செட்டு நெறி




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உயிரோடு வாழ்ந்திருப்பதற்கு உழைத்துப் பொருளீட்டவேண்டும். ஈட்டிய பொருளை விழிப்போடும் யகுத்தறிவோடும் பயன்படுத்த வேண்டும். வருந்தி உழைத்து ஈட்டிய பொருளைக் கண்டபடி செலவழித்து விடுவோமானால், சோம்பி யிராமல் வேலைசெய்தோம் என்பது தவிர அதனால் வேறொரு பயனும் இல்லை. வருந் தியும் வேலைசெய்யாமல் வருவாயும் குறைவாயிருக்கும் போது மனம் போனபடி செலவு செய்வது இன்னுங் கேட் டைப் பயக்கும்; சிறு தேட்டமும் சிதறுண்டுபோய்க் கடன் பட்டுக் கவலையிலாழ்ந்து அல்லலுழக்கவேண்டியதே!

வருவாய்க்குத் தக்கபடி செலவுசெய்து சிறிது மிச்சப் படுத்தியும் வைக்கவேண்டும். அப்படிச் செய்வது எதிர் காலத்தில் வரும் நோய்ப்பாட்டுக்கோ, கிழத்தனத்துக்கே அல்லது எதிர்பாராத இக்கட்டுகட்கோ பரிகாரங் கொடுக் கும்; பிற்கால உதவிக்கென்று சிறிது தொகை சேர்த்து வைத்துககொள்வது எவருக்கும் இன்றியமையாததொன்றாகும்.
நாம் எவ்வளவு செல்வப்பேறுடையவர்களா யிருந்த போதிலும், பொருளை நல்வழிகளிற் செலவுசெய்யவேண் டும். அறிவற்ற தீச்செயல்களிற் செலவழித்த பொருள், அதனை யீட்ட நாம் பட்டபாட்டைப் பாழாக்கிவிடும். அத் தகைய பொருளை நாமும் இழந்தோம்; உலகமும் இழந் தது! உணவுப் பொருள்களையும், வீட்டுத் தட்டுமுட்டுக் களையும் பாழ்படுத்தக்கூடாது. இழிவான செயல்களிற் செலவுசெய்யும் பணத்தையும், தட்டுமுட்டுக்கள் வாங்கிய பணத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தல் எவ்வளவு மேலானதாகும்!
1. ஒரு சிக்கனக் குடும்பம்
செல்வப் பெருக்கும் செல்வாக்குமுடைய ஒரு பெருஞ் செல் வர் தம்முடன் கல்விபயின்ற ஒரு நண்பரைக் காணப் போனார். போனவர் நண்பர் வீட்டுவெளியில் நின்று பார்த்தார். வீட்டின் முன்பக்கத்தின் காட்சியே அவர் மனத்தைக் கவரச்செய்தது. வீடு அவ்வளவு தூய்மையாகவும் ஒழுங்காகவுங் காணப்பட்டது. உள்ளே நுழைந்ததும் நண்பரால் அவர் நல்வரவேற்புக் கொடுக்கப்பட் டார். வந்தவர் நண்பரின் வேண்டுகோளின்மேல் மூன்று நாட்கள் அங்கேயே தங்கிவிட்டார். அவ்வீட்டில் அவர்கண்ட சிக்கன வாழ்க்கைச் செய்திகளைத் தாம் தமது வீட்டுக்குத் திரும்பிப் போய்த் தம் பெண்டுபிள்ளைகளுக்குத் தெரிவித்தார். அவை யாவன :-
1. அவ்வீடு இடம்படாது எடுத்த வீடு.
2. எங்குப் பார்த்தாலும் தூய்மை குடிகொண்டிருந்தது.
3. வீட்டார் தண்ணீரையும் அளவாகச் செலவிட்டனர்.
4. தட்டுமுட்டுக்கள் எப்போதும் துப்புரவாக விருந்தன. அவைகளில் ஓட்டையுடைப் பென்பதில்லை. அவை களும் இன்றியமையாதனவே; பயன்படாத தொன்று மில்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோரிடமுண்டு; வீட்டார் எடுக்கும் எந்தப் பொருளையும் இடமாற்றி வைக்கமாட்டார்கள்.
5. குட்டிகுழந்தைகளுங்கூடக் குளித்து முழுகித் துப்புர வான உடையையே மேற்கொள்வார்கள். அவைகளும் குறைந்த விலையுடையனவே.
6. வீட்டு மக்கள் அளவோடுண்டு உரமுடன் நோய்க் கிடங் கொடாமல் இருக்கின்றனர்.
7. அவ்வீட்டில் எந்தப் பொருளும் பாழ்படுவதில்லை.
8. துண்டு துணுக்குகள் எதுவும் கீழே விழுந்து கிடக்கா ; விழினும் உடனே செத்தைப்பெட்டியில் சேர்க்கப்படும்.
9. அந்த வீட்டில் வேலையா ளொருவருமில்லை; வீட்டுப் பிள்ளைகளே வேலைகளைப் பங்கிட்டுக்கொண்டு செய்து விடுவார்கள்.
10. பெண்டுபிள்ளைகள் தங்கள் உடைகளைத் தாங்களே தைத் துக்கொள்வார்கள்; அழுக்காடைகளைத் தாங்களே அழுக்குப் போக்கிக்கொள்வார்கள்.
11. அவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
12. சிறுவருஞ் சிறுமியரும் பிறர்க்குப் பணிசெய்வார்களே தவிரப் பிறரிடம் வேலைவாங்கமாட்டார்கள்.
13. அறிவற்றதனமாக வாழ்வ தென்பது அவ் வீட்டாரிட மில்லை.
14. பிறர் பெருஞ் செலவுசெய்து முடிக்கும் வேலைகளை இவர்கள் சிறு செலவில் நிறைவேற்றிவிடுவார்கள்.
15. வேலைசெய்யப் போகும்போது நடந்து போதலே நல்ல தம் உடற்பயிற்சியும் ஆகுமென்பது அவர்கள் கொள்கை.
16. அவர்கள் வேடிக்கை விளையாட்டுக்களுக்குப் போவது அத்தி பூத்தாற் போலத்தான்.
17. ஒருநாள் நண்பர் கடைக்குப்போய் வாங்கிய பொருள் களைப் பொட்டலங்களாகக் கட்டிக்கொண்டு வந்தார். இல்லாள் அவைகளை உடனே அவிழ்த்து அவ்வப் பொருள்களை அவ்வவ்விடங்களிற் சேர்த்தாள். உடனே ஒரு பிள்ளை காகிதங்களை மடித்து ஓரிடத்திற் சேர்த் தது; மற்றொரு பிள்ளை நூலைச்சுற்றி மற்றோரிடத்தில் வைத்தது; இன்னொரு பிள்ளை குப்பையை விளக்கிக் குப்பைத் குப்பைத் தொட்டியிற் கொண்டுபோய்க் கொட்டி விட்டது.
இவைகளையெல்லாஞ் சொல்லி அச்செல்வர் கடைசியாக, ”நாம் திரண்ட செல்வத்துடன் நல்வாழ்வு வாழ்ந்தும், அங்கே மூன்று நாட்கள் நான் கொண்டிருந்த மனநிறைவு இங்கு ஒரு. நாளும் இன்று,” என்று கூறி முடித்தார்.
2. ஒரு பொன்னின் மதிப்பு
ஒரு நாட்டுப்புறத்துப் பையன் அடுத்த நகர் ஒன்றில் ஒரு கலா சாலையில் படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய தந்தையார் மற்றச் செலவுகளோடுகூடக் கைச்செலவுக்கும் திங்க ளொன் றுக்கு ஒரு பொன் கொடுத்துக்கொண்டு வந்தார். பையனுடைய நண்பர்கள் சிலர்க்கு அவர்களின் பெற்றோர் கைச்செலவுக்கென்று கிழமைக்கொரு பொன் கொடுத்துக்கொண்டுவந்தனர். இதனைக் கண்ட இவனும் அதேபோலத் தனக்கும் அனுப்பவேண்டுமென்று தன் தந்தையாருக்கு எழுதியனுப்பினான். அதற்கு அவர் கடிதம் மூலம் அவனுக்குத் தெரிவித்ததாவது:-
என் அருமை மைந்த!
உனக்குக் கிழமை யொன்றுக்குப் பொன்னொன்று அனுப்பி’ வைப்பதற்கு நான் வருத்தப்படவில்லை. ஆனால், யான் சொல் வதைக்கேள் :-
- இந்தப் பணத்துக்கு அரிசி வாங்கினால் நம்முடைய குடும் பத்துக்கெல்லாம் ஒரு திங்கட்குப் போதுமானதாகுமே!
- அல்லது, இந்தப் பணத்துக்கு நாம் இரண்டு ஏழைக்குடும் பங்களைக் காப்பாற்றலாமே!
- அல்லது, இந்தப் பணத்துக்கு நாலைந்து ஏழைப்பிள்ளை களுக்குப் பள்ளிக்கூடக்கட்டணம் கொடுத்துதவலாமே!
- அல்லது, இந்தப் பணத்துக்கு இரண்டு மூன்று ஏழைப் பிள்ளைகளுக்குத் திங்களுணவு கொடுத்துக் காப்பாற்றலாமே! இன்னுங் கேள் !
- இந்தப் பணத்துக்குக் கிழமைதோறும் படங்களுஞ் செய்திகளுங்கொண்ட கிழமைத் தாள்கள் வாங்கிப் பார்த்துப் படிக்கலாமே!
- அல்லது, இந்தப் பணத்தை ஒரு நூல்நிலையத்தில் பிணைப் பொருளாகக்கட்டிவைத்துவிட்டால், ஒரு திங்களில் எத்தனையோ உயர் நூல்கள் எப்போதும் வாங்கிப்படித்துக்கொண்டிருக்கலாமே! அத்தொகையும் மிச்சமாகுமே !
- அல்லது, இந்தப் பணத்தைக்கொண்டு அரியபெரிய நூல் கள் எத்தனையோ வாங்கிப் படித்துப்படித்து நமது வீட்டில் சில் லாண்டுகளில் ஒரு நூல்நிலையமே ஏற்படுத்திவிடலாமே!
- இப்போதுஞ் சொல்கின்றேன். நீ கேட்கும் தொகையைக் கொடுப்பதற்கு யான் விருப்பமில்லாமலில்லை. அதனைக்கொண்டு உனக்கும் பிறர்க்கும் நன்மைதரும் வழிகளிற்பயன்படுத்தாமல் உன் கூட்டாளிகள் செய்வதுபோல் வம்புக்கும் தும்புக்கும் செலவழித்து விடுவது நல்வினையாகுமா, என்பதனை எண்ணிப்பார்!
எண்ணிப்பார்! இதற்கு உன் மறுமொழியை எதிர்பார்க்கின்றேன்.
-அன்புள்ள தந்தை-
இவன் நல்ல தன்மையனாதலால், தந்தையார் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, அவர்க்கு நன்றி கூறி யெழுதியனுப் பினானே தவிர, பொன் கேட்டானில்லை.
3. செட்டுநெறிப் பெருமக்கள்
- பெரியோ னென்று சொல்லப்படும் அலெக்ஸாண்டர் மன்னர் தமது மிகக்கீழான அலுவலாளர் போலவே எளிமையான உடைகளையே யணிந்து கொள்வாராம்.
- கேதோ வென்னும் உரோமநாட்டுத் தலைவர் ஐந்து ரூபா வும் பெறமாட்டாத சட்டையொன்றையே தரித்துக்கொண்டு ‘அது மதிப்பற்றது’ என்பாராம்.
- அரசர்க்கரசராகிய அகஸ்டஸ் என்பவருடைய உடை களைத் தையற்காரன் தைக்கிறதில்லையாம்; அவ்வேலையை அவர் தம் மனைவியாரே செய்துவிடுவாராம்; அவர் படுப்பதும் எளிமை யான படுக்கையேயாம்.
- ஜெர்மானிய மன்னர் ஒருவர் கிழிந்த உடையுடன் ஓர் அப்பக்கடைப்பக்கம் குளிர்காயப்போக, அப்பக்காரி, ”வறுமை பிடித்தவனே ! தொலைவிற் போய்விடு,” என்று திட்டித் துரத்தி விட்டாளாம்!
- பதினொன்றாம் லூயி என்னும் பிரான்சு மன்னர் கணக் கேட்டில் ‘கிழிந்த ஆடை தைப்பதற்கு ரூபா ஒன்று’ என்று எழுதி யிருந்ததாம்.
இதுபோன்ற மன்னர் சிக்கனச் செய்திகள் வரலாற்று நூல்க ளிற் கணக்கற்றவை காணலாம்.
இப்படிப்பட்ட மன்னாதி மன்னரெல்லாரும் நாட்டுவளர்ச்சிக் கென்று செலவுசெய்த பணத்தொகை இவ்வளவவ்வளவென்று சொல்லிமுடியாது.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |