ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!




ஆம்பளைங்களா ! வயசாகிப் போனாலும் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருங்க. மீறினா அம்பேல், அம்புட்டுதான். என் இடத்துக்கு நீங்க வந்துடுவீங்க.
அனுபவப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோங்க.
நாமதான் எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சி 80 வயசாகி… இன்னையோ நாளையோன்னு பாயும் தலையணையுமாய் படுத்த படுக்கையாய் இருக்கோமே, போற போக்கிலேயாவது மனசுல உள்ள பாரத்தை இறக்கி வைச்சுப் போனா நமக்கும் சுமை இறக்கினத் திருப்தி. மனைவியிடமும் உண்மையைச் சொன்ன நிம்மதி. இத்தினி வயசுல இவ என்ன தாண்டி தோண்டியில விழுந்துடப்போறாள். அப்படி விழுந்தால்தான் என்ன வயசானக் கட்டை !ன்னு துணிஞ்சி…..
”மரகதம்! ”ன்னு என் பக்கத்துல உட்கார்ந்து கண்ணும் கருத்துமாய் பணிவிடைப் பண்ணி காலை இதமாய் அமுக்கிக் கொண்டிருந்த மனைவியை அழைச்சேன்.
அவள் தன் பணியை நிறுத்தாமல், ”என்ன ? ” கேட்டாள்.
”ரொம்ப காலமா என் மனசுல பூட்டி வைச்சிருக்கிற ரகசியத்தைச் சொல்றேன் கேட்டுக்கோ!” சொன்னேன்.
அப்பவும் அவள் தன் வேலையை நிறுத்தாமல் அனுசரணையாய், ”சொல்லுங்க ?” சொன்னாள்.
”ஒன்னுமில்லே…. நான் மாசத்துக்கு ரெண்டு நாள் புதுச்சேரிக்கு வியாபார விசயமாய் வேலையாய்ப் போறேன்னு போய் தங்கி வந்ததெல்லாம் பொய். அங்கே என் பழைய காதலியோட ரெண்டு நாள் குடும்பம் நடத்தி வந்ததுதான் உண்மை !” இதைத்தான் சொன்னேன்.
சொல்லி வாயை மூடின அடுத்த விநாடி கிழவி என் காலை அமுக்கின கையைப் படக்குன்னு நிறுத்தினாள்.
”அடப் பாவி மனுசா! இத்தினி நாளா ஏகப்பத்தினி விரதனாய் நடிச்சி என்னை ஏமாத்தினியே… நீ நல்லா இருப்பியா? ” ன்னு கத்தி சடக்குன்னு கால்ல இருந்த தலையணையை இழுத்து எடுத்து என் முகத்துல வைச்சி ஒரே அமுக்கு அமுக்கினா பாருங்க….கிழவி கைக்கு என்ன பலம் !
விலுக் விலுக்குன்னு ரெண்டே உதைப்பு. உசுர் போயிடுச்சு.
எமன் ஏட்டைக் கிழிச்சு இப்போ நான் சொர்க்கத்துல இருக்கேன். !!
அதனால அனுபவப்பட்டவன் என்கிற முறையில சொல்றேன். வயசானாலும் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருங்க. வயசானவள்தானே ஒன்னும் நடக்காது என்கிற நெனப்பு வேணாம்.
ஜாக்கிரதை !! ஜாக்கிரதை !!