கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 6,480 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-32

அத்தியாயம்-31

வெறும் கேவல போகத்துக்காகவோ, வீட்டு வேலைகளுக்காகவோ பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளுவதில்லை. அறக் காரியங்கள் செய்யவும், குடும்பத்தின் நல்ல குழந்தைகளுக்குத் தாயாகவும் விளங்கவே அவள் மனைவி ஆகிறாள்.- சம்ஸ்காரம்.


அன்று மாலை ஏழு மணிக்கு அமிர்தம்மா இருக்கும் ஓட்டல் அறைக்குள் சிவராமன் பிரவேசித்தபோது அவள் ஊருக்குச் செல்லத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தாள்.

நாலாக மடித்துக் கொண்டிருந்த புடவையை எட்டாக மடிக்க மறந்து போய், “என்னங்க, நான் உங்களை இப்போ இங்கே எதிர்பார்க்க வில்லையே… ஏன், ரிஸப்ஷன்லேயிருந்து வந்து விட்டீர்களா?” என்று கேட்டாள் அவள்.

“ஆறே முக்காலுக்கே நான் என் வேஷத்தைக் கலைத்துவிட்டு ஓடி வந்து விட்டேன் அமிர்தம். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.”

“சே, என்ன காரியம் செய்து விட்டீர்க ள்? அவர்களெல் லோரும் என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்?”

“சாயங்காலம் கூட்டம் அதிகமில்லை.” என்ற அவர், “அமிர்தம், நீ என்னை மன்னித்துவிடு!” என்றார்.

“என்ன உளர்றீங்க?”

“ராஜலட்சுமி உன்னை அவமானப் படுத்திவிட்டாள்.”

“எப்போ?”

“என்ன, ஒண்ணும் தெரியாதவளைப் போல் கேட்கிறே? எல்லோருக்கும் மஞ்சளும் குங்குமமும் புடவையும் கொடுத்த அவள் உன்னை வேண்டுமென்றே ஒதுக்கி விட்டாள்.”

“மறந்து போயிருப்பாள். அதைத்தான் வசு நிவர்த்தி செய்து விட்டாளே.”

“இல்லை அமிர்தம். உன்னை மூலையில் உட்கார வைப்பேன்னு அவள் கறுவினாள். உன்னை அவமானப் படுத்துவேன்னு சபதம் எடுத்தாள். அதில் அவள் ஜெயித்தாள்…”

“பைத்தியக்காரத்தனமாக எதையும் உளறாதீர்கள். ராஜி ஜெயிக்கவும் இல்லை, நான் தோற்கவுமில்லை… எனக்கு டயமாகிறது. இன்னும் அரை மணி நேரத்தில் டாக்ஸி வந்து விடும்.”

“இல்லை அமிர்தம், இன்னிக்குக் காலையில் என் நெஞ்சு உடைஞ்சுது. ரத்தத்தை நான் எனக்குள்ளே அடக்கிக் கொண்டேன். உன்னை இந்த வெள்ளி விழா நாடகத்துக்குக் கூப்பிட்டதே தப்பு. என்னை மன்னித்து விடு.”

அமிர்தம்மா மௌனமாகக் கையிலிருக்கும் புடவையை மேலே மடித்துப் பெட்டியில் வைத்தாள்.

“நம்ம கதை வசுவுக்குத் தெரியாது இல்லையா?” என்றாள் அவள்.

“தெரியாது.”

“என்னென்னிக்கும் தெரியாம இருக்கணும்.”

“தெரியாம இருக்க நான் பார்த்துக் கொள்றேன்…”

“இல்லை… இனிமே நீங்க பார்த்துக் கொள்ள வேண்டாம்.”

“என்ன சொல்றே?”

“ஆமாம்… தயவு செய்து இனிமே அங்கலக்குறிச்சியிலே நீங்க உங்க நிழலைக் கூடக் காட்டக் கூடாது!”

அவர் திடுக்கிட்டார்,

“அப்படின்னா என்ன அர்த்தம்? நீ மாசா மாசம் மெட்ராஸுக்கு வந்துடறேன்னு சொல்றியா?”

“சே, நான் என்ன வேதனையுடன் பேசறேன் என்கிறதையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே? இனிமே, இந்த வெள்ளி விழா நாளிலிருந்து நமக்குள்ளே இருந்து வந்த தொடர்பு, சொந்தம், பிணைப்பு எல்லாம் தீர்ந்து விட்டது.”

“என்ன!”

“ஆமாம். நமக்குள்ளே இருந்து வந்த வரவு – செலவுக் கணக்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”

“இல்லை. முடியாது. ராஜி கழுத்திலே தாலியைக் கட்டினேன் தான். அவள் ஊருக்கும் உலகத்துக்கும் என் மனைவிதான். ஆனா… ஆனா.. நீ….நீ…”

“ஆமாம்.. இந்த இரண்டு அந்தஸ்தும் இல்லாதவள். நான் உங்களுக்கு, உங்க கண்ணுக்கு ஒரு ரோஜாப்பூ தான்… ஆனா நான் வெறும் காகிதப்பூ என்கிறதையே நீங்க மறந்து போயிட்டீங்க…”

“இல்லே அமிர்தம். நீ தான் உயிருள்ள பூ. அவள்… அவள் தான் நீ சொல்ற காகிதப் பூ. இப்போது எங்களுக்குள்ளே எந்த ஈடுபாடும் இல்லை. நாங்கள் வெறுமனே நடிக்கிறோம்.”

அவள் வேதனையுடன் புன்னகை செய்தாள்.

“இதுக்குக் காரணம் யார்? நான்தான். நமக்குள்ளே ஊறிப் போன உறவை அவள் புரிந்து கொண்டு விட்டாள். அவளுடைய நெஞ்சின் கசிவை நான் உணர்கிறேன். ஒரு பெண்ணின் மனசை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். உங்க மனசிலே தான் இல்லை, நான் தான் இருக்கிறேன் என்கிற உண்மையை அறிந்து கொண்டும் அவள் உங்களுடன் ஊர் அறிய, உலகமறிய, மனைவி என்கிற பெருமையுடன் வாழ்கிறாள். அந்தத் துணிவுக்கு, நெஞ்சுறுதிக்கு நான் ஒரு பரிசு அளித்து விட்டேன்…”

“என்ன அமிர்தம்?”

“என்ன பரிசு என்று கேளுங்கள்.”

“என்ன பரிசு?”

“விவாகரத்துன்னுதான் சொல்லணும். ஆனா நீங்க என் கழுத்திலே ஒரு நூலைக் கட்ட வில்லை. அதனாலே நமக்குள்ளே இதுவரை நடந்து வந்தது விவாக வாழ்க்கை இல்லை. ஒரு பொய்மையான ஆண் பெண் உறவு. பெயரில்லாத குழந்தை போல ஒரு கௌரவமும் அந்தஸ்தும், ஏன், நேர்மையுமில்லாத வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நான் இன்னியோடே ரத்து செய்து விட்டேன்…”

“ஐயோ அமிர்தம்..”

“இனிமே நான் மனச்சாட்சி உறுத்தாம வாழ்வேன்.”

“எனக்கு இங்கே மாசத்தில் இருபத்தேழு நாள் நரக வாசம், அங்கலக்குறிச்சியிலே மூன்று நாள் சொர்க்க வாசம் என்று இருந்தேன். அந்த மூணு நாளையும் பறிக்கிறாயா?”

“இல்லை.. இனிமே நான் மாதத்தின் முப்பது நாளையும் மனச்சாட்சி உறுத்தாம வாழப் போகிறேன்.”

“முடியாது. அமிர்தம் நீ எடுத்திருக்கும் முடிவுக்கு நான் கட்டுப் பட மாட்டேன். என்னால் உன்னைப் பார்க்காமலிருக்க முடியாது. உன்னுடன் பேசாமலிருக்க முடியாது. என் மனசுக்குக் குளிர்ச்சியே நீ தான். மரத்தை வெட்டி நிழலைப் பறித்து விடாதே….”

“நீங்கள்’ போகலாம்.”

“போறேன். ஆனா அடுத்த வாரமே நான் அங்கலக்குறிச்சிக்கு வருவேன்.”

“வந்தால் ஒரே முறை தான் என்னைப் பார்ப்பீர்கள். திருப்தியா?”

“என்ன சொல்றே?”

“நீங்க இரண்டாம் தடவை என்னை உயிரோடு பார்க்க மாட்டீர்கள்…”

அவர் தள்ளாடினார்.

”உனக்கு ஏன் இந்த வைராக்கியம் அமிர்தம்? அவள் தன் முட்டாள்தனத்தால் உன்னைச் சபையில் நாலு பேருக்கு நடுவில் அவமானப் படுத்தி விட்டாள் என்ற கோபத்தில் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து என்னை வதைக்கிறாய்?”

அமிர்தம்மா சிரித்தாள். “உங்களுக்குப் புரிய வைக்கிற பாடே பெரும் பாடாக இருக்கிறது. ராஜியால் நான் அவமானப் படவில்லை. நான் அவளுடைய இடத்தில் இருந்திருந்தால் நான் இன்னும் மோசமாக நடந்திருப்பேன். எல்லோர் முன்னிலையிலும் அவளை வெளியே துரத்தி இருப்பேன். அவள் குடும்பம் என்கிற கோவிலில் கணவன் என்கிற தீபத்தை ஏற்றி வைத்து ஆராதனை செய்கிறாள். தீபத்தின் புகையையும் காந்தலையும் கண்டு மனம் கசிகிறாளே தவிர எரிச்சல் பட்டு அதை அணைக்க முற்படவில்லை. அவளுடைய இந்தத் தன்மை ஒரு பெரிய லட்சிய மனைவிக்குத் தான் இருக்க முடியும். நான் இனியும் புகையையும் காந்தலையும் வளர்க்க ஆசைப்படவில்லை. எனக்கு நேரமாகிறது.. நீங்கள் போகலாம்.”

“என்னை இரண்டாம் தடவையாக விரட்டப் பார்க்கிறாய்.”

“இல்லை..நான் உங்களிடமிருந்து விலகுகிறேன்…”

“அப்போ?”

“நம்ம கதை, இல்லை இல்லை, சரித்திரம் முடிந்து விட்டது.”

“அமிர்தம், நீ இவ்வளவு நேரம் பேசினாய். நான் ஒன்று சொல்லுகிறேன். அதுவும் ஒரு முடிவுதான்… ஆனால் சரித்திரத்தின் முடிவு இல்லை…”

“நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்னு எனக்குத் தெரியும்..”

“என்ன?”

“மெட்ராஸை விட்டு, ராஜியை ஒரே அடியாய் ஒதுக்கி விட்டு அங்கலக்குறிச்சிக்கே வந்து விடுகிறேன் என்று!”

“ஆமாம்…ஆமாம்.. இதே முடிவுதான்.”

அமிர்தம்மா கலகலத்தாள். “நான் கேவலம் ஒரு சரித்திரத்துக்கு முடிவு கட்டுகிறேன். எந்தக் கல்வெட்டிலும் சிற்ப ஓவியங்களிலும் பிரதிபலிக்கக் கூடாத, முடியாத சரித்திரம்! ஆனால், நீங்கள்? ஒரு சகாப்தத்தையே சின்னா பின்னமாக நிர்மூலமாக்கி விட்டு ஒரு நிழலைத் தொடர்ந்து ஓடி வருகிறேன்னு பிதற்றுகிறீர்கள். உங்களுக்கு உங்கள் மனைவி தான், உங்கள் குடும்ப சாம்ராஜ்யத்தின் ராணியாக இருக்க முடியும்…”

சிவராமன் இடிந்து போய் உட்கார்ந்தார்.

“டாக்ஸி வந்து விட்டது.” என்றாள் அமிர்தம்மா.

“நான் என் காரில் கொண்டு போய் விடுகிறேன்…”

“இந்த அறையிலேயே பிரிவு உபசாரம் நடத்திக் கொள்கிறதுதான் நல்லது. நான் வருகிறேன்..ராஜி மேலே நீங்க ஆசையாக இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா அன்பாக இருக்கப் பழகிக் கொள்ளலாம். வசு நல்ல பெண்.. கொஞ்சம் அவசரப்படறாள்… அவள் மேல் கோபி உயிராக இருக்கிற மாதிரித் தோண்றது. அவர்கள் நன்றாக வாழ வேண்டும்.”

“நீ தான் உன் வாழ்க்கையையே குலைத்துக் கொள்ளுகிறாய்…”

“எனக்கு வாழ்க்கைன்னு எதுவுமே என்னிக்குமே இருந்ததில்லை. ஒரு பெண்ணுக்கு வெறும் உடல் தாகம் மட்டும்தானா? என்னுடைய நெஞ்சின் தாகம் இந்த ஜன்மத்தில் அடங்குகிற தாகம் இல்லை…நெஞ்சின் தாகம் அடங்க என் கழுத்தில் ஏது தாலி? நான் வறேன். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.” அமிர்தம்மாவின் தொண்டை கரகரத்தது. அடுத்த கணம், அவள் பெட்டியுடன் அறையை விட்டும் வெளியேறினாள்.

சிவராமன் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்தார். தம்முள்ளிருந்து ஏதோ ஒரு ஜோதி வெடித்து வெளியேறிப் பீறிட்டு விரைவதாகத் தோன்றியது அவருக்கு. இனி அவர் ஒரு வெறும் மனிதர்!

இதற்கெல்லாம் காரணம் யார்? ராஜலட்சுமி! ராஜி! ராஜியே தான்..அவளை.. ஜோதியை வெளியே விரட்டிய அந்த இருளை..அந்த இருளை..


வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் போயாகி விட்டது.

ஹால் சோபாவில் அம்மாவும் வசுவும் உட்கார்ந்திருக்க, கோபி இறைந்து கிடந்த சாமான்களை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான், “எல்லாம் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம், மாப்பிள்ளை!” என்றாள் ராஜலட்சுமி.

“வெள்ளிப் பாத்திரங்க ளெல்லாம் மூலைக்கு ஒன்றாகக் கிடக்கிறது. சந்தன பேலா, பன்னீர் வீசி, தட்டு, கிண்ணம்…” கோபி முடிக்கவில்லை.

“எல்லாம் அங்கேயே இருக்கட்டும். யாரும் தூக்கிக் கொண்டு போய் விட மாட்டார்கள்,” என்றாள் வசு.

கோபி அவளைச் சட்டை செய்யவில்லை.

“நீங்க பேசாம வந்து உட்காருங்கள். காலையிலே வேலைக்காரன் எல்லாவற்றையும் எடுத்து அலம்பி வைப்பான்… ஏம்மா, அப்பா எங்கே?”

“தெரியாது.”

“உன்கிட்டே சொல்லாமலா போனார்?”

“இதோ வரேன்னு போனார். ஏதோ முக்கியமான காரியமாக இருக்கும்… இல்லாமப் போனா இன்னிக்குப் போவாரா?” என்று ராஜலட்சுமி கேட்டாள்.

அவள் பேசி முடிக்கவும் போர்ட்டிகோவில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“அதோ, அப்பா வந்து விட்டார்..” என்று எழுந்தாள் வசு. கோபியும் அவள் அருகே வந்தான்.

படி ஏறி வந்த சிவராமன் ஹாலினுள் பிரவேசித்ததும், ராஜலட்சுமி எழுந்தாள்.

“ஏம்ப்பா, உங்க பிஸினஸ் வேலையை இன்னிக்குமா கவனிக்கணும்? ரிஸெப்ஷன் முடியறதுக்கு முன்னாடியே ஓடி விட்டீர்களே?” என்று வசு கடுகடுத்தாள்.

ராஜலட்சுமி குறுக்கிட்டாள்.

“வசு, நீ பேசாம இரு. ரிஸெப்ஷன்னு உனக்கு மட்டும்தான் தெரியுமோ?’ விஷயம் எவ்வளவு ஸீரியஸா இருந்தா அப்பா இதையெல்லாம் விட்டு விட்டுப் போவார்?. சரி சரி. நீ மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு மாடிக்குப் போ…நீங்க முதல்லே உங்க டிரெஸ்ஸைக் கழற்றி வேட்டி கட்டிக் கொண்டு வாருங்கள். லலிதா சகஸ்ரநாமம் இன்னிக்கு ரொம்ப அமர்க்களமா நடந்தது. கை கால் அலம்பினப்புறம் புஷ்பமும் நைவேத்தியமும் தரேன்,”

சிவராமன் மௌனமாகத் தம் அறையை நோக்கி நடந்தார். ராஜலட்சுமியும் பூஜை அறையை நோக்கி நடந்தாள்.

மாடி ஏறிக் கொண்டே வசு, “ரியலாகவே என்னுடைய பேரண்ட்ஸ் ஒரு ஐடியல் கப்பிள்,” என்றாள்.

“லட்சத்தில் ஒண்ணு.”

“இதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கறீங்க?”

“மனசு. ஸாரி, இரண்டு மனசும் ஒன்றாகி, ஒன்றுக்கொன்று வித்தியாசம் தெரியாமப் போற நிலைமை!”

“அந்த நிலைமை வாய்க்கத் தவம் செய்யணும்”, என்றாள் வசு.

“அவசியம் இல்லை. இரண்டு மனசும் ஒன்றை ஒன்று ஆழம் பார்க்கிறதை விட்டு, ஒன்றை ஒன்று துரத்துகிறதை விட்டு, நிலையாக இருந்து விட்டால், ஒன்றை ஒன்று நெருங்கி நெருங்கி…நெருங்கி…”

கோபி அவளைத் தன்னுடன் இழுத்துக் கொண்டான்.

“இது மனசு நெருக்கமில்லை, வெறும் உடல் நெருக்கம்தான்.”

“இதுவே அதுக்கும் அஸ்திவாரமாக இருக்கும்…”

“மன நெருக்கம் இருந்தாத் தான் உடல் நெருக்கமே சோபிக்கும்..”

“இந்த வேளையில் நாம் ஏன் பிலாஸபியில் நேரத்தை வீணாக்க வேண்டும் வசு? அதைப் பகலில் வைத்துக் கொள்ளுவோம்!”

கீழே, ஹாலில் தீர்த்தத்தைக் கொடுத்து விட்டு, பூந்தட்டிலிருந்து பூக்களை எடுத்தாள் ராஜலட்சுமி.

அவள் கைக்கு வந்தது ஒரு ரோஜாப்பூ. அதைச் சிவராமன் வாங்கிக் கொண்டார். அவர் உடம்பின் சூட்டில் அது வாட ஆரம்பிப்பது போலத் தோன்றியது.

“ராஜி, நீ தோற்று விட்டே!”

“சந்தோஷம்.”

“அவள் ஜெயித்து விட்டாள்.”

“அப்படியானால் அவள் புத்திசாலி!”

“பெண்டாட்டி என்கிற பிணைப்பிலே, நீ ஒரு லட்சியத்தோடு வாழ்ந்ததில் அதிசயமில்லை, ஆனால் ஒரு பிணைப்பும் இல்லாதவள், சமூகத்தில் ஒரு அந்தஸ்தும் கௌரவமும் இல்லாதவள், லட்சியவாதியாகச் சுடர் விட்டு எரிகிறாளே, அது பெரிய சாதனை…அமிர்தம் ஜெயித்து விட்டாள்.”

“இப்பவே வாழ்த்துத் தந்தி கொடுங்கள்…இந்த மாதிரி வெற்றிகளுக்கு, தபால் ஆபீஸ்லே ஏதானும் கோட் லெட்டர் இருக்கா? ஏன்னு கேட்டா தந்தி அடிக்க அதிகம் செலவு ஆகாது!”

அத்தியாயம்-32

எங்கள் இருவருடைய இதயங்களையும் விச்வ தேவர், ஜல் தேவதை, வாயு தாதா ஆகியவர் பரஸ்பரம் சிநேகம் உள்ளவர்களாகச் செய்யட்டும். – மணமகன் மணமகளைப் பார்த்துச் சொல்லும் பல மந்திரங்களில், ஒரு மந்திரத்தின் அர்த்தம்.


மேற்கு மாம்பலம் வீட்டுக்குக் குடியேறிய அந்தப் பத்து நாட்களில் வசுவும் கோபியும் ஒருவருக் கொருவர் எத்தனை தடவைகள் சண்டை போட்டுக் கொண்டார்கள், எவ்வளவு நேரம் தங்களுக்குள் மனம் லயித்துப் பேசிக் கொண்டார்கள் என்று அவர்கள் கணக்கெடுக்கவும் இல்லை, எழுதி வைக்கவுமில்லை. ஏன் சில சாதாரண வார்த்தைகள் வசுவை அப்படி ஆத்திர மூட்டவைக்கின்றன என்பது கோபிக்குப் புரியாத புதிராக இருந்தது. தன் கணவன் ஒரு தொட்டாற்சுருங்கியோ என்று சிற்சில சமயங்களில் வசு தன்னையே கேட்டுக் கொண்டாள்.

அன்று காலை மணி எட்டரை இருக்கும்.

குளித்துவிட்டுக் கோபி சமையலறையினுள் எட்டிப் பார்த்தான்.

“வசு!”

“புரிகிறது. நான் என்ன செய்யட்டும்? பருப்பு வெந்தால்தானே அதைக் கரைத்துப் புளித் தண்ணீரில் கொட்டலாம்? நீங்க பறந்தால் எப்படி?”

“சாதம் வடித்தாகிவிட்டது இல்லியோ?”

“உம்.”

“மோருஞ் சாதம் போடு..”

“ஓகே!” என்ற வசு, “ஆமாம், ரெண்டு நாளா என் கார் கொட்டற மழையில் நனைந்து கொண்டிருக்கு… அது உங்க கண்ணிலும் பட மாட்டேங்கறது”, என்று ஆரம்பித்தாள்.

“எந்த ஊரிலே யார் வருண ஜபம் பண்ணுகிறாளோ தெரியவில்லை, இந்த மாசம் இங்கே மழை கொட்டுகிறது.”

“உங்க மாதிரி நல்ல மனசு இருக்கிறப்போ வருண ஜபம்னு யாராவது உட்கார்ந்து செய்யணுமா என்ன?” என்று கிண்டல் செய்த வசு, “வீட்டுக்காரர்கிட்டே சொல்லி ஒரு ஷெட் கட்டச் சொல்லுங்க… நான் வேணும்னா கடன் கொடுக்கிறேன்”, என்றாள்.

“வீட்டுக்காரர் வட்டி கொடுப்பாரோ என்னமோ?” என்றான் கோபி. பிறகு, “வசு, நமக்குக் கார் தேவைதானா?” என்றான்.

“உங்க வரும்படியை நினைச்சுப் பார்க்கறப்போ தேவை இல்லை தான். ஆனா எனக்கு வேணும். எனக்கு ஆயிரம் ஃபிரண்ட்ஸ் இருக்கிறார்கள்… ஆயிரம் இடத்துக்குப் போக வேண்டியிருக்கும்!”
“சாதம் போடறியா?”

திடீரென்று மாடிப்படியில் காலோசை கேட்டது. கீழ்ப் பகுதியில் குடியிருக்கும் வீட்டுக்காரர்.

“மிஸ்டர் கோபி சார்!”

“இதோ வரேன்.”

“ஒண்ணுமில்லை. விறகு வண்டி வந்திருக்கு. உங்க வீட்டுக் காரைக் கொஞ்சம் தள்ளி வைச்சால் விறகை நாங்க எங்க வீட்டுக்குள்ளே கொண்டு போகலாம்.”

“எல்லாம் காதில் விழுகிறது. இதோ வரேன். ஒரு காரை வைச்சுக்கக்கூட இடமில்லை.”

முணுமுணுத்துக்கொண்டே வந்தவள், “ஏன் சார், என் ஹஸ்பெண்ட் இன்னிக்கு உங்ககிட்டே பேசுவார். சீக்கிரம் ஒரு ஷெட் கட்ட ஏற்பாடு செய்யுங்கள். பண முடை இருந்தால் நான் பணம் தறேன். மாசாமாசம் வாடகையில் பிடிச்சுக்கலாம்,” என்றாள்.

வீட்டுக்காரர் விழித்தார்.

”வசு, முதல்லே காரை ஸ்டார்ட் செய்து நகர்த்தி வைத்து விட்டு வா. விறகு வண்டிக்காரன் பாவம், காத்துக் கொண்டிருக்கிறான்.”

“அடுப்பிலே பருப்பு வேகிறது.”

“அதுதான் வேகலைன்னு சொன்னாயே. சார், ஷெட்டைப் பத்தி அப்புறம் பேசிக் கொள்ளலாம்… நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க”, என்றான் கோபி.

கையில் கார் சாவியுடன், “ஆமாம் சார், அவர்…அவர் கவலைப் படமாட்டார். ஏன்னு கேட்டா, கார் என்னுடைய கார்”, என்றாள் வசு.

வீட்டுக்காரர் சிரித்தார்.

“மிஸ்டர் கோபி. ஐ லைக் யுவர் ஃபாமிலி, இருபது வருஷமா நானும் பார்க்கிறேன், என் பெண்டாட்டி ஒரு நாளைக்காவது எங்கிட்டே மல்லுக்கு நிற்பாளான்னு.. உஹூம்,. நான் எதைச் சொன்னாலும் உடனே கேட்டுவிடறாள்!”

“ஐ பிடி யுவர் ஒய்ஃப்!” என்ற வசு தடதடவென்று இறங்கினாள்.

அவள் திரும்பி மாடிக்கு வந்தபோது, கோபி ஆபீஸ் செல்லத் தயாராக இருந்தான்.

“எங்கே கிளம்பிட்டீங்க?”

“மணி ‘எட்டே’ முக்கால். இப்போ நடக்க ஆரம்பிச்சால்தான் ஒன்பது மணிக்கு ஸ்டேஷன்லே இருக்கலாம். ஒரு ட்ரெயினை விட்டால் லேட்டாகிவிடும்.”

“எலக்ட்ரிக் டிரெயினுக்கு யார் ஸீஸன் டிக்கெட் வாங்கச் சொன்னா?”

“என் வரும்படி அப்படி.”

“சரி, சரி. சாப்பிட வாருங்கள். நான் காரில் கொண்டு விடுகிறேன்.”

புருஷன் சாப்பிடாமல் தொலையட்டும் என்று முன் கணம் மனம் கறுவிய வசு, திடீரென, நெகிழ்ந்தாள்.

கோபி ஒன்றுமே பேசவில்லை.


அன்று மாலை கோபி திரும்பி வரும்போது கையில் ஒரு சிறு பாக்கெட் இருந்தது.

“வசு.”

“‘நான் தலை வாரிக்கொண்டிருக்கிறது உங்க கண்ணுக்குத் தெரியலையா?”

“வாயைத் திற.”

“என்ன விஷயம்? முரளியும் நித்யாவும் வருகிற டயம்.”

“கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலே ஒரு புது ஓட்டல் ஆரம்பிச்சிருக்கா. அசல் நெய்லே பண்ணின ஸ்வீட்… உனக்குத்தான் ஸோன்பப்டி பிடிக்குமே…”

“எவ்வளவு வாங்கினீர்கள்?”

“நாம ரெண்டு பேர்தானே? இரு நூறு கிராம் வாங்கினேன். கிலோ இருபது ரூபாய்.”

“சீ! என்ன அற்பத்தனம். இதே எங்க அப்பாவானால் குறைஞ்சது நாலு கிலோ வாங்கியிருப்பார்.”

“ஏன், உங்க வீட்டு மாட்டுக்குப் புண்ணாக்குப் பருத்திக் கொட்டைக்குப் பதிலா ஸோன் பப்டிதான் போடுவார்களோ? ஓ. அதுதான் அன்னிக்குக் காப்பியிலே ஸோன் பப்டி நெடி. வீசிற்று…இந்தா.”

“இந்த அற்பத்தை நீங்களே சாப்பிடுங்கள்… இரு நூறு கிராமாம்… தாராள குணம் உடம்போடு பிறக்கணும், பரம்பரை பரம்பரையா வரணும்!”

அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“என் பரம்பரையிலே யாரும் ஒரு பொம்மனாட்டிகிட்டே கடன்னு சொல்லி ஏமாத்தி, பத்தாயிரம் ரூபாயைக் கபளீகரம் செய்யலை. செஞ்சிருந்தா ஒருவேளை, நானும் நாலு கிலோ ஸோன் பப்டி வாங்கி மாட்டுத் தொழுவத்திலே கொட்டியிருப்பேன்!”

அவள் சிலிர்த்துக் கொண்டாள். “ஏன் என் அப்பாவை இழுக்கிறீர்கள்?”

“உன் அம்மா பரம்பரையைப் பத்தித் தெரியாது. அதனாலே.”

“மூடுங்க வாயை! உங்க அம்மா லட்சணம் தெரியாதாக்கும்?”

“நீ என்ன கண்டுட்டே?”

“அதை வாயாலே வேறே சொல்லணுமா?”

அவன் ஆத்திரத்துடன் கை ஓங்க, வசு லாகவமாக நகர்ந்தாள்.

“உங்க கை என் மேலே பட்டதோ, அவ்வளவுதான். இன்னியோடே நம்ம குடும்ப வாழ்வு தொலைஞ்சுது.”

“ஆமாம். இதுமாதிரி நீ விறாப்புப் பேசி அதை நான் கேட்டு எனக்குக் காது புளித்துவிட்டது.”

வசு ஏதோ பேச ஆரம்பிம்பதற்குள், “என்ன, யுத்தம் முடிஞ்சுதா?” என்ற குரல் கேட்டது.

பார்த்தார்கள். அருகே நித்யா. முரளி.

“ரொம்ப இண்ட்டரஸ்டிங் டியூவல்… நீங்களும் இருக்கிறீர்களே. ஒரு நாள் கை ஓங்கி இருக்கிறீர்களா?” என்றாள் நித்யா. பிறகு, “வசு, சில மேனாடுகளிலே புருஷன் தன் கை வலிக்க அடிச்சாத்தான் பெண்ணுக்கு ஆனந்தமாம். அதுவும்…அதுவும்…பெட்ரூம்லே…”

முரளி, “நித்யா, இப்போ நான் உன் ஆசையை நிறைவேற்றிவிடுவேன். அப்புறம் உன் வாயிலேருந்து விழற பல்லை நீதான் பொறுக்கி வைச்சுக்கணும்!” என்றான்.

“உட்கார் நித்யா.”

“என்னடி சண்டை?”

“தினம் தினம் இப்படி ஏதானும் நடக்கிறதுன்னு கோபியே சொல்றானே. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” என்ற முரளி, கோபியைப் பார்த்தான்.

“ஸோன் பப்டி!” என்றான் கோபி.

“வசு, நாளைக்கு ராத்திரி ஏழு நாற்பதுக்கு ரெயில். முடியும்னா வந்து ஒரு கொகாகோலா வாங்கிக் கொடுத்து டாட்டா சொல்லிட்டுப் போ!”என்றாள் நித்யா. முரளிக்கு டில்லிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகியிருந்தது.

“ஃபர்ஸ்ட் கிளாஸ் கூப்பேதானே?” என்றாள் வசு.

“செகண்ட் கிளாஸ், கிளாஸ், த்ரீ டியர். கண்டக்டர் உட்பட எழுபத்தாறு பேர் இருப்பார்கள்… காலோடு கால் இடிச்சுக்கறத்தோடு நிறுத்திக்க வேண்டியதுதான்.”

“செகண்ட் கிளாஸா!”

“ஆமாம். அதுவும் டில்லி போறதே!” என்ற முரளி, “ஆபீஸ் விஷயமா போறப்போ ஃபஸ்ட்கிளாஸ். ஏன்னா, ஆபீஸ் கௌரவத்தைக் காப்பாத்தணும், இது சொந்தச் செலவில் பிரயாணம். இரண்டு பேரும் ஃபஸ்ட் கிளாஸ்லே போனா, கிட்டத்தட்ட அறுநூறு ரூபாய் காலியாயிடும்!”

“முரளி, சிக்கனத்தைப்பத்தி ஒரு கட்டுரை எழுதி, வசுவுக்கு அனுப்பி வை. இரண்டு பேர் சாப்பிட எத்தனை கிலோ ஸோன் பப்டி வேணும்னு குறிப்பிடு.”

“மூடுங்கள் வாயை!”

“வசு, நானும் இவரும் நாளைக்குக் கார்த்தாலே உன் அம்மா அப்பாவைப் பார்த்து, சொல்லிக் கொள்ளப் போகிறோம். ஏதானும் உன் அம்மாகிட்டே சொல்லணுமா?”

“நாளைக்கு மத்தியானம் அம்மாவே இங்கே வருகிறாள்.”

“அப்பா?” – நித்யா.

“அப்பா இல்லாம அம்மாவா? என் பேரண்ட்ஸ் ஐடியல் கபிள்.”

“உங்களைப் போல” என்றாள் நித்யா சிரிக்காமல்.


மறுநாள் காலை சுமார் எட்டு மணிக்கு நித்யாவும், முரளியும் சித்தார்கள்; ஊதுவத்தியின் மணம் காற்றோடு இழைந்து வந்தது.

பூஜை.

ராஜலட்சுமி மணி அடித்தாள். தீபாராதனை காட்டினாள். திராட்சையையும் கற்கண்டையும் நைவேத்தியம் செய்தாள்.

தீர்த்தத்தை ராஜலட்சுமி! கொடுக்க, இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கையை வைத்து, பக்தி சிரத்தையுடன் சிவராமன் வாங்கிக் கொண்டார். துளசியையும் சங்கு புஷ்பங்களையும் வலது காதில் செருகிக் கொண்டார்.

“ஓ, வாட் எ ப்யூட்டி ஃபுல் ஸைட்!” என்றான் முரளி, மனம் நெகிழ.

சிவராமன் அப்போதுதான் அவர்களைப் பார்த்தார். வரவேற்றார். எல்லோரும் உட்கார்ந்தார்கள்.

“இரு. நித்யா, காப்பி கொண்டு வருகிறேன்.”

தலைநிறையப் பூவும், வைரத்தோடும், வைர பேசரியுமாய் ஜொலிக்கும் ராஜலட்சுமியைப் பார்த்தபோது, சாட்சாத் மகாலட்சுமியையே பார்ப்பது போல இருந்தது முரளிக்கு.

அவள் பட்டுப் புடவை சரசரக்க நடந்து உள்ளே போன பிறகு, நித்யாவைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள்.

“நித்யா, இந்த மாதிரி ஒரு லட்சியத் தம்பதியை நான் இதுவரை புராணங்களில்தான் படிச்சிருக்கேன்… இப்படியும் இருக்க முடியுமா?”

“வசு-கோபியும் ஒருவிதத்தில் ஒண்டர்ஃபுல் கபிள்தான், தெரியுமா?”

“அப்படியா?”

“இங்கே இவர்கள் உள்ளும் புறமும் ஐக்கியமாக இருக்கிறார்கள்…அங்கே நீங்கள் பார்க்கிறது புறம் மட்டும்தான். தேங்காய் மட்டைக்குள்ளே வழுக்கையும் இளநீரும் ஒண்ணோடு ஒண்ணு இழைஞ்சு இருக்கே. அது மாதிரி வசுவும் கோபியும் இழைஞ்சு இருக்கிறார்கள். அந்த வெளிச் சண்டை கூட, நாள் போகப் போகச் சரியாகி விடும்.”

சிவராமனே காப்பியுடன் வந்தார். அவருக்கு நிழலாகச் சிற்றுண்டிகளுடன் ராஜலட்சுமி வந்தாள்.

(முற்றும்)

– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *