சுத்தம்!
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,847
ரோட்டரி சங்கத்தின் அழைப்பை ஏற்று, அந்தப் பெரிய கூட்டத்தில் முழங்கிக்கொண்டு இருந்தார் லோகநாதன்…
“நான் சிங்கப்பூர் சென்றிருக்கிறேன், அமெரிக்கா சென்றிருக்கிறேன், ஆஸ்திரேலியா சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் நான் பார்த்து வியந்தது அங்குள்ள வானுயர்ந்த கட்டடங்களையோ, வர்த்தக வளர்ச்சியையோ அல்ல! சுத்தம்.சட்டத்துக்காக இல்லாமல் மக்கள் தாமாகவே கடைப்-பிடிக்கும் சுத்தம். ஆனால், இங்கே நாம் என்ன செய்கிறோம்? சுத்தம் சோறு போடும், சுகாதாரம் குழம்பு ஊத்துமா என்று நையாண்டி பேசி, வெட்கமில்லாமல்சிரித்துக்-கொண்டு இருக்கிறோம். இந்தியா வல்லரசு ஆவது இருக்கட்டும்… சுத்தமான நல்லரசு ஆவது எப்போது..?”
அரங்கம் அதிரஅதிரக் கைத்தட்டியது கூட்டம். பூ மாலைகளையும் புகழ் மாலைகளையும் சுமந்துகொண்டு, விடைபெற்றுக் கிளம்பினார் லோகநாதன்.
டிரைவர் பவ்யமாக கார் கதவைத் திறந்து விட, ஏறிக்கொண்டார். கார் புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றிருக்கும்… வாட்டர் பாட்டிலை எடுத்து மிச்சமிருந்த தண்ணீரைக் குடித்துக் காலி செய்தார் லோகநாதன். பின்பு, ஒரு பிளாஸ்டிக் காகிதத்தில் மடக்கி வைக்கப்பட்டு இருந்த ஸ்வீட் பீடாவை எடுத்து வாயில் அதக்கிக்கொண்டார்.
பிளாஸ்டிக் காகிதத்தையும், காலியான வாட்டர் பாட்டிலையும் கார் ஜன்னல் வழியாக விட்டெறிந்தார்!
– 17th அக்டோபர் 2007