ஜாக்டைசன்




(சுடலை நினைவுகள்)

அத்தனை பேரையும் எரித்துச் சாம்பலாக்கவும், சந்தடியில்லாமல் பூமியில் புதைத்து ஒழிக்கவும் மனிதர் மனிதருக்கேற்படுத்திய புனித இடம் அது. மேற்கே நெடுஞ்சாலையில் நெடுந்தூரம் ஓடினால் மார்க்கம் பெருவெல்லை முடிய ஸ்ரோவில் தெருத் தாண்டிய பெருவெளியில் அந்த மயானம் பெரிதாகத் தெரியும்.
நாடுகள் விட்டு ஓடோடி வந்து உயிர் தப்பினோம் பிழைத்தோமென மகிழ்ந்திருந்த பலரை அழித்துப் போட்ட அந்திம இடம். திசையறியாப் பறவைகள் சாம்பலாகும் இறுதிச் சரணாலயம்.
உயர்வு, தாழ்வற்ற, சாதி மதமற்ற எல்லோரும் சம மென்கிற சமரச இடமென்று இதையும் சொல்வார்கள் தான். அதில் நம்பிக்கையில்லை. ஆளணி உள்ளவன், பொருள் உள்ளவனுக்குத்தான் சுடலையிலும் அவனோ, அவளோ செத்த பிறகு கோப்பியும் மலர் மாலையும் கொஞ்ச நாள் தன்னும் வைப்பார்கள். பிறகு எல்லாம் மறந்து போகும்.
எரியூட்டப்பட வேண்டிய பூதவுடல் தாங்கிய கறுப்புக் காரைத் தொடர்ந்த வண்ணமிருந்தன funeral என்ற பதாகை குத்தப்பட்ட எமர்ஜென்சி லைற் மின்னிய படி ஊர்ந்து கொண்டிருந்த விலையுயர்ந்த கார்கள்.
ஆடம்பர கோட் சூட் அணிந்த வண்ணம் அந்த அகதிப் பழுப்பு நிறப் பூதவுடல் காரிலிருந்து இறக்கப் பட்டபோது பூக்கள் தூவி நிலப்பாவாடை விரித்து ரொறன்ரோவின் அகதிப்பெருமக்கள் மெளனமாக அதன் பின்னால் நடந்து கொண்டிருந்தார்கள்.
வரிசையாக வைக்கப்பட்ட மலர்வளையங்களில் தங்கள் தங்கள் பெயரை செத்த பிணம் எழுந்து பார்க்குமெனசாகப் போகிற பிணங்கள் பெரிய எழுத்துகளில் பொறித்து வைத்திருந்தார்கள்.
அவை வைக்கப்பட்டுச் சில மணி நேரத்தின் பின் அழகாக வாழ்ந்த மனிதன் செத்துத் சிதைந்து அழிந்துபோவதைப் போலவே இப்போ அவர்கள் வைத்த அந்த மலர் வளையங்களில் எழுதிய பெயர்களை குலைத்தெறிந்து அந்த மலர்வளைய மலர்களைப் பிடுங்கி அந்தப் பிணத்தின் காலடியில் வரிசையாக நின்று ஒவ்வொன்றாக வைத்தார்கள்.
பின் மெளனமாக எழுந்து நின்றார்கள்.
எழுந்து நிற்கும் ஒவ்வோர் மனதினுள்ளும் ஒவ்வோர் எண்ணம். ஆனால் எல்லோரையும் விடவும் இங்கே இறந்து கிடக்கும் நடேசனை மிகவும் நினைத்தது சல்வடோர் எனப்படுகிற ஜாக்டைசன் மனம்தான். பீட்சா, ரவியொலி, லசான்யா, கானலோனி, என்பவை மட்டுமல்ல பிலே மினியொன்(Filet Mignon) எனப்படும் மாட்டு இறைச்சியின் கொழுப்பற்ற அதிசயத்திற்காகவும் மக்கள் கூடுகிற இடம் அவன் உணவகம் தான். இத்தனை சிறப்பிற்கும் பின்னால் இறந்து கிடக்கிற நடேசின் உழைப்பு இருந்தது. நடேசு அவனது உணவகத்தில் தான் நெடுங்காலம் வேலை செய்தான். இத்தனை உணவு வகையையும் மிகுந்த சுவையோடு செய்ய வல்லவனாக இருந்தான் நடேசு.
புகைப் போட்டு உப்பில் பதனிட்டு பன்றி பேக்கன்களை உருவாக்கும் கலையில் நடேசுவை அடிக்க ஆளில்லை. மாமிச உணவுகளுக்கு இந்த உணவகம் தான் பெயர் எடுக்க வைத்தவன் நடேசன் . இன்று நடேசன் அற்ற பற்றாக்குறையோடு இருக்கிற தன் பிஸ்ஸா ஸ்ராண்டின் அவலத்தை நினைத்துக் கொண்டான் அந்த இத்தாலிய ஜாக்டாசன்.
ஜாக்டாசன் சிசிலியிலிருந்து வந்தவன். அவன் கட்டாணியாவூடாக நெடுந்தூரங் கடந்து கனடா வந்தது பெருங்கதை. அதற்குத் தனிப் புத்தகம் போதாது. உண்மையான அவனது பெயர் சல்வடோர். கனடா வந்த பின் அவன் தனக்கும், தன் உணவகத்திற்கும் வைத்த பெயர் ஜாக் டைசன். அவனைக் காண்பவர்கள் 1912 ஏப்ரலில் பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்த பயணிகள் கப்பலான டைட்டானிக்கை வைத்து எடுத்த படத்தின் கதாநாயகன் போன்றவன் நீ என்பார்கள். கடலினுள் மூழ்கி 1500 பேரைத் தின்ற அந்த ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் வந்த ஹீரோ ஜாக்டாசன் போலவே நீயும் இருக்கின்றாய் உன் உணவகப் பெயரும் அப்படியே இருக்கிறதென்பார்கள் அவனது உணவகத்திற்கு வந்து உணவு உண்பவர்கள்.. டைட்டானிக் கதாநாயகன் பெயரான ஜாக் டாசன் பெயரை தான் தனக்கு வைத்ததை நினைத்து அந்த இத்தாலிக்காரன் மகிழ்ந்து போவான். அவனை சிசிலியில் மாவியா என்றவர்களை இங்கே ஜாக்டைசன் என்று சொல்ல வைத்திருக்கின்றான் அவன். .. கடலினுள் மூழ்கியகப்பலையும், ஆயிரக் கணக்கானோர் அதில் இறந்து போன கதையையும், அதில் சோடிக்கப்பட்ட ஓர் காதலையும் மையமாகக் கொண்டு படம் பண்ணி பல கோடி மில்லியன் சம்பாதித்தவனைப் போன்றே அந்தப் பெயரை வைத்தே ஜாக் வாடிக்கையாளரை தன் உணவகத்திற்கு கவர்ந்திழுத்தான்..
இந்தக்கலை ஈழத்தில் போராளிகளின் பெயரையும் அவர்களின் சாகசங்களையும் சொல்லிப் பணம் சேரித்து புலம் பெயர் நிலங்களில் படங்காட்டி தாம் பிழைத்துப் போகிற எம் தமிழருக்கும் சரியாகப் பொருந்தும் கலை என நடேசு நினைத்தாலும் வெளியே சொல்ல முடியாது.
வேலை கேட்டுவந்த ஈழத்து அகதியான நடேசனுக்கு கோப்பை கழுவுவதிலிருந்து இறைச்சி வகை பிரித்துஉணவாக்கி, பிஸ்ஸா போடுவது வரை அனைத்தையும் பழக்கியெடுத்து ஓர் அடிமைப் பெருஉழைப்பாளியாகமாற்றிய பெருமைக் குரியவன் எஜமானன் ஜாக்.
நடேசு நம்பத் தகுந்த கடின உழைப்பாளி. எள் என்றால் எண்ணையாகி நிற்பவன்.
இப்போ அவனில்லை. இவனையொத்த ஓர் அடிமையை இனி எங்கு தேடுவது ?
எல்லாம் முடிந்து போனது. பெருமூச்சு விட்டான் ஜாக்.
கண்ணாடிச் சுவருக்கு பின்னே நின்று மற்ற உறவினரும், நண்பர்களும், கொள்ளி வைத்து நடேசன் எரிவதைப்பார்ப்பதற்கு அந்த மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
இந்த இறுதி எரிப்பு நடக்கும்போது இப்போதெல்லாம் ஒரு பாட்டைப் போட்டு விடுகிறார்கள்.
பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீயுண்டது என்றது சாம்பலும் இங்கே
இந்தப் பாடல் அவர்கள் கண்களைக் குளமாக்கி கவலைபோக்கும் மருந்தென்றோ அல்லது கவலையைவளர்க்கும் மருந்தென்றோ அவர்களுக்கு புரியாமலிருந்தது. எது எப்படியோ இத்தாலிக்காரன் உணவகத்தில்பாய்ந்து துளாவிய கை இனியில்லை.
உறவினர் ஐந்து பேரைப் பிணமெரிக்கும் அறையினுள் கூப்பிட்டு் பிணத்தை மின்சார அடுப்புப் போறணை வழியாக நடேசனின் சவப்பெட்டியை உள்ளே தள்ளச் செய்தபின் அதிலிருந்த உரிமைக்காரன் ஒருவனைபக்கத்திலிருந்த சிவப்பு பட்டனை அழுத்தும் படி சொன்னான் கோட்சூட் போட்டிருந்த சவக்காலை ஊழியன். பட்டனைத் தட்டியவுடன் சவப்பெட்டி லிவ்ற்றில் கீழிறங்கியது. அத்தோடு எல்லாம் சரி இனி அது கீழே மின்சாரப்பெருந்தீயில் வெந்து முடியும். நாளும் பிஸ்ஸா தீயில் வெந்தவனை தீ முற்றிலுமாய் எரிக்கிற வேளை இது.
ஈழத்திலிருந்து அகதியாக வந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இரண்டுங் கெட்டான் நடேசு.
ஈழத்து மயானங்களில் முன்பு இத்தனை வசதிகளில்லை. இப்போது உண்டா என நடேசு அறிந்திருக்கவும் இல்லை. வின்ரருக்கு ஜாக்கெட், சமருக்கு மெல்லிய பெனியனென காலத்திற்கு காலம் உடைமாற்றத் தெரிந்தநடேசனுக்கு தன்னுடலையும் ஒருநாள் இப்படி நெருப்புத் தின்று தீர்த்து விடுமென நம்பாமலிருந்து விட்டான்.
இந்த நாடுகளில் மின்சார அடுப்பில் எரிகிற சவப்பெட்டியும், புதைக்கிற சவப்பெட்டியும் எல்லோருக்கும்சமமானதல்ல. விரலுக்குதக்கன வீக்கம் என்றதைப்போல பணத்திற்குத் தக்கதே பெட்டி !
ஈழத்து மயானங்கள் ஊரைத்தாண்டி வெளியில் அடர்ந்த காட்டினுள், அல்லது பெருவெளியினுள் இருக்கும். அந்த மயானங்களில் எரிந்தும் எரியாத பிணங்களின் அப்பால் குரங்குகளும், மாடுகளும் குதூகலித்து ஓடும். காகங்கள் பறக்கும், வெட்டியான் என்று எவனும் அங்கு தனியாக இருக்க மாட்டான். சாமானியச் சனம்சுடலையில் பேய் நிற்கும் என்பார்கள். அச்சத்துள் யாரும் அதற்குள் செல்வதில்லை. தங்களது உறவுகள் எரிந்தஅல்லது புதைத்த சுடலையை ஈழத்துச்சனம் வெளிநாட்டுச் சுடலைப் பாராமரிப்பைப் போல புனிதமாகப்பாதுகாத்தவர்கள் என்றில்லை.
அவசரமாக அக்கிராமத்தில் யாரேனும் இறந்தால் வெட்டியானைப் போல ஒருவன் தானே உரிமை கொண்டாடிஎழுந்து நிற்பான். அவனோ செத்தவன் குடும்பத்தவர் கொடுக்கும் பணத்தில் குடிப்பதற்காக எல்லா வேலையும்தானே எல்லாம் அறிந்து செய்வதாக நாடகமிடுவான். கலியாண வீடுகள், மற்றும் கொண்டாட்டங்களில் தானேஎல்லாம் அறிந்த பெருஞ் சாணக்கியன் என்று தோளில் ஒரு கமராவைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அலைகிறகலகக்கார கமரா, வீடியோக்காரர்களைப் போலவே ஒவ்வொரு நிகழ்விலும் மூக்கை நுழைக்கிற ஓர்காரியவாதி ஊருக்கு ஊர், தெருவிற்குத் தெரு எங்குமிருக்கின்றான்.
அப்படித்தான் பிணத்தை எரிக்கப்போவதாக அந்தக் குடிகாரனும் அவன் நண்பர்களும் நிறை வெறியில்நிற்பார்கள்.
எடே அந்தோனி நாலு விறகு மேல எடுத்துப் போடு
நல்லா எரிஞ்சால்தான் நாளைக்கு காடாத்தலாம்…
அதெல்லாம் எரிஞ்சிரும் என்றபடியே ..விலகிப் போன நெஞ்சாங்கட்டைப் பெருங்குத்தியை பலங்கொண்ட மட்டும் தள்ளுவான் அந்தோனி..
பிறகு குந்தியிருந்து கள்ளோ, சாராயமோ குடித்து வெறியில் பெருங்குரலில பாடுவார்கள் .
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது – ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு
என்று பாடி விடிய விடிய வெறியில் எரித்த அந்த சடலத்துச் சாம்பலை நீரூற்றி அணைத்து விட்டு குடும்பத்தைக்கூட்டி வந்து சாம்பலையள்ளி கடலிலோ குளத்திலோ காடாற்ற வைப்பார்கள் இதுதான் ஈழத்து உள்ளூர் மயானத்தில் வழமையாய் நடக்கும்.
போர்ககாலத்தில் எரிக்கவும், புதைக்கவும் கூட முடியாமல் விழுந்த இடத்தில் பிணத்தை விட்டு ஓடிய கொடிய காலமும் உண்டு. அவர்களின் எலும்பும், சாம்பலும் எங்கு என்பதை யாருமறியார்கள். அவர்களை யார்காடாற்றினார்கள், அவர்களுக்கான நினைவிடம் எங்கேயென யாருக்கும் தெரியாது..
ஆனால் இங்கே இந்த வெளிநாட்டுப் பிணங்களுக்கு எரிக்கப்பட நல்ல இடம் இருந்தது. புதைபடப் போகிறஆட்களுக்கு புதைபடவும் இடம் உண்டு. புதைத்தவர்களுக்கு கல்லறையில்ப் பெயரெழுதி தூண்அமைப்பார்கள். எரித்தவர்களுக்கு இந்தப் பெயரெழுதுகிற வேலையில்லை. இந்த எரிப்பும், புதைப்பும், சாதிப்பிரிப்பும் மதந்தான் பிரித்து வைக்கிற தென்பார்கள் சிலர். ஆனால் இங்கு எல்லாம் பணந்தான்.
மின்சார அடுப்பில எரிகிற பெட்டியும், புதைக்கிற பெட்டியும் எல்லோருக்கும் சமமானதல்ல. விரலுக்குதக்கனவீக்கம் என்றதைப்போல பணத்திற்குத் தக்க பெட்டி !
காசுள்ள பணக்காரன், காசுள்ள அரசியல்வாதி, காசுள்ள இயக்க முதலாளி எனப் பணப்பிசாசுகளுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிலை வைத்து கல்லறை கட்டுவார்கள். ஏழை எந்தப் பெயருமற்றுச் செத்துமடிவான்., இப்படித்தான் நடேசனின் இந்தப் பிணத்தை சாதாரண சவப்பெட்டியில் வைத்தார்கள். பின்எரித்தார்கள். சில ஆயிரம் டாலர்களில் அந்த மரண சம்பவம் ஒரு திருவிழா போல நடந்து முடிந்தது. இனிஅவனது பிணத்தில் யாரும் பூ வைக்கப் போவதில்லை.
இதே ரொறன்ரோவில் கொரோனாக் காலத்தே பிணங்கள் தேடுவாரற்றுக் கிடந்தன. பிணங்களைப்புதைக்கவும், எரிக்கவும் சொந்தப் பிள்ளைகளே அஞ்சிய காலம். அங்கே உறவு தேடி மலர்வளையத்துள் பெயர்எழுதும் எவனும் அன்றைக்கு தம்மை உறவாகக் காட்டிக் கொண்டவர்களல்ல. இன்னார் செத்துப் போனான்என்று செய்தி கேள்விப்பட்டும் தெரியாதவர்களைப் போல இருந்தவர்கள்தான் இன்றைக்கு பெயரெழுதிமலர்வளையம் சுமக்கிற பல பேர்வழிகளும்..
கொரோனாக் காலத்தில் சவப்பெட்டிக் காரனுக்குத்தான் கொரோனா அள்ளிக் கொடுத்தது பெருங்கொடையை!!
ஏண்டா ..முந்தி நடந்தது மாதிரி இப்பெல்லாம் பொணம் விழுவதில்லையே, பாழாய்ப் போன நோய்நொடியெல்லாம் அதுக்குள்ளாகவே குறைஞ்சு போச்சா? என்று கொரோனாவின் போது சிறு சவப்பெட்டிதொழிற்சாலை வைத்திருந்த தம்பித்துரையின் வாக்குமாறிய தந்தை அடிக்கடி கேட்ட வண்ணமிருந்தான் .
இந்த தொழில்தான் வருமானமிக்க தொழில். நவீன மருத்துவம் ஆட்களை லேசில சாகவுடுகுதில்ல..
தம்பித்துரை மனதிற்குள் மறுகிக் கொண்டான்.
அந்தச் சுடலையில் பல நினைவுகளோடு தவித்தபடி நின்ற ஜாக் டைசன் கையை யாரோ இறுகப் பற்றினார்கள். திரும்பினான். பாஸ் என்று நடேசின் அதே பல்லிளிப்போடு நின்றான் ஓர் ஈழத்தவன்.
நான் நடேசன் ப்ரெண்ட் தான். அவன்தான் போயிட்டானே சார்.. அவனின்ர வேலையை எனக்கு தருவீங்களோ பாஸ் என்றான் அவன்.
இறந்த வீட்டிலேயே தன் போன்ற ஓர் அடிமையை ஜாக்கிற்கு வழங்கி விட்டான் நடேசு . ஓர் புறம் மகிழ்வாகவும் இருந்தது ஓர் புறம் கவலையுமாக இருந்தது ஜாக்டைசன் எனப்படும் சல்வடோருக்கு.