தக்க சமயத்தில்…
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்கோடி நெல்லை சீமையிலிருந்து வடக்கே காஷ்மீர் வரை சுற்றுலா போகிறோம். அந்த ஆண்டு 1984.
ஆக்ரா, தில்லி, காஷ்மீர்-
தாஜ்மகால், செங்கோட்டை, படகுவீடுகள் – … எல்லாம்
மனக்கண் முன்தோன்ற உள்ளம் கிளுகிளுத்தது.
பாளையம்பதியிலுள்ள ஜான்ஸ் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி!
அப்பப்பா! எத்தனை நாள் ஆயத்தம். அடடா! எவ்வளவு ஆனந்தம்!
அடுத்த வீட்டு அன்பர் பால்ராபர்ட் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்.
ஆயுள் இன்சூரன்சில் சேராததினால் அவருக்கு என் மீது அன்பின் கோபம்.
“இன்சூரன்சில் சேர்வதினால் என்ன ஆதாயம்? சீக்கிரம் செத்தால் நமக்கு முழுத்தொகையும் கிடைக்கும். அப்படி ஒரு பணம் எனக்கு வேண்டாம். நான் இன்சூரன்சிற்குப் பரம எதிரி, ஆளை விடுங்கள்”. என்று சொல்லி வருகிறவர்களை விரட்டி விடுவேன்.
கடந்த 15 ஆண்டுகளாக விடாக்கண்டர்களான ஏஜெண்ட்களிடமிருந்து தப்பி விட்டேன்.
திரு. பால்ராபர்ட் வயதானவர், கண்ணியம் மிகுந்தவர், நல்ல பக்திமான்.
காஷ்மீர் செல்ல வீட்டை விட்டுப் புறப்பட ஆயத்தமானேன் பால்ராபர்ட் வந்தார். ஓர் ஆழமான பிரார்த்தனை ஏறெடுத்தார். ஆசீர்வதித்தார் பின்பு ‘ரூபாயை எங்கே வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
தோளில் தொங்கும் பையைக் காட்டினேன்.
அவர் சொன்னார்;
“ரூபாயை மூன்று பிரிவாகப் பிரித்து சூட்கேஸ் அடியில் ஒரு தொகை, உள் கால்சட்டை பையில் ஒரு தொகை, தோளில் தொங்கும் பையில் ஒரு தொகை. இப்படியாக மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள் கால்சட்டையில் இருப்பதை காஷ்மீர் போய் எடுக்க வேண்டும். சூட்கேசில் இருக்கும் பணத்தை திரும்பி வரும்போது சென்னை வந்து எடுக்க வேண்டும். தோளில் தொங்கும் பையிலுள்ள தொகை வழி நெடுகச் செலவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பிற்கு இது நல்லது.
இன்சூரன்சும் இப்படித்தான்.
“ரிஸ்க் கவர் ஆகும்” என்று சொல்லிச் சென்று விட்டார். காலம் கெட்டுக்கிடக்கிறது, எனவே-
அவர் சொன்ன ஆலோசனை எனக்குச் சரியெனப் பட்டது.
உல்லாசமாக ஊர்சுற்றி – நாடு வளம் கண்டு நற்சுகத்துடன் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தோம். வந்தவுடன் முதல் வேலையாக இன்சூரன்சில் சேர்ந்தேன். ‘கடவுளே, இந்தப் பணத்தை முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும்; உயிருள்ள காலத்திலேயே அனுபவிக்க வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டேன்.
பத்து ஆண்டுகள் கழித்து என் பிள்ளைகளின் திருமணங்கள் வரிசையாக வர ஆரம்பித்தன. ஒவ்வொரு திருமணத்திற்கும் இத்தொகை கொஞ்சம் கொஞ்சம் வலுவான கைகொடுத்தது இன்னும் வரவிருக்கும் திருமணங்களுக்கும் ஊன்றுகோலாக உள்ளது.
தக்க சமயத்தில் சொல்லிய ஆலோசனை பக்குவமாகப் பழுத்தது.
அரசு எத்தனையோ திட்டங்களை வகுத்தாலும், அரசியல்வாதிகள் வாய்கிழியப் பேசினாலும் நமது சேமிப்பே, நமக்குக் கைகண்ட மருந்தாகும்..
கடவுள், எங்கள் காப்பீட்டுப் பணத்தை முழுமையாக எங்கள் காலத்திலேயே அனுபவிக்க உதவி செய்தார்.
– ஜனவரி 1996 ‘நல்ல நல்ல கதைகள்’ என்ற நூலிலிருந்து.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 60
