டைவர்ஸ்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 5,554
(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம்-22
புருஷன் வீட்டுக்குச் செல்லும்போது அவன் கூறும் பல மந்திரங்களில் ஒரு மந்திரத்தின் அர்த்தம்:
என் வீட்டிலுள்ள மற்ற மருமகள்களிடமும் மாமனார் மாமியார் குழந்தைகளிடமும் என் சகோதர சகோதரிகளிடமும் செல்வாக்கு உள்ள எஜமாளி போல் இரு – அன்பாக நடந்து அவர்கள் உன்னைக் கொண்டாடும்படி இரு. புதிய இடம் என்று பயப்படாதே.
கணியூரில் தாயார் பிறந்து வளர்ந்த வீட்டில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு கோபி ஒரு நிலையில் இல்லை. வசு அவனுடைய தாயாரைப் பற்றி ஏளனமாகப் பேசியது தவறுதான். ஆனால் அந்தத் தவறை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே! ஒரு சீற்றத்தில், ஒரு ஆவேசத்தில் அவன் அவளுடைய கன்னத்தில் விரல்கள் பதியும் வண்ணம் அடித்து விட்டான். அடித்ததில் வசுவுக்கு ஏற்பட்ட வலியைவிட அவனுக்குத்தான் நெஞ்சில் வலி அதிகமாக உண்டாயிற்று. ஒரு பெண்ணைக் கை நீட்டி அடித்துவிட்டோமே, பண்பையும் நாகரிகத்தையும் மறந்து போய் விட்டோமே என்று வருந்தினான்.
நடந்ததை வசு நித்யாவிடம் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொண்ட கோபி அது பற்றி ஒரு வகையில் திருப்தி அடைந்தாலும், அவன் செய்த காரியம் அவனை வதைத்துக் கொண்டே இருந்தது. வசுவிடம் நேரடியாகச் சென்று நடந்ததையெல்லாம் மறந்து விடச் சொல்ல வேண்டும் என்று அவனுக்குத் துடித்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே ஏற்படவில்லை.
மறு நாளே சென்னைக்குத் திரும்பிய அவன், வசுவைச் சந்திக்கும்போது எப்படி ஆரம்பிக்க வேண்டும், என்னென்ன பேச வேண்டும் என்றெல்லாம் மனத்துள் தீர்மானித்துக் கொண்டான்.
அவனுடைய வெளிறிப் போன முகத்தையும், எதிலும் சிரத்தை இல்லாமல் நடந்து கொள்ளும் மாற்றத்தையும் கண்ட நாகராஜன் துருவித் துருவி விசாரித்தான்.
“இரண்டு மூன்று நாளாக ஒரே அலைச்சல்…ரெயிலில் வேறு தூக்கமே இல்லை,” என்றான் கோபி.
“டேய், என்னிடமிருந்து எதையோ மறைக்கிறாய்… நீ சொல்ல விரும்பவில்லை என்றால் நான் வற்புறுத்திக் கேட்கப் போவதில்லை. பொள்ளாச்சியில் என்ன நடந்தது…வசு எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான் நாகராஜன்.
ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் நண்பனிடம் சொல்லி ஆறுதல் பெற்றால் என்ன என்று தோன்றியது. அரக்கோணம் ஸ்டேஷனில் அவள் குளிர் பானம் அளிக்க முன்வந்ததிலிருந்து கணியூரில் அவளுடைய கன்னத்தில் அடித்தது வரை எல்லாவற்றையும் கூறினான்.
“நீங்கள் ரண்டு பேருமே இன்னும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்”, என்ற நாகராஜன், “இதனால் குடி முழுகவில்லை. இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது,” என்றான்.
“இல்லையடா… கண்ணாடி உடைஞ்சது உடைஞ்சதது தான்.”
“ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்கிற பக்குவம் இல்லை. அதனால் எல்லாமே அஸ்தமித்துவிட்டதாக நினைக்கிறீர்கள்.”
“நாகராஜா, விட்டுக் கொடுக்கிறது என்றால் என்ன? சுய கௌரவத்தையும் மரியாதையையும் காற்றில் பறக்க விட வேண்டும் என்கிறாயா?”
“கோபி, நீ முட்டாள் மாதிரி பேசுகிறாய்… கட்டின பெண்டாட்டியிடமா உன் சொந்த கௌரவத்தையும் சுய மரியாதையையும் காட்டுவது? ஒரு பெரிய கோடீசுவரனுடைய பெண் உன்னை மனமார விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாளே. அவள் தன் கௌரவத்தையா அப்போது நினைத்துப் பார்த்தாள்? ஏதோ சில சௌகரியங்கள வாழ்க்கையில் அனுபவித்துப் பழக்கப்பட்டுப் போய் விட்டாள். அதே சௌகரியங்களை உன்னிடமும் எதிர்பார்க்கிறாள். ‘நான் எப்போதும் அழுக்குச் சட்டையே போட்டுக் கொண்டு வளர்ந்தவன், உனக்காக நல்ல சட்டை போட மாட்டேன்’ என்று நீ பிடிவாதம் பிடிக்கிறாய்…”
“இல்லை. நான் அவளுக்காக வேறு வீடு பார்க்க ரெடி என்று சொல்லியாகி விட்டதே…”
“வெறும் வார்த்தையில் தானே? காரியத்தில் காட்டு..சிதாவிடம் மன்னிப்பு கேட்டுத்தான் ஆகணும்னு பிடிவாதம் பிடிக்காதே …. வசு தான் தப்பு செய்திருக்கிறாள் என்று உனக்கு எப்படித் தெரியும்? சீதாவும் செய்திருக்கலாம் இல்லையா?”
கோபி மனம் குழம்பிப் போனான்.
“வசு இப்படியெல்லாம் இருப்பாள் என்று நான் நினைக்கவே யில்லை நாகராஜா!” என்றான்.
“நீ நினைக்கிறது போலவே அவளும் உன்னைப் பற்றி நினைக்கலாம் இல்லியா?”
“இருக்கலாம்.”
“இப்போ நான் சொல்லுவதை முதலில் கேள். குளித்து விட்டு எங்கள் வீட்டில் சாப்பிடு. ஆபீஸுக்குப் போ. அங்கேயிருந்து வசுவுக்கு போன் பண்ணு. சாயங்காலம் மீட் பண்றதாகச் சொல். அதுக்கு முன்னாடியே, கணியூரில் நடந்ததை மறந்து விடச் சொல்லு.”
கோபி இடைமறித்தான்.
“நீ நினைக்கிற மாதிரி அவள் மறப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை.”
“நான் சொல்றபடி செய்து பார். கல்யாணம்னா ஆயிரம் இருக்கும். யார் கண்டார்கள். உன் வசுவே மனம் வருந்திக் கொண்டிருக்கலாம் இல்லியா?”
“எதற்காக?”
“உன் அம்மாவைப் பற்றி ஏளனமாகப் பேசியதற்காக.”
“அது இந்த ஜன்மத்தில் நடக்காது.”
“ஏன் சவால் விடுகிறாய்… சாயங்காலம் சந்தித்துப் பேசு… தயவு செய்து சீதாவைப் பற்றிப் பேசிக் குட்டையைக் குழப்பாதே!”
“ராஜி, இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கிறது. நான் திரும்பி வர நேரமாகும்”, என்று சொல்லிக் கொண்டே வந்த சிவராமன், ராஜலட்சுமி உட்கார்ந்திருந்த சோபாவுக்கு முன்னால் டீப்பாயின் மேலிருந்த பெட்டியைப் பார்த்ததும், “யார் வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டார்.
“என் அண்ணா ராஜாமணி ஏதோ காரியமாக வந்திருக்கிறார். சாப்பிட்டுவிட்டுப் போயிருக்கிறார். சாயங்காலமே திரும்பிவிடுகிறார்.” என்றாள் ராஜலட்சுமி.
“நான் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன், பார்க்க முடியவில்லைன்னு சொல்லிவிடு,” என்றார் சிவராமன்.
அவர் செல்லுவதையே பார்த்துக் கொண்டிருந்த ராஜலட்சுமியின் கண்முன் அமிர்தம் தோன்றினாள். இந்த அமிர்தம் எப்போது இவருடைய வாழ்க்கையில் பிரவேசித்தாள்? நாம் வந்த பிறகா, அல்லது அதற்கு முன்பேயா? முன்பாக இருந்தால் எப்படி நம்மை இந்த வீட்டுக்குள் அனுமதித்தாள்? சிவராமன் நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பது போல அமிர்தத்தையும் ஏமாற்றி வருகிறாரா? அல்லது எல்லாம் தெரிந்த பிறகும் அமிர்தம் அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறாளா?
அவள் தன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருக்கையில் ராஜாமணி வந்தார்.
“வா, அண்ணா. காப்பி கொண்டு வரட்டுமா?”
“மூச்சு விடப்படாது. இப்பத்தான் தோசை, போண்டா, காப்பி எல்லாம் சாப்பிட்டேன்,” என்றார் ராஜாமணி. பிறகு, “சிவராமன் எங்கே?” என்று கேட்டார்.
ராஜலட்சுமி விஷயத்தைக் கூறினாள். பிறகு, “அண்ணா, உன்னிடம் ரெண்டொரு சந்தேகம் கேட்கணும்”, என்றாள்.
“கேளேன்.” அவர் முகத்தில் சஞ்சலம் தோன்றிற்று.
“என் கல்யாணத்துக்கு முன்னாலே கொஞ்ச காலம் நீ வியாபார விஷயமா பழனி, பொள்ளாச்சின்னு போயிட்டிருந்தே இல்லியா?”
அவர் சிரித்து மழுப்பினார்.
“ஆமாம். இன்னும் பல்லடம், தாராபுரம், சத்தியமங்கலம்னு போவேன், ஏன், அதுக்கு இப்ப என்ன?”
“சும்மா கேட்டேன். நீ பொள்ளாச்சியிலேதானே இவரைச் சந்திச்சே?”
“ஆமாம்.”
“அப்போ அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?”
“ஏதோ ஒரு வேலையில் இருந்தார்.”
“அது தெரியும்.”
“பின்னே எது தெரிய வேண்டும்னு நீ கேள்வி கேட்கறே. அன்னிக்கு வந்தபோதும் இது மாதிரித் தான் ஏதேதோ கேட்டே. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது.”
“இரு அண்ணா. அன்னிக்கு நான் கேட்டது அவர் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினாரா, அப்படியானால் அதை உன் வியாபாரத்தில் முடக்கினாரா என்று. நீதான் இல்லைன்னு சொல்லிவிட்டாயே?”
“சரி, இப்போ எதுக்கு அஸ்திவாரமா என்னென்னவோ கேட்க ஆரம்பிக்கிறே, ராஜி?”
“அமிர்தத்தை த் தெரியுமா?”
“எந்த அமிர்தம்?”
“பொள்ளாச்சிக்குப் பக்கத்திலே அங்கலக்குறிச்சி இருக்கே..”
திடீரென்று ராஜாமணி துள்ளினார். “ஓ, அமிர்தமா? அங்கலக்குறிச்சி அமிர்தம். அது சரி, அவளுக்கும் சிவராமனுக்கும் என்ன சம்பந்தம்?”
“சம்பந்தம் இருக்கிறதே..”
ராஜாமணி அளந்தார்.
“என்ன பேத்தறே, ராஜி! உன் கல்யாணத்துக்கு முன்னாடியே அமிர்தத்தின் கல்யாணம் நடந்து விட்டது. நானும் சிவராமனும் அமிர்தத்தின் அப்பா ரொம்பக் கட்டாயப் படுத்தியதன் பேரில் கல்யாணத்தன்று ராத்திரிகூடச் சாப்பிட்டோம்.”
“அப்படியா?'”
“அமிர்தம் இப்போ நாக்பூரில் இருப்பதாகக் கேள்வி. நான்கு வருடங்களுக்கு முன் அவளுடைய அப்பாவும் அம்மாவும் ஜி.டி. எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்தார்கள். நான் விஜயவாடா ஸ்டேஷனில் சந்தித்தேன். ரெயில் கிளம்பற மட்டும் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வளவுக்கும் அப்போ காலை மூன்று மணி.”
“என்ன சொன்னார்கள்?”
“அமிர்தத்துக்கு மூன்று பெண்களும், இரண்டு பிள்ளைகளுமாம். எல்லாரும் நாக்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார்களாம்… அவருடைய புருஷனுக்கு, பாவம், அதிக சம்பளம் இல்லியாம்…”
“இவ்வளவு பொய் பேச எப்போ அண்ணா கற்றுக்கொண்டாய்?”
அவர் முகத்தில் அசடு வழிந்தது.
“நீ எதையோ மனசில் வைத்துக் கொண்டு அனாவசியமாக் குழப்பிக்கொள்கிறே ராஜி…”
“அதுக்குத் தீர்வு காணத்தான் உன்கிட்டே கேட்டேன். ரொம்ப சாமர்த்தியமாக நடிக்கப் பார்க்கிறே… நான் மன நிம்மதியுடன் இருக்கணும் என்கிற ஆசையில் நீயும் ஏமாற்றப் பார்க்கிறே, அண்ணா!”
“நீ ஏதோ நிழலைப் பார்த்துப் பயப்படறே.ராஜி!”
“இல்லை. நான் உருவத்தையே பார்த்துவிட்டேன்,” என்று சொல்ல வாயெடுத்தாள் ராஜலட்சுமி.
அதற்குள் போன் அடித்தது.
“அதைக் கவனி!” என்ற ராஜாமணி மெல்ல நழுவினார்.
அதே சமயம் வசுவும் ஹாலுக்குள் பிரவேசித்தாள்.
போனை எடுத்த ராஜலட்சுமி “வசு, உனக்குத்தான்,” என்றாள்.
வசு போனை எடுத்தாள்.
“நான்தான் கோபி,” என்று குரல் கேட்டது.
மறுகணம் வசு போனை டக்கென்று வைத்தாள். பிறகு, அம்மா இருக்கும் திசையையும் பாராமல் மாடிப்படியை நோக்கி நடந்தாள்.
“வசு. ஏன் போன்லே பேசாம டக்குனு வைச்சே?”
“ராங் நம்பர்.”
“என்னடீ உளர்றே?”
“உளறலே…ராங் நம்பர்லேருந்து ராங் பெர்ஸனுக்கு போன்..”
எகத்தாளமாகப் பேசிவிட்டு வசு சென்ற பின்புதான், இத்தனை நேரமாகத் தன் தலைவலியை மறந்து போயிருக்கிறோம் என்று நினைத்தாள் ராஜலட்சுமி. அக்கணமே கோபி ஊட்டியிலிருந்து வாங்கி வந்த நீலகிரித் தைலம் நினைவுக்கு வந்தது.
அது சிவராமனுடைய அறையில் இருந்தது. அங்கு சென்றாள். மர அலமாரியில் அது இல்லாமற் போகவே, பீரோவைத் திறந்தாள்.
எடுத்த எடுப்பிலேயே கண்ணில் பட்டது ஒரு நகைப் பெட்டி. திறந்து பார்த்த ராஜலட்சுமி அயர்ந்து போனாள்.
பிரமிக்கத்தக்க ஜொலிப்புடன் ஒரு வைர நெக்லஸ் கண்ணைக் கூச வைத்தது. அதன் மயில் பதக்கத்தைப் பார்த்துக் கொண்டே நின்றவளின் மனத்தில் அடுத்த வாரம் வரப் போகும் தன்னுடைய பிறந்த நாள் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பரிசு கொடுக்கும் சிவராமன் இந்த ஆண்டு இதையா வாங்கியிருக்கிறார்! மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் அவள் தன் தலைவலியை மறந்து போனாள்.
அத்தியாயம்-23
பெண் கேட்கப் பிள்ளை நான்கு நண்பர்களை அனுப்பி வைக்க வேண்டும். அப்போது சொல்லுகிற மந்திரத்தின் அர்த்தம்:
“எனக்காகக் கன்னிகையின் வீட்டுக்குச் செல்லுகின்ற உங்களுடைய வழி கல்லும் முள்ளும் இல்லாமலிருக்கட்டும். அர்யமா, பகன் எனும் தேவர்கள் எங்களைச் சேர்த்து வைக்கட்டும். எங்களுடைய தாம்பத்தியம் சிறக்கட்டும்.” -சம்ஸ்காரத்திலிருந்து.
ராஜலட்சுமி வைர நெக்லஸைக் கண்டதும் பரவசப்பட்டாள். இருக்கை கொள்ளவில்லை. வருடா வருடம் சிவராமன் அவளுடைய பிறந்த நாளுக்கு ஏதாவது பரிசு கொடுப்பது வழக்கம். ஒரு வருடம் ஒரு ஜோடி கல் வளையல் கொடுத்தார். போன வருடம் ஒரு வைர மோதிரம். ஆனால் இந்த வருடம் இவ்வளவு உயர்ந்த வைர நெக்லஸ் கிடைக்கப் போகிறது என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
நெக்லஸின் விலை மதிப்பு அவளை பிரமிக்க வைக்கவில்லை. அதை வழங்கப் போகும் கணவரைப் பற்றி நினைத்து நினைத்துத்தான் ஆச்சரியப்பட்டாள். அவள் அறியாமல் இன்னொருத்தியின் வீட்டில் தகாத சகவாசத்தில் ஈடுபட்டிருக்கும் சிவராமன் அவளுடைய பிறந்த நாளை மறக்காமல் ஒரு பெரிய பரிசை வாங்கி, கடைசி நிமிடத்தில் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த இருக்கிறார்!
அமிர்தம்மா என்னதான் சிவராமனை இழுக்க முயற்சித்தாலும், அவர் என்றென்றும் தன் பக்கம் தான் இருப்பார் என்ற நம்பிக்கை ராஜலட்சுமியின் மனத்துள் வளர்ந்து கொண்டே வந்தது. ஓர் அப்பாவி உள்ளத்தை முறையும் தரமும் கெட்ட ஒருத்தி எத்தனை நாட்களுக்குத் தான் சிறைப்படுத்தி வைக்க முடியும்? குழந்தை தடுக்கி விழுந்தால் குழந்தையை யாராவது கண்டிப்பார்களா? அவளுடைய சிவராமன் ஒரு குழந்தை. பச்சைக் குழந்தை. அது இப்போது எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டது. இதற்குக் காரணம் அந்தப் பாழாய்ப் போன அமிர்தம்மாதான். இனி ராஜலட்சுமி செய்ய வேண்டியதெல்லாம்.. கணவருக்கு அமிர்தம்மாவிடமிருந்து ஒரேயடியாக விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதான். அது எப்படி என்றுதான் இனிமேல் யோசிக்க வேண்டும்.
ராஜலட்சுமி நெக்லஸைத் திரும்ப வைத்து பீரோவைப் பூட்டி விட்டு வந்தாள்.
“அம்மா!”
மாடியிலிருந்து தடதட வென்று இறங்கி வந்தாள் வசு.
”என்ன?”
“நாளைக்கு உனக்குப் பிறந்த நாள்!”
“எப்படிக் கண்டு பிடிச்சே?”
“அப்பா தான் காலண்டர்லே கொட்டை கொட்டையா எழுதி வைச்சிருக்காரே? அது போறாதுன்னு தேதியைச் சுத்தி ரெட் இங்க்காலே ஒரு சுவர் எழுப்பியிருக்கார்.”
“இப்போ எங்கானும் போகப் போறியா?”
“உனக்கு ஏதாவது பிரஸெண்ட் வாங்கிவரட்டுமா? என்ன வேணும் சொல்லு?”
“சொன்னா உன்னாலே வாங்கித் தர முடியுமா, வசு?”
“ஏன்? இப்படிக் கேட்டுட்டியே? இந்த வசுவாலே முடியாததுன்னு ஒண்ணு இருக்கா?”
“இதோ பாரு வசு, உன் வாய்ப் பந்தலை என்கிட்டே போடாதே.”
“என் கிட்டே சவால் விடாதே. ஆமாம். உன் பிறந்த நாளுக்கு நான் என்ன பரிசு வாங்கித் தந்தால், நீ சந்தோஷப் படுவே?”
“நான் வெறும் சந்தோஷம் மட்டும் பட்டாப் போதாது. என் மனசு நெறைஞ்சு பூரிக்கணும்.”
“ஓ.கே! சொல்லு, அம்மா!”
“கோபியை நாளைக்குச் சாப்பிடக் கூப்பிடணும். அவன் கூட நீ வாழணும்!”
வசு அவளுடைய இந்தக் கோரிக்கையை எதிர்பார்க்கவில்லை.
“டூ லேட் அம்மா. உன் பிறந்த நாள் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா ஒருவேளை என் மனசு இளகியிருக்குமோ என்னவோ! டூ லேட்.”
விருட்டென்று செல்லும் வசுவைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் ராஜலட்சுமி.
இரவு ஏழு மணிக்குச் சிவராமன் வந்தார்.
“ராஜி …ஒரு கிண்ணதில் தயிர் சாதம் மட்டும் பிசைந்து வை. தொட்டுக்கக் குழம்பையும் அதிலேயே போட்டு வை. நான் அஞ்சு நிமிஷத்திலே வரேன்!”
சொன்னவர் மாடிக்கு விரைந்தார். ராஜலட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை. கம்பெனியில் ஏதானும் அவசர மீட்டிங்கா? அல்லது பாக்டரியில் ஏதாவது பிரசினை முளைத்து விட்டதா?
சிவராமன் சொன்னபடி ஐந்தாவது நிமிடம் ஒரு தோல் பெட்டியுடன் இறங்கி வந்தார். வலது கையில் ஓர் அட்டைப் பெட்டி இருந்தது.
டிப்பாயின் மேல் இருந்த கிண்ணத்தைப் பார்த்துக் கொண்டே சிவராமன் அட்டைப் பெட்டியை நீட்டினார். “ராஜி, உனக்குப் பிறந்த நான் பரிசு!”
ராஜலட்சுமி வாங்கிக் கொண்டாள். அட்டைப் பெட்டியில் ஒரு ஹாண்ட்பாக் இருப்பதை அவள் புரிந்து கொண்டாள். ஆனால் அதனுள் இருப்பதை – வைர நெக்லஸை – சிவராமன் இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.
பெட்டியைப் பிரித்து, திறந்து பார்ப்பதற்குள் அவர், “ராஜி, நான் அவசரமாகக் கோயமுத்தூர் போகிறேன். இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன்… நாளைக்கு நான் போன் செய்கிறேன்,” என்றார்.
அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
மனைவியின் மௌனத்தைப் புரிந்து கொண்ட சிவராமன், “என்ன செய்கிறது. ராஜி? வருத்தப் படாதே. நீ நீண்ட நாள் வாழ்ந்து என் மனசை எப்போதும் போல குளிரச் செய்யப் போறே!” என்றார்.
அவசர அவசரமாகச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டார்.
அவர் காரில் ஏறிச் சென்றதும், ராஜலட்சுமி பெட்டியைப் பிரித்தாள். எதிர் பார்த்தது போலவே ஹாண்ட் பாக். முதலைத் தோவில் செய்த கவர்ச்சியான ஹாண்ட் பாக். திறந்தாள்.
உள்ளே, வேறு ஒன்றும் இல்லை. ‘ராஜிக்கு-அன்புடன்-சிவராமன்’ என்றிருந்தது.
கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவள், மெள்ள மாடிக்குச் சென்றாள். சிவராமன் பீரோவைப் பூட்டாமலேயே போயிருந்தார். பீரோவின் எல்லாத் தட்டுக்களையும் துழாவித் துழாவிப் பார்த்தாள்.
நெக்லஸ் இல்லை.
சிவராமன் கோயமுத்தூரிலிருந்து திரும்பி வந்த பிறகு, பிறந்த நாளைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை. அவளும் எந்தவித மாற்றத்தையும் வெளியே காட்டிக் கொள்ளலில்லை.
ஒருநாள் மத்தியானம் மூன்று மணி இருக்கும்.
“ராஜி, ராஜி, வசு எங்கே?” என்றார் சிவராமன்.
“மாடியில் இருக்கிறாள்.”
“வசு, வசு…”
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு வசு, மாடியிலிருந்து கொண்டே, கிராதியைப் பிடித்தவளாய், “என்ன அப்பா, என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“மொதல்லே இங்கே வா! அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லுகிறேன்!” என்றார் சிவராமன்.
வசு அவசரப்படவில்லை. தான் எதற்கும் தயார் என்று சவால் விடுகிறவளைப் போல இறங்கி வந்தாள்.
“வசு, உன்னாலே என் மானமே போகிறது!”
“ஏன், என்ன செய்தாள்?” என்று கேட்டாள் ராஜலட்சுமி.
“நீ ஏம்மா கேட்கறே? எல்லாம் அவரே சொல்லுவார்…உம்! சொல்லுங்க அப்பா”
“நீ வக்கீல் வேதராமன் கிட்டே போயிருக்கே!”
“ஆமாம், போனேன்.”
“எதுக்கு?”
“காரணத்தையும் சொல்லியிருப்பாரே?”
“சொன்னார்.”
“பின்னே எதுக்குக் கேட்கிறீர்கள்?”
வசு பேசிய முறை ராஜலட்சுமிக்குப் பிடிக்கவில்லை.
“வசு, ஏன் அப்பாகிட்டே வாயாடறே? என்ன நடந்தது? ஏன் வக்கீல்கிட்டே போனே?” என்றாள்.
வேதராமனிடம் வசு போன காரியத்தைச் சிவராமன் விளக்கினார். ராஜலட்சுமி வசுவின் பக்கம் திரும்பினாள்.
“ஏண்டி வசு, நீ உன் மனசிலே என்னதான் நினைச்சிட்டிருக்கே? தாலிங்கறது என்ன, திருவிழாக் கடையிலே வாங்கற சாதாரண பம்பர கயிறுன்னு எண்ணமா?”
“ஒருத்தன் கட்டி விட்டான் என்கிறதுக்காக, பம்பரம் மாதிரி ஆட முடியாதுங்கறதுக்காகத்தான் அதைத் தூக்கி எறியப் பார்க்கறேன். அம்மா!”
“வசு, உன் அம்மாவின் கழுத்தைப்’ பார். முப்பது வருஷத்துக்கு முன்னாலே அவ கழுத்திலே நான் தாலியைக் கட்டினேன். மூணே மூக்கால் நாழிகூட அதை அவள் சரடு மாத்தறத்துக்காகக் கழட்டினதில்லை. புதுச் சரடு மாத்தறபோது முதல்லே ஒரு மஞ்சளைக் கட்டி வைச்சுப்பாள்.”
“அப்பா, என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறதோடு உங்கள் பொறுப்பு முடிந்தது. எப்படி வாழணும்னு தீர்மானிக்க வேண்டியவள் இனி நான்தான்.. நான் வக்கீலையும் பார்ப்பேன், அவசியம் நேர்ந்தா, சுப்ரீம் கோர்ட்டையும் பார்ப்பேன்!”
“பார்த்தாயா ராஜி என்ன பேச்சுப் பேசறாள்! நீயாவது அவளுக்கு நல்ல புத்தி சொல்லு.”
“வசு, நமக்காக இல்லேன்னாலும் இந்த ஊர், உலகத்துக்காக நாம் வாழ்ந்துதான் ஆகணும்!”
“என்னாலே வேஷம் போட முடியாதம்மா.”
“வசு, இப்போ என்னையும் உன் அம்மாவையும் பாரு! எல்லாரும் ‘லட்சிய தம்பதி’ன்னு பேசிக்கொள்கிறார்கள், புகழ்கிறார்கள்.”
“ஆமாம்.” ராஜலட்சுமிக்குத் தொண்டை அடைத்தது.
“என் வாழ்க்கை, என் பெர்ஸனல் மேட்டர். அதிலே குறுக்கிட உங்க ரெண்டு பேருக்குமே உரிமை இல்லை!” என்றாள் வசு.
வசு மாடி ஏறிப் போனாள்.
சிவராமன் பெருமூச்செறிந்தார்.
“ராஜி, நீயும் நானும் எப்படி இருக்கிறோம்! இவள் எப்படி இருக்கிறாள், பார்!”
ராஜலட்சுமி மௌனமாக இருந்தாள்.
அன்று மாலை ஆறு மணிக்கு ராஜலட்சுமி போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்தாள். வசு ஐந்து மணிக்கே வெளியே போயாகிவிட்டது. சிவராமனும் வீட்டில் இல்லை.
ஒரு பையன் சைக்கிளில் வந்து இறங்கினான்.
அவனைப் பார்த்ததுமே ராஜலட்சுமிக்குப் புரிந்து விட்டது. ஒரு பிரபல நகைக் கடையில் அவன் வேலை பார்ப்பது அவளுக்குத் தெரியும்.
“வணக்கம் அம்மா,” என்ற அவன், “இதை ஐயா கிட்டே கொடுத்திடுங்க,” என்றான்.
“என்னது?”
“வெளியூர் விலாசத்துக்கு நகையையும் பில்லையும் அனுப்பச் சொல்லியிருந்தார். ஆனா அவர் நகையை மட்டும் எடுத்துட்டுப் போனாரு. பில் தங்கிட்டது.”
ராஜலட்சுமி பில்லைப் பார்த்தாள். அங்கலக்குறிச்சி விலாசம்!
அவன் கிளம்புவதற்குள், “இந்தாப்பா, இதைத் தபால்லேயே அனுப்பிச்சுடு. ஐயா இப்போ இல்லை,” என்றாள்.
அவன் போய் வெகு நேரமாகியும், அமிர்தம்மாவின் நெக்லஸ் ராஜலட்சுமியின் கழுத்தில் பாம்பாகச் சுற்றி நெரித்துக் கொண்டே இருந்தது.
அத்தியாயம்-24
“ஓ தீர்த்தமே, மந்திரம் சொல்லி உன்னைக் கடலுக்கு அனுப்புகிறேன். நீர் இடைவெளி இல்லாமல் சேர்ந்து இருப்பது போல, என் சந்ததி தொடர்ச்சியுடன் இருத்தல் வேண்டும். – கல்யாணத்தின்போது வரன் கூறும் ஒரு மந்திரத்தின் அர்த்தம்.
இந்த நான்கு நாட்களில் மூன்றாம் தடவையாகக் கோபி மேற்கு மாம்பலம் வீட்டுக்குப் போனான். முதல் நாள் வந்திருந்தபோது வீடெல்லாம் ஒரே புழுதியாக. இருந்தது. கீழே குடியிருக்கிறவர் வீட்டிலிருந்து ஒரு துடைப்பத்தை வாங்கிவந்து ஹாலையும் சமையலறையையும் சுத்தம் செய்து இரண்டு மூன்று வாளித் தண்ணீரால் கழுவி விட்டான். இரண்டாம் தடவை வரும்போது கையோடு வேங்கடாசலபதி படத்தை எடுத்து வந்து ஹாலில் மாட்டினான்.
இன்று மூன்றாம் தடவை வரும்போது கையில் ஒரு அகல் விளக்கும் ஒரு சிறு குப்பியில் நல்லெண்ணெயும் ஒரு பொட்டலம் பூவும் இருந்தன.
பஸ்ஸை விட்டு இறங்கும் போது தான் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக ஒரு கணம் பட்டது. வசுவைக் கல்யாணம் செய்துகொண்ட அவன், அவள் இந்த வீட்டினுள் வலது கால் வைத்து, மெல்ல மெல்ல நடந்து புகுந்து சுவாமி படத்தின் முன் அவனுடன் சேர்ந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆசை நிராசையாகப் போனது மட்டுமில்லாமல், இனி என்றென்றும் அந்த ஆசைக்கே இடம் இருக்கக்கூடாது என்ற ரீதியில் வசு நடந்து கொண்டுவிட்டாள். நிலைமை இப்படி மாறிவிட்டபின் அவன் இந்த மாதிரிப் படமும் விளக்கும் பூவுமாய்த் திருவல்லிக்கேணியிலிருந்து மேற்கு மாம்பலம் வரையில் உடலை வருத்தி வருவது பைத்தியக்காரத்தனம்தானே?
அதே மனம் அவனுக்கு ஒரு திருப்தியையும் தந்தது. என்னதான் அவனும் வசுவும் பரஸ்பரம் இப்போது பிரிந்து நின்றாலும், சுமுகமான நிலையில் இருந்த ஒரு சில நாட்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே, திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான். அப்போது வசு அவனுடைய ஏழ்மையையே உயர்வாக மதிப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவளுடைய சிரித்த முகமும் வெடுக் வெடுக்கென்ற பேசும் தன்மையும் அவனை வெகுவாகக் கவர்ந்தன. சிவராமனும் ராஜலட்சுமியும் அவனிடம் ஒரு விசேஷ அன்பையும் அபிமானத்தையும் காட்டினார்கள். முதல் இரவின் ஆரம்பம் எப்படி இருந்த போதிலும், முடிவு இருவருக்குமே ஒரு நிறைவைத் தந்தது. வசு அதன் பின் நாகராஜன் வீட்டில் நடந்து கொண்ட விதம், சீதாவின் கழுத்தில் தன்னுடைய விலை உயர்ந்த நெக்லஸைத் தானே அணிவித்த பெருந்தன்மை, அக்கா குழந்தையை எடுத்து மடிமீது வைத்துக் குலாவிய மனத் தாராளம் எல்லாம் அவன் நினைவுக்கு வந்து அவனைப் புல்லரிக்கச் செய்தன.
இந்த நினைவுகளைத்தான் அவன் என்றென்றும் மனத்தில் விளக்காக ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒளியில்தான் அவன் தன்னுடைய ஆரம்பிக்காத – ஆரம்பமே ஆகாது போலிருக்கும் – தாம்பத்தியத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். கையில் இருக்கும் அகல் விளக்கை அவன் சுவாமி படத்துக்கு முன் வைத்து ஏற்றினால்கூட, அது அவன் மனத்தில் சதா எரிந்து கொண்டிருக்கும் இன்ப நினைவுகள்தான்.
அவன் மாடி ஏறினான். பூட்டைத் திறந்து ஹாலுக்குள் வந்தான். திடீரென, கோலம் போட்டால் என்ன என்று தோன்றியது. அவனுக்குப் புள்ளிக் கோலம் போடத் தெரியும். ஆனால் மாவுக்கு எங்கே போவது? கீழ் வீட்டில் எங்கோ போயிருந்தார்கள்.
கோலமில்லாமலேயே விளக்கேற்றிவிட்டு வேங்கடாசலபதியைப் பார்த்தான். அந்தத் தெய்வத்தின் உருவம் ஒருகணம் மனத்தில் பதிந்தாலும், குமுறிக் கொண்டு வந்த நினைவு அலைகளும் தாபமும் வசுவை அவன் முன் தள்ளின.
“இந்த வீட்டில் நீ அல்லவா வசு விளக்கை ஏற்ற வேண்டும்?” என்று அவனுடைய வாய் அவனையுமறியாமல் முணுமுணுத்தது.
அவன் சமையலறையினுள் எட்டிப் பார்த்தான். அது வெறிச் சோடியது. வசு மட்டும் இருந்தால் இப்போது இந்தச் சமையலறை உயிர்த் துடிப்பில் துள்ளிக் கொண்டிருக்கும்.
ஓர் அரை மணி நேரம் ஹாலினுள்ளேயே வளைய வளைய வந்து விட்டு அவன் புறப்பட நினைத்தான்.
அப்போது திடீரென்று, ‘வதரிங் ஹைட்ஸ்’ என்ற நாவலில் அவன் படித்து ரசித்த காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. காதலில் தோல்வியுற்ற ஒருவன், அவள் இன்னொருவனுடைய மனைவி ஆனபிறகு இறந்து போனதும், அவளைப் பெட்டியில் வைத்துக் கல்லறையில் அடக்கம் செய்கிறான். காதலன் நள்ளிரவில் கல்லறைக்குச் சென்று மண்ணை வெட்டிப் பெட்டியைத் திறந்து காதலியின் உடலைத் தழுவுகிறான்.
இந்தக் காட்சி கோபியினுடைய உள்ளத்தில் அருவருப்பை ஏற்படுத்தலில்லை. மாறாக, ஒரு பிரமிப்புத் தான் காதலனைப் பற்றி எழுந்தது.
இப்போது அவனுக்கும் அந்தக் காதலனுக்கும் என்ன வித்தியாசம்? கோபி மீண்டும் நடந்து பஸ் ஏறித் திருவல்லிக்கேணி சென்றான். வசுவை மேற்கு மாம்பலம் வீட்டில் வைத்துப் பூட்டி வைத்துவிட்டு வந்தாற்போன்ற பிரமை அவனுள் உண்டாயிற்று.
மறுநாள் ஏற்கனவே சொல்லி வைத்துக் கொண்டபடி, கோபி வக்கீல் வேதராமனைச் சந்தித்தான்.
“வசு வந்திருந்தாள்,” என்றார் அவர் சுருக்கமாக.
“அதுதான் சொன்னீர்களே.”
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கோபி?”
“நானாக இந்த விஷயத்தைப்பற்றி நினைக்காதபோது, வசு எடுத்திருக்கும் நடவடிக்கையைப் பற்றி என்ன நினைத்து என்ன புண்ணியம், சார்?”
“ஐ லைக் யூ கோபி. வசு ரொம்ப இம்மெச்யூராப் பேசுகிறாள். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட் டேங்கறா. வீட்டிலே ரொம்பச் செல்லம். கொஞ்சம் கர்வம்கூட ஜாஸ்தி.”
கோபி கோபத்துடன் எழுந்தான். “ஸார், மிஸ்டர் வேதராமன், வசு இன்னும் என் மனைவிதான். அவளைப்பற்றி என்னிடமே நீங்கள் தூஷிக்கிறது விவேகமுமில்லை, பண்புமில்லை.”
வேதராமனுக் மனம் பூரித்தது.
வேதராமனிடமிருந்து புறப்பட்ட கோபி நேரே தன் ஆபீசுக்கு வந்தான். அவனுக்காக நித்யாவின் அண்ணன் முரளி அரைமணி நேரமாகக் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“ரொம்ப ஸாரி… என்ன சாப்பிடறே, காப்பியா டீயா?” என்று கேட்டான் கோபி.
“நான் உன்னை ஒரு முக்கிய விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறேன்.”
“என்ன, சொல்லு.”
“நான் இன்னும் மெட்ராஸ்லே ஒரு மாசம் இருந்தாகணும். தாத்தா கோடம்பாக்கத்திலே கொஞ்சம் நிலம் என் பேருக்குத் தந்திருக்கிறார். அதை விற்று விடலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம ஒரு தடவை பொள்ளாச்சிக்குப் போய் வரணும். டாகுமெண்டுகளை ரிஜிஸ்தர் செய்யணும். அதனாலே…”
“ஒரு மாசம் இருக்கப் போகிறாய். நித்யா வீட்டிலேதானே?”
“அது விஷயமாத்தான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன்.”
“என்ன பிரசினை?”
“நித்யா வீடு என்னமோ பரிசுதான். ஆனா இப்போ அது எனக்கு ஒரு சத்திரமாப் படுகிறது. ஏகப்பட்ட சொந்தக்காரர்கள். நித்யாவின் மாமா தம் குடும்பத்தோடே பம்பாயிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு மூணு பெண், இரண்டு பிள்ளை. அப்புறம் நித்யாவின் அண்ணா, அவன் பொண்டாட்டி குழந்தைகள். அப்புறம் கேட்கவே வேண்டாம். நித்யாவின் அம்மா அப்பா…இதுக்கு நடுவிலே நான்…”
“எனக்குப் புரிகிறது. நன்றாகப் புரிகிறது. அது சத்திரம்தான். நீயும் நித்யாவுமாக ஒரு சில நிமிஷ நேரம்கூடத் தனியா ஹாப்பியா இருக்க முடியலே, இல்லியா!”
“கோபி, சொன்னால் வெட்ககேடு. நான் மாடியிலே அவள் மாமா பக்கத்திலே படுத்துக்கறேன். அவருடைய கடைசிப் பிள்ளை உருண்டு உருண்டு என் படுக்கைக்கு வந்து என் மேலே மோதுகிறான்…”
“நித்யா, மாமிகூடப் படுத்துக்கிறாளாக்கும்? முரளி, உன்னைப் பார்த்து எனக்கு ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது.”
“வெறும் வாய் வார்த்தையோடு உன் பரிதாபத்தைக் காட்டாதே. செய்கையில் காட்டு!”
“என்ன செய்யணும் என்கிறே? உன் நித்யாவின் மாமாவை பாம்பேக்கு விரட்ட ஏதாவது வழி செய்யணுமா?”
“நீ மேற்கு மாம்பலத்திலே ஒரு போர்ஷன் எடுத்து வைச்சிருக்கே இல்லே?”
“ஆமாம், அதுக்கு என்ன?”
“நீயும் வசுவும் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அங்கே குடி போகப் போறதில்லைன்னு நித்யா சொன்னாள்.”
“அது ரொம்பச் சின்ன போர்ஷன்.”
“ஒரு ரூமும் சமையல் அறையும் இருக்கா இல்லியா?”
“அதுக்கு. மேலேயே இருக்கு.”
“அது போதும். இப்போ அதுதான் எனக்கு மயன்கட்டின மண்டபம். ஒரு மாசத்துக்கு அதை எனக்குத் தா. என்ன வாடகை நீ கொடுக்கிறியோ அதை நான் உனக்குத் தந்து விடுகிறேன்.”
“நீ எப்போது அங்கே போலாம்னு இருக்கே?”
“நீ சரி என்று சொன்ன முப்பதாவது நிமிஷத்தில்.”
மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்கு மேற்கு மாம்பலம் வீட்டில் கோபி அவர்களுக்காகக் காத்திருந்தான்.
ஒரு டாக்ஸியில், முரளியும் நித்யாவும் ஓர் ஓரத்தில் ஒண்டி நெருங்கி உட்கார, சாமான்கள் அவர்களைச் சுற்ற அடைத்துக் கிடந்தன. பாத்திரங்கள் பெட்டி, படுக்கை, பக்கெட் என்ற என்னென்னவோ.
மகிழ்ச்சியில் துள்ளி ஓடும் கன்றுக்குட்டியைப் போல, வாய்ச் சிரிப்பு அடங்காமல் நித்யா கீழுக்கும் மாடிக்குமாக ஓடி ஓடி, சாமான்களை யெல்லாம் வைத்தாள். அவளும் முரளியும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மூச்சு வாங்க மாடி ஏறுவதைக் கண்ட கோபி, பெருமூச் செறிந்தான். இப்படிப் பெட்டியை அவனும் வசுவும் தூக்கி கொண்டு செல்லவில்லையே?
ஹாலெல்லாம் சாமான்கள் இறைந்து கிடந்தன.
“மிஸ்டர் கோபி. நீங்க செய்திருக்கிற உதவியை நாங்க என்னென்னிக்கும் மறக்க மாட்டோம்!” என்றாள் நித்யா.
“மறக்காமல் இருக்க என்ன செய்யப் போறோ நித்யா?” என்று கேட்டான் முரளி.
“என்ன செய்யலாம்… என்ன செய்யலாம்?” என்று ஒரு நீண்ட நிமிஷம் தனக்குள்ளேயே யோசனை செய்கிறவளைப்போல பாவனை செய்துவிட்டு “ஆங், நமக்குப் பிறக்கப்போற பிள்ளைக்கு கோபின்னு பெயர் வைத்துவிடுவோம்.” என்றாள்.
முரளி கலகலவெனச் சிரித்துக்கொண்டே, “சரி, பிள்ளை பிறக்காமல் பெண்ணாகப் பிறந்தால்? வசுன்னு பேர் வைப்பியா?” என்றான்.
“நோ… நோ… வசுவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணாகப் பிறந்தால், கோபிகான்னு பேர் வைப்போம். ஓகே?”
“நீ என்ன வேணும்னாலும் பேர் வை. இப்போ சாமான்களை எல்லாம் ஒழுங்கு படுத்தணும்…”
“கோபி, போயிடாதீங்க. இப்ப நான் பாலைக் காய்ச்சப் போறேன். ஸ்டவ், பால், காப்பிப் பொடி எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம்,” என்றாள் நித்யா.
“சொல்லிக்கொண்டே நின்றால் எப்படி? போய் ஆரம்பிக்கிறது.”
“முதல்லே சமையல் அறையிலே கோலம் போடணும், நித்யா. கோபி, மாவு இருக்கா?”
“ஐயய்யோ மறந்துவிட்டேனே!”
“கீழ் வீட்டிலே இருக்கும். கொஞ்சம் வாங்கிக் கொண்டு வருகிறேன்.”
கோபி அவசர அவசரமாக வெளியேறினான்.
அவன் திரும்பி வந்து ஒரு டப்பாவை அவளிடம் கொடுத்தபோது நித்யா சொன்னாள்: “கோபி, உங்களை மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் செய்து கொள்ள வசு ரொம்பக் கொடுத்து வைத்திருக்கிறாள். உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது!”
“இதை ஏன் இவன்கிட்டே சொல்றே? உன் ஃபிரண்ட் வசுகிட்டே சொல்லு.”
“சொன்னேன், சொல்லாமலா இருப்பேன்? ஆனா இப்போ நான் பார்க்கிற வசு என் ஃபிரண்ட் வசுவா இல்லியே.”
“சரி, சரி. புலம்பாதே.”
பேச்சின் திசையை மாற்ற நினைத்த கோபி, “ஹால்னு பேர்தான். ரொம்பச் சின்னது,” என்றான்.
“இதிலே அசுவமேத யாகம் பண்ணலாம்,” என்றாள் நித்யா.
“நீயும் நானும் இதிலே யாகமா செய்யப் போறோம்? போ. மொதல்லே காப்பி கொண்டு வா. கோபிக்கு வேண்டுமோ வேண்டாமோ. இப்ப எனக்கு வேணும்!”
“என்னைத் துரத்தறதிலே என்ன வேகம்!”
நித்யா கோலமாவை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.
கோபி தன் மனத்தின் தாபத்தை அடக்கி மறக்க முரளியுடன் சேர்ந்து சாமான்களை ஒழுங்காக வைப்பதில் ஈடுபட்டான்.
– தொடரும்…
– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.
– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.