சோடனை





(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“உது கட்டைக் குருத்து வாறபருவம். அநியாயமா இப்ப வெட்டாதையடா!” என்றார் சோமர். மகனிடம்.

கொடுவாட் கத்தியும் கையுமாய் வாழையருகில் நின்ற சிவஞானம் திரும்பி “உப்பிடிப்பாத்தா, ஒரு வாழையும் வெட்ட ஏலாது. குறைஞ்சது ஆளுக்குப் பத்து வாழையாவது கொண்டுவரச் சொல்லியிருக்கிறான்கள்…” என்றான்.
“இப்ப உவனுக்கு என்னத்துக்காம் வாழை?” அடுத்த வீட்டு அம்பாவி அம்மான் கேட்டார்.
“உணவு உற்பத்தியைப் பெருக்கச் சொல்லிப் பேச ஆரோ பெரியவன் கொழும்பாலை வாறானாம்…
அவரை வரவேற்க, இவயள் றோட்டெல்லாம் சோடிக்கப் போகினமாம்…”
சிவஞானம் கத்தினான்.
“விசர்க்கதை பேசாதையெணை! நாங்களே சோடிக்கிறம்? -சங்கத்தில பெரியவங்கட ஓடர்…!”
– ‘கடுகு’ குறுங்கதைத் தொகுதி, முதற் பதிப்பு: ஆடி 1975, ஐ.சாந்தன் வெளியீடு, மானிப்பாய்.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.