ஜல சதுரங்கம்




(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாட்சி விசாரணைக்காக தென்காசி கோர்ட் வரை வந்துவிட்டு அருவியில் குளிக்காமல் போனால் எப்படி எனத் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் குமாரசாமி கடையில் போய் சாம்பிள் சோப்பும், அருவிக்கரைத் துண்டும் வாங்கிக் கொண்டு மலையை நோக்கிப் பயணித்தார். சாரல் காலமாதலால் எங்கும் தூவானமாயிருந்தது. வெயிலும் மழையும் பிணைந்த மதிய வேளையில் அருவியைக் கண்டபோது அது உருவிய வாள் போல வீழ்ந்துகொண்டிருந்தது. அருவியைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. சிறுவர்களும், நனைய நடுங்கும் இளம்பெண்களும் அவரைக் கடந்தனர். கேஸ் கட்டு, தொப்பி, காக்கி உடைகளைக் களைந்து மலைப்பொந்தில் திணித்துவிட்டு கரிய தன் வயிற்றைத் தடவியபடி அருவிக்குள் போய் நின்றார். தண்ணீர் பட்டதும் உடம்பு ஒடுங்குகிறதோ எனத் தோணியது. நூற்றுக்கணக்கான வெள்ளை, மஞ்சள் துகள்களாக மிதந்துகொண்டிருந்தது வெயில். அருகில் நின்று குளித்துக்கொண்டிருந்தவரின் உதடு ஏதோ கடவுளின் பெயரை முணுமுணுத்தபடியிருந்தது. தன்னிட மிருந்த சாம்பிள் சோப்பை முகர்ந்துவிட்டு உடலெங்கும் தேய்த்த படி அருவிக்குள் நகர்ந்தார். ஒரு வினாடி கையிலிருந்த சோப் நழுவி பாறைகளின் ஊடே வீழ்ந்து மறைந்தது. குனிந்து சோப்பைத் தேடினார். அருவியின் பின்புறமாகச் சுழித்தோடும் நீர் வழி எதிலோ சோப் நீந்திக்கொண்டிருக்க வேண்டும் என மிதந்த சோப்புக் குமிழ்கள் கூறின.
நடந்து அருவியின் பின்புறமாகச் சென்றார். வெற்றிடமும் பாசியேறிய பாறைகளும் நத்தைகளும் தெரிந்தன. சோப்பு நுரைகள் மிதந்து அவைகின்றன. பாறைப் பிளவுகளுக்குள் பாதையொன்று நீண்டு வளைவு கொண்டது. அதிலிருந்து தண்ணீர் தனது பல ஆயிரம் கால்களால் வெகு வேகமாக ஊர்ந்து வெளியே சென்றுகொண்டிருந்தது. சோப்பின் தடம் தெரிய வில்லை. உள்ளே நடந்து கொண்டிருந்தார். குகை போல வழி குறுகி தலை இடித்தது. நடந்து திரும்பியதும் எதிர்பாராத வெற்று வெளியொன்றும் அதன் நடுவே வட்டக்குளம் போல் நீர் தேங்கிய அமைப்பும் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது அவரது சோப் குளத்தின் நடுவில் மிதந்துகொண்டிருந்தது. எடுப் பதற்காகக் குனிந்தபோது அவர் முகம் பரப்பில் பிரதிபலித்தது. சுய அழகின் வயிப்பில் நிமிஷம் கழிந்து விடுபட, சோப் எப்படி மூழ்காமல் குளத்தின் நடுவில் மிதக்கிறது எனப் புரியாது யோசித்தார். திரும்பவும் குனிந்தபோது சலனமில்லாத அந்தப் பரப்பைக் கண்டார். அது தண்ணீர்தானா இல்லை கண்ணாடியா? பார்க்கப் பார்க்கக் கண்ணாடியாகவே தோன்றியது.
எப்படி இது சாத்தியம்? இத்தனைப் பெரிய கண்ணாடி கூட உலகிவ் இருக்க முடியுமா? இங்கே எப்படி வந்திருக்கும். யோசனை தப்பித் தப்பி மாறியது. ஒரு சிறு கல்லைத் தேடி எடுத்து சோப் இருந்த இடத்தருகே எறிந்தார். அக்கல் குபுக் என்ற சப்தத்துடன் குளத்தில் மூழ்கி அலையொன்றைக் குமிழிடச் செய்தது. கண்ணாடியில்லையா? தண்ணீர்தான் உறைந்து விட்டதா? குழப்பம் பற்றிக்கொள்ள மறு கல்லை எடுத்து மீண்டும் குளத்தின் வேறு இடத்தை நோக்கி எறிந்தார். அது மூழ்க வில்லை. சில்லென உடையும் சப்தம் உண்டாக்கி மேற்பரப்பில் மிதந்தது கல். குழப்பம் தீவிரமாக நாவைந்து கற்களை எடுத்து ஒருசேர எறிந்தார். மூழ்கவும் மிதக்கவும் செய்தன ஓரிரு கற்கள். திகைப்பின் கொடி சுற்றிய முகத்துடன் இது தண்ணீரா? கண்ணாடியா? என அறியாது நின்றார். எதுவாகவும் இருக் கட்டும். நம் சோப்பை எப்படி எடுப்பது என கவனம் திருப்பினார். மனம் விடுபட மறுத்தது. அந்த வட்டப் பரப்பிலே நின்றது. ஒருவேளை கண்ணாடியும் தண்ணீரும் பாளம் பாள மாகச் சேர்ந்து உருவான நீர்த்தளமோ! குளத்தினைச் சுற்றி வந்தார். அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போது தவளைக் குஞ்சு ஒன்று கல் மறைவினின்று தாவி பரப்பில் பிரதிபலித்தது. அலையெழுப்பி சோப் அருகே போய் நின்றது. இருநிலை கொண்ட பரப்பு இது என அவராகவே முடிவு கொண்டார். இனி இதில் எப்படி நடந்து போய் சோப்பை எடுப்பதாம்? கண்ணாடி வழியே சரியாகக் காலடி வைத்துப் போனால் எடுத்துவிட முடியாதா சோப்பை. யோசனையின்றி குளப்பரப்பில் முதல் காலடி எடுத்து வைத்தார். பாதம் பிரதிபலிப்பு கொண்டது. கால் ஊன்றி நின்றபோது மூழ்கவில்லை. அடுத்த அடி எப்பக்கம் வைப்பது என அறியாது மறு காலால் இடம் தேடினார். பாதம் படும் இடமெல்லாம் நீர் ஸ்பரிசம் அறிய முடிந்தது. தவளைக் குஞ்சு அவரைப் பார்த்தபடியே இருந்தது. கண்ணை மூடியபடி காலை ஒரு இடத்தில் வைத்தார். அது கண்ணாடிப் பரப்பு. அதில் ஒரு காலை ஊன்றும்போது முந்தின கால் ஊன்றிய கண்ணாடிப் பரப்பு நீராகித் ததும்பியது. அவசரமாக காலை உருவிக் கொண்டார். இப்படியாக மூன்று அடிகள் நடந்து விட்டார். இன்னும் சில காலடிகளே மீதமிருந்தன சோப்பை எடுக்க. எதற்கோ திடீரென திரும்பிவிடலாமா என மருட்சி தோன்றியது. இது கண்ணாடியும் தண்ணீரும் இணைந்து உருவான ஜல சதுரங்கம். தான் தவறாக அடி வைத்துவிட்டால் மீள முடியாது என மனம் சொன்னது. அடுத்த அடியை முன் வைக்கக் கால் தொட்ட இடத்தில் விரல்கள் பிரதிபலித்தன. குதி தண்ணீரை உணர்ந்து. குழப்பத்தின் புகை சுழல நிலைதடுமாறி வீழ்ந்தார். மங்கிய சுழற்சியை அறிந்தார். உணர்வு கொண்டபோது குளம் இப்போது உருண்டையான கண்ணாடிக் கோளம் போலாகி அதனுள் அவர் வீழ்ந்து கிடப்பது தெரிந்தது. எழுந்து நின்றார். சோப் இப்போது கோளத்தின் வெளிப்புறப் பரப்பில் இருந்தது.
உருண்டையான சதுரங்கப் பலகையின் உள்புறம் அலையும் அவரை இப்போதும் தவளைக் குஞ்சு வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. இப்படியும் அப்படியுமாக உள்ளே நடந்தார். இதிலிருந்து எப்படி வெளியேறுவதாம். மனமயக்கம் தீராமல் இருந்தது.வட்டம் மெல்லச் சுருங்குகிறதோ எனத் தோன்றியது. இந்தக் கோளம் மெல்லச் சுருங்கிச் சுருங்கி, புள்ளி போலாகி விட்டால் நானும் சுருங்கித் தண்ணீர்த் துளியாகி விடுவேனோ. கோபமாகிக் கோளத்தினை பலமாகக் குத்தினார் கையால். அசை வில்லை. கோளத்தில் ஏதோ அசைவு தெரிந்தது. நகர்கிறதா? வெளியேயிருந்த தவளைக் குஞ்சு தாவியது. நகர்வு கொண்டது கோளம். இவ்விளையாட்டின் மீது ருசி கொண்ட தவளை உற்சாகமாகியது. கோளம் எதன் மீதாவது மோதினால் என்ன வாகும். பயம், கோபம் அவரிடம் அலைவீசத் தொடங்கின. தவளையின் நாட்டியத்தில் வேகம் கதி கொண்டது. அசைவு கொண்ட கோளம் எதனை நோக்கியோ நகர்ந்து சென்று மோதியது. புலனறியவில்லை. கண்விழித்தபோது தான் குளித்துக்கொண்டிருந்த இடத்தை விட்டுத் தள்ளி நின்றிருந்தார்.
உதட்டில் கடவுள் நாமம் முணுமுணுக்கும் நபர் இன்னமும் குளித்துக்கொண்டுதானிருந்தார். இது நிஜம்தானா? மாயப் பரப்பில் தான் இயங்கியது வாஸ்தவமா? புரியவில்லை. சுற்றிலும் பார்த்தார். அவர் காலடியிலிருந்து தவளைக் குஞ்சு ஒன்று மிரட்சியுடன் தாவிப் பாறையேறியது. வியப்பில் அருவிக் கரை வந்து நின்றபோது குரங்கு ஒன்று அவரது காக்கி உடை களைக் கவைத்தபடி அருவியைப் பார்த்துக்கொண்டிருந்தது. விரட்ட மனமற்றவராக குரங்கைப் பார்த்துச் சிரித்து வைத்தார் கான்ஸ்டபின் குமாரசாமி.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.