சுய கௌரவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2025
பார்வையிட்டோர்: 103 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்து, முகத்தில் நிரம்பி வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான் பொன்னுசாமி கவுண்டன். சுயகெளரவ உந்துதலால், அந்த உச்சிவெயிலிலும் விடாப்பிடியாகத் தொடர்ந்து (காலை ஆறு மணி முதல்) புல்லு வெட்டுகிறான் அவன். 

வாய் கசந்தது. வரண்டு போயிருந்த உதடுகளை நாக்கால் தடவி ஈரப்படுத்திக் கொண்டு, மடியில் சொருகி வைத்திருந்த வெற்றிலைப் பையை அவிழ்த்து. ஒரு வாய் வெற்றிலையைப் போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட சுகம் அவனுக்குப் புதிய சக்தியைக் கொடுத்தது. 

காலுக்கருகிலே தேயிலைக்கடியில் கிடந்த சுரண்டியைக் கையிலெடுத்தான். “அஞ்சு மணிக்குள்ளாக கால் ஏக்கரு முடிச்சாவணும்” என்கிற நினைப்பில் சுருங்கிச் சோபை யிழந்து போயிருந்த அவனது வதங்கிய முந்திரிப் பழத் தசைக்குமேலாக நரம்புகள் வகிடு அமைத்து மெல்லப் புடைத்து நின்றன. சுரண்டி சுழலத் தொடங்கியது. 

நாற்பத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக, தன் அப்ப னுக்கு மலைக்குத் தேநீர் கொண்டு போன விவரம் தெரிந்த பத்தாவது வயசிலிருந்து அவன் அந்தப் பத்து ஏக்கரிலேயும் புல்லு வெட்டி, அதில் மாதம் கிடைக்கிற எழுபது சொச்சத் தில் காலத்தை ஓட்டிவந்து விட்டான். வயிற்றையும் வாயையும் கட்டி மிச்சம் பிடித்து கொஞ்சப் பணத்திலேயும் மூத்த மகள் செல்லாயியின் கலியாணத்தை மைத்துனன் ரெங்கசாமி கண்டு வயிற்றெரிச்சல் படுகிற அளவுக்குச் சிறப்பாக நடத்தி முடித்தது; ஐந்து வருஷங்களுக்கு முன்னால் சம்சாரம் தவறிப் போனபோது ஈமச்சடங்கு பண்ணியது; என்ற இந்த ஆசார வாழ்க்கையின் அவசியச் செலவுகளுக்குப் பிறகு வேறு செலவு வராததாலும், ஒண்டிக்கட்டையாகிவிட்ட வயசு காலத்தில் உடம்பை அதிகம் அலட்டிக் காப்பை ஐந்து ஏக்காரகக் குறைத்துக் கொண்டான். கடந்த ஐந்து வருடங் களாக அதில் கிடைக்கின்ற முப்பத்தைந்து ரூபாய்க்குக் குறையாத வருமானத்தில் அவனது வாழ்க்கை கழிகிறது. 

சாகும் பரியந்தம் பிறர் கையை எதிர்பார்த்து வாழக் கூடாது என்ற சுயகௌரவ ஆசையில் ஐந்து ஏக்கர் ‘கொந்தரப்’பையும் இதுநாள் வரை அவன் விடாப்பிடியாக வெட்டிக் கொண்டு வந்திருக்கிறான். 

மலையும் பூத்தப்புல்லும் அதில் குறைந்திருப்பதைக் கவனித்து கவுண்டன் செத்தானா, அந்தக் கொந்தரப்பைக் கேட்டுப் பார்க்கலாம் என்ற நப்பாசையை நெஞ்சுக்குள் ளாகவே மூடிமறைத்துக் கொண்டு ‘கவுண்டர் ஐயா இத்தினி அலைச்சல் இந்த வயசில ஒங்களுக்கு ஏங்கய்யா? பேசாம பெஞ்சினீரு வாங்கிவிட்டு மவவீட்டுக்குப்போயி செவனேன்னு சாப்பிட்டுக்கிட்டு இருக்காம…’ என்ற பலரது சாடைமாடை யான இழுப்புகளையும் அவன் ஒரு மாதிரியாகத் தட்டிக் கழித்து விட்டிருப்பதன் காரணம் நாளை வாழ்வைப் பற்றிய. கவலைக்கும் மேலாக, மைத்துனன் ரெங்கசாமியின் தூண்டு தலால் கொழுந்துவிட்டெரியும் சுய கௌரவம்தான். 

ஆனால், இந்த மாதத்தோடு அவனது இத்தனை நாளைய பிரயத்தனங்களுக்கும் முடிவு நேரப் போகிறது. 

அவனிடம் வாய்ச்சவடால் பேசிய ரெங்கசாமி ஜெயிக்கப் போகிறான். 

பொன்னுசாமி கவுண்டனுக்கு வயதாகி விட்டது என்ற காரணங்காட்டி, அடுத்த மாதந்தொட்டு ‘பெஞ்சன்’, கொடுப்பதற்குத் தோட்ட நிர்வாகம் ஒழுங்கு செய்துவிட்டது. 

”எனக்கு என்ன அப்படியா வயசு ஆயிருச்சி? ஆளு ஒசரத்துக்கு மெலாரு கட்டி, தனியா தூக்குற அளவுக்கு சத்து இருக்கிறப்பலே! அந்தப் பெரிய கிளாக்கரு செய்யிற வேலையிது.” 

“மொத பொட்டு மருதமுத்துக்கு சொரண்டிகூட புடிக்க முடியல. அவனுக்கு இன்னும் பெஞ்சன் கொடுக்கல. தொர பொட்டு அங்காயிக்கு இந்த முடியாத காலத்திலேயும் வேலை குடுத்திருக்காங்க, எனக்கு மட்டும் அதுக்குள்ளால பெஞ்சினீரு குடுக்குறாங்களாம்.” 

கவுண்டனின் சுய கெளரவ வயிற்றெரிச்சல் யார் மீதோ வசை பாடியது. ‘நாலு கொத்து அரிசியிலும் அஞ்சி ரூபா தாளிலும் ஒரு மனுஷன் முப்பத்தொரு நாளையும் கழிக்க ணும்னா லேசுப்பட்ட காரியமா?” 

“பெஞ்சினீரு குடுத்துட்டாப்புல ஒரு நாளைக்கு ரெண்டு சுருட்டை இழுத்துப் பொகைக்கிற பழக்கத்தை லேசா உட்டுப்புட முடியுமா? வாய் நெறச்சி வெத்திலையைப் போட்டு செவக்கச் செவக்க மென்னுத் துப்புற பழக்கத்தை மறந்துட ஏலுமா? கெழமைக்குன்னு இல்லாம போயிட்டாலும் மாசத்துக்கு ஒருக்கவாவது அலுப்பு தீர அரகிளாசு தண்ணி போடாம இருந்திர ஏலுமா? அவங்களுக்கு என்னா? நாளு முழுவதும் நாக்காலியில செவனேன்று குந்தி கெடந்திட்டு போறவங்களுக்கு. படுறவங்களுக்கு இல்லத் தெரியும்.” 

பொன்னுசாமி கவுண்டனின் ஆத்திரம் பெருகப் பெருக அவன் கையில் சிக்கித் தவித்த இரண்டடி நீளமுள்ள சுரண்டி உலகளந்த திருமாலாய் அந்த மலையை அளந்து சுழன்றது.

நெஞ்சாங்குலையின் ஒவ்வொரு துடிப்பிலும் பெருக் கெடுக்கும் உரோச உணர்ச்சியில் சுரண்டி பம்பரமாகச் சுழன்றது. பதினைந்து நிமிடப் பம்பரச் சுழற்சிக்குப் பின்னர் அவனுக்குக் கையை வலிப்பதுபோல் தோன்றியது. 

சொந்தக் கால்களிலேயே நின்று பழகியவனுக்குச் சோர்வு தோன்றுவது கரங்களிலா? அவன்கை வலி நின்றது. 

இடுப்பைப் பிடிப்பது போலிருந்தது. இருபதாந் தேதி களுக்குள் புல்லு வெட்டை முடித்துவிட்டு, எட்டு மணிநேரமும் குனிந்து நின்றே காண்வலித்த கவுண்டனில்லையா நான்? அவன் இடுப்பு பிடிப்பு மறைந்தது. 

தொண்டை வரண்டது போலிருந்தது. உதட்டை நனைப்பதற்குப் பச்சைத் தண்ணீர்கூட இல்லாமல் பகல் இரண்டு மணிவரை ஒரே மூச்சில் கல்வாத்து வெட்டியபோது தோன்றாத வரட்சியா இப்போது? அவனது தொண்டை வரட்சி மறைந்துவிட்டது. 

அலுப்பில் தோன்றிய சலிப்புணர்ச்சியை அகற்றிவிட்ட பின், சுரண்டியின் சுழற்சியில் மீண்டும் அசுரவேகம். 

உடல் தளர்ச்சியின் வேதனையில் இருந்திருந்து தோன்றுகிற சபலம் பெஞ்சன் வாங்கிவிட்டால் தான் என்ன என்று அவனை நினைக்கத் தூண்டும். ஆனால், அடுத்த கணமே தன் மைத்துனன் ரெங்கசாதி கவுண்டன் விடுத்த சவால் நினைவுக்கு வந்து, அந்த எண்ணத்தைப் போக்கி விடும். 

ரெங்கசாமிதான் எவ்வளவு குத்தலாகப் பேசிவிட்டான்? நாற்பத்தைந்து வருட கால உழைப்புச் சக்தியின் நாடியைத் தீண்டிவிட்ட கூர் அம்புகளலல்லவா அவன் உதிர்த்துவிட்ட ஒவ்வொரு சொல்லும். 

தன் ஒரே மகள் செல்லாயியை நல்ல இடத்தில் கொடுத்து சந்தோஷமாக அவள் வாழுகிறதைக் கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான் பொன்னுசாமி. 

அதனால் தூரத்து உறவாக இருந்தும் பையன் சூப்பர வைசர்’ வேலை பார்க்கிறான் என்கிற பெருமையில் செல்லா யியை ரெங்கசாமி மகனுக்குக் கொடுக்காமல் வேறோர் இடத் தில் முடித்துவிட்டான். 

அவன் மனைவி உறவு அறுத்துவிடக் கூடாது என்று சாக்குக் காட்டி, தன் அண்ணன் மகனுக்குச் செல்லாயியை கட்டி வைக்க எடுத்த முயற்சிகளெல்லாம் மழையில் எழுப்பிய மண்சுவராகச் சிதைந்துபோய் விட்டன. ரெங்கசாமிக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரம், வேலைக்குப் போகும்போதும் வீட்டுக்குத் திரும்பும்போதும் “தங்கச்சிப் பொண்ணை ஏம்மா ஒம் மவனுக்குக் கட்டி வைக்கல. நீ என்ன எளக்கார மாயிட்டியா?” என்று தொழிலாளர்கள் குத்திக் குத்திப் பேசியதில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

ஒருநாள் பிரட்டுக் களத்திலேயே வைத்துச் சொல்லி விட்டான். ”அந்தக் கெழட்டுக் கவுண்டனுக்கு இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீறாப்புங்கிறதைப் பார்த்துப்புட றேனே. சூப்பர்வைசருனா மட்டும் காசு சொறக்கிற வேலையோ? பெஞ்சினீரு வாங்கிப்புட்டா எங்க போயிடப் போறான்? மவ வீட்டுச் சோறு எத்தனை நாளைக்கி? தண்ணி மண்ணி வச்சிக்குடுக்க ஆளு இல்லாட்டி தன்பாட்டில வாலை சுருக்கிக்கிட்ட நாயி மாதிரி ஆயிறமாட்டானா?” 

எவ்வளவு ஆத்திரமூட்டக் கூடிய வார்த்தைகள்? மருமக னும் மகளும் தங்களோடு வந்து தங்கும்படி எவ்வளவோ பிடிவாதமாக வற்யுறுத்தியும், பொன்னுசாமி தன் வயது சென்ற காலத்திலும் அதற்கு இணங்காததற்குக் காரணம் ரெங்கசாமி அன்று பிரட்டுக் களத்தில் பேசிய வார்த்தைகள் தாம். 

“அத்தனை பேருக்கும் முன்னவச்சி அவள் அப்படிச் சொன்னதும் நல்லதுக்குத்தான். யாரு உட்டு சம்பிராயம் வெல்லுதுன்னு பார்த்துப் புடறன்.” 

அசைந்து நடக்கும் லயதில் ஆடித்திரிந்த வயதின் அடங்காத் துடிப்போ அவனுக்கு, 

தன் மைத்துனனின் சவாலை நினைத்து நினைத்துச் சுயகௌரவ உணர்ச்சியில் நிமிர்ந்து நிமிர்ந்து வளர்த்துவந்த வைராக்கியம் இன்னும் எத்தனை நாளைக்கு? 

“பெஞ்சன் பணத்தில் வாழ்க்கையை ஓட்டமுடியாது. சிக்கிச் சீரழிந்து செத்துப்போன எத்தனை பேரை அவன் பார்த்து விட்டிருந்தான்? அந்த மாதிரி எனக்கும்…” 

”வாங்குகிற பெஞ்சனில் வாழ்க்கையை ஓட்ட முடியாது, கடன்பட நேர்ந்தாலோ அன்றிக் கஞ்சிக்கு வழி இல்லாது போனாலோ ரெங்கசாமி சொன்ன, வாலைச் சுருட்டிக் கொண்ட நாய் வாழ்வாகாதா அது?” 

பொன்னுசாமிக்கு ஆத்திரத்துக்கும் மேலாக அழுகை தான் பீறிட்டுக்கொண்டு வந்தது. 

இத்தனை நாள் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியா? ‘எனக்குப் பெஞ்சன் கொடுக்கப் போறாங்கனு சொன்ன துமே அவன் பார்த்த பார்வை வாலைச் சுருட்டிக்க வந்தி ருச்சி காலம்னு சொல்லாம சொல்லிச்சே…’ 

பொன்னுசாமி கரண்டியை இறுக்கிப் பிடித்தான். ‘‘பெஞ்சனீரு வாங்குகிற அளவுக்கு கெழவனாயிட்டனா நானுங்கிறதை தொரையே பார்த்துக்கட்டும். வால மடக்கிக் கிற அளவுக்கு எளக்கமா பொயிட்டனா நானுங்கிறதை ரெங்க சாமி தெரிஞ்சிகிடட்டும்.” 

அசுரவேகம் அவள் கையில் புகுந்து கொண்டது. 

வாலிப வயதில் உள்ளிருந்து ஊக்குவித்த இளம் கன்றுப் பாய்ச்சல் அவனிடம் நுழைந்து அவன் வேகத்தில் விசை மூட்டியது. 

எதிர்ப்படுகின்ற எல்லாவற்றையுமே இழுத்துச் செல் கின்ற வேகம் அவன் கரங்களுக்கு விரிந்த படத்தின் வேகம் தணிக்க, சீறி நின்கின்ற பாம்பை மிதிக்கின்ற மதமதப்பு அவன் கால்களுக்கு. அடித்து வீழ்த்திய ஆட்டுக் கடாவின் அருகே நிற்கின்ற கம்பீரம் அவன் உணர்ச்சிகளில்… வாட்டக் கொழுந்தை இழுத்தெடுத்து, துகள்படுத்துகின்ற ரோதை யின்சுழற்சி அவர் அசைவுகளில்… 

கவுண்டனின் சொட்டைத் தலையிலும் நெற்றியிலும் அரும்பி நின்ற வியர்வை முகத்தில் வடிந்தது. பார்வையை மறைத்தது. வயிறைக் கிள்ளியது. நெஞ்சு வலித்தது. 

உட்கார வேண்டும்போல் வேண்டும்போல் தோன்றியது. தேயிலை மரத்தடியில் உட்கார்ந்தான். 

தலையைச் சுற்றியது. படுக்க வேண்டும் போல் பட்டது. அந்த நிழலிலேயே படுத்தான். சுகமாக இருந்தது. தலைப் பாரம் குறைந்தது. கால்களை நீட்டிவிட்டுக் கொண்டு, கை களை விரித்துப் போட்டுப் படுத்தான். 

அவன் சொந்தம் கொண்டாடிய மண் அவனைச் சொந்தம் கொண்டாடியது. 

அவனது கௌரவம் பிழைத்துக் கொண்டது! 

– 1964

– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *