சுத்தம்




ரதி..என்று கதவை தட்டினான் ஆனந்தன்,வேகமாகப்போய் கதவை திறந்தாள் ரதி,உள்ளே நுழையும் போதே,அருணா வெட்டிப் போட்ட கலர் பேப்பர்கள் பரவலாக கிடப்பதை கவனித்த ஆனந்தன்,ஏன் வீடு இவ்வளவு குப்பையாக இருக்கிறது?காலையிலிருந்து என்ன செய்துக்கொண்டிருந்தாய்?என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தான் அவன்.மகள் அருணா,அப்பாவை கண்ட ஆனந்தத்தில் வேகமாக ஓடி வந்தாள்,அவளை தடுத்து நிறுத்தினான் ஆனந்தன்,உடையெல்லாம் ஒரே அழுக்காக இருக்கிறது,பிறகு வா,என்று அதட்டலாக கூறியதும்,வாடிய முகத்துடன் அருணா ஒதுங்கிக்கொண்டாள்.இது வழமையாக ஆனந்தன்,மகளிடம் கூறும் வார்த்தைகள் தான்,ரதிக்கு இது சுத்தமாக பிடிப்பது இல்லை,இப்படி சுத்தம் பார்த்து ஆசையாக ஓடி வரும் மகளை கூட,கட்டி அணைத்துக் கொள்ளாமல்,குளித்து விட்டு தான்,தூக்குவேன் என்று அடம் பிடிக்கும் ஆனந்தனை,மனதில் திட்டிக்கொல்வாள் ரதி,வெளியில் எதுவும் கூறமாட்டாள்.
ஆபிஸ் பையை ரதியிடம் கொடுத்துவிட்டு,சூடாக காப்பி போட்டு வை,என்று வேகமாக குளியலறை நோக்கி நடந்தான் ஆனந்தன்.மறுப்படியும் ரதி..என்று குரல் கொடுத்தான்,என்னங்க என்று கேட்டுக்கொண்டு போய் நின்ற ரதியிடம்,எரிந்து விழுந்தான்,யார் கடைசியாக குளித்தது?பாத்ரூம் எல்லாம் ஒரே சோப்பு நுரையாக உள்ளது,சோப்கேஸ் எல்லாம் தண்ணி ஊற்றி கரைந்து போகுது என்றான்.
ஆறு வயதான செல்ல மகள் அருணா,அப்போது தான் குளியல்லரை போய்,தான் தனியாக குளிப்பதாக அடம்பிடித்து,குளித்துவிட்டு வந்தாள்.அதன் பிறகு பாத்ரூமை எட்டிப்பார்க்க மறந்து போனாள் ரதி.அதன் விளைவு!அதை கூறமுடியுமா ஆனந்தனிடம்,குழந்தையை தனியாக குளிக்கவிட்டிட்டு,நீ டீவியில் சீரியல் பார்த்தாயா?என்பான்,அருணா குளிக்கும் போது,சவரில் எல்லா இடங்களுக்கும் கொஞ்சம் தண்ணி பிடித்து விட்டாள்,என்று மென்றுவிழுங்கினாள் ரதி,அது தானே பார்த்தேன்,மாதக்கடைசியில் தண்ணி பில் கூடுதலாக வருவதற்கு,இது தான் காரணமா?இனி அடிக்கடி அருணாவை குளிக்க விடாதே,என்று கோபமாக கூறிவிட்டு,வேகமாக பாத்ரூம் கதவை சாத்தினான் ஆனந்தன்.
ரதி சமையல் அறைக்கு போகும்போது தான் கவனித்தாள், அருணா சோபாவில் வெட்டிப்போட்ட,கலர் பேப்பர் எல்லாம் பரவலாக கிடந்தது உடனே எல்லாவற்றையும்,எடுத்து குப்பையில் போட்டாள்.அருணாவின் புத்தகங்கள்,பென்சில் எல்லாவற்றையும் இருந்த இடத்தில் அடுக்கி வைத்துவிட்டு, பிறகு காப்பி போட சமையலறைக்குப் போனாள் ரதி.ஆனந்தன் குளித்து முடித்து சமையலறைக்கு வந்தான், மேசை மீது இருந்த,பகோடாவை வாயில் போட்டுக்கொண்டே சமையலறையை நோட்டம்விட்டான் அவன்,அவள் நேரம்!பால் பொங்கி அடுப்பில் கொட்டியிருப்பதை கவனித்த ஆனந்தன்,உனக்கு பால் கூட ஒழுங்காக காய்ச்ச தெரியாதா?என்றதும் அவளுக்கு சுள்ளென்று வந்தது,நாக்கை கடித்துக்கொண்டாள் ரதி.
காலை எட்டு மணிக்கு,வேலைக்கு போகும் ஆனந்தன்,இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புவான்.அதன் பிறகு அவன் தூங்கும் மட்டும்,ரதிக்கு ஒரே தலைவலி தான்.சனி,ஞாயிறு என்றால் கேட்க்கவே வேண்டாம்,காலையிலிருந்து ஏதாவது குறை கண்டுப் பிடித்துக் கொண்டே இருப்பான்,ரதிக்கு சீ..என்று போய்விடும்,ஆயிரம் குறை சொல்வான்,ஏன் இதை இப்படி வைத்திருக்காய்,ஒழுங்காக அடுக்கி வைக்க முடியாதா? நீ வேலை செய்வதில் திருத்தம் இல்லை,வீட்டில் தான் இருக்காய்,உன்னை சொல்லி குற்றம் இல்லை,உன்னை உன் வீட்டில் சரியாக வளர்க்கவில்லை என்பான்,ஆரம்பத்தில் அவளுக்கு கோபம் வரும்,தற்போது இதுவெல்லாம் பழக்கமாகிவிட்டது ரதிக்கு.
பாவம் அருணா கண்டிப்பாக மகளை வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் ஆனந்தன்,அருணாவையும் ஏதாவது கூறிக் கொண்டே இருப்பான்,அது அவளுக்குப் பிடிக்காது,ஏதும் செய்யப் போனாலும்,வேண்டாம் என்று தடுப்பான்,ஏதாவது செய்து,வீட்டை குப்பையாக்கி விடுவாள் என்ற பயம் ஆனந்தனுக்கு.கத்தரிக்கோல் எடுக்காதே,தரையில் குப்பை போடாதே,கலர் பன்னாதே,டீவி சத்தத்தை கூட்டாதே,வீட்டில் குதிக்காதே,புத்தகத்தை எடுத்துப்படி என்பான்,அவளோ சிறுப்பிள்ளை,அழுதுக்கொண்டே ரதியிடம் ஓடி வருவாள்,அவளை சமாதானம் படுத்தி,நாளை அப்பா வேலைக்குப் போனப் பிறகு விளையாடுவோம்,தற்போது போய் சமத்துக்குட்டிப் போல் படி,என்று அவளை சமாதானம் படுத்தி அனுப்பி வைப்பாள் ரதி,அவளும் அமைதியாக போய்விடுவாள்.
வெளியில் அழைத்துப் போகும் ஆனந்தன்,அருணாவை ஓடி, ஆடி விளையாட விடமாட்டான்,கீழே விழுந்து விடுவாள் என்பதை விட,அவள் அழுக்காகி விடுவாள்,என்பது தான் அவன் மனதில் ஓடும்.செல்லப் பிராணிகளை தொடவே விடமாட்டான்,ஏதாவது வருத்தம் வந்துவிடும் என்பான்,மண்ணில் விளையாடாதே என்பான்,ஏன் இவனோடு வெளியில் போனோம்,இனி போகக்கூடாது என்று ஒவ்வொரு தடவையும் ரதி நினைப்பது உண்டு,ஆனால் அருணா அடம் பிடிப்பதால் மட்டுமே,ரதிக்கு விருப்பம் இல்லையென்றாலும் இன்னும் வெளியில் போய்கொண்டிருக்காள் அவள்.
ஆனந்தன் வீட்டில் தனிப்பிள்ளையாக வளர்ந்தவன்,கொஞ்சம் சுயநலவாதியும் கூட,எதற்கும் விட்டுக் கொடுத்துப் போகமாட்டான்,பிடிவாதக்குணம்,இதனால் பலதடவைகள் அவனுக்கும்,ரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு,அவனிடம் கதைத்து ஜெயிக்க முடியாது ரதிக்கு,கோபபட்டு கத்துவான்,இப்போது எல்லாம் ரதி அமைதியாக இருந்து விடுவாள்,வளரும் அருணாவின் முன்னாடி சண்டைப்பிடிப்பதற்கு ரதுக்கு விருப்பம் இல்லை.
ஆனந்தன் வீட்டை மியூசியம் போல்,வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு,குழந்தைகளை வளர்க்கும் போது,அவர்களின் போக்கில்,சிலவற்றை விட்டு விடவேண்டும்,அவர்கள் செய்யும் ஒவ்வொன்றுக்கு,நாங்கள் தடையாக இருக்க கூடாது,எதையும் செய்ய விடவேண்டும்,அதை புரிந்துக் கொள்ள மாட்டான் ஆனந்தன்.சுவரில் கிறுக்காதே,கலர் பன்னாதே என்றால் ரதிக்கு கோபம் வரும்,சுவரில் கிறுக்கவிடுவதால்,அவர்களின் கை வலுப்பெற்று எதிர்காலத்தில் நன்றாக வரைவார்கள்,சிறு வயதில் அவர்கள் செய்யும் எந்த செயலையும் பாராட்டிப்பழகவேண்டும்.அவர்கள் மேன்மேலும் வளர்வதற்கு அது உதவியாக இருக்கும்,எதற்கும் ஆனந்தன் மாதிரி தடைப்போட்டால் அவர்களின் பல திறமைகள் வெளிப்படாமல் போய்விடும்.
இதையெல்லாம் அறிந்து வைத்திருந்த ரதி,அருணாவை வளர்க்க ஆனந்தனிடம் போராடவேண்டியிருக்கிறது, ஆனந்தன் அதிகளவு சுத்தம் பார்ப்பதால்,அருணா பல சந்தோஷமான விடையங்களை இழக்கிறாள் என்பது புரியாது அவனுக்கு.சுத்தம் வேண்டும்,அதுவே வாழ்க்கை ஆகிவிடக்கூடாது.