டைவர்ஸ்







(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
வைதிக முறைப்படி நடக்கும் கல்யாணத்தில், பிள்ளை ஜபிக்கும் பல மந்திரங்களில் ஒரு மந்திரத்தின் அர்த்தம்:
‘இந்தக் கன்னிகையை ஒரு குறித்த காலம் வரை ஸோமன் என்கிற தேவதை காக்கிறார். பிறகு ஒரு காலம் வரை கந்தர்வனும், பிறகு அக்னியும் ரட்சிக்கிறார்கள். இந்த மூவரும் தங்கள் கடமையை முடித்துவிட்டார்கள். அடுத்த படி ரட்சிக்கும் பொறுப்பை ஏற்கிற என்னை அவர்கள் ஆமோதிக்கட்டும்.’ – நாற்பது சமஸ்காரங்களிலிருந்து.
மகிழ்ச்சியும் ஆரவாரமும், பங்களாவுக்குள் அடங்கி நிற்க முடியாமல் ஒவ்வொரு வாசல் வழியாகவும், ஜன்னல் வழியாகவும் வழிந்தோடின பிரம்மாண்டமான ஹால் நிறைய வசுதாவின் சினேகிதிகள் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள்.
ராஜலட்சுமி, மகளைப் பார்க்க மாடிக்கு விரைந்தாள். வசுதாவின் உடை அலங்காரம், முக சிங்காரம் இவற்றையெல்லாம் அவளுடைய நெருங்கிய தோழி நித்யாவும் இன்னும் இரண்டு மூன்று பெண்களும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவள் மாடியை அடைந்த போது, நான்கு பெண்களுக்கு நடுவில் வசுதா தவித்துக் கொண்டிருந்தாள். சிரித்த சிரிப்பில் கண்களில் நீர் துளித்திருந்தது.
“என்னடீ இங்கே அமர்க்களம்?” என்று கேட்டுக் கொண்டே வந்த ராஜலட்சுமி ஒரு கணம் பிரமித்துப் போய் நின்றாள். அடுத்த கணம், தன் கண்ணே தான் பெற்றெடுத்த பெண்ணின்மீது படக்கூடாது என்று தோன்றியது.

வசுதா, ராஜலட்சுமியை விடச் சிவப்பு. அவளைவிட உயரம். அவளுடைய மூக்கைப் போல சற்றே உருண்டையாக இல்லாமல், அப்பா மூக்குப் போல அழகாக வளைந்து பிறகு நீண்டு ஒரு புள்ளியில் முடிந்திருந்தது. சின்னஞ் சிறு உதடுகள் குவிந்திருக்க, அவற்றின் செம்மை யௌவனத்தின் துடிப்பை அள்ளிக் கொட்டியது. காதின் ப்ளூ ஜாகர் வைரத் தோடு, விளக்கின் ஒளி யில் கண்ணைக் கூச வைத்தது.
“டீ, உன் அம்மா!” என்றாள் மாலினி.
“ஏன் அப்படி மலைச்சுப் போய் நிக்கறீங்க மாமி? உங்க பெண் தான். சந்தேகம் இருந்தா வந்து தொட்டுப் பாருங்கள்!” என்றாள் சுஜா.
“மாமி, உங்க பெண்ணுக்கு பிரம்மா எல்லாத்தையும் கொடுத்திருக்கான். தலை, கண், காது. மூக்கு, மார்பு…” என்று இழுத்த நித்யாவை வாயாடிக் கமலம் இடைமறித்தாள்.
“அது நம்ம எல்லாரையும் விட ஜாஸ்தியே இருக்குடீ.. வசூ உன் சைஸ் என்னடீ? 36, இல்லை 38?”
“எதுக்கும் இன்னிக்குப் பார்த்து வைத்துக்கொள்ளடி… ஒரு மாசம் போனா எப்படி ஆகியிருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்…” என்றாள் கமலம்.
“என்னடீ இது, நீங்களே பேசிக்கொண்டு போகிறீர்கள். ராஜலட்சுமி மாமி நிற்கிறார். என் பேச்சை நடுவிலே கட் பண்ணிவிட்டு உபயோகமில்லாத விஷயத்தைப்பத்திப் பேசுகிறீர்கள்!” என்றாள் நித்யா.
“எனக்கும் பீப்பி ஊதிக் கெட்டி மேளம் கொட்டுவார்கள். அப்புறம் கரெக்டா டென்த் மன்த்திலே குவா குவான்னு ஒண்ணு வந்து விழும். அதுக்குத் தெரியும், உபயோகம் இருக்கா, இல்லையான்னு!” என்றாள் கமலம்.
“ரெட் ஹில்ஸ்ஸிலேயே தண்ணீர் வத்திவிட்டது!” என்றாள் சுஜா.
“ஹோல்டான்!”” என்று கத்திய நித்யா, “மாமி, நான் சொல்ல வந்தது என்ன என்று கேட்பீர்களோ? கண், காது, தலை, மூக்கு எல்லாத்தையும் கொடுத்த பிரம்மா, நீங்கள் பெற்றெடுத்த பெண்மணி வசுதாவுக்கு ஒன்றைக் கொடுக்க மறந்துவிட்டான்!” என்றாள்.
“என்ன டீ சொல்றே?” என்று கேட்டாள் ராஜலட்சுமி.
“மூளையைப் பத்திச் சொன்னாள் அவள்!” என்ற கமலம், “இப்போ தலையை வாரினப்போ, தலையிலிருந்து ஈறும் பேனும்தான் வரவில்லை. போனாப் போறது. மண்டைக்குள்ளேயிருந்து ஒரு கால் ஸ்பூன் மசாலா வரப்படாதோ? அதுவும் வரலை!” என்றாள்.
“மூடுடீ, போர் அடிக்காதே!” என்றாள் நித்யா. “எங்களை மாதிரி ஃப்ரண்ட்ஸ். மிதிலையில் ஜானகிக்கு அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்த போது…”
“கல்யாணத்துக்கு முன்னாடியா ஃபர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடியா?” என்று தனக்கு வந்த சந்தேகத்துக்கு விடை கேட்டாள் சுஜா.
“அதை அப்புறம் சொல்றேன். இதைக் கேளு!” என்றாள் நித்யா.
“எங்கே நிறுத்தினேன். உம்.. அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்த போது திடீரென்று முழிச்சு நின்றாளாம். ஏன் தெரியுமோ? ஜானகிக்குப் புடவையை எங்கே கட்டுவதுன்னு புரியலையாம். ஏன் புரியலை தெரியுமோ? ஜனக புத்திரிக்கு இடையே இல்லாத மாதிரி இருந்ததாம்…”
“வசுதாவுக்கு இல்லவே இல்லை என்கிறாயோ? அப்படியானால் உள் பாவாடைக்கு எங்கே முடிச்சுப் போட்டாள்?” என்று கேட்டாள் கமலம்.
ராஜலட்சுமிக்குக் கோபித்துக் கொள்ளுவதா, சிரிக்கிறதா என்று தெரியவில்லை. இந்தக் காலத்துப் பெண்கள் என்னென்ன பேச்செல்லாம் எப்படி எப்படியெல்லாம் பேசுகிறார்கள்! உலகம் தெரியாத வயசில் கல்யாணமாகியிருந்தால் பெண்ணுக்கு அம்மா எல்லாம் சொல்லிக் கொடுத்து, அறைக்குள்ளே அனுப்பவேண்டும். இப்போ, ஊரிலே இருக்கிற புத்தகங்களைப் படித்துவிட்டு, கண்ட கண்ட சினிமாக்களைப் பார்த்துவிட்டு, பெண், அம்மாவுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கிறாள்!
மனத்தில் இமைக்கும் நேரத்தில் புரையோடிய எண்ணங்களைத் தாண்டி, “அலங்காரம்தான் முடிஞ்சு போச்சே. நீங்கள் கீழே சாப்பிடப் போங்கள்!” என்றாள்.
“ஆமாண்டீ சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வாருங்கள்,” என்றாள் வசுதா.
“அதுக்குள்ளே நீ அந்த ரூமுக்குள்ளே குதிச்சுட மாட்டியே?”
“மாட்டேண்டீ, கமலம்.”
அவர்கள் எல்லோரும் போன பிறகு, ராஜலட்சுமி, “அப்பாடி, ஒரு மழை பெய்ஞ்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு. கீழே நூறு பேர் போடற சத்தத்தை விட, இங்கே நாலு பேர் அடிக்கிற லூட்டி காதைத் துளைக்கிறது!” என்றாள்.
“இவர்கள் எல்லாரும் என் கூடப் படிச்சவர்கள் அம்மா. இவர்களிலே எனக்குத்தான் முதல்லே கல்யாணம் ஆயிருக்கு. அதனாலே ஒரு தனி ஆரவாரம்!” என்றாள் வசுதா.
“ஏண்டி வசுதா, என்னடா இவள் ஆயிரம் தடவை கேட்டு விட்டாளேன்னு எண்ணாதே. மாப்பிள்ளையை உனக்கு மனசாரப் பிடிச்சிருக்கா?”
வசுதா கலகலவென்று சிரித் தாள்.
“அம்மா. நீ ஒரு பைத்தியம். எத்தனை தரம் கேட்பாய்?”
“பெண்ணைக் கொடுத்தியோ கண்ணைக் கொடுத்தியோன்னு சொல்லுவார்கள். வசு, நீ என் கண் மாதிரி.. அப்பா தேர்ந்தெடுத்த ஒரு ஏழைப் பிள்ளை. ஏதோ நல்லா படிச்சிருக்கான், லட்சணக்கேடு இல்லாமல் இருக்கான் என்பதைத் தவிர, அவனுக்கு வேறு என்ன இருக்கு? அதை நான் யோசிச்சுப் பார்த்தப்போ இவனை உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோன்னு பயமாயிருந்தது. ஒளிவு மறைவு இல்லாம சொல்லு!”
“அம்மா, அவர் நேத்துக் காலையிலேதான் என் கழுத்திலே தாலியைக் கட்டினார். திருப்பதியிலிருந்து இங்கே வரும் வரை காரில் பழகியிருக்கேன். ஆனா அதற்குள்ளேயே, அவர் நல்ல மனிதராத்தான் அம்மா பட்டது. சொல்லப் போனால் ரொம்ப அப்பட்டமா, அதே சமயத்தில்.. அழகா பேசுகிறார் அம்மா.. எனக்குப் பிடிச்சிருக்கு அம்மா!”
வசுதாவின் குரலில் தோய்ந்த நெகிழ்ச்சியை உணர்ந்த ராஜலட்சுமி பரவசமானாள். அவளுடைய கண்கள் கனத்தன.
“ஒரு ஏழைப் பிள்ளையை நம் தலையில் அம்மாவும் அப்பாவும் கட்டிவிட்டார்கள் என்ற குறை உன் மனசில் என்றென்றைக்கும் தோணப் படாது வசு!”
“அம்மா, அப்பா நினைச்சிருந்தா குபேரன் பிள்ளையை இழுத்துக் கொண்டு வந்து மணையிலே உட்கார்த்தியிருப்பார். ஆனால் அப்பா ஒரு ஏழைப் பிள்ளையின் கையில் மஞ்சள் கயிற்றைக் கொடுத்தார் என்றால், அதுக்கு என்னம்மா அர்த்தம்? அந்தக் கயிற்றை நான் கழுத்தில் ஏந்திக் கொண்டு மாப்பிள்ளையின் ஏழ்மையில் மூழ்கணும்னா? இல்லை அம்மா. அப்பாவின் இருதயத்தில் ஒரு ஏழையின் மேல் அவ்வளவு இரக்கம், தாராளம்! அம்மா, அப்பா எவ்வளவோ தர்மங்கள் செய்திருக்கிறார். ஸ்கூல், காலேஜிலே எல்லாம் உபகாரச் சம்பளத்துக்கு நிதியை வாரி வாரிக் கொட்டியிருக்கிறார். அதெல்லாம் காலக்கிரத்தில் மறந்து போகக் கூடிய தர்மம். இப்போ ஒரு ஏழையைத் தன் மாப்பிள்ளையாக்கிக் கொண்டிருக்கிறாரே, இதுதான் அம்மா அவர் செய்திருக்கிற மகத்தான செயல்! எந்தப் பணக்காரனுடைய நெஞ்சிலும் இப்படி ஒரு ஈரம் கசியாது அம்மா!”
“என் வயிற்றில் பாலை வார்த்தாயடி, வசு! வயித்திலே பாலை வார்த்தாய். நீ சந்தோஷமா. அமோகமா இருக்கணும்!”
சொன்ன ராஜலட்சுமி அவசர அவசரமாக, பக்கத்து அறைக்கு ஓடிப் போய், ஒரு குங்குமச் சிமிழுடன் ஓடி வந்தாள்.
“இதை, இந்த மீனாட்சி குங்குமத்தை உன் நெத்தியிலே இடறேன். என்னன்னிக்கும் இது விளக்கு மாதிரி வழிகாட்டும். உன் கணவனை என்னன்னிக்கும் உன்கிட்டேயே வைத்துக் கொள்ளும்!”
கண்களில் நீர் மல்க ராஜலட்சுமி விரலை நீட்ட, வசுதா இசைவாகக் குனிந்து நெற்றியைக் காட்டினாள்.
ராஜலட்சுமி, “நான் கீழே போறேன் வசு.. இன்னிக்கு ராத்திரியைப்பத்தி நான் ஒண்ணும் விசேஷமா சொல்லப் போறதில்லை. நீ படிச்ச பெண். எல்லாம் புரிஞ்சுப்பே. ஆனா ஒண்ணு. புருஷன் ஆசையா இருக்கணும்னா மனைவி அவனைச் சந்தோஷப் படுத்தித்தான் ஆகணும். அதுக்கு, படுக்கையை விட்டா வேறு இடம் கிடையாது. அதனாலே… அதனாலே..” வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடினாள்.
“புரிகிறது அம்மா… அவர் மனம்கோணாமல் நடந்துக்கிறேன்… அதே சமயத்திலே என் மனம் கோணாமல் அவர் நடந்து கொள்கிறபடியும் கவனிச்சுக்கிறேன்!”
அம்மா அங்கே இருந்து போன பிறகு மாடி ஹால் வெறிச் சோடுவதை வசுதா உணர்ந்தாள். கீழே எல்லோரும் சாப்பிடுகிறார்கள். இன்னும் அரை மணி அல்லது முக்கால் மணி நேரத்தில் கோபியும் அவளும் ஒரே மஞ்சத்தில் உட்காரப் போகிறார்கள். படுக்கப் போகிறார்கள்.
திடீரென்று, அந்த அறையையும் மஞ்சத்தையும் ஜோடனைகளையும் பார்த்தால் என்ன என்ற ஆர்வம் எழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவள் மெதுவாக நடந்து முதல் இரவு அறையினுள் பிரவேசித்தாள்.
உள்ளே காலை வைத்ததுமே ஒரு கணம் மூச்சு நின்றது, ஆச்சரியத்தில்.
மஞ்சத்தில் மல்லிகைப் பூக்களை அப்பாவே சிதற விட்டுக் கொண்டிருந்தார்! இரட்டைக் கட்டிலின் மேலேயிருந்து மோதிரம் மோதிரமாய் ரோஜாப் பூவளையங்கள் விழ, ஒவ்வொரு வளையத்திலிருந்தும் மல்லிகைச் சரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
“என்னப்பா நீங்க போய் இந்த வேலையை எல்லாம்..”
“பின்னே யார் செய்யணும்? உனக்கு ஒரு அண்ணாவோ தம்பியோ இருந்தால் அவன் செய்வான். ஒரு வேலைக்காரனைக் கொண்டு செய்ய வைக்கிற காரியமா இது?”
“போங்க அப்பா!”
“வசு, நன்றாயிருக்காம்மா? மதுரைப் பிளேன் கொஞ்சம் லேட்டு. பன்னிரண்டு கூடை மல்லிகைக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன்.. வாசனை கமகமன்னு இல்லை?”
“அப்பா…” வசுதா நெகிழ்ந்தாள்.
“மாப்பிள்ளை கோபி இருக்கானே அவன் ரொம்ப நல்ல பிள்ளைம்மா. மரியாதை தெரிஞ்சவன். உன்னை நன்றாக வச்சுக்குவான், அம்மா!”
“நானும் அவரை நல்லா வச்சுக்கிறேன் அப்பா!” என்று சொல்லிச் சிரித்தாள் வசுதா. ”அம்மா உங்க கிட்டே காட்டற அன்பு, பக்தி, மரியாதையெல்லாம் நானும் காட்டறேன்!”
“கடைசியிலே சொன்னியே அதுதான் அம்மா முக்கியம். என்னிக்கும் நீ அவனை விட உசத்தி என்கிற எண்ணமே உன் மனசில் தோன்றக் கூடாது – அது உண்மையாகவே இருந்தாலும்”, என்றார் சிவராமன்.
தோழிகள் புடை சூழ, வெள்ளித் தட்டில் பாலும் பழமும், பன்னீர் வீசியும், வெற்றிலை பாக்கு, வாசனைத் திரவியங்களும் நிரம்பிவழிய, வசுதா மெதுவாக நடந்து வந்தாள். என்னதான் வெளியே தைரியம் விளக்குப் போட்டுக் காட்டினாலும் உள் மனம் சற்றே, ஒரு திகிலில் நடுங்கியது. கால்கள் இடறுவதை உணர்ந்தாள். தொடைகள் திடீரென வியர்க்கின்றனவோ என்று பயந்தாள். மார்பு விம்மி விம்மி வெடித்துவிடும் போல இருந்தது.

அறை வாயிலில் எல்லோரும் திடீரென்று நின்றார்கள். பெண்கள் பாடினார்கள். ராஜலட்சுமி வசுதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “உனக்குச் சந்திர சூரியர்களைப் போல் பிள்ளை பிறக்க வேண்டும்!” என்றாள்.
வசுதா வெள்ளித் தட்டுடன் அறையினுள் பிரவேசித்தாள். ஊதுவத்தியின் தாழம்பூ மணம் லேசாக வீசியது. வெள்ளித் தட்டை ஒரு டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, தோழிகள் சாத்திவிட்ட கதவின் தாழ்ப்பாளைப் போடத் திரும்பினாள்.
“வசு..” – கோபி மெல்லிய குரலில் அழைத்தான்.
“கதவைச் சாத்திவிட்டு வருகிறேன்.”
“இன்னிக்குக் கண்டிப்பாக யாரும் திறந்து கொண்டுவர மாட்டார்கள். இங்கே வந்து உட்கார்.”
வசுதா மெதுவாக நடந்து அவனருகே சென்றாள். மஞ்சத்தில் அவன் காலைத் தொங்கப் போட்டுக். கொண்டு உட்கார்ந்திருந்தான். அவள் அருகே வந்ததும், அவனுடைய வலது கரம் அவளுடைய இடையைப்பற்றி நாசூக்காக இழுத்தது.
இரு கன்னங்களும் உராய்ந்த போது, அவன் சொன்னான்:
“இதுக்கு நான் உன் அப்பாவுக்கு நன்றி செலுத்தணும். உன்னை எனக்கு அவர் கொடுத்த நிகழ்ச்சி வாழ்விலே மறக்க முடியாத நிகழ்ச்சி!”
“என் அப்பாவை உங்களுக்குச் சரியாகத் தெரியாது.”
“இப்போ தெரிந்து விட்டது. வெறும் தாராள மனசு உள்ளவர் பணத்தை எண்ணாமல் அளக்காமல் ஏழைகள் மீது கொட்டுகிறவர் என்று தான் நினைத்திருந்தேன்.. தான் பெற்றெடுத்த கண்மணியையே எனக்கு, சாதாரண சாமான்யனுக்கு அளித்ததிலிருந்து அவர் ஆயிரத்தில் ஒருவர் என்று தெரிந்து கொண்டேன்!”
அவனுடைய வார்த்தைகள் அவளைப் பூரிக்க வைத்தன. அவளது தகப்பனாரின் உயர்வை எப்படி உணர்ந்து பேசுகிறார்! அவளுடைய உடல் தானாக அவன் மீது சாய, அவன் சற்றே நகர்ந்து அவளுடைய தலையைத் தன் மடிமீது வைத்துக் கொண்டாள். அப்போது அவனுடைய முழங்கை அவளுடைய மார்பகத்தில் பதிய, அவள் மெய் மறந்தாள்.
“இந்த உலகத்திலே எல்லோரும் என் அப்பாவுக்கு ஒரு விதத்தில் இல்லாவிட்டால் ஒரு விதத்தில் கடன்பட்டிருக்கிறார்கள்… ஆனால் என் அப்பா.. என் அப்பா யாருக்கும் கடன் பட்டதில்லை.”
“ஆமாம், வசுதா… உன் அப்பாவுக்கு இப்போ ஒரு கடனும் இல்லை…”
அவனுடைய பேச்சில் ‘இப்போ’ என்கிற வார்த்தை ஒரு கனத்தோடு விழுந்துவிட்டதோ என்று பிரமை கொண்டாள் வசுதா.

மடியில் இன்னும் படுத்துக் கொண்டே, “என்ன சொன்னீர்கள். புரியவில்லை?” என்றாள்.
“உதவி செய்தவர்களை உன் அப்பா மறக்கவில்லை. அந்தக் காலத்தில் எங்கள் குடும்பம் அவருக்குச் செய்த ஒத்தாசையை அவர் உதாசீனப் படுத்தியிருக்கலாம். உலகம் அவரை ஏசாது, இகழாது. ஏனென்றால் அதற்குச் சரித்திரம் தெரியாது. ஆனால் அவர் உன்னை எனக்குக் கொடுத்துத் தன் கடனை, மனச்சாட்சிக்கு விரோத மில்லாமல் தீர்த்துவிட்டார்!”
வசுதாவுக்குச் சுருக்கென்றது.
“என்ன சொன்னீர்கள்? கடனா! நன்றிக் கடனா? என் அப்பா தீர்த்துவிட்டாரா?”
“உனக்குத் தெரியாதா, இல்லை மறந்துவிட்டதா வசுதா? என் அம்மா தங்கம்மாவைப் பற்றி அவர் சொல்லியிருக்க வேண்டுமே…”
என்ன இது. . . தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடும்பம் பணக்காரக் குடும்பம்… யாருடைய நிழலிலும் அவள் அப்பா நின்றதில்லை. மழையிலே மாட்டிக் கொண்டால்கூட இன்னொருத்தர் குடையிலே ஒதுங்க மாட்டாரே! அவர் கோபியின் குடும்பத்துக்குக் கடன் பட்டிருந்தாரா? அதற்குப் பிரதியாகத்தான் இந்தக் கல்யாணமா..
அவள் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை அவன் கவனித்தான். “என்ன?… என்ன வசு?” என்றான்.
அவள் எழுந்து உட்கார்ந்த போது ஒரு கால் டீப்பாயின் மேல் மோதியது.
வெற்றிலைகள் விழுந்து மின்சார விசிறியின் காற்றில் சிதறின.
ஓர் ஆப்பிள் உருண்டு கட்டிலுக்கு அடியில் ஓடி ஒளிந்தது.
சிறிது பால் சிந்தி, கோலம் போட்டது.
அத்தியாயம்-2
கல்யாணத்தில்-
மணப் பெண், பிள்ளை கண்ணுக்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
மாப்பிள்ளை செல்வ செல்வ வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று பெண்ணைப் பெற்றவள் எதிர்பார்க்கிறாள்.
மருமகன் புத்திசாலியாக, அறிவுள்ளவனாக இருக்கவேண்டும் என்று பெண்ணைப் பெற்றவர் விரும்புகிறார்.
பந்து ஜனங்கள் பிள்ளையின் குலம் நல்ல குலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மற்ற ஜனங்கள் நல்ல ருசியான சாப்பாடு கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள்.
– வடமொழி நூலிலிருந்து.
காலையில் வசு ஹாலுக்குள் பிரவேசித்த போது, ராஜலட்சுமி வெள்ளி டபரா தம்ளருடன் அவள் முன் வந்தாள்.
“நான் சாப்பிட்டாச்சு, அம்மா.”
“இதை மாப்பிள்ளைக்குக் கொண்டு போய்க் கொடு.” ராஜலட்சுமி காப்பியை நீட்டினாள்.
பதில் பேசாமல் வாங்கிக் கொண்ட வசு மெதுவாக மாடிப் படியை நோக்கி நடந்தாள்.
முந்தின இரவு அவள் திடீரென எழுந்து உட்கார்ந்து வெளியே ஓடிவிடத் துடித்தபோது, கோபி சாதுரியமாகப் பேசினான். சிதறிய பாலைத் துடைத்து, பறந்தோடிய வெற்றிலைகளை ஒழுங்காக வைத்த அவன், அவளிடம், “உன் மனநிலை எனக்குப் புரிகிறது, வசு” என்று சொல்லி அவளுடைய இரு கைகளையும் தனது கைக்குள் பொதிந்து கொண்டான்.

“உன் அப்பாவை நான் ரொம்ப உயர்வா மதிக்கிறேன். இகழ்ச்சியா நினைச்சேன்னா, என்னைவிட ஒரு முட்டாளோ அயோக்கியனோ இருக்க முடியாது. சுய கௌரவத்துக்கும் தன் மானத்துக்கும் பெருந்தன்மைக்கும் அவர் இலக்கணமாக இருக்கிறவர். நான் சொன்னதைத் தயை செய்து, சிலேட்டில் எழுதி அழிக்கிற மாதிரி அழிச்சிடு… இன்னிக்கு சந்தோஷமா இருக்கணும்… நீ மனம் வாடறதைப் பார்க்கவா இந்த மல்லிகையும் ரோஜாவும் இங்கே இருக்கு?”
அவனுடைய பேச்சு அவளைத் திசை திருப்பியது என்றால், அவனுடைய ஸ்பரிசம் அவளை மயக்கியது. கண்கள் தாமாக மூடிக் கொண்டன. அவனுடைய மடியில் சாய்வதை அவள் உணர்ந்தாள். அவன் அவளை உலகத்தின் எல்லைக்கே மெல்ல மெல்லப் பூக்கரங்களால் இழுத்துப் போய்க் கொண்டிருந்தான். “விளக்கை அணைத்துவிடுங்கள்,” என்று அவள் அரை விழிப்பில் முணுமுணுத்தபோது, “நமக்குள் மட்டுமே நம் ரகசியங்கள் இருக்கும்போது இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் வித்தியாசமே இல்லை, வசு,” என்றான். அதன் பிறகு அவள் உலகத்தையே மறந்தவளாகிவிட்டாள்.
அந்த அனுபவம் முதல் – காலம் காலமாய் யுகம் மனித வர்க்கத்தில் நடந்த, க்கப் போகிற ஓர் உபாதை வுக்கு அவளை எங்கேயோ கொண்டு போகும் என்று வேயில்லை.
ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த கோபியை பார்த்தபோது முந்தின இரவு நடந்தவகைகளெல்லாம் மீண்டும் கண் முன் தோன்ற, வெட்கமும் சஞ்சலமும் கொண்டாள்.
அவளைக்க் கண்டதும் பேப்பரை தூர வைத்த கோபி, “ஹலோ குட் மார்னிங்!” என்றான்.
அவள் காப்பியை நீட்டி “குட் மார்னிங்.” என்றாள்.
அதை வாங்கிக்கொண்டே, “காட்டில் இருக்கும் இப்போ நான் வீட்டிலே இருக்கிறேன்,” என்றான்.
“அப்போ ஒண்ணு செய்யலாம். நாம இரண்டு பேருமே இப்போ காட்டுக்குப் போய்விடுவோம்!” வசு சிரித்தாள். பற்களின் வெண்மையல் சூரிய ஒளி மங்கிப் போய்விட்டதாகத் தோன்றியது கோபிக்கு.
அவன் காப்பியைக் குடிக்காமல் அவளையே பார்த்தவனாய் இருப்பதைக் கண்ட வசு, “சீக்கிரம் குடியுங்கள். ஆறிப்போயிடும்”, என்றாள். பிறகு சிரித்துக் கொண்டே, “நான் ஆறிப்போக மாட்டேன். போதுமா?” என்றாள்.
“நானும் ஆறவிடமாட்டேன்,” என்று சொல்ல வாயெடுத்த கோபி, சிவராமன் வருவதைக் கண்டு எழுந்து நின்றான்.
“உட்காருங்கள் மாப்பிள்ளை. முதலில் காப்பியைக் குடித்து முடியுங்கள்!” என்றார் அவர். ”நாளைக்கு ராத்திரி ரெயிலில் ஏ.ஸி.புக் பண்ணிட்டேன். ஸ்பெஷலா ஆளை அனுப்பி உங்களுக்குக் கூப்பேயும் போடச் சொல்லியிருக்கேன்.”
“ஊட்டிக்கு ரிடர்ன் டிக்கெட் வாங்கினா சீப்… போக வர ஒண்ணரை டிக்கட்தான்,” என்றான் கோபி.
“நோ… நோ.. கோயமுத்தூர்லே உங்களுக்குன்னு கார் காத்திருக்கும். இரண்டு மணி நேரத்திலே ஊட்டி போய்ச் சேர்ந்துடலாம். மேட்டுப் பாளையத்திலிருந்து, ரெயில் லொங்கு லொங்குன்னு போகும்… போர் அடிக்கும்… இல்லியா வசு?”
எதிர்பாராதபோது தந்தை வந்துவிட்டதால் ஏற்பட்ட குழப்பத்தில் வசு பேசாமலிருந்தாள்.
“மாப்பிள்ளை, இன்னிக்கு என்னென்ன புரோக்ராம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“பதினொரு மணிக்கு மேலே அடையாறு வரைக்கும் போகணும். மூன்று மணிக்கு வந்துடுவேன். சாயங்காலம் வசுவின் கிளப்பில் பார்ட்டி. லேடீஸ் கிளப்பில் நான் ஒருத்தன்தான் ஜென்டில் மென்!”
“என்ன வசு, அப்படியா?”
“ஆமாம்ப்பா.”
“மாப்பிள்ளை, நாளைக்கு நீங்க ஊட்டிக்குப் போறத்துக்கு முன்னாடி ட்ரிப்ளிக்கேன் ரூமைக் காலி செய்து விடுங்கள். நீங்க இங்கே இருந்தால், எனக்கும் நல்ல கம்பெனி கிடைக்கும்… பழைய கதைகளையெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம்… அதாவது வசுவுக்கு வேறு வேலை இருக்கும்போது.”
சிவராமன் இறங்கிச் செல்லும் வரை காத்திருந்த கோபி, அவள் கையைப் பற்றினான்.
டெலிபோன் அடித்தது.
“எனக்கு டெலிபோன் செய்ய யாரும் இல்லை, வசு! உனக்குத்தான்,” என்றான் கோபி சிரித்துக்கொண்டே.
நித்யாதான் போனில் பேசினாள்.
“ஏண்டி, இப்பத்தான் அவர் சுப்ரபாதம் பாடி எழுப்பினாரா?”
“நான் கார்த்தாலேயே எழுந்துட்டேன்.” என்றாள் வசு.
“ஏண்டி உன் குரலே ஒரு மாதிரி இருக்கு? ராத்திரி ரொம்பப் பேசினாயோ? நீதான் கெட்டிக்காரி யாச்சே, பேசாமலே காரியத்தை முடிச்சிருப்பே! எப்படி? சக்ஸஸ்தானே?”
“பேசாம இருடி!”
“நேத்து ராத்திரி உன்னை அலங்காரம் பண்ணி, பாட்டெல்லாம் பாடி உள்ளே தள்ளியிருக்கேன்! எப்படியடீ பேசாம இருக்கிறது? என்ன நடந்தது. சொல்லு!”
“என்ன நடக்கணுமோ அது.”
“அதை அப்படியே ஒன்று விடாம டயரிலே எழுது. அப்புறம் ‘டயரியை என் கிட்டே கொடு.. உன் ‘அவர்’ எப்படி? ஆசையை எப்படிக் காட்டினார்? நளினமாக, நாசூக்காக வா.. இல்லே, சோத்தைக் காணாத பரதேசிப் பயல் மாதிரியா?”
“டயரியைக் காட்டறேன்…போதுமா?”
“ஏண்டி வசு, பக்கத்திலே அவர் இருக்காரா? அவசரப்படறியே!”
“இல்லை. நான் அப்புறம் போன் பண்றேன்.”
“சரி சரி, நான் குறுக்கே நிக்கலைடி!”
மாலை.
சிவராமனுடைய ஆபீஸ் அறைக்கு அடுத்த அறைக்குள் புத்தகம் ஒன்று எடுக்கப் பிரவேசித்த கோபி பக்கத்து அறையில் ராஜலட்சுமியுடன் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டான். அவன் அந்த அறைக்குள் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. இப்போது வெளியேறினால் அவர்கள் அவனைப் பார்க்கக்கூடும். என்ன செய்வது? ஒரு கணம் யோசித்த கோபி, சீக்கிரத்திலேயே ஒரு புத்தகத்துடன் வெளியேறி, வாசற்பக்கமாகச் சென்று போர்ட்டிகோவில் நின்று விடலாம் என்று முடிவு செய்தான்.
ஆனால் திடீரென்று அவனுடைய பெயரும் வசுவின் பெயரும் அவர்களுடைய பேச்சில் அடிபடுவதைக் கேட்டபோது அவனையும் மீறிய ஆர்வம் அவனை அறையினுள்ளேயே. நிறுத்தியது.
“ராஜி, இன்னிக்கு வசு கிட்டே ஏதானும் பேசினாயா?”
“ஏன், எதுக்குக் கேட்கிறீர்கள்?”
“வசு. ஒரு மாதிரியா இருக்கிறாள்.”
“உங்களுக்குப் பிரமை.”
“இல்லே ராஜி நான் மாடிக்குப் போனப்போ, அவன் காபிக் குடிச்சுட்டிருந்தான். அவள் எங்கோ பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.”
“நீங்க மனசை வீணா அலட்டிக்காதீர்கள். அவள் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்.”
“நானும் கோபியும் பேசிக் கொண்டிருந்தோம். இவள் தானாகப் பேச்சிலே கலந்துக்கவே இல்லை. ஏதோ எங்கேயோ என்னவோ நடக்கிறது போல் நின்றாள்.. ராஜி, நான் தப்பு செய்துவிட்டேனா?”
“பேசாமல் போங்கள்.. அவ அவனைப்பத்தியே நினைச்சுட்டிருந்திருப்பா.”
“நம்ம தகுதிக்கு இவன் ஏற்றவனில்லைன்னு வசு நினைக்கிறாளோன்னு தோன்றிற்று. ஆனா நீ சொல்றதுதான் கரெக்டா இருக்கும்.”
“அது சரி, ஹனிமூனுக்குப் போகிறார்களே, பணம் கொடுத்தாச்சா?”
“நாளைக்குத்தானே? அலமாரியிலிருந்து எடுத்துக்கட்டும்.”
“இங்கிதம் தெரியலை. ரெண்டாயிரத்தை எடுத்து மாப்பிள்ளை கையிலே கொடுங்கள். ஹாண்ட்பாக்கிலேந்து எடுத்து வசு ஓட்டல்காரன் கிட்டே கொடுத்தா யாருக்கு அவமானம்? புருஷன் நிழல்லேதான் பெண் இருக்கணும்.”
“எனக்கு இது தோணவேயில்லை ராஜி.”
கோபி யோசித்துப் பார்த்தான்.
அவர் பயப்படுவது போல. வசு. தகுதி இல்லாத ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டோம் என்று உண்மையாகவே வருந்துகிறாளா? கோபி தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.
போன மாதம்தான் சிவராமன் திடீரென்று அவனைச் சந்தித்தார். அவன் தங்கம்மாளின் பிள்ளை என்பதைக் கண்டு பிடித்த பிறகு ஒரு நாள்கூட இருவரும் மாலை வேளையில் சந்திக்கத் தவறியதில்லை. சென்னையில் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக இருக்கும் சிவராமனைப் பற்றி, அந்தக் காலத்தில் சித்தி சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. இப்போது சிவராமனே அவனுடைய தாயாரைப் பற்றி ஆயிரமாயிரம் சொல்லிச் சொல்லிக் கரைந்தார்.
தன்னைத் தம் மாப்பிள்ளையாக்கிக் கொள்ள அவர் விரும்புகிறார் என்று தெரிந்தபோது அவன் அவருடைய பணத்தைக் கண்டு பயப்பட வில்லைதான். ஆனால் பணக்காரப் பெண் தன்னை எப்படி பாவிப்பாளோ என்ற ஓர் அச்சம் தலைதூக்கியது.
ஆனால் ஒரே இரவில் அவன் அவளை அறிந்துகொண்டுவிட்டான். அவளுடன் நிறைந்த வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
ஒரு வழியாகப் புத்தகத்துடன் மாடியேறிய கோபி, ஹாலிலோ மற்ற அறைகளிலோ வசுவைக் காணவில்லை. அவள் எங்கே?
அவளுடைய அறையில் எட்டிப் பார்த்துவிட்டு வெளியேறக் கால் வைக்கையில், இணைந்திருக்கும் குளியலறையிலிருந்து திடீரெனச் சத்தம் கேட்டது.
ஒரு கணம் நின்றான்.
வசு குளிக்கப் போயிருக்கிறாள். அவளுடைய அழகு திடீரென அவனுடைய நினைவில் மோதி, அவனைக் குறும்புத்தனம் செய்யத் தூண்டிற்று.
ஓரிரு நிமிடங்கள் அசைவற்று நின்ற அவனுக்கு அறையை விட்டு வெளியேற மனம் வரவில்லை. மெதுவாக அடிமேலடி வைத்துக் கதவண்டை போனான். இரு கதவுகளும் சாத்தியிருந்தன. மெல்ல ஒரு கதவைத் தொட்டான்.
அவன் கையின் பலத்தில் கதவு நகர்ந்தது. கால்கள் தாமாக உள்ளே நடந்தன.
அப்போதுதான், கையில் சோப்பை வைத்துக்கொண்டு, அதைத் தேய்த்துக்கொள்ள மனம் வராமல், வசு கண்களை மூடியவளாய் ஏதோ யோசனையாக நின்றாள்.
திடீரென்று –
ஒரு கரம் அவளுடைய இடையைப் பற்றியது.
பயத்தில் அதை ஓர் ஆவேசத்துடன் உதறினாள்.
“தூக்கிவாரிப் போட்டுட்டுதா வசு?”
“ப்ளீஸ்…ப்ளீஸ்.. என்ன இதெல்லாம்? அப்பா வந்துடுவார்…அம்மா வந்துடுவார்…”
“வரமாட்டார்கள்.”
“இது பாத்ரூம்…. பெட் ரூம் இல்லை.”
“எந்த ரூமானா என்ன வசு?”
சொன்ன அவள், அருகே இருந்த துவாலையால் தன்னை அவனிடமிருந்து மறைத்துக் கொண்டாள், அவளுடைய பயத்தில் மார்பு விம்மி, துவாலையைத் தள்ளிவிடுமோ என்றிருந்தது.
கோபி சிரித்தான்.
“இங்கே கூடவா உங்களுக்கு விளையாட்டு? கெட் அவுட்!”
டிரெஸ் செய்து கொண்டு வந்த வசு, மாடியில் பால்கனியில் நீண்ட மர பெஞ்சியில் கால்களைத் தொங்கப் போட்டு, புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த கோபியைக் கண்டு ஒரு கணம் நின்றாள். அவன் உட்கார்ந்திருந்த பழைய காட்டுமர பெஞ்சு கண்ணை உறுத்தியது.
“ஹலோ வசு, அதுக்குள்ளே ரெடியாயிட்டியா…இதோ. இந்தப் பக்கத்தை முடித்துவிட்டு வரேன்!”
அவள் சிணுங்கினாள்.
“அங்கே ஹாலிலே நிறைய சோபாக்களும் ரப்பர் மெத்தை போட்ட சேர்களும் இருக்கே. நீங்க இந்தப் பழைய மர பெஞ்சியிலேதானா உட்கார்ந்து படிக்கணும்?”
“எனக்கு இதுமாதிரி பெஞ்சியிலே உட்கார்ந்துதான் பழக்கம். ரப்பர் மெத்தை சோம்பலைத்தான் வளர்க்கும்.”
“நான் என்ன சோம்பேறியா? அதிலேதான் பிறந்து வளர்ந்திருக்கேன்.”
கோபி கலகலவெனச் சிரித்தான். “நீ ஒரு விதி விலக்கு வசு… பின் எதுக்கு இந்த ஹைதர்அலி காலத்து மர பெஞ்சை இங்கே போட்டிருக்கிறார்கள்?”
“ஏதோ கிடக்கு.”
“ஒரு வேளை பழைய காலத்தை நினைச்சுப் பார்க்க இருக்கட்டும் என்றா?” அவனுக்கு ஒரு கதை ஞாபகம் வந்தது. “தாரான்னு ஒரு ஆட்டு இடையன் இருந்தான். அவன் திடீரென்று ராஜாவானான். அப்புறம் எங்கே போனாலும் கையிலே ஒரு பெட்டியையும் தூக்கிக் கொண்டு போவான்…”
அவன் வேடிக்கையான கதையொன்றைச் சொல்வதாக நினைத்துக் கொண்டு அடுக்கிக் கொண்டு போனான்.
அவளுக்கும் அந்தக் கதை தெரியும்… அந்தப் பெட்டிக்குள்ளே, தாரா ஆட்டை ஓட்டுகிற இடையனாக இருந்தபோது போட்டுக்கொண்ட கந்தல் இருந்தது. அந்த மாதிரி இந்த பெஞ்சா….
அவள் முகம் கடுத்தது.
அத்தியாயம்-3
“ஓ, பெண்ணே, ஏழு அடி தூரம் என்னுடன் வந்த நீ எனக்கு சகாவாவாய். நாம் இருவரும் சினேகிதர்களாகிவிட்டோம். உன்னைவிட்டு நான் பிரிய மாட்டேன். என்னைவிட்டு நீ பிரியக்கூடாது. பரஸ்பரம் நல்ல மனமுடையவர்களாக இருப்போம். நம் இருவர் மனமும் ஒத்திருக்கட்டும். வெளி இந்திரியச் செயல்களிலும் இருவரும் ஒத்திருப்போம்…” – ஸப்தபதியில் ஒரு பகுதி.
அம்மாவின் பூஜை முடிவதற்காகக் காத்திருந்த வசு, பூஜை முடிந்த பின்பும் அவள் கையில் சின்னஞ் சிறு வெள்ளித் தட்டுடன் அப்பாவைத் தேடிப் போவதைக் கண்டு பொறுமை இழந்தாள். இப்படி ஏனோ அவளுக்கு எல்லாவற்றின் மேலும் எரிச்சலாய் வந்தது.
“அப்பா எங்கே, வசு?”
“தெரியாது. ஒரு வேளை மாடியில் இருக்கிறாரோ என்னமோ?”
“நைவேத்தியத்தைக் கொடுக்கலாம்னு பார்த்தா…”
“ஏன் அம்மா நீ தினமும் இந்தத் திராட்சையை எடுத்துட்டு அலையறே? அப்பாதானே பூஜை ரூமுக்கு வந்து வாங்கிக்கணும்?”
காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் மாடிக்குச் சென்று சிவராமனிடம் திராட்சைப் பழங்களைக் கொடுத்து விட்டுத் திரும்பி வந்த ராஜலட்சுமி,
“ஏன் வசு, நான் பூஜைக்குப் போறத்துக்கு முன்னாடி நீ யார்கிட்டேயோ போர்ட்டிகோவிலே நின்னு பேசிட்டிருந்தாயே, யார் அது?” என்றாள்.

“பொள்ளாச்சி வீட்டிரே குடியிருக்கிறவர். தபால்லே அனுப்ப வாடகையை இந்த மாசம் நேரிலேயே கொடுத்திட்டுப் போக வந்திருந்தார்”, என்றாள் வசு “ஏம்மா, மெட்ராஸ்லே மூணு பங்களா இருக்கு. அம்பது ரூபா வாடகை வருகிற அந்தப் பழைய வீடு பொள்ளாச்சியில் எதுக்கு? வித்துத் தொலைச்சுடப்படாதா?”
“எதுக்கு விக்கணும்?” என்றாள் ராஜலட்சுமி. “அது உன்னை என்ன செய்கிறது? உனக்கும் கல்யாணமாயாச்சு. எங்க பாரமும் போயாச்சு. நானும் அப்பாவும் நிம்மதியாக எங்க கடைசிக் காலத்தை அங்கே கழிக்கப்போறோம்! இந்தப் பங்களாவும் காரும்தான் சுகம்னு நினைச்சியா?”
“போனா நீ மட்டும்தான் போகணும். அப்பா வரமாட்டார்.”
“அவரா!” ராஜலட்சுமி பெருமூச்செறிந்தாள்.”அவர் மனசைப் பத்தி உனக்குத் தெரியாது. இந்த வீடு வாசல் சொத்து எல்லாத்தையும் காட்டி இதெல்லாம் உனக்கு வேணுமா. இல்லே, இந்த ராஜலட்சுமி வேணுமான்னு தெய்வம் வந்து கேட்டா, எல்லாத்தையும் உதறி எறிஞ்சுட்டு அவர் என்கிட்டே வந்து நிற்பார்…மேனகை ஊர்வசிதான் வரட்டுமே, அவர் என்னைவிட்டு அசையமாட்டார்.”
வசு முகம் சுளித்தாள். “நீ அப்பாவைப் புகழ்கிறாயா இல்லே உன்னையே புகழ்ந்துக்கிறாயான்னு எனக்குப் புரியலே..அப்பா ஆசைப்பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனா இவ்வளவு தூரத்துக்கு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உன்பின்னே வருவார்னு எனக்குத் தோணலை.”
“உனக்குத் தோன்றா விட்டால் போறது. எனக்குத் தோன்றுகிறது, அது போதும்,” என்ற ராஜலட்சுமி, திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளைப்போல, “ஆமாம். நீ இங்கேயே நின்னு பேசிட்டிருக்கியே, ட்ரிப்ளிகேனில் மாப்பிள்ளையின் ப்ரெண்ட் வீட்டு விருந்துக்குப் புறப்படலியா?” என்று கேட்டாள்.
“போகணும்.”
“சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிக் கொள். இப்போதே மணி பத்தரை.”
“இதுக்கு மேலே என்ன ட்ரெஸ்? இந்த நைலக்ஸே போதும்.”
“என்னடீ இது… மாப்பிள்ளையோடு, அவர் சினேகிதர் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போறே…பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள். உன் நெக்லஸையும் கல் வளையலையும் கொண்டு வரேன், இரு.”
கார் போய்க்கொண்டிருந்தது. வசு ஓட்டிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கோபி. ஆனால் இருவரிடையிலும் மௌனம் நிலவிற்று.
காரை ஸ்டார்ட் செய்தபின் வசு தன்னுடன் ஏதாவது பேசு வாள் என்று அவன் எதிர்பார்த் தான். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையைத் தாண்டி, ஜெமினியைக் கடந்து மவுண்ட் ரோடில் வண்டி வேகம் எடுத்த பின்பும் கூட அவள் வாயைத் திறக்கவில்லை. இரண்டு தடவைக்குமேல் அவனாகவே அன்று காலை அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாயிற்று. அவள் மனத்தில் என்னென்னவோ நினைத்துக் கொண்டு ஓரிரு வார்த்தைகளாய்ப் பதில் பேசி அவனுடைய வாயை அடக்கி விட்டாள். அப்புறம் அவனுக்கும் வீம்பு ஏற்பட்டுவிட்டது. ஒன்றுமில்லாததற் கெல்லாம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறாளே! அவள் ஒருத்தியால்தான் பிடிவாதம் செய்ய முடியுமா? முரண்டு செய்ய முடியுமா? அவன் ஆண். அவளுடைய கணவன். அதிகப்படியான அன்பைச் செலுத்தவும் முடியும். அவனால் ஆத்திரமாகவும் இருக்க முடியும். ஏழைகளுக்குத் தன்மதிப்பும் சுய கௌரவமும் மற்றவர்களைவிட அதிகம் என்று வசுவுக்குத் தெரியாது போலிருக்கிறது.
அவனாக ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த அவளுக்கு அவனுடைய மௌனம் சுமையாகத் தோன்றியது. அவனுடைய நண்பன் வீட்டில் நடக்கும் விருந்துக்கு அவள் மறுப்புச் சொல்லாமல் வருகிறாளே, அதற்காகவாவது இதமாக இரண்டு வார்த்தைகள் அவன் பேசலாம். பேசவில்லை. வரட்டும்..
வீட்டு வாசலில் கோபியின் நண்பன் நாகராஜன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கையைப் பிடித்தவளாய் அவன் அக்காவின் மூன்று வயதுப் பெண், ஒரு கத்திரிப் பூ நிற கவுனைப் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள்.
“என்னடா? உன்னை ரொம்ப நேரம் வாசல்லேயே நிக்க வைச்சுட்டேனா?” என்றான் கோபி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. இவ உள்ளே லூட்டி அடிச்சாள். இழுத்துட்டு வந்தேன்.. லல்லி, அக்காவுக்குக் குட்மார்னிங் சொல்லு”, என்ற நாகராஜன், ”வாருங்கள்,” என்று வசுவை வரவேற்றான்.
“ஏன் மாமா, இவதான் கோபி வீட்டு அக்காவா? இவ கல்யாணத்துக்குத்தானே நீ மட்டும் திருப்பதிக்குப் போனே?” வீட்டினுள் பிரவேசித்த நாகராஜனைத் தொடர்ந்து கொண்டே கேட்டாள் குழந்தை.
“ஆமாம்.”
“ரொம்ப அழகா இருக்கா, இல்லே. மாமா?”
நாகராஜன் சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான். வசு புன்முறுவல் செய்தாள்.
“வீடு பழைய காலத்து வீடு, மிஸஸ் கோபி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளணும்!” என்றான் நாகராஜன்.
“ட்ரிப்ளிக்கேன்னு சொன்னாலே யாருக்கும் பழைய வீடுன்னு புரியும். சாயம்தான் புதுசா இருக்கும். ஆனா இந்த வீட்லே அதுவும் கிடையாது,” என்றான் கோபி.
அந்த வீட்டில் மொத்தம் நான்கு குடும்பங்கள் குடியிருந்தன. நாகராஜன் பின்கட்டில் இருந்தான். ரேழியைக் கடந்ததும், “வசு, என் ரூம் மாடியில் இருக்கு. ஊட்டியிலேந்து வந்ததும் அதைக் காலி செய்யலேன்னா உன் அப்பா விட மாட்டார். எனக்குப் பிடிச்ச ரூம்,” என்றான்.
“ரூம் நல்ல ராசியான ரூம். பெரிய இடத்திலே கல்யாணமாகியிருக்கிறதே!” – நாகராஜன்.
“அக்கா அழகா இருக்கா, இல்லே மாமா?” -லல்லி.
“எத்தனை வாட்டி சொல்லுவே?” என்று கூறிச் சிரித்தாள் வசு.
பின்கட்டில், வலதுபுறத்தில் சமையலறை, தாழ்வாரம், ஒரு படுக்கை அறை என்ற பகுதி. பெரிதாக இருக்கும் தாழ்வாரத்தை, இடதுபுறக் குடித்தனக்காரரிடமிருந்து மறைக்க ஒரு பெரிய திரை கட்டியிருந்தார்கள். பழைய கோணிகளை ஒட்டுப்போட்டுத் தைத்த திரை.
நாகராஜனுடைய அம்மாவும் அக்காவும் (கைக் குழந்தையுடன்) முன்வந்து வசுவை வரவேற்றார்கள். மனைவி சீதா சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தாள். அவள் இன்னும் ஐந்தாறு மாதத்தில் தாயாகப் போகிறாள் என்பதை அவள் முகத்தழகும் உருவமும் காட்டிக் கொடுத்தன.

நாகராஜனுடைய தாயார் பாகீரதி, “மகாலட்சுமி மாதிரி இருக்கே.. வாம்மா.. வா.. இத்தனை பெரிய வீட்டுப் பெண், எங்க வீட்டுக்குப் படியேறி வருவியோ மாட்டாயோன்னு பயந்தேன்,” என்றாள்.
“உட்காருங்கள்,” என்றாள் சீதா.
“முதல்லே பாயைப் போடு. சீதா.”
“பரவாயில்லே,” என்று சொன்ன வசு தரையிலேயே உட்கார்ந்தாள். குழந்தை லல்லி அவளுடைய தோளைத் தொட்டுக் கொண்டு நிற்க, வசு அவளைத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டாள்.
“கோபி, உனக்கு மகாலட்சுமி மாதிரி வாய்ச்சிருக்கு… நீங்க ரெண்டு பேரும் பார்வதி பரமேஸ்வரன் மாதிரி அமோகமாக இருக்கணும், ஆமாம். ஏம்மா வசு, உன் இடது கண் என்ன சிவந்திருக்கு?” என்று கேட்டாள் பாகீரதி.
“ஒன்றுமில்லை.” என்றாள் வசு.
“வாரத்துக்கு ரெண்டு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிச்சா இப்படிக் கண் பொங்காது.”
“ஆமாம் மாமி. ஒரு வாரமாச்சு” என்ற வசு, பிறகு, “சீதா, நீயும் உட்கார்ந்து கொள்,” என்றாள்.
நாகராஜன் சொன்னான்: “அம்மா, இன்னிக்கு ரெண்டு பேரும் ஹனிமூனுக்கு ஊட்டி போகிறார்கள்.”
“இப்போ குளிராதோ? தை மாசம் ரொம்பக் குளிரும்னு சொல்வார்கள்,” என்றாள் சீதா.
“இப்போ ரெண்டு பேருக்கும் குளிரும் தெரியாது, வெய்யிலும் தெரியாது. என்னடா கோபி?”
“உன் அனுபவத்திலே நீ சொல்றே!” என்றான் கோபி.
பிறகு நண்பர்கள் இருவரும் முன்பக்கத்தில் குடியிருக்கிற நண்பரைப் பார்க்கச் சென்றார்கள்.
“நெக்லஸ் புதுசாக் கல்யாணத்துக்கு பண்ணினதா?” என்று கேட்டாள் தாயார்.
“ஆமா” என்ற வசு மெதுவாகக் கழற்றி நீட்டினாள்.
பாகீரதியும் அவளுடைய பெண்ணும் அதை உன்னிப்பாகப் பார்க்க, சீதா சற்றே விலகி நின்று கவனித்தாள்.
“நல்ல காத்திரமா இருக்கு”, என்ற பாகீரதி அதைத் திருப்பிக் கொடுத்தாள். சீதாவின் கண்கள் நெக்லஸ் மீது பதிந்திருப்பதைக் கண்டு, “சீதா, நீ போட்டுப் பாரேன்?” என்றாள் வசு.
சீதா தன் கணவன் நாகராஜனைப் பார்க்கத் திரும்பினாள்.
“அவர்கள் அந்த ரூமில் இருக்கிறார்கள்!” என்ற வசு எழுந்து நெக்லஸை அணிவித்தாள். அவளுடைய செய்கைகளில் சீதா சிலிர்த்துப் போனாள்.
உள்ளே சென்று கொண்டிருந்த பாகீரதியிடம், “பாட்டி பாட்டி! மாமி கோபி அக்கா நகையைப் போட்டுட்டிருக்கா. நீ வந்து அவளைக் கோபிச்சுக்கோ!” என்று லல்லி கத்தினாள்.
எல்லோரும் சிரித்தார்கள்.
நெக்லஸைக் கழற்றப் போன சீதாவிடம், “சற்று உன் கழுத்திலேயே இருக்கட்டும்,” என்ற வசு, சீதாவின் தாய்மை அழகைக் கண்டு தன்னுள் வியந்துபோய், “இப்போ எத்தனை மாசம்?” என்று கேட்டாள்.
“நாலு.”
“சீமந்தத்துக்கு என்னை அழைப்பாய் இல்லியா?”
“இது ஒரு கேள்வியா? கோபி இல்லாம ஒரு விசேஷமும் எங்க வீட்டிலே நடக்காது. இனிமே கோபியின் குடும்பம் இல்லாம நடக்காது. இதை நீங்களே கழட்டிவிடுங்கள்.”
நாகராஜன், கோபி, வசு மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
“எனக்கும் போடு,” என்று லல்லி அடம் பிடித்தாள்.
“நீதான் சாப்பிட்டாச்சே!” என்று குழந்தையை இழுத்தாள் தாயார். “பாயசம் சாப்பிடலையே!” என்று அலறினாள் லல்லி.
“டம்ளர்லே தரேன், வா.”
“மாட்டேன்… போ..நான் கோபி அக்காகிட்டேதான் ஒக்காரப் போறேன்.”
வசு லல்லியைத் தன் அருகே இழுத்துக் கொண்டாள்.
சாப்பாடு ஆனதும் சீதா வசுவை அழைத்துக் கொண்டு, கோபியின் அறையைப் பார்க்க மாடியை நோக்கிச் சென்றாள்.
“மாடிப்படி ஜாக்கிரதை. மரப்பலகை அங்கங்கே ஒடிஞ்சிருக்கும். விரிஞ்சு கிடக்கும்,” என்று அவள் எச்சரிக்க மெல்ல மெல்ல வசு ஏறினாள்.
டெரஸ்ஸை அடைந்ததும் சீதா, “முன் பக்கம் தட்டு வீடு. பின் பக்கம் ஓட்டு வீடு. அதனாலே டெரஸ் குறுகலாகப் போய்விட்டது. இதிலே ஒரு அறையைக் கட்டி, நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறார் வீட்டுக்காரர். என்ன சாமர்த்தியம்!” என்றாள்.
கோபியின் அறைக்குள் காலை வைத்தபோது விளக்கேற்றப் புருஷன் வீட்டுக்குள் பிரவேசிப்பதான பிரமை உண்டாயிற்று வசுவுக்கு. அறையினுள் நின்ற அவள் சுற்று முற்றிலும் பார்த்தாள். எட்டு அடிச் சதுரத்தில் அறை துப்புரவாக இருந்தது. மூலையில் ஒரு சின்னஞ்சிறு மேஜை. அதன்மேல் ஐந்தரை மணியைக் காட்டி நின்ற அலாரம் கடியாரம். நான்கைந்து புத்தகங்கள். அருகே சற்று உயரத்தில் ஜாதிக்காய்ப் பெட்டியில் செய்த ஒரு மூன்று தட்டு ஷெல்ப். மேல் தட்டில் ஆங்கிலப் புத்தகங்கள். நடுத்தட்டில் தமிழ். கீழ்த்தட்டில் சோப்பு, ஷேவிங் ஸெட், பற்பசை எல்லாம். ஒரு மூலையில் மங்கிக் கிடக்கும் பூட்சுகள். அதன் அருகே சுவரோரமாக, ஒரு கித்தான் படுக்கை. உள்ளே ஒரு தலையணையும் ஒரு போர்வையும் இருப்பதை கவனித்தாள்.
“கோபியே தினமும் பெருக்கி மெழுகுவார். வெங்கடாசலபதி படத்துக்கு விளக்கும் ஏற்றுவார். அந்தப் படத்தை உள்ளே வைத்திருக்கிறார். இந்த ஆணியில்தான் அது தொங்கும்”, என்று ஒரு ஆணியைச் சுட்டிக் காட்டினாள் சீதா. “இந்த ரூம்லே ஒரு விசேஷம் என்னன்னா காத்து வராது. மழை பெய்தா தண்ணியும் உள்ளே வரும். சமுத்திரக்கரையிலே வீடுன்னு பேரு. ஆனா ஒரு நாள்கூட கோபி தன் குறைகளைச் சொன்னதில்லை.”
திடீரென்று தன்னுள் ஒரு சுனை பிறந்து பீறிட்டு வெடிப்பதை வசு உணர்ந்தாள். அவளுடைய கோபி ஏழைதான். ஆனால் கெளரவமான கேவலமில்லாத ஒரு வசீகரமான ஏழ்மையை அனுபவித்தவன். இதுவரை உணர்ந்தறியாத ஒரு மதிப்பும் அபிமானமும் ஏன், இரக்கமும்கூட அவளுள் தோன்றின.
பணக்காரன் பணத்தை வாரி இறைத்து வீட்டை அழகு படுத்துகிறான். ஏழைகளால் குடிசைகளையே அழகாக வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த ரூமே ஒரு உதாரணம் என்று அவளுக்குத் தோன்றிற்று.
திரும்பினாள்.
“மாடிப்படி ஜாக்கிரதை”, என்றாள் சீதா, மறுபடி.
“மரப் பலகை. ஓடிஞ்சு போயிருக்கும். விரிஞ்சு கிடக்கும்!” என்று வசு சிரிக்க, சீதாவும் சிரித்தாள்.
கீழே பாகீரதி கோபியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீ கொடுத்து வைச்சிருக்கேடா. உனக்குப் பெண்டாட்டி அமோகமா அமைஞ்சிருக்கா. ஏழை பணக்காரர் என்கிற வித்தியாசமே இல்லேடா… எங்க சீதாவிடம் எவ்வளவு பிரியமா இருக்கான்னு நினைக்கறே… அந்த நெக்லஸ் முப்பதாயிரம் பெறும். அதைக் கழட்டித் தன் கையாலேயே சீதா கழுத்திலே போட்டாள். இன்னும் திருப்பிக்கூட வாங்கிக்கலை. அவளுடைய நல்ல குணத்தைப் புரிஞ்சி கொண்டு நன்றாக வைச்சுக்கணும்”, என்றாள் .
“நெக்லஸை சீதா கழுத்திலே பார்த்தேன். ஆனா அது, இவள் போட்டதுன்னு தெரியாது.”
“ஊட்டிக்குப் போறோம், திரும்பி வந்தப்புறம் காரை அனுப்பறேன். எல்லாரும் சாப்பிட வரணும்னு கூப்பிட்டா. அவ மனசு நிறைஞ்ச மனசுடா கோபி, நிறைஞ்ச மனசு!”
கோபியின் மனம் பெருமையால் நெகிழ்ந்தது.
“ரூமை என்ன செய்யப் போறே?” என்று கேட்டாள் பாகீரதி.
“இன்னிக்கே காலி, பண்ணிட்டு வான்னு மாமா சொல்றார். இந்த மாசம் போகட்டும், அப்புறம் பார்க்கலாம்னு இருக்கேன்.”
பாகீரதி, சீதா, லல்லி, அவளுடைய தாயார் எல்லோரும் வாசல் வரை வந்து கோபியையும் வசுவையும் வழி அனுப்பினார்கள். வசு கொடுத்த அன்பளிப்பை லல்லி இன்னும் கையில் வைத்துக் கொண்டிருந்தாள். காரில் ஏறியதும், “எல்லாருக்கும் டாடா…லல்லி, டாடா!” என்றாள் வசு.
கார் மெரினாவில் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது.
“எனக்கு சைக்கிள்தான் விடத் தெரியும். கார் ஓட்டக் கத்துக்கணும்னு ரொம்ப நாளாவே ஒரு ஆசை. ஆனா அதுக்கு வாய்ப்பே கிடைக்கலை!” என்றான் கோபி.
“எனக்கும் கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கணும்னு ஒரு ஆசை. இதுவரை வாய்ப்பே கிடைக்கலை.” வசு கலகலவெனச் சிரித்தாள்.
“இப்போ ரெண்டு பேருக் மே வாய்ப்புக் கிடைச்சிருக்கு. இல்லியா, வசு?”
“ஊட்டியிலிருந்து திரும்பி வந்தப்புறம் கற்றுக் கொள்ளலாம்.”
“நீ கத்துத் தர்றபோது எனக்கு என்ன பயம்? ரோடிலே போகிறவர்கள்தான் பயப்படணும்!”
“இப்ப நீங்க ஏன் பயந்து கதவோடு கதவா ஒட்டி உட்கார்ந்திருக்கிறீர்கள்? பக்கத்திலே வாருங்கள்”, என்றாள் வசு.
“டீச் பண்றத்துக்கு முன்னாலேயே அதிகாரம் பண்றியா? ஓகே,” என்று நகர்ந்தான் கோபி.
அவர்களிடையே நிலவி இருந்த எரிச்சலும் புகைச்சலும் இருந்த இடம் தெரியாமல் போயின.
– தொடரும்…
– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.
– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.