிள்ளையைக் கொண்டு போடாதையப்பா…” என்றவாறு தங்கம் இடையில் புகுந்து மனுசன் ஓங்கிய அடிகள் சிலதையும் வாங்கிக்கொண்டு மகனைப் பிடித்து அவனது அறைக்குள் விட்டு கதவைச் சாத்தினார். 

செல்வரத்தினம் உரத்து மூச்சு இழுத்தவாறு வந்து ‘கனப்பேயில்’ அமர்ந்து தமிழ்த் தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தார். 

பத்து நிமிடம் கூடக் கழிந்திராது. வாசல் கதவு பலமாகத் தட்டப் பட்டது. தங்கம் கதவைத் திறந்தார். மூன்று பொலிசார் வீட்டிற்குள் வந்தனர். 

“யார் நிரேஷ்… என்ன பிரச்சினை…” என விசாரித்தனர். 

“நான் தான் ரெலிபோன் செய்தனனான். இந்த வீட்டில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை… எனக்கு ஒவ்வெரு நாளும் பேசுறார்… அடிக்க வாறார் அப்பா…இப்ப முகத்தில் நல்லா அடிச்சுப் போட்டார்…பாருங்கே கன்னத்தில கைவிரல் அடையாளத்தை… முதுகில அடிச்சதால் நோகுது…எனக்கு நிம்மதியா படிக்க முடியுதில்லை…ஒருத்தரோடையும் சேரக் கூடாதென கட்டளை போடுறார்…எனக்குச் சுதந்திரம் வேணும்…” 

“அம்மாவோட பிரச்சினை இல்லை… இவருக்குத்த நல்லா விளங்கப்படுத்துங்கோ…” நிரேஷ் பிரெஞ்சு மொழியில் நீண்ட வாக்குமூலம் கொடுத்தான். 

செல்வரத்தினம் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. கண்ணீர்விட்டு அழுதவாறு, செல்வரத்தினம் தனக் தெரிந்த பிரெஞ்சு மொழியில் தான்பட்ட கஷ்டங்களையும் பிள்ளைகள் மீதுள்ள பாசத்தையும் கொட்டிச் சொன்னார். 

“பிள்ளைகளை அடிப்பது குற்றம்… உம்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதபடியாலும் உமது நிலைமைகளை விளங்கிக் கொண்டபடியாலும் உம்மை விடுதலை செய்கிறோம்…” எனக் கூறிய பொலிசார் இந்த நாட்டுச் சட்டங்கள் குறித்தும், பிள்ளைகளின் உரிமை சுதந்திரம் குறித்தும் நீண்ட விளக்கமளித்து அடுத்த நாள் மாலை ஐந்து மணியளவில் அவரை விடுதலை செய்தனர். 

சமூகசேவை அலுவலகத்திலுள்ள குடும்பநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டுமெனவும் கூறித்தான் அனுப்பி வைத்தனர். 

வீட்டிற்கு வந்த செல்வரத்தினம் ஒரு கிழமை வெளியே தலை காட்டவில்லை. வேலைக்கும் உடல்நிலை சரி யில்லையென லீவு போட்டார். சமூகசேவை அலுவலகத்திற்குச் சென்று ஆலோசனை பெற்று வந்ததோடு சரி… வீட்டிற்குள்ளேயே … முடங்கியபடி…… 

ஹாலிலுள்ள ‘கனப்பே’யிலிருந்தவாறு தமிழ்த் தொலைக்காட்சி பார்ப்பார். அதிலேயே படுத்தும் கிடந்தார்… 

மகனை வீட்டைவிட்டு கலைத்துவிடவும் மனமில்லை… தான் வெளியேறி தனியே வாழவும் முடியாது… பிள்ளைகளைப் பார்க்காமல் வாழ முடியுமா…? 

மனைவி தங்கத்தைப் பார்க்க அவருக்கு கண்ணீர் வருகிறது… அவளுக்கும் அவ்வாறே .. 

ஒரு கிழமையின் பின்னர் … வளர்ந்து கடித்துக் கொண்டிருந்த தாடியையும் நன்றாகச் ‘சேவ்’ செய்துவிட்டு உசாராக வேலைக்குப் போனார். பகல்வேலை முடிந்து வரும்போது வழியிலுள்ள இத்தாலி ‘பிசா’ கடையில் இரண்டு பெரிய ‘பிசா’ வாங்கிக்கொண்டு வந்தார். 

கதவைத் திறந்ததும், மகன் வந்து ‘மிக்க நன்றி’ என்று பிரெஞ்சில் சொல்லியவாறு தகப்பனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பிசா பெட்டியை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் போனான். 

ஒரு சில நாட்களின் பின்னர்… றெஸ்ரோறன்ரில் திருத்த வேலைகள் நடைபெறுவதால் ஒரு கிழமை செல்வரத்தினத்திற்கு லீவு. சனிக்கிழமை மாலை ஏழு மணியிருக்கும். “பப்பா… இண்டைக்கு என்ர மூன்று நண்பர்கள் என்னட்ட வருகினம்… ஓடிப்போய் ‘பிசா’வும், கொககோ கோலாவும், ‘சான்விச்’ பாணும் வாங்கிக் கொண்டு வாங்கோ…அம்மா… “சான்விச்” நல்லபடியாச் செய்ய வேணும்…” பிரெஞ்சும் தமிழும் கலந்த மொழியில் நிரேஷ் சொன்னான். செல்வரத்தினம் கூடையையும் தூக்கிக் கொண்டு வீதியில் இறங்கினார். 

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *