கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 5,605 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13

கணவன் திருமணமான பிறகு மனைவியை வண்டியில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்குச் செல்லும்போது சொல்லுகிறான்:

‘பெண்ணே, நல்ல இலவ மரத்தில் செய்யப்பட்டதும், பல வகை வர்ணமுள்ளதும், தங்கம் போல் பிரகாசிப்பதும், நல்ல சக்கரமுடையதும், நன்கு ஓடுவதுமான இந்த வண்டியில், உன் சீதனங்களுடன் ஏறு.’ – சம்ஸ்காரங்களிலிருந்து.


கோபிக்குப் புரியாத புதிராக இருந்தது: நாகராஜன் மனைவி சீதா ஏன் அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டினுள் போக வேண்டும்?

லல்லி சீதாவைத் தொடர்ந்து ஓட, கோபி உள்ளே பிரவேசித்தான். ஒரு வேளை மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏதேனும் பூசலோ? நாகராஜனுடைய அக்கா வேறு வந்திருக்கிறாள். மாமியாரும் நாத்தியும் ஏதாவது சொல்லி, சீதாவின் மனத்தைப் புண்படுத்தியிருப்பார்களோ?

ரேழியைக் கடந்து செல்லுகையில் அவனுக்கு அவனுடைய கேள்வியே அபத்தமாகப் பட்டது. மாமியார், நாத்தி மீது வருத்தமிருந்தால் சீதா அவன்மீது கோபிப்பானேன்?

கூடத்தில் பாகீரதி காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தாள். சீதாவும். நாத்தியும் சமையலறையில் இருந்தார்கள். கோபி ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு, தனது அறைக்குச் சென்றான்.

அவன் மீண்டும் கீழே வந்த போது, பாகீரதி எழுந்து உட்கார, நாகராஜன் கையில் தட்டுடன் நின்று கொண்டிருந்தான். கோபியைக் கண்டதும் பாகீரதி, “கோபி, நீயும் ஒரு பிடி சாப்பிடு.” என்றாள்.

“பரவாயில்லை. இன்றைக்கு நான் ஓட்டல்லே போய்ச் சாப்பிடப் போகிறேன்,” என்ற கோபி, “நாகராஜா, உன் மனைவி எங்கே?” என்று கேட்டான்.

நாகராஜனுக்கு விஷயம் ஒன்றும் தெரியாது, சீதாவின் முகம் சரியாக இல்லை என்ற அளவில் மட்டும் கவனித்திருந்தான்.

“ஏன் உள்ளே இருக்கிறாள். சீதா… சீதா… இங்கே வா!” என்றான்.

சீதா மெதுவாக வந்தாள்.

“என்னைப் பார்த்ததும் பேயைப் பார்த்து ஓடுகிற மாதிரி உள்ளே வந்தார்கள். என்ன காரணம்னு தெரியலே!” என்றான் கோபி.

“நான் கூட கவனித்தேன்,” என்றான் நாகராஜன். “மூஞ்சி தொங்கிக் கிடக்கே, வீட்டில் என்ன நடந்ததோண்ணு நினைச்சேன்.”

“இந்த வீட்டிலே ஒண்ணும் நடக்கலேடா நாகராஜா, அம்மாவும் அக்காவும் பெண்டாட்டியை வாட்டி வதக்கி எடுத்திருக்கிறார்கள்னு நீ உன் மனசிலே கணக்குப் போட்டுட்டிருக்காதே” என்றாள் பாகீரதி.

நாகராஜன் பதில் சொல்லுவதற்குள் கோபி, “இந்த வீட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேறு எந்த வீட்டில் என்ன நடந்தது? எப்போதும் சிரிச்ச முகத்துடன் இருக்கிறவர்கள் ஏன் இப்போ இப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டான்.

“அவளையே கேளுடா நாகராஜா,” என்றாள் பாகீரதி.

“சீதா, என்ன நடந்தது? கோபி சொல்கிற மாதிரி உன் மூஞ்சி பார்க்கவே சகிக்கவில்லை,” என்றான் அவன்.

“ஏய், நான் அப்படிச் சொல்லவில்லை. எதையோ உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்னுதான் சொல்றேன்.”

“என்ன சீதா?”

“ஒண்ணுமில்லே.”

“ஏண்டி, என்கிட்டே சொல்லி மத்தியானமெல்லாம் அழுதியே, இப்போ சொல்லேன்!” என்றாள் பாகீரதி.

சீதா ஒரு முறை நாகராஜனை ஏறிட்டுப் பார்த்தாள். கோபி பக்கம் திரும்பவேயில்லை.

மின்னலாக ஓர் எண்ணம் உதித்து சந்தேகமாக மாறியது கோபியின் மனத்தில்.

“வசு வீட்டுக்குப் போனீர்களா?”

சீதாவின் கண்கள் கலங்குவதைக் கண்டு அவன் திடுக்கிட்டான்.

“வசு என்ன சொன்னாள்?”

பாகீரதி தான் பதில் சொன்னாள்.

“அவள் முகம் கொடுத்துப் பேசவேயில்லையாம்.”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை, அம்மா,” என்றாள் சீதா.

“நீதானே சொன்னே…”

“ஏன் சீதா, என்ன நடந்தது? வசு நம்ப கோபியின் ஒய்ஃப் என்கிறதால்தானே நீ தயங்கறே.. கோபி நம்ப வீட்டு மனுஷன். . அவன் ஏதும் தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டான்.. தைரியமாகச் சொல்லு.”

சீதா பதில் சொல்லவில்லை. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.

பாகீரதி, “இவள் அவளோட அம்மாவோடு பேசிட்டிருந்திருக்கா. அப்போ அவள் மாடியிலிருந்து இறங்கி வந்திருக்கா… அவ்வளவு தான். அப்புறம் இவள் ஆர்வமா, ஆசையா பேசப் போயிருக்கா, அவள் பேசாமலே போயிருக்கா. வசு கோபமாயிருந்தாலும், ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேசினா சந்தோஷப்பட்டிருப்பேன் என்கிறாள்,” என்றாள்.

கோபியின் நரம்புகள் கோபத்தில் புடைத்து எழுந்தன.

போன வருஷம் இதே சமயம் தான், பாகீரதி அம்மாள் ஊரில் இல்லை. மூத்த பெண் வீட்டுக்கு, சேலத்துக்குப் போயிருந்தாள். கோபி திடீரென்று ஒரு நாள் மாலை தலைவலி என்று படுத்தான். நாகராஜன் கொடுத்த மாத்திரைக்குத் தலைவலி பதில் சொல்லவில்லை. ஜுரமாகத் திரும்பியது. மாடியில் தன்னந்தனியாக ஜுரத்தில் அவதிப்பட்டான். முதல் இரண்டு நாட்களுக்கு நாகராஜன் கஞ்சியும் பாலும் காப்பியுமாகக் கொடுத்து வந்தான். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு தான், டைபாயிடு எனத் தெரிந்தது. தன்னை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுமாறு கோபி எவ்வளவு மன்றாடியும் நாகராஜனும் சீதாவும் செவி சாய்க்கவில்லை. மாடி அறைலிருந்து அவனைத் தங்கள் போர்ஷன்க்கே கொண்டு வந்து படுக்கை அறையி ல் படுக்க வைத்தார்கள்; அந்தச் சின்னஞ் சிறு அறையில்தான் நாகராஜன்- சீதாவின் வாழ்க்கையே ஆரம்பித்தது. நண்பனுடைய மெத்தையில் அவன் படுத்தான். காலை, மத்தியானம், மாலை, இரவு என்ற வித்தியாசம் இல்லாமல், தாய்போல் சிகிச்சை செய்தாள். டாக்டர் சொன்ன நேரத்துக்கு மருந்து கொடுப்பது, நான்கு மணிநேரத்துக்கொரு தடவை ஜுரத்தைக் கணக்கெடுத்துக் குறித்து வைத்துக் கொள்வது, ஜுரம் தணிந்த பின் இருதடவை வேக வைத்த சாதத்தை மோரில் கரைத்துக் கொடுப்பது எல்லாமே சீதா செய்தாள். நாகராஜன் ஆபீஸை உதறி எறிய முடியாத நிலையில், சீதாவைத் தவிர யார் இருக்கிறார்கள்?

கோபியின் மனத்தில், தனக்கொரு தங்கை இல்லையே என்ற தாபம் அடிக்கடி எழும். அவனுடைய டைபாய்ட் அதைத் தணிய வைத்தது.

சீதாவின் மனம் நோகும்படி நடந்து கொண்டு விட்டாளே! கோபி கொதித்தான்.

அவனுக்கும் வசுவுக்கு இடையே ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் ஒன்றும் அறியாத ஒரு நல்ல பெண்ணை, அதுவும் தாய்மையின் பூரிப்பில் திளைத்துக் கொண்டிருக்கிறவளை, வசு எப்படி அவமானப்படுத்தி மனம் புண்படச் செய்யலாம்?

அவன் உறுதி சொன்னான்: “அவள் சார்பாக நான் உங்ககிட்டே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவளையும் உங்ககிட்டே மன்னிப்புக் கேட்க வைக்கிறது என் பொறுப்பு”.

“சேச்சே, இதென்ன பேச்சு! நீங்களோ அவளோ மன்னிப்புக் கேட்கும்படியா என்ன நடந்துவிட்டது?” சொல்லி விட்டு சீதா உள்ளே போனாள்.


ராஜலட்சுமிக்கு அண்ணா ராஜாமணி கொடுத்த தகவல்கள் திருப்தி அளிக்கவில்லை. கூட்டு வியாபாரத்தில், கணவர் சிவராமன் பத்தாயிரம் ரூபாயைப் போடவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார். அந்தப் பணத்தை சிவராமன் என்ன செய்தார் என்பதை விளக்கவில்லை. ஒருவேளை அவருக்கே தெரியாதோ என்னமோ?

ராஜலட்சுமியின் மனம் வேதனைப்பட்டது. அவளுடைய கணவர் யாரையும் ஏமாற்றக் கூடியவர் அல்ல என்று அவள் மனப்பூர்வமாக இத்தனை நாள் நம்பியிருந்தாலும், வசு அடித்துப் பேசியதிலிருந்தும், அண்ணா மழுப்பியதிலிருந்தும் ஏதோ நடந்திருக்கிறது என்று அவள் நினைத்தாள்.

அவள் தன் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கையில், யாரோ போர்ட்டிகோவில் நிற்பதை உணர்ந்தாள்.

அருகே போய்ப் பார்த்த போது, இரண்டு ஆட்கள் சிரித்த முகத்துடன் நிற்பது தெரிந்தது.

“ஐயாவைப் பார்க்க வந்ருக்கிறோம்,” என்றான் ஒருவன். வயது முப்பத்தைந்து இருக்கும்.

“அவர் ஊரில் இல்லை. நாளை மறுநாள்தான் வருவார்.”

“நாளை மறுநாள் கண்டிபாக வந்து விடுவார் இல்லையா?” என்று கேட்டான் இன்னொருவன்.

“ஆமாம்.. உங்களுக்கு என்ன வேணும்?”

“நாங்க அயோத்தியாபுரத்திலிருந்து வருகிறோம்.. ஐயா எங்க குப்பத்துக் குழந்தைகளுக்கு புஸ்தகங்களும், துணிகளும், நிதி உதவி செய்திருக்கிறார். அலமாதியிலிருந்து மூணு சீமை மாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். சின்னக் குழந்தைகளுக்கெல்லாப் காலையிலும் மாலையிலும் நல்ல பால் கொடுக்க வசதி பண்ணியிருக்கிறார். அதனாலே-“

இன்னொருவன் தொடர்ந்தான். “அதனாலே, நாளை மறுநாள் எங்க குப்பத்து ஜனங்க அவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்த ஏற்பாடு செய்திருக்கிறோம். இதுவரையிலே, பொன்னாடை பாராட்டையெல்லாம் வேணாம், எனக்குப் பிடிக்காதுன்னு எங்க கையைக் கட்டிப் போட்டாரு. ஆனா இந்த வாட்டி நாங்க அவரை விடப்போறதில்லை….”

ராஜலட்சுமியின் மனம் பெருமையால் பூரித்தது.

“நாளை மறுநாள் வந்து பாருங்க,” என்று சொல்லி விடை கொடுத்தாள்.

ஹாலுக்குள் அவள் பிரவேசித்த போது, சுவரில் இருக்கும் சுவாமி படங்கள் கண்ணில் பட்டன. மும்மூர்த்திகள் அவளை ஈர்த்தார்கள். மனம் எண்ண ஆரம்பித்தது.

கேவலம் பத்தாயிரம் ரூபாய் பற்றிப் பேசும் அந்தப் பொள்ளாச்சி கிட்டு மாமா இவரைப் பற்றி வேறு ஏதாவது பேச முடிந்ததா? மகா விஷ்ணு லட்சுமியை மார்பிலே வைத்திருக்கிறார். அதற்கும் மேலே சிவன் பார்வதிக்குத் தன் உடம்பின் பாதியையே கொடுத்து விட்டார். பிரமன், வெறும் நாக்கோடு நிறுத்திக் கொண்டார்.

ஆனால் அவளுடைய கணவர் சிவராமன்? தன் மனசையே அவளுக்குக் கொடுத்து விட்டாரே!

சிவராமன் ஒரு பெரிய பணக்காரர். தொழிலதிபர். ஆனால் இந்த இருபத்தைந்து வருட தாம்பத்தியத்தில் ஒரு வாய்த் தடுமாறல், ஒரு சந்தேகமான நடத்தை, சபல புத்தியின் ஒரு சாயல் உண்டா?

இந்த விஷயத்தில் அவள் கொடுத்து வைத்தவள். எத்தனையோ பெண்களுக்குக் கிட்டாத பாக்கியம் இது. அவளுடைய பரிசுத்தமான அன்புக்கும் பதிபக்திக்கும் கிடைத்துள்ள பரிசுகள்…

ராஜலட்சுமி பொள்ளாச்சியை மறந்தாள். தங்கம்மாவை மறந்தாள். ராஜாமணியை மறந்தாள். தன்னுடைய பூரிப்பிலேயே திளைத்துப் போனாள்.

திடீரென்று போன் அழைத்தது. எடுத்தாள்.

”ஹலோ!”

“யார் பேசறது? வசு இருக்கிறாளா? கோபி பேசறேன்.”

அவனுடைய குரலுக்கும் கடுமை உண்டு என்பதை முதன் முதலாக உணர்ந்தபோது ராஜலட்சுமி அயர்ந்து போனாள். வசுவிடம் ஏன் இவ்வளவு கோபம்? “நான் ராஜலட்சுமி பேசறேன். சௌக்கியமா? வசு வெளியே போயிருக்கிறாள். வர்ற நேரம்தான்..ஊட்டியிலேருந்து வந்தப் புறம் நீங்கள் வீட்டுக்கே வரலையே.. எப்போ வரலாம்ணு இருக்கிறீர்கள்?”

“வரேன், அம்மா. நீங்களும் மாமாவும் சௌக்கியம் தானே?”

“இருக்கிறோம். அவர் கோயமுத்தூர் போயிருக்கிறார். இன்னிக்கு ராத்திரி சாப்பிட வாருங்களேன்.”

“பரவாயில்லே… இன்னிக்கு வரலே. இன்னொரு நாள் வரேன், நான் வசுகிட்டே பேசணும்ணு போன் பண்ணினேன். அப்புறம்…ஊட்டியிலே உங்களுக்கும் மாமாவுக்கும் நீலகிரித் தைலம் வாங்கினேன். அது என் பெட்டியிலே தான் இருக்கு. அப்புறமா கொடுத்து அனுப்பறேன்.”

“கொடுத்து அனுப்ப வேண்டாம். இன்னிக்கு சாப்பிட வர்ற போது கொண்டு வாருங்கள். முந்தா நாள் உங்களுக்காக நாங்க காத்துக் கொண்டிருந்தோம்….”

“என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அவசியம் ஒரு நாள் சாப்பிட வரேன்… வசு வந்தால் சொல்கிறீர்களா.. ஆபீசுக்குப் போன் பண்ணச் சொல்லுங்கள்”.

“கொஞ்சம் இருங்கள்.. கார் சத்தம் கேட்கிறது. வசு வந்து விட்டாள்.. போனை வைக்காதீர்கள்…”

போனைக் கையில் வைத்துக் கொண்டே ராஜலட்சுமி பார்த்தாள், வசு படி ஏறி வந்து கொண்டிருந்தாள்.

ராஜலட்சுமி பெருமூச்சு விட்டாள். தானும் தன் கணவரும் இவ்வளவு அன்னியோன்னியமாக, ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருக்க, அவர்களுக்குப் பிறந்த பெண்…

இவ்வளவு நல்ல பிள்ளையுடன் முரண்டு செய்துகொண்டு வாழத் தெரியாமல் வாழும் பெண்ணைப் பார்க்க பார்க்க அவளுடைய வயிறு அவளையே அள்ளித் தின்றது.

அத்தியாயம்-14

திருமணச் சடங்கின்போது இப்படி ஒரு வேண்டுகோள் பிள்ளைமிட மிருந்து மந்திரமாக வருகிறது:

“ஓ, பெண்ணே, நீ நல்ல கண் உள்ளவளாக, பதிக்குத் தீங்கு செய்யாதவளாக, எனது சகோதரர்களிடம் அன்பு உள்ளவளாக இரு… எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடு.”


“வசு, உனக்கு போன். மாப்பிள்ளை கூப்பிடுகிறார்.”

ராஜலட்சுமியிட மிருந்து ரிஸீவரை வாங்கிக் கொண்ட வசு. “ஹலோ,” என்றாள்.

“வசு, உன்னோடு கொஞ்ச நேரம் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது.” என்றான் கோபி. “எங்கே சந்திக்கலாம்?”

அவளுக்கு அவன் கேள்வி தேவையற்றதாகப் பட்டது.

“நான் இங்கேதான் இருக்கிறேன்,” என்றாள்.

“இல்லை வசு, குறுக்கீடு இல்லாமல் ஒரு அரை மணி நேரமாவது உன்னோடு தனித்து இருக்க வேண்டும்.” அவன் சற்று நிதானித்தான். “ஒன்று செய்யலாமா? சாயந்தரம் மெரினாவுக்கு வந்துவிடேன்?”

அவன் கெஞ்சிக் கேட்பது போலிருந்தது அவளுக்கு.

“ஓகே” என்றாள். “இடம்?”

“ராணி மேரி கல்லூரிக்கு எதிரில். ஃபைவ் தர்ட்டி ஷார்ப்.”

“சரி.”

அவள் ரிஸீவரை வைத்ததும், “என்ன சொல்கிறார்?” என்று கவலையுடன் கேட்டாள் ராஜலட்சுமி. “எத்தளை தரம் கூப்பிட்டாலும் வர மாட்டேன் என்கிறாரே, ஏன்?”

“வராமல் எங்கே போகிறார்? எல்லாம் வருவார்,” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றாள் வசு.


வசு ஒரு சிமெண்ட் பெஞ்ச்சியின் மீது உட்கார்ந்திருந்தாள். ஆள் காட்டி விரலில் கார்ச் சாவி வளையம் தட்டாமாலை ஆடிக் கொண்டிருந்தது. அப்பப்பா, என்ன கூட்டம்! கைத்தடிகளுடன் டாக்டர் கட்டளைப்படி வாக்கிங் போகும் கிழவர்கள். மணலில் குதித்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகளை விளையாட விட்டு விட்டுத் தங்களுடைய பேச்சில் மூழ்கிப் போகும் பெற்றோர்கள். பெண் எங்கே தன்னை விட்டு ஓடிவிடுவாளோ என்று பயந்து அவளுடைய கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் ஒரு தனி இடத்தைத் தேடி நாடும் காளைகள். மாங்காய்க் கீறலிலிருந்து உருளைக் கிழங்கு வறுவல் வரை என்னவெல்லாமோ விற்றுக் கொண்டு வரும் அன்றாடங் காய்ச்சிகள்.

“வசு”

திரும்பினாள். கோபி.

“மணி ஐந்தே முக்கால்,” என்றாள், சற்றே கண்டிக்கும் குரலில்.

“ஐ ஆம் வெரி ஸாரி. கடைசி நிமிஷத்திலே ஒரு வேலை முளைத்துவிட்டது. நீ ரொம்ப நேரமாக் காத்துட்டிருக்கியா?”

“ஐந்தரை என்றீர்கள். ஐந்து இருபதுக்கே வந்தேன்..”

“ஸாரி,” என்றான் அவன் மறுபடியும். “அதோ, அந்தப் படகுக்குப் பக்கத்திலே போய் உட்காரலாம்.”

“ஓகே.'” என்று எழுந்து நடந்தவள், “இப்போ எங்கே குடி இருக்கிறீர்கள்? ட்ரிப்ளிகேன் டஞ்ஜனா, இல்லே, மாம்பலம் எலிப் பொந்தா?” என்றாள்.

“ட்ரிப்ளிகேன் டஞ்ஜன் தான்.”

“அப்படியா..இங்கேயே உட்காருவோமா?”

“உம்..”

இருவரும் உட்கார்த்தார்கள். அவன் கேட்டான்!

”ஆமாம், நீர் என்ன செய்யப் போகிறாய்? டஞ்ஜனுக்கு வருவியா, இல்லே, எலிப் பொந்துக்கு வரப் போறியா?”

“நான் எங்கேயும் வரப் போவதில்லை. உங்களைப் பாலெசுக்கு அழைச்சுட்டுப் போக முயற்சிப்பேன். சரி.. ஏதோ தனியாகப் பேச வேண்டும் என்றீர்களே?”

“ஆமாம்.” அவன் சற்று மௌனமாக இருந்தான். பிறகு, “நாகராஜன் மனைவி வந்திருந்தாளாமே? அவளிடம் என்ன சொன்னாய்?” என்று ஆரம்பித்தான்.

அவள் வியப்புடன், “ஒன்றும் சொல்லவில்லையே? ஏன்?” என்றாள்.

“நீங்கள் என்னதான் பேசிக் கொண்டீர்கள்?”

“என்ன பேசியிருக்க முடியும்? அவள்தான் வந்தவுடனே புறப்பட்டுவிட்டாளே?”

“அதற்குக் காரணம் அவள் இல்லை. நீதான். அவளோடு பேசு உனக்கு நேரம் கிடைக்கவில்லையாமே?”

அவள் புருவங்களைச் சுளித்தாள்.

“பின்னே? வேளை கெட்ட வேளையில் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாள். ஒரு முப்பது பைசாவைத் தூக்கி எறிஞ்சு போனில் எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் பண்ணியிருந்தால், என்ன நேரத்துக்கு வரணும்னு சொல்லியிருப்பேன்.”

“நீ சொல்ற டயத்துக்குத் தான் உன்னைச் சந்திக்க முடியும் என்று பாவம், அவளுக்குத் தெரியாது.”

“இப்ப நீங்க வந்திருப்பது சீதாவுக்காக என்று புரிகிறது. ஓ.கே. அவள் மீது உங்களுக்குக் கரிசனம் இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஏன்னு கேட்டா அவள் உங்களுடைய சிநேகிதரின் மனைவி, அதற்காக நான் என்னுடைய மனசில் அவளுக்கு இடம் ஒதுக்க முடியாது.”

அவள் பேசிய விதம் அவனுக்கு ஆத்திரம் மூட்டிற்று.

“புழுதி படிஞ்ச அறைகளிலே நல்ல சாமான்களை வைக்க முடியாது,” என்றான் எகத்தாளமாக.

“அவள் நல்ல சாமானில்லை. என்னைப் பொறுத்தவரையில் அவள் வெறும் குப்பை.”

அவன் கண்கள் சிவக்க, “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்,” என்றான்.

“ஓ, அவளைக் குப்பைன்னா உங்களுக்கு இவ்வளவு கோபம் வர்றதா?”

“நீ இப்போ மன்னிப்புக் கேட்கணும்…இன்னிக்கே..”

“உங்க கிட்டே இப்போ எதுக்கு நான் மன்னிப்புக் கேட்கணும்? என்ன தப்பு செய்திட்டேன்?”

“நோ… என் கிட்டே நீ மன்னிப்பு கேட்க வேண்டாம். நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை…”

“பின்னே?”

“சீதாவிடம்.”

“என்ன!” தன் காதுகளையே அவளால் நம்பமுடியவில்லை. “நான் அவளிடம் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?” என்றாள் தன் சீற்றத்தை அடக்கிக் கொண்டு.

“நீதானே அவளை உன் வீட்டுக்கு அழைத்தாய்?”

“இல்லைன்னு சொல்லலியே.”

“அப்புறம் அவள் வந்த போது, ஏன் லட்சியமே செய்யாமல் போனாய்?”

“லட்சியம் செய்யறதுன்னா என்ன செய்யணும்? தூக்கித் தலை மேலே வைச்சுக்கணுமா? அவள் என்னைவிட கனம் ஜாஸ்தி.”

“தூக்கி எறிஞ்சு பேசினாயாம்.”

“நான் தூக்கவேயில்லை. தூக்கியிருந்தால்தானே அப்புறம் எறிவதற்கு!”

“என்னிடமே இப்படி என்றால் அவளிடம் எப்படி நடந்து கொண்டிருந்திருப்பாய் என்று தெரியும்.”

“ஓ.கே. இது உங்களுடைய அபிப்பிராயம். அதுக்குக் குறுக்கே நிற்கவோ, எதிர்த்துப் பேசவோ எனக்கு உரிமை இல்லை.. என் நாகரிகத்துக்கும் அது சரியாகாது. நடந்ததைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.”

”சொல்லு.”

“கேளுங்கள். உங்க சீதா வந்தபோது நான் மாடியிலே டிரெஸ் பண்ணிட்டிருந்தேன். அவள் கீழே அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் இறங்கி வந்தேன். ‘நீ என்னை இன்வைட் பண்ணி ஒரு வாரம் ஆயிட்டுது. இன்னிக்குத்தான் வரமுடிஞ்சுது,’ ன்னு சொன்னாள். அப்புறம் என் டிரெஸ்ஸைப் பார்த்து விட்டு, நான் எங்கேயாவது புறப்பட்டுக் கொண்டிருக்கிறேனான்னு கேட்டாள். ஆமாம் என்றேன். நடந்தது இதுதான்.”

“கதையை அழகாச் சொல்லிட்டே. அவள் ராத்திரி பூரா சாப்பிடவேயில்லை. அழுது கொண்டிருந்தாள்.”

“அப்ஸர்டா இருக்கே! அம்மா என்கிட்டே அவளைக் காரில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வா என்றாள். நான் பதில் சொல்றதுக்குள்ளே, சீதா முந்திரிக்கொட்டை மாதிரி, ‘நான் வந்த மாதிரி பஸ்ஸிலேயே போய்க் கொள்ளுகிறேன்’ என்று சொல்லிட்டா. எனக்கு அவளைக் காரிலே ட்ராப் பண்றதுக்குக் கூட ஒரு சான்ஸ் கொடுக்கலை.”

“அதுக்குக் காரணம் அவளை முதல்லேயே உன் அலட்சியத்தாலேயே ட்ராப் பண்ணினதுதான்.”

“அவ்வளவுதானே? நாம் புறப்படலாமா? உங்களை வேணும்னா இப்ப நான் ட்ராப் பண்ணத் தயார்.”

“இப்போ, நீ என்னுடன் ட்ரிப்ளிகேன் வர்றே.”

“வந்து?”

“சீதாகிட்டே மன்னிப்புக் கேட்கப்போறே.”

“நெவர்! நான் அவகிட்டே மன்னிப்புக் கேட்கறதா? எனக்கு என்ன பைத்தியமா? சொல்லப்போனா அவள்தான் என்கிட்டே மன்னிப்புக் கேட்கணும். ஒன்றுமில்லாத சின்ன விஷயத்தை இவ்வளவு பெரிசு பண்ணி உங்களைத் தூண்டி விட்டிருக்கிறாளே!”

“வசு!”

“நான் அவசரமா வெளியே போக இருக்கும்போது வந்தா, என் வேலையைத் தூக்கி ஒரு மூலையிலே எறிஞ்சுட்டு அவகிட்டே ஊர் சமாசாரங்களை அளந்து கொண்டிருக்க முடியுமா?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது வசு. நீ அவள்கிட்டே மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகணும்.”

“அதுக்கு வேறு ஆளைப் பாருங்க…ஆஃப்டர் ஆல் ஒரு குமாஸ்தா மனைவி, அவள் காலில் நான் விழுவதாவது!”

அவனுக்கு உதடு துடித்தது.

“வசு, நீ பணக்காரி. அந்தத் திமிர் உன்னை என்னவெல்லாமோ பேச வைக்கிறது!”

“ஏழைகள்ளு அவங்க எப்பவுமே தப்பே செய்ய முடியாதா? இல்லை. பணக்காரங்க செய்யறதெல்லாம் தப்பாத்தான் இருக்கணும்னு கட்டாயமா? ஆமாம், நான் ஒண்ணு கேட்கிறேன்… கட்டின மனைவி நான்… உங்களுக்கும் எனக்கும் இடையே எத்தனையோ ஆயிரமிருக்கும். அது நமக்குள்ளே நாம் தீர்த்துக்க வேண்டிய விஷயம்… இவள் யார் நடுவிலே?”

“அவள் ஒன்றும் நடுவில் வரவில்லை, வசு.. உனக்குக் கொஞ்சமாவது பண்பாடு இருந்தால், சாதாரண டீஸன்ஸி இருந்தால்..”

அவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

“சீதா மேலே உங்களுக்கு இவ்வளவு அக்கறை உண்டுன்னு இப்பத்தான் தெரிகிறது.. வெறும் அக்கறை தானா? இல்லே…இல்லே…”

அவன் துடித்துப் போனான். “சீ, என்ன பேத்தறே?”

வசு மணலைத் தட்டிக் கொண்டு எழுந்தாள். “உலகத்திலே என்ன வேணும்னாலும் நடக்கும். ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்லே.”

கோபிக்கு நெற்றி நரம்புகள் புடைத்தன.

வசு அதைப் பொருட்படுத்தவில்லை. போய்க் காரில் ஏறிக் கொண்டாள்.

அத்தியாயம்-15

விவாகங்கள் தர்மத்துக்காகவும், சந்ததிக்காகவும் தான் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். பெண் பிறக்க வேண்டும் என்று பிள்ளை விரும்பினால், கல்யாணத்தின்போது பெண்ணின் வலது கட்டை விரலை விட்டுவிட்டு, மற்ற நான்கு விரல்களையும், அவளுடைய உள்ளங்கையையும் சேர்த்துத் தன் கைக்குள் பொதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மகன் வேண்டுமென்றால், பெண்ணின் கட்டை விரல் ஒன்றே போதும். -சாத்திரம்


ராஜலட்சுமிக்கு வசுவின் போக்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது. கோபியை வசு சந்தித்து விட்டு மெரினாவிலிருந்து வீடு திரும்பி ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. கடற்கரையில் என்ன நடந்தது, கோபி என்ன பேசினான் என்பது பற்றி வசு வாயே திறக்கவில்லை. வந்ததும் வராததுமாக சாரைப் பாம்பு போல மாடிக்குப் போய்விட்டாள். முகமும் கடுகடுவென்றிருந்தது.

ராஜலட்சுமி கடியாரத்தைப் பார்த்தாள். எட்டேகால், வசுவைச் சாப்பிடக் கூப்பிட்டு, அந்தச் சாக்கில் விசாரித்தால் என்ன?

மகளைக் கூப்பிட அவள் ஹாலுக்குள் பிரவேசிக்கவும், வசுவே வரவும் சரியாக இருந்தது.

“வசு, சாப்பிடலாமா?” என்றாள் ராஜலட்சுமி,

“பசிக்கவில்லை, நீ வேணும்னா சாப்பிட்டுக் கொள்.”

“ஏன் பசிக்கலை? மணியைப் பார். எட்டேகால் தாண்டி விட்டது.”

“ரெண்டு கேக் சாப்பிட்டேன். ஒரு கோக்கும் குடிச்சேன்.”

ராஜலட்சுமிக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. கோபியும் வசுவும் ஒன்றாக உட்கார்ந்து ஏதோ சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனத்திலிருந்த சுமை சற்றுக் குறைந்துவிட்ட மாதிரி இருந்தது.

“அப்படியா..கோபி என்ன சாப்பிட் டார்?”

“கோபி சாப்பிட்டால்தான் நான் சாப்பிட வேண்டுமா?”

ராஜலட்சுமிக்குத் திகைப்பாக இருந்தது.

“ஏன், என்ன ஆச்சு?” என்றாள்.

“அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.” என்றாள் வசு. “என்பாட்டுக்கு நான் வந்துவிட்டேன், வழியில் ஓட்டலில் சாப்பிட்டு வந்தேன்.”

பகீரென்றது ராஜலட்சுமிக்கு. “அப்படி என்ன கோபம் உங்களுக்குள்?” என்றாள்.

“அவர் தெருவிலே ஒரு எருமைக் கன்றுக்குட்டி லோல்படறது. அதைக் கவனிக்காமல், குட்மார்னிங் சொல்லாமல் அலட்சியப்படுத்திவிட்டேன். அதன் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மாட்டேன் என்றேன். அதான் என்மேல் கோபம்.”

ராஜலட்சுமிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. வற்புறுத்திக் கேட்டதன்பேரில், நடத்ததை எல்லாம் வசு விவரித்தாள்.

ராஜலட்சுமிக்குக் கோபியின் மன வேதனை புரிந்தது.

“நேத்து நானே கவனிச்சேன். அந்தப் பெண் சிரிச்ச முகமா என்கிட்டே சரளமாப் பேசிட்டிருந்தா.. உன்னை ‘ஓகோன்னு’ தூக்கி வைச்சுப் புகழ்ந்தா… நீதான் அவளை மூஞ்சியிலே அடிக்காத குறையாய்ப் பேசி அனுப்பினே! அப்படிச் செய்திருக்கக் கூடாது.”

“ஓகே அம்மா. உனக்கும் மாப்பிள்ளைக்கும் நான் செய்ததுதான் தப்புன்னு பட்டா என்னாலே ஒண்ணும் செய்ய முடியாது. இதைப்பத்தி இப்போ உன்கிட்டே வேறே தனியா விவாதிக்கப் போறதில்லை.”

வசு, சோபாவில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரிக்கலானாள்.

பெண்ணையே ஓரிரு நிமிடங்கள் உற்று நோக்கிய வண்ணமிருந்தாள், ராஜலட்சுமி. நிலைமை மோசமாகிக் கொண்டே போவது அவளுக்குத் தெரிந்தது. விரிசல் இன்னும் அதிகமாகிவிடாதபடி ஏதாவது செய்ய வேண்டும். கணவர் சிவராமன் உடனிருந்தால் இந்தத் தர்மசங்கடத்தைச் சமாளிச்சு எவ்வளவோ உதவியாக இருந்திருப்பார்.

“வசு..” குழைவுடன் கூப்பிட்டாள்.

பிரித்த பத்திரிகையை மடிக்காமலேயே, “என்ன?” என்று கேட்டாள் வசு. அவளுடைய கண்கள் ஏறிட்டுப் பார்க்கவில்லை.

“ஏன் இப்படி இருக்கிறாய்? உனக்கே இது நன்றாக இருக்கிறதா?” என்றாள் ராஜலட்சுமி.

“எப்படி இருக்கிறேன்?” என்று திருப்பிக் கேட்டாள் வசு.

இரவு ராஜலட்சுமி சரியாகத் தூங்கவே இல்லை. இதுவரை சுகமாகக் கழிந்துவிட்ட தன் வாழ்க்கையில் வசுவினால் ஏதும் கசப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் அவளை ஆட்கொண்டுவிட்டது. கோபியிடம் வசு எப்படி நடந்து கொள்கிறாள், அது அவனை எப்படிப் பாதிக்கிறது என்று முழுமையாகத் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பமில்லாத சூழ்நிலையில் தான் இருப்பதை எண்ணி அவள் புழுங்கினாள்.

எப்படியாவது கோபியை ஒருமுறை வீட்டுக்கு வரவழைத்து, மனம் விட்டுப் பேசினால் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்ற நம்பிக்கை உதித்தது. கோபி நல்லவன். சொன்னால் எடுத்துக் கொள்வான். அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.


மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்கு, முந்தின இரவு தோன்றிய யோசனையைச் செயலாக்க, டெலிபோனை எடுத்தாள். கோபியைக் கூப்பிட்டாள்.

“கோபி பேசுகிறேன்.”

“வசுவின் அம்மா பேசுகிறேன். வந்து… வீட்டில் அவரும் இல்லை. எனக்கும் கொஞ்சம் உடம்பு சுகமில்லை…”

“ஏன்? என்ன உடம்புக்கு?” அவள் குரலில் உண்மையான கவலை தொனிப்பதை அவள் உணர்ந்தாள்.

“சொல்லும் படியாகவோ, சீரியஸாகவோ ஒன்றுமில்லை. கால் குடைச்சல்தான். வேறென்றுமில்லை… ஊட்டியிலேருந்து யூகலிப்டஸ் ஆயில் வாங்கி வந்திருப்பதாகச் சொன்னீர்களே?”

“ஆமாம். ரூமில் வைத்திருக்கிறேன். போய்க் கொடுத்தனுப்புகிறேன்.”

“அவ்வளவு அவசரமில்லை. ராத்திரிதான் தேய்த்துக் கொள்ளணும். இன்னிக்கு ஏழு மணிக்கு நீங்களே ஒரு நடை வந்துவிட்டுப் போனால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.”

“ஏழு மணிக்கா..?”

“ஆமாம். ஏன் யோசிக்கிறீர்கள்? நம்ம வீட்டில்தான் சாப்பாடு.”

“இன்னிக்குச் சாப்பாடு வேண்டாம்.”

“போன தடவையும் இதையே தான் சொன்னீர்கள். ஏன், நம்ம வீட்டுச் சாப்பாடு உங்களுக்குப் பிடிக்கலையா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் ராஜலட்சுமி,

“நோ.. நோ..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வந்து, வந்து…”

“வந்து, வந்து என்று தயங்காதீர்கள். வந்து விடுகிறேன்னு சொல்லுங்கள்.”

அவன் ஏதோ ஆரம்பித்தான். அவள் அவனைப் பேசவிடவில்லை.

“தாங்ஸ். .அப்புறம் யூகலிப்டஸை மறக்காதீர்கள்,” என்றாள்.

“இல்லை. வசு இருக்கிறாளா? என்ன செய்கிறாள்?”

“போர்ட்டிகோவில் காரை ஏதோ குடைந்து கொண்டிருக்கிறாள். இதோ கூப்பீடுகிறேன்..”

அவன் அவசரத்துடன் தடுத்தான். “வேண்டாம். பரவாயில்லை. ஏழு மணிக்குத்தான் வரச் சொல்கிறீர்களே, அப்போ பேசிக்கொள்ளுகிறேன். போனை வைச்சுடட்டுமா?”

“சரி, தாங்க்ஸ்.”

ஏதோ ஒரு சுமை திடீரென்று இறங்கினாற் போன்ற உணர்ச்சியில், ராஜலட்சுமி திருப்தியுடன் சோபாவுக்கு வந்தாள். அதே சமயம் கையில் ஓரிரு ரிப்பேர் சாமான்களுடன், முகமெல்லாம் வியர்வை கொப்புளிக்க வசு பிரவேசித்தான்.

“என்ன அம்மா, கோயமுத்தூரா? ரொம்ப நேரம் பேசிட்டிருந்தே?”

”உன் அப்பாவுடன் பேசவில்லை…அவருடைய மாப்பிள்ளை யோடே பேசிட்டிருந்தேன்.”

“அவர் எதுக்கு போன் பண்ணினார்? இன்னிக்கும் என்னை எங்கேயாவது வரச் சொல்லி உன் மூலமாக ஆர்டர் போட்டிருக்கிறாரா?”

“வசு, நீ இனிமே நாக்கைக் கொஞ்சம் அடக்கிப் பேசக் கத்துக்கணும். அவர் இன்னிக்கு ஏழு மணிக்கு இங்கே வருகிறார்.”

“ஓ, அப்படியா! வெரிகுட்! உன்னை மத்தியஸ்தத்துக்குக் கூப்பிடறாரா?”

“அவர் யாரையும் எங்கேயும் கூப்பிடலே…அவரைச் சாப்பிடச் சொல்லியிருக்கேன். வந்ததும் வராததுமா நீ ஏடாகூடமா ஏதும் பேசாதே. பேச வேண்டியதை எல்லாம் நான் பேசிக்கிறேன்… நீ பேசாமல் இருந்தால் போதும். சிரிச்ச மூஞ்சியா இரு.”

வசு பால்கனிக்கு வந்த போது, கீழே கார்ச் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தாள்.

அவள் இதுவரை பார்த்திராத ஒரு புது ‘பியட்’ மெதுவாக வந்து கொண்டிருந்தது.

யார் வருகிறார்கள்?

வசு பார்த்தாள்.

கார் நின்றதும், வசு இதுவரை பார்த்ததே இல்லை – இறங்கி, காரை இடம் வந்து முன் ஸீட்டுக் கிதவைத் திறந்தான். கதவு திறந்த தும், நித்யா இறங்கினாள்.

கார்க் கதவைத் திறந்தவன் இப்போது நித்யாவின் இடது கையைப் பிடித்துப் படி ஏறி நடக்கலானான்.

இது என்ன கூத்து? யார் இவன்? இவனை நித்யா எங்கே பிடித்தாள்? நித்யாவுக்குக் கதவைத் திறந்து விடுகிறான். அவளுடைய கையைப் பிடித்து அழைத்து வருகிறான். ஆச்சரியத்தையும் மீறி, அவளுக்குள் அவளே அறியாமல் ஒரு தாபம் பிறந்தது. அவளுடைய கோபி ஒரு தரமாவது, இவ்வளவு சிரத்தையுடன் அக்கறையுடன்… அன்புடன் நடந்து கொண்டிருக்கிறானா?

“ஹாய் வசு!” என்ற குரல் அவளைத் தட்டி எழுப்பியது.

“ஹலோ நித்யா!”

“ஏண்டி, நாங்க கீழே வந்து இறங்கறதை மேலேந்து பார்த்துட்டிருந்தியா? அப்படியே ஜம்ப் பண்ணி எங்களை வரவேற்கிறதில்லையா? மீட் மிஸ்டர் முரளி…மை அத்தைஸ் ஸன், அண்ட் மை ஃபியான்ஸே…. இவள் தான் நான் சொன்னேனே அவள்… வசு, நீங்க பொள்ளாச்சிக்கு வர்றதுக்கு முந்தின நாள் அங்கே யிருந்து புறப்பட்டுப் போனாள்.”

“க்ளாட் டு மீட் யூ”, என்றான் முரளி.

வசு ஒரு நிமிடம் அப்படியே நின்றாள். பிறகு புன்னகை செய்தபடி-

“என்னடீ இது? குடு குடுன்னு வந்து நிக்கறே. அத்தை பிள்ளை என்கிறே… வருங்காலக் கணவர் என்கிறே… எனக்குத் தலை சுற்றுகிறது..” என்றாள்.

“எனக்கே அப்படித்தான் சுற்றிற்று, எங்க தாத்தா திடுதிப்னு ஊரை எல்லாம் கூட்டி நிச்சயதார்த்தம் நடத்தப் போறேன்னு சொன்னப்போ…” என்றாள் நித்யா. பிறகு முரளி பக்கம் திரும்பி, “ஏன், உங்களுக்கும் உங்க தலை சுத்தியிருக்கணுமே. சுத்திற்றா?” என்று கேட்டாள்.

அவன் ஜோக் அடித்தான்.

“எனக்குத் தலை கொஞ்சம் கனம் ஜாஸ்தி.”

வசு சிரித்தாள்:

“ஏண்டி நித்யா, இப்படி ஒரு அத்தை பிள்ளை உனக்கு ஏத்த வயசிலே இருக்கிற புராணத்தையே நீ எனக்குச் சொன்னதில்லையே?”

“இவரைப் பற்றி நான் என்னிக்காவது நினைச்சிருந்தால்தானே உன்கிட்டே ஸ்பெஷலா சொல்றதுக்கு…சின்ன வயசிலிருந்தே, யு.பி., அஸ்ஸாம், ஸிக்கிம்னு ஹிமாலயன் பார்டர்லேயே இருந்து விட்டார். இவருடைய அப்பா வேறே அந்தக் காலத்திலிருந்தே உர்ரென்று ஒரு முறுக்கிலே இருந்து எங்களை எல்லாம் மதிக்காமல் இருந்து விட்டார்!” என்றாள் நித்யா. “வசு, என் பாட்டி சொத்து எழுதினாள் இல்லையா…இவருக்கும் வேறு எழுதித் தொலைச்சிருக்கிறாள். பாட்டியின் சொத்து, ஒரே முழுச் சொத்தா இருக்கணும்னு தாத்தா ஓ ஒன்னு ஒரே அடியா அலறிக் குதிக்க ஆரம்பிச்சார்… என் அப்பா ஓடோடி வந்தார் பொள்ளாச்சிக்கு. இவரோட அம்மாவும் வந்திருந்தா.. .அக்கா, தம்பி, ரெண்டு பேரும் மந்திராலோசனை செய்து தாத்தாவின் முடிவுக்கு ஓ.கே. சொன்னாங்க. போதுமா…”

“ஐ ஆம் வெரி ஹாப்பி, நித்யா!”

“உன் ஹாப்பினஸையெல்லாம் ரிஸர்வ் பண்ணிவை. இப்ப முதல்லே புறப்படு.”

“எங்கேடீ?”

“முதல்லே நகைக் கடை. பேர்ல்ஸ் செலக்ட் பண்ண உன்னை விட்டா யார் இருக்கா எனக்கு? இவர் எனக்கு பேர்ல் நெக்லஸ் வாங்கணும்னு ஒத்தைக் காலில் நிக்கறார். இவர் ஒரு அசடு. இப்பவே…”

“பேசாமே இருடீ, கழுதே.” என்றாள் வசு. “முதல்லே கீழே போகலாம். காப்பி சாப்பிடுவோம்.”

“உன் அம்மாவை இன்னும் பார்க்கலை.”

“எல்லாம் பார்க்கலாம். எப்போ கல்யாணம்?”

“நிச்சயதார்த்தம் நடந்த வேகத்தைப் பார்த்தபோது, மறுநாளே கல்யாணம் நடக்கும்னு எதிர் பார்த்தேன். பஞ்சாங்கம் சதி பண்ணிவிட்டது. நாளைக்கு எட்டாம் நாள்! இன்னொரு சங்கதி தெரியுமா?” என்றாள் நித்யா, மாடிப்படி இறங்கிக்கொண்டே.

“என்ன?”

“உன்னுடைய அவரும் என்னுடைய இவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை பார்க்கிறார்கள். போன வருஷம் ஹெட் ஆபீஸ்லே ஒரு கான்ஃபரன்ஸின் போது டில்லியில் மீட் பண்ணியிருக்கிறார்கள்… இந்த விஷயத்திலே நான் உன்னை விட ஒசத்தி. இவருக்குப் பிரமோஷன் ஆகி ரெண்டு வருஷமாகிறது… உன்னுடைய கோபிக்கு…”

“ஸ்டாப் இட், நித்யா, ப்ளீஸ்,” என்றான் முரளி.

– தொடரும்…

– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *