ஜ்வாலை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 280
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கீழ்க்கண்ட எழுத்துப் பிரதி, ஏதோ இன்னதென்று சொல்ல முடியாத மனோவியாதியாலோ, தேக வியாதி யினாலோ பீடிக்கப்பட்ட இறந்த ஒரு குடும்ப ஸ்திரீயின் தலையணையின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்டது:
சித்திரை 2: ஆய்விட்டது இங்கு வந்து பதினைந்து நாட்களுக்குமேல், ஒரு சுகமும் காணோம். எங்கேயோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருக்கிறது. எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ஆகையினால்தான் எதையாவது எழுதியாவது பொழுதைத் தொலைக்கா மென்று எழுத ஆரம்பித்திருக்கிறேன்:
என்னத்தைப் பற்றி எழுதறது என்றுதான் தெரிய வில்லை. முதலில் எழுதறதுக்கு என்ன இருக்கு? ஒன்று குடி யிருக்கும் இடம் சுவாரஸ்யமாய் இருக்கவேண்டும், இல்லா விட்டால் மனுஷாளாவது சுவாரஸ்யமாய் இருக்கவேண்டும். இரண்டுமில்லை. இடம் என்னவோ பாக்கறத்துக்கு லக்ஷணமா, தன்னந்தனியா, பங்களா மாதிரி இருக்கே யொழிய, மருந்துக்குக்கூட ஒரு மாமரம் கிடையாது. எங்கே பார்த்தாலும் ஒரே புளியந்தோப்பாயிருக்கு. இது கந்தக பூமியாம். வெயில் தாங்க முடியல்லே. ஒரே அனல் காற்று. மத்தியானம், சரியா உச்சி வேளைக்குத் தலையை கிர் ரென்று சுற்றுகிறது. நல்ல நாளிலேயே சொல்ல வேண்டிய தில்லை. அதுவும் இங்கே வந்த பதினைஞ்சு நாளைக்குள்ளே உருக்குலைஞ்சுடுத்து. எனக்கே நன்னாத் தெரியறது…
இங்கேருந்து சுமார் ஒரு பர்லாங்கு தூரத்திலே, ஒரு வாய்க்கால் ஓடறதாம். வருஷத்திலே ஆறு மாசம் வத்திக் கிடக்குமாம். என்ன வாய்க்கால் வேண்டியிருக்கோ தெரியல்லே.
ஜன்னல்லேருந்து பார்த்தா கோவில் ஸ்தூபி ஒன்று தெரியறது. செம்போ என்னமோ தெரியல்லே திட்டு திட்டா. கன்னங் கரேலுன்னு கறுத்திருக்கு. அம்பாள் கோவி வாயிலேகூட லாம். வாசக்கூட்டி ஏதோ பேர் சொன்னா. நுழையல்லே. மறந்துடுத்து. ரொம்ப சக்தி ஜாஸ்தியாம். அவளுடைய சக்தியெல்லாம் மந்தரப் பிரயோகம் பண்ணி, சக்கரம் போட்டு, அதை அதிலே அடைச்சு வெச்சிருக்காளாம்.
இடத்தே விஸ்தரிச்சாச்சு, மனுஷாளோ சொல்ல வேண்டியதில்லை. இவா ஆனாலும் இப்படி இருப்பான்னு நான் கனவுலேகூட நினைக்கல்லே…
பொழுது விடிஞ்சா கேஸ் பொழுது போனா கேஸ், எப்போவானாலும் கேஸா? நானும் இதுக்கூன்னு பரீக்ஷையா இரண்டுங்கட்டான் சமயமெல்லாம் அவா ரூம் பக்கமாப் போய்ப் பார்க்கறது. எப்பொ போனாலும் சரி, கக்ஷி’ ‘மராமத்து”பட்டா’, “ஜப்தி”ன்னு மாத்தி மாத்தி இதே பேச்சாயிருக்கும். சரியா கார்த்தாலே ஒம்பது மணி சாதம் அடிச்சுதோயில்லையோ பலகாயேப் போட்டுண்டு போடு’ இங்கறாளே, அதோடு சரி. அப்புறம் கோர்ட்டுக்குப் மணி. எட்டு போயிடரா. மறுபடியும் சாயந்திரம் ஏழு மணி மணிக்குத்தான் ஆசாமியைப் பார்க்கலாம். அப்போகூட, என்ன, சாப்பிட்டு கையை அலம்பிண்டதும் அலம்பிக் காததுமா, ரூமுக்குப் போயிட வேண்டியதுதான். மானம் வெக்கத்தே விட்டுட்டு நானா ரெண்டு தடவை பேச்சுக் குடுத்துக்கூடப் பார்த்தாச்சு. மசியறதாக் காணோம். இப் என்னத்துக்குக் கலியாணம் படியாப்பட்டவாள்ளாம் பண்ணிக்கறாளோ தெரியல்லே. சமைச்சுப் போடறத்துக்கும் கண்ட சாமானைக் கண்ட இடத்திலே போட்டூடறாளே, அதைத் திருப்பி எடுத்து வெக்கறதுக்கும் தான்னு நெனைக் கறேன். அவாளுக்குத்தான் கேஸும் பணமும் பொண் டாட்டியாயிடுத்தே? அப்புறம் நம்மை ஏன் லக்ஷ்யம் பண்றா?
எனக்குப் பொறுக்க முடியல்லே. எத்தனை நாழி படிக்கறது? எத்தனை நாழிதான் தாயக்கட்டான் ஆடறது எதிர்க்காயேகூட நானே வெச்சிண்டு? சுவாரஸ்யமால்லே. எனக்கு என்னமோ மாதிரியிருக்கு. கஷ்டமா!
என்னமோ ஆரம்பிக்கறப்போ ரொம்ப லக்ஷணமா ஆரம்பிச்சேன், அப்புறம் என்னையும் அறியாமே, அது இப்படிப் போயிடுத்து, தெரியல்லே.
சித்திரை 12: இதென்ன, என்ன வந்துடுத்து நேக்குன்னு, தெரியல்லே. நேத்து ராத்திரி மொதக்கொண்டு மனசிலேயும் ஓடம்பிலேயும் ஏதோ ஒருவிதமாயிருக்கு.
நேத்து சாயந்தரம். என்னமோ. ஆத்திலேதான் கொட்டு கொட்டுன்னு முழிச்சுண்டிருக்கோமேன்னூட்டு, கோவிலுக்குப் போனேன். சாயங்கால வேளை. தீபாராதனை நடக்கற சமயம். நான் கோவிலுக்குள்ளே நொழஞ்சவுட னேயே சின்ன களையவரம் உண்டாச்சு. இங்கேதான் சொல்ல வேண்டியதில்லையே, பேன் நசுக்கினா, உடனே அதைப்பத்திப் பெரிய கூட்டம் போடுமே, அவ்வளவு பட்டிக் காடாயிருக்கு…
திடீர்ன்னு பின்னாலே நுணஙண’ன்னு மணி அடிச் சுண்டே, யாரோ ‘வழியே விடு. வழியே விடு’ன்னு அதட் டிண்டே தடதடன்னு வந்தா. நான் ஒதுங்கி, நிமுந்து பார்த்தேன். சடக்குன்னு என்னைப் பார்த்ததும் குருக்கள் மூஞ்சி மாறித்து. என்னையும் கும்பலோடு கும்பலா நினைச் சுண்டுட்டாப்போல இருக்கு. குஞ்சிரிப்பா சிரிச்சுண்டே போயிட்டான்.
உடனே தீபாராதனை ஆரம்பம் ஆயிடுத்து. குருக்களை அப்போதான் நான் சாவகாசமாய்ப் பார்த்தேன். அந்த ஒடம்பு,எப்படித்தான் அந்த மெருகு வந்ததோ தெரி யல்லே! செக்கச் செவேலுன்னு நல்ல சிகப்பு. அந்த மயிரும் நன்னா அடர்த்தியா, பட்டுக் குஞ்சம் மாதிரி, சுருட்டை சுருட்டையா, பளபளன்னு காது. புடரி நெத்தி முன்னாடிக்கே எல்லாம் தொங்கறது. “கருகரு”ன்னு தாடி வெச்சிண் டிருக்கான். தீக்ஷையோ என்னமோ தெரியல்லே. மூஞ்சியும், மூக்கும் முழியும் நெத்தியும் அவ்வளவு எடுப்பா நான் எங்கே யும் பார்த்ததில்லே. அப்பா புருவம் எவ்வளவு அடர்த்தி. என்னமோ இரண்டு வில்லை, நன்னா வளைச்சு விட்டாப் போல இருக்கு! அவன் ஒடம்பசையாமே ஒவ்வொரு தீபமா எடுத்து அம்மனுக்குக் காட்றபோது எனக்கு என்னமோ கல்பூரம் கொழுந்துவிட்டு அசையாமே அலுங்காமே எரியறதே, அந்த ஞாபகம் வந்துடுத்து. தம்பிகூட பம்பரத்தே விட்டுட்டு, ‘அக்கா பம்பரம் தூங்கறது பார் அக்கா!அப்படிம்பன்! அதுமாதிரி, உடம்பையும் மனசையும் அப்படி இப்படி போகவொட்டாமல் வசப்படுத்தி ஒரே நிலையா…பார்த்தா, என்னமோ ஒருவிதமான பீதிகூட உண்டாகிறது.
என் மனஸுக்குத்தான் அப்படித் தோணித்தோ என்னமோ தெரியல்லே… கும்பவிளக்கு, ரதவிளக்கு, நக்ஷத்ர விளக்கு, இதெல்லாம் ஒவ்வொண்ணா எடுத்துக் காட்ற போது என் பேரத்தான் ‘விலாஸினி’ன்னு காதிலே எழுதர மாதிரி இருந்தது.
கடைசியில் எல்லாருக்கும் குங்குமம் குடுத்தான். என் கிட்ட வரபோது, ஒரு ரெண்டு விநாடி அப்படியே அசை யாமே நின்னான். அந்த ரெண்டு விநாடியும் ரெண்டு யுகமா யிருந்தது. எனக்கு ஒண்ணுமே தோணல்லே. தலையேக் குனிஞ்சுப்பிட்டேன். ஆனா முடியல்லே. ஏதோ பிடிச்சு இழுக்கிற மாதிரியிருந்தது. மறுபடியும் தலைநிமிர்ந்து போச்சு. அப்பா! அவன் ரெண்டு கண்ணும் ஊசிமுனை மாதிரி பளபளன்னு எப்படி ஜொலிச்சுது! என்னை அவன் பார்க்கற மாதிரியே இல்லை. ஏதோ எனக்குத் தெரியாமே, எனக்குள்ளேயிருக்கும் எதையோ அவன் வெட்ட வெளிச்ச மாப் பார்க்கற மாதிரியிருந்தது! என்னையே மறந்துட் டேன். அப்படி எத்தனை நாழியிருந்தேனோ தெரியாது குஞ்சிரிப்பா சிரிச்சுட்டு, குங்குமத்தே குடுத்துட்டுப் போயிட் டான். நானும் சரசரன்னு ஆத்துக்கு வந்துட்டேன்.
அப்போ மொதக் கொண்டு மனசு சரியில்லே. அவன் சிரிப்பும், அவன் பார்த்த பார்வையும், அப்படியே முன்னாலே வந்து நிக்கறது. ஏதாவது புஸ்தகத்தே எடுத்துப் பார்க்கலாம்னா, நடுவிலே வந்து மறைச்சிண்டு நிக்கிறது.
சித்திரை 13: நேத்திக்கு ஒண்ணு நடந்துடுத்து, நான் என்ன செய்யப்போறேன்? பார்க்கறவா என்ன சொல்லுவா? ஆனா என் மனசு ஒரே கொந்தளிப்பிலே நிற்கிறது.
நேத்து சாயந்தரம் இத்தனை நாழிதான் இருக்கும், நன்னா இருட்டுக் கவிஞ்சுபோச்சு. கையெழுத்துக்கூட மறைஞ்சுடுத்து.நக்ஷத்ரம்,ஒவ்வொண்ணா, ‘மினுக்மினுக்’ குன்னு வந்துடுத்து. நான் ஜன்னலண்டை நின்னுண்டு ஏதோ குருட்டு யோசனை பண்ணிண்டு ஆகாசத்தே பார்த் துண்டு இருந்தேன்.
திடீர்ன்னு யாரோ செவரேறி ‘பொத்’துன்னு குதிக்கர சத்தம் கேட்குது. அடுத்த நிமிஷம் அவன் என் முன்னா வந்து நின்னான்.
எனக்கு ‘திடுக்’குனு தூக்கிவாரிப் போட்டது.அவன் தோள்பட்டையிலே தொங்கிண்டிருந்த நைவேத்ய மூட்டை யும், அவன் சுருட்டை மயிரும், அவன் தாடியும், அவன் சிலை யடிச்சு வச்சாப்போல அசையாமே, அலுங்காமே, கற்பூரக் கொழுந்து மாதிரி நிக்கறதும்,
இதுமாதிரி எத்தனை நாழி நின்னுண்டிருந்தோமோ தெரியாது, என் மனஸிலே எண்ணாத எண்ணமெல்லாம் தோணித்தோணி மறைஞ்சுது. இருந்தாப்போல இருந்து, என் பக்கமா மெள்ள வர ஆரம்பிச்சான்.எனக்கு அப்படியே அடிவயத்தே சுருட்டிண்டுது. “ஐயையோ!” என்றேன். ஆனால் நான் சொன்னது எனக்குத்தான் கேட்டிருக்கும். மத்தவாளுக்குக் கேட்டிருக்குமோ கேட்டிருக்காதோ, என் தொண்டையெல்லாம் அடைச்சுப் போச்சு.
சிரிச்சுண்டே வந்தான்.திடீர்னு கையைப் பிடிச்சான். ‘குப்’னு நேக்கு வேர்வை விட்டுப்போச்சு. அடப்பாவி! இன்னுண்டு கையை ஒதறினேன். அவன் விடவே இல்லை இன்னும் நன்னா அழுத்தமாப் பிடிச்சுண்டுட்டான்.
“நீ சொன்னா நான் நம்புவேனா என்ன? உன் கண்ணு தான் தனியா பேசறதே!” இன்னுண்டே சிரிச்சான். எனக்கு ஒடம்பு வெடவெடன்னு ஒதற ஆரம்பிச்சுடுத்து
“விலாஸினீ! இன்னு உள்ளேருந்து குரல் கேட்டுது. நான் என்னத்தே பண்ணுவேன்?
“அவா வந்துட்டாடா, விட்டுட்றா, விட்டுட்றா!” இன்னு கெஞ்சினேன். அவன் கொஞ்சங்கூட சட்டையே பண்ணல்லே.
“நாளைக்கு இத்தனை நேரத்துக்கு வருவேன்” இன்னான்.
“விலாஸினீ!”
‘ஐயையோ!’ன்னுண்டு கையை ஒதறினேன்
“சொன்னாத்தான் விடுவேன்! இன்னு கையைப் சைஞ்சான். தப்பிச்சாப் போரும்னு ஆயிடுத்து.
”ஆகட்டும்” இன்னுப்பட்டேன்.
உடனே கையை விட்டுவிட்டு, திடீர்ன்னு கையை நீட்டி கழுத்தை வளைச்சுப் பிடிச்சு இழுத்து வாயிலே ஒரு முத்தம் குடுத்துட்டு. மின்னலா மறைஞ்சுட்டான். அப்படியே, பழுக்கப் பழுக்க நெருப்பை வாயிலே வெச்சமாதிரி இருந்தது. மூர்ச்சை போட்டமாதிரி ஆயிடுத்து.
எப்படியோ சமாளிச்சுண்டு உள்ளே போனேன். பலகயேப் போட்டுண்டு அவர் சாப்பட்றத்துக்கு ஒக்காந்துண்டிருந்தார். அவர்கூட என்னிக்கும் ஒண்ணும் கேக்காதவர், என் மூஞ்சியேப் பாத்துட்டு “என்ன உடம்பு உனக்கு?’ன்னு கேட்டுட்டார்.
“ஒண்ணுமில்லே”ன்னு ஏதோ சொல்லிப்புட்டேன். வரவர, ஏற்கனவே உடம்பு பூஞ்சையொன்னோ, ஒண்ணுமே தாங்கரதில்லே.
ஐயையோ, நான் என்னத்தே பண்ணுவேன், இவர்கூட என்னை இன்னும் சரியாத் தொட்டதில்லே, இந்தப் பேர் ஊர் தெரியாதவன் இவன் என்னை இப்படிப் பண்ணிட்டானே!
அதுக்குத் தகுந்தமாதிரி, என் மனஸிலேயும் ஒரு தனித் தாண்டவம் ஆட்றதே! ‘நாளைக்கு வா’ன்னு கூட அவனுக்கு இடத்தேக் குடுத்தூட்டேனே!
சித்திரை 14: அம்மா! நான் என்னத்தே சொல்லப் போறேன்? நான் நேத்திக்கிருந்த மனஸு சந்தோஷமென்ன இப்போ இருக்கிறது என்ன? படுத்த படுக்கையாய் இருக்கேன். தலையிலே ஐஸ் வெச்சிருக்கு! அம்மாடி. என்னைத் தேவிகூட கைவிட்டுட்டாளே! நான் என்ன செய் வேன்! தெய்வத் துணையே இல்லாட்டா நான் எங்கே போவேன்?
நேத்திக்கி எவ்வளவோ என் மனஸிலே வளைச்சு வளைச்சு புத்தி சொல்லிண்டுங்கூட, சரியா அவன் சொன்ன வேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே ஜன்னலண்டை வந்து நின்னுண்டுட்டேன். என்னாலே சாத்தியப் படலெ ரொம்ப நாழியாகக் காத்துண்டு இருந்தேன்.அவா கூட வந்து சாப்பிட்டுட்டு ஆபீஸ் ரூமுக்கும் போயிட்டா. அவன் வரல்லே. திடீர்ன்னு வலக்கண்ணும் வலது தோளும் துடிச்சுது. அப்பறம் எனக்கு இருப்பே கொள்ளலே. கோவிலுக்குப் போறேன்’னு. தாவாரத்திலே இருந்த படியே அவர்கிட்டச் சொல்லிண்டு, நான் கோவிலுக்கு ஓடினேன்.
நான் உள்ளே நுழையரத்துக்குச் சரியா, திரையை திடீர்ன்னு விலக்கி கற்பூர ஹாரத்தி காண்பிச்சான். பளிச் சுன்னு ஒரே ஜகஜ்ஜோதியா அம்பாள் மின்னினாப்போலே இருந்தது. எனக்கு அப்படியே மயிர் சிலிர்த்துப்போச்சு. அவன் திடீர்ன்னு தாம்பாளத்தே கீழே போட்டுட்டு, “ஹா! கர்ஜித்துண்டு ஆட ஆரம்பிச்சுட்டான். ஆவேசம் வந்து டுத்து, கையும் காலும் பறக்கறது. மூஞ்சி ஒரே ரத்தச் சிகப்பா போயிடுத்து. மூஞ்சியிலே ஒரு தனி தேஜஸ் வந்து டுத்து! நன்னா அரை அங்குல தடுமனுக்கு இருந்த திரையை அனாயாசமா நார்மாதிரி கிழிச்சிப்பிட்டான். ஒரே ருத்தரா காரமா எல்லாத்தையும் த்வம்ஸம் பண்றமாதிரிக் கிளம் பிட்டான். நாலு பேராச் சேர்ந்து கட்டிப் பிடிச்சும் போறல்லே. அப்பறம் யாரோ, நன்னா ஒரு அரையணா கல்பூரம் இருக்கும் ஏத்திண்டு வந்து காண்பிச்சா. அதை அப்படியே முழுங்கிட்டான். அப்பவே ஆவேசம் தணிஞ்சு போச்சு. உடனே களை போட்டுத்து. உடம்பு மூஞ்சியெல் லாம் ஜலப்பிரளயமாய்க் கொட்டிப்போச்சு. அப்படியே தொவண்டு கீழே விழுந்திட இருந்தான். அதற்குள்ளே ரெண்டுபேர் அணைச்சுண்டா. என்னையறியாமே நானும் பிடிக்க ஓடினேன். அப்போதான் அவன் என்னைப் பார்த் தான். அவன் முகம் தனியா மலர்ந்தது. சிரிச்சான். அம்மா ! முத்துக் கோத்தாப்பலே, அவன் பல்லு பளபளன்னு என்னம்மா மின்னித்துடி! அவனைக் கொண்டு போயிட்டா. நானும் ஆத்துக்குத் திரும்பிட்டேன்.
என் மனஸிலே அவன் மூஞ்சி என்னேப் பார்த்ததும் மலர்ந்ததையும், அவன் பிரியமா சிரிச்சதையும் நினைக்க நினைக்க ஆனந்தமாயிருந்தது. சாதம்கூட வேண்டியிருக் கலே. பேசாமே போய்ப் படுத்துண்டுட்டேன். மணி பன் னண்டு ஆனப்பறம்தான் கொஞ்சம் கண் அசந்தேன்.
ஐயோ! ஒரு கனாக் கண்டேன்.
எங்கேயோ இப்டீ போறமாதிரியிருக்கு. எங்கே பார்த்தாலும் வயலும் பச்சைக் கதிருமா ரமணீயமாயிருக்கு திடீர்ன்னு ஆகாசத்திலே, கருப்பா ஒரு மேகம் கிளம்பி உருண்டு திரண்டு என் முன்னாலே வந்து நின்னுது, கொஞ்சம் உண்ணிப்பாப் பார்த்தேன். கோவில்லே பார்த் தேனோ, அப்படியே ஜகதீஸ்வரி வந்து நின்னா. காதுலே குண்டலம்; க்ரீடத்திலே இருக்கிற ரத்தனமெல்லாம் திடு திடுன்னு நெருப்பு எரியறமாதிரி இருந்தது. ஒரு கையிலே சூலம். ஒரு கையிலே கபாலம், காலாலே மகிஷா சூரனை மிதிச்சுண்டு இருந்தா.
என்னேப் பார்த்ததும் அவள் பச்சை முகம் கறுத்தது.
‘அடியே! பாபீ!’
நான் அப்படியே நடுநடுங்கிப் போயிட்டேன்.
“தாயே! நான் என்ன பண்ணிப்புட்டேன்” இன்னு அலறினேன்.
“என்னவா பண்ணிப்பிட்டே ஒனக்கு என்ன தைரியண்டி! கொண்டவனை மறந்துட்டது போறாதூன்னு, ஆ? அதுவும் என் பக்தனை – பச்சைக் குழந்தையை… இன்னு கத்திண்டே கழுத்தை நெறிக்கராப்போல கையை வச்சிண் பக்கத்திலே வந்துட்டா.
‘க்ரீச்’ இன்னு நான் போட்ட சத்தத்துலே, அவாகூட ஆபீஸ் ரூமிலேருந்து அலறிப் புடைச்சுண்டு ஓடிவந்தார். அப்புறம் என்ன நடந்துதோ எனக்கு ஞாபகமில்லே. மறுபடி யும் நினைப்பு வந்தப்போ கட்டில்லே கிடக்கிறேன். தலைல ஐஸ் வச்சிருக்கு. டாக்டர் பரீக்ஷை பண்ணிப்பிட்டுப் பக்கத்து ரூமுக்குப் போயிருக்கார். இவாளுங் கூடப்போனா என்னமோ, ‘க்ளைமேட், ஹீட், ஸ்பாயில் ஆயிடுத்து, ஸ்ட் ரோக், டேஞ்சரஸ்”ன்னு ஏதேதோ வார்த்தை கேட்டுது.
இவா மறுபடியும் வந்து ஒக்காந்தபோது, மூஞ்சி மாறி யிருந்தது. ஆபீஸ் ரூமுக்குக்கூடப் போகல்லே. பக்கத்தி லேயே ஒக்காந்துண்டு என் நெத்திலே கையை வெச்சிண் டிருந்தா. இப்போத்தான் சாப்பிடப் போனா..
பராசக்தி நான் என்ன பண்ணுவேன், நீ கூட என்னை எதிர்த்திண்டா?
சித்திரை 15: காலை 8.30. மணி ஊர்லேருந்து அம்மா, அப்பா எல்லாரும் வந்துட்டா. யார் வந்து என்ன?
ராத்திரி 9.30: இன்னிக்கி சாயந்தரம் ஒண்ணு கேள்விப் பட்டேன். அவனுக்குப் பைத்தியம் பிடிச்சுடுத்தாம். வரவா போறவா எல்லாரையும் கட்டிக் கட்டி முத்தமிடறானாம். செவிரு, ஜன்னல் நாற்காலி,தரை எல்லாங்கூட! டாக்டர். அவன் வீட்டிலேயே பரம்பரையாக் கொஞ்சம் மூளைக் கோளாறு உண்டுன்னார், ஏதோ பேச்சு நடுவிலே.
சித்திரை 16: காலை 8.30. அவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாளாம். அடப்பாவி! நீயும் மோசம் பண்ணிப்பட்டையா?
சித்திரை 17: காலை 8.30. என்னால் எழுத முடியல்ல! கை வெடவெடங்கறது. கோணக்கோண இழுக்கிறதே!
ராத்திரி – 9.சத்தே தேவலை.
சித்திரை – 18. நேத்து ராத்திரி சொப்பனங் கண்டேன், தேவி சூலத்தையெடுத்து என் மாரிலே பொறித்தமாதிரியிருந்தது. இனிமே சந்தேகமில்லை…
– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.