டிரையத்லான் கனவுகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 766 
 
 
ரம்யா முன்பு அந்த மண்தரை மைதானம் விரிந்து கிடந்தது. ஒரு பழுப்பு நிற பேப்பர் கட்டு போல. ஆலமர விழுதுகளாய் அவள் மனசு பூரா தொங்கிக் கொண்டிருந்தது “டிரையத்லான் கனவுகள்”! 40 கி.மீ. சைக்கிள் போட்டி, 1.5கி.மீ. நீச்சல்.. கடைசியாக 10கி.மீ. ஓட்டப்பந்தயம் அம்மாடியோவ்! பயிற்சியாளர் தயாளன் பயிற்சியின் போது சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள்.

ரம்யா! எப்போதும் விளையாட்டுல உன்னோட போட்டி போடறவங்களைப் பார்த்து பொறாமைப்படு! உனக்கு நல்ல வெற்றி கிடைக்கணும்னா உனக்குள்ளே தீப்பொறி பறக்கணும்..! இந்த உற்சாக பானத்தை நீ தினமும் குடிச்சிட்டு, களத்தில் இறங்கு. விளையாட்டு ஒரு மனிதனைப்  பைத்தியமாக்கணும் ரம்யா!

அவள் தந்தை திவாகரிடம் விவாதித்தாள். அவரும் ஓர் ஓட்டப்பந்தய வீரர் தான். 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டங்களில் தேசிய சாம்பியன் நிலையைப் பெற்றவர்.

ஜப்பான் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அவர் தேர்வாகாதது, ஓட்டப்பந்தய விளையாட்டுக்கே முற்றுப்புள்ளி வைக்க நேர்ந்தது. அதற்கு விளையாட்டு அரசியல்தான் காரணம். அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தேர்வுக்குழுவின் செல்வாக்கில் விமானத்தில் ஏறிய அந்த மும்பை வாசி, ஆரம்ப தேர்வு போட்டியில் கூட வெற்றி பெறாமல், இப்போது பக்கவாதப் பிணியால் ஆற்றலை இழந்து, படுக்கையில் குறுகிப் போயிருப்பதாக கேள்வி.

ஆசிய, ஒலிம்பிக் கனவுகளைத் தின்றுவிட்டு, விச்ராந்தியாய் கிடக்கும் ஆடுகளத்தில், தான் அணிந்திருந்த ஓட்டக் காலணியை உதறிவிட்டு வெறுமையாய் வீடு திரும்பிய திவாகர் பின்னாளில் வேலை, திருமணம், பிள்ளைகள் என்று வாழ்க்கையில் ‘ஓட’ ஆரம்பித்துவிட்டார்.

கனவுகளும், கற்பனைகளும் வெறும் காகிதங்கள் தானா? அவரைப் பொறுத்த மட்டில், அப்படியில்லை என்றிருக்கிறது, ரம்யா மூலம்!

மூத்த மகள் சோபனாவுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை. அவளை இசைப் பள்ளியில் சேர்த்தார். இளையவளை எப்படியாவது முழு திறமைமிக்க டிரையத்லான் சாம்பியனாக உருவாக்கவேண்டுமென்று கனவு கண்டார்.

தன் பதினைந்து வயது மகள் ரம்யாவுக்கு நல்ல சைக்கிள் கூட வாங்க முடியாத வாழ்க்கை நிலை. ஆனாலும் அவருக்குள் பூத்துப் பூத்து வெடித்தது டிரையத்லான் கனவு!

ஒரு தொத்தல் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாள் தவறாமல் ரம்யாவுடன் திடலுக்கு வந்துவிடுவார். அதன் தொடர்ச்சியாக நீச்சலும், ஓட்டமும், அவருக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் தயாளன் ஆச்சரியப்பட்டுப் போனார்.

ஒரு நாள், காலையில் மைதானத்தில் ஓரமாக சைக்கிள் பழகிக் கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்து வேகமாக சைக்கிளில் வந்த ஓர்  இளம் பெண் இவளை லேசாக இடித்து, கீழே தள்ளிவிட்டு, காற்றாகப் பறந்து விட்டாள்.

இதுவும் ஒரு விளையாட்டுக்குத்தான்!

“ஏய் முட்டாள் நில்லு.. சாரி கேளு!”

அவள் ‘நிற்கா’ சைக்கிளில் அல்லவா பறக்கிறாள்!

அடுத்த நாள் அவள் வலிய வந்தாள். அவள்தான் அமுல். வீட்டில் செல்லமாக ‘அமுல்பேபி’ என்றழைப்பார்கள். காரணம்.. அவள் கொஞ்சம் தாட்டியாக  இருந்ததுதான். இருவரும் பழக ஆரம்பித்தார்கள். ‘சைக்கிள் தோழி’யராக வலம் வந்தார்கள். அவள் மாடல் பள்ளி மாணவி. இவள் செயிண்ட் ஜோசப் பள்ளி மாணவி. இருவருக்கும் ஒரே வித்தியாசம். அவள் பணக்கார பிள்ளை!

அமுல் பேபி யின் தந்தை சங்கர் ஒரு பிசினஸ்மேன். அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் திவாகர். “நான் தெற்கு ரயில்வேயில் கூடைப்பந்து வீரனாக விளையாடியிருக்கிறேன்.. ஒரு கட்டத்தில் முடியல சார்… வலது கால் மூட்டு விலகிடுச்சு.. அதனால, வேலையை விட்டுட்டு சொந்தத் தொழிலில் இறங்கிட்டேன். எனக்கிருக்கிறது ஒரே பொண்ணுதான்.. அமுல் பேபி! கொஞ்சம் பருமனா இருக்குறாளேன்னு பார்க்கிறீங்க! சைக்கிளும் நீச்சலும் கத்துக் கொடுக்கிறேன். இப்பப் பரவாயில்லே சீக்கிரம் விளையாட்டுக்குத் தேவையான உடல்வாகு கிடைக்குமுன்னு நம்புறேன்”.

“அமுல்பேபி நல்ல பொண்ணுதான்! எதிர்பாராமல் ஏற்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நாளே வருத்தம் தெரிவிச்சுட்டா! அது இருக்கட்டும்.. நீங்க மனசு வச்சா என் மகளோட அவளையும் டிரையத்லான் விளையாட்டுக்குப் பயிற்சி கொடுக்க முடியும்.. அமுல் சீக்கிரம் கத்துக்கும்னு நெனைக்கறேன்.. சைக்கிளும் நீச்சலும் ஏற்கனவே இருக்கு.. இனி, 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயம் மட்டும்தான் பாக்கி! நம்ப தயாளன் சார் இ.ருக்கார்.. மேற்கொண்டு அவர் பாத்துக்குவார்..”

பொதுவாக எந்த விளையாட்டினாலும், பின்னால் வரவிருக்கிற வெற்றியையோ, தோல்வியையோ எவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது “மேட்ச்ஃபிக்ஸிங்” என்பது அண்மையில் முளைத்த நச்சுக்காளான்!

ஆனால், எந்த ஒரு விளையாட்டு வீரனுக்கும் அடிமனசில் ஓர் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கைக்கீற்றுஅணையாமல்கனன்றுகொண்டேயிருக்கும்.

அந்த இனிய நாளில் கிடைத்த அனுபவத்தை ரம்யாவும், அமுல்பேபியும் மறக்க மாட்டார்கள். அன்றுதான் மாவட்டப் பயிற்சியாளர் தயாளன் இருவரையும் முன்வைத்து ஆத்மார்த்த தோடு வகுப்பு எடுத்தார். ஒருவருக்கொருவர் உற்சாக மூட்டுதல் பற்றிய சிந்தனை அவர் உரையில் தொனித்தது.

‘விளையாட்டு உலகை தவிர இந்த உற்சாக மூட்டும் தத்துவத்தை சோதித்துப் பார்ப்பதற்கு வேறிடம் இல்லை! நீங்கள் இருவரும் நல்ல முடிவைப் பெறுவதற்கு, குழுவாக இணைந்து, கைகோர்த்துச் செயல்படுங்கள். போட்டியில் ஒருவரையொருவர் உற்சாகமூட்டல், தாங்குதல், புரிந்து கொள்ளுதல் போன்ற நல்ல பண்புகளாகும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை”..

‘ஆயிரம் மைல் தொலைவு பயணம் எனினும் அது தொடங்குவது என்காலடியில்’ என்பது ஒரு ஜென் கவிதை.

டிரையத்லான் என்பது என் கனவுக் கோட்டை! அதனால் தான் ரம்யாவை தயார் பண்ணினேன்.. அமுல் சைக்கிள், நீச்சல் இரண்டிலுமே கெட்டிக்காரி இனி அவளை ‘ஓடு..ஓடு..’ என்று உற்சாகப்படுத்துவது ரம்யாவின் பொறுப்பு.. இன்னும் சரியாக மூன்று மாதங்கள்.. அகில இந்திய டிரையத்லான் போட்டி கொச்சியில் நடக்கவுள்ளது.. அதில் யார் தேசிய சாம்பியன் பட்டம் பெறப் போகிறார்கள் என்பது உங்க கையிலே இருக்கு! எதிராளியை எளிதாகத் தோற்கடிக்கிற திறமை.. அது உங்க ரெண்டுபேருக்குமே இருக்கு!’ பயிற்சியாளர் தயாளனுடைய வசீகரப் பேச்சானது இருவருக்கும்  புதிய நம்பிக்கையை ஊற்றெடுக்க செய்தது.

இன்னும் ஒரு மாத காலம் தான். இருவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது ‘எதிர்பாராதது’ நடந்தது. காயங்களும், வேதனைகளும் எந்த விளையாட்டில் தான் இல்லை. ஆனால், எல்லோரையும் அது தீண்டுவதில்லை. அமுல் பேபியின் ‘விளையாட்டு உலகம்’ இமைப்பொழுதில் சக்கர வண்டிக்குள் அடங்கிப் போயிற்று.

‘ஓடு..ஓடு..ஓடு!’ என்று இப்பொழுது அவள், சக தோழி ரம்யாவை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறாள் முறிந்த காலை முடக்கி வைத்துக் கொண்டு!

இருசக்கர வாகன விபத்தில், கால் எலும்பு முறிந்தது. பேரார்வங்கொண்ட மனசு உடைந்தது. ‘மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாது’ என்பது ஆர்த்தோ டாக்டரின் உத்தரவு. அமுல் மட்டுமா? ரம்யா உட்பட அனைவரும் தீராச் சோகத்தில் மூழ்கினர்.

“அமுல்! கவலைப்படாதே.. எனக்கு நீயே கதவு.. சாவி காலத்திடம் இருக்கிறது!”ரம்யாஅவளை ஆற்றுபடுத்தினாள், கவிதை மொழியில்.

நேஷனல்  டிரையத்லான் சாம்பியன்‘ஷிப்  கொச்சியில் தொடங்கியது. கண்ணீரும் புன்னகையுங்கலந்து வாழ்த்தியனுப்பினாள் அமுல், ரம்யாவை.

தொலைக்காட்சியில் ‘நேரலை’ காட்சியை ஒரு சிறிய அறைக்குள் இருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் அமுல்.

‘ஓடு..ஓடு.. ரம்யா!.. வேகம்போ.. இன்னும் வேகமா ஓடு! ம்.. சீக்கிரம் அந்த கல்கத்தாக்காரி வந்துட்டா! விடாதே.. ம்.. பின்னே பார்க்காதே ம்.. ஆச்சு.. நீதான் சாம்பியன்!’ முழங்கினாள் முழங்கிக் கொண்டே இருந்தாள்.

இறுதியில் தங்கப்பதக்கத்தை பறித்த ரம்யா வெற்றி மேடையில் இரு கரங்களையும் உயர்த்தி ஆரவாரத்துடன் முறுவலித்தாள்.

அந்த கணத்தில், அவள் மனக்கண்களில் ‘அமுல்பேபி’ மட்டும் நிறைந்திருந்தாள்!

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *