கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 5,609 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

“அக்னி தேவனே, நான் மணந்து கொண்ட இப்பெண்ணிடம் நானறியாமல் சில தோஷங்கள் இருக்கலாம். அவை எனக்கும் என் சந்ததிக்கும் செல்வத்துக்கும் நாசத்தைத் தரலாம். அத்தோஷங்கள் இவளை விட்டு அகலட்டும்.” – மாப்பிள்ளை சொல்லுகிற ஒரு மந்திரத்தின் அர்த்தம்.


“வசு, என்றாள் ராஜலட்சுமி.

“ஏன் அம்மா?” என்றாள் அவள், உள்ளே தங்கள் கம்பெனி கார் நிற்கிறதையோ, சிவராமன் அதில் உட்கார்த்திருப்பதையோ அவள் கவனிக்கவில்லை.

“திடீரென்று தலையை வலிக்கிறது. பொள்ளாச்சிக்குத் திருப்பு.”

“உடம்பு சரியில்லை யா அம்மா? அமிர்தம்மா வீட்டில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள். அவசியம் நேர்ந்தால் அந்தம்மாவே டாக்டருக்குச் சொல்லி அனுப்புவாள்.”

“வசு, இப்போ நீ பொள்ளாச்சிக்குப் போகப் போறியா, இல்லியா?”

ராஜலட்சுமி அப்படிச் சீறுவாள் என்று வசு எதிர்பார்க்கவில்லை.

“சரிம்மா, கத்தாதே,” என்றவள், மௌனமாக வண்டியைத் திருப்பினாள். உடம்புக்கு வந்தாலே கோபமும் கூட வரும் போலிருக்கிறது என்று நினைத்தாள் அவள்.

அன்று மாலை அவர்கள் சென்னை திரும்ப வேண்டியவர்கள். ஆனால் ராஜலட்சுமிக்கு மனம் குழம்பிப் போயிருந்தது. ரயில் பிரயாணம் செய்யும் நிலையில் உடம்பு இல்லை என்று சொல்லி ஒத்திப் போட்டுவிட்டாள். அமிர்தம்மாவின் வீட்டில் அவளுடைய கணவருக்கு என்ன வேலை? கோயமுத்தூருக்குப் போவதாகச் சொல்லிச் சென்றவர் அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்? அமிர்தம்மாவின் முகம் அவள் கண் முன் வந்து நின்றது. கல்யாண வீட்டில் அவளைப் பார்த்தபோது இனம் தெரியாத ஒருவித வெறுப்பு மனத்துள் எழுந்தது ஞாபகம் வந்தது. ஏன்?… ஏன்?…என்னென்னவோ ஊகங்கள்… சந்தேகங்கள்… வேதனைகள்…

“ஏம்மா, இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என்றாள் வசு.

“பரவாயில்லை.”

“நானும் பார்க்கிறேன். வந்ததிலிருந்து நீ சரியாகவே பேசறதில்லை. காப்பி டிபன்கூட வேண்டாம்னு சொல்லிட்டே.”

“வேண்டியிருக்கவில்லை.”

“டாக்டரைக் கூப்பிடுவோமா?”

“அதெல்லாம் வேண்டாம்.”

நித்யாவுக்கு, வசு மேலும் ஒருநாள் தங்கப் போகிறாள் என்பதில் மகிழ்ச்சி.

“வசு, நாளைக்குக் காலையிலே சரியா ஆறரை மணிக்கு ரெடியா இரு. எங்களுடன் திருமூர்த்தி மலைக்கு வரப் போகிறாய்!” என்றாள்.

மறுநாள் காலை ஆறரை மணி. ராஜலட்சுமிக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தது. நித்யாவுடன் வசு உல்லாசப் பயணம் கிளம்பினாள். காரின் முன் பக்கத்தில் முரளிக்கு அருகே நித்யா உட்கார்ந்திருப்பதைப் பார்த்த வசு, “குட் மார்னிங், போத் அஃப் யூ” என்று சொல்லிக் கொண்டே, பின் கதவைத் திறந்தாள்.

அடுத்த கணம் திடுக்கிட்டாள். கோபியும் உள்ளே உட்கார்ந்திருந்தான்.

“நித்யா ரொம்ப போர் அடிக்கிறாள். ஒரு ரிலீஃபுக்கு என் பிரண்ட் இருக்கட்டும்னு நினைச்சேன்,” என்றான் முரளி.

“நம்ம ரெண்டு பேருக்கும் வேறு என்ன பொருத்தம் இருக்கோ இல்லியோ, மனப் பொருத்தம் கண்டிப்பா இருக்கு…இதே எண்ணத்திலே தான் நான் என் பிரண்ட் வசுவை இன்வைட் பண்ணினேன்…” என்றாள் நித்யா.

வசு உட்கார்ந்தாள். முரளி வண்டியை ஓட்ட நித்யா வாய் வலிக்காமல் பேசிக்கொண்டே வந்தாள்.

வசு கோபி பக்கம் ஒரே ஒரு தடவை திரும்பினான். கோபி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தான். அதன் பின் அவன் பார்வையைக் கவர அவள் முயலவில்லை.

திருமூர்த்திமலையை அடைந்த போது மணி எட்டரை. அமணலிங்கர் ஆலயத்தை அணைத்துக்கொண்டு நதி ஓடியது.

அர்ச்சனையும், தரிசனமும் முடிந்தபின், ஒரு தேங்காய் மூடியைப் பாறைமேல் போட்டு உடைத்த நித்யா தேங்காய்ச் சிதரை வசுவிடம் நீட்டினாள். முரளியும் கோபியும் சற்றுத் தூரத்தே நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“வசு, சரியா பத்தரை மணிக்குப் புறப்படலாம். இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு. அது வரையில் கோபியுடன் மெட்ராஸில் என்னென்ன முடியலையோ அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்… நானும் அவரும் அக்கரைக்குப் போகிறோம்.”

“நானும் வர்றேனே?”

“உளறாதே… ஒரு ஒண்ணரை மணி நேரம் நாங்க சந்தோஷமா இருக்கப்படாதா?”

வசு சிரித்து வைத்தாள். அதற்குள் முரளியும் நித்யாவும் சிதறிக் கிடக்கும் பாறைகளைத் தாண்டித் தாண்டி அக்கரையை அடைந்தார்கள். அடைந்தவர்கள் மரங்களுக்குப் பின்னால் மறைந்தார்கள்.

“வசு!” என்ற குரல் கேட்டது.

பார்த்தாள்.

கோபி.

“ஏன் அங்கே தனியே நிற்கிறாய்? இங்கே வா,” என்றான் அவன். ஒரு பாறைமேல் உட்கார்த்து, காலால் ஓடும் தண்ணீரை அளைந்து கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம், ‘இவர் என்ன கூப்பிடுவது, நாம் என்ன போவது,’ என்று நினைத்தாள். பிறகு, தயங்கித் தயங்கி நடந்தாள். அவன் அருகே வந்ததும், “உட்கார் வசு,” என்றான் அவன்.

உட்கார்ந்தாள்,

“உன் அப்பாவை நான் சாப்பாட்டுக்கு அப்புறம் பார்க்கவே யில்லையே?”

“கோயமுத்தூருக்குப் போய் விட்டார்.”

சிறிது நேர மௌனம்.

“அம்மா அப்பாவுக்கு ஒரே வருத்தம்,” என்றாள் வசு.

“ஏன்?”

“ஊட்டியிலிருந்து வந்த பிறகு நீங்கள் ஒரு தடவை கூட வீட்டுக்கு வரவில்லை.”

“ஏன்னு சொல்றதுதானே?”

“சொன்னேன்.”

“அப்போ வருத்தப்பட்டிருக்க முடியாதே?”

“பின்னே?” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“உன்மேலே கோபம்தான் ஏற்பட்டிருக்கும்.”

“தப்பு என் மீதா?”

“நானும் தப்பு செய்திருக்கலாம்தான். ஆனா என்னாலே அனுசரித்துக் கொண்டு போக முடியும்.”

“என்னாலே முடியாது என்கிறீர்களா?”

“அது உனக்கே தெரியும். நீ கோபுரத்தின் உச்சியிலே நிக்கறே! இறங்கி வந்தால் எல்லாம் தெளிவாகிவிடும்.”

அவள் பொருமினாள். “நீங்கதான் ஒரு கோபுரத்தின் உச்சியிலே நிற்கறதாகப் படுகிறது எனக்கு.”

“அப்போ உனக்குப் பார்வை சரியில்லை, வசு.”

“ஏன் என்மேலேயே குற்றத்தைச் சுமத்துகிறீர்கள்?”

“என் மேலே குற்றம் இருந்தால் எடுத்துக் காட்டு. நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.”

“உங்களுக்கு ரொம்பப் பிடிவாதம். நான் எதைச் செய்தாலும் சொன்னாலும், அது உங்க தன்மதிப்பையும் சுய கௌரவத்தையும் குத்தறதாக நினைக்கிறீர்கள்.”

“என்னைப் போன்ற ஏழைகளுக்கு இருக்கிற சொத்தே தன்மதிப்பும், சுய கௌரவமும்தான். அதுகூட இருக்கக்கூடாது என்கிறாயா?”

அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“நீங்களா ஏழை! ஒரு காலத்திலே நீங்க ஏழையா இருந்திருக்கலாம். அப்படிப் பார்த்தா எல்லாருமே ஒரு காலத்தில் ஏழைகள்தான்… இப்ப நீங்க ஏழையா? ஒரு பெரிய கம்பெனியிலே ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிற உதவி மானேஜர்!”

“இருக்கலாம்… ஆனாலும் உலகம் உன்னைப் பணக்காரியா ஏத்துக்கற மாதிரி என்னை எத்துக்கொள்ள வில்லையே.”

“சரி. ஆல்ரைட்… நாம் ரெண்டு பேரும் இப்படி எதிர் எதிர் துருவங்களிலே ஒருவருக்கொருவர் ஒளியாயும் இல்லாமல், நிழலாகவும் இல்லாமல் எத்தனை நாள் நிற்பது?”

“இதே கேள்வியை நானும் உன்னிடம் கேட்க வேண்டும் என்று தான் இருந்தேன் வசு! புருஷன் மனைவி என்றால், நாரிலே தொடுக்கும் பூன்னு நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒண்ணோடு ஒண்ணு இழைஞ்சு ஓடற நூல் போல இருக்கணும்னு எதிர் பார்க்கிறவன் நான். ஆனா இப்போ நீ ஒரு தண்டவாளம். நான் ஒரு தண்டவாளம். என்னிக்குமே அது ஒண்ணு சேராதுன்னு தோணும்படியா இருக்கு.”

“தண்டவாளம்னு நினைச்சா அப்படித்தான் தோணும்.”

“பின் எப்படி நினைக்கறதுன்னு நீயே சொல்லு.”

வசு யோசித்தாள். என்ன உதாரணம் சொல்லுவது? சற்று நேரத்துக்குப் பிறகு, “நீங்க சொன்ன உதாரணமே நன்றாயிருக்கு. பூவும் நாரும்.”

“நீ பூ, வசு. நான் நார். நான் என்னிக்குமே தயாராக இருக்கிறேன். நீதான் பூக்கூடையிலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறாய்.”

“இப்போது நான் தயார்னு சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்றாள் அவள், பெருந்தன்மையோடு.

“என்னிடம் உன்னைத் தொடுக்க ஆரம்பிப்பேன். பூ நாரோடு இணைந்து ஒரு பெரிய மாலையாகி விடும்.”

“மாலையை எங்கே வைப்பது, எப்படி வைப்பது என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.”

“அதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்.”

“மேற்கு மாம்பலமா?”

“ஆமாம்.”

“அந்த முடிவை மாற்ற மாட்டீர்களா?”

“உனக்கு அந்த இடம் பிடிக்கலன்னா, உனக்குப் பிடித்த இடத்துக்குப் போவோம்.”

“அப்புறம்…இன்னும் ஒன்று,.”

“என்ன?”

“என் அப்பா உங்களுக்குப் பெரிய பதவி தர என்றைக்கும் ரெடி…”

“அதைப்பற்றி இப்ப என்ன வசு? இப்பத்தான் எனக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அடுத்த உயர்வுக்கு எத்தனை வருஷமாகுமோ…. கண்டிப்பாக ஒரு நாள் எனக்கு இந்த வேலையும் அலுத்துப் போகலாம். அப்போ உன் அப்பா தர்ற வேலையைப் பத்தி யோசிப்போமே!”

“ஓ.கே.”

“இன்னும் ஒரே ஒரு சின்னப் பிரசினை பாக்கி இருக்கு வசு… எப்போ பெரிசெல்லாம் தீர்ந்ததோ, நான் சொல்லப் போறது பிரசினை யாகக்கூடத் தோணாது.”

“என்ன?” அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“நாகராஜனுடைய மனைவி சீதா…”

“சீதாவை இப்போ எதுக்கு இழுக்கிறீர்கள்?” முதன் முதலாக வசுவின் குரலில் உஷ்ணம் பிறந்தது.

“அவள் உன்னை மதிச்சு, உன்னைப் பார்க்க உன் வீட்டுக்குப் படியேறி வந்தாள்.”

“அதற்கும் நம்ம பிரசினைக்கும் என்ன சம்பந்தம்?”

“அவளுடைய கூடப் பிறவாத அண்ணனாக நான் இருக்கிறேன். என் தங்கை உன்னைப் பார்க்க வந்த போது…”

“அதைப்பத்தித்தான் நாம் பீச்சிலே பேசித் தீர்த்தாச்சே!”

“பேசினோம். தீர்க்கவில்லை. நீ அவளிடம் இன்னும் மன்னிப்புக் கேட்கவில்லை.”

வசுவுக்கு முகம் தக்காளிப் பழம்போல் சிவந்துவிட்டது.

“ஸில்லி! ஸ்டுபிட் ஐடியா.. செய்தது குற்றமானால் நீங்க சொல்றதுக்கு முன்னாலேயே நான் மன்னிப்பு கேட்டிருப்பேன்… அவள்கிட்டே மன்னிப்புக் கேட்கற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.”

“நீ புத்திசாலின்னு நினைச்சேன், வசு.”

“நான் அவளிடம் மன்னிப்பே கேட்காமல் போனால்…”

“நம்ம பிரசினை முழுதும் தீரவில்லைன்னு அர்த்தம்.”

“அப்போ?”

“பிரசினையைத் தீர்க்கறதும் தீர்க்காததும் இப்போ உன் கையிலே இருக்கு.”

“நான் அவள் காலடியிலே விழுந்து மன்னிப்பு கேட்பதென்றால்… நோ… நெவர்!”

அவன் குரலில் ஓர் இறுக்கம் புகுந்தது. “அப்படி என்றால் நீயும் நானும் என்றைக்குமே பெயரளவில் தான் தம்பதியாக இருந்து தாம்பத்தியம் நடத்த வேண்டியிருக்கும்.”

“அப்படிப் பெயரளவில், இல்லாததை இருக்கிறதாகப் பிறர் நினைக்கும்படியாக எதற்கு வாழ வேண்டும்?”

“என்ன சொல்லுகிறாய்?”

“ஊருக்கும் உலகத்துக்கும் நீங்களும் நானும் புருஷன், மனைவி என்று ஊரையும் உலகையும் இனி மேலும் ஏமாற்றுவானேன்!”

“அப்போ? நீ எதைச் சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது.”

அவள் ஒன்றுமே பேசவில்லை. அந்த மௌனம் அவன் சொன்னதை ஆமோதிப்பது போலிருந்தது.

இருவரும் அசையாமல் அப்படியே பாறைமேல் பாறையாக உட்கார்ந்திருந்தார்கள்.

கோபத்தில் வசுவின் கண்கள் கனத்தன. அவள் ஓடும் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கோபி தூரத்தே தெரிந்த அமணலிங்கர் ஆலயத்தைப் பார்த்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

திடீரென்று, துள்ளிக் குதித்து வந்த நித்யா, “வசு!” என்று கத்தினாள்.

வசு திரும்பிப் பார்க்கவில்லை.

“என்னடி, இத்தனை நேரம் நீங்க ஜாலியாப் பேசினதையெல்லாம் நினைச்சுப் பார்த்து மெய் மறந்து போயிட்டியாடி!” என்றாள் அவள்.

அத்தியாயம்-20

நெல், உளுந்து, எள், பச்சைப் பயறு, கடுகு ஆகியவை பாலிகைக்கு உள்ள தானியங்கள். இவற்றைச் சிறிது ஊற வைத்துப் பின்னர் பாலிகையில் போட்டு. கல்யாணம் நடக்கும் நான்கு நாட்களும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் விட்டு வைக்க வேண்டும். நான்கு நாட்களில் முளை கிளம்பி ஓங்கி வளரும்.

இந்த வளர்ச்சி, தம்பதியின் வளர்ச்சிக்கும் சந்ததியின் வளர்ச்சிக்கும் அறிகுறியாகும்.

-பாலிகையின் விளக்கம்


வசு நித்யாவுடன் திருமூர்த்தி மலைக்குப் போயிருந்தாள். ராஜலட்சுமி தனியே இருந்தாள். தனிமை அவளுக்கு இப்போது மிகவும் தேவையாக இருந்தது.

தன் கணவர் சிவராமனை அமிர்தம்மா வீட்டில் பார்த்ததிலிருந்து அவள் மனம் குழம்பிப் போய்த் தவித்தாள், அமிர்தம்மாவின் வீட்டில் சிவராமனுக்கு என்ன வேலை இருக்க முடியும் என்ற கேள்வியில் ஆரம்பித்த சிந்தனை, அவருக்கும் அவளுக்கும் ரகசியத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் முடிந்தது.

ஆனால் அவரிடம் அவள் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை – அவரிடத்தில் அவள் காட்டி வந்த பக்தியின் அஸ்திவாரம் – பலமாக இருந்தது. அது இலேசில் அசைந்து கொடுக்கவில்லை.

சிவராமனிடம் எத்தனையோ குறைகள் இருக்கலாம். எடுத்துச் சொன்னாலும் திருத்திக் கொள்ள முடியாத பழக்கங்கள் இருக்கலாம். ஆனால் இது நாள்வரை அவர் அவளைத் தவிர வேறு எந்தப் பெண் மீதும் அகக் கண்ணின் இமைகளைக் கூடச் செலுத்தியதில்லை என்று ராஜலட்சுமி பூரணமாக நம்பியிருந்தாள். இப்போது.. அமிர்தம்மாவின் தோற்றம் அவள் கண் முன்னால் வந்து நின்றது. அமிர்தம்மா வயதுக்குச் சம்பந்தமில்லாத யெளவனத்துடனும் சோபையுடனும் இருக்கிறாள். அவளுடைய அழகு பார்ப்பவரை – குறிப்பாக வயதானவர்களை – கவ்விப் பிடிக்கும் அழகு. அவளுடைய பார்வை மற்றவர்களை இழுக்கக்கூடிய வசியப் பார்வை. என்னதான் சிவராமனுடைய கண் இமைகள் மூடிக்கொண்டாலும், அமிர்தம்மா அவற்றைத் திறந்து, அவரை வசீகரித்துத் தன்பால் இழுத்துக் கொண்டிருக்கலாமே!

ராஜலட்சுமி தவித்தாள். கிட்டு மாமா வீட்டு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து நடந்து அவளுக்குக் கால்கள் வலித்தன. அதிகாலையிலேயே திருமூர்த்தி மலைக்குச் சென்ற வசு இன்னும் திரும்பவில்லை. வயிறு பசியால் இரைந்தாலும் வாய்க்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. அவன் என்னதான் எல்லா சுவாமி படங்களிலும் ராமன் ஒருவரையே பார்த்தாலும், ராமருடைய உருவம் கிருஷ்ணனாகவும் முருகனாகவும் மாறிக்கொண்டே வந்தது.

திடீரென்று சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ராஜலட்சுமிக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும். அப்பா அவளையும் அண்ணன் ராஜாமணியையும் அழைத்துக் கொண்டு சேலத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு கல்யாணம்.

எல்லோரும் ஜானவாசத்துக்குப் போயாகி விட்டது. மணமகளுக்கு உறவுகாரப் பெண் – அவள் பெயர் சாரதா – ராஜலட்சுமியுடன் அன்னியோன்னியமாகப் பழகினாள்.

ராஜலட்சுமி, அருகே இருந்த மேஜை மேல் கைக் கடியாரத்தை வைத்து விட்டு, முகம் கழுவக் குளியலறைக்குச் சென்றாள். முகத்தைக் கழுவிவிட்டுத் திரும்பியவள், தலையை வாரி, புதுப் புடவையையும் கட்டிக் கொண்ட பின், மேஜை மேல் வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுக்கப் போனாள். அப்போதுதான், மேஜை வெறிச்சோடுவதாகப் பட்டது அவளுக்கு. அங்கே வைத்திருந்த கைக்கடியாரத்தைக் காண்வில்லை! சாரதாவையும் காணவில்லை.

சாரதாவிடம் போய், “என் ரிஸ்ட் வாட்ச்சைக் காணவில்லை,” என்றாள்.

“பாத்ரூம் போறதுக்கு முன்னாடி மேஜை மேலே வைத்தாயே!” என்றாள் சாரதா.

“திரும்பி வரும்போது அதையும் காணோம். உன்னையும் காணோம்!”

சாரதா உடனேயே அழ ஆரம்பித்தாள். “நீ அந்தப் பக்கம் போனதும் கல்யாணப் பெண்ணோடு அப்பா வந்து, தட்டு நிறையப் பாக்கு வெற்றிலை எல்லாம் கொடுத்து, பிள்ளை வீட்டார் இறங்கியிருக்கிற வீட்டிலே வச்சுட்டு வரச் சொன்னார். நான் திரும்பி வர்றதுக்குள் நீ கிளம்பிப் போயிட்டே.”

“உனக்கு வேணும்னு கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேன்.”

கேவலுக்கிடையே, “சத்தியமா எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் உன் வாட்ச்சை எடுக்கவில்லை. நான் ஏழைதான். ஆனா திருடற குணம் இல்லை,” என்றாள் சாரதா.

சொன்னவள் அழுது கொண்டே போனாள்.

அவள் போன சில நிமிடம் களுக்கெல்லாம் ராஜாமணி வந்தான். வந்தவன், “ராஜி, வர வர உனக்குக் கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாமல் போய்விட்டது,” என்றான்.

ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த ராஜலட்சுமி, “என்ன அண்ணா?” என்றாள்.

“ஜானவாசத்துக்கு நீ புறப்பட்டாச்சான்னா பார்க்க வந்தேன். வீட்டிலே யாரும் இல்லை, நீ போயாச்சுன்னு நினைத்துத் திரும்பினேன். அப்போ இது கண்ணிலே பட்டது. உன் அவசரத்திலே இதை மேஜை மேலே தூக்கி எறிஞ்சுட்டுப் போயிருக்கே!”

ராஜாமணி, பாக்கெட்டிலிருந்து கடியாரத்தை எடுத்துக் கொடுத்தான்.

ராஜலட்சுமி இடிந்து போய் விட்டாள். வீண் சந்தேகம் அவளை எப்படி ஆட்டிப் படைத்து ஒரு ராட்சசி ஆக்கிவிட்டது. சாரதாவைத் தேடிப் பிடித்து மன்னிப்புக் கேட்பது என்று சங்கற்பம் செய்து கொண்டாள். ஆனால் அப்புறம் சாரதா அவள் கண்ணில் படவே இல்லை.

அந்தச் சம்பவம் இப்போது ராஜலட்சுமியின் நினைவுக்கு வந்தது.

அமிர்தம்மா வீட்டில் பார்த்தது சிவராமன்தானா? வேறு யாராகவேனும் இருக்கக் கூடாதா? அப்படியே சிவராமனாக இருந்தாலும் ஏதேனும் பிஸினஸ் விஷயமாக அமிர்தம்மாளைச் சந்திக்கப் போயிருக்கலாம்.

திடீர் என்று ஒரு யோசனை தோன்றியது அவள் மனத்தில். ஏன் அமிர்தம்மாவின் வீட்டுக்கே செல்லக் கூடாது? அவளைத்தான் வசு ஏற்கெனவே அறிமுகம் செய்திருக்கிறாளே. இப்போது சிநேகிதி என்ற முறையில் போய்ப் பார்த்துவிட்டுத் தன் சந்தேகத்துக்கு ஒரு தீர்வு காணலாமே?

சிவராமன் அடிக்கடி கூறும் அறிவுரை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. இரவில், ஏதாவது சத்தம் கேட்டாலோ, நிழல் ஆடினாலோ, பயத்துடனும் சந்தேகத்துடனும் படுக்கையிலேயே கிடக்காமல் விளக்கைப் போட்டுப் பார்த்து விட வேண்டும் என்பார். அவருடைய அறிவுரையை இப்போது அவர் மீதே பிரயோகப்படுத்த நேர்ந்திருக்கிறது.

விளக்கைப் போட்டு ராஜலட்சுமி பார்க்கப் போகிறாள்.


அமிர்தம்மா காலையிலிருந்தே, தான் கற்ற வித்தைகளை யெல்லாம் செய்து பார்த்து விட்டாள். சிவராமனுடைய தலைவலி குறையவில்லை. நெற்றியின் இரு பக்கங்களிலும் வலிக்கிறது என்று சிவராமன் மாத்திரைகளைச் சாப்பிட்டார். நீலகிரித் தைலம் தடவிக் கொண்டார். பயன் இல்லை. பன்னிரண்டு மணிக்கு வேண்டா வெறுப்பாக ஏதோ சாப்பிட்டார்.

“நீங்கள் இங்கே வந்து இருப்பது இது இரண்டு நாளோ மூணு நாளோ. அப்பத்தானா, உங்களுக்கு இந்தத் தலைவலியும் உடம்பு வலியும் வரணும்?” என்றாள் அமிர்தம்மா.

அவளுடைய குரலில் தாபம் புரையோடியது.

“உன் கை பட்டே குணமாக வில்லையே, அமிர்தம்,” என்று சிரித்தார் சிவராமன்.

“மெட்ராஸுக்குப் போனதும் முதல்லே. உங்க கண்ணை டெஸ்ட் பண்ணிக்கணும். கடைசியா எப்போ கண்ணாடியை மாத்தினீங்க?”

“நாலு வருஷம் ஆச்சு.”

“அதுதான். அதுவேதான். இவ்வளவு வயசாகிறது, மூணு வருஷத்துக்கு ஒரு தடவை டெஸ்ட் பண்ணி, கண்ணாடியை மாத்திக்கணும்னு தெரியலையே, உங்களுக்கு!”

“ஏது நேரம் அமிர்தம்?”

“சரி, அடுத்த மாசம் இங்கே வரவேண்டாம். கண்ணை டெஸ்ட் பண்ணிக்குங்க..”

“நீ தியாகம் செய்யலாம். ஆனா என்னாலே வராம இருக்க முடியாது. மாசத்திலே நான் ரெண்டு மூணு நாள்தான் வாழறேன். அந்த வாழ்க்கையையும் குலைக்கப் பார்க்காதே.”

“நேத்து வசு உங்க ராஜலட்சுமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.”

“தெரியும்.”

“அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னு தோன்றிற்று. சரியாய்ப் பேசவில்லை.”

“ராஜிக்கு உன்னைப் பிடித்தால் என்ன, பிடிக்கலைன்னா என்ன?”

“மனசுக்குள்ளேயே சிரிச்சுக்கிட்டேன்.. எதை நினைச்சுத் தெரியுமா?”

“சொல்லேன்.'”

“சொன்னா நீங்க பயந்து போயிடுவீங்க.”

“சும்மா சொல்லு. நீ இருக்கறப்போ எனக்கு என்ன பயம்?”

“நீங்களும் நானும் இங்கே இப்படி இருக்கிறோம்னு உங்க பெண்டாட்டிக்குத் தெரிஞ்சா, அவள் என்ன செய்வான்னு நினைச்சுப் பார்த்தேன்.”

“என்ன செய்வான் என்று நினைக்கிறாய்?”

“நீங்கள் என்ன நினைக்கறீங்க? ஓன்னு அலறி அழுவாளா?”

“மாட்டாள். அவள் என்னைத் தெய்வமா வழிபடுகிறவள். தெய்வம் தப்பு செய்யாது என்று நம்புகிறவள். நான் செய்கிறது எதுவும் அவளுடைய நன்மைக்காக என்று நினைக்கிறவள்.”

“நீங்களும் நானும் இப்படி இருக்கிறது கூட அவளுடைய நன்மைக்காகவா?” சொல்லிவிட்டு அமிர்தம் கலகலவென்று சிரித்தாள்.

“நீ இப்படிச் சிரிக்காதே. என் தலைவலி போயிடும்போல இருக்கு. தலை வலி போயிட்டா, நீ என் நெத்தியை வருடமாட்டே!”

“வயசு இவ்வளவு ஆகியும் இந்த நப்பாசை போகலையே?”

“உனக்கு எப்படி உன் வயசு ஏறஏற இளமையும் அதிகமாகிறது?”

“இப்பக் கொஞ்சம் தூங்குங்கள்.”

“ஓடிகொலோனைத் தடவி விடு. ஜன்னல் கதவை யெல்லாம் சாத்து.”

“அப்புறம் இதே கட்டிலில் பக்கத்தில் உட்கார்ந்து காலையும் பிடிக்கணும். அவ்வளவுதானே?”

“அவ்வளவுதான்.” அமிர்தம் ஓடிகொலோனை எடுக்க எழுந்தாள்.


ராஜலட்சுமி அமிர்தம்மாவின் வீட்டுக்குள் பிரவேசித்தபோது சரியாக மணி இரண்டு, அங்கலக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து வெய்யிலில் நடந்து வந்ததில் உடம்பெல்லாம் வியர்வை கொட்டியது. முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே ஹாலினுள் காலை வைத்தாள்.

வீட்டில் ஆள் அரவமே இல்லை.

திறந்து கிடக்கும் வீட்டில் யாராவது இருந்துதான் ஆகவேண்டும் என்று நினைத்த அவள் இடது புறமாக இருக்கும் அறைக்குள் எட்டிப் பார்த் தாள், ஒரு வீணை மட்டுமே அந்த அறையில் இருந்தது.

வலது புறத்தில் இருக்கும் அறையிலிருந்து மின்சார விசிறி ஓடும் ஒலி கேட்டது. மெதுவாக நடந்தாள்.

கதவு முழுதும் சாத்தாமல் ஒருகணித்திருந்தது.

வெளியே நின்றபடியே பார்த்தாள்.

பெரிய இரட்டைக் கட்டிலில், கண்ணை மூடிக் கொண்டு சிவராமன் படுத்திருந்தார். கையில் ஒரு பாட்டிலுடன் வந்த அமிர்தம்மா, கட்டிலின் மேல் உட்கார்ந்தாள்.

உடனேயே அந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று ம பதறினாலும் ராஜலட்சுமி நிதானமாக நின்று கவனித்தாள். அமிர்தம்மா அவள் வெளியே நின்று கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை என்ற தைரியம் வேறு அசையாமல் நிற்கச் செய்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அமிர்தம்மாளின் விரல்கள், சிவராமனுடைய நெற்றியில் ஓடின. பிறகு பாட்டிலை மூடி பக்கத்திலே வைத்துவிட்டு மீண்டும் அவர் நெற்றியை வருட ஆரம்பித்தாள்.

அவளுடைய, விரல்கள் நெற்றியை விட்டு, சிவராமனுடைய கன்னத்துக்கு இறங்கியபோது, ராஜலட்சுமி மெதுவாகத் திரும்பி நகர்ந்து வெளியேறினாள்.

பாதையில், வெய்யிலில் மீண்டும் நடந்தபோது, தெருவெல்லாம் ஒரே கண்ணுடிச் சிதறல்களாகக் காட்சி அளித்தது.

இவ்வளவு உடைந்த கண்ணாடிச் சிதர்கள் எங்கிருந்து வந்தன என்று ராஜலட்சுமி யாரிடமும் கேட்கவில்லை.

எல்லாம் அவள் தினம் தினம் பார்க்கும் ராமர் படத்தின் கண்ணாடித் துண்டுகள் என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்?

அத்தியாயம்-21

மரத்தாலாகிய இந்த ஓடம் எங்களுக்கு ஆபத்து இல்லாமல் அக்கரையில் கொண்டு போய்ச் சேர்க்கட்டும்.

பெண்ணே, என்னுடன் வரும் நீ நீண்ட ஆயுளும் கீர்த்தியும் உள்ளவளாக வேண்டும்.

-கல்யாணமான பிறகு பெண்ணே அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குச் செல்லும் கணவன் நதியைக் கடக்க ஓடத்தில் ஏறும்போது சொல்லும் மந்திரத்தின் அர்த்தம்.


நேரம் செல்லச் செல்ல, கன்னத்தின்வலி குறையக் குறைய, வசுவின் உள்ளத்து வலி ஏறிக் கொண்டே போயிற்று. ரயிலில் அம்மாவுடன் சென்னை திரும்பும்போதும், சென்னையில் வீட்டுக்கு வந்த பிறகும் அவள் யாரிடமும் அந்தச் சம்பவத்தை வெளியிடவில்லை. அவளையும் அறியாமல் பல தடவைகள் அவளுடைய கைவிரல்கள் கன்னத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டன.

கோபியை இது நாள் வரையில் அவள் ஒரு முரடனாகவோ, நாகரிகமும் பண்பும் இல்லாத அரக்கனாகவோ நினைத்துப் பார்த்ததில்லை. தன் மனைவியைக் கைநீட்டி அடிக்கும் அளவுக்குத் தரம் குறைந்தவனா அவன்! நினைத்துப் பார்க்கையில் உள்ளம் கேவி அழுதது. அதே சமயத்தில் அவள் இதுவரை உணர்ந்தறியாத வெறுப்பும் உண்டாகியது. வெறும் வார்த்தைகளால் அவளை வெல்ல முடியாத அவன், அவளுடைய வாயை அடக்கப் பலாத்காரத்தைப் பிரயோகித்து விட்டான்.

திடீரென்று இன்னொரு எண்ணமும் பிறந்து கோபத்தை மேலும் வளர்த்தியது. திருமூர்த்தி நதிப்படுகையிலேயே, இருவரும் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தாள். அதைக் கோபியும் ஆமோதித்திருந்தான். அக்கணமே, இருவரும் பரஸ்பரம் வேற்று மனிதர்களாக ஆகிவிட்டார்கள். அதன் பின் அவளிடம் அனாவசியமாகப் பேச்சுக் கொடுக்கவும், உரிமை கொண்டாடவும் கோபிக்கு எந்தவித பாத்தியதையும் கிடையாது. கைநீட்டி அடிக்க என்ன உரிமை இருக்கிறது?

மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் மனம் மூழ்கியது. அப்பாவின் வக்கில், குடும்ப கம்பெனி வக்கீல், பல அண்டுகளாகக் குடும்பத்தின் சினேகிதராக இருக்கும் வேதராமனிடம் அவள் போகத்தான் போகிறாள். அவளுடைய பிரசினைக்கு வழி பெறத்தான் போகிறாள். அதற்கு முன் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவது நல்லது என்று பட்டது.

அவள் மெல்ல மாடிப்படியில் இறங்கினாள். கடியாரம் எட்டு அடித்துக் கொண்டிருந்தது.

கடைசி மாடிப்படியில் கால் வைக்கும்போது, சிவராமன் ராஜலட்சுமியிடமிருந்து பயபக்தியுடன் பூஜைத் தீர்த்தம் வாங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. வசு நின்று பார்த்தாள். தீர்த்தம் வாங்கிக்கொண்ட சிவராமன், ராஜலட்சுமி கொடுத்த மலர்களை வாங்கி, ஒன்றை எடுத்துக் காதில் செருகிக் கொண்டார்.

அந்தக் காட்சியைக் கண்டதும், ராஜலட்சுமியிடம் கலந்தாலோசிக்கும் யோசனையை வசு கைவிட்டு விட்டாள்.

திரும்ப மாடிப் படி ஏறும் போது கை கன்னத்தைத் தொட்டுப் பார்த்தது.


திருமூர்த்தி கோவிலிருந்து நித்யா, முரளி, கோபி, வசு நால்வரும் புறப்பட்டபோது தனக்கும் கோபிக்கும் இடையே நடந்த பேச்சின் எதிரொலி இன்னும் அடங்காமல் ஒலிக்கவே, வசுவால் கலகலப்பாக இருக்க முடியவில்லை.

திருமூர்த்தி அணைக்கட்டைத் தாண்டுகையில், நித்யா. ”வசு, சொல்ல மறந்தே போயிட்டேன். நம்ம புரோகிராமில் ஒரு சின்ன மாறுதல்!” என்றாள்.

காரில் முரளியும் கோபியும் முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தார்கள். வசுவுக்கு வலது பக்கத்தில் நித்யா அமர்ந்திருந்தான்.

வசு திரும்பிப் பாராமலே, “என்ன?” என்று கேட்டாள்.

“இப்போ நேரே பொள்ளாச்சிக்குப் போகவில்லை. கணியூருக்குப் போகிறோம். அங்கே எங்க தாத்தாவின் அண்ணா மனைவி இருக்கிறாள். தொண்டுக் கிழம்…தொண்ணூத்து அஞ்சு வயசு…அவளைப் பார்த்துவிட்டு வரணும்.”

முரளிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. “கோபி, உன்னுடைய சொந்த ஊர்கூட கணியூர் தானே?” என்றான்.

“என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர்… நாள் பிறந்த ஊர்…”

“நீ பிறந்த வீட்டை, உன் அம்மா பிறந்த வீட்டைப் பார்க்க உங்களுக்கு ஒரு சான்ஸ் வந்திருக்கிறது.”

கணியூரை அடையும்போது மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது.

நித்யாவின் பாட்டி வீட்டு வாசலில் கார் நின்றது. அதற்கு மூன்றாவது வீட்டில்தான் கோபியின் தாயார் தங்கம்மாவின் வீடு இருந்தது. முரளியும் நித்யாவும் பாட்டி வீட்டுக்குள் நுழைய, கோபி, வசுவைப் பார்த்தான்.

வசு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“நமக்குள் ஆயிரம் இருக்கலாம் வசு, இப்போ அதை இங்கே வெளிச்சம் போட்டுக் காட்டணுமா… வா, என் அம்மா பிறந்து வளர்ந்த வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.” என்றான்.

வசு மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.

திண்ணையில் ஒரு கிழவி உட்கார்ந்திருந்தாள்.

கோபியையும் வசுவையும் பார்த்த அவள், அசையாமலேயே, “யாரு. என்ன வேணும்?” என்று கேட்டாள்.

“என் பெயர் கோபி. இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த தங்கம்மாவின் பிள்ளை நான். இவள் என் மனைவி, பட்டணத்தில் இருக்கிறோம்…”

“ஏண்டா, நீ தங்கம்மா பிள்ளையா? அவள் உன்னைப் பெத்துப் போட்டதும் அம்மாவை முழுங்கிட்டு சித்தியோடு ஓடினியே, அந்தப் பிள்ளையா நீ? இப்போ எப்படியடா இருக்கே….சௌகரியமா இருக்கியா?”

“இருக்கேன் பாட்டி!”

“சாகிற வரைக்கும் பிறத்தியாருக்கு உபகாரமா இருந்தா. ஆன அவளுக்குப் பிரதியுபகாரமா ஒரு ஜீவன் இல்லே.. எல்லாம் நன்றி கெட்ட சவங்கள் . . வீட்டைப் பார்க்கத்தானே வந்தே… நன்றாகப் போய்ப் பாரு… உன் பெண்டாட்டி அழகா இருக்கா… தங்கம்மா இருந்தா பூரிச்சுப் போவா..”

ரேழியைத் தாண்டி கோபி நடந்தான். கூடம், முற்றம், தாழ்வாரம், பின்கட்டு எல்லாம் பார்த்தான். சுவரெல்லாம் காரை உதிர்ந்து கிடந்தது. தூண்களும் விட்டங்களும் உளுத்துப் போய்க் கிடந்தன.

தொழுவத்தைத் தாண்டி இறங்கிப் புறக்கடைக்கு வந்தான். பின்னால் வசு வந்து கொண்டிருந்தாள்.

தாயைப் பற்றிய நினைவுகள் கோபியை நெகிழ வைத்திருந்தன.

“வசு, பணம் சேர்த்து, இந்த வீட்டை நானே வாங்கலாம்னு இருக்கேன்,” என்றான் உணர்ச்சி வசப்பட்டவனாக.

“ஏன்?”

“இது என் அம்மா பிறந்த வீடு… இதனுள் கால் வைத்தபோதே என் அம்மா என்கூட நடந்து வந்த மாதிரித் தோன்றிற்று.”

வசு கேலியாகச் சிரித்தாள். அவன் முகம் சுண்டிப் போயிற்று.

“சிரிப்பாக இருக்கா..”

முகத்தில் அலட்சியம் தெரிய, அவள் சொன்னாள்:

“இல்லே, இது யார் வீடு, என்ன சரித்திரம்னு யோசிக்கப் பார்த்தேன். நேரு பிறந்த வீடா, இல்லை பாரதி பிறந்த வீடா. ஆஃப்டர் ஆல் ஒரு ஆர்டினரி பெர்ஸன் பிறந்த வீடு.. “

சட்டென்று அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“இது என் அம்மாவின் வீடு. நான்தான் வாங்கப் போறேன்.. என் அம்மாவுக்குச் சரித்திரம் இல்லாமலிருக்கலாம். ஆனால், அவளால் உன் அப்பாவுக்கு ஒரு சரித்திரம் கிடைச்சுது… நீ தங்கத் தட்டில் சாப்பிடும் படியான செல்வம், என் அம்மாவாலே கிடைச்சுது.”

அவள் உதடுகள் துடித்தன.

“நான்சென்ஸ்.. உங்க அம்மா என்ன என் அப்பா கையிலே அட்சய பாத்திரத்தையா கொடுத்தாள்? இல்லே, அலாவுதீன் விளக்கைக் கொடுத்தாளா? எதை மனசிலே வைச்சுட்டு உங்க அம்மா என் அப்பாவுக்குப் பணம் கொடுத்தாளோ? சோழியன். குடுமி சும்மா ஆடாதும்பாங்க…”

கோபியின் தலை சுற்றியது. நெற்றி நரம்புகள் புடைத்து எழுந்தன. அவனுடைய தாயாரைப் பற்றிக் கேவலமாக ஒரு குரல் பேசுகிறது. அது யார் குரல், ஏன் அப்படிப் பேசுகிறது என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. பார்க்கவும் சக்தி அற்றுப் போய்விட்டான்.

கண்ணை மறைத்த கோபத்தில், அவன் கல்லூரி ஹாஸ்டல் வார்டனுடைய அறிவுரையையும், உபதேசத்தையும் மறந்து விட்டான். கோபம் பீறிட்டுக் கொண்டு வரும் போதுதான் நிதானத்தைக் கையாள வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை அவன் மறந்துவிட்டான்.

“என்ன சொன்னே?”

அவனுடைய விரல்கள் சம்மட்டிபோல அவளுடைய இடது கன்னத்தைத் தாக்கியபோது, அதிர்ச்சியில் சாய்ந்து விழாமல் இருக்கச் சமாளித்துக் கொண்டவள், நின்று அவனை விறைத்துப் பார்த்தாள்.

தன் தவற்றை, விரல்கள் வசுவின் கன்னத்தில் பதித்த உடனேயே உணர்ந்த கோபிக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை.

“வசு. .வசு…”

அவனுடைய குரல் அவளுடைய காதில் விழவில்லை. அவள் சாரைப் பாம்பு போல விரைந்து போய்க் கொண்டிருந்தாள்.


“சார், நீங்க எங்க அப்பாவின் கம்பெனி லாயர், பெர்ஸனல் வாயர், குடும்பத்துக்கு வேண்டியவர்னு உங்ககிட்டே வந்தேன்.. நீங்க இத்தனை நேரமா என்னைக் குடைஞ்சு எடுத்தீர்களே தவிர, உருப்படியா என் பிரசினைக்கு வழி தீரும்படியா ஒரு அட்வைசும் பண்ணவில்லை,” என்று குறைப்பட்டுக்கொண்டாள் வசு.

வேதராமன் சிரித்தார்.

“உன் பிரசினை என்னன்னு உனக்கே தெரியவில்லை, வசு..”

“நான் இவ்வளவு தூரம் சொல்லியும் உங்களாலே புரிஞ்சுக்க முடியலைன்னா, நீங்க என்ன அட்வகேட்…?”

வேதராமன் சீற்றம் அடையவில்லை. அவருடைய குணமே, கட்சிக்காரர்களிடம் சினம் கொள்ளாதது தான், அதுவும் வசு வெறும் கட்சிக்காரி அல்ல. குடும்ப சிநேகிதர் சிவராமனுடைய பெண்.

சிரித்துக் கொண்டே, “நான் ஒரு சாதாரண அட்வகேட்தாம்மா. ஆனா எனக்கும் புரியும்படியாக உன் எண்ணத்தை விளக்கிச் சொல்லவில்லையே,” என்றார்.

“நான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துவிட்டேன் சார். உடைஞ்சு போன பீங்கானை ஓட்ட வைக்க முடியாதுன்னு புரிந்துவிட் டது.”

“உடைந்தது. பீங்கான் தானா…”

“ஆமாம்.”

“ஏன் உடைஞ்சுது? யார் உடைச்சா…யார் காரணம்?”

“தப்பு ரெண்டு பேர் மேலேயும் இருக்கலாம். ஆனா நான் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்கக் கூடத் தயாராக இருக்கிறேன்….ஆனா…”

“ஆனால்?”

“செய்யாத தப்புக்கும் மன்னிப்புக் கேட்கணும்னு அவர் கட்டாயப்படுத்தினார்…”

“இப்போ என்ன செய்யணும் என்கிறாய்?”

“சட்டபூர்வமான விடுதலை. லீகல் ஸெபரேஷன்…டிவோர்ஸ்.”

“என்ன காரணம் காட்டுவே?”

“எவ்வளவோ,.”

“இதோ பாரும்மா. ரெண்டு மூணு முக்கிய காரணங்களில் ஏதாவது ஒண்ணு பலமாக இருந்தால் தான் நான் உனக்கு அட்வைஸ் பண்ண முடியும்.”

“என்ன ஸார் காரணங்கள்?”

“நான் சிலவற்றைக் கொஞ்சம் அப்பட்டமாகக் கேட்பேன்… தப்பா எடுத்துக்கக் கூடாது.”

“கேளுங்கள். நான் ரெடி..கோர்ட்டுக்குப் போறதுன்னு முடிவுக்கு வந்தாச்சு…நான் எதுக்கும் தயார்.”

“உனக்கும் அவருக்கும் உறவு எப்படி?”

“அதான் இப்ப இல்லையே….நேத்தோடு எல்லாம் தீர்ந்தாச்சு.”

“நான் அதைக் கேட்கவில்லை.”

“பின் எதைக் கேட்கிறீர்கள்?”

“உங்களுடைய ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப்… ரெண்டு பேரும் சேர்ந்திருந்த நாட்களில் உங்கள் இல்லற வாழ்க்கை…”

“யூ மீன் அவர் ஸெக்ஸ் லைஃப்?”

”எக்ஸாட்லி, அது சரியா இல்லாமற்போன, அதுவே மற்றப் பிரசினையைப் பெரிதாக்கிவிட வாய்ப்பு இருக்கிறது.”

“எனக்குப் புரிகிறது சார். அந்த லைஃபில் ஒரு கோளாறும் இல்லை.”

“குட்.. வெரி குட்.. உன்னைத் தவிர, வேறு பெண்ணோடு கோபிக்கு ஏதானும் தொடர்பு உண்டா?”

இதுவரை மடமடவென்று பதில் சொல்லிவந்த வசு சற்று நிதானித்தாள்.

– தொடரும்…

– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *