டீ சாப்பிட போலாமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,956 
 
 

ரகு – கார்த்திக்.

கல்லூரி நாட்களில் ஒரே மேசை. சென்னைக்கு வந்தபோது– ஒரே அறை, ஒரே அடுப்பு, ஒரே பசி.

பத்து interview தோல்விகள் வந்தாலும், ரகு தினமும் சொன்னான்: “நாளைக்கு வேலை கிடைக்கும் டா!”

அது உண்மையில் வேலை கிடைக்கும் நம்பிக்கை அல்ல; ஆனால் அந்த வாக்கியம் இல்லாவிட்டால் அந்த இரவுகள் பசியின் கயிறில் மூச்சுத்திணறியிருக்கும்.

அவர்களுக்கு அந்தச் சொல்தான் சம்பளமில்லாத சம்பளம், சோறு இல்லாத இரவுக்கான மனச்சாப்பாடு.


ஆண்டுகள் நகர்ந்தன. இருவரும் அதே IT நிறுவனத்தில் சேர்ந்தனர், அருகருகே அலுவலக மேசைகள்.

Tea break இடைவேளைகளில், ரகு வழக்கம்போல சிரித்துக்கொண்டு சொல்வான்: “டேய்… நம்ம மாதிரி போராட்டம் வேற யாருக்குமே இல்லடா? கேன்டீன் புளியோதரையையே தலப்பாக்கட்டு பிரியாணி மாதிரி மனசுக்குள்ள கற்பனை பண்ணிக்கிட்டு சாப்பிட்ட நாட்கள்தான் ரியல் லைஃப் டா!”

அந்த சிரிப்பில் பசியின் வலியும், கனவின் தாகமும் கலந்து இருந்தது.

ஆனால் மனித மனம்– ‘free Wi-Fi’ மாதிரி. சிக்னல் full இருந்தாலும், எப்போ disconnect ஆயிடும்னு யாருக்குமே தெரியாது.


ஒருநாள் HR-லிருந்து அறிவிப்பு — Promotion list.

Shortlist-இல் இருவரின் பெயரும்– கார்த்திக்கும், ரகுவும்.

அந்த சில நொடிகள், அவர்கள் ஒன்றோடொன்று பார்த்து சிரித்தார்கள். ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் ஒளிந்திருந்த கேள்வி: “இந்த system நம்மை நண்பர்களா வைத்துக்கொள்ளப் போகுதா? இல்லை போட்டியாளர்களா?”

முடிவில்– புரமோஷன் கார்த்திக்கே.

அந்த நொடியில், ரகுவின் முகத்தில் சிரிப்பு சுருங்கிப் போனது. சத்தமில்லாத silent mode.

கார்த்திக் அதைக் கவனித்தான். “பசி வயிற்றிலேயே உடையாத நட்பு, இந்தச் சின்ன promotion-க்காக சிதறப் போகுதா?” அவனுள் ஒரு வலி.

புரமோஷன் வந்த பின், ரகு கொஞ்சம் விலகிப் போனான். அதே desk-ல் இருந்தாலும், முன்பைப் போல casual jokes இல்லை. “டேய்… டீ சாப்பிட போலாமா?” என்ற தொடக்கம் கூட இல்லை.


ஒரு மாதம் கழித்து, ரகு HR portal-ல் resignation submit செய்தான். Reason: “சில personal காரணங்களுக்காக விலகுகிறேன்.”

அதைப் பார்த்த Manager முத்துக்குமார் சிரித்தார்: “ரகு… உனக்கு தெரியாதா? இரண்டு நாளுக்கு முன்னாடியே கார்த்திக் resign பண்ணிட்டான்!”

இந்தச் செய்தி வெடிகுண்டு போல ரகுவின் காதுகளில் விழுந்தது. அவன் உடனே கார்த்திக்கிடம் ஓடினான்:

“டேய்! நீ resign பண்ணிட்டியா? எங்க offer கிடைச்சிருக்கு?”

கார்த்திக் சிரித்தான். அந்த சிரிப்பில் கசப்பும், தோல்வியும், மனக்கசப்பை மறைக்க முயலும் அப்பாவித்தனமும் கலந்து இருந்தது.

“இன்னும் எந்த offer-மும் try பண்ணலடா ரகு…”

ரகு அவனைப் பார்த்தான்: “அப்போ ஏன் resign பண்ணினே?”

கார்த்திக்கின் குரல் நடுங்கியது: “ரகு… இந்தப் புரமோஷன் உனக்குத்தான் கிடைக்கும்னு நான் நம்பினேன். ஆனா unfortunate-அ அது எனக்கு வந்திருச்சு. ஒரே இடத்துல உட்கார்ந்து பேசாம இருக்குறது–unbearable டா. அந்த silent gap… அது நம்ம நட்பை கொன்று விட்டது போலத் தோணிச்சு. தாங்க முடியல… அதனாலே Resign பண்ணிட்டேன்.”

அவன் கண்களில் ஈரம் குவிந்தது.

ரகு தலையசைத்தான்: “அதுக்காக ஆஃபர் எதுவும் இல்லாம யாராச்சும் Resign பண்ணுவாங்களா டா?”

கார்த்திக் சிரிப்புடன்: “ஆஃபர் கிடைக்கலன்னாலும் பரவாயில்லை… அப்பாவோட மளிகைக் கடையில் உட்கார்ந்து Life-அ run பண்ணிக்கலாம்னு ஒரு நம்பிக்கை…”

ரகு சிரித்தான். அந்தச் சிரிப்பில் கண்ணீரின் உப்பு கலந்து இருந்தது.

“டேய் முட்டாளே… வேற Offer இல்லாமலே Resign பண்ணுற உன்ன மாதிரியான முட்டாளுக்குத்தான் இந்த System Promotion தருது. மளிகைக் கடைக்கு போற முகத்தைப் பாரு! துவரம்பருப்புக்கு பதிலா பொட்டுக்கடலையை போட்டு சாம்பார் வச்சவன்தானடா நீ?!”

இருவரும் சிரித்தனர். அந்த சிரிப்பு — அலுவலக தளத்தில், மீண்டும் பழைய டீ கடை சிரிப்பாக மாறியது.


அவர்கள் இருவரும் முத்துக்குமார் அறைக்குள் ஒன்றாக நடந்துசென்றார்கள் — Resignation Rollback செய்யவதற்காக…

முத்துக்குமார் கிண்டலோடு சொன்னார்: “ரெண்டு பேரும் தனித்தனியா Resignation Submit பண்ணிட்டு, இப்போ ஒன்னா சேர்ந்து Rollback பண்ண வர்றீங்களா?”

அந்த கிண்டல் சிரிப்பாய் கேட்டாலும், அதுக்குள் ஒரு உண்மை இருந்தது. நிறுவனத்துக்கு அவர்கள் Assets. ஆனால் ஒருவருக்கொருவர்– அவர்கள் உயிருக்கு உயிர்.

அந்த மாலை டீ கடை. மழை பட்டு ஈரமான மேசை.

ஒரே கப்பில் இரு சிப்புகள். மீண்டும் பழைய சிரிப்பு.

அன்றைய Chat Alert: “Friendship restored – Warning: Excessive laughter may occur!”

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *