செலாவணி




(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது உண்மையாகவே நடந்தது. ஆனால் இதில் ஆச்சரியமென்னவென்றால் எங்கே, எப்பொழுது நடந்த தென்று எனக்கே தெரியவில்லை. இதற்குக் காரணம் அந்த உண்மையின் வலிமை என்றுதான் நினைக் கிறேன். சூரியனை நேருக்கு நேராகப் பார்த்தவர்கள் யார் ? ஒன்று, கண் மூடிப்போகும்; அல்லது மயக்கம் உண்டாகிவிடும். அதைப் போலத்தான் இந்த உண்மை எனக்கொரு மயக்கத்தை அளித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கே, எப்பொழுதென்பது மறந்து போகுமா?…
நான் எங்கே போய்க் கொண்டிருந்தேன். எதற் காகப் போனேன் என்பதும் தெரியவில்லை. போகாமல் இருப்பதற்கென்ன என்றால் நான் வந்த பாதை மறு நிமிஷமே கண்ணுக்குப் புலப்பட வில்லை – அழிந்து கொண்டே வந்தது. ஆகையால், திரும்பிப் போகிற பேச்சுக்கே இட மில்லாமல் போய்விட்டது. ஆனால் எனக்கு ஒரு ஆறுதல் இருந்தது. என்னைப்போல இன் னும் பலர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆவது நமக்கும் ஆகட்டுமே என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.
கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஒவ்வொருவராகத் தேங்கி நிற்க ஆரம்பித்து விட்டார்கள். எட்டத்தி லிருந்து பார்த்தால் பெரிய வியாபார ஸ்தலத்தைப் போன்ற சுறுசுறுப்பு அங்கு தென்பட்டது. மெதுவாக நானும் அங்கு சென்று விட்டேன். ஆனால் எனக்கு இன்ன விஷயம் என்று புரியாததால் சற்று நின்று பார்க்கலாமே என்று தோன்றிற்று.
முதலில் இங்கேன் இவர்கள் நிற்கிறார்கள் என் பதைச் சோதனை செய்த பொழுது ஒரு கடை தென்பட் டது. பார்வைக்கு சாதாரணக் கடையைப் போலத்தான் இருந்தது. ஆனால் கடையில் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தால் அசாதாரணமாக இருந்தது. ஏனென்றால் ஒரு சமயம் இரண்டு கண் இருப்பது போலவும் ஒரு சமயம் மூன்று கண் இருப்பது போலவும் தோன்றியது பெரிய அதிசயமாக இருந்தது. ‘செலாவணி’ என்று கடைக்குமேல் விலாசப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.
கடை என்றால் நாம் பணம் கொடுத்துச் சாமான்கள் வாங்கும் இடம் என்றல்லவா நினைக்கிறோம்? இங்கே அப்படி நடக்கவில்லை. ‘கடைக்கார ஐயா! செலாவணி கொடுங்கள்’ என்றார் ஒருவர்.
‘என்ன சரக்கு?’ என்றார் கடைக்காரர்.
‘எங்கள் பாட்டனார் லட்சாதிப் பிரபுவாக இருந்தார். பன்னிரண்டு கோயில் திருப்பணி நடத்திக் கும்பாபி ஷேகம் செய்தார். ஒரு ஊருணிக்கு ஏற்பாடு செய்தார். அவருடைய முன்னோர்கள் சிற்பத்திலும், இசையிலும் இயலிலும் விற்பன்னர்களாக இருந்தார்கள். அவர்கள் திறமைதான் நாடெங்கிலும் இறைந்து கிடக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமா?’ என்று நிறுத்தினார்.
‘அதெல்லாம் குழிப் பிணத்துக்கு இழவு கொடுக்கிற சமாசாரம். இப்பொழுது சொல்லய்யா’ என்றார் கடைக்காரர்.
‘என் தகப்பனார் பெரும் புலவர். நம்முடைய இலக் கியத்தை எல்லாம் கரைத்துக் குடித்து அமுத மழையாக விரிவுரை கூறுவார்.’
‘அதெல்லாம் சரி. உம்முடைய சமாசாரத்தைச் சொல்லும்’
‘நானும் வியப்புரை கூறுகிறேன். பழஞ் செல்வத் தைப் பாதுகாத்து மெருகிட்டு வருகிறேன். இன்னும்-
கடைக்காரர் அவரை முடிக்க விடவில்லை.
‘உமக்குக் கண் பின்புறமிருக்கிறது. இங்கு செலா வணி இல்லை. வணக்கம்’ என்றார் கடைக்காரர்.
அந்த மனிதர் ‘இதென்ன அக்கிரமம்’ என்று முணு முணுத்துக்கொண்டே ஒரு பக்கமாக ஒதுங்கிவிட்டார். உடனே மற்றொருவர் கடைக்காரர் எதிரில் போய் நின்று செலாவணியைக் கோரினார்.
‘என்ன சரக்கு?” என்றார் கடைக்காரர்.
அந்த மனிதர் புயல் வேகத்துடன் பதில் உரைத்தார்.
மனிதனுக்குத் தொடுவான் லட்சியம். மண்ணி லுள்ள மரத்திற்கு வானம் லட்சியம். நமக்கெல்லாம் லட்சியம் எதிர்காலம். பொற்கதவு அமைந்த இன்ப மாளிகையினின்று மிதந்து வரும் இன்னிசை காதில் விழவில்லையா? ஊக்கமும் உறுதியும் அளித்து உயிரை முன்னே இழுத்துச் செல்லும் காந்தக் குதிரையின் குளம்போசை காதில் விழவில்லையா? எதிர்காலமே வாழ்வு.விவரம் தேவையானால்-‘ என்றார்.
கடைக்காரர் பேச விடவில்லை.
‘கடையைமண்ணில்தான்வைத்திருக்கிறேன்.வான வில்லை நம்பி இந்தக் கடையை நடத்தும் திறமை எனக் கில்லை. பூர்ணச் சந்திரன் கவிழ்த்து உருட்டிவிடும் அமுத வெள்ளத்தைப் போய்ப் பாரும். உமக்கு வேண் டியது கிடைக்கும்’ என்று கடைக்காரர் அவரை விரட்டி விட்டார்.
‘சுயநலக்காரத் துரோகி!’ என்று வைதுகொண்டே இந்தப் பக்கமாக அவர் நகர்ந்துவிட்டார்.
பிறகு ஒரு சில நிமிஷம் யாரும் கடைக்காரரிடம் பேசவில்லை. நான் கூர்ந்து கவனித்த பிறகு தான் ஒரு ரகசியம் தெரிந்தது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் முதல் ஆள் பக்கம் சிலரும், இரண்டாவது ஆள் பக்கம் சிலருமாகச் சேர்ந்துகொண்டு விட்டார்கள்.
ஒரு நிமிஷம் யோசித்தேன். நாம் போய் நின்றால் என்ன? நிற்கலாம். அவர் கேள்வி கேட்பாரே? கேட்கட் டுமே. கைக்கு வந்ததைச் செய்வதும் மனத்தில் படுவ தைச் சொல்வதையும் தவிர வேறென்ன செய்யக் கிடக் கிறது?- இந்தமாதிரி தைரியத்தில் கடைக்காரர் முன்னே போய் நின்றேன்.
வழக்கம்போல் கடைக்காரர் கேள்வி கேட்டவுடனே நான் தலையையும் வயிற்றையும் தொட்டுக்காட்டிவிட்டு இரண்டு கைகளையும் நீட்டிக் காட்டினேன. பயித்தியம் என்ன உளறுமோ என்று பயந்துகொண்டு நின்றேன்.
‘சபாஷ் மகாராஜா! கடையை நீயே எடுத்துக்கொள்’ என்று கூறிக்கொண்டே கடைக்காரர் ஓடிவிட்டார்.
அவர் எங்கு ஓடினார் என்று எனக்குத் தெரியவில்லை ! எங்கேனும் இருந்து பார்த்துக்கொண்டு தானிருப்பார்!
– பிச்சமூர்த்தியின் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார் பிரசுரம், சென்னை.