கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2025
பார்வையிட்டோர்: 428 
 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிலுவையில் அறையுண்டு கிடக்கும் யேசுவைப் போல, இரண்டு கைகளும் யன்னல் கம்பியில் கட்டப்பட்டு முகமெல்லாம் வியர்த்து கண்களிலிருந்து கண்ணீர் வடிய அவன் நிற்கின்றான். 

உலகத்தை இரட்சிக்க வேண்டுமென்ற யேசுவின் முகத்தில் காணப்பட்ட கருணை உணர்வு, அவன் முகத்திலில்லை. 

உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட விரக்தி உணர்வும் என்ன நடக்குமோ என்ற பய உணர்வுமே அவன் முகத்தில் படிந்திருந்தது! 

சூசைநாயகம் இப்படி ஒரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. 

சிலுவையில் யேசு தொங்குவது போல், யன்னல் கம்பியில் கட்டப்பட்டிருக்கும் அவன் சேகுவன் இந்த வீட்டின் வேலைக்காரன். 

இதை யார் செய்திருப்பார்கள் என்பதை மட்டும் சூசைநாயகத்தால் தீர்மானிக்க முடிந்ததே தவிர, என்ன நடந்திருக்கு மென்பதை அவரால் தீர்மானிக் முடியவில்லை! 

“அப்பா… அம்மாதான் சேகுவனை இப்படி யன்னல் கம்பியிலை கட்டிப் போட்டவ…” சூசைநாயகத்தின் மகன் அமலன் கூறுகின்றான். 

“எப்ப கட்டிவை” 

“காலமை…” 

இப்போது ஒரு மணி… இதுவரையும், இவன் சேகுவன்… பச்சைப்பாலன் இப்படி தான் நிற்கிறானா…? 

“ஏன் கட்டிப் போட்டவ…” 

“சேகுவன் பிஸ்கற்றை களவெடுத்துத் திண்டானாம்..” 

“ஆர் கண்டது…” 

“அம்மாதான் கண்டவவாம்…” 

சூசைநாயகம் மௌனமாக நிற்கின்றார்… 

சேகுவன் தலையை நிமிர்த்தி சூசைநாயகத்தைப் பார்க்கின்றான்… சூலைநாயகத்தின் கருணை உள்ளத்தைச் சேகுவன் நன்கறிவான்… 

சேகுவனின் உள்ளத்தில் வேதனை நிரம்பித் தளம்பி… வாய்விட்டுக் கதறி அழுதால், வீட்டுக்கார அம்மா அடித்து விடுவாள் என்ற பயத்தில் வாய்விட்டும் அழ முடியாமல் பொங்கி வந்த வேதனையை அடக்கிவிட, அவனது உதடுகள் துடித்து கண்ணீர் மாலையாக வழிகின்றது! 

“வயது பதினொன்று கறுத்த மெலிந்த உருவம், பறட்டைத்தலை, குழி விழுந்து பருத்த கண்கள்…” பேத்தை வயிறு… வேலைக்கார இலட்சணங்களில் ஒன்று கூடத்தவறாத தோற்றம். 

சூசைநாயகத்திற்கு சேகுவனிடம் இரக்கமுண்டு, இவனது வேலைக்கார இலட்சணங்களைப் போக்கிவிட அவரும் முயற்சி செய்து பார்த்து விட்டார். முடியவில்லை! 

உடலோடு கலந்த இலட்சணங்கள்! 

சூசைநாயகத்தின் மனைவி மேரி… சூசைநாயகத்தின் போக்கிற்கு நேர் எதிரானவள்… 

இரக்கமில்லாதவளல்ல அந்தஸ்துக்கேற்றபடி அவரவரை நடத்த வேண்டுமென்று விரும்புகிறவள் அதையெ நடைமுறைப் படுத்தியும் வருகின்றாள். 

இயல்பான சில காரணங்களினால் சூசைநாயகம் குடும்பத் தலைவனானாலும் இக்குடும்பத்தில் “நாணயக் கயிற்றை” மேரி தான் பிடித்திருந்தாள். 

அநேகமான குடும்பங்களில் இருந்து வருகின்ற “பகிரங்கமான’ “இரகசியம்”! 

ஆனால், சூசைநாயகம் நிதானமானவர் – எதையுமே நிதானமாகத்தான் செய்வார். 

“…சேகுவன்… நீ பிஸ்கற் களவெடுத்தியா…” 

“…ஆமாங்க…” 

“பசியிலை எடுத்தியா…” 

“இல்லைங்க” 

“ஆசையிலை எடுத்தியா…” 

“ஆமாங்க…” 

“…எனிமேல் இப்படியெல்லாம் செய்ய மாட்டனெண்டு மன்னிப்புக் கேட்கிறியா…” இதன் மூலம் அவனை விடுவிக்கலாம் என்றொரு எண்ணம் அவருக்கு. 

”மன்னிப்புக் கேட்டிட்டனுங்க” அழுதபடி சேகுவன் கூறுகின்றான். 

சூசைநாயகம் அசந்து போய்விட்டார்! குற்றத்தை ஒப்புக் கொண்டு, மன்னிப்பும் கேட்ட பின்பும்… 

…பிறருடைய தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்யத்தான் வேலைக்காரர்களுக்கு உரிமை இருக்கின்றதே தவிர… வேலைக்காரர்கள் ஆசைப்படக் கூடாதென்பதைச் சேகுவனால் உணர முடியுமா? 

…அப்பா சேகுவன் அம்மாவின்ரை காலிலை விழுந்து மன்னிப்புக் கேட்டவன்… அம்மா தான் கொள்ளிக் கட்டையாலை சேகுவனை அடியடியெண்டு அடிச்சவ… சேகுவன்ரை முதுகைப் பாருங்கோ… தெரியும்… சூசைநாயகத்தின் மகன் அமலன் கூறுகின்றான். 

சூசைநாயகம், சேகுவனின் குதுகைப் பார்க்கின்றார்… வயலிலுள்ள வரம்புகள் போன்ற வீக்கங்கள்…! 

“…அப்பா… அம்மா வாறதுக்கு முந்தி சேகுவனை அவிட்டு விடுங்கோ எங்கேயெண்டாலும் ஓடட்டு’ அமலன் கூறுகிறான் அமலனுக்கும் சேகுவனுக்கும் ஒரே வயது… தோற்றத்தில், வளர்ச்சியில், வசதியில்… இரண்டு பேரும் மாறுபட்டு நிற்கின்றனர். 

“அப்பா…குனியுங்கோ ஒரு கதை சொல்றன்…” சூசைநாயகம் பக்கத்திலிருந்த கதிரையில் அமர, அமலன் அவரது காதுக்குள் இரகசியம் கூறுகின்றான். 

“…அப்பா… அம்மா அடுப்புக்கை இரும்புக் கம்பி வெச்சிருக்கிறா… சேகுவனைச் கூடப் போறாவாம்…” 

…முட்களால் செய்யப்பட்ட முடியை யேசுவின் தலையில் இறுக்கினார்களே… அதைவிடக் கொடுமை!… 

“…ஏனப்பா அண்டைக்கு எங்கடை மாட்டுக் கண்டுக்கு குறிசுட்டாங்களே… அது மாதிரித்தான் சேகுவனுக்கும் அம்மா சுடப்போறாவா…” அமலன் இதையும் இரகசியமாகவே கேட்கிறான். 

மிருகங்களுக்குத்தான் குறி சுடுவது வழக்கம்… 

மனிதனுக்கும் குறியா?… 

மனிதனையம் மிருகத்தையும் இந்தச் சமுதாயம் சமப்படுத்தி விட்டதா?… 

“அப்பா சேகுவனை அவிட்டு விடுமா…” அமலன், சூசைநாயகத்தின் நாடியைப் பரிவோடு தடவுகின்றான். 

சூசைநாயகமும் அப்படித்தான் யோசிக்கின்றார். வீட்டை விட்டு ஓடி… ஏதாவது விபரீத முடிவை அவன் தேடிக் கொண்டால்… 

தவறு நடந்த பின்தானே சமுதாயமும், சட்டமும் கண் விழிக்கின்றன! 

சூசைநாயகம் மெளனமாகவே இருக்கின்றார் அமலன் அவரைவிட்டு அகல்கின்றான். 

சேகுவன் 

பிறந்த மண்ணில் வாழ்வு தேடியலைந்து, தோல்வி கண்டு விரக்தி கொண்டு கட்டு மரங்களைக் கட்டிப் பிடித்து கடலலைகளோடு போராடி இலங்கை மண்ணில் தஞ்சம் புகுந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் இவனும் ஒருவன். 

இலங்கையின் மத்திய பிரதேச, மலைநாட்டிற்கு இவர்கள் வழி நடத்தப்பட்டனர். மண்பரப்பில் கிடைக்காத வாழ்க்கை மலைப் பிரதேசத்தில் கிடைக்குமென நம்பினார்களோ – என்னவோ?… 

மலையகத்தில் நகர்கின்ற நத்தைகளைப் போல் இவர்களது வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிந்த போது… 

இனக்கலவரம் தோன்றியது…. 

‘ஆண்டிகளாய்” வாழ்ந்தவர்கள். இன வெறியர்களால், சூறையாடப்பட்டு “ஓட்டாண்டிகளாகி… அகதிகளாய் ஆடுமாடு களைப் போல் லொறிகளில் ஏற்றப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டனர். 

“நம்மினத்தவரை நாடிப் போகின்றோம் என்ற ஒரே மனநிறைவோடு இங்கு வந்தவர்களுக்கு” நம்மவர்கள் வழங்கிய நீதி?. இங்குள்ள நிலச் சொந்தக்காரிடம் அவர்களைக் கையழித்தனர்… ”முத்திரை குத்தப்படாத அடிமைகளாக!..? 

மலையகத்தில் “நத்தை போல்’ நகர்ந்த, இவர்கள் வாழ்க்கை இங்கு “செக்கு மாடு போல்” சுற்றத் தொடங்கியது!… இரவு பகலாக வேலை!…? 

அப்போது தான் “சில பிரமுகர்கள்” சேகுவனை சூசைநாயகத்திடம் வேலைக்காரனாக ஒப்படைத்தனர்…. சூசைநாயகம் முதலில் மறுத்து விட்டார். 

“தஞ்சம் இன்றி வந்தவர்களுக்குத் தஞ்சம் கொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் கண்ணைக் குத்தக்குடாது” என்று தான் அவர் கூறினார்… 

ஆனால், மேரியின் பிடிவாதத்தால் சேகுவனுக்கு வேலைக்காரன் பதவி வழங்கப்பட்டது! 

கதிரையில் அமர்ந்திருந்த சூசைநாயகம் எழும்பி வந்து சேகுவனைப் பார்க்கின்றார் மக்களை விடுதலையாக்க வேண்டுமென்று ஒரு கூட்டம் கோசம் போடுகின்றது. விடுதலை பெறாத அந்தக் கூட்டத்திற்குள்ளேயே அடிமை முத்திரை குத்தப்படும் செயல்கள்…!…? 

“உன்னைப் போல் பிறரையும் நேசி” என்று கூறிய யேசுவைத் துதிப்பவர்கள் நாங்கள்…? யேசுவின் போதனைகளின் மதிப்பு?…! 

“ஐயா… என்னை விட்டிங்கோ… நான் எங்கையாவது போயிடுறனுங்க” அவன் கெஞ்சுகிறான்…. கண்களில் ஓயாத கண்ணீர்! 

சூசைநாயகம் குசினியை நோக்கி நடக்கின்றார்… மேரி அங்குதான் நிற்கிறாள். 

குசினிக்குள், மேரி இரும்புக் கம்பியை அடுப்புக்குள் வைத்து – அது சிவக்கும்வரை காத்து நிற்கிறாள்… 

“மேரி … நான் சொல்றதைக் கேள் உன்னாலை அவனைத் திருத்த முடியா அவன் இப்படித்தான் செய்வான்… உனக்கு அவனிலை பிடிக்காட்டி விட்டிடு… அவன் எங்கையாவது போகட்டு” 

“களவெடுத்த கையிலை ஒரு குறி வைச்சு விட்டால் இனிமேல் அவனுக்கு களவு எடுக்கிற எண்ணம் வெராது” 

சேகுவன் தனது ஆசையை அடக்க வேண்டும். அல்லது அறுத்தெறிய வேண்டும்… மேரி இதைத்தான் எதிர்பார்க்கின்றாள்…? 

சேகுவனால் முடியுமா…? 

“மேரி… நீ உள்ளன்போடுதான் சேகுவனைத் திருத்த நினைக்கிறியா…” 

மேரி எதுவுமே பேசவில்லை. 

“மேரி… அண்டைக்கொருநாள் கதிர்காமர் இந்த வீட்டிலை நடந்து கொண்ட விதம் உனக்கு நினைவிருக்கா..” 

அன்றொருறநாள் இந்த வீட்டில் நடைபெற்ற களவு விஷயம் பற்றி சூசைநாயகம் குறிப்பிடுகின்றார். 

அந்தச் சம்பவம் 

கதிர்காமர் வயதில் முதிர்ந்தவர் -இப்பகுதியில் பிரபலமான வர்த்தகர். 

கதிர்காமர் வந்த நேரத்தில் மேரியும் பிள்ளைகளும் குசினிக்குள் நின்றனர், சூசைநாயகம் அறைக்குள் நின்றார். 

அறைக்குள் நின்ற சூசைநாயகம், மனித அரவம் கேட்டு கதவு இடைவெளிக்கூடாக வாசலை நோக்கினார்… 

அங்கு நின்ற கதிர்காமர் அங்குமிங்கும் பார்த்து விட்டு, நிலத்தில் கிடந்த ஒரு பேனையை எடுத்து தனது கைப்பைக்குள் திணித்துக் கொண்டார். 

சில நிமிடங்களுக்கு முன் சூசைநாயகத்தின் மகன் வைத்திருந்து விளையாடிய பேனை தவறுதலா அந்த இடத்தில் விட்டுவிட்டான்! 

சூசைநாயகம் அதிர்த்து போய் நின்றார்… 

வயது முதிர்ந்த வசதி படைத்த கதிர்காமர் இந்தப் பேனைக்கு ஆசைப்பட்டு… களவு! 

கதிர்காமருக்கு வழமையான வரவேற்பு வழங்கப்படுகின்றது… கதிர்காமரின் முகத்தில் எந்தச் சலனமுமில்லை…. ஆனால் சூசைநாயகத்தின் முகத்தில் வழமையான உணர்வுகளில்லை! 

சூசைநாயகம் இரகசியமாக மேரிக்கு நடந்ததைக் கூறுகின்றார். 

சம்பவத்தை நம்பாமல் இருக்க முடியாது! சூசைநாயகம் கண்கண்ட காட்சியாக நிற்கிறாரே!… 

“ஒரு பேனைதானே… அவர் கௌரவமானவர்… போனால் போகட்டு….”இப்படித்தான் மேரி கூறினாள். 

“அடிக்கடி வந்திட்டும் போங்கோ…” மேரி, வழமைபோல் கதிர்காமருக்கு விடை கொடுக்கின்றாள். கதிர்காமர் எந்தச் சலனமுமின்றி களவுப் பொருளுடன் வெளியேறுகின்றார். 

நடந்து முடிந்த அந்த “அசிங்கமான” சம்பவம் இரைமீட்கப் படுகின்றது. 

“மேரி… நல்லாய் யோசிச்சுப்பார்… கதிர்காமம் ஒரு கள்ளன்… கதிர்காமர் கௌரவத்தைக் காப்பாற்ற நினைக்கிறாய்… சேகுவன் உலகம் புரியாதவன் ஏதோ ஆசையிலை செய்து போட்டான்… அவனுக்கு கௌரவம் இல்லையெண்டதுக்காகத்தானே அவனைத் தண்டிக்க நினைக்கிறாய்… 

“…அதிகாரமுள்ள நீ… அடக்கப்பட்ட சேகுவனைத் தண்டிக்க நினைக்கிறாய்…” 

“களவெடுத்த சேகுவனைத் தண்டிக்கக் கூடாதென்பது தான் உங்கள் முடிவா…” மேரி திடீரென்று கேட்கின்றாள். 

பிரச்சினையின் மையத்திற்கு மேரி வந்து விட்டாள்! 

இதுவரை சூசைநாயகம் பிரச்சினையின் மையத்தில் நின்றார். 

மேரி, பிரச்சினைக்கு வெளியே நின்று விவாதித்தாள். 

இப்போது இருவரும் ஒரே இடத்தில் நிற்கின்றனர். 

“மேரி… பிழை செய்தவன் தண்டிக்கப்படக்கூடாதென்பது எனது நோக்கமல்ல… ஆனால், தண்டனைக்குரியவர் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தான் நீயும் நானும் வேறுபட்டு நிக்கிறம்!… 

…சேகுவன்ரை உடலிலை, நமது கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ குறிகளை இந்தச் சமுதாயம் சுட்டிருக்கு…” மேரியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை கேள்விக் குறியோடு சூசைநாயகத்தைப் பார்க்கின்றாள். 

“…பஞ்சப்பட்டவன்” என்றொரு குறி…. 

“கள்ளத் தோணி” என்றொரு குறி… 

“அகதி” என்றொரு குறி… 

இவைகளுக்கு மேலால் “அனாதைகள்” என்ற மிகப்பெரிய குறி… 

…வீதி ஓரத்தில் ஒரு முளத் துண்டோடு பசி மயக்கத்தில் கிடப்பவனை, குளிராய் இருக்கு இழுத்துப் போர்த்திக் கொள் என்றால்… 

…அவனால் போர்த்திக் கொள்ள முடியுமா?… 

மேரியின் சிந்தனை விரிகின்றது… அவள் கண்வெட்டாமல் சூசைநாயகத்தைப் பார்க்கின்றாள். 

“சேகுவன் போன்றவர்களுக்குச் சமுதாயம் என்றோ குறி சுட்டு விட்டது… இப்போது நீ சுட நினைகின்ற குறி…?…! 

சேகுவன் தசையைக் கருக்குமே தவிர… அவன்ரை இதயத்தைத் திருத்தாது!… 

…என்றோ செத்துப்போன ஒருவனை அடிக்க நினைக்கின்றாய்.. 

“இவர்கள்… திருத்தவே மாட்டார்களா” மேரி ஆவலுடன் கேட்கின்றாள். 

“மனித தேவைகள் இவர்களுக்கும் பூர்திதயாகும்போது… திருத்துவார்கள்…” 

“உண்மையிலேயே இவர்களின் மணி உரிமைகளைப் பறித்தவர்கள்தான் குறிசுடப்பட வேண்டியவர்கள்…” 

சில நிமிடங்கள் மௌனமாக நின்ற மேரி, அடுப்புக்குள் சிவந்து போய்க் கிடந்த இரும்புக் கம்பியை வெளியே எடுத்து ஒரு புறமாகப் போடுகின்றனாள். 

ஆனால், 

தணலை உதிர்க்கின்ற சமுதாயத்தின் சிவந்த நாக்கு… அதன் சூடுகள்… 

அந்தக் குறிகள்?…. 

நிரந்தரமானவைகளா? 

– வீரகேசரி, 13.02.1983.

– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *