செடில் ராட்டினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 55 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முத்துச்சாமி மிகவும் செல்வமாக வளர்ந்தவன். அவனுடைய குடும்பம்தான் அவ்வூரிலேயே பெரிய பண்ணை, பண்ணையார் என்று ஊரார் குறிப்பிடுவார்களே ஒழிய பெயர் சொல்லிக் கூறவே மாட்டார்கள். நல்ல வாலிப தருணம், பனைமரம் போல் வளர்ந்திருந்தார். கை கால்கள் தேங்காய் போலத் திரண்டுருண்ட தசைகளைக் கொண்டவை. மீசை இப்போதுதான் முளைக்கத் தொடங்கியது. சிறிது மாநிறம். அவன் குலத்திலேயே அவன்தான் மிக்க அழுகுவாய்ந்தவன் என்று கூறலாம். பண்ணை வீட்டை அரண்மனை என்றே ஊரார் கூறுவதுண்டு. அதற்கு ஏற்றபடி வெகு பெரிதாகவும் உறுதியாகவும் கட்டப்பட்டிருந்தது. அத்தனைப் பெரிய வீட்டில் இவனும் இவனுடைய தாயாருமே குடியிருந்தார்கள். தாயாரோ முத்துச்சாமியை ஒருகணமும் விட்டுப் பிரிந்திருக்க இசையாள். மகனுக்கு என்ன விபத்து ஏற்பட்டு விடுமோ என்று கண்ணும் கருத்துமாக இருப்பாள். 

“அம்மா நம்ம மலையிலே தேரோட்டமாமே, போகலாமா?” என்றான் முத்துச்சாமி 

“குழந்தே, சாப்பிட்டுப் படுத்துத் தூங்கேன். தேரோட்டம் பாத்ததில்லையா என்ன” என்றாள் தாயார். 

“அல்ல, அம்மா, இந்த ஆண்டிலே புது பண்டார சன்னிதி என்னென்னமோ வேடிக்கைகளை வைத்திருக்கிறராம். பொய்க்கால் குதிரை, நையாண்டிமேளம், தஞ்சை நாதசுரம், வாணவேடிக்கை எல்லாம் உண்டாம் நான் கண்டிப்பாய்ப் போகவேணும்.” 

“பையா, இவையெல்லாம் பார்த்திருக்கிறாயே, வேண்டாம். இப்போது எனக்கென்னமோ மனசு வரவில்லை. அடுத்த விழாவிற்குப் போவோம்’ என்று மறுத்தாள். 

”கூடவே கூடாது.போய்த்தான் தீரவேண்டும்” என்று மன்றாடினான் முத்துச்சாமில்., “சரி அப்படியானால் கூட்டிச்
செல்லுகிறேன். சிற்றுண்டி சாப்பிடு” என்று சொல்லிச் சிற்றுண்டியை ஒரு தட்டில் வைத்துவிட்டு ஆள்காரனை அழைத்து வண்டியைப் பூட்டச்சொன்னாள். அவள் அவனைத் தனியே அனுப்ப விரும்பவில்லை. 

இரட்டைமாட்டுவண்டி வெகு சொகுசாகச் செய்யப்பட்ட வண்டி, இரண்டு காளைகள் பூட்டப்பட்டு சலங்கைகள் ஒரு பர்லாங்கு தூரம் கேட்க விசைவண்டிபோல ஓடிற்று. வழிபோக்கர்களுக்கெல்லாம் இது பண்ணையார் வண்டி என்று தெரியும். பயபக்தியுடன் ஒதுங்கிச் சென்றார்கள். வெகுவிரைவில் மலையடிவாரத்தில் கோயில் வாயிலண்டை பண்ணையார் விடுதியின் முன்னர் நின்றது. முத்துச்சாமியும் தாயாரும் விடுதிக்குள்ளே சென்று ஒரு அறையில் அமர்ந்தார்கள். ஆலய மணியக்காரனுக்குப் பண்ணையார் வந்த செய்தி உடனே எட்டியது. வந்து பேட்டி கண்டுவிட்டு ஆலய பிரசாதம் குருக்கள் மூலமாக இருவருக்கும் சமர்ப்பித்துவிட்டுச் சுவாமி தேரோட்டத்திற்கு முந்தி சதுர்க்கச்சேரி நடக்கிறதென்று சொல்லி அதற்கு வரும்படி அழைத்து விட்டுச் சென்றான். பண்ணையார் குடும்பத்திற்கு ஆலயத்தில் காவல் மிராசு பாத்தியம் பரம்பரையாக உண்டு. அதற்காகப் பண்டை அரசர் காலம் முதல் பல நிலங்கள் மானியமாக விட்டிருந்தார்கள். பண்ணையார் பெயரைக் கேட்ட மாத்திரத்ததில் சுற்றுப்பக்கத்துக் குடிகள் பயபக்தியுடன் வணங்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள். 

சதுர்க்கச்சேரி நடப்பதற்கு முந்தி மணியக்காரன் மறுமுறை ஆள் அனுப்பினான். வந்த அலுப்பினால் தாயார் இளைப்பாறிக் கொண்டி ருந்தாள். முத்துச்சாமி ஆலயத்துள் அலங்கார மண்டபத்தில் கூட்டிச் செல்லப்பட்டான். கூட்டமோ சொல்லி முடியாது. புதிதாக ஒரு இளந்தாசி அன்று நடனம் செய்கிறாள் என்றால் யார்தான் வரமாட்டார்கள். சரியாக எட்டு மணிக்கு நடனம் தொடங்கியது. அலங்காரமண்டபம் வெகு விமர்சையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவாமியும் சகல நகைகளும் பூட்டப்பட்டு பரிபூரண சாந்நித்தியம் பெற்றிருந்தார். ஒருபுறம் பண்டார சன்னிதி சர்வாலங்கார பூஷிதராக வீற்றிருந்தார். தங்கத்தில் வைரங்கள் இழைத்த உருத்திராட்சமாலைகள், கைவிரல் நிறைய வைரமோதிரங்கள், வடிந்தகாதில் வைர மகாகுண்டலங்கள், தலையில் தங்கச்சரிகை தலைப்பாகை, இடையில் காவிப்பட்டு அம்பரம், இந்த ஒப்பற்ற சீரில் கம்பீரமாக வீற்றிருந்தார். சுற்றிலும் பெரிய பெரிய மிராசுதாரர்கள் தங்கள் தங்கள் மனதுக்கேற்றபடி நல்லுடைகள் சிறந்து காட்ட வீற்றிருந்தார்கள். முத்துச்சாமி சென்றவுடனே பண்டாரசன்னிதியைக் கண்டு வணங்கினான். அவரும் வெகு கம்பீரமுடன் தங்கக்கிண்ணத்திலிருந்து ஒரு சிட்டிகை திருநீறு எடுத்து வழங்கினார். முத்துச்சாமியும் அதனை ஏந்தி நெற்றியில் இட்டுக்கொண்டு தனக்கென்று ஒதுக்கிவைத்திருந்த இடத்தில் அமர்ந்தான். பண்டார சன்னிதி சைகை செய்தார். அருச்சகர் தீபாராதனை செய்து திருநீறு வழங்கினார். முன்வரிசையில் அது வழங்கப்பட்டது. எல்லாரும் அமர்ந்தார்கள். மற்றொரு சைகை செய்தார். ஒரு அழகிய யுவதி சகல அணிகளையும் தற்கால ரீதியில் அணிந்துகொண்டு சன்னிதானத்தில் தோன்றினாள். பண்டார சன்னிதிக்கு ஒரு கும்பிடு போட்டு மற்றவர்களைப் பார்த்து மற்றொரு கும்பிடு போட்டு பரதநாட்டியம் ஆடத்தொடங்கினாள். 

முத்துச்சாமியோ இவ்வளவு அழகுள்ள பெண்ணை இதற்கு முந்தி கண்டதே இல்லை. அழகைக் காட்டிலும் அவளுடைய நாட்டியச்சிறப்பு மிகவும் அவன் மனதிலே பட்டது. நாட்டியம் மாத்திரம் அன்று அவளுடைய பாட்டும் கண்டத் தொனியும் அவனை வசீகரித்தன. பூம்புகார் பட்டினத்து வணிகச்சீமானை எந்த முறையில் மாதவியின் நடனம் இழுத்ததோ அதைவிடப் பதின்மடங்கு நமது முத்துச்சாமியை இந்த இளந்தாசி இழுத்தாள். ஒரு மணி நேரமும் ஒரு நிமிஷம்போல் பறந்தோடியது. தான் எந்த உலகத்தில் இருக்கிறோமோ என்று அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். பண்டாரச்சன்னிதி சைகை செய்தான். தாசி எதிரே நின்று வணங்கினாள். அவள் கையில் ஒரு பொன் மோஹராவைத் தந்தார். அதைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வணங்கிச் சென்றாள். ஏனையோரும் பரிசுகள் வழங்கினார்கள். முத்துச்சாமிக்கு ஒன்றும் தோன்றவில்லை. உடனே தன் கையில் அணிந்திருந்த ரூ. 10000 பெறுமான வைர மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். அவளோ அதைப் பெற்றுக்கொண்டு ஒரு புன்சிரிப்பு சிரித்துவிட்டுச் சென்றாள். முத்துச்சாமிக்கு தேவேந்திர போகம் கிடைத்தாற்போல எண்ணினான். நடனம் முடிந்தது. சுவாமி தெருவில் பவனிக்கு எழுந்தருளினார். எல்லாரும் கலைந்தனர். பண்டாரசன்னிதியிடம் விடைபெற்றுச் சென்றதும் முத்துச்சாமி அறியவில்லை. நேராக விடுதி சேர்ந்தான். தாயார் உறங்கிக்கொண்டிருந்தாள். ஒன்றும் பேசாமல் சித்தப் பிரமை கொண்டவன்போல படுக்கையில் படுத்துக் கொண்டான். வெளியே நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் கூத்துகள், பொய்க்கால், நையாண்டி எந்த வேடிக்கையும் இவன் நினைவிற்கு வரவே இல்லை. தூக்கமின்றி இரவு முழுவதும் நடனக்காட்சியையே சிந்தித்துக்கொண்டு கிடந்தான். 

காலையில் தன் அந்தரங்க நண்பன் குப்புசாமியின் மூலம் இத்தாசியின் விவரங்களை விசாரித்தான். இவள் இந்த ஆலயத்திற்கே பரம்பரையாகச் சேர்ந்தவள் என்றும் இது வரை நடனம் கற்றுவந்தாள் என்றும். அன்றுதான் அரங்கேற்றப்பட்டவள் என்றும் தெரிந்தது. அவளை அடைய வேண்டும் என்ற பெரும் பித்துக்கொண்டான். ஆனால் எத்தனை திரவியம் கொட்டினாலும் அவள் தற்போது கிடையாள் என்று தெரிந்தது. அடுத்த கார்த்திகையில் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் அவளுக்கு ஒரு பிரார்த்தனை உண்டென்றும் அது நிறைவேறினால்தான் அவள் தாசித்தொழில் செய்யமுடியும் என்றும் தெரிந்தது. இதனைக் கேட்டவுடன் முத்துச்சாமியின் நெஞ்சு அழிந்தது. உணவு முதலியவைகளையும் வெறுக்கத் தொடங்கினான். திருவிழா முடிந்ததும் தன் தாயுடன் இளைக்கவும் தொடங்கினான். தன் தாயுடன் சொல்லவும் அஞ்சினான். இதுவரை எந்தப் பொருளை இச்சித்தாலும் அவள் இல்லை என மாட்டாள். அவள் குணமோ மிகவும் புனிதமானது. குலஅறங்களைப் போற்றி வந்தவள். இந்தச் சொல்லை எவ்வாறு உரைப்பது என்று எண்ணி அவன் சொல்லவே இல்லை. நண்பர் மூலமாக எத்தனை முயன்றும் எதுவும் ஆகவில்லை. இறுதியில் பண்டாரசன்னிதியைக் கண்டு தன் அவாவை நிறைவேற்றிக் கொள்வதென்று நினைத்தான். 

ஒருநாள் பண்டாரசன்னிதி இருக்கும் மயிலுருவக் குன்றுக்குச் சென்றான். முன்னமே தெரிவித்திருந்ததனால் பண்டாரசன்னிதியின் பேட்டி எளிதல் கிடைத்தது. வழக்கப்படி, செலுத்தவேண்டிய காணிக்கைகளைச் செலுத்திப் பண்டாரசன்னிதியின் முன்னிலையில் அமர்ந்தான். உடல் நலம் முதலிய தொடக்கப் பேச்சுகள் எல்லாம் முடிந்த பிறகு சென்ற செய்தி பேசப்பட்டது. 

சென்ற திருவிழாவிலே தேரோட்டத்தின்போது அத்தனை சிறந்த நடனத்தை ஏற்படுத்தியதைப் பற்றி பொதுமக்கள் சுவாமிகளை மிகப் போற்றுகிறார்கள் என்றான் முத்துச்சாமி. 

“மிகச் சிறிய வயதாயிருந்தும் நாட்டியக்கலையின் நுட்பங்களை அறிந்து அதற்கு ஏற்ற பரிசு அளித்தது உயர்ந்த குலதின் குணத்தையும் சிறந்த அறிவுத்தன்மையையும் வெளிப்படுத்தியது” என்றார் பண்டாரசன்னிதி. 

“அத்தனை சிறந்த நடனக்கலையாளை எந்த உலகத்தில் சுவாமிகள் கண்டுபிடித்ததோ?” 

அவள் பிறநாட்டாள் அல்லள். இதே ஆலயத்தில் திருத்தொண்டு புரியும் பரம்பரைக் குலத்தைச் சேர்ந்தவள். அவள் தாய் மிகப் பாண்டித்தியம் பெற்றவள். தன் மகள் புகழ்பெற வேண்டும் என்ற கருத்துடன் சிறந்த வித்துவான்களைக் கொண்டு கற்பித்தாள். 

“அப்படி ஆயின் இந்த மலர் ஏன் மோப்பார் இன்றி வாடவேண்டுமோ?” 

“அதற்கு ஒரு பிரார்த்தனை உண்டு. அதுவும் உங்கள் குடும்பத்தை ஒட்டிய சரிதமே. ஆகவே அதை நீங்கள் கேட்க வேண்டியதுதான்…” 

“அப்படியாயின் அந்தப் பண்டைய மர்மத்தை வெளியிட்டால் மிகுந்த நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்று விநயமாகவும் ஆர்வத்தோடும் கூறினான். 

“உங்களைப் போன்ற அறிஞர்களுக்குக் கூறாமல் வேறு யாருக்குரைப்பது” என்று பீடிகை போட்டு அடியிற்கண்ட கதையை கூறினார். 

இந்த ஆலயத்தில் அம்மைத்திருவிழா கார்த்திகைத் திங்களில் நடப்பதுண்டு. அப்போது செடில் ராட்டினம் என்ற அற்புதச் செய்கை நடைபெற்று வந்தது. அது நடந்தால் அம்மை களிப்புற்று நாட்டில் செம்மை விளைவிப்பாள். இராட்டினத்தில் சுற்றுவது மிகவும் கடுமையான தவம். அதற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு இளையதாசி ஓர் ஆண்டு முழுதும் போகம் கொள்ளாது திருவிழாவிற்கு ஒரு வாரத்தின் முன்னிருந்தே உபவாசம் இருக்க வேண்டும். திருவிழா நாளின்போது மிகப்புனிதத்தோடு திருமஞ்சனம் ஆடி சர்வாலங்கிருத பூஷிதள் ஆகி ஆலயத்திற்கு வரவேண்டும். அப்போது அம்மன் திருவுலாப் போந்து, நடுமலையில் உள்ள திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருப்பாள். முன்னால் 15 அடிக்கு செடில் ராட்டினம் ஒரு பலகைக் கல்லில் இணைக்கப்பட்டிருக்கும். அது பரவலாகவும், சுற்றும்; மேலும் கீழும் சுற்றும். அதில் அம்மங்கையைக் கட்டிவிடுவார்கள். பிறகு இருபுறங்களிலும் விரைவாகச் சுற்றுவார்கள். இவ்வாறு மூன்று முறை சுற்றி சுற்றினதே அவள் உரு அம்மன் முன்னிலையில் நிற்கும். அப்போது அம்மன் அருள்வரும். அர்ச்சகர் மூலமாகத் தக்க பரிசு அப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும். இத்திருவிழா உலகில் வேறு எங்கும் கிடையாது இந்தப் பாடல் பெற்ற புனிதத் தலத்தில்தான் பண்டைக்காலம் முதல் நடைபெறுகிறது. 

இப்படியிருக்கப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இந்தப் பெண்ணின் சிறிய தாயார் இந்த அருந்தவத்திற்குத் தெரிந்தெடுக்கப்பட்டாள். அவளும் நடனத்தில் மிகத் தேர்ந்தவள், ஓர் ஆண்டு முழுதும் அம்மன் சன்னிதியில் தனித்து நடனம் புரிந்துவந்தாள் அந்தக் காலத்தில் நடவடிக்கை பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு தடவை தவறி விட்டாள். அதற்கு உன் தகப்பனாரே காரணம். 

“ஆ, அப்படியா என்ன நடந்தது?”

உன் தகப்பனார் கந்தசாமிக் களத்துவென்றார் மிகப் பழைய குடும்பத்தைச் சேர்ந்த செல்வச்சீமான். உங்கள் குலம் முன்காலத்தில் மன்னர் பிரானுக்குத் தொண்டுபுரிந்து பெரும் போர்களில் வெற்றி அடைந்ததினாலே களத்து வென்றார் என்ற விருது பெற்றிருந்தது. கந்தசாமி நற்குணம் பெற்ற சீமான். ஆனால் பெண்கள் விஷயத்தில் சிறிது சபலம் என்று பின்னால் அறிந்தேன். 15 ஆண்டுகளுக்குமுன் அந்தத் தாசியுடன் போக்குவரத்து வைத்திருக்கலாம். இராட்டினத் திருச்சேவைக்கு தெரிந்தெடுக்கப்பட்டதும் அவர் விலகி இருக்கவேண்டும். ஒருநாள் இரவு அம்மன் சன்னிதியில் ஆடிப்பாடி விட்டு வீடு திரும்பும்போது அவர் அவள்மீது மோகப்பட்டு ஒரு மோதிரத்தை அவள் விரலில் நழுவவிட்டார். அன்றிரவு எவரும் அறியாமல் அவளைத் தொட்டுவிட்டார். அச்செய்தி எவருக்கும் தெரியவில்லை. அடுத்து கார்த்திகைத் திருநாள் வந்தது. இராட்டினச் சேவை தயாராயிற்று, அந்த நாளில் இருந்த பண்டாரசன்னிதியும் எழுந்தருளியிருந்தார்கள். எல்லாம் சரியாக நடந்ததாக வெளியிடப்பட்டது. பெருத்த வாத்தியக் கோஷங்களுக்கு இடையில் அவளை இராட்டினத்தில் இணைத்துச் சுற்றினார்கள். இராட்டினமும் வெகு விரைவாகச் சுற்றியது. பல்லாயிர மக்களும் ‘அர அர’ என்று ஒலித்தார்கள். மூன்றாம் சுற்றின்போது வெடி விழுந்தாற்போல ஒரு ஒலி ஏற்பட்டது. அவளைப் பிணைத்திருந்த கட்டு முறிந்து போய் அவள் உடல் ஐம்பது கஜ தூரத்தில் போய் விழுந்தது. அத்தனை அழகாக இருந்த உடல் நசுக்கிய பூச்சிபோல் ஒரு குவியல் ஆயிற்று. ஆலயம் முழுதும் ஒரே இறைச்சல், திருவிழா நின்றது. என்ன விபரீதம் ஏற்படுமோ என்று மக்கள் பயந்து ஓடிவிட்டார்கள் அதிகாரிகள் வந்து விசாரித்தார்கள். ஆலயத்திற்கும் மடத்திற்கும் பெரும் செலவு ஏற்பட்டது. தற்காலிகமாக தெய்வாதீனம் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.”

“வேறு என்ன நடந்தது.” 

பொறுத்துக்கொள்ளுங்கள்; ஊரில் எங்கும் ஒரே பீதி. அடுத்த நாளே விஷசுரம் ஒன்று நாட்டில் புகுந்தது. அம்மன் சினம் சும்மா விடுமா? பலபேர் இறந்தார்கள். அதிலே முதலில் நோய் வாய்ப்பட்டு உயிர் துறந்தவர் உங்கள் தகப்பனார். அவர் காலம் அடைந்ததைக் குறித்து ஊரார் வியந்தார்கள். ஆனால் இந்த குட்டு மடத்திற்கு மாத்திரம் தெரியும். பிறருக்குத் தெரியாது. அந்த உதவி உங்கள் குடும்பத்திற்கு நாங்கள் செய்தோம். 

”மிகுந்த நன்றி உங்களுக்கு உரித்தாகும்.” 

அப்போது நீ சிறு குழந்தை உன் தாயார் சிறந்த உத்தமி. பிரான் மலைக்கள்ளரில் உங்கள் குடும்பம் போன்ற உத்தமக்குடும்பம் எதுவும் இல்லை. அதிகாரிகள் உடனே இந்த இராட்டினச் சேவையை நிறுத்திவிட்டார்கள். சென்ற பதினைந்து ஆண்டுகளாக இல்லை. 

பண்டாரசன்னிதி நினைத்துவிட்டால் எதுதான் முடியாது. செடில் ராட்டினம் நடத்தும்படி உத்தரவு கிடைத்து விட்டது. ஆனால் ஒன்றிரண்டு நிபந்தனைகள் போட்டிருந்தார்கள். இராட்டினம் பழுதின்றி இருக்கவேண்டும். அபாயமானால் பண்டாரசன்னி ஜவாப்தாரியாக இருக்க வேண்டும் என்பதே. உடனே பண்டாரசன்னிதிகள் கெட்டியாக ஒரு புது யந்திரம் செய்வித்தார். பிணைப்பு எஃகினால் செய்யப்பட்டது. முன் ஜாக்கிரதையாக அதிகாரிகளை அழைத்து இராட்டினத்தைப் பார்வையிடச் செய்தார். இந்தத் தந்திரம் யாருக்கு வரும். அதிகாரிகளும் இராட்டினம் பழுது ல்லை என்று உத்தரவாதம் கொடுத்தார்கள். பதினைந்து ஆண்டுகளாக நடைபெறாத இராட்டின சேவை இப்போது நடைபெறுகிறதென்றும் அதில் ஏறுபவள் ஒரு சிறந்த நாட்டியக்காரி என்றும் நாடெங்கும் பரவிவிட்டது. இதைப் ப பரவிவிடக் கம்பியில்லாத்தந்தி வேண்டியதில்லை. தானே மனோவேகத்தில் பரவிவிடும் அல்லவா?

கார்த்திகைத் திருநாள் வந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கூடினார்கள். பறம்புமலை ஒரு பெரிய நகரமாக விளங்கியது. காடுகள் எங்கும் கூடாராங்களும் குடிசைகளும் சந்தைகளும் கட்டிவிட்டனர். சகல விளையாட்டுப் பொருள்களும் உணவுப் பொருள்களும் குவிந்து விட்டன. வினோதங்கொண்ட நகைகளுக்குச் சொல்லவும் வேண்டுமோ? சமயப் பிரசாரங்களும் இடையிடையே நடந்தன. அதிகாரிகள் திருட்டு, நோய் முதலியவை பரவாமல் இருக்க வேண்டிய எச்சரிக்கைகள் செய்தார்கள். அந்த வட்டத்துப் பெரிய அதிகாரியும் தன் தாயார் பாரியாள் முதலியவர்களுடன் தன் விடுதியில் ஒரு வாரத்திற்கு முந்தியே தங்கி இருந்தார். 

உற்சவமோ பத்துநாள் நடந்தது. பண்டாரசன்னிதி நேரில் வந்து நடத்தினார். தமிழ்நாட்டுத் துறவிகள் நூற்றுக்கணக்காக வந்திருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் வேண்டிய வசதிகள் செய்யப்பட்டன. செடில் ராட்டினச் சேவை வந்தது. அதற்கு முந்தி ஒரு வாரமாகவே நடனமாது உபவசாம் ஏற்றுக்கொண்டு வெகு சாந்தத்துடன் இருந்தாள். இளவயது கடவுள் நம்பிக்கை மிகுதி, பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும் என்ற உறுதி, இன்னமும் பாவ உலகிற்கு மனம் செல்லவில்லை. ஆகவே அந்த ஏழு நாளும் கடவுளைத் தொழுதவண்ணமாகவே இருந்தாள். அன்று மாலை 4 மணிக்குத் தேவி திருவுலா தொடங்கியது. ஊர்வலம் வந்து மலைமேல் நடுமண்டபத்தில் 6 மணிக்கு அம்மன் எழுந்தருளப்பட்டாள். இராட்டினம் செவ்வையாக அமைக்கப்பட்டது. உயர்ந்த ஆசனங்களில் பண்டாரசன்னிதி அதிகாரிகள் முதலியோர்கள் இருந்தார்கள். மிராசுதாரனாகையால் முத்துச்சாமிக்கு ஓர் ஆசனம் அமைக்கப்பட்டது. அருகிலே தாயாரும் இருந்தாள். 6-15 ஆனவுடன் நடன மங்கை சர்வ ஆபரண பூஷிதளாகி அம்மன்முன் கம்பீரத் தோற்றத்துடன் வந்தாள். முகத்தில் தூய ஒளி பிரகாசித்தது. அம்மனை நெஞ்சாரத் தொழுது இராட்டினத்தருகில் சென்றாள். முத்துச்சாமிக்கோ இவளை தூக்கு மேடைக்குக் கொண்டு செலுத்துகிறார்களே என்ற ஏக்கம் வந்தது. பொதுமக்களோ அவளைக் கண்டும். அவள் முக விலாசத்தைக் கண்டும் ஒரு தெய்வமாதோ என்று எண்ணி ஆரவாரித்தார்கள். ஒரு நிமிஷத்தில் அவளை அந்த ராட்டினத்தின் நடு வளையத்தில் பிணைத்தார்கள். அவளும் கம்பீரமாக நின்றாள். நன்றாகப் பிணைத்த பிறகு அந்தச் சட்டம் விரைவாக உருட்டப்பட்டது. அது தலைகீழாக உருண்டது. பிறகு பரவலாக சட்டத்தைத் திருப்பினார்கள். அதுவும் விரைவோடு திரும்பியது. பிறகு முழு இராட்டினத்தையும் மெதுவாகத் திருப்பினார்கள். அது இரண்டு சுற்றுச் சுற்றி மூன்றாம் சுற்றுச் சுற்றும்போது மக்கள் பேரிரைச்சலோடு ஆரவாரித்து வெகு கூர்மையோடு கவனித்தார்கள். முத்துச் சாமிக்கோ உயிர் உலகில் இல்லை. கனவு காண்கிறேனா என்று நினைத்தான். இந்தத் தண்டனை ஏன்? இந்த மெல்லியலாளுக்குக் கொடுக்கவேண்டுமோ! என்று பரிதவித்தான்.. அதிகாரிகள் பண்டாரசன்னிதி இவர்கள்மீது ஆற்றொணாத கோபம் கொண்டான். ஒரு நிமிஷம்தான். அடுத்த வினாடியில் இராட்டினம் அம்மனுக்கு எதிரே நின்றது. அதுவரையில் மங்கையின் உருவம் எவருக்கும் தெரியவில்லை. ஏனெனில் இராட்டினத்தில் வேகம் அத்தனை விரைவாக இருந்தது. மங்கை மலர்ந்த முகத்துடன் நின்றாள். ஆனால் மயக்கம் கொண்டவள்போலத் தோன்றிற்று. உடனே அருச்சகன் மிக விலை பொருந்திய பட்டாடை, பிரசாதம் இவைகளை அவள் கையில் நீட்டினான். அவளும் பெற்றுக் கொண்டு வணங்கினாள். செடில் சேவை வெற்றியுடன் நிறைவேறிற்று. பண்டாரசன்னிதிக்கு மிகவும் மகிழ்ச்சி. அதிகாரிகள் பெருமை பேசிக்கொண்டார்கள். மங்கையை விடுவித்து எடுத்துக்கொண்டு சென்றார்கள். அவள் தாய் உச்சி மோந்து மிகவும் வணக்கத்துடன் வெற்றி மதம் பிடித்தவள்போல நடந்தாள். 

முத்துச்சாமிக்கோ எல்லாம் கனவாகத் தென்பட்டது. உலக வாசனை வருவதற்கு வெகுநேரம் ஆயிற்று. பிரசாதம் கொடுத்ததும் அறியான். தாயார் கைப்பிடித்து வெளி யேற்றும் வரை அவன் எந்த உலகத்தில் இருக்கிறான் என்று று அறியவில்லை. எவ்விதம் தண்டிக்கப்பட்டாள், அவள் என்ன குற்றம் செய்தாள், என்று எண்ணின வண்ணமாக இருந்தான். காலை எழுந்ததும் திருவிழா போதும் என்று சொல்லி ஊர் திரும்பினான். அவள்மீது கொண்டிருந்த இக்கொடிய வழக்கத்தை நிறுத்த முயற்சி செய்வதே தன் பிறவிப் பயன் என்று கங்கணம் கட்டிக்கொண்டான். மங்கையும் தான் பெற்ற அனுபவத்தை முன்னிட்டு தாசித் தொழிலுக்கே செல்லாமல் இருந்துவிட்டாள். 

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *