சொர்க்கத்தின் கனிகள்





சொர்க்கத்தின் கனிகளைப் பற்றி ஒரு பெண்மணி கேள்விப்பட்டாள். அவள் அதை அடைய விரும்பினாள்.

அதற்கான வழியை அறிவதற்காக, சபர் என்னும் சூஃபி ஞானியை அணுகி, “அறிவைத் தரக்கூடிய சொர்க்கத்தின் கனிகளை நான் அடைவதற்கு என்ன வழி?” என்று கேட்டாள்.
“நீ அதை என்னோடு இருந்து கற்றுக்கொள்ளலாம். அல்லது, ஓயாமல் உலகெங்கும் அதைத் தேடிச் சென்று அடையலாம்!”
அந்தப் பெண்மணி அவரிடமிருந்து விலகிச் சென்றாள். ஆரிப் என்ற அறிஞர், ஹக்கீம் என்ற துறவி, மஜூப் என்ற ஞானக் கிறுக்கன், ஆலிம் என்ற விஞ்ஞானி மற்றும் பலரிடமும் அது பற்றி விசாரித்தாள்.
இப்படியே ஊர்கள் தோறும் சென்று, உலகெங்கும் தேடி அலைந்தாள்.
முப்பது வருடங்கள் கழித்து, சொர்க்கத்தின் மரத்தைக் கண்டறிந்தாள். நீண்டு விரிந்த அந்தக் கிளைகளில், சொர்க்கத்தின் கனிகள் ஒளிமயமாகத் தொங்கிக்கொண்டிருந்தன.
அந்த மரம், அவள் முதலாவதாக விசாரித்த சூஃபி ஞானி சபர் அமர்ந்திருநத் இடத்தில், அவருக்குப் பின்னால் இருந்த அதே மரம்தான்! அவர் இப்போதும் அங்கேயே இருந்தார்.
“இதுதான் சொர்க்கத்தின் மரம் என்று, நமது முதல் சந்திப்பிலேயே நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?”
“முதலாவதாக, அதை நான் அப்போது சொல்லியிருந்தால் நீ நம்பி இருக்க மாட்டாய். மேலும், இந்த மரம், 30 வருடங்கள் மற்றும் 30 நாட்களுக்கு ஒருமுறைதான் கனிகளைத் தரும்!”