ஜுனைத்தின் குருநாதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 2,609 
 
 

சூஃபி மெய்ஞானிகளில் தனித்துவமான பலர் உள்ளனர். அவர்களில் ஜுனைத் குறிப்பிடத் தக்கவர். அவரது வாழ்வில் நடந்த பல சம்பவங்களும் மிக மாறுபட்டவை.

அவரது குருநாதர் யார், அவரது பெயர் என்ன என்பது சரிவர அறியப்படவில்லை. இது பற்றி பல விதமான கதைகளும் நிலவுகின்றன. அவருக்கு ஒரு குருநாதர் இருந்தார் என்றும், ஒன்பது ஆண்டுகள் கடுமையான சோதனை மற்றும் காத்திருப்புக்குப் பிறகே அவர் ஜுனைத்தை சீடராக அங்கீகரித்தார் என்றும் ஒரு கதை உள்ளது. ஆனால் சில இடங்களில் ஜுனைத்தின் குருநாதர் யார் என்பது அறியப்படாதது எனக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான இந்தக் கதை மிக முக்கியத்துவமும், தனித்துவமும் வாய்ந்த ஒன்றாகும். குருநாதரைத் தேடுதல், குருவிடம் கற்றுக் கொள்ளல் என்பது பற்றி நாம் எத்தனையோ கதைகளைக் கேட்டிருப்போம். அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை இது. யாரை குருவாக ஏற்பது, அவரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது என்பது பற்றி நமக்குள் இதுவரை பதிந்திருக்கும் அத்தனை ஞான தரிசனங்களையும் ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிடக் கூடிய மகா தரிசனம் இது என்று சொல்லலாம்.

ஜுனைத் தனது அந்திம காலத்தில், மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது அவரது சீடர்கள் அவரை அணுகி, “எங்களுக்குள் பல ஆண்டுகளாக இருந்து வரும் கேள்வி இது. தங்களின் குருநாதர் யார்? அவரைப் பற்றியும், அவரிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றியும் எங்களுக்கு சொல்ல வேண்டுகிறோம்!” என்று கேட்டுக்கொண்டனர்.

ஜுனைத் சொன்னார்:

“எனக்கு ஒரு குருநாதர் மட்டுமல்ல; அனேக குருமார்கள் உள்ளனர். மேலும் எனக்கான பாடங்களை நான் ஞான நூல்களிலிருந்தும், ஞானிகளிடமிருந்தும் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களில் இருந்தும், பல்வேறு சாமான்ய மனிதர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். அதில் எனது மூன்று குருநாதர்களைப் பற்றி மட்டும் இப்போதைக்கு சொல்கிறேன்.

“எனது முதல் குருநாதர், ஒரு நாய். ஒரு முறை காட்டுப்பாங்கான பகுதியில் நடைப் பயணம் மேற்கொண்டிருந்தேன். மிகுந்த தாகமாக இருந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு வழியில் ஓர் ஆறு தட்டுப்பட்டது. எனது பிச்சைப் பாத்திரத்தில் நீரை அள்ளிக் குடிப்பதற்காக சென்றேன். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நாய், ஆற்றில் பாய்ந்து, தண்ணீரைக் குடித்தது. அதைக் கண்டதும் எனது தலைக்குள் மின்னல் வெட்டியது போல் ஓர் உணர்வு.

நம்மைப் போல் கைகள் இல்லாத அந்த நாயே, பாத்திரம் எதுவும் இல்லாமல் நீரைப் பருகவும், உணவு உண்ணவும் செய்கிறது. அப்படி இருக்கும்போது, மனிதனான எனக்கு எதற்கு இந்தப் பிச்சைப் பாத்திரம் என்று தோன்றவே, அந்தப் பாத்திரத்தை வீசி எறிந்துவிட்டேன். அதன் பிறகு நானும் ஆற்றில் குதித்து, வேண்டு மட்டும் நீரை அள்ளிக் குடித்தேன். குடித்த நீரால் எனது தாகம் அடங்கியதோடு, ஆற்றில் உடல் முழுக்க நனைந்ததால் உடலும் குளிர்ந்தது. அந்த நாயின் கால்களைத் தொட்டு வணங்கி, “நீதான் என்னை முழுமையான துறவியாக ஆக்கினாய்!” என்று, அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன். அந்த நாய்தான் எனது முதல் குருநாதர்.

“எனது இரண்டாவது குருநாதர் ஒரு திருடன். நான் நாடோடியாகத் திரிந்துகொண்டிருந்த ஒரு சமயத்தில், ஒரு நாள் இரவு, நான் ஒரு ஊரைக் கடந்துகொண்டிருந்தேன். அப்போது நள்ளிரவு நேரம். ஊர் அடங்கி இருந்தது. நான் மிகவும் களைத்திருந்தேன். எங்கேனும் படுத்து உறங்க எனக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. யாரிடமாவது இடம் கேட்கலாம் என்றால், மக்கள் அனைவரும் அவரவர் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்தனர். என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தபோது எதிரே ஒரு மனிதன் வந்தான். அவனிடம், “இன்று இரவு தங்கி உறங்குவதற்கு எனக்கு ஓர் இடம் வேண்டும்; கிடைக்குமா?” என்று கேட்டேன்.

“உங்களது ஆடைகளையும், உருவத்தையும் பார்த்தால், நீங்கள் ஒரு சூஃபி துறவி போல் தெரிகிறது. நீங்கள் என் வீட்டில் தங்கலாம். நான் தனியன். இருவருக்குப் போதுமான இடமும், சௌகரியங்களும் எனது வீட்டில் உள்ளன. இன்று மட்டுமல்ல; நீங்கள் விரும்பினால், எத்தனை நாட்கள், மாதங்கள் வேண்டுமாயினும் என்னோடு இருக்கலாம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்! மேலும், நம் இருவருக்குப் போதுமான உணவையும் நானே சம்பாதிப்பேன். அதனால் அது பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை” என்று கூறிய அவன், “இருந்தாலும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டும். நான் ஒரு திருடன். எனது வீட்டில் தங்குவது உங்களுக்குப் பிரச்சனை இல்லை என்றால், இப்போதே உங்களை மகிழ்ச்சியோடு எனது வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்!” என்றான்.

“ஒரு திருடன் வீட்டில் தங்குவதா என்று எனக்கு உறுத்தல். “உனது தொழில் நியாயமானது அல்ல. எனவே, உன்னோடு தங்குவதற்கு எனக்கு விருப்பம் இல்லை!”

“அவன் உரக்கச் சிரித்தான். “வாஸ்த்தவத்தில், உங்களைக் கண்டு நான்தான் பயப்பட வேண்டும்! ஆனால், நீங்கள் என்னைப் பார்த்து தயங்குகிறீர்கள். உங்களை நான் இல்லத்திற்கு அழைத்துச் சென்றால், உங்களுடைய போதனைகளால் என்னை நீங்கள் மாற்றிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தும் கூட, நான் உங்களை வீட்டுக்கு அழைக்கிறேன். காரணம், உங்களால் என்னை மாற்றிவிட இயலாது என்கிற என்னுடைய மன உறுதி. ஆனால் நீங்களோ, நான் ஒரு திருடன் என்பதற்காக என்னுடன் தங்குவதற்குத் தயங்குகிறீர்கள். நீங்கள் ஒரு துறவி. பற்றற்றவர். உங்களை இந்த உலகத்தில் உள்ள எதுவும், யாரும் பாதித்துவிட முடியாது. உங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. நீங்கள் யாருடன் பழகினாலும், யாருடன் தங்கி

இருந்தாலும், உங்களைப் பற்றி யாரும் தவறாக நினைக்கப் போவது இல்லை. உங்களுக்கு அதனால் எந்தக் குறைவும், மதிப்பிழப்பும் வந்துவிடாது. அப்படி இருந்தும் நீங்கள் என்னுடன் தங்கத் தயங்குகிறீர்கள் என்றால், அது உங்களுடைய உறுதியின்மையைத்தான் காட்டுகிறது.”

“அதைக் கேட்டதும் என் மனம் தெளிந்தது. நான் அவனுடன் செல்ல சம்மதித்தேன். அன்றிரவு மட்டுமன்றி, அவனது வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு மாத காலத்திற்கு மேலாக அவனோடு தங்கினேன்.

“அவன் உறுதியானவன் என்பதால், திருட்டுத் தொழில் தவறானது என்பது பற்றி நான் அவனுக்கு எந்த போதனையும் செய்ய முற்படவில்லை. நான் காலையில் எழுந்து மக்களுக்கு போதிக்க சென்றுவிட்டு, இரவில் அவனது வீட்டிற்குத் திரும்புவேன். அவன் பகல் பொழுதில் தூங்குவான். இரவில் திருடச் சென்று, மறு நாள் காலையில், நான் விழித்தெழுகிற நேரத்தில் வந்து சேர்வான்.

“நான் சென்ற நாளிலிருந்து அவனுக்குத் திருடுவதற்கு பணமோ பொருளோ எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் அவன் தனது தொழிலுக்குக் கிளம்பும்போது, “இன்றைக்கு எப்படியும் ஏதேனும் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டுச் செல்வான். மறுநாள் காலையில் அவன் வெறுங்கையோடு திரும்புவதைப் பார்த்து, “இன்றைக்கும் ஒன்றும் கிடைக்கவில்லையா?” என்று கேட்பேன். “இன்றைக்குக் கிடைக்காவிட்டால் என்ன! கடவுளின் சித்தம் அதுவாக இருக்கிறது! அவர் நாளைக்கு நமக்கு வேண்டியதை தருவார். கடவுள் விரும்பினால் எதுதான் நடக்காது?’ என்று சொல்வான்.

“ஒரு மாதமாக அவனுக்கு எதுவுமே கிடைக்காதபோதும், அவன் சற்றும் மனம் தளரவில்லை. கடவுள் மீதிருந்த நம்பிக்கையைக் கைவிடவுமில்லை. இது எனக்கு பெரும் படிப்பினையைத் தந்தது.

“உண்மை மற்றும் கடவுள் குறித்த தேடலில் நான் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தேன். எனினும் திருப்திகரமான ஒரு பதிலையோ, ஞானத்தையோ நான் அடைந்திருக்கவில்லை. உண்மை பற்றியும் கடவுள் பற்றியும் சொல்லப்படுகிறவற்றின் மீது எனக்கு அவ்வப்போது பல வித சந்தேகங்களும் வந்தன. எனது வாழ்விலும், உலகத்திலும் நடக்கும் பல சம்பவங்களைப் பார்க்கும்போது, உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்கிற கேள்வியும் கூட அவ்வப்போது வரும். பொய்மை, ஏமாற்று, பொறாமை, வஞ்சகம், துரோகம் முதலிய துர்குணங்கள் நிறைந்த இந்த உலகத்தைப் பார்க்கும்போது, உண்மை, மெய்மை ஆகியவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லையோ என்றும் நினைப்பேன். ஆனால், திருடனின் உறுதிப்பாடு என்னை வியக்கச் செய்தது; உண்மையான நம்பிக்கை என்றால் என்ன என்பதை எனக்கு ஆழமாக உணர்த்தியது.

“இழிவான தொழில் செய்யக்கூடிய அந்தத் திருடனே, கடவுளிடம் இவ்வளவு நம்பிக்கையோடு இருக்கும் போது, கடவுளைத் தேடும் ஞான மார்க்கத்தில் உள்ள நான், எவ்வளவு நம்பிக்கையோடு இருக்கவேண்டும் என்பதை ஆழமாக உணர்ந்து கொண்டேன். அந்தத் திருடனின் பாதங்களைத் தொட்டு வணங்கி,

“நீ எனது இரண்டாவது குருநாதர்!” எனக் கூறி, அவனிடமிருந்து விடை பெற்றேன்.

“எனது மூன்றாவது குருநாதர் ஒரு சிறுவன். ஓர் இரவில் நான் ஒரு சத்திரத்தில் தங்க நேர்ந்தது. அங்கே ஒரு சிறுவன், மெழுகுவர்த்தி ஏற்றி, கொண்டு வந்தான். அப்போது அவனிடம் வேடிக்கை செய்வதற்காக, “இந்த வெளிச்சம் எங்கே இருந்து வந்தது?” என்று கேட்டேன்.

“அந்த சிறுவனோ, “சற்று பொறுங்கள்!” என்று சொல்லி, மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு, “இப்போது அந்த வெளிச்சம் எங்கே சென்றது? அது எங்கே சென்றிருக்குமோ, அங்கே இருந்துதான் அது வந்தது!” என்று சொன்னான்.

“மிகப் பெரும் ஞானிகள் கூட சொல்லாத ஆழ்ந்த பேருண்மையை, அந்த சிறுவன், மிக அனாயசமாக எனக்கு உணர்த்திவிட்டான். விளையாட்டாக நான் கேட்ட கேள்விக்கு, அவன் வினயமாக பதில் சொன்னது, என்னை பேராச்சரியப்படுத்தியது.

“அவன் சொன்ன உண்மையில் இருக்கும் தத்துவத்தை மட்டுமன்றி, இன்னொன்றையும் கூட நான் உணர்ந்து கொண்டேன். குழந்தைதானே, சிறுவர்கள்தானே என்று எண்ணி, நாம் யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. பெரியவர்களுக்கும், மிகப் பெரும் ஞானிகளுக்கும் கூட தென்படாத உண்மை, ஒரு சிறுவனுக்கோ, குழந்தைக்கோ மிக எளிதாகத் தென்பட்டுவிடக் கூடும்.

“நான் அந்த சிறுவனின் பாதங்களையும் தொட்டு வணங்கி, ‘மிகப் பெரும் பேருண்மையை எவ்வளவு எளிதாக நீ எனக்கு உணர்த்திவிட்டாய்! நீ எனது மூன்றாவது குருநாதர்’ என்று சொன்னேன்!” என முடித்தார் ஜுனைத்.

பெரும் ஞானங்களும், படிப்பினைகளும், மாபெரும் சம்பவங்களிலிருந்தோ, ஞான நூல்களில் இருந்தோ மட்டும் கிடைப்பதில்லை. சாதாரணமான வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தே கூட அரிய படிப்பினைகள் நமக்கு கிடைக்கும். அதே போல, மிக சாமானிய மக்களிடமிருந்தும், சிறுவர்கள் – குழந்தைகள் போன்றவர்களிடமிருந்தும், பேருண்மைகளை நாம் அறிய நேரலாம். ஆனால், அவை பெரும்பாலும் வெளிப்படையாக இன்றி, உட்பொதிந்ததாகவே இருக்கும். நாம்தான் ஆழ்ந்து கவனித்து அறிந்தும், உணர்ந்தும் கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வோடு இருந்தால், நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு விஷயங்களிலிருந்துமே இது போன்ற உண்மைகளை தரிசிக்க இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *